நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை கண்டிராத மிகப் பெரிய தோல்வியை சி.பி.எம். கட்சி சந்தித்துள்ளது. நாடு தழுவிய அளவில் மொத்தம் 16 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றுள்ளது. 1967இல் சி.பி.எம் கட்சி முதன்முறையாக நாடாளுமன்றத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளைவிட இது குறைவு.

“டெல்லியின் அதிகார மையங்களை ஆட்டிப் படைக்கும் சக்தி”, “இடதுசாரிகளின் ஆதரவில்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சிக்கு வர முடியாது”, “காங்கிரசு பா.ஜ.க. அல்லாத இடதுசாரிகள் தலைமையிலான மூன்றாவது அணி தேசிய அரசியலில் தீர்மானகரமான சக்தியாகத் திகழும்”, “2009இல் காங்கிரசு அல்லாத ஆட்சியே டெல்லியில் அமையும்” என்றெல்லாம் சவடால் அடித்துவந்த சி.பி.எம். கட்சியின் கனவுகளும் நப்பாசைகளும் சுயதம்பட்டங்களும் இன்று புஸ்வாணமாகி விட்டன. கடந்த நாடாளுமன்றத்தில் 3வது பெரிய ஓட்டுக் கட்சியாக இருந்த சி.பி.எம். இப்போது 8வது இடத்துக்குத் தள்ளப்பட்டு விட்டது. கடந்த தேர்தலை ஒப்பிடும்போது, சி.பி.எம்.இன் கோட்டையாகக் கருதப்படும் மே.வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களில் அக்கட்சி 35 தொகுதிகளை இழந்துள்ளது. நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத மிக மோசமான படுதோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது.


தேர்தல் முடிவுகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன சி.பி.எம். தலைவர்கள் “தோல்விக்கான காரணங்களை ஆழமாகப் பரிசீலித்து தவறுகளைக் களைந்து முன்னேறுவோம். சி.பி.எம். கட்சிக்குத் தேர்தல் தோல்வி ஏற்பட்டுள்ள போதிலும், மக்களிடம் ஆதரவு குறைந்துவிடவில்லை. சி.பி.எம்.க்கு கிடைத்துவரும் வாக்குகளின் எண்ணிக்கையில் சற்றே சரிவு ஏற்பட்டுள்ளது. நாடெங்கும் காங்கிரசு ஆதரவு அலை வீசியதால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது” என்று தமக்குத்தாமே ஆறுதல் கூறிக் கொண்டு தோல்விக்கான உண்மையான காரணங்களை மூடி மறைக்கின்றனர்.


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 69 தொகுதிகளில் சி.பி.எம். போட்டியிட்டது. தற்போது 82 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. அதிகமான தொகுதிகளில் போட்டியிட்டதற்கு ஏற்ப அக்கட்சிக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் கடந்த தேர்தலில் மொத்தத்தில் 5.66% வாக்குகளைப் பெற்ற சி.பி.எம். இப்போது 5.33% வாக்குகளையே பெற்றுள்ளது. இதுகூட தேர்தல் கமிசன் தரும் புள்ளிவிவரம் தான். உண்மையில், 2004 நாடாளுமன்றத் தேர்தலை ஒப்பிடும்போது, தற்போதைய தேர்தலில் மே.வங்கத்தில் மட்டும் சி.பி.எம். கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கை 5% குறைந்துள்ளது. கேரளாவில் 2% அளவுக்குக் குறைந்துள்ளது.


திரிபுரா மாநிலத்தின் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விட்டதாக சி.பி.எம். கட்சி ஆறுதல்பட்டுக் கொள்கிறது. ஆனால், 2004 தேர்தலில் 68% வாக்குகளைப் பெற்ற சி.பி.எம். கட்சி இப்போது 61% மட்டுமே பெற்றுள்ளது. சி.பி.எம். வெற்றி பெற்றுள்ள அந்தமான் தொகுதியில் மட்டுமே அக்கட்சிக்கு வாக்கு எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.


படுதோல்விக்கான காரணங்களைப் பரிசீலிக்க மாநிலக் கமிட்டிகள் கூடி முடிவெடுப்பதற்கு முன்பாகவே, சி.பி.எம். கட்சியில் நிலவும் கோஷ்டிச் சண்டைக்கு ஏற்ப, அதன் தலைவர்கள் தோல்விக்கான பழியை எதிர்த்தரப்பின் மீது சுமத்தி வருகின்றனர். கேரளாவில் மாநில முதல்வரான அச்சுதானந்தன் கோஷ்டி, மாநிலச் செயலாளரான பினாரயி விஜயன் கோஷ்டிதான் சி.பி.எம்.இன் தோல்விக்குக் காரணம் என்கிறது. விஜயன் கோஷ்டியோ, அச்சுதானந்தன் கோஷ்டியின் சீர்குலைவு வேலைகள்தான் தோல்விக்குக் காரணம் என்று சாடுகிறது.


மே.வங்க சி.பி.எம். அமைச்சரான சுபாஷ் சக்ரவர்த்தி, கட்சித் தலைமை அதாவது, கட்சியின் செயலாளரான பிரகாஷ் காரத்தின் தவறான முடிவுகள்தான் தோல்விக்குக் காரணம் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறார். காங்கிரசு கூட்டணி அரசை ஆதரித்து வந்த சி.பி.எம். கட்சி, கடைசி நேரத்தில் காலை வாரியதால் மக்கள் அதிருப்தியடைந்தனர் என்றும், இந்த அதிருப்தியை திரிணாமுல் காங்கிரசு அறுவடை செய்து கொண்டு விட்டது என்றும், இதற்கு தலைமைதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் சாடுகிறார்.


மே.வங்க சி.பி.எம். செயலாளர் உள்ளிட்டு மாநிலக் கமிட்டியின் பெரும்பாலான முன்னணித் தலைவர்களும் இதேபோல மையத் தலைமையைச் சாடுகின்றனர். இதுவும் போதாதென்று, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மே.வங்கத்தைச் சேர்ந்த முன்னாள் சி.பி.எம். தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற அவைத் தலைவருமான சோமநாத் சட்டர்ஜி, “தேர்தல் தோல்விக்கு தலைமையின் தவறுகள்தான் காரணம்; கட்சியானது, மக்களிடமிருந்து தனிமைப்பட்டு விட்டது” என்று குற்றம் சாட்டுகிறார். அவருக்கு பக்கமேளம் வாசித்துக் கொண்டு தேர்தலில் தோல்வியடைந்த சி.பி.எம். பிரமுகர்கள், முதல்வர் புத்ததேவும் கட்சியின் மையத் தலைமையும்தான் தோல்விக்குக் காரணம் என்கின்றனர்.


தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைக் கண்டும், தோல்வியடைந்த சி.பி.எம். பிரமுகர்கள் தன்னை குற்றவாளியாக்கிச் சாடுவதைக் கண்டும் அரண்டு போன மே.வங்க முதல்வரான புத்ததேவ் பட்டாச்சார்யா, “விமர்சிப்பவர்களே அரசாங்கத்தை நடத்தட்டும்; நான் பதவி விலகிக் கொள்கிறேன்” என்று முறுக்கிக் கொண்டார். “புத்ததேவைப் பலிகிடாவாக்கி மையத் தலைமை தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறது. இதை அனுமதிக்க முடியாது. புத்ததேவ் பதவி விலகினால், கட்சியின் பொதுச் செயலாளர் காரத் பதவி விலகத் தயாரா?” என்று மே.வங்க காம்ரேடுகள் கேள்வி எழுப்பினர்.


உன்னைச் சொல்லி குற்றமில்லை; என்னைச் சொல்லி குற்றமில்லை என்ற கதையாக, நேற்று வரை காங்கிரசையும் பா.ஜ.க.வையும் மாறி மாறி ஆதரித்து வந்த கட்சிகளை வைத்து மூன்றாவது அணி உருவாக்கியதும், மாநிலப் பிரச்சினைகளும்தான் தோல்விக்குக் காரணம் என்று மே 18ஆம் தேதி கூடிய சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக்குழு தீர்மானித்தது. இதன்மூலம் தலைமையும் தவறு செய்துள்ளது; புத்ததேவ், அச்சுதானந்தன் ஆகிய மாநில முதல்வர்களும் தவறு செய்துள்ளனர்; எல்லோருடைய தவறுகள்தான் தோல்விக்குக் காரணம் என்று சமரசப்படுத்தியது. இதையெல்லாம் கேட்டு ஒருவருக்கொருவர் ஆறுதல் பட்டுக் கொள்ளலாமே தவிர, இப்படிப்பட்ட மாநில மையத் தலைமையைக் கொண்டு 2011இல் வரப்போகும் மாநில சட்டமன்றத் தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் சி.பி.எம். பிரமுகர்கள் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றனர்.


புரட்சி சவடால் அடித்து வந்த சி.பி.எம். கட்சி, தனியார்மய தாராளமயத்துக்கேற்ப தன்னை மறுவார்ப்பு செய்து கொண்ட நாளிலிருந்தே அதன் தோல்வியும் சீரழியும் பாசிசத்தன்மையும் தொடங்கி விட்டது. “எங்கள் கொள்கைகளை நாங்கள் தலைகீழாக மாற்றிக் கொண்டுள்ளோம்” என்று வெட்கமின்றி அறிவித்துக் கொண்டு தனியார்மய தாராளமயத்துக்குக் காவடி தூக்கினார், மே.வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா. இதர ஓட்டுக் கட்சி அரசுகளைப் போலவே, ‘மாநிலத்தின் தொழில் வளர்ச்சி’ என்ற பெயரில் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களைப் பறித்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவி, உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளுக்கு கோடிகோடியாய் வரிப்பணத்தை வாரியிறைத்து பகற்கொள்ளைக்குப் பட்டுக் கம்பளம் விரித்தது இடதுசாரி அரசு. சிங்கூரிலும் நந்திகிராமத்திலும் லால்காரிலும் விவசாயிகளிடமிருந்து விளைநிலங்களைப் பறித்த இடதுசாரி அரசு, அதை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது கொலைவெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டது. கட்சி அணிகளோ பாசிச குண்டர் படையாக வளர்த்தெடுக்கப்பட்டு, போராடும் மக்கள் மீது வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். இவையனைத்தும் மே.வங்க விவசாயிகள் சி.பி.எம். கட்சி மீது வைத்திருந்த அரைகுறையான நம்பிக்கையையும் முற்றாகப் பறித்து விட்டது.


மறுபுறம் சி.பி.எம்.இன் உள்ளூர் தலைவர்களோ, ஊழலில் ஊறித் திளைத்து மக்களிடம் அதிகாரத் திமிருடன் நடந்து கொண்டனர். மாநிலமெங்கும் ரேஷன் கடை ஊழலுக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்களும் சி.பி.எம். தலைவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டதும் சி.பி.எம். மீது மக்கள் கொண்டிருந்த வெறுப்பையும் குமுறலையும் மெய்ப்பித்துக் காட்டின. தேசிய ஊரக வேலை உத்தரவாதத் திட்டம் போன்ற கவர்ச்சிவாதத் திட்டங்களோ, பெயரளவிலான சமூகநலத் திட்டங்களோ கூட செயல்படுத்தப்படாமல் அம்மாநிலத்தில் முடங்கிக் கிடந்தன. சிறுபான்மை முசுலீம்கள் மே.வங்கத்தில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக சச்சார் கமிட்டி ”ட்டிக் காட்டிய பின்னரும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், முசுலீம்கள் சி.பி.எம். கட்சி மீது அதிருப்தியடைந்தனர். இவையெல்லாம் சேர்ந்து கடந்த ஆண்டில் நடந்த உள்ளூராட்சி தேர்தலின் போதே அதிருப்தியாக வெளிப்பட்டது. இருப்பினும், கள்ள ஓட்டு, வாக்குச் சாவடிகள் சூறையாடல், வன்முறை வெறியாட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டு, தேர்தல் வெற்றியைச் சாதித்து, சி.பி.எம். கட்சியைத் தொடர்ந்து மக்கள் ஆதரித்து வருவதாக அக்கட்சி காட்டிக் கொண்டது.


எல்லாவற்றுக்கும் மேலாக காங்கிரசு பா.ஜ.க.வுக்கு மாற்று என்ற பெயரில், நேற்றுவரை காங்கிரசுடனும் பா.ஜ.க.வுடன் கூடிக் குலாவிய சந்தர்ப்பவாதிகளையும் கடைந்தெடுத்த பாசிஸ்டுகளையும் கொண்டு சி.பி.எம். கட்டிய மூன்றாவது அணியும், அச்சந்தர்ப்பவாத பாசிசத் தலைவர்களுக்கு சி.பி.எம். கட்சி ஒளிவட்டம் சூட்டி துதிபாடியதும், சி.பி.எம். கட்சியின் பச்சையான பிழைப்புவாதத்தை நாட்டு மக்களிடம் அம்பலப்படுத்திக் காட்டிவிட்டது. இவையெல்லாம் சேர்ந்து சி.பி.எம். கட்சியை நாடாளுமன்றத் தேர்தலில் பாதாளத்துக்குள் தள்ளி விட்டுள்ளது.

இருப்பினும் இப்படுதோல்வியிலிருந்து சி.பி.எம் மீண்டுவிட முடியுமா? தலைமையை மாற்றி, கவர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் மக்கள் நம்பிக்கையைப் பெற்று 2011ல் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பழைய நிலையைத் தக்க வைத்துக் கொள்ளத்தான் முடியுமா? ஒருக்காலும் முடியாது.


ஏனெனில் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் ஆளும் வர்க்கங்களின் மறுகாலனியாதிக்கக் கொள்கைக்கு எதிரான மாற்றுக் கொள்கையோ திட்டங்களோ சி.பி.எம். கட்சியிடம் இல்லை. இதே கொள்கைகளை மனிதமுகம் கொண்டதாக, மக்களைக் கடுமையாகப் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என்பதுதான் சி.பி.எம். கூறும் மாற்றுக் கொள்கை. சுருக்கமாகச் சொன்னால், ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கும் சி.பி.எம். கட்சிக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லாமல் போய் விட்டது. இதுவும் போதாதென்று இதர ஆளும் வர்க்கக் கட்சிகளைப் போல சி.பி.எம். கட்சியும் கோடீசுவரக் கட்சியாக மாறியிருப்பதோடு, பாசிச குண்டர்படையும் கட்டியமைத்துள்ளது. இனியும் இக்கட்சி, உழைக்கும் மக்களை அணிதிரட்டி அவர்களின் விடுதலைக்காகப் போராடும் என்று நம்புவதற்கு அடிப்படையில்லை. புதைந்து கொண்டிருக்கும் சி.பி.எம். கட்சியை நம்பி ஏமாற, புரட்சியை நேசிக்கும் உழைக்கும் மக்களும் இனி தயாரில்லை.

 

கட்டுரையாளர்: குமார்

 

புதிய ஜனநாயகம், ஜூன்'2009,