மெழுகுதிரியை ஊதி அணைக்கிறதையும், கேக் வெட்டுறதையும், அடுத்தடுத்து பத்துப்பேர் வீடியோகமெராவை முறைச்சுக் கொண்டு நிற்கிறதையும் பாக்க எரிச்சல் எரிச்சலா வந்தது. பக்கத்தில மடியில ஒரு குழந்தையை வைச்சுக் கொண்டிருந்தவ, தான் சிங்கப்பூரில இருந்து எடுப்பிச்ச நெக்லஸைப் பத்தி வலு தீவிரமாக என்ர மனைவியோடை கதைச்சுக் கொண்டிருந்தா.

அவவின்ர இன்னொரு குழந்தை இந்த ஹாலுக்குள்ளைதான் எங்கேயோ விளையாடிக்கொண்டிருக்குதாம். மனுசன் அங்காலை பார்ட்டியில நிற்கிறாராம். அங்கை வந்த பெரும்பாலான ஆண்கள் பார்ட்டியில தான் நிப்பினம் எண்டதை ஊகித்துக் கொண்டேன். எனக்கும் இதில குந்தியிருக்கிறதை விட அங்கை போனால் பொழுது போகும் எனத் தோன்றியது. ஆனாலும் ஆரும் வந்து கூப்பிடாமல் எப்பிடிப் போறது..? என்னைக் கூப்பிடக் கூடிய யாரும் பக்கங்களில நிக்கினமோ எண்டு அங்காலை இங்காலை பாத்தன். யாருமில்லை. இதில இருந்தாச் சரிப்படாது யாற்றையும் கண்ணில படக் கூடிய மாதிரி நின்றால்த் தான் சரியென எழுந்து ஓரமா வந்தன்.

மேடையில குழந்தையின் கையைப் பிடிச்சுத் தாயே கேக்கை வெட்டி, அவவே அப்பாக்கும் தீத்தி விட்டா. குழந்தை வீரிட்டு கத்திக் கொண்டடிருந்தது. மேடையின் கீழே ஒரு பத்துப் பதினைஞ்சு பேர் முதல்ல போய் மொய் குடுக்கவும், வீடியோக்கு முகம் காட்டவும் தயாராய் கியூவில நின்றனர்.

´´என்னடாப்பா இங்கை நிக்கிறாய்? எங்கை நிண்டனி இவ்வளவு நேரமும்.. வா வா உள்ளை வா.. ´´ ஐய்யோ தெய்வமே.. ஆரோ என்னைக் கூப்பிடுகினம். இனி பொழுது சுவாரசியத்துக்குக் குறையில்லாமல்ப் போகும். ´´சும்மா இந்தப் பக்கம் வந்தனான்´´எண்டு நான் சொல்லிக்கொள்வதை கவனத்திலேயே எடுக்காதவர் போல அவர் நடக்க, நான் பின்னால் போய் ஒரு சில தெரிந்த முகங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன்.

´´என்ன விசர்க்கதை கதைக்கிறியள்.. பொடியள் இப்ப கிழக்கில இருந்து வெளியேறிப் போட்டாங்கள். இது ஒரு தன்மானப் பிரச்சனையெல்லோ எண்ட படியாலை அடுத்த அடி மணலாறில தான் விழும். மணலாறைக் கையுக்கை கொண்டு வந்தாத்தான் கிழக்கில அடியளைத் தொடங்கலாம்´´ எண்டு அங்கையிருந்து சொன்னவர் கையில இருந்த க்ளாசை அடிக்கடி ருசி பாத்துக்கொண்டார். அவர் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே அடிக்கடி இடைமறித்துக் கொண்டிருந்த இன்னுமொருவர் இப்ப முழுவதுமாய்ச் சொல்லத் தொடங்கினார். ´´கிழக்கில இப்போதைக்கு கை வைக்கிறதில்லை´´ ஏதோ தான் தான் அந்த முடிவை எடுத்தவர் மாதிரிச் சொன்னவர் ´´முதல்லை யாழ்ப்பாணத்தில தொடங்க வேணும். பொடியள் தாங்கள் பலமாயிருக்கிறம் எண்டு காட்ட வேணுமெண்டால் யாழ்ப்பாணத்தை தங்கடை கையுக்குள்ளை கொண்டு வரோணும்´´ எண்டு முடித்தார். நான் வந்ததன் பிறகு அவருக்கு இது ரண்டாவது ரவுண்ட்.

´´அது மட்டுமில்லையண்ணை. யாழ்ப்பாணத்தை அவன் பிடிச்சு பன்னிரண்டு வருசமாச்சு. இனியும் விட்டுவைக்கேலாது. கெதியில தொடங்க வேணும்´´ என்றவரை எனக்கு யாரென அடையாளம் தெரியவில்லை. சில வேளை கிட்டடியில வந்திருப்பார். ´´ஓ… அதை விட இப்ப எங்களுக்கு ஆள்வளம் தேவை. யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இடத்தைப் பிடிச்சால்த் தான் தேவையான ஆள் வளத்தைப் பெறலாம்´´ என்றவர் போன வருசம் தான் தன்ர மூத்த மகனை ஏஜென்சி மூலமும் மற்றப் பிள்ளையள் ரண்டு பேரையும் மனிசியையும் ஸ்பொன்சரிலையும் இங்கை கூப்பிட்டவர்.

´´இஞ்சை, அங்கை நடக்கிற சண்டை, நாங்கள் இங்கை தண்ணியடிச்சுப் போட்டுக் கதைக்கிறதுக்கில்லை. நீங்கள் போடுற பிளானுக்கும், ரைம் ரேபிளுக்கும் அங்கை சண்டை பிடிக்கேலாது தெரியுமோ.. ´´ யாரோ உறைப்பாக் சொன்னது கேட்டது. பிறகென்ன.. இங்கையும் தெளிவாக் கதைக்கிறதுக்கு ஆரோ இருக்கினம் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன். அதுக்கு ஆரும் பதில் சொல்லேல்லை. பதில் சொல்லுறதுக்கும் ஒண்டும் இல்லைத் தானே. ரண்டு மூண்டு பேர் எழும்பி வெளியில போயிச்சினம். மேடையடியில இப்ப பெரிய கியூ நிண்டது. பிறந்த நாள் குழந்தையின் கையில குடுக்கிற என்வெலப்புக்களை தாயும் தகப்பனும் சிரிச்சுக் கொண்டே வாங்கி பின்னாலை வைத்துக்கொண்டிருந்தினம். இன்னும் கொஞ்சம் கியூ குறையட்டும் எண்டு நான் நினைச்சுக் கொண்டேன்.

´´என்னடா.. உதோடையே அப்ப துவங்கி இருக்கிறாய். ஏதாவது பெரிசா அடியன்´´ எண்ட ஒருவர் பெரிசா ஒரு போத்தலை என்னருகில் நகர்த்தினார். ´´இல்லையண்ணை. பெரிசு பழக்கமில்லை. லைட் தான் எப்பவும். அதோடை போகேக்கை ட்ரைவிங் செய்ய வேணும். உது சரிப்பட்டு வராது.´´ எண்டு நான் சொல்லி முடிக்க முதலே அவரிட்டை இருந்து ஒரு இடிச் சிரிப்பு வெளிவந்தது. கொஞ்ச நேரத்துக்கு கெக்கட்டம் போட்டு அவர் தொடர்ந்து சிரிக்க, இதில சிரிக்கிறதுக்கு என்ன இருக்கெண்டு எனக்கு விளங்கவில்லை.

´´ஏன்ராப்பா உன்ர மனிசி இன்னும் ட்ரைவிங் பழகேல்லையே..? என்ரை மனிசியை வந்து ஆறுமாதத்தில பின்னாலையும் முன்னாலையும் கலைச்சு லைசென்சை எடுக்கப் பண்ணிப் போட்டன். ஒரு மூவாயிரம் செலவழிச்சது. இப்ப பார் ஒரு பிரச்சனையும் இல்லை. எவ்வளவும் ஏத்தலாம். காசைப் பாக்காதை. மனுசியை உடனை லைசென்சை எடுக்கச் சொல்லு. ´´ எண்டு சொல்லிப் போட்டு ´´பெரிய மனுசர் சொல்லுறதைக் கேட்டு நட´´ எண்டு வேறை சொன்னார்.

வெளியில கியூ சரியாக் குறைஞ்சிருந்தது. மேடையில ஏறி சிரிச்சு வாழ்த்துச் சொல்லிப் போட்டு, பார்சல் பண்ணி வைச்சிருந்த விளையாட்டுப் பொருளை தாயிடம் குடுக்க அவ லேசா சிரிச்சா. எண்டாலும் என்வெலப் குடுக்கும் போதிருந்த சிரிப்பில்லை அது எண்டு எண்ணிக் கொண்டேன்.

வெளியில வெயில் நல்லாயிருந்தது. வரும் வழியில் லேசாக மனைவியிடம் கேட்டேன். ´´என்னமாதிரி கார் பழகிற பிளானுகள்.. ´´ 
´´ஓ.. இப்பதானே படிக்கிறன். எடுக்கத் தான் வேணும். ஏன் கேட்கிறாய்.. ´´ 
´´இல்லை கெதியில படிச்சு லைசென்சை எடன். மனசு வைச்சுப் படிச்சாயெண்டால் கெதியில எடுக்கலாம். சோதினையை எடுத்து விட்டாய் எண்டால் பிறகு நானே பழக்கி விடுவன். சும்மா காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கேலாது தானே´´ 
´´ம்.. என்ன திடீரென்று அக்கறை.. ´´
´´ஒண்டுமில்லை.. இங்கை எல்லா பொம்பிளையளும் கார் ஓடுகினம். என்ர மனுசியும் ஓட வேணும் எண்டு எனக்கும் ஆசையிருக்கும் தானே..அதோடை அந்தரமாவத்துக்கும் உதவும் தானே.. ´´ 
சிக்னலில் இப்போ சிவப்பு லைட் எரிந்தது. காரை நிறுத்தினேன். பூவுலகில் பொய் சொல்லும் போது மேலுலகில் கடவுளின் இடத்தில் சிவப்பு லைட் எரியும் கதையொன்று தேவையில்லாமல் ஞாபகத்தில் வந்து தொலைத்தது.