Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

"இலங்கையர்கள்,எமது நாடு"என்ற வாதங்களோடு தமிழ்பேசும் மக்களுக்குள் வண்டியோட்டும் சிங்கள அரச கைக்கூலிகள்,இலங்கையர்கள் என்றும்,எமது நாடுவென்றும் தமிழ்பேசும் மக்களைச் சுற்றியொரு உளவியல் யுத்தஞ் செய்வதும்,அதுசார்ந்து விரிந்த கருத்துச் சொல்லி,இலங்கையில் இனவாதங் கடந்த,

 

 இலங்கைவாழ் மக்களுக்கான ஒரு அரசாகச் சிங்கள இனவாத அரசை முன்னிறுத்தும் இன்றைய தருணத்தில், நாம் மீளவும் ஏமாற்றப்படுகிறோம் என்பதற்குச் சமீபத்தில் சிங்கள இராணுவத்தின் மிகக் கொடுமையான இனவழிப்பின் சாட்சி, வீடியோவாகக் காணக்கிடைத்தது.
 
நாம் வாழ்வது 21ஆம் நூற்றாண்டிலாவென்று, ஐயுறும் அளவுக்குக் காட்டுமிராண்டிகளாகச் சிங்கள இனவாத இராணுவமும் அதன் அரசியற்றலமையும் அப்பாவித் தமிழ் மக்களை நாயிலும் கேவலமாக அவமானப்படுத்திச் சுட்டழிக்கிறது.
 
 
தமிழ் பேசும் ஒரேகாரணத்துக்காக, இலங்கையின் பூர்வீக மக்களில் ஒருபிரிவைப் பூண்டோடு அழிக்க முனைவது மிகவும் கொடுமையானது.இஃது, பாசிசக் கிட்லரது இனவழிப்புக்கு ஒப்பானது."இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாது" என்று இந்த இனவழிப்புச் சதி அரசியலை நியாயப்படுத்தும் பாசிச மகிந்த அரசு, அனைத்து மனிதவுரிமை விதிகளையும் காலிற்போட்டு மிதித்தபடி இலங்கைச் சிறுபான்மை இனங்களை வேட்டையாடுவதைச் சில"மார்க்சிய மேதைகள்"முதலாளித்துவ வளர்ச்சியில் இவையாவும் சாத்தியம் என்றும் உரையாடுகிறார்கள்.
 
 
இதற்காக மேற்குலகில் முதலாளிய உருவாக்கத்தில் நிகழ்ந்த இனக்கலப்பு,உள்வாங்கல்-அழித்தல்,ஓரினப்படுத்தல் குறித்து விளக்கமுஞ் சொல்கிறார்கள்.சமீபத்தில் யுக்கோஸ்சிலாவியத் தேசத்தில் நிகழ்ந்த இனவழிப்புகள் வெறுமனவே கொசாவா சார்ந்து பரப்புரைக்கு வந்தது.அங்கே ஜப்பிசிகளைக் கொன்றுகுவித்த சேர்பிய-அல்பேனிய இனவாதம் தத்தமக்கான நியாயத்தைத் தேசங்களது பெயரில் சொன்னபோது, இந்த ஜிப்சிகளுக்கானவொரு தேசம்-வேர்-வரலாறு இல்லாதிருந்தது.அவர்கள் எந்தத் தடையமின்றிச் சமீபத்திலும் அழிக்கப்பட்டார்கள்.வரலாறு பூராகவும் இனவழிப்புகள் இந்த மக்கட்டொகைக்கு அவர்கள் வாழும் பற்பல நில எல்லைகட்குள் நிகழ்ந்து வரும்போது, அவர்கள் இவற்றை எதிர்க்க வலுவற்றும், தம்மை அரசியல் ரீதியாக அணிதிரட்டவும் வலுவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.இதுதாம் அவர்களது சமூக இருப்பு.இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கும் மற்றைய சிறுபான்மை இனங்களுக்கும் இத்தகையவொரு அபாயம் மிக நெருக்கமாக இருக்கிறது?
 
 
இன்று, இலங்கையை முழுமொத்தச் சிங்கள மயப்படுத்தும் மகிந்தாவினது இராணுவவாத ஆட்சிக்குப்பின் உலகத்தைப் பங்குபோடும் ஏகாதிபத்தியத்தின் முரண்பாடுகள் ஒவ்வொரு புறமாக(ஆசியா-ஐரோப்பா)நிற்கின்றன.தமிழ்பேசும் மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள இராணுவத்துக்குத் தீனி போடுவதற்கு உலக நாணய நிதியம் முதல் ஆசிய அபிவிருத்திவங்கி,சீன அரசு,இந்திய அரசுவெனப் பற்பல உதவிகள் இலங்கைக்குள் வந்துவிடுகிறது.இவையெல்லாமே மகிந்தா அரசு தமிழர்களுக்கெதிரான போரில் தமிழ்பேசும் மக்களுக்கு எதிராகச் செய்த படுகொலைகளை மறுத்தபடியேதாம் வந்திருக்கின்றது.இதன் தொடராக இலங்கையில் நகழும் தமிழினவழிப்பை சகல தரப்புமே நிராகரித்தபடிதாம் இலங்கைச் சிங்கள அரசுக்குத் தொடர்ந்து ஒப்புதல் அளித்துத் தமிழரது இருப்பையே இலங்கையில் இல்லாதாக்கும் அரசியல் நகர்வை"பொருளாதார அபிவிருத்தி,முதலாளிய வளர்ச்சி,ஒரு தேச உருவாக்கம்-புதிய இன உருவாக்கம்"என்று தத்துவ விளக்கம் அளிக்கின்றனர்.
 

 


இதைச் சாதகமாகக் கையெலடுத்த பாசிச மகிந்தாவோ, இலங்கையில் சிறுபான்மை இனங்களே கிடையாதென்று கூற,அதையும் முதலாளித்துவ வளர்ச்சி,சுய பொருளாதாரத் தேசிய எழிச்சியாகவும் கருத்துரை செய்யும் தமிழ்"மார்க்சியப் புரவலர்கள்"புலிகளது அடாவடித்தனமான வன்முறையே"இலங்கை அரச வன்முறையாக உருவாகியதாகவும்,அது இலங்கை தழுவிய தேசியத்தை முன்னெடுக்கவே(அதாவது சிங்கள மயப்படுத்துவதென்பதை தேசியத்தின் பெயரில் ஏற்றுச் சரண் அடைவது)அரச வன்முறை நிர்பந்திக்கப்படுகிறது என்று,நாவலுனக்குத் "தேசிய வகுப்பு"எடுக்க,இந்தச் சோபாசக்தியோ மகிந்தாவினது பாசிசச் செயற்ப்பாட்டைக் குறித்து மிக நெஞ்சுருகும் கட்டுரையை எழுதுகிறான்.
 
 
அவன் மனிதன்.தரையில் வாழ்கிறான்,தன்னுடன் வாழ்ந்து சாகடிக்கப்படுபவர்கள் குறிந்து நொந்து கொள்கிறான்-கலைஞன் அவன்!
 
 
நேர்த்தியாகச் சிந்திகத் தெரியாதவர்கள் நாம்.
 
 
"புலிகள் தம்மிடமிருந்த மாற்றியக்கக் கைதிகளை வன்னியைவிட்டு ஓடியபோது துணுக்காயில் சுட்டுக் கொன்றார்கள்" என்றும்,மாற்றியக்கக் கைதிகளை இங்ஙனம் கொன்றதையே பரப்புரை செய்யப் புலிகள் பயன்படுத்துவதாக"எல்லாந் தெரிந்த"சுகன் இலங்கைத் தேசியக் கீதம்பாடிச் சொல்லும்வரை எனது மரமண்டைக்கு இது புரியவில்லை!
 
 
இன்றைய எமது இழி நிலை என்பது சாதியப் பாகுபாடோ அன்றிச் சமாதிகட்டும் பாசிசச் சூழலோ மட்டுமில்லை!மாறாக,உண்மையைப் புலிப்பாசிசத்தின் தெரிவில் தான்தோன்றித்தனமாக மறுத்து,இலங்கைப் பாசிச அரசின் பின்னே ஒளிந்து அரசியல் செய்வதும் மிகப் பெரிய இழி நிலைதாம்!எம் மக்களின் அளப்பெரிய உயிர்வாழ்வே இங்கு கேவலமான பரப்புரைகளால் நிர்க்கதியாக்கப்படுகிறது.இதனால் பாசிச மகிந்தாவினது குடும்பமே தமிழினவழிப்பை முற்று முழுதாகத் தமிழினத்தைக்கொண்டே கச்சிதமாகச் செய்து வருகிறது.அன்று புலிகளும்,இன்று அதன் எச்சங்களும்(கருணா-பிள்ளையான்),மாற்று இயக்கங்கள் என்ற ஆயுததாரிகளும் டக்ளஸ் தலைமையில் கடும் காட்டாட்சி செய்யும் மகிந்தாவுக்குத் தேசியத்தின் பெயரில் காவடி தூக்கும்போது, சுகன் மட்டுமல்ல,தோழர்கள் பலரும் இங்ஙனம் முண்டுகொடுக்க, உண்மையாகப் புரட்சிகரமாகச் செயற்படும் புரட்சிகரச் சக்திகள் தவிர்க்க முடியாது இவர்களைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியாக வேண்டும் என்ற நிர்பந்தத்தால் இவற்றைத் தொடர்ந்து திரும்பத் திரும்பப் பேச வேண்டியுள்ளது.
 
 
"Die Welt ist viel zu gefaehrlich,um darin zu leben-nicht wegen der Menschen,die Boeses tun,sondern wegen der Menschen,die daneben stehen und sie gewaehren lassen.-Albert EINSTEIN(இவ்வுலகமானது ரொம்ப அபாயகரமானது,அதற்குள் வாழ்வதற்கு-இந்நிலை மனிதர்களாலோ,போக்கிரிகளாலோ அல்ல,மாறாக,மனிதர்கள் இவைகளுக்கு அருகினிலிருந்து அவர்களை அநுமதித்து விடுவதாலேயே.)-அல்பேர்ட் ஐன்ஸ்ரையன்"இது,இன்றைய சிங்கள இனவாத அரசுக்குக் குடைபிடிக்கும் அனைவருக்கும் பொருத்தமே.
 
 
 
சோபா சக்தி இத்தகையவர்களை நோக்கி சுயதேடலாகப் பிறழ் சாட்சியம் என்று எழுதுகிறார்.
 
 
இது,மிக அவசியமான தேடல்.
 
 
நம்மீது நிகழ்த்தப்படும் வரலாற்றுக் கொடுமைகளை தேசத்தின் பெயரில்,தேசியத்தின் பெயரில் புலியுஞ்சரி,இலங்கைச் சிங்கள அரசுஞ்சரி செய்து முடிக்கும் இன்றைய பொழுதுகள்வரை நாம் ஏதேதோ சொல்கிறோம் எமது மனத் தெரிவுகளுக்கமைய-உண்மையோ இலங்கையில் மனிதர்களைக் கொல்வதில் முனைப்புடைய கயவர்களை இனம்காணமறுத்துக் கிடக்கிறது.
 
அது,பற்பல வேடமிட்டுக் கருத்துக்களாக விரிகிறது.
 
 
இது,தமிழ்பேசும் மக்களது அனைத்துத் தளத்தையும் கைப்பற்றிக் கொண்டுள்ளதால் பாசிசச் சிங்கள அரசோ கொலைகளைச் செய்துவிட்டு,தமிழ்பேசும் மக்களது காவலனாக வேடமிடுகிறது.இது,எமது இழிநிலை.
 
 
பிறழ் சாட்சியம் சொல்லும் சோபா சக்தியை மீளப் பதியம் போடுகிறேன், முளைத்து மூன்றிலையாவது எறி என்றெண்ணி.
 
 
ப.வி.ஸ்ரீரங்கன்
29.08.09

 

...............................................................

 


பிறழ் சாட்சியம்
 
 
 
மறுபடியும் ஒருமுறை வெறுப்புடன் அந்த வாசகத்தை உச்சரிக்க வேண்டியிருக்கிறது:

 
"கொடியவர்கள் இழைக்கும் கொடுமைகளிலும் பார்க்க அவற்றை நீதியான மனிதர்கள் என்போர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மவுனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்தந் தலைமுறையில் வருத்தமுற வேண்டும்" என்றார் மாட்டின் லூதர் கிங். நம்காலத்தில் மவுனத்தைக் கலைத்துக் கொடுமைகளை நியாயப்படுத்தும், திரிக்கும் நீதிமான்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.


சில நாட்களிற்கு முன்பு பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் 4'ல் ஒளிபரப்பப்பட்ட அந்தக் கொடூரக் காட்சியில் மனிதர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு இராணுவச் சீருடை அணிந்தவர்களால் பன்றிகளைப்போல சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். கொல்லப்படுபவர்கள் புலிகளா அல்லது சாதாரண தமிழ் இளைஞர்களா என்பது குறித்து எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால் கொல்பவர்கள் இலங்கை இராணுவத்தினர் என்பதில் எனக்குச் சந்தேகம் ஏதுமில்லை.


இலங்கை அரசினதும் இலங்கை இராணுவத்தினதும் ஆதரவு இணையத்தளங்களாலும் தனிநபர்களாலும் இப்போது அந்தச் சம்பவததில் கொல்லப்பட்டவர்கள் புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் என்றும் கொன்றவர்கள் புலிகள் என்றுமொரு பரப்புரை முன்னெடுக்கப்படுகிறது. மனித உரிமைக் கண்காணிப்பகமும் மற்றும் மனிதவுரிமை அமைப்புகளும் இலங்கை அரசின் யுத்தக் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று சொல்வதெல்லாம் இவர்களுக்கு ஒரு பொருட்டேயில்லை. எப்படியாவது என்ன பேய்க்கதையைச் சொல்லியாவது இலங்கை அரசைக் காப்பாற்றவேண்டும் என இவர்கள் துடிக்கிறார்கள்.

கொல்லப்பட்வர்கள் புலிகள் அல்ல என்பதற்கு இவர்கள் வைக்கும் மோட்டுத்தனமான வாதங்களில் ஒன்று 'புலிகள் தாடி வைப்பதில்லை, ஆனால் கொல்லப்பட்டிவர்களிற்கு தாடியிருக்கிறது' என்பதாகும். புலிகள் தாடி வைக்கமாட்டார்கள் என்று இவர்கள் எங்கே ஆய்வு செய்து இந்த உண்மையைக் கண்டடைந்தார்கள் என்பது தெரியவில்லை. புலிகளின் முதலாவது வாகனப் பொறுப்பாளருக்குப் பெயரே தாடி சிறி என்பதுதான் (அவர் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார். ஆண்டு 1986 என்று ஞாபகம்) கிட்டு, திலீபன் போன்ற பிரபலங்களே அவ்வப்போது தாடி வைத்திருப்பார்கள். தாடி வைத்திருக்கக் கூடாது என்றெல்லாம் இயக்கத்தில் கண்டிப்பான விதிகள் ஏதும் எனக்குத் தெரிந்து கிடையாது. பிரபாகரனின் தாடிவைத்த புகைப்படம் கூட பிரபலம்தான்.


சரி அப்படி ஒரு விதியிருக்கிறது என வைத்தக்கொண்டாலும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு இராணுவம் ஒவ்வொரு நாளும் சவரம் செய்தா விடப்போகிறது. தாடி தன்பாட்டுக்கு வளர்ந்திருக்கும். இந்த மயிர் விவகாரத்தை வைத்து கொன்றவர்கள் இராணுவமல்ல என்று விவாதிப்பது கொலைகாரத்தனம்.


கொல்லப்பட்டவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் பாருக் என்பது இவர்கள் கசியவிட்டிருக்கும் இன்னொரு செய்தி. அந்தக் காட்சியில் கொல்லப்படுபவர்களின் முகங்களை அடையாளம் காண்பது மிகச் சிரமமானது அல்லது சாதியமற்றது. இது இன்னொரு திரிப்புத்தான் என நான் நம்புகிறேன்.அதில் கொல்லப்பட்டவர் பாருக் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இதுவரை அறிவிக்கவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
 
ஜனவரியில் நடந்த சம்பவத்தை ஏன் இத்தனைநாள் கழித்து வெளிக்கொணர வேண்டும் என்பது இவர்கள் எழுப்பும் இன்னொரு முட்டாள்தனமான கேள்வி. அங்கே என்ன சினிமா சூட்டிங்கா நடைபெற்றது குறித்த காலத்தில் படப்பிடிப்பை முடித்து குறித்த காலத்தில் ரீலிஸ் செய்ய. கொலைகாரர்களில் ஒருவனால் பதிவு செய்யப்பட்ட அந்த நிகழ்வு எத்தனையோ கைமாறித்தான் ஊடகவியலாளர்களைச் சேர்ந்திருக்கும். 'சனல் 4' பதிவின் நம்பகத்தன்மையை உறுதிசெய்ய நாட்களை எடுத்திருக்கும். தாமதமானதிற்கு இவ்வாறான ஏராளமான காரணங்கள் இருக்கின்றன.


புலிகள் தங்கள் சிறையிலிருந்தவர்களை நிர்வாணப்படுத்தமாட்டார்கள் என்பதோ, இழுத்துப்போய்ச் சுடமாட்டார்கள் என்பதோ என் கருத்தில்லை. தோழர்கள் இராயகரன், சரிநிகர் சிவக்குமார் உட்பட ஆயிரக்கணக்கான இயக்கப் போராளிகளும் அப்பாவிச் சனங்களும் புலிகளால் இவ்வாறு நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டவர்கள்தான். 'கந்தன் கருணைப் படுகொலை' எனச் சொல்லப்படும் கொலைச் சம்பவத்தில் புலிகளிடமிருந்த சிறைக்கைதிகள் அய்ம்பத்தேழு பேர்கள் ஒரே இரவில் புலிகளால் கொல்லப்பட்டார்கள். புலிகளின் மூத்த தளபதி அருணாவின் தலைமையில் இந்தக் கொடூரம் நிகழ்ந்தது. புலிகளால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த ஒன்பது இலங்கைச் சிப்பாய்கள் குமரப்பா, புலேந்திரனின் மரணத்தைத் தொடர்நது புலிகளால் இரவோடு இரவாகச் சுடப்பட்டு யாழ் பஸ்நிலையத்தில் வீசப்பட்டார்கள். புலிகளின் வரலாறு நெடுகவும் இதுபோல ஆயிரம் கொலைச் சம்பவங்களுண்டு.
 
ஆனால் புலிகளின் கொலைச் செயல்களை முன்வைத்து இலங்கை இராணுவத்தின் கொலைகளை நியாயப்படுத்த முயற்சிப்பதோ பூசிமெழுக முயற்சிப்பதோ தாடி போன்ற அற்ப சந்தேகங்களைக் கிளப்பி இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்க முயல்வதோ சின்னத்தனமான அரசியல். இன்று இலங்கை இராணுவத்தின் கைகளில் ஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் பொதுமக்களும் மீள்வதற்கு வழியேயின்றிச் சிக்கியிருக்கும் தருணத்தில் இதுபோன்ற சின்னத்தனங்கள் ஏற்கனவே இனவெறியில் ஆடிக்கொண்டிருக்கும் இராணுவத்திற்கு இன்னும் வலுச் சேர்ப்பதாகவேயிருக்கும். இராணுவத்தால் எத்தனை புலிப் போராளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள், எத்தனைபேர்கள் சரணடைந்துள்ளார்கள் என்ற தகவல்களை இராணுவம் இதுவரை வெளியிட மறுக்கிறது. இராணுவத்திடம் சிக்கியிருப்பவர்களும் இவ்வறே சிறுகச் சிறுகக் கொல்லப்பட்டுவார்கள் என்ற நிலையிருக்கும்போது இத்தகைய நியாயமற்ற சந்தேகங்கள் அந்தக் கொலைகளை ஊக்குவிப்பதாகவும் விரைவுபடுத்துவதாகவுமே இருக்கும்.


இராணுவத்தின் கொலைச் செயல்களை எந்தவிதமான ஆதாரங்களுமின்றி புலிகளின் தலையில் சுமத்தும் வேலையை அரசு ஆதரவு ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. சனாதிபதியோ அல்லது இராணுவத் தளபதியோ 'இலங்கை இராணுவம் கண்ணியமானது' எனச் சொல்லும் செய்திகளை இவை முக்கியத்துவம் கொடுத்து பிரசுரிக்கின்றன.
இலங்கை இராணுவத்தின் 'கண்ணியத்திற்கு' ஒன்றா இரண்டா சாட்சியங்களுள்ளன. வந்தாறுமூலை, குமுதினி, செம்மணி, அல்லைப்பிட்டி, முள்ளிவாய்க்கால் என்று எண்ணற்ற கூட்டுப் படுகொலைகளை இலங்கை அரசு செய்தது. எது குறித்தும் இதுவரை நீதி விசாரணைகள் ஏதுமில்லை. பொது மருத்துவமனைகள், பாடசாலைகள், அகதிமுகாம்கள், கோயில்கள் என்று எத்தனை இடங்களின் மேல் குண்டுகள் வீசப்பட்டன. பொக்கணையில் நிவாரணப் பொருட்களைப் பெற வரிசையில் நின்ற அகதிகள்மீது குண்டு பொழிந்து கொன்ற கண்ணியத்துக்குரிய இராணுவமல்லாவா அது. 'சனல் 4'ல் ஒளிபரப்பான கொலைகளைப் போல ஆயிரக்கணக்கான கொலைகளைச் செய்து முடித்த இராணுவம்தான் இலங்கை இராணுவம். வெலிகடயிலும் பிந்தனுவெவயிலும் சிறைப்பட்டிருந்த கைதிகளை கொலை செய்த அரசுதான் இலங்கை அரசு.


இலங்கை அரச படைகளின் கொலைச் செயலைப் புலிகளின் மீது சுமத்தி 'தேனி' போன்ற அரசு சார்பு இணையங்கள் இலங்கை இராணுவத்தைப் பாதுகாக்கக் கிளப்பிவிடும் இதுபோன்ற வதந்திகளும் ஊகங்களும் பரப்புரைகளும் பாஸிசத்தின் ஊடக முகங்கள். அந்தப் பரப்புரைகளை நியாயப்படுத்தி சுகன் போன்றவர்கள் பேசும் சொற்கள் அவர்கள் இவ்வளவு நாளும் பேசிவந்த மானிட நேயத்தையும் கொலை மறுப்பு அரசியலையும் கேள்விக்குள்ளாக்கியே தீரும். பிறழ் சாட்சியத்தில் புத்திச்சாலித்தனம் இருக்கலாம், சிலவேளைகளில் கவித்துவம் கூட இருக்கலாம். ஆனால் அந்த சாட்சியத்தின் பின்னால் அநீதியும் இரத்தப்பழியும் இருக்கிறது.


http://jananayagam.blogspot.com/2009/08/blog-post.html