01242022தி
Last updateஞா, 16 ஜன 2022 1pm

வினவு அறிவித்த "வரட்டுத்தனம்" மீது புலம்பல்களும், ஓப்பாரிகளும்

"வரட்டுத்தனத்தை" வினவுகுழு அறிவிக்க, அதை நிறுவப் புறப்பட்ட பலர் புலம்பியுள்ளனர். ஜனநாயகம், மார்க்சியம் .. அது இது என்று, கன்னா பின்னாவென்று ஓப்பாரிவைத்துள்ளனர்.  பலர் விவாதத்தையே வாசிக்கக் கூடவில்லை. ஒரு நூலில் தொங்கி கொண்டே கொசிப்போ கொசிப்பு. இதற்கு வெளியில் வேறு சிலர் ஏதோ ஏதோ உளறிக் கொட்டியுள்ளனர். வேறு சிலர் முன்னுக்கு பின் வாசிக்காமல், எம்மீது இல்லாத பொல்லாத அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர். இவற்றுக்கெல்லாம் பதிலளிக்கக் கூடிய வகையில், அதில் எதுவும் கிடையாது. குப்பை மேடு. 


இவற்றின் பின்னணியில் கட்டமைக்கப்பட்ட சில புரட்டுகளைப் மட்டும் பார்ப்போம்.

 

1.அவர் (ரதி) எழுத முன்னமே, அவரை நாம் பாசிட் என்று அறிவித்து விட்டோம் என்கின்றனர்.

 

மிகத் தவறான, அப்பட்டமான ஒரு திரிபு. அவர் எழுதியிருந்த மூன்று கட்டுரைகளின்  பின்புதான், அதுவும் இதன் பின் வினவுக்கு தனிப்பட எழுதிய கடிதத்தில் தான், அவரை பாசிட் என்று குறிப்பிடுகின்றோம். அக் கடிதத்தைத்தான், பின்பு வினவு பிரசுரித்தும் இருந்தது. வெளிவந்த மூன்று கட்டுரைகளுக்கு பின்தான், அவரை பாசிட் என்று குறிப்பிடுகின்றோம்.

 

அவரது முதலாவது கட்டுரையே பாசிசத்தின் அடித்தளத்தில் தான் இருந்தது. இருந்தும் அப்போதும் கூட நாம் குற்றஞ்சாட்ட முனையவில்லை. தோழர்கள் தளத்தில் அவை வெளிவந்தால், அதை அவர்களே கையாளுவார்கள் என்று எதிர்பார்த்தோம். 

 

எம் குறிப்பு மீது மா.சே மற்றும் வினவு தலையிட்ட விவாதத்தில் எமது தர்க்கத்தில் "… "தனது அனுபவங்களை ஒருவர் பகிரும் பொழுது அது அவர் அதை எப்படி பார்த்தாரோ, புரிந்து கொண்டாரோ அப்படித்தானே எழுத இயலும்.” இப்படி புலி பாசிசத்தை நியாயப்படுத்த முடியாது. தமிழினத்தை இந்த நிலைக்கு கொண்டு வந்த புலிப் பாசிசம், தான் சொல்வதைத்தான் மனித வாழ்வாக காட்டி, மனித முட்டாள்களை உருவாக்கியது. இதை "தனது அனுபவங்கள்" என்று கூறி நியாயப்படுத்த முடியுமா?"

 

"பகுத்தறிவுள்ள மனிதன் தன்னை சுற்றிய நிகழ்வுகளை பகுத்தறிவுடன் புரிந்தானா இல்லையா என்பதே இங்கு அடிப்படையான கேள்வி. இங்கு எழுத்தாளன் இதில் முட்டாளாக இருக்க முடியாது. இது நடுநிலையல்ல. மனிதர்களைப் பற்றி உண்மைகளைப் பற்றி பேசுகின்றதா அல்லது அதை மூடிமறைக்கின்றதா என்பதே கேள்வி. மூடிமறைப்பதையும் "தனது அனுபவம்” என்று கூற முடியும்."

"புலிகளின் பாசிசம் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தை மக்களுக்கு மறுத்து, எந்த மக்கள் விரோதத்தை இதன் மூலம் பாதுகாக்க முனைந்ததோ, அதையும் ரதி பேசுகின்றாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். உண்மைகளின் பக்கத்தில் நிற்கின்றாரா? அல்லது ஒரு பக்க உண்மையை புலி சார்ந்து பேகின்றாரா என்று பார்ப்போம்?"

 

என்று நாம் எழுதுகின்றோம்.


 
தொடர்ந்த விவாதத்தில்

 

"ரதி பற்றி நாம் எதையும் சொல்ல முற்படவில்லை. அவர் இன்னமும் எழுதவில்லை." என்கின்றோம். மற்றொரு தொடர் விவாதத்தில் "..இதை நாம் மறுக்கவில்லை. உண்மைகள் உண்மையாக எழுதும்வரை சரியானது. இல்லை என்றால், இந்த அகதி எதார்த்தம், அரசியல் போர்வையாகிவிடும். இங்கு ரதி குறித்து, இதை இந்த இடத்தில் ரதிக்கு அழுத்திக் குறிப்பிட விரும்பவில்லை. உண்மையான எந்த வாழ்வின் அனுபவத்தையும், நாம் மறுக்கவில்லை." என்று எழுதிய பின், "..இந்த வகையில் தொடர்ந்து இந்த விவாதத்தில் இருந்து நாம் விலகிக்கொள்வது நல்லதாகப் படுகின்றது. நீங்கள் புலியுடன் போய் புலியை திருத்த முனைகின்றீர்கள். நாங்கள் அதை எதிர்த்து அம்பலப்படுத்திதான் இதைச் செய்ய முடியும் என்று கருதுகின்றோம். உங்கள் வழி தமிழ் நாட்டுக்கு பொருந்தலாம். எமக்கு பொருந்தாது." இப்படிக் கூறி, முற்றாக அந்த விவாதத்தில் இருந்து விலகிவிடுகின்றோம்.

 

மீண்டும் வினவுடனான கடிதம் வரை, எதையும் நாம் எழுதவில்லை. அதுவரை அவர் பாசிசத்தையே எழுதியிருந்த போதும், அவரை பாசிட் என்று குறிப்பிடவில்லை.

 

2. நாங்கள் அவர் எழுதியதை தடுத்ததாக கூறுவது, பொய்ப் பிரச்சாரம். எந்தக் கட்டத்திலும் அவரிடமோ, வினவிடமோ இதை நிறுத்துங்கள் என்று நாம் கோரவில்லை. அவரின் பாசிசப் பிரச்சாரம் மீதும், இதை உருவாக்கிய வினவின் அரசியல் நடைமுறை மீதும் விமர்சனம் செய்தோம். இதை விமர்ச்சிக்கும் உரிமை எமக்கு உண்டு.

 

3.ரதியின் பாசிசத்தை நாம் இன்னமும் நிறுவவில்லை என்ற வாதம். சரி எப்படி நிறுவவேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள். நாங்கள் இந்த பாசிசத்தை தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளோம். அவரின் கருத்துகள் மேல்தான், இதைச் சொல்லுகின்றோம். மற்றும்படி அவர் அவர் கறுப்பா சிவப்பா, ஆணா பெண்ணா என எதுவும் தனிப்பட்ட ரீதியில் எமக்கு தெரியாது. பாசிசத்தை அவரின் கருத்தின் ஊடாகத்தான் காண்கின்றோம்.

 

பேரினவாதத்திற்கு எதிரான புலிப் பாசிசத்தின் கருத்துகள் எதுவோ, அதுதான் அவரின் கருத்துகள். குறைந்தபட்சம் முதலாளித்துவ ஜனநாயகத்தின் அடிப்படையில் கூட அது கிடையாது.  

 

1.அவர் தன் வரலாறாக சொன்னது, தமிழ்மக்கள் பற்றிய புலியின் வரலாற்றுப் பிரச்சாரமாகும். இதற்கு வெளியில், இந்த விடையத்தில் புலியின் பிரச்சார வடிவத்தில் வேறுபாடு கிடையாது.   

   

2. புலி எப்படி வரலாற்றை திரித்து புரட்டுகின்றதோ, அதையே அப்படியே தன் சொந்த வரலாறாக திரித்துப் புரட்டிக் கூறியுள்ளார். இந்தத் திரிபை சுயமாக அம்பலப்படுத்தவே, கடந்தகால ஆவணங்களை இதற்கு எதிராக நாம் முன்வைத்தோம்.

 

3.ஈழத்தின் பொதுவான அரசியல் போக்கில் யார் பாசிட்டுகளோ, அவர்களின் அரசியல் வரைவு இலக்கணத்தின் அடிப்படையில் இவரின் கருத்துகள் இருப்பதை சுட்டிக் காட்டினோம்.

 

ஈழத்து பாசிட்டுகள் எதை எப்படி தங்கள் சொந்த அரசியலாக முன்னெடுக்கின்றனரோ, அதையே ரதி முன்வைத்தார். இதை பாசிசமல்ல என்று சொல்லும் எவரும், ஈழத்தில் பாசிச வரலாற்றையும் அதன் அரசியல் பிரச்சாரத்தையும் அறியாதவர்கள். அதைப் பற்றிய அரசியல் தெளிவற்றவர்கள் என்பது இங்கு மிகத் தெளிவானது.

 

மறுபக்கத்தில் இது பாசிசமல்ல என்றால், இந்த விடையத்தில் எது பாசிசம்; என்பதை நீங்கள்தான் நிறுவ வேண்டும். இதை மறுத்து இதுதான் பாசிசம், ரதி சொன்னதல்ல என்று நிறுவ வேண்டியது உங்கள் கடமை.

 

பாசிசம் என்பது ஆள்வடிவம் பெற்றதல்ல. அதற்கு ஒரு பொருளாதார அடிப்படை உண்டு. அது மக்களை ஒடுக்கும் ஒரு சித்தாந்தம். அதன் அடிப்படையில் அதற்கு ஒரு நடைமுறை உண்டு. இதையே நபர்கள் பிரதிபலிக்கின்றனர். பாசிசம் எதை ஒடுக்கியதோ, அதை பாசிசம் மூடிமறைக்கும் அல்லது அதை பொய் என்றுரைக்கும் அல்லது அதை நியாயப்படுத்தும். ரதி இதைத்தான் செய்கின்றார். 

 

பாசிசத்தை தேடும் உங்கள் அறிவுப்படி, ராஜபக்ச ஒரு பாசிட், அதற்கு ஆதாரம் என்ன? எம்.ஜீ.ஆர் ஒரு பாசிட். அதற்கு ஆதாரமென்ன? நீங்கள் பாசிட் என்று கருதும் ஒரு நபருக்கு ஆதாரம் என்ன?

 

பாசிசம் சித்தாந்தம் சார்ந்தது. அதையொட்டிய நடைமுறை சார்ந்தது. அதற்கென்று கருத்துகள், கருதுகோள்கள் உண்டு. அதை ஆதரிக்கின்ற, நடைமுறைப்படுத்துகின்ற, பிரச்சாரம் செய்கின்ற அனைவரும் பாசிட்டுகள் தான்.

 

(புலிகள் ஏன் பாசிச சக்திகள் என்பதற்கு என்னென்ன காரணங்கள் நடைமுறைகள் வரலாறுகள் , மனிதச் சிதைவுகள் அவலங்கள் சாட்சியங்களாக வரலாற்றில் விதைக்கப்பட்டிருக்கின்றனவோ அவற்றை அரசியல் பொது மேடையில் விவாதங்களில் மக்கள் மன்றுகளில் மறுத்துரைப்பவர்கள் மூடிமறைப்பவர்கள் எடுத்துரைக்க விரும்பாதவர்கள் புலிப் பாசிட்டுக்களே தான்.)

 

இந்தப் பாசிச சித்தாந்தம் மக்களை ஒடுக்கி சுரண்ட, உருவாக்கும் ஒரு சர்வாதிகாரம். இங்கு மக்கள் வேறு, பாசிசம் வேறு. மக்களை ஒடுக்குவது தான் பாசிசம்;. பாசிசம் மக்களில் இருந்து பிரிந்தே கிடக்கின்றது.  

 

ரதி பாசிட் என்று நாம் சொன்னது அதிர்ச்சியாக இருந்தாக குறிப்பிடுகின்றார். ரதி தான் ஒரு பாசிட் இல்லை என்றால், என்ன செய்திருக்க வேண்டும். புலிப் பாசிசத்தை தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்று அறிவித்திருக்கவேண்டும். அதை அம்பலப்படுத்தி, எழுத முனைந்திருப்பார்.

 

பாசிசத் திமிருடன் பதிலளிக்கும் அவர், தான் பாசிட் அல்ல என்றால் பாசிசத்தைப் பற்றி எழுதியிருக்க முடியும். பாசிட் எப்படி பாசிசத்தைப் பற்றி எழுத முடியும்.  

 

அவர் ஒரு பாசிட்டில்லை என்றால் மக்களுக்கு எதிரான பாசிசப் புலியையும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களையும் தன் சொந்த அனுபவமாக சொன்னதில் அவற்றையும் சொல்லியிருப்பார். ஆனால் அதை மறைத்தும், அதை திரித்தும் சொன்னார். இதுவரை, நடந்த இந்த சர்ச்சைக்குள் கூட, அந்தப் பாசிசத்தை அவர் ஒத்துக் கொள்ளவில்லை. இப்படி புலிப் பாசிசத்தின் மனித விரோத செயல்களை மறுப்பவர் யார்? நடந்தவை பொய்யா? அதில் உண்மையே இல்லையா?

 

1986-1987 பின் "சில நாட்களிலே" ஈழத்தில் இருந்ததாக கூறியதை அடிப்படையாக கொண்டு நாம் எழுதியதை மறுத்து பினனோட்டம் போட்டவர், அதைத் திரித்து தற்போது "சில காலம்" அங்கிருந்ததாக தன் கட்டுரைக்கு ஏற்ப திரித்துக் கூறும் அவர், புலிகளால் மக்களுக்கு நடந்ததை ஏற்றுக்கொள்ள மறுப்பது எதனால்? அவர் ஒரு புலிப் பாசிட் என்பதால்தான்.

 

குறிப்பாக சிறி, தெக்கன் தங்கள் பின்னோட்டத்தில், புலிப்பாசிட்டுகளால் மக்கள் சந்தித்த பல விடையத்தைப் பேசுகின்றனர். ஏன், இந்த விவாதத்தின் தர்க்கமே இதற்குள் நடக்கும் போது, அந்த மக்களுக்கு புலிகளால் நடந்த துயரங்களுக்கு பதிலளிக்காதவர்கள் யார்? அவர்கள் பாசிட்டுகள்.

 

புலிகளால் கொல்லப்பட்ட மக்களுக்காக, வருந்தாத, அவர்கள் துயரங்களை தன் துன்பமாக கூட எடுக்காதவர் யார்? ஒரு பாசிட்தான். இன்று முட்கம்பிக்கு பின் வாழும் வன்னிமக்கள், புலிகளால் பட்ட துயரத்தை மூடிமறைத்து, பேரினவாதம் உருவாக்கியுள்ள  வன்னி மக்களின் வதை முகாங்கள் பற்றியும் மனித சிதைவைப்பற்றி மட்டுமே பேசுபவர்கள் யார்? பாசிசப் புலிகள் தான்.

 

இறுதி யுத்தத்தில் தம் பலிக்கு உடன்பட மறுத்த மக்களை கொன்றும், மக்களை பணயம் வைத்து அவர்களை பலியாடாக்கி பலிகொடுத்த புலிப்பாசிசத்தை சரியென்றும், நடந்ததை உலகின் கண்ணில் மூடிமறைப்பவர்கள் யார்? அவர்கள் பாசிட்டுகள்.

 

ஈழத்தில் மக்கள் மேலான அனைத்துக் கொடுமைகளையும் இனம் காட்டி, அதற்காக குரல் கொடுக்காது, வேறு ஒன்றுக்காக கரைபவர்கள் பாசிட்டுகள். எந்த மனிதனைப்பற்றி பேசுகின்றனரோ, அந்த மனிதனுக்கு நடந்ததை மூடிமறைப்பது பாசிசம்.

 

பி.இரயாகரன்
31.08.2009

 

தோழர்களின் ஆலோசனைக்கு இணங்க, இத்துடன் இத்தொடர் நிறுத்தப்படுகின்றது. வினவு குழுவின் எதிர்வினையைப் பொறுத்து, தொடர்வதா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படும். 

 

                          

 


பி.இரயாகரன் - சமர்