10022023தி
Last updateபு, 02 மார் 2022 7pm

பொறுக்கி:ஈழம்,புலி,புலம். -சில குறிப்புகள் புலிகள் குறித்து...

//இயக்கங்களின் தோற்றத்துக்கு காரணம் சிங்கள இனவாத அரசு. ஆனால் பல இயக்கங்கள் அழிக்கப்பட்டவும், முஸ்லீம்கள் வெளியேற்றபடவும், ஏனைய
சிறுபான்மையினர் ஒடுக்கப்படவும் புலிகள் தனித்த இயக்கமாவதற்கும், தமது மக்களுக்கு எதிராகவே துப்பாக்கி தூக்கவும், இறுதியில் இன்று அழிந்து போகவும் காரணம் எங்களிடம் இருக்கின்ற "புலிச்" சித்தாந்தமும்தான். இதிலிருந்து முறித்துக்கொள்ளாதவரை, இந்தச் சித்தாந்தத்தினால் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பொறுப்பெடுக்காதவரை இப்போதிருக்கின்ற சூனியத்தைக் கடப்பதும், அடுத்த நகர்வுக்கும் போவதும் பற்றிப் பேசுவது…//


http://porukki.weblogs.us/2009/06/12/eelam_puli_pulam/


நீண்ட நாட்களுக்குப்பின் உங்கள் உள்ளத்தை வாசிப்பதில் மிக ஆர்வத்தோடு ஈடுபட்டேன்.தங்கள் கருத்துக்கள்-புலிபற்றியதும் ஏனைய இயக்கங்கள் குறித்ததுமான பார்வைகள் சரியானது.என்றபோதும்,புலிகளைத் தவறான பாதையோடு(எதிரியை நண்பனாகவும்,நண்பனை எதிரியாகவும்.இது வர்க்க நிலையிலிருந்து பார்க்கும் எதிரி-நண்பன் என்றாகப் புரிக.) நகர்த்திய தமிழ் ஆளும் வர்க்கத்துக்கு மிக அண்மைய நடாத்தை(புலித்தலைமையைக் காட்டிக்கொடுத்தது)திடீரென உருவாகியது அல்ல.இதை வெறும் வார்த்தையில்"புலம்பெயர் சாவு வியாபாரிகள்"எனச் சொல்லியொதுங்க முடியாது.தமிழ் ஆளும் வர்க்கமானது புலம் பெயர் தேசங்கள்வரை புலிகளிலிருந்தே உருபெற்றுத் தமது இராணுவத் தலைமையை அழித்துவிடுவதற்குத் தமது புதியகூட்டோடு இயங்கியுள்ளனர்.இஃது இப்படி இருக்க,மேலும் புலிகள் இயக்கத்தையும் அதன் கடந்தகாலத் தவறுகளையும் வெறுமனவே புலித்தனத்தின் நிகழ்வாகப் பார்ப்பதை நான் வெறுக்கிறேன்-மறுக்கிறேன்.


புலிகளையும்,ஏனைய இயக்கங்களையும் தோற்றுவித்த சக்தி இலங்கை அரசின் இனவொடுக்குமுறைதாம் காரணமாகிறதென்பது ஒரு பகுதி உண்மைதாம்.இதைக்கடந்து இந்திய-மேற்குலக அரசுகளினது நலன்களது எதிர்பார்ப்பில் இலங்கையில் நடாத்தப்பட்ட இனவாத அரசியலின் தொடர்ச்சியில் உருவாக்கப்பட்ட ஆயுதக் குழுக்கள் யாவும் ஏதோவொரு அரசை,அதன் நலனுக்குகந்த முறையில் நம்பிக்கொண்டு,அவர்களது கட்டளைக்கொப்பவே"ஈழப் போராட்டஞ்"செய்தன.அந்நிய தேசங்களது முரண்பாடுகள் யாவும் ஒவ்வொரு இயக்கத்துக்குள்ளும் பிரதிபலிக்க,அவை இயக்க முரண்பாடுகளாகப் பரப்புரைக்குட்பட்டு ஒன்றையொன்று அழித்து,எமது விடுதலைப் போராட்டத்தைச் சிதைத்தன அந்நிய நலன்கள்.


இதன் தொடராகவே, புலிகள் என்றவொரு இயக்கம் தமது அரசியல் நடாத்தையில் ஏகத் தலைமை வாதத்தோடு பிரபாகரனது தலைமையை முதன்மைப்படுத்தி, எமது இனத்தின் புரட்சிகரமான சக்திகளையும்,புத்திஜீவிகளையும் பலியெடுத்தது.இதைப் புலிக்குப் பின்னாலிருந்து நடாத்திய அந்நிய உளவு நிறுவனங்களே இன்று புலியைப் பூண்டோடு அழிப்பதில் தமிழ் ஆளும் வர்க்கத்தோடு பேரஞ் செய்து எமது விடுதலைப் போராளிகள் அனைவரையும் வேட்டையாடியும்,பெருந்தொகையான தமிழர்களைப் படுகொலைசெய்தும் நமது மக்களை அரசியல் அநாதைகளாக்கியது.
புலிகளது தவறுகளை வெறுமனவே அதன் தலைமையினது தவறாகப் பாப்பது மீளவும் தவறிழைப்பதில் முடியும்.புலிகளது தலைமையை வெறும் இராணுவவாதத்துக்குள் முடக்கி அரசியல் போராட்டத்தைப் புரியாதிருப்பதற்கும், மக்களோடு இணைந்து விடுதலையைச் சாதிக்கும் மக்கள் படையைக்கட்டாதிருப்பதற்கும் பிரபாகரனது நடாத்தை காரணமில்லை.


"புலிகள் கெரில்லா இராணுவ அமைப்பிலிருந்து மரபு இராணுவமாக மாறியதும்,2005 ஆம் ஆண்டு பொதுதேர்தலில் இராஜபக்ஷ வெல்லும் நிலைக்காக, அதைப் புறக்கணித்ததும்" பிரபாகரனது வரலாற்றுத் தவறுகளென இப்போது கூறுகிறார்கள்.


இவை இரண்டுமேதாம் புலிகளது இன்றைய தோல்வியாகவும் காட்டப்படுகிறது.ஆனால்,இது ரொம்ப மோசடியான கூற்று.


இன்றைக்குப் புலிகளது தோல்வி பிரபாகரனது தவறல்ல.அவருக்குப் பின்னாலிருந்த தமிழ் ஆளும் வர்க்கத்து நலனே இதை நடாத்தி முடிக்க அந்நியச் சக்திகளது நலனோடு உடந்தையாகிப் புலிகளது போராட்ட முறைமையையே தலைகீழாக மாற்றியது.


இதன் பயனாகப் புலிகளது கட்டுப்பாட்டிலிருந்த நிலப்பகுதிகளை ஒரு தேசத்தின் வடிவாகவும்-கட்டமைப்பாகவும் புலிகள் நிறுவிக்கொண்டனர்.இங்கே,கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விடயமுண்டு.அதாவது, புலிகள் தமது கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலப்பரப்புகளிலிருந்து இலங்கையினது இராணுவ ஜந்திரத்தை அப்புறப்படுத்தினாலுங்கூட, இலங்கை அரசின் ஆதிக்கத்தை உடைக்கவில்லை என்பது கவனிக்க வேண்டியது.


வியாட்நாம் யுத்ததந்திரத்துக்கு ஒப்பற்ற பணியாற்றிய ஜெனரல் கியாப் சொல்கிறார்:"ஒரு அமைப்பு-விடுதலை இராணுவம் நிலவும் அரச ஆதிக்கத்தை உடைக்காது,எவ்வளவு பெரிய படையணியை வைத்தபடி பெரும் பகுதி நிலப்பரப்பை விடுவித்துக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அது விடுதலையடைந்த பூமியாக இருப்பதற்குத் தகுதியற்றது."இதன்படி புலிகளது தேசவுருவாக்கத்தை நோக்கி அனைத்து நடவடிக்கையையும் உற்று நோக்கினால் அவரது கூற்று உண்மையான மந்திரம் என்று எடுக்க முடியும்.


சமாதானக் காலங்களில் புலம் பெயர் மண்ணில் பரப்புரை செய்த புலிகளது மகளிர் அணிப் பொறுப்பாளர் தமிழினி அப்பப்ப உரையாற்றும் போது,புலிகளது வரிவிதிப்புக்கு நியாயங் கூறும்போது"நாம் ஒரு தேசத்தை உருவாக்கி வைத்துள்ளோம்.அதற்குப் பரிபாலனஞ் செய்ய வரிகட்டுவது மக்கள் கடமை"என்றார்.


இதன்படி, புலிகள் தமது அமைப்பை விடுதலைப்படை என்ற நோக்கிலிருந்து விடுபட்டுத் தம்மை ஒரு அரசினது படையணியாக மாற்றிக் கொண்டார்கள்.இந்த அரச மாதிரி அமைப்பாண்மைக்குப் புலிகளுக்குப் பின்னாலுள்ள தமிழ் ஆளும் வர்க்கமானது பாரிய உந்துதல்கொடுத்தபடி தமது பேரங்களை நடாத்தியபடியேதாம் இலங்கை அரசசோடு பேச்சுக்களை நடாத்தியது.இதன் தொடராகப் புலிகள் தமது இராணுவத்தை முப்படைகளாகப் பிரித்து இறுமாந்திருந்தார்கள்.ஒரு சிற்றரசாக இவை பரிணமித்தபோது,அரசுக்குரிய நடாத்தையாக அது மக்களை வர்க்க ஒடுக்குமுறைக்குட்படுத்தியது.இதன்படி புலிப் போராளிகள் மக்கள் படையணியாக மாற்றமடையாது அதுவும் ஒரு கூலிப்படையாக-ஒரு அரசுக்குரிய இராணுவப் பண்போடு ஊதிப் பெருத்தது.இதன் தொடராக மக்களிடமிருந்து அந்நியப்பட்ட புலிகளது படையணியும், அதன் தலைமையும் ஒரு அரசுக்குரிய பண்புகளோடு,தலைமையும் அதன் போராட்டப்படையும் மாற்றுமுற்றிருந்தபோது மக்கள் அவர்களது தேவைக்கு ஏற்ற ஒரு உறுப்பாகவே இருத்திவைக்கப்பட்டார்கள்.


இவை யாவும் திட்டமிட்ட அந்நியச் சக்திகளது ஒப்புதலுக்கு-ஆசை வார்த்தைக்கமையவுமே நடைபெற்றது.புலிகளை ஒரு அரசுக்குரிய முறையில் மாற்றமுறவைத்து அதை மக்கள்படையாக மாறாதிருக்கும் வியூகத்தை ஒழுங்குற நடாத்தியது நோர்வே அரசு என்பது எனது கணிப்பு.இது, அமெரிக்க அரசினது உளவு நிறுவனத்தின் வேண்டுகோளென்பதும் உண்மை.


இந்தச் சந்தர்ப்பத்தில்தாம் புலியழிப்புக்கான அனைத்து வடிவமும் திட்டமிடப்பட்டது.


மக்களைச்சார்ந்து,மக்களோடு மக்களாகப் போர் நடைபெறும்போதும்,மக்கள் தயவில் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும்போது எந்தவொரு இராணுவப்பலமும் அதை முறியடிக்க முடியாது.ஆனால்,ஒரு சிற்றரசை,இன்னொரு அரசு மிக விரைவாகத் தோல்வியுறச் செய்யமுடியும்.இரு அரசுக்குள் நிலவும் போராட்டத்தில் ஆயுதப்பலம் மிக முன்னணியிலிருந்து போராட்டத்தில்-யுத்தத்தில்"வெற்றி.தோல்வி"என்பதைத் தீர்மானிக்கும்.இங்கே,சிங்கள இராணுவம் ஆயுதப்பலத்தோடும்,ஆட்பலத்தோடும் போராடியதாக எவரும் குறுக்க வேண்டாம்.அவர்களிடத்தில் இன்னொரு நிகழ்வும் மிக உண்மையாக நடந்தேறியது.அது,சிங்களக் கூலிப்படைகள் சிங்களத் தேசத்தினது தேசியவாதத்துள் வார்க்கப்பட்ட தேசபக்தபடையாகவும் மாற்றப்பட்டபின்பேதாம் புலிகளது இராச்சியத்தைத் துடைத்தெறியப் புறப்பட்டது.இதுவே,புலிகளது தரப்பில் அனைத்தும் தலைகீழாக இருந்தது.


அதாவது,


1:புலிகள் மக்கள் படையணியாக-விடுதலைப்படையாக இல்லாதிருந்தார்கள்,


2:ஒரு தேசத்துக்குரிய கூலிப்படையாகவே அவர்களது உறவு மக்களோடிருந்தது,


3:புலிகளது நிர்வாக ஜந்திரம் தமிழ் மக்களை வர்க்க ஒடுக்குமுறைக்குட்படுத்தித் தமக்குப் பின்னாலிருந்த ஆளும் வர்க்கத்தை காப்பதற்கான முனைப்பில் நிர்வாகத்தைக்கொண்டியங்கினார்கள்,


4: வர்க்க ஒடுக்குமுறைக்கிசைவாக தமது நீதி பரிபாலனத்தை,நீதி மன்றம்,பொலிஸ்,சிறைக் கூடங்களென வகுத்திருந்தார்கள்,


5: தாம் கொண்டியங்கிய நிர்வாக ஜந்திரத்துக்குத் தோதான முறைமைகளுக்கு முன்னுரிமைகொடுத்து, மக்களது அடிப்படைவுரிமைகளை ஆயுத முனையில் பறித்தார்கள்-சர்வதிகாரத் தன்மையோடு மக்களைக் கட்டாயப்படுத்தித் தமக்கு அடிபணிய வைத்தார்கள்.


6:தமது ஆட்சியின் கீழ் சிவில் நடாத்தைகளைக் குறுக்கியபடி தம்மை அரசினது அலகாகவும், அதன் பரிபாலனர்களாகவும் புலித் தலைமை உருவாக்கிக் கொண்டது.


7: எந்தச் சந்தர்ப்பதிலும் புலிகள் தம்மை விடுதலைப்படையணிக்குரிய குணாம்சத்தோடு விடுதலைப்போரை முன்னெடுப்பதை மறுத்துத் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் காக்கும் படையணியாகவே மட்டுப்படுத்திக்கொண்டிருந்தனர்.


இத்தகைய ஒரு குறுநில ஆட்சி அந்நிய உளவு நிறுவனங்களின் திட்டமிடலுடன் நடந்தேறியது.இதை மேலும் நம்பகத்தன்மையோடு நடாத்தவும் அதைத் தொடர்ந்து விடுதலைப்படைக்குரிய அனைத்து நடாத்தைகளையும் சிதைப்பதற்காகவே மேற்குலகத்தவர்கள்,குறிப்பாக நோர்வே தொடர்ந்து வன்னிக்குப் பறந்து சந்திப்புகளை நடாத்திப் புலிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தது.இதைக்கூட அறிய முடியாதளவுக்குப் புலம்பெயர் தமிழர்கள் இறுமாந்திருந்தார்கள்.


புலித்தலைமையும்,அதன் ஊழியர்களும் சொல்லித் திரிந்த"தேசவுருவாக்கம்-ஈழத்தேசம்"இந்தவகைக் காரிணியின்-வியூகத்தின் உண்மையாக விரிந்திருந்தது.இதை உடைத்துப் புலிகளை அழிப்பது பெரிய விடயமில்லை இலங்கை அரசுக்கு.ஏனெனில்,அவ்வரசின் ஆதிக்கமேதாம் வன்னிக்குள் நிலவியது.


இலங்கை அரசினது ஆதிக்கத்தை உடைக்காமால், இராணுவ ஜந்திரத்தை அகற்றியவுடன்"தேசத்தை"நிர்ணயித்த புலிகள் சாரம்சத்தில் ஒரு கூலிப்படையாகவே மாறியிருந்தார்கள்.இவர்களை அழிப்பதற்குப் பிரபாகரனது தவறு காரணமில்லை.ஏனெனில், பிரபாகரன் என்பது ஒரு பொம்மை.அவரால் எதுவுமே நிகழவில்லை.அவருக்குப் பின்னாலிருந்தாவர்கள் அனைத்தையும் நடாத்தி முடித்தனர்.


புலிகளது அழிவு குறித்து நீண்ட ஆய்வு அவசியமானது.இதை செய்து முடிக்கும் காலம் இப்போது நெருங்குகிறது.இதன்படி சரியான முறையில் இந்த ஆய்வு சென்றடைந்து புலிகளது பாத்திரம் புரியப்பட வேண்டும்.இதன் வழியேதாம் அடுத்தவொரு நகர்வு,அது போராட்டமாகவிருந்தாலுஞ்சரி அல்லது சமாதானச் சகவாழ்வாகவிருந்தாலுஞ்சரி தமிழ்பேசும் மக்களுக்கு அவசியமான தெரிவுகளைச் செய்ய வழிவகுக்கும்.


இன்றைய நமது நிலைக்கு,புலித்தலைமை மற்றும் இயக்கங்களது தலைமைகளது தவறாகப் புரிந்துவிடுவது பாரிய அபத்தம்.


நமது சமுதாயத்தின் ஆளும் வர்க்கத்தின் நடாத்தையை மிக நேர்மையோடு ஆய்ந்து புரிந்துகொள்ளும் மனதுக்கு அந்நியச் சக்திகளுக்குப் புலிகள் அடியாளாகவிருந்துகொண்டு, நடாத்திய தேச பரிபாலனம் புரிந்துவிடும்.


இதுவே,நமது இவ்வளவு அழிவுக்கும் காரணமாகும்.


இதன் தெரிவில் புலம் பெயர் புலிகள் இன்னும் அந்நியச் சேவையில் தம்மை இணைத்தே உள்ளனர் என்பதும் புரியப்படவேண்டும்.ஒரு தேசிய இனம்,இன்னொரு தேசிய இனத்திடம் ஒடுக்குமுறைக்குள்ளாகிய நிலையில்-அவ்வொடுக்குமுறைக்கெதிராகப் போராடித் தன்னை விடுவித்துக்கொள்ளச் செய்யமுனையும் விடுதலைப்போரை,அந்நியச் சக்திகள்-பிராந்திய நலனுக்கான தேசங்கள் அதன் ஆரம்பிலிருந்தே திட்டமிட்டுத் தொடக்கி ,அதைச் சீரழித்து-அழித்த வரலாறு ஈழத்தமிழர்களின் வரலாறாகவே இருக்கிறது.


இதுள் அப்பாவிகளாகப் போராடி மடிந்த அனைத்துச் சிறார்களுக்கும், தேசபக்தர்களுக்குரிய மரியாதையைச் செய்வதற்கு நாம் தயங்கக்கூடாது.அதே தருணத்தில் அவர்கள் அணிதிரண்ட அமைப்புகள் யாவும் அந்நியச் சக்திகளது ஊக்கம்-உந்துதலோடு கண்காணிக்கப்பட்டவை என்பதையும் வரலாற்றில் ஆய்ந்து கூறுவது எமது கடமையே.


ப.வி.ஸ்ரீரங்கன்
12.06.2009


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்