06182021வெ
Last updateவெ, 18 ஜூன் 2021 3pm

புலியை விமர்சிப்பது பேரினவாதத்துக்கு ஆதரவானதா!?

அரசுக்கு எதிராக தமிழ்மக்கள் தமக்காக போராடத் தடையாக இருந்தது, இருப்பது புலி. இந்தப் புலியை விமர்சிப்பதை, அரசுக்கு ஆதரவானது என்பது எப்படி? இவை புலிக்கண்ணாடிக்கு ஊடாக எவற்றையும் பார்ப்பதுதான். பகுத்தறிவற்ற தமிழினவெறிக்கு ஊடாக, அறிவிழந்து பார்ப்பதுதான். புலிகள் முதல் தமிழ்நாட்டு பிழைப்புவாத தமிழினக் கும்பல்களை விமர்சிக்காமல், தமிழ் மக்களுக்கு ஒரு துரும்பைக் கூட நேர்மையாக முன்வைக்க முடியாது.

 

போராட்டத்தின் பெயரில் கடந்தகாலத்தில் நடந்த அரசியல் சீரழிவுகள் மேலான விமர்சனங்களின்றி, மக்களால் சுயமாக முன்னேற முடியாது.  கடந்த 30 வருடமாக வலதுசாரிய புலிகள் பேரினவாதத்தை ஒழிப்பதாகக் கூறி, தவறான தம் ஆயுதப் போராட்டம் மூலம் தமிழினத்தையே அழித்தவர்கள். கடந்த அறுபது வருடமாக இந்த வலதுசாரியம் தமிழினத்தின் பெயரில், வெறும் இனவாதம் மூலம் தமிழினத்தை சுடுகாடாக்கி பிழைத்தவர்கள்.

 

இதன் மேல், இன்று எந்த சுயவிமர்சனமும் கிடையாது. விமர்சனம் கிடையாது. விமர்சித்தால், ஐயோ அரசு ஆதரவு என்று ஓப்பாரி. மக்களுக்கு எதை நேர்மையாக சொல்லக் கூட முடியாது.

 

புலிகள் தேசியத்தின் பெயரில் மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்கு எதிராக, ஒரு மன்னிப்புக் கூட கேட்ட முடியாத அளவுக்கு பாசிட்டுகள் அவர்கள். இவர்கள் எந்த மக்களுக்காக போராடுகின்றனர். அதே அரசியல், அதே மோசடி, அதே பிழைப்பு. மக்கள் விரோத துரோகமே, அரசியலாக இன்றும் உள்ளது. மக்களை இந்த நிலைக்கு உள்ளாக்கியவர்கள், தொடர்ந்து மக்களுக்காக போராடுவதாக கூறுவது மாபெரும் அரசியல் மோசடி. ஏய்த்து பிழைக்கும் கூட்டமாக அது சீரழிந்துவிட்டது.

 

தம் தலைவன் கொல்லப்பட்டதைக் கூட, பகுத்தறிவற்ற எல்லைக்குள் மறுத்து மோசடி  செய்யும் இவர்களா! தமிழ் மக்களுக்காக போராடுகின்றனர். மனித தியாகத்தை ஏமாற்றி பிழைத்த கூட்டம், இனி ஏமாற்ற எந்த தியாகமும் அதனிடமில்லை. ஏகாதிபத்தியத்தின் பின் கொடிபிடிக்கத் தான், அதனால் முடியும்.

 

மக்களை பகுத்தறிவற்ற மந்தைகளாக வைத்திருந்த, வைத்திருக்கின்ற போக்கை முறியடிக்காமல், தமிழினத்துக்கு எந்த புதிய விடிவும் கிடையாது. மக்களை அறிவிழக்க வைத்து, அவர்களை ஏமாற்றிய போலியான அரசியல் போக்கில் இருந்து, மக்கள் விடுபடாமல் எந்த சுயமான முன்முயற்சியும் சாத்தியமற்றது.

 

இப்படிப்பட்ட இந்த வலதுசாரியத்தை, மக்கள்விரோத அரசியலை, அரசியல் ரீதியாக விமர்சனத்துக்கு உள்ளாக்குவதன் மூலம் தான், தமிழ்மக்களை இந்த மாயையில் இருந்த விடுவிக்க முடியும். அவர்களின் தமக்கான சொந்த அரசியல் வழியை, அவாகள் உருவாக்க முடியும்.

 

இந்த வலதுசாரியமோ கடந்த 60 வருடத்திலும், இதற்குள் 30 வருட ஆயுதப் போராட்டத்திலும், தன்சொந்த மக்கள்விரோதப் போக்கால் தமிழினத்தை அழித்துள்ளது.

 

இதை இன்று விமர்சிக்காமல், தமிழினத்தை யாரும் வேறுவழியில் வழிநடத்த முடியாது. புலியின் வலதுசாரியத் தொடர்ச்சியில், யாரும் தமிழ்மக்களை சரியாக வழிநடத்த முடியாது. அதன் மக்கள்விரோத அரசியல் தான், தமிழினத்தின் இன்றைய அவலம். இதை விமர்ச்சிக்காமல் எப்படி யாரால் முன்னேற முடியும்.    

புலியை விமர்சிப்பதன் மூலம்தான், இந்த அரசியலை தமிழ்மக்கள் மத்தியில் தோற்கடிக்க முடியும். இதன் மூலம்தான் பேரினவாதத்தை எதிர்த்து, சரியாக யாரும் போராட முடியும். புலியை விமர்சிக்காமல் வி;ட்டால், பேரினவாதத்தை எதிர்த்து போராட வேறுவழி கிடையாது. பேரினவாத அரசு வெறும் சிங்கள இனவாத அரசு மட்டுமல்ல. அது சுரண்டும் அரசு. ஏகாதிபத்திய உலக ஒழுங்கில் உள்ள அடக்குமுறை அரசு. இதை ஒட்டுமொத்தமாக எதிர்த்துப் போராடாமல், அதை யாரும் வெல்ல முடியாது. ஏகாதிபத்தியத்துக்கு பின்னால் ஓடி ஓடி கொடி பிடிப்பதால், தமிழினத்துக்கு விடிவு கிடையாது. இதை மறுத்து நிற்கும் புலிக்கு பின்னால் சென்றால், தமிழினத்தை நாமும் சேர்ந்து அழிக்கத்தான் முடியும்.

 

தமிழ் மக்கள் மேல் கடந்த 30 வருடமாக புலிகள் தம் பாசிச சர்வாதிகாரம் மூலம், திணித்த கோட்பாடுகள் நம்பிக்கைகள் பிரமைகள் எல்லாம் தகர்க்கப்பட வேண்டும். இதன் மூலம்தான், அரசுக்கு எதிராக, புலிக்கு மாற்றாக மக்கள் தமக்காக தாம் போராட முடியும். கடந்த 30 வருட மனித அவலத்தை, புலியை விமர்சிப்பதன் ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும். அதை புலிகள், ஒரு நாளும் சுயவிமர்சனமாக செய்யப்போவதில்லை.

 

இதனால் புலிகளை விமர்சிப்பது அவசியமாகின்றது. ஆனால் தமிழ்மக்கள் பெயரில்  இது அவசியமில்லை என்கின்றனர், புலியை விமர்சிக்காத புலி மற்றும் புலி ஆதரவாளர்கள். இவர்கள் எமக்கு, புலிகள் அரசுக்கு எதிராக போராடுவதாக காட்ட முனைகின்றனர். இவர்கள் தமது வலதுசாரிய மற்றும் ஏகாதிபத்திய நலனைக் கடந்து, தமிழ் மக்களுக்காக இவர்கள் போராடுவது கிடையாது. அன்றும் சரி, இன்றும் சரி இதுதான் புலியின் நிலை.

 

பொய், புரட்டு, மோசடிகள் மூலம், மக்களை பகுத்தறிவற்ற மந்தைகளாகவே, தம் சொந்த வர்க்க நலனுக்கு ஏற்ப பயன்படுத்துகின்றனர். தமிழ் மக்களை இதில் இருந்து விடுவிக்காமல், அரசுக்கு எதிரான போராட்டம் என்பது சாத்தியமற்றது. இதில் தெளிவுபெறாது, மக்களால் ஒருநாளும் தமக்காக போராடமுடியாது.

 

இன்றும் புலிகள் மக்களுக்கு இழைத்த கொடுமைகளுக்காக, அவர்கள் தம்மை சுயவிமர்சனம் செய்யவில்லை. இப்படிப்பட்ட இவர்கள் அரசுக்கு எதிராக போராடுவதாக கூறுவதே பொய்யானது, புரட்டானது. புலிகளால் பாதிக்கப்பட்ட மக்கள், எப்படி புலிக்கு பின்னால் நிற்பார்கள். அவர்களுக்காக புலிகள் போராடுவதாக கூறுவது எப்படி? இன்று புலிக்கு முதுகு சொறியும் எவனும், தமிழ்மக்கள் என்ற கூறி மக்களுக்கு எதிரான உள்ளடகத்தில் தான் மோசடி செய்கின்றனர். புலிகளால் பாதிக்கப்பட்ட மக்கள், புலியை நம்பத் தயாராகவில்லை, அவர்கள் பின்னால் இனியும் செல்லத் தயாராகவில்லை. வன்னியில் பேரினவாத சிறையில்  அடைப்பட்டுள்ள மக்கள், புலியை உதைப்பார்கள். அந்தளவுக்கு கொடுமைப்படுத்தியவர்கள் புலிகள். அதை கூட ஏற்றுக் கொள்ளாத புலி, அந்த மக்கள் பற்றி முட்டைக் கண்ணீர் வடிக்கின்றனர். மக்களுக்க வாலாட்டுவதாக காட்டிக்கொண்டு, நாயைப்போல் எம்மைப் பார்த்து குரைக்கின்றனர். 

 

இணைப்பு : 1

 

தியாகு என்ற இணையத் தோழர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, வழமை போல் ஒற்றைவரியில் (நேரமின்மை) நாம் பதிலை அளித்தோம். அது எம் அரசியலை முழுமையாக புரிந்து கொண்டவர்களுக்கான பதில்;. அது பிரசுரத்துக்கானதல்ல. ஆனால் அதை உள்நோக்குடன் பிரசுரித்தமை, தோழமை மேலான அவரின் அரசியல்தளத்தை கேள்விக்குள்ளாக்குகின்றது.      

 

அவரின் கேள்விக்கு வருவோம்.

 

1. சமீபகாலமாக உங்கள் பதிவுகளில் திரு.பிரபாகரன் இறந்துவிட்டதாக வரும் செய்திகள் எந்தளவு உண்மை?

 

நாம் அளித்த பதில் : இதில் எந்த சந்தேகமும் இல்லை. புலிப்பினாமிகள் மறுக்கின்றனர். உண்மையில்லை என்றால், அவர்கள் நிறுவ வேண்டியது தானே. பாருங்கள் இணைப்பை.

 

இதை விரிவாகப் பார்ப்போம் : நாம் இணைப்பை கொடுக்கத் தவறியிருந்தோம். பேரினவாத பாசிட்டுகள் பிரபாகரனைக் கொத்திக் கொன்றனர் (படங்கள் இணைப்பு – கவனம் கோரமானவை) – போர்க்குற்றம்-1

 

எந்தளவுக்கு உண்மை? என்று கேட்கும் போது நெடுமாறன் கோபாலசாமி வகையறாக்கள் பேசுவது போல் உள்ளது. உண்மையில்லை என்றால், புலி நிறுவ வேண்டியதுதானே. அதைவிடுத்து இல்லை, இருக்கின்றார் என்று கூறுவது பொய்யும் புரட்டுமாகும். மக்களை ஏமாற்றும் மோசடி. பகுத்தறிவற்ற அரசியல் புரட்டு.

  

2. பிரபாகரன் படத்தை மட்டும் காட்டும் இராணுவம் ஏன் மற்ற தளபதிகளின் இறந்த உடலை காட்டவில்லை?

 

நாம் அளித்த பதில் : யாரைக் காட்டவில்லை. புலிகள் காட்டவில்லை என்றால் அது பொய்யா? நாங்கள் போட்டுக்காட்டவா? சிலரை இராணுவம் இன்னும் உயிருடன் வைத்துள்ளது.

 

இதை விரிவாகப் பார்ப்போம் : புலித்தலைமை முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளது. இல்லை என்று நிறுவ வேண்டியது புலிகள். பல படத்தை அரசு காட்டியுள்ளது. இல்லை என்றால் அதை புலி நிறுவவேண்டும். மக்களுக்கு சும்மா இல்லை என்பது, எப்படி நேர்மையாக உண்மையாகவும் இருக்க முடியும். மோசடியல்லவா? இப்படி உண்மையை இல்லை என்கின்ற இவர்களா, மக்களுக்காக போராடுவார்கள்!


 
3. மீண்டும் மீண்டும் இத்தகைய செய்திகளை பரப்புவதில் சிங்கள அரசு இலாபமடையலாம்?

 

நாம் அளித்த பதில் : இருக்கலாம்.


3.1. உங்களுக்கு என்ன லாபம்?

 

நாம் அளித்த பதில் :  தமிழ்மக்களை ஏமாற்றி (உங்களைப் போன்றவர்களை) பிழைக்கும் அரசியல் பொய்யை அம்பலப்படுத்தினால் தான், தமிழ் மக்கள் சரியாக சிந்தித்து செயலாற்ற வழி பிறக்கும். விரிவான கட்டுரை நாளை வெளிவரவுள்ளது.

 

இதை விரிவாகப் பார்ப்போம் : மேலே உள்ளது விரிவான கட்டுரை. உண்மையை உண்மையாக ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்!? அதற்கு ஏன் நீங்கள் துணை போகின்றீர்கள்!? இதில் உங்களுக்கு என்ன இலாபம்!? பொய் சொல்லும் புரட்டுத் தேசியம் இப்படித்தான் இருக்கும். இதைத்தான் நெடுமாறன் கோபாலசாமி வகையறாக்கள், சொல்லிச் செய்கின்றனர். 
 
4. ஒரு போராட்டம் ஒரு தலைவனை மட்டும் நம்பியிருக்கக் கூடாது.

 

நாம் அளித்த பதில் : இதை எம்மிடம் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. நாங்கள் அவரை தலைவனாகக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

 

இதை விரிவாகப் பார்ப்போம் : அவர்கள் செத்துப் போன ஒருவரை, சாகவில்லை என்று காட்டி அரசியல் செய்யும் அவலம். அவர்களுக்கு குருவி கலைக்க (மக்களை ஏமாற்ற) பொம்மை தேவைப்படுகின்றது.

 

5. சரி அவர் இறந்துவிட்டால் என்ன நீங்கள் ஏன் ஈழத்துக்கு சென்று போரிடக் கூடாது?

 

நாம் அளித்த பதில் : அதற்கான வழிகள் எற்படின், அதைச் செய்வோம்.

 

இதை விரிவாகப் பார்ப்போம் : இந்தக் கேள்வி புலிக்கு சார்பாக, எம் விமர்சனத்தை தடுப்பதற்கான ஒன்று. வழiமான புலிபாணிக் கேள்வி, தோழமையுடன் வருகின்றது. 
 

6. நீங்கள் சொல்லும் விதமாக மக்களை அரசியல்படுத்தக் கூடாது?

 

நாம் அளித்த பதில் : புரியவில்லை! வர்க்க அரசியல் மூலம் தான் நாம் மக்களை அரசியல் படுத்துவோம்.

 

இதை விரிவாகப் பார்ப்போம் : நாங்கள் எப்படி அரசியல் படுத்த வேண்டும். புலிக்கு பின்னால் வால்பிடித்துச் சென்றா!? இதை நீங்கள் கூறுகின்றீர்கள்.
 
7. காலம் கடந்துவிட்டது என்றால் புலி விமர்சனத்தை விடுத்து வேறு உருப்படியான வேலை பார்க்கலாம் என கருதுகிறேன்?

 

நாம் அளித்த பதில் :  புலிகள் கதைப்பது போல் உள்ளது. வேறு வேலையா!?

 

இதை விரிவாகப் பார்ப்போம் : புலி கூத்துக்கு, நாம் காவடி ஆடுவதில்லை.

 

8. எனக்கும் புலிகளின் மேல் விமர்சனம் உண்டு. ஆனால் அது சிங்கள் அரசுக்கு சாதகமாக இருக்காது.

 

நாம் அளித்த பதில் :  அதைத்தான் நாங்கள் செய்கின்றோம்.

 

இதை விரிவாகப் பார்ப்போம் : உங்கள் விமர்சனத்தை யாருக்கு, எப்ப வைப்பீர்கள்!? சிங்கள அரசுக்கு எதிரான எமது நிலைப்பாடு, புலியிடம் கிடையாது. அரசை, புலி இனவெறி அரசாக மட்டும் பார்க்கின்றது. நாங்கள் அதனுடன் அது சுரண்ட வர்க்கமாக, எகாதிபத்திய தரகு அரசாகவும் பார்க்கின்றோம். எமது விமர்சனம் இதனடிப்படையிலானது.


இணைப்பு : 2 (இட்டாலி வடை பதிவாளரும் பின்னோட்டமும்.)

 

1.'சரி ஒரு தமிழ்ப்பெண் ..சரி நீங்கள் சொல்வதைப் போல புலிப்பெண் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் எம்பியாய் வந்து விட்டால் என்ன? உலகம் உடைந்து சிதறி விடப்போகின்றதா? இல்லை உங்கள் உழைப்பாளர்கள் தான் உபத்திரவக்குழியுள் புதைந்து இல்லாது போகப்போகின்றனரா?"

 

தமிழினத்தை ஏமாற்றி பிழைப்பது தகுமோ! எத்தனை ஆயிரம் உயிர்களை, இப்படிச் சொல்லி தின்;றவர்கள் தான் நீங்கள். இன்னுமா!  

 

2.'மற்றபடி உங்களுடைய இந்த பதிவினை நான் ஒப்புக்கொள்ளப் போவதில்லை.. ஏனெனில் இது போன்ற பல "பாசிச எதிர்ப்புகளை" சந்தித்து தமிழ் மக்களின் நலனுக்காய் "இணைய புரட்சி" செய்து கொண்டிருப்பவர்கள் அவர்கள்!!!! இப்படிச் சொல்லும் இவர் தூக்கிப் போடும் துரும்பெல்லாம் இந்த துருப்பிடித்த எழுத்துத்தான்."

 

அதுக்கென்ன! இணையத்தில் புடுங்கும் உங்களுக்கு ஏன் கோபம் வருகுது. தமிழ் மக்களை கொன்று குவிக்க உதவிய நீங்கள், கொன்ற நீங்கள், அதை ஆதரித்த நீங்கள், மக்களுக்கு காட்டியது மக்களின் இரத்தத்தைத்தானே ஒழிய, மக்களுக்கு விடிவையல்ல. இதைத்தவிர வேறு எதையும், தமிழ் மக்களுக்கு வழி காட்டியது கிடையாது.

 

3.'முட்டாள்தனமாகப் பேசுவதில் நீங்கள் பெருமைப்படலாம். ஆனால் எங்களுக்கு வருத்தமாயிருக்கின்றது. இனத்திற்கு எதிரானவனாய் ஒளிவுமறைவின்றி காட்டிக் கொடுப்பவனை விட மக்கள் மக்கள் என்று தந்திரம் செய்யும் உங்களைப் போன்றவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்."

 

எது, எப்படி முட்டாள்தனம்? புலியை ஆதரிப்பது தான் அறிவுத்தனமோ! பகுத்தறிவற்ற தர்க்கம், பொய் ஏமாற்று மோசடி மூலம், ஒளிவுமறைவாக மக்களை ஏமாற்றுவது தான் அரசியலோ!? நாங்கள் வெளிப்படையாக பேசுகின்றோம். அதை நேர்மையாக முகம் கொடுங்கள். அதைவிட்டு விட்டு, சும்மா இணையத்தில் அலட்டாமல், மக்களுக்கு நேர்மையாக இருக்க முனையுங்கள். 30 வருடமாக புலித்தேசியத்தின் பெயரில், மக்களின் தேசியத்தை மறுத்து மக்களை கொன்று குவித்தது போதும்.

 

பி.இரயாகரன்
04.06.2009