10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

அனுபவம்: வைகையில் முன்பதிவில்லாமல் ஒரு பயணம் !

மே தினத்தில் வினவின் புதிய வலைத்தளம் பார்த்துவிட்டு தஞ்சையில் நடக்கும் மே தினப்பேரணிக்கு செல்லலாம் என்பதால் எழும்பூரிலிருந்து 12.25க்குப் புறப்படும் வைகை அதிவிரைவு வண்டியில் ஏறி அரியலூரில் இறங்கி தஞ்சைக்கு பேருந்தில் செல்வதாகத் திட்டம்.

 

ஆனால் தொழில்நுட்ப வேலைகள் முடியாததினால் புதிய வினவை பார்க்காமலே கிளம்பி விட்டேன்.வழக்கமாக அநேக ரயில் பயணங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் பயணம் செய்வதுதான் பழக்கம். கடைசி நேரத்தில் திட்டமிடப்படும் பயணங்களுக்கு இதுதான் சரிப்பட்டுவரும். எழும்பூரை அடையும் போது மணி 11. பயணச்சீட்டு வாங்குவதற்கு நின்ற வரிசையில் அரைமணிநேரம் சென்ற பிறகே சீட்டு கிடைத்தது. காலையிலே உணவருந்தவில்லை, வண்டியிலும் அவ்வளவு கூட்டத்திற்கிடையில் பொட்டலம் வாங்கி சாப்பிடுவது கடினம் என்பதால் வெளியே சென்று உணவருந்தினேன். மீண்டும் நிலையம் வந்தபோது மணி 12. அரை மணிநேரம் இருப்பதால் எப்படியும் உட்காருவதற்கு இடம் கிடைத்தாலும் கிடைக்கும் என்றொரு நம்பிக்கை.

 

train

மைய நுழைவாயிலை அடைந்தபோது அதிர்ச்சி. வாயிலிலிருந்து இன்ஜினுக்குப் பின்னால் இணைக்கப்பட்டிருக்கும் முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பெட்டி வரைக்கும் ரயில்வே போலீசின் முறைப்படுத்துதலோடு ஒரு பிரம்மாண்டமான வரிசை. இதையே பாதி தூரம் சென்ற பிறகே கவனித்தேன். தமிழ்நாட்டிலிருந்தாலும் இத்தகைய வாழ்க்கை நிலவரங்கள் நமக்கு தெரியமலே போனதே என்று ஒரு அவமான உணர்வு. சரி, உட்காருவதற்கு நிச்சயம் இடம் கிடைக்காது. பெட்டியில் நுழைவதற்காவது போலிசு அனுமதிக்க வேண்டுமே என்றொரு பயம். நிரம்பிவிட்டது இனி அடுத்த வண்டியை பிடியுங்கள் என்று சொல்லிவிட்டால்? எனில் நிலையத்தில் ஒரு அளவுக்கு மேல் சீட்டு கொடுக்கமலே நிறுத்தி விடலாமே என்றெல்லாம் யோசனை.

நல்லவேளை வரிசையில் நின்ற எல்லோரையும் உள்ளே நுழைய விட்டார்கள், கிடையில் நுழையும் ஆடுகளைப் போல. உள்ளே இருக்கை நிரம்பி, நடைபாதையும் நிரம்பி நிற்பதற்குக் கூட இடமில்லை. கூட்டம் ஏற ஏற நிற்பவர்களின் விரிந்த கால்கள் குறுகிக்கொண்டே வந்தது. என்னைப் போல சராசரி இந்தியனுக்கும் மேலே வளர்ந்தவர்கள் பாடு திண்டாட்டம்தான். ஒரு வழியாய் வண்டி புறப்பட்டது. இந்தப் பெட்டிக்குதான் டாடா காட்டுபவர்கள் இல்லை, வெளியே லத்தியை வைத்து போலிசுதான் மிரட்டிக்கொண்டிருந்தது.

வண்டியின் வேகம் சற்றே அதிகரித்தபோது மக்களும் சற்றே நிதானமடைந்தார்கள். குழந்தைகளோடு வந்தவர்கள் தொட்டில் கட்ட ஆரம்பித்தார்கள். கொடுத்து வைத்த குழந்தைகளைப் பார்த்து என்னைப் போன்ற ஆளான குழந்தைகளுக்குப் பொறாமை. பெண்கள் அவர்களது பேசித்தீராத பாடுகளைப் பேச ஆரம்பித்தார்கள். ஆண்கள் உலகத்தில் எல்லாம் பேசியாகிவிட்டதைப் போல ஒரு தோரணையில் பேசுவதற்கு ஒன்றுமில்லையென ஆழ்ந்திருந்தார்கள். இரு வரிசையிலும் தலா மூவர் அமரலாம். நாலாவதாக வருபவர்கள் கெஞ்சியவாறு ஒரு கால் இடத்தைப் பெற்று தமது முழு இடுப்பையும் அதில் ஒட்டவைத்தார்கள். கோடையின் வெப்பம் மேற்கூரைத் தகரத்தை ஊடுறுவி எல்லோரையும் வறுக்க ஆரம்பித்தது.

தண்ணீர் கொண்டு வந்தவர்கள் குடித்துப் பிழைக்க முயன்றார்கள். நானும் பெரிய மனதுடன் ஒரு லிட்டர் பாட்டிலை வாங்கியிருந்தேன். ஒரு காலத்தில இந்த பாட்டிலை பணக்காரர்கள் மட்டும்தான் பயன்படுத்துவார்களென எண்ணியிருந்ததை நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. தண்ணீர் தனியார்மயமாகிவிட்டதால் வாழ்க்கை பாணியும் சமத்துவமாகி வருகிறதோ?

வண்டி தாம்பரத்தை அடைந்து சரியாக ஒரு நிமிடம் நின்று புறப்பட்டது. அந்த நிமிடத்தில் பலர் அடித்துப்பிடித்து ஏறினர். எங்கள் பெட்டியின் வாயில் வரையிலும், வாயிலுக்கு வெளியிலும் நின்றவாறு கூட்டம். யாரும் இங்கே டெக்னிக்கலாக நுழைய முடியாதெனினும், வரமுயன்றவர்களை யாரும் எதிர்க்கவில்லை, அது அவர்களுடைய சாமர்த்தியம் என்பது போல. பெருங்கூச்சலுடனும் அலறலுடனும் ஒரு பெரிய குடும்பம் நுழைய முயன்றது. பாதி குடும்பம் தொத்திக்கொண்டதுமே வண்டி நகர ஆரம்பித்தது. இதை மனிதாபிமானத்துடன் பார்த்து வண்டியை நிறுத்தும் வல்லமை படைத்த கார்டு ஏறக்குறைய அரை கிலோ மீட்டருக்குப் பின்னால் இருப்பதால் சிக்னல் கிடைத்த நொடியில் ஒட்டுநர் வண்டியைக் கிளப்பிவிட்டார்.

இறுதியில் அந்தக் குடும்பத்தில் இருபெண்களும், ஒரு ஆணும், மூன்று அரை டிக்கெட்டுகளும் மிகுந்த பிரயத்தனத்துடன் கூட்டத்தைக் குடைந்து புகுந்து விட்டனர். சில நிமிட ஆசுவாசப்படுத்தலுக்குப் பிறகுதான் மீதி குடும்பம் ஏறவில்லை என்பதை கண்டு திடுக்கிட்டனர். அதிவேகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கும் வண்டியிலிருந்து என்ன செய்யமுடியும்? அடுத்த நிறுத்தத்தில் இறங்கலாமா, அவர்கள் பேருந்தில் வருவார்களா, டிக்கெட் யாரிடமுள்ளது என மகா குழப்பம். இறுதியில் செல்பேசி கைகொடுத்தது. ஒரு பெண் அலைபேசியில் அநேகமாக அவளது கணவனிடம் “இரண்டு பிள்ளைகளை வச்சுகிட்டு நா ஏறிட்டேன், உங்களுக்கு ஒரு கூறு வேணாமா” என மதுரைத் தமிழில் எரிந்து கொண்டிருந்தார். கடைசியில் பயணச்சீட்டு வண்டியில் இருப்பவர்களிடம் இருப்பதால், ஏறாதவர்கள் பேருந்தில் வருவதாக முடிவெடுத்தார்கள். இதற்குள் வண்டி செங்கல்பட்டை அடைந்து விட்டது.

இங்கு வண்டி ஒரு சில நிமிடங்கள் நின்றதால் ஒரு இளம் கன்யாஸ்தீரியும், அவளது அண்ணன் குடும்பத்தினரும் ஒரு வழியாக ஏறி வந்தனர். இடமில்லையென்றாலும் அள்ளிக் கொடுக்கும் அமுதசுரபி போலத் திகழும் எங்கள் பெட்டியை தாராளமாய் வாழ்த்தினேன். நடுவழியில் நந்தி போல நின்று கொண்டிருந்த எனக்கு பின்னே அந்த சகோதரியும் முன்னே அவளது அண்ணன் குடும்பமும். அங்கே இருக்கையில் பர்தாவுடன் அமர்ந்திருந்த ஒரு அம்மா அந்த இளம் சகோதரியை தன்னருகில் பாசத்துடன் அமரவைத்தார். நீர் கொடுத்தார். கருப்புடையும், வெள்ளையுடையும் சில மணித்துளிகளில் சங்கமித்தன. சகோதரி பாண்டிச்சேரியில் ஏதோ ஒரு சர்ச்சில் இருக்கிறார். திண்டுக்கல் சொந்த ஊர். தனது அண்ணனுடன் ஊருக்கு செல்கிறார். இதற்காக புதுவையிலிருந்து கிளம்பி செங்கல்பட்டில் வண்டியைப் பிடித்திருக்கிறார்கள்.

அப்போதுதான் புதிய கலாச்சாரம் மே இதழில் திருச்சபையின் புனிதத்தைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அந்த நெரிசலிலும் அந்த சகோதரியின் எதிர்காலம் குறித்து கொஞ்சம் கவலைப்பட்டேன். என்ன செய்ய முடியும்? ஆனாலும் இசுலாமும், கிறித்தவமும் இயல்பாக இணைந்து உறவாடியதை மதத்தைத் துறந்த நான் நிச்சயமாக ரசித்துக் கொண்டிருந்தேன்.

ஒடும் ரயிலில் வேர்வை மழையில் கைக்குட்டையை துடைத்தவாறு பாட்டிலை எடுத்து தண்ணிரைக் குடித்து முடித்த போது என்னருகில் நின்று கொண்டிருந்த பெரியவர் என்னை உற்று நோக்கியதைப் பார்த்தேன். அவருக்கும் தாகமாக இருக்குமோ என தயக்கத்துடன் கேட்க முனைந்த போது அவரே வாங்கிக் குடித்தார். அதற்காக அந்த கூட்டத்திலும் மிகத் திறமையாக வந்து கூடையில் வெள்ளரிக்காய், கடலை விற்பவர்களிடமிருந்து எனக்கும் வாங்கிக் கொடுத்தார், நான் வேண்டாம் என்று சொன்ன போதும்.

விழுப்புரத்தில் மின்சார என்ஜினை விலக்கி டீசல் என்ஜினை மாற்றுவார்கள் என்பதால் ஒரு 20 அல்லது 25 நிமிடம் வண்டி நின்றது. பெரியவர் வெளியே சென்று எதோ ஒரு உணவுப் பொட்டலமும், பாட்டிலுமாக வந்தார். ஐந்தாறு முறை எனக்கு நீர் வேண்டுமா என கேட்டுக் கொண்டே இருந்தார். இன்னும் சற்று நேரத்தில் இறங்கப் போகிறேன், அவரோ மதுரை வரை போகிறார் என்பதால் தாகமிருந்தாலும் குடிக்கவில்லை. அதற்குள் அவரது பாட்டிலை யாரோ காலி செய்து விட்டார்கள். இங்கு யார் வேண்டுமானாலும் தென்படும் பாட்டிலை எடுத்து குடிக்கலாம். அதே போல நிறுத்தம் வரும்போது வெளியே இறங்குபவர்கள் மொத்தமாக எல்லா பாட்டில்களையும் எடுத்து நிரப்பி வருவார்கள். மக்கள் உருவாக்கியிருக்கும் இந்த சோசலிச முறை எனக்கு பிடித்திருந்தது. என்றாலும் என் பாட்டிலை மட்டும் யாரும் எடுக்கவில்லை, அந்த அளவுக்கு தோற்றத்தில் அச்சுறுத்தும் வண்ணம் இருப்பேனோ என்றொரு சம்சயம்.

சரியாக 4.20க்கு அரியலூரை அடைந்தேன். வண்டி 12 நிமிடம் தாமதம் என்றாலும் மதுரையை அடையுமுன் வேகத்தில் இந்த தாமதத்தை சரி செய்து விடுவார்கள். நான்கு மணிநேர நில் பயணத்தை முடித்து விட்டு என் சக பயணிகளை -பின்னொரு நாளில் பதிவிடும்போது நினைத்துப்பார்ப்பேன் என்பது கூட தெரியாமல்-விட்டுப் பிரிந்தேன். அப்போதுதான் ஒரிசாவில் இதைவிட கூட்டமுள்ள வண்டி ஒன்றில் பயணித்து பின் பயணிக்க முடியாத கதை நினைவுக்கு வந்தது.

அந்தப் பயணத்தில்தான் ஏழ்மையின் அவலம் எத்தனை உக்கிரமானது என்பதை உணர்ந்தேன். இப்போதே எழுதி விடலாம்தான். ஆனாலும் அந்த கதைக்கு இந்த கதை முன்னுரை போல இருப்பதால் பிற்பாடு சொல்வதுதான் சரி.

தொடர்புடைய இடுகை

ரிலையன்ஸ் ஃபிரஷ்ஷில் மனிதக்கறி !


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்