01272021பு
Last updateதி, 25 ஜன 2021 1pm

ஒடுக்கப்பட்ட வர்க்கங்களின், சமூகங்களின் முன்னோடிகளுக்கும் ஒரு பகிரங்க வேண்டுகோள்

அரசும் புலியும் எம்மைச் சுற்றி கட்டமைத்த பாசிச அரசியல் சூழலின், நாம் என்றும் வெறும்  பார்வையாளராகவோ, கருத்தற்றவர்களாகவோ இருந்ததில்லை. நாம் எம் சூழலின் எல்லைக்குள் போராடியிருக்கின்றோம், சிந்தித்து இருக்கின்றோம், செயல்பட முனைந்திருக்கின்றோம்.

 

இந்தவகையில் தான், மற்றவர்களில் இருந்தும் நாம் இன்று வேறுபடுகின்றோம். அரசு – புலி இரண்டையும் எதிர்த்து கடந்தகாலத்தில் எம் உதிரியான அரசியல் நடவடிக்கை, இன்று எமது தனித்துவமான ஒழுங்குபடுத்தபட்ட அரசியல் செயல்பாட்டைக் கோருகின்றது. நாம் செய்ய வேண்டியது என்ன?, எதைச் செய்யமுடியும்? என்ற பல கேள்விகள் எம்முன் உள்ளது. நாம் எல்லோரும் ஒன்றாக இதை விவாதிக்க வேண்டியுள்ளது.

 

இன்று எம் சமூகம் எதிர்கொள்ளும் பல முகம் கொண்ட மனித அவலமோ எல்லையற்றது. இதை புலித் 'தேசியமும்", அரச 'ஜனநாயகமும்" தத்தம் சொந்த பாசிச அரசியல் வழிகளில் உருவாக்கிய ஒரு பயங்கரவாதத்தின் பொது விளைவாகும். இது சுரண்டும் வர்க்கத்தை காப்பாற்ற, பேரினவாதம் உருவாக்கிய இனவொடுக்குமுறையே இதன் அரசியல் அடிப்படையாக உள்ளது. சமூகங்கள் வர்க்கங்களாக, சமூக ஒடுக்குமுறைகள் கொண்ட சமூகப் பிரிவுகளாக, இந்த சமூக அமைப்பு பிளந்து போடப்பட்டள்ளது. இதை மூடிமறைக்க உருவான இன ஒடுக்குமுறையே, இன்று முதன்மை முரண்பாடாக உள்ளது.

 

இது உருவாக்கிய யுத்தமும், மனித அவலமும், கண்ணை மறைக்கும் 'மனிதாபிமான" காவியாக இன்றுள்ளது. இதற்குள் அரசியல் பிழைப்புவாதமும், சந்தர்ப்பவாதமும் கொடிகட்டிப் பறக்கின்றது. மனித அவலத்தை முன்னிறுத்தும் 'மனிதாபிமான" அரசியல், அரசு மற்றும் புலி பின்னணியில் சேடமிழுக்கின்றது. பாசிசம் கட்டமைக்கும் 'மனிதாபிமான" நெம்புகோலைக் கொண்டு, சமூகத்தை தொடர்ந்தும் ஒடுக்கிவாழ முனைகின்றனர்.

 

இப்படி இன்று புலிகளோ தம் இறுதிப் பயணத்தில் மக்களை பணயம் வைத்து, எதிரியிடம் அவர்களை கொல்ல கொடுக்கின்றது. அந்த மனிதஅவலத்தைக் காட்டிக் கடை விரித்து, தம் சொந்த பாசிச அரசியலைச் செய்கின்றனர்.

 

மறுபக்கத்தில் அரசு இனவழிப்பை புலிப்பாசிசம் மேலானதாக காட்டி, தமிழ் மக்களை கொன்று குவிக்கின்றது. இதன் மூலம் அவர்களை அகதியாக்கி, சிறைவைத்து களையெடுப்பை நடத்துகின்றது. இப்படி இதற்குள் உருவான மனிதஅவலத்தைக் காட்டி, தம் பாசிச அரசியலைச் செய்கின்றனர்.

 

இப்படி இதற்கு ஏதோ ஒருவகையில் உதவுவதே, இன்று சந்தர்ப்பவாத அரசியலாகின்றது.  இப்படி இருதரப்பும் தமது மக்கள்விரோத பாசிச செயல் மூலம் உருவாகும் மனித அவலத்தை, எதிர்தரப்புக்கு எதிராக காட்டியும், பொதுவான இந்த மனிதஅவலத்தை தத்தமக்கு சார்பான அவலமாக காட்டியும், தம் அரசியலை செய்து வருகின்றனர். இதன் மூலம் சமூகத்தை இதற்கு வெளியில் சிந்திக்க முடியாத வண்ணம், அவர்களைக் கட்டிப்போடுகின்றனர்.

 

தம்மை அது அல்லது இதுவல்ல என்று கூறும் எல்லா நடுநிலைவாதிகளும், இதில் ஒன்றின் பின் அல்லது இரண்டின் பின்னும் நிற்கின்றனர். உதவி, மனிதாபிமானம்… என்று இவர்கள் எந்த வேஷம் போட்டாலும், வர்க்கம் மற்றும் சமூகஒடுக்கமுறையிலான இந்தச் சமூகத்தை மாற்ற அவர்கள் போராடாத வரை, இவர்கள் மக்களின் எதிரியுடன் தான் தம்மை மூடிமறைத்துக் கொண்டு நிற்கின்றனர்.

 

எமது பகிரங்க வேண்டுகோளும், அதன் அரசியல் அடிப்படையும்.

 

யார் எல்லாம் வர்க்க மற்றும் சமூக ஒடுக்கமுறையினை அரசியல் ரீதியாக உணருகின்றனரோ, அவர்கள் அனைவரும் தனித்துவமாக எம் சொந்த வர்க்க அரசியல் வழியில் அணிதிரளுவது இன்று அவசியம். நாம் தனித்தனியாக செயல்பட்டதற்கு மாறாக, நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து எம்மை நாம் மீள் ஒழுங்குபடுத்தி போராட வேண்டியுள்ளது.

 

இதற்கான ஒரு உட்சுற்று விவாதமும், அதைத் தொடர்ந்து நாம் ஒரு அரசியல் சந்திப்பை நடத்த வேண்டியதும் அவசியமாகியுள்ளது. இதை இன்று பலர் கோருகின்றனர். நாமும் அதை உணருகின்றோம். அதற்கான முன்முயற்சியுடன் கூடியதும், புதியஜனநாயக புரட்சியில் இணையக் கூடிய அனைத்து சக்திகளுக்குமான, பொது அழைப்பு இது.

 

இந்த நிலையில், இதை நாம் பகிரங்கமான வேண்டுகோளாக விடுகின்றோம். சமூகம் மீது அக்கறையுள்ள அனைவருடனும், இதற்காக நாம் ஒன்றிணைந்து ஒரு உட்சுற்று விவாதத்தை நடத்த முனைகின்றோம். அதை அடுத்து, இதற்காக ஒரு சந்திப்பை நாம் நடத்த முனைகின்றோம். நாளை நாம் எப்படி எம் சமூகத்திற்குள் செயல்படமுடியும் என்பதையும், நாம் எப்படி சேர்ந்து செயல்படமுடியும் என்பதையும் இது வழிகாட்டும்.

 

வர்க்க மற்றும் சமூக ஒடுக்குமுறையினை எதிர்த்து உண்மையும் நேர்மையுமான எம் சொந்த அரசியல் வாழ்வுடன் இணைந்தவொன்றை, நாம் உங்கள் ஒவ்வொருவரிடமும் கோருகின்றோம். எம் சுயவிமர்சனத்தை அரசியலின் உயர்பண்பாக கொண்ட அனைவரும், சேர்ந்தும் தனித்தும் செயல்பட்ட வேண்டியது அவசியமாகின்றது. இதற்காக இன்று செயல்படுகின்ற, சிந்திக்கின்ற ஒவ்வொருவரையும், நாம் தோழமையுடன் அணுகுகின்றோம். அதுபோல் நீங்களும் எம்மை அணுகுவதன் மூலமும், வரலாற்றில் இன்று செய்யக் கூடிய பணியை ஒழுங்குபடுத்தி, அதை நாம் சேர்ந்து செய்யமுடியும்.

 

உங்கள் அபிப்பிராயங்கள், கருத்துகளுடன் தொடர்பு கொள்வதன் மூலம், உட்சுற்று விவாதத்தில் (இலங்கையில் உள்ளவர்கள் உட்பட) நீங்கள் பங்கு கொள்ளவும், அதைத் தொடர்ந்து விரைவில் நாம் நேரில் சந்தித்து விவாதிக்கவும் முடியும். அதற்கான ஒரு பகிரங்க அழைப்பு இது.

 

பி.இரயாகரன்
09.05.2009