01282023
Last updateபு, 02 மார் 2022 7pm

ஜெர்மனி நீதிமன்றத்தில் வெள்ளை நிறவெறியனால் கொல்லப்பட்ட முசுலீம் பெண்

ஜெர்மனி, டிரெஸ்டென் நகரம். நீதிமன்றத்தில் வைத்து ஒரு எகிப்திய கர்ப்பிணிப் பெண்மணி, வெள்ளை நிறவெறியன் ஒருவனால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

 16 கத்திக்குத்துகளை வாங்கி ஸ்தலத்திலேயே மரணமடைந்த மார்வா என்ற எகிப்தியப் பெண்ணும், கொலையாளியான அலெக்ஸ் என்ற ஜெர்மன் நபரும் அயலவர்கள். வெளி நாட்டவர் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக அலெக்ஸ், பூங்காவில் தன் 3 வயது மகனோடு பொழுதுபோக்கிக் கொண்டி ருந்த 4 மாத கர்ப்பிணியான முக்காடு போட்டிருந்த மார்வாவைப் பார்த்து "பயங்கரவாதி' என தூற்றியுள்ளார்.

 

மார்வா இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததால், இனவெறிப் பாகுபாட்டு குற்றச்சாட்டில் அலெக்சிற்கு அபராதம் விதிக்கப்பட்டது. அலெக்ஸ் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். அப்போதும் நீதிமன்ற தீர்ப்பு அலெக்சிற்கு பாதகமாக அமைந்திருந்தது. விசாரணையின் போது, மார்வா சாட்சியமளித்திருந்தார். நீதிபதி தீர்ப்புக் கூறிய பின்னரே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது. அந்தக் கர்ப்பிணிப் பெண்ணின் மூன்று வயது மகனின் கண் முன்னால் இந்தக் கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் இருந்து தனது மனைவியைப் பாதுகாக்க முயன்ற கணவனை, காவலில் நின்ற போலீஸ்காரர் சுட்டுக் காயப்படுத்தியுள்ளார். தாக்குபவர் யார் என்று தெரியாமல் தடுமாற்றத்தில் சுட்டு விட்டதாக, போலீஸ் பின்னர் விளக்கமளித்தது. இந்த சம்பவம் குறித்து ஜெர்மன் பத்திரிகையில் வந்த செய்தி.

 

இதுவரை காலமும் ஒரு மூன்றாம் உலக நாட்டில் மட்டுமே இது போன்ற நீதிமன்றக் கொலைகள் நடக்க வாய்ப்புண்டு, என்று பலர் நினைத்திருக்கலாம். பட்டப்பகலில், பலர் பார்த்திருக்கையில், அதுவும் நீதிமன்றத்தினுள் எப்படி இந்தக் கொலை நடக்கலாம்? என்று பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. "நாகரீக மடைந்த மக்கள் வாழும்' ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், இசுலாமியர் மீதான வெறுப்பின் விளைவாக நடந்த இந்தக் கொலை, ஜெர்மனியில் அறிவு ஜீவிகள் மட்டத்தில் மட்டும் சிறு சலசலப்பை தோற்றுவித்துள்ளது. மற்றபடி, எந்த ஒரு ஐரோப்பிய ஊடகமும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிடவில்லை. சில நாளேடுகளில் இந்தச் செய்தி, உள்பக்கத்தில் ஒரு சிறு மூலையில் பிரசுரமாகி இருந்தது. ஒரு வேளை பலியானவர் ஒரு வெள்ளை இனத்தை சேர்ந்தவராக இருந்து, குத்திய கொலையாளி ஒரு இசுலாமிய எகிப்தியர் ஆக இருந்திருந்தால்? அனைத்து ஊடகங்களிலும் அதுவே அன்று முதன்மைச் செய்தியாக இருந்திருக்கும். "அல் கைதாவின் பயங்கரவாதத் தாக்குதல்' என்று சர்வதேச ஊடகங்களிலும் ஒரு சுற்று வந்திருக்கும். மேற்குலகில் இனவாதம் எப்படி நிறுவனமயப்பட்டுள்ளது என்பதற்கு, மேற்குறிப்பிட்ட செய்தி வழங்கல் நெறிமுறை ஒரு உதாரணம்.

 

ஜெர்மனியில் இனவெறிக்கு பலியான எகிப்தியப் பெண் மார்வாவின் மரணச் சடங்கு, அவரது சொந்த ஊரான அலெக்சாண்ட்ரியா நகரில் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வந்திருந்தார்கள். எகிப்தியப் பத்திரிகைகள் "ஹிஜாப்பிற்காக (முசுலிம் பெண்கள் தலையில் அணியும் முக்காடு) தியாக மரணத்தை தழுவிக் கொண்டவர்' என்று புகழாரம் சூட்டின. பல அரசியல் தலைவர்களும் மார்வாவின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டனர்.

 

ஐரோப்பாவில் அரபு மக்களின் நலனுக்காக பாடுபடும் AEL மட்டும் கண்டன அறிக்கையை வெளியிட்டது. அந்த அமைப்பின் தலைவர் அபு ஜாஜா "ஐரோப்பாவில் வாழும் முஸ்லிம் மக்களையும், அவர்களது மதத்தையும் கிரிமினல் மயப்படுத்தியதன் விளைவு இது'' என்று தெரிவித்துள்ளார்.

 

இது இப்படியிருக்க, வட அயர்லாந்து தலைநகரமான பெல்பாஸ்டில் வாழும் அந்நியர்களை, குறிப்பாக இந்திய, முசுலிம், ரொமேனியா சமூகங்களைச் சேர்ந்தவர்களை உடனடியாக வெளியேற வேண்டுமென நிறவெறி அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. Ulster Young Militants (UYM) என்ற, முன்னாள் புரட்டஸ்தாந்து தீவிரவாத அமைப்பான Ulster Defence Association - னின் இளைஞர் முன்னணி, வெளிநாட்டவரை விரட்டும் கைங்கரியத்தில் இறங்கியுள்ளது.

 

இந்த அமைப்பின் தலைப்பின் கீழ் எழுதப்பட்ட கடிதங்கள், பெல் பாஸ்டில் வாழும் வெளிநாட்டவர் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ள ன. "ஜூலை 12 ஆம் திகதிக்கு முன்னர், வெள்ளையரல்லாத அந்நியர்கள் யாவரும் வட அயர்லாந்தை விட்டு வெளியேறி விட வேண்டும்' என்று அந்தக் கடிதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது . ஜூலை 12ஆம் திகதி, புரட்டஸ்தாந் து கிறிஸ்தவர்களின் பண்டிகை தினம் என்பதும், Ulster Defence Association முன்னர் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் அரசால் நிர்வகிக்கப்பட்ட துணைப்படை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

மேற்குறிப்பிட்ட செய்தி இந்திய செய்தி ஊடகங்களிலும் வந்திருந்தது. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்கள் இந்தியர் என்றபடியால் தான் விஷேச கவனம் செலுத்தி வெளியிட்டிருந்தன. ஏற்கனவே ஜூன் 17ஆம் திகதிக்கு முன்னர், ரொமேனியர்களை வெளியேறும்படி கோரி இதே அமைப்பினால் கடிதங்கள் அனுப்பப்பட்டன. அவ்வாறு வெளியேறாத பட்சத்தில், அவர்களின் குழந்தைகள் கொல்லப்படுவார்கள் என்றும் பயமுறுத்தப்பட்டனர். ரொமேனியா குடும்பம் ஒன்றின் வீடு எரிக்கப்பட்ட சம்பவத்தின் பின்னர், பெல்பாஸ்டில் வசித்த அனைத்து ரொமேனியா குடும்பங்களு ம் தேவாலயங்களில் தஞ்சம் புகுந்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து அரசு செலவில், விமானம் மூலம் ரொமேனியா திருப்பி அனுப்பப்பட்டனர்.

 

ஜூலை 2ஆம் திகதி, நிறவெறிக்கு எதிரான ஐரிஷ் பிரஜைகள், பெல்பாஸ்ட் நகரில் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். இதன் மூலம் அனைத்து ஐரிஷ் மக்களும் நிறவெறியை ஆதரிப்பவர்கள் அல்ல எனக் காட்ட விரும்பினர். இந்த ஊர்வலத்தில் பேசிய தொழிற்சங்க தலைவர் ஒருவர், ""தொழிற்துறையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப வெளிநாட்டு தொழிலாளர்கள் அவசியம். ஐரிஷ் மக்களின் சமூகநலன் காப்புறுதிக்கு அவர்கள் பங்களிப்பு செலுத்துகின்றனர். இனப்பாகுபாடு காட்டுவோரைத் தண்டிக்கும் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்'' என்று தெரிவித்தார். · கலையரசன்

 

நன்றி: http://kalaiy.blogspot.com