Language Selection

சத்தியமாக தஞ்சாவூரை ஆங்கிலத்தில் டன்சூர் என அழைப்பார்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அவர் சொல்லும் வரை! ஆனால் அவருக்கு கூட அதில் பெரும் சந்தேகம் இருக்குமாப்போல முகபாவனைகள் உணர்த்தின. இத்தனைக்கும் அவர் அங்கே தான் பிறந்திருக்கிறார்.

சென்ற வாரம் ரயில் பயணமொன்றில் அருகிருந்து சிநேகமாய்ப் புன்னகைத்த அவர்
“இந்தியாவா” என ஆங்கிலத்திலேயே கேட்டார். பெரும்பாலும் அவர் இந்தியராகவே இருப்பார் என்பது என் அனுமானமாயிருந்ததால் “இல்லை. சிறிலங்கா” என்றேன். முன்பொரு தடவை சில வட இந்தியர்களுக்கு “நான் இந்தியாதான் மெட்ராஸ்” என அறிமுகப் படுத்தி விட்டு, பயணம் முழுவதும் இந்தி தெரியாமல் இந்தியனாயிருப்பதன் அவமானத்தை அவர்கள் விளங்கப் படுத்திக் கொண்டே வர, அறுவையை அனுபவித்துக் கொண்ட அனுபவத்திற்கு பிறகு, ரிஸ்க் எடுக்க விரும்புவதில்லை.

மீளவும் எனது தாய்மொழி என்ன என்று கேட்டார். தமிழ் என்றேன். தானும்தான் என்றார். தசாவதாரம் படத்தில் நாயுடு கமல் யாரும் தெலுங்கர்களைச் சந்திக்கும் போதொலிக்கும் பின்னணி இசை எனக்குள் ஒலிக்கத் தொடங்க, ஆர்வ மிகுதியால் “அப்ப தமிழிலேயே கதைக்கலாம்” என வாயெல்லாம் பல்லாகச் சொன்னேன்.

“ஊப்ஸ்.. எனக்கு கொஞ்சம் விளங்கும். பேச முடியாது. சின்ன வயசிலேயே லண்டனுக்கு பெற்றோரோடு சென்று bla bla bla bla… ” அவர் ஆங்கிலத்தில் தொடர்ந்தார். எனக்கொரு ஏமாற்றமும் இல்லை. அதுவுமல்லாது எனக்கும் இங்கிலிசு தெரியும் என எப்படியாம் காட்டுவது : )

அவர்தான் “தான் டன்சூர்” (அல்லது அதே மாதிரியான ஒரு ஒலி) என்றார். முதலில் கொஞ்சம் குழம்பித்தான் போனேன். சட்டென்று பொறிதட்ட “தஞ்சாவூர் ? ” என்றேன். “யா யூ கொட் இட்” என்றார்.

இருவார காலமாகத்தான் இங்கு அவர் தங்கியிருக்கிறார். வேலையில் இடமாற்றம். பயணத்தில் “இங்கே சுவிசில் கள்ளர்கள், தீயவர்கள், இன வெறி காட்டுபவர்கள் என அடையாளப் படுத்தப்பட்டோர் அதிகம் தங்கும் இடங்கள், என பிரிப்புக்கள் உண்டா” என அவர் கேட்டார். லண்டனில் உண்டாம். அவுஸ்ரேலியாவிலும் திருடர்கள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கையிடப்பட்ட பகுதிகளைப் பார்த்திருக்கிறேன். நடு இரவொன்றில் திருடர்கள் திரத்த, நானும் மச்சானும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய கதையொன்றும் உளது.

0 0 0

சுவிற்சர்லாந்தில் நிற வேறுபாடு காட்டும் மக்கள், அதனூடான புறக்கணிப்புகள் எதனையும் ஆழமாக அலசும் நோக்கம் இங்கில்லை எனக்கு. ஆனால் சில பல சந்தர்ப்பங்களில், அவர்களில், அவர்களின் வார்த்தைகளில் அவை வெளித்தெரியத்தான் செய்கின்றன. பஸ்சில் கறுப்பருக்கு முன்னால் அமர முடியாத, அமரும் இடத்தில் கட்டுள்ள, சில பழசுகள் இன்னும் இருக்கிறார்கள்.

அண்மையில் தேர்தல் கட்சியொன்று சுவிஸ் முழுவதும் ஒட்டியிருந்த போஸ்டர்கள் பரவலாக சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. நாகரீகம், மனிதாபிமானம், மட்டை, மண்ணாங்கட்டி என்ற இவர்களின் பீற்றுதல்களில் பெரும் ஏளனத்தை எனக்குள் உருவாக்கின அவை. சில வெள்ளையாடுகள், சுவிஸ் என்ற தேசத்திலிருந்து கறுப்பு ஆடு ஒன்றை உதைத்துத் தள்ளுவது போல அமைந்திருந்தது ஒரு சுவரொட்டி. அடுத்ததில் கொட்டிக் கிடக்கும் சுவிஸ் பாஸ்போட்களை, கறுப்பு, வெளுப்பு, பழுப்பு, சொக்லேட் என பல கைகள் பொறுக்கியெடுக்கின்றன. அதை நிறுத்துக என்ற மாதிரியானது அடுத்த சுவரொட்டி.

தன் தேசிய இனத்தின் வேலை வாய்ப்பு உட்பட பல வசதிகள் மற்றோரால் பறிக்கப்படுவதை, பங்கிடப்படுடடவதை அனுமதிக்க முடியாது என்ற கோணங்களில் இதற்கான நேர் வினைகளும் ஆற்றப்பட்டன. அந்த ஆய்வுகளை விட்டு விடலாம்.

0 0 0

நானும் நண்பரும் காரினை பார்க் செய்ய வேண்டியிருந்தது. அதற்கான நுழைவாயிலில் நமக்கு முன்னால் இன்னொரு கார். உள்ளே ஒரு வயதான பெண்மணி. அறுபதுகளைத் தொடும் வயது அவருக்கு இருக்கலாம். ஒன்றிரண்டு நிமிடங்களாக அவர் காரினை முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. நமக்கு வெட்டிப் பிடுங்கும் அவசரம் எதுவும் இல்லைத்தான். ஆனாலும் இள வயதல்லவா ? அந்தரித்த வயது!

சரியோ தவறோ வாகனத்தின் Horn ஐ அடித்து விடுகிறார் நண்பர். அடுத்து வந்த நிமிடங்கள் ஜாலியானவை. முன்னால் காரிலிருந்து இறங்கி குடு குடுவென நடந்து வந்தார் அந்த மூதாட்டி. பெரும் போர் ஒன்று மூளப்போகிறதென நாங்களும் தயாரானோம். அதிலும் ஜெர்மன் மொழியில் சண்டையிடுவதானால் எனக்குத் தயார்ப்படுத்தச் சில நிமிடங்களாவது வேண்டும்.

அருகில் வந்தார் மூதாட்டி. கண்ணாடியைத் திறந்து விட்டு “என்னணை” என்பது போலப் பார்த்தோம். “உதெல்லாத்தையும் கொண்டு போய் சிரிலங்காவில வைச்சுக்கொள்” என்று முதலாவது குண்டைப் போட்டார். “என்ன ஏது ஏன்.. எதுக்கு” என்று திக்குமுக்காடிப் போய்த் தெளிவதற்குள் அடுத்த குண்டு. “நானும் கொழும்பெல்லாம் போய் வந்த ஆள்த்தான். அங்கை ட்ரபிக்கில ஒரு மணித்தியாலம், ரண்டு மணித்தியாலம் எண்டெல்லாம் நிக்கும் போது, உன்னாலை பொத்திக் கொண்டு நிற்க முடிந்தது தானே. இப்ப இதில ஒரு ஒரு நிமிடம் நிற்க முடியாதோ உன்னால… ”

கிழிஞ்சுது. நானும் நண்பரும் திருப்பித் தாக்கிற எண்ணமெல்லாத்தையும் கைவிட்டு விட்டு சமாதானமாகப் போகலாம் என்று நல்லெண்ணத்தைக் காட்டினோம். “சரியணை. ஆச்சி. நாங்கள் சும்மா பம்பலுக்கு. மன்னிச்சுக் கொள்ளணை. போனை போனை….” என்றோம். அதற்கிடையில் பின்னாலும் சில வாகனங்கள் சேர்ந்து விட அவர் சென்று காரை எடுத்து வழி விட்டார். இறங்கிய பிறகும் அவர் சத்தமிட்டுக் கொண்டுதான் இருந்தார்.

நாங்கள் உட்சென்று விட்டோம். ஒரு அரைமணி நேரம் சென்றிருக்குமோ ? மீளவும் வெளியே வந்து கார் அருகில் செல்ல எங்கிருந்துதான் வந்தாவோ தெரியவில்லை. நினைச்சு நினைச்சு அழும் குழந்தையைப் போல ! ஒரு ஒற்றைச் சத்தத்தை தாங்க முடியாதவராய்..

எங்கள் மீதிருந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டுக் காரர்கள் மீது திரும்பியது. எல்லா வெளிநாட்டுக் காரர்களும் திருடர்கள், காட்டுமிராண்டிகள் என்ற ரீதியில் அவர் சத்தமிட்டுக் கொண்டிருந்தார். எல்லா வெளிநாட்டுக் காரர்களையும் வெளியே வீச வேண்டும் என்று அந்த வார்த்தையை அவர் உதித்த போதுதான், அந்தச் சிக்கல் ஒரு வரலாற்றுத் திருப்புமுனையைச் சந்தித்தது. அந்தப் பக்கத்தால் சென்று கொண்டிருந்த யாரோ ஒருவருக்கு (அனுமானத்தினடிப்படையில் யூகோஸ்லாவிய நாட்டுக்காரர்) அந்த வார்த்தைகள் உறைப்பினை ஏற்படுத்தியிருக்க வேண்டும். (நமக்கு மீன் குழம்பு, நண்டுக்கறி, இறைச்சிக்கறி இவை தவிர்ந்த வேறெதுவும் உறைப்பினைத் தருவதில்லையென்பதை சொல்லியா தெரிய வேண்டும். )

திடீரென பிரச்சனை இன்னொரு பரிணாமத்தை எடுத்து அந்த யூகோஸ்லாவிய நாட்டுக் காரருக்கும், அந்த மூதாட்டிக்குமிடையிலான பிரச்சனையாக உரு மாறியது. “எப்படி எங்களை வெளியே வீசச் சொல்லுவாய்” என அவரும் “ஓம் நீங்கள் எல்லாம் திருடர்கள்” என மூதாட்டியும் சண்டை பிடிக்கத் தொடங்கினார்கள். சண்டையின் மூலகர்த்தாக்களான நானும், நண்பரும் புலிகளையும் இந்திய இராணுவத்தையும் மோத விட்டு ஒதுங்கிய சிறிலங்கா இராணுவம் போல இடத்தை விட்டு நைஸாக வெளியேறினோம்.

அந்தப் பெண்மணியின் மனதிற்குள் ஒரு சிங்கத்தைப் போல படுத்திருந்த வெளிநாட்டவருக்கு எதிரான உணர்வை நாங்கள் சீண்டி விட்டோம் என்பதைத் தவிர வேறு என்னத்தைச் சொல்வது?

0 0 0

இது வெர்ஜினியாவிற்கு நடந்த சம்பவம். அவரோடு கூடப் பணிபுரியும் ஒரு இளவயது வெள்ளையினப் பெண் சிரித்துச் சிரித்தே கேட்டிருக்கிறார். “இஞ்சை.. நாங்கள் வெள்ளையென்ற படியால எங்களுக்கு கோபம் வந்தால் முகமெல்லாம் சிவக்கும். அதை வைச்சு நாங்கள் கோபமாயிருக்கிறம் எண்டு கண்டு பிடிக்கலாம். ஆனா இப்ப நீங்கள் கோபமாயிருக்கிறீங்கள் எண்டால்.. எப்பிடி கண்டு பிடிக்கிறது. (அதாவது கறுத்த முகத்தில கோபத்தில சிவப்பது தெரியாது என்றது அவாவிட கவலை)

பதிலுக்கு வெர்ஜினி சொன்னது இதுதான்.

“உண்மைதான். உனக்கு கோபம் வந்தால் உனது கன்னம் சிவக்கும். எனக்கு கோபம் வந்தாலும் உனது கன்னம்தான் சிவக்கும். ”

“அது எப்பிடி” என்று ஆச்சரியத்தில் இரண்டு மூன்று நாட்களாக வெர்ஜினியாவை விசாரித்துத் திரிந்தாவாம் அவ.

http://sajeek.com/archives/400