10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

கார்ல் போப்பரும் (Karl Raimund Popper) ,மனிதாபிமானமும்.

//அண்ணர்,உங்கள் ஜன்நாயக உரையாடல் வாழும் இன்னொருவரை சாகடிப்பது தான் என்றால் தாராளமாக செய்யுங்கள். உதைத்தானே காலம்காலமாகச் செய்கின்றீர்கள். //

  

-உரையாடலுக்கான வெளியில் எவனோவொருவன்.

அன்புத் தம்பி,உனது மடல் கண்டு மனமுடைந்ததில் இது மடலாகவே எழுதப்படுகிறது.உமது நியாயமான மனதைப் புரிந்துகொண்ட நான்,சிலவற்றைச் சொல்வதற்கு அவசியம் இருக்கிறது.இந்த அவசியம் உம்மைப்போன்ற சிந்தனை ஆற்றலுடைய எமது குழந்தைகளுக்கு முக்கியமானது.

நாம் இதுவரை மக்களுக்கு விரோதமான அதிகாரத்தின்மீதே கேள்வி எழுப்புகிறோம்.இந்த அதிகாரத்துக்கு நிகரான இன்னொரு அதிகாரம் பாட்டாளியவர்க்கச் சர்வதிகாரம் என்பதை நீ குறித்துச் சொல்வாய் எனவும் என்னால் உணரமுடியும்.இன்றைய முதலாளித்துவச் சர்வதிகாரமானது நமது மக்களைக் கணிசமாக வேட்டையாடிவிட்டு,இப்போது அந்த அதிகாரம் மகிந்தாவுக்குப் பின்னால் ஒளிந்தபடி பல்வேறு வடிவடிமெடுத்து நமது மக்களைப் பூண்டோடு அழிக்க முனைக்கிறது-அல்லது பெரும்பான்மைச் சிங்களச் சமுதாயத்தோடு கரைந்து சிங்களச் சமுதாயமாக மாற்ற முனைகிறது.இது,நாளடைவில் நடைபெற்றுவிடும்.இத்தகைய திட்டம் வளர்ச்சியுற்ற முதலாளிய நாடுகளில் நடைபெற்றுவிட்டது.நான் வாழும் ஜேர்மனி இதற்கு முன்னுதாரணம்.இந்நிலையில்,நமது போதாமை-இயலாமை நம்மைக் கொன்று வருவதென்ற உனது வாதம் சரியானதே.எனினும்,உழைப்புக்கு எந்த இனமும்-மொழியும்-மதமும் இல்லை-மனித ஆற்றலென்ற ஒன்றைத் தவிர.

என்றபோதும்,எமது அரசியல்-கருத்தியல் போராட்டம் எப்போதும் இன்னொரு மனிதரைக் கொல்வதற்கானதல்ல என்பதை உனக்குச் சொல்வேன்."எதிரியையும் அவன் வாழ்ந்த மண்ணில் வாழவிடு" என்பது எமது-எனது தெரிவு.அவன், தான் செய்த மக்கள் விரோத அரசியலுக்காக மனம் நொந்து திருந்துவது அவசியமானது.இதுவும் வர்க்க உணர்வினது அடிப்படையில் சாத்தியமின்றிப்போகலாம்.உடமை வர்க்கம் தனது அதிகாரத்தின்வழியே சிந்திக்க முனையும் சிக்கலில் தமது இருத்தலைக் குறிழவைத்துச் சிந்திப்பது.இதனிடம் எந்தத் திருத்தமும் நடைபெறுவதற்கான சூழலை அவர்களது வாழ்நிலை வழங்காது.சமூக வாழ்நிலையே மனித உணர்வுகளைத் தீர்மானிக்கிறது.இதன் அடிப்படையை நீ இன்னும் விபரமாக அறிவாய்.இது, குறித்துப் பெரும்பாலும் பேசப்பட்ட நிலைமைகளைக் கடந்த நூற்றாண்டை நோக்கிய உனது புரிதலில் நீ அனுபவப்பட்டிருப்பாய்.
இன்று,இந்தச் சிக்கல் வர்க்க உணர்வு என்ற தளத்தில் மனிதர்கள் எவரும் ஒரே மொழியைப் பேசினும் ஒன்று இல்லை என்பதாக விரிகிறது.ஆனால், பௌதிக இருத்தலுக்கும் அதன் அடிப்படையான உறுவுக்கும் குறுக்கே இந்தப் புரிதல் வருவதற்கு மனித வாழ் நிலைக்குள் வந்து சேர்ந்த தனியுடமையே காரணமாகிவிடுவது உனகுத் தெரியும்.

உற்பத்திச் சக்திகளது தனியுடையானது மனிதர்களைக்கூறுபோட்டு வர்க்ககங்களாக்கி வைத்திருக்கும்போது,உன்னைப் போன்று பொது மனிதாபிமானம் பேச முடியவில்லை எனக்கு!

நீ ஒரு முறை-கார்ல் போர்ப்பரது நிலையில்-அவுஸ்திரியப் பொலிஸ்காரர்கள் 8 பேரது மரணத்துக்காக(கம்யூனிச கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பட்டவர்கள்-wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker.) அவர் கம்யூனிசத் தத்துவத்தையும், கட்சியையும் விட்டோடியதைக் குறித்து-நான் பொலிஸ்"நாய்கள்"மரணமெனச் சொன்னதற்காய்-ஆத்திரப்பட்டாய்.இங்கே, பொது மனிதாபிமானங் குறித்துப் பேசினாய்.அனால்,இது பெரும்பாலும் தவறென்பது எனது வாதமாக இருந்தது.இதுதாம் உண்மையுமாக இன்றுவரை இயங்குகிறது.ஏனெனில்,நாம் வர்க்க சமுதாயத்தில் வர்க்க அதிகாரங்களுக்குள் வாழ்கிறோம்.இங்கே,மனிதர்களது தேவைகள் உடமை சார்ந்தும் அதிகாரங்களைக் கடைப் பிடிக்கிறது.இது, பொதுவான மனிதர்களுக்கானவொரு அதிகாரத்தை மானுட நோக்குக்காகக் கடைப்பிடிப்பதில்லையென்பது உண்மையானது.இது பொருட்காப்பு-அதிகரிப்பு,சந்தையாக்கல்-மறுவுற்பத்தி எனத் தனது அதிகாரத்தைக் கட்டியுள்ளது.

இவை, நிலவுகின்ற இந்தப் பொருளுற்பத்தித் தனியுடமையென்ற அடிமட்டத்தைக் காப்பதற்காக மேல்மட்டமாக அனைத்தையும்(மனித வாழ்கை-மற்றும் அது சார்ந்து இயக்கம்)அது நிறைவேற்றுவதால் ஒடுக்குபவர்களும்,ஒடுக்கப்படுபவர்களுமாக நாம் எதிரெதிர்ப் பக்க்கம்-பக்கம் நிற்கிறோம்.இங்கேதாம் நமது வர்க்கச் சார்பு வந்து மனிதர்கள் என்ற அடிப்படையில்-பௌதிக ஒற்றுமை பல இருந்தும்-எதிரிகளாக நின்று ஒருவரையொருவர் கொல்கிறோம்.எதிரிகளாக நின்று உடமையாளர்களாகவும்,பாட்டாளிகளாகவும் மாறுபட்ட நலன்கள் சார்ந்து அரசியல் பேசுகிறோம்.ஒருவரையொருவர் கொல்வதற்கான அடிப்படையை அரசியலாக்கிப் போராடுகிறோம்.இந்தச் சிக்கலில் எமையெல்லாம் கொணர்ந்த இந்த உலகத்தின் உழைப்பானது இன்னொருவரிடம் உபரியாகக் குவிந்ததன் விளைவே நீ பார்ப்பது போன்று மனிதாபிமானத்தைப் பொதுவான மனித இருத்தலுக்கு இணைக்க முடியவில்லை.

எனினும்,நீ சுட்டிக்காட்டிய"உங்கள் ஜனநாயக உரையாடல்...இன்னொருவரை சாகடிப்பதுதான் என்றால் தாரளமாகச் செய்யுங்கள்,இதைத்தானே காலாககாமாகச் செய்கின்றீர்கள்"என்ற தீர்ப்பு என்னைச் சுட்டெரிக்கிறது.இதுவரை நான் கடந்தகாலத்து எனது அமைப்புப்பணியிலிருந்தும் எந்தவொரு மனிதரையும் வேட்டையாடியது இல்லை.அரசியல்-கருத்தியில் யுத்தத்தையே கிராமம் கிரமமாகச் செய்தவன்.ஆயுதம் என்பது மக்களுக்குள் பணியாற்றும்போது எமக்கு எப்பவுமே அவசியமில்லாதிருந்தது.நான் சார்ந்த அன்றைய எனது அமைப்பின் தாரக மந்திரமே"மக்களே எமது ஆயுதும்,அவர்களுக்குள் பணியாற்றும்போது அவர்களே தமது எதிரியை இனங்காண்பர்-அதிகாரத்தை உடைப்பதற்கு அவர்களே ஆயுதம் தரிப்பர்"என்பது எங்கள் செயற்றிறனோடு இணைந்தது.இது,பெரும்பாலும் பின்னாளில் தாறுமாறாகி,மண்டையன் குழுவாகவும் உருப்பெற்றது.இங்கே மனிதாபிமானத்தை எது சிதைத்தது?

உனக்குப் பெரிதாக இவற்றை விளக்கப்படுத்துவது அவசியமில்லை!

நீ பல்துறைசார்ந்து வாசிப்புடையவன்.

உனது தெரிவில் நீ காணும் மனிதாபிமானம் இன்றைய உனது தெரிவில் சரியாக இருக்கலாம்.ஆனால்,வர்க்கங்களாகப் பிளவுண்ட மனிதக் கூட்டில் அவர்களது அரசியல் வர்க்க நலனோடு பிணைந்தது.அது, பொதுவான எல்லா மனிதருக்கும் மனிதாபிமானத்தைக் கொண்டியங்குவதில்லை.இன்றைய எமது மக்களது அழிவைப் பாத்திருப்பாய்!பல்லாயிரம் மக்களைக் குண்டுகள் போட்டுக்கொன்ற சிங்கள அரசை,வாழ்த்தி வெடி கொளுத்தி வரவேற்கும் சிங்களச் சமுதாயமானது தம்மைப்போல் வாழ்ந்து, தம்மால் கொல்லப்பட்ட தமிழர்களது அழிவிலிருந்துதாம் மகிழ்வைத் தேர்ந்துகொண்டது.
 
ஆசையே அனைத்துக்கும் காரணமென்ற புத்தனைக் கடவுளாகக் கொண்ட சமுதாயத்தை இங்ஙனம் செயற்பட வைத்தது எது?
 
பொருள் சார் நலனும்-உடமைக்கான(நிலம்-நீர்-வளம்)அதிகாரமும்தானே அவர்களது உணர்வை-சிந்தனையேத் தகவமைத்தது!?
 
இங்கே,அன்பு,கருணை,மாண்பு,எல்லாம் வெறும் கட்டுக்களாய்-புனைவாய் உதிர்ந்துபோயின.இதற்கு மாறாக வர்க்கத்தின் வாழ்நிலையே அவர்களது உணர்வுகளைத் தீர்மானித்தன.இவ்வண்ணமே புத்தரினது"ஆசையைத் துற-ஆசையே அனைத்துக்கும் காரணமென்பது"அநாதையாகக் கிடக்கிறது.இது,இந்த வர்க்க மனிதவுறக்குள் எந்தப் பொழுதிலும் செயற்கரிய பொருளைத் தருவதற்கில்லை.
 
"மாறும் பொருளின்றி,மாற்றமே நிரந்தரம்"என்றுஞ் சொன்னான் புத்தன்.
ஆனால், சொன்னவனையே மாறாத கடவுளாக்கியது இந்த உடமை வர்க்கம்.
 
எனவே,நாம் வர்க்கஞ் சார்ந்துதாம் பேச முடியும்-எழுதமுடியும்.
 
முடிந்தவரை உடமை வர்க்கத்தின் பொய்யுரைப்பில் தம்மைத் தொலைக்கும் அப்பாவி மக்களை,அவர்களது குழந்தைகளைக் காப்பதில் எமது அரசியல் கவனங்கொள்ளும்.மற்றும்படி, அப்பாவிகளை-இழப்பதற்கு எதுவுமே இல்லாதவர்களைத் தமது தேவைக்கு-உடமைகளை-அதிகாரத்தைக் கையப்படுத்த அணிதிரட்டுபவர்கள்மீது நாம் மனிதாபிமானத்தோடு அரசியல் பேச முடியாது!

என்றபோதும்,எமது செயற்பாடு ஒருபோதும் "...இன்னொருவரைச் சாகடிப்பதற்கானதல்ல"மாறாக, அவர்களையும் வாழ வைப்பதற்கானது.
 
இந்தப் போராட்டத்தில் நாமே களப்பலியாகவும் போகலாம்.இஃது, பொதுவான மனித நேயத்தைக் கடைப்பிடிக்காது உடமை வர்க்கத்து அதிகாரத்தால் நிகழும்.ஆனால்,நமது மரணங்கள்கூட அடுத்த சந்ததி வர்க்கபேதமின்றி வாழ்வதற்கான ஊக்கத்தைக் கொடுப்பதிலும்,உந்துதலைக்கொடுப்பதிலும் மையமுறும் அரசியல் அரும்பி, அடுத்த பல நூற்றாண்டின்பின்னே சிறப்புறும் ஒரு சமுதாயத்தைப்படைக்கும்.அப்போது, பூமியில் மனிதம் வாழ்வதற்கான அறிகுறியை இந்த அணுவிஞ்ஞானம் விட்டுவைத்தால்...
 
ப.வி.ஸ்ரீரங்கன்
16.07.2009

 

http://srisagajan.blogspot.com/2009/07/karl-raimund-popper.html 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்