12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

இலங்கையில் காணாமற் போதல் நடவடிக்கை : சுனிலா அபயசேகர - புகலி

The Rel News Network தொலைக்காட்சியின் ரொறன்ரோ கலையகத்தில் இடம்பெற்ற நேர்காணல் இங்கு வீடியோவில் இணைக்கப்பட்டுள்ளது. இதன் தமிழாக்கத்தின் எழுத்து வடிவம் இங்கே தரப்படுகிறது - புகலி

 

சுனிலா அபயசேகரவுடனான ஒரு சந்திப்பு

 

சுனிலா அபயசேகர அவர்கள் இலங்கையின் ஒரு மதிப்புமிக்க பிரபலமான மனித  உரிமைச் செயற்பாட்டாளர். இவர் இரண்டு பக்கத்திலும், அதாவது தமிழர்களிடையேயும் சிங்களவர்களிடையேயும் மிகுந்த மதிப்புப் பெற்றவர். இவருடைய மனித உரிமைகள் செயற்பாட்டிற்காக ஐ.நா. சபையினாலும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பினாலும் கெளரவிக்கப்பட்டுள்ளார்.


 கேள்வி: 3 இலட்சம் இடம்பெயர்ந்த மக்கள் முகாம்களில், பலராலும் தடுப்பு முகாம்கள் என்று அழைக்கப்படுகின்ற முகாம்களில், அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். நீங்கள் இதுபற்றி என்ன கேள்விப்படுகிறீர்கள்? அங்குள்ள நிலைமைகள் எப்படி இருக்கின்றன?

 

 

பதில்: முக்கியமான விடயம் என்னவென்றால், இங்குள்ள 3 இலட்சம் மக்களும் ஏற்கனவே மாதக்கணக்காக கஷ்டங்களை அனுபவித்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். பலர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்குள்ளாகி இருக்கிறார்கள். ஆற்றப்படாத காயங்களுடன் சிகிச்சையின்றி மாதக் கணக்காக இருந்திருக்கிறார்கள். அவை இன்னும் மோசமான நிலைமைகளுக்குச் சென்று கொண்டிருக்கின்றன. அதனால் அவர்களை உடனடியாகக் கவனிக்கவேண்டியது முக்கியம். மனிதாபிமானரீதியில் உதவும் அமைப்புகள் அங்கு தடையின்றிச் செல்லமுடியாதிருப்பதனால் அவர்களுக்கான கவனிப்பு இல்லாதிருக்கின்றது. வவுனியா உயர்நீதிமன்றத்தின் ஏப்ரல் 27ம் திகதியின் அறிக்கையின்படி ஒரு நாளில் 14 முதியவர்கள் பட்டினியால் இறந்திருக்கிறார்கள். குறிப்பாக முதியவர்களை அரசாங்கம் விசேடமாகக் கவனிக்வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இது ஒரு உதாரணம் மட்டுமே.


கேள்வி: சர்வதேச உதவி நிறுவனங்கள் அங்கு செல்வதை ஏன் அரசாங்கம் தடுக்க நினைக்கின்றது;?

 

பதில்: இந்த 3 இலட்சம் பேருக்குள் விடுதலைப்புலிகளின் அங்கத்தவர்கள் ஊடுருவி இருக்கவேண்டும் என்று அரசாங்கம் நினைக்கின்றது. இது ஒருவேளை உண்மையான நிலையாக இருந்தாலும்கூட, அதை நாங்கள் எற்றுக் கொள்கிறோம். அவர்கள் சொல்கிறார்கள் தாங்கள் இந்த விடுதலைப்புலிகள் பற்றிய விபரங்களைத் திரட்டிய பின்னர்தான் அங்கு மற்றவர்கள் செல்வதை அனுமதிக்கமுடியும் என்று. நாங்கள் இதை வன்மையாக எதிர்க்கின்றோம். நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், நீங்கள் இந்தத் தகவல்களைத் திரட்டுகின்ற அதேநேரம் அங்கு சர்வதேச நிறுவனங்கள் செல்வதற்கும் அனுமதிக்கவேண்டும் என்று. இந்த நேரத்தில் சுயாதீன கண்காணிப்பாளர்கள் அங்கு இருக்கவேண்டும். இவைகள் தடுப்பு முகாம்கள்தான். ஏனென்றால், இந்த முகாம்கள் இராணுவத்தால் காவல் காக்கப்பட்டு வருகின்றன. முகாம்களில் உள்ளவர்கள் நினைத்தபடி நடமாடமுடியாது. அவர்கள் முகாம்களிற்கு வெளியே செல்ல முடியாது. அதற்குப் பல வகையான தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகாம்களில் உள்ளவர்களை மற்றவர்கள் சென்று பார்க்க முடியாது. இன்னும் என்ன நடக்கின்றதென்றால், துணைப்படையினர், (ஏற்கனவே புலிகளில் இருந்து வெளியேறியவர்கள்), முகமூடியணிந்த தலையாட்டிகளுடன் சென்று அங்குள்ளவர்களை அடையாளம் காட்டிய பின்னர் அவர்கள் பிடித்துக்கொண்டு செல்லப்படுகிறார்கள். கடந்த வாரம் 11வயதுக்கும் 17 வயதிற்கும் இடைப்பட்ட 200 சிறுவர்கள் மனிக் பாமில் இருந்து நீலங்குளம் முகாமிற்கு கோண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எங்களுக்குத் தெரிய வந்தது. அவர்கள் இதற்கொரு பட்டியலைத் தயாரிக்கவேண்டும். பெற்றோர்கள் நம்பிக்கையிழந்து இருக்கிறார்கள். நாங்கள் இவர்களிடம் கேட்பதெல்லாம் ஒரு பட்டியல். இந்த 3 இலட்சம் பேரினதும் பட்டியல். ஒருவர் ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டால் அது பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லை. எனவே ஒருவருக்கு என்ன நடக்கின்றதென்பதை எப்படி அறிவது? எனவே மக்கள் தொலைந்து போவதற்கான சாத்தியங்கள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன. நாங்கள் இதுபற்றி மிகவும் கவலைப்படுகிறோம். 


கேள்வி: இந்த மக்களுக்கு உதவுவதற்கு எந்த சர்வதேச நிறுவனங்கள் தயாராக இருக்கின்றன?

 

பதில்: ஐநாவின் அகதிகளுக்கான உயர்மன்றம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம். இவர்கள் இப்படியான இக்கட்டான நிலைமைகளில் பணிபுரிந்த அனுபவம் கொண்டவர்கள். ஆனால் இப்போதைக்கு அவர்களுக்கு உள்ளே செல்வதற்கு தடைகள் உள்ளன.


கேள்வி: காணாமல் போதல் பற்றி நீங்கள் எவ்வாறான கதைகளைக் கேள்விப்படுகிறீர்கள்?


பதில்: ஒரு முகாமில் இருந்து ஒருவர் வெளியே கொண்டு செல்லப்படுதல் என்பது காணாமற்போதல் என்பதற்குள் அடங்ககின்றது. ஏனென்றால் ஒருவர் எங்கு செல்கின்றார் என்பதற்கான எந்தத் தடயங்களும் இல்லை. விடுதலைப்புலிகள் என்று சொல்லப்பட்ட சரணடைந்தவர்களும் பிடிபட்டவர்களும் கிட்டத்தட்ட 10000 என்று அரசாங்கம் சொல்கிறது. ஆனால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது தெரியாது. அவர்கள் யார் என்பது தெரியாது. அத்துடன் கடைசிக் காலத்தில் பிடிபட்டுத் தடுத்து வைக்கப்பட்டவர்களில் பலர், அதாவது விடுதலைப்புலிகளின் முக்கியமானவர்களின் குடும்ப அங்கத்தினர் - உதாரணத்திற்கு> சூசையின் மனைவி, பிள்ளைகள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்கள் எங்கே என்று எங்களுக்குத் தெரியாது. சில குறிப்பிட்டவர்களைப் பற்றி அறிவதற்கு முயற்சி எடுக்கிறோம். ஆனால் முடியவில்லை.


கேள்வி: தடுப்புமுகாம்களில்  நடக்கும் சித்திரவதைகள் பற்றிய செய்திகள் வெளிவருகின்றன. அதுபற்றி?

 

பதில்: இலங்கையின் உளவுத்துறையின் சித்திரவதை எவ்வளவு பிரசித்தமானது என்பது உங்களுக்குத் தெரியும். ஐநா சபையின் விசேட பிரதிநிதி ஒருவர் 2007ம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் இது பற்றிக் கண்டித்திருக்கிறார். அவசரகாலச் சட்டத்தின்மீது அல்லது பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்மீது அல்லது சாதாரணமாக கைதானவர்கள் என்று எவரும் இந்த மோசமான சித்திரவதைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

  சரி, சித்திரவதையைவிட்டாலும்கூட, அளவுக்கதிகமான மக்கள் ஓரிடத்தில் இருப்பதனால் ஏற்படுகின்ற உபாதைகள். சுகாதார வசதி, மருத்துவ வசதி இல்லாத நிலைமைகள். அதற்கும் மேலாக நடைபெறுகின்ற வதைகள்.

  இப்படியான சித்திரவதைக்குட்பட்டவர்கள் தங்களுக்கு நடந்தவற்றை எங்களுக்குச் சொல்லி இருக்கிறார்கள். கனடா, பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு தஞ்சம் கோரி வந்தவர்கள். எனவே நான் நினைக்கிறேன் இதுபோன்ற சாட்சியங்கள் எங்களிடம் ஏராளமாக இருக்கின்றன. 


கேள்வி: தற்போதைய சூழலில் இலங்கை அரசாங்கத்தின்மீது எவ்வகையான அழுத்தங்களைப் பிரயோகிக்கமுடியும்? யாரால் பிரயோகிக்கமுடியும்?


பதில்: இன்றைய சூழலில் சர்வதேச சமூகம் ஒரு விடயத்தைத் தான் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் முதலில் முகாம்களிற்குள் தடையின்றிச் செல்வதற்கான அனுமதியைப் பெறுவதற்கான அழுத்தத்தைத் தொடர்ந்து கொடுக்கவேண்டும். மத்தியப்படுத்தப்பட்ட ஒரு தரவு மையம் உருவாக்கப்படவேண்டும். தடுப்பு முகாம்களில் இருப்பவர்கள், கைது செய்யபட்டவர்கள் இப்படி... இவையெல்லாம் உண்மையில் மிகவும் அடிப்படையானவை. நாங்கள் எப்போதுமே விடுதலைப்புலிகள் ஒன்றுமே செய்யவில்லை அல்லது அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்று சொல்லவில்லை. நாங்கள் சொல்கிறோம் இவைகள் எல்லாம் இருந்தாலும் நீங்கள் ஒரு பட்டியலைத் தயாரித்து அதைப் பகிரங்கமாக வெளியிடுங்கள் என்று. இறுதிக்கால இராணுவ நடவடிக்கைகளின்போது எத்தனைபேர் இறந்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. 20000பேர் வரை என்று தகவல் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். ஆனால் அரசாங்கம் இதை மறுக்கிறது. கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்தவர்களின் உறவினர்கள் அங்கு இருக்கிறார்கள். அவர்கள் இறந்திருக்கலாம் அல்லது காணாமல் போயிருக்கலாம். புலம்பெயர் தமிழர்கள் சார்பாகவாவது இலங்கை அரசின் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டிக்க வேண்டும். இவர்களுடைய உறவினர் அங்கு வைத்தியசாலையிலா, தடுப்பு முகாம்களிலா, சிறையிலா அல்லது இறந்துவிட்டார்களா என்பதை அவர்கள் அறியவேண்டும் என்று அழுத்தம் கொடுக்க வேண்டும். 

 

கேள்வி: யார் அந்த சர்வதேச சமூகம்? யார் அந்த சர்வதேச அமைப்பு? எது அந்த நாடு? இலங்கை அரசாங்கம செவிமடுக்கக்கூடிய...

 

பதில்: அவை சீனா, யப்பான், தென்னாபிரிக்கா, பிரேசில். இந்த நான்கு நாடுகளும் முகாம்களுக்குள் தடையின்றிச் செல்வதற்கான வழிக்கும் முகாம்களில் இருப்பவர்களைப் பற்றிய தகவல் மையம் உருவாக்குவதற்கும். அடிப்படை மனிதாபிமான ரீதியில், உண்மையிலேயே குரல் கொடுக்குமானால், நல்லது.


கேள்வி: ஏன் இந்த நாடுகள்?

 

பதில்: ஏனெனில் இந்த நாடுகளிற்கும் இலங்கைக்கும் இடையிலான அரசியல், பொருளாதார உறவுகள். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து வந்த எல்லா வழிகளையும் இலங்கை அரசாங்கம் மறுத்தது. இது காலனித்துவத்தின் அல்லது ஏகாதிபத்தியத்தின் சதி என்று முத்திரை குத்தியது. ஆனால் இந்த நாடுகள் எங்களுடன் கூட வரும் நாடுகள்.  சீனா இலங்கையில் மிகப் பெருந்தொகையான முதலீட்டைச் செய்துள்ளது. யப்பானும் கூட. பிரேசில் போன்ற நாடுகளின் பங்கு அணிசேராக் கூட்டுக்குள் கணிசமானது. தென்னாபிரிக்காவை எப்போதும் முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறது. எனவே அவர்கள் இதனைச் செய்யலாம். இதனால் அவர்கள் எதிலும் குறைந்துவிடப்போவதில்லை.

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்