Language Selection

சமர் - 10 : 03/04 -1994
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மீண்டும் கரிகாலன் புதிய தலைப்பான கட்சி-அரசு சிவில் சமூக நிறுவனங்களுக்கு இடையேயான உறவு ஊடாக மார்க்சிய விரோதக் கட்டுரையை முன்வைத்துள்ளார். நாம் இவரின் கருத்தை விமர்சிக்கும் அதேநேரம் சரிநிகர் 13-14 ராஜன் என்பவர் எழுதிய இதே கருத்தை ஒட்டிய கட்டுரைக்கும் இது விமர்சனமாகும்.

 

 

இவரின் கட்டுரையை விமர்சிக்க முன் இக் கட்டுரையை ஒட்டி மனிதம் ஆசிரியர் குழு வெளியிட்ட கருத்தைப் பார்ப்போம். சமர் பத்திரிகை மனிதத்தையும் கரிகாலனையும் திரிபுவாதிகள் என்று முத்திரை குத்தியமைக்கு கரிகாலன் எவ்வித பதிலையும் கொடுக்கவில்லை என்பது வாசகர் அறிந்ததே என்கின்றார். மனிதம் தாம் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று வாதிடமுனையும் அதே நேரம் கரிகாலன் இக்கட்டுரையூடாக மனிதத்தின் முகத்தில் அறைந்துள்ளார் அதைப் பார்ப்போம்.

 

சிலர் அராஜகவாதம் என்ற முத்திரை குத்தலாம் என்றதற்கு ஊடாக தனது இக்கருத்தை அராஜகவாதம் என்பதை ஏற்றபடி ஆனால் முத்திரை குத்தவேண்டாம் என்கின்றார். அராஜகம் திரிபு போன்ற கருத்தாக்கங்களுக்கு மார்க்சிய அர்த்தமுண்டு, அதை ஏற்கிறார் கரிகாலன். ஆனால் மனிதம் அல்ல. ஆனால் இதை முத்திரை குத்தல் என்கின்றார். எப்படி இதை மனிதம் சொல்ல முடிகிறது. எல்லாம் திசை திருப்பல் ஊடாக மார்க்சியத்தை குழிதோண்டி புதைக்க முனைகின்றனர் அவ்வளவே.

 

இக்கட்டுரையில் சமருக்கு பதில் எழுதாமைக்குரிய காரணம் மார்க்ஸ், லெனின் போன்றோரின் மேற்கோள்களை மட்டும் நம்பி கட்டுரையை எழுதும் சமர் போன்ற ஒரு பத்திரிகை திரிபுவாதி என்று குறிப்பிட்டதை நான் அசட்டை செய்து பதில் எழுதவில்லை என கரிகாலன் குறிப்பிட்டு இதிலும் மனிதம் குழுவிற்கு முகத்தில் அறைந்துள்ளார். எப்படியெனின் சமர் 5-6 இல் கரிகாலனின் கட்டுரை மீதான விமர்சனத்தில் மார்க்சிய மூலவர்களின் எந்த மேற்கோளையும் சமர் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தியதாக ஒரு பொய்யைச் சொல்லி தனது நிலையை(திரிபை) பாதுகாக்க மனிதத்தையே முட்டாள் ஆக்கியுள்ளார்.

 

கரிகாலன் விமர்சிப்பது, மார்க்சிய மூலவர்களின் கோட்பாட்டையே. அப்படி இருக்க அவர்களின் மேற்கோள்கள், மற்றும் கரிகாலன் கருத்துகள் மீதான அவர்களின் கருத்துக்களை வைப்பது தவிர்க்க முடியாதது. இக்கட்டுரையில் மூலவர்களின் கருத்துக்கள் கட்டுரை மீது வைக்கப்படும்.

 

அடுத்து மூலவர்களை நம்பிய சமர் பத்திரிகைக்கு பதிலளிக்க அசட்டை செய்யவில்லை என்கின்றார். ஒரு விமர்சகர் தனது கருத்தை வெற்றிபெற வைக்க அக்கருத்தின் மீதான அனைத்துக் கருத்திற்கும் பதில் அளிக்கவேண்டும். இல்லாதபோது பதில் அளிக்க முடியாதபோது இயல்பாக இரு கருத்துள்ள அமைப்புகள் உருவாகின் கருத்துக்குப் பதில் அளிக்க முடியாத அசட்டையானவர் துப்பாக்கி முனையிலேயே அடக்குமுறையைக் கையாள்வர். இதை நாம் வரலாற்றில் நிறையவே கண்டுள்ளோம்.

 

மனிதம் ஆசியர் குழு மேலும் லெனினியக் கட்சிக்கோட்பாடுகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி ஏற்கெனவே இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சிலரும் பின்பு சான்ஸ் பெத்லகீமும் அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து சுமந்தா, பானார்ஜீயும், வேறுசிலரும் இன்றைய தேக்கநிலையில் இக்கருத்துக்களை விவாதத்திற்க்கு உட்படுத்த வேண்டியதன் தேவை குறித்து --எனத் தொடர்கின்றனர். மார்க்சியக் கட்சிக் கோட்பாட்டை திருத்த முனையும் இவர்கள் அனைவரும் (மனிதம் தவிர) எல்லோரும் அறிந்தது போல் திரிபுவாதிகளே. இத்தாலிய கம்யூனிஸ்ட்கட்சி ஒரு சீரழிந்த முதலாளித்துவக் கட்சி

 

மார்க்சியத்திற்;கு தேக்கமாம் யார் கூறுவது? திரிபுவாதிகளே. மார்க்சியம் தேக்கத்தை கொண்டது அல்ல. மாறாக மனிதம், உயிர்ப்பு தவிர மார்க்சிஸ்டுக்கள் உலகம் பூராகவும் புரட்சியில் வீறு நடைபோடுகின்றானர். சோவியத், சீனாவில் முதலாளித்துவ மீட்சி நடந்த காலத்தில் மாவோ தலைமையிலான சீன கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் மீண்டும் அவர்களின் தவறைச் சுட்டிக்காட்டினர்.

 

 

அதை நிராகரித்த சோவியத்கட்சி முதலாளித்துவத்தை மீட்டனர். இதுபோல் தனது கட்சிக்கு மாவோ பல தடவை எச்சரித்தார். ஆனால் அதை நிராகரித்த திரிபுவாதிகள் முதலாளித்துவத்தை மீட்டனர். மார்க்சிய மூலவர்கள் முன்கூட்டியும் சமகாலத்திலும் எச்சரித்ததற்கும் மாறாக திரிபுவாதிகள் விடாப்பிடியாக முதலாளித்துவத்தை மீட்டனர். மார்க்சிய மூலவர்களின் கோட்பாடுகள் சரியாக இருக்கும் இன்றைய நிலையில் கட்சி அமைப்பு விதியே காரணம் எனத் திசைதிருப்பி மூலவர்கள் எச்சரித்த கோட்பாட்டு விடயங்களை புதைகுழிக்கு அனுப்பிய டெங், குருசேவ் கும்பல் செய்ததை இவர்களும் செய்ய நினைக்கின்றனர். கரிகாலன் குறிப்பிடுகின்றார் மூலவர்களின் மேற்கோள்களை நம்பி சமருக்கு தான் பதில் அளிக்கவில்லை என்கின்றார். அதேநேரம் தான் மார்க்ஸியத்தை வளர்த்து எடுக்கின்றார் என்கிறார்.

 

மார்க்சியம் என்பது என்ன? மார்க்சியத்தை சமூக விஞ்ஞானமாக உருவாக்கியவர் இவ் மார்க்சிய மூலவர்களே. இன்று மார்க்சியம் என நாம் ஆராயின் மார்க்ஸ், லெனின், மாவோ சிந்தனையே. இவர்களின் காலத்தில் இவர்களின் கருத்துக்கு எதிராக இருந்த அனைத்துத் தத்துவமும் மார்க்சியத்தை உச்சரித்தபடி திரிபாக இருந்த முதலாளித்துவக் கோட்பாடே. இன்று மார்க்சியம் என்பது இவர்களின் சிந்தனையே. இவர்களின் காலத்தில் இவர்களின் கருத்துக்கு எதிராக இருந்த அனைத்துத் தத்துவமும் மார்க்சியத்தை உச்சரித்தபடி திரிபாக இருந்த முதலாளித்துவ கோட்பாடே இன்று மார்க்சியம் என்பது இவர்களின் சிந்தனையே. இவர்களின் சிந்தனையை அடிப்படைக் கோட்பாட்டை நிராகரித்த எந்தக்கருத்தும் மார்க்சியம் அல்ல. மாறாக முதலாளித்துவக் கோட்பாடே.

 

இவர்களின் கோட்பாட்டை நிராகரித்து எழும் அனைத்துக் கருத்தும் முன்பே இவர்களால் பதிலளிக்கப்பட்டு புதைகுழிக்கு அனுப்பப்பட்டவையே. அவை மீண்டும் உடல் அற்ற ஆவியாக எழும் போது மூலவர்களைக் கண்டு அஞ்சி நடுங்கி தப்பியோடியபடி மூலவர்களை முன் கொண்டுவரவேண்டாம் எனக்கூறி தப்பிக்க முயல்கின்றனர். நாங்கள் ஆவிகள் அல்ல உடல் உள்ள மனிதர்களே எனக்காட்டி மனிதர்களை ஏமாற்ற முயல்கின்றனர். ஆனால் மனிதர்கள் ஏமாறமாட்டார்கள். இன்று மூலவர்களின் சிலைகளைக் கண்டே ஏகாதிபத்தியமும், முதலாளித்துவமும் நடுங்கும் நிலையில் அவர்களின் பெயரைக் கேட்டாலே திரிபுவாதிகள் அலறுகின்றனர். நாம் மூலவர்களுக்கு பதில் அளிக்க மாட்டோம் என ஓலம் இடுகின்றனர். பேய்கள் என்ன செய்யும் பூசாரியைக் கண்டால் அலறும் அவ்வளவே.

 

அதற்கு முன்பாக நீங்கள் (இங்கு மாறனைக் குறிப்பிடுகின்றார்) எனது கட்டுரைக்கு பதில் எழுதிய முறைக்கு நன்றி கூறுகின்றேன். சமர் பத்திரிகையிலிருந்து மாறுபட்ட முறையில் நீங்கள் கருத்தை தெரிவித்ததனாலேயே நான் உங்களுக்கு பதில் எழுதுகிறேன். ஒருவர் தனது சொந்த ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கு மார்க்சியம், கட்சி போன்றவற்றை உபயோகிக்கக் கூடாது என கரிகாலன் எழுதுகின்றார். மாறனின் கட்டுரையும், உங்கள் கட்டுரையையும் திரிபு என்றே சொல்லுகின்றார். மனிதம் 23 இலும், சமர் 9 திலும் எழுதிய மாறன் தெளிவாக உங்கள் கட்டுரையை திரிபு என்றே கூறுகின்றார். நாம் மிகத் தெளிவாக கூறுவதே மாறனின் அணுகுமுறையிலிருந்து வேறுபட்டதாகத் தெரிகின்றது. ஆனால் விடயம் ஒன்றே. ஒருவன் தனது சொந்த ஆளுமைக்கு மார்க்சியம் கட்சியென்பனவற்றை பயன்படுத்தியது எனின் எப்படி? ஆளுமையென்பது கருத்துப்பலத்துடன் கூடிய திறமையே. இது எப்போராட்டத்திலும் தவிர்க்கமுடியாதது. அதிலிருந்தே தலைவர்கள் உருவாகின்றார்கள். இதை சுயநலத்திற்க்கு பயன்படுத்தின் தவறு. அப்படி சமர் செய்யவில்லை அப்படி செய்யின் கரிகாலன் அதை ஆதாரத்துடன் நிருபிக்கவும். இல்லாதவரை வெறும் அவதூறே.

 

அவர்களைப் பொறுத்த மட்டில் மேற்கோள்கள், ஆசான்கள், பத்திரிகை இவை தான் முக்கியமே ஒழிய விடயங்கள் அல்ல. நாம் பேசும், எழுதும், படிக்கும் கருத்துக்களை அவர்கள் அலசி ஆராய்ந்து பார்ப்பதில்லை. பாவம் அவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்கின்றார் கரிகாலன். எம்மைப் பொறுத்த வரை மேற்கோள்கள் அதை எழுதிய ஆசான்கள் அது சார்ந்த பத்திரிகை முக்கியமானதே. இது முக்கியம் இல்லை என்போர் முதலாளித்துவ வாதிகளே. உதாரணமாகப் பார்ப்;பின் மார்க்சிய மூலவர்களின் சிலை முதல் அவர்களின் கருத்து அனைத்தையும் தடை செய்து அழிப்பது யார்? இன்று உலகை ஆளும் அனைத்து ஆட்சியாளர்களும் இதைத் தொடரும்போது அவர்களுடன் கரிகாலன் என்ன விதிவிலக்கு. கரிகாலனும் அதையே சொல்கிறார்; செய்ய முனைகிறார்.

 

ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு உட்பட்டு அடிபடும் எமது கருத்தைப் பார்த்து பரிதாபப்படுகின்றார் அவ்வளவே. நாம் அவரின் கருத்தை ஆராய்ந்து பார்க்கவில்லையாம். உங்களைவிட நாம் உங்களின் ஒவ்வொருவரியின் மீதும் கருத்தை வைக்கின்றோம். இது ஆராயாமல் எப்படி முடியும். எம்மை அடக்குமுறையாளர்கள் மூலவர்களின் கோட்பாட்டை உயர்த்தும் போது அடக்குவர். அதற்கு நீங்கள் பாவம் எனச்சொல்லி பரிதாபப்பட்டு அவர்களுக்கு துணைபோவதை விட எம்மிடம் எம்முடன் இணைந்து போராட மூலவர்களின் கருத்துக்களை பற்றி நிற்க அடக்கப்பட்ட நிலையில் நின்றும். கோருகின்றோம். வருவீர்களா? மார்க்சியம் தேக்கத்திற்கு உள்ளாகியுள்ளது எனக் கூற முனையும் அனைவரும் திரிபுவாதிகளே. மார்க்சியம் எக்காலத்திலும் தேக்கத்துக்கு உள்ளாகவில்லை.

 

 மாறாக அதுவே உலகில் புரட்சிக்கு தலைமை தாங்குகின்றது. மார்க்சியம் தேக்கத்திற்கு உள்ளாகிவிட்டதென சோவியத், சீனாவை இவர்கள் அடிக்கடி உதாரணம் காட்டி மார்க்சியத்தை திரித்துப் புரட்டி பின்பக்க கதவுகளை தட்டுகின்றனர். சோவியத், சீனாவில், நடைபெற்றது மார்க்சியத்தின் தேக்கத்தினால் அல்ல, மாறாக மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையான கட்சிக்கோட்பாட்டைக் கைவிட்டு முதலாளித்துவத்தை மீட்டதனால். சோவியத், சீனாவில் அடிப்படை முரண்பாடான வர்க்கப்போராட்டம் கைவிடப்பட்டது. இதை மார்க்சிய ஆசான்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்தும் அதைப் புதைகுழிக்குள் அனுப்பினர். கரிகாலன் கோருவது போல் ஆன்மீகப்பண்பை, குருசோவ், டெங்கும்பல் வர்க்கப்போராட்டத்தை நிராகரித்து வர்க்கமற்ற சமுதாயத்தில் இப்படி கூறியபடி எல்லோருக்கும் வழங்கினார். அதன் ஊடாக பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிராகரித்து அனைத்து மக்கள் அரசை அமைத்தனர். அது முதலாளித்துவ மீட்சியாக இன்று எல்லோரும் அறியும் வண்ணம் உள்ளது.

 

எந்த ஒரு பிரச்சனையையும் நாம் ஆராயும் போது அவற்றுக்கு மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின் ஆகியோர் சொன்னவை என்ன? என்று பார்வையை தொடங்குவது, அவர்கள் சொன்னவற்றுக்கு ஏற்றவாறு பிரச்சனையை ஏற்கனவே உள்ள சட்டகத்துக்குள் அடக்க முனைவதும் தவறு. இந்த அணுகுமுறையானது பிரச்சனை பற்றிய அறிவை நாம் பெறுவதற்கோ அன்றி பிரச்சனையை தீர்ப்பதற்கோ ஒருபோதும் உதவமாட்டாது என கரிகாலன் தொடர்கிறார்.

 

முதலில் நாம் பிரச்சனைகளை உணர்கிறோம். பிரச்சனைக்கான தீர்வை தீர்ப்பதில் மார்க்சியமே உதவும் என நாம் காண்கிறோம். அதாவது வர்க்கப்போராட்டமே தீர்க்கும். இதிலிருந்தே மார்க்சியத்தை ஆராய்கிறோம். இதுவே ஆய்வுமுறை. இந்த வகையில் மார்க்சியம் மீதான ஆய்வு இச்சமுகத்தை விஞ்ஞான பூர்வமாக ஆராய்வதை கண்டறிகிறோம். அந்த வகையில் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையையே மார்க்சியமாக நாம் கொள்கிறோம். அதற்கு அப்பால் உள்ள தத்துவங்கள் திரிபாக முதலாளித்துவ வழிப்பட்டதாக உள்ளது. மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனை தவிர எக்காலத்திலும் உள்ள எந்த தத்துவமும் அல்லது அவர்களுக்கு எதிராக விவாதித்த எந்த தத்துவமும் மார்க்சியமாக உள்ளதா? இதை கரிகாலன், மனிதம், உயிர்ப்பு, ராஜன் போன்றவர்களிடம் முன்வைக்கும்படி சமர் சவால் விடுகிறது.

 

இன்று நாம் அவர்களின் காலத்திலிருந்து சற்று பின் தங்கியுள்ளோம். நாம் மார்க்சியத்தால் தீர்வைப் பெறமுடியும் என நம்பும் போது மார்க்சியமாக உள்ளதை ஏற்கிறோம். அதை மீண்டும் சரிபார்க்கிறோம். அப்படி பிழை என்னும் போது எது பிழை என விளக்கத்துடன் முன்வைக்கவேண்டும். மார்க்சியம் இன்று சரியாக உள்ளதுடன் அதுவே புரட்சியின் விதியாக உள்ளது. மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ என்ன சொன்னார்கள் என பொருத்திப் பார்க்கவில்லை. மாறாக அவர்கள் கூறியவை இன்று சரியாக உள்ளதைக் காண்கின்றோம்.

 

அந்த வகையில் அவற்றை உயர்த்தி பிடிக்கிறோம். ஒருவன் அறிவைப் பெறவேண்டின் பிரச்சனையின் அடிப்படையை புரிந்து கொள்ள வேண்டும். அங்கிருந்து இச்சமுகத்தை ஆராய வேண்டும். அதற்கு ஊடாகவே புரட்சிக்கான தத்துவத்தை தேர்ந்தெடுக்கவேண்டும். மார்க்சியத்தை புரட்சிக்கான தத்துவமாக ஏற்றுக்கொள்ள முனையும் ஒவ்வொருவரும் மார்க்சியமாக மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையினை நிராகரிக்க முடியாது. மார்க்சியமான மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையை நிராகரிக்கும் யாவரும் மார்க்சியத்தை உச்சரிப்பின் அது திரிபுவாதமே.

 

சோவியத் புரட்சியின் தோல்விக்கு வெறுமனே லெனினிய கட்சிக் கோட்பாடுகள் மட்டும் காரணம் என்று நான் கருதவில்லை. உள்நாட்டு யுத்தம் பின்தங்கிய பொருளாதாரம், ஆரம்பகால கட்சி ஊழியர்களை கட்சி இழந்தமை, அதிகாரத்தில் இருந்தவர்கள், புரட்சியின் பின் கட்சியில் ஒட்டிக்கொண்டமை. ஏகாதிபத்தியங்களின் யுத்தம் நெருக்கடி இப்படிப் பல எனத் தொடர்கின்றார் கரிகாலன். சோவியத்தின் தோல்விக்கு இவைகள் காரணமல்ல. மாறாக வர்க்கப்போராட்டத்தை கைவிட்டமையே காரணம்.

 

இது காரணமாக இருக்க வேறு பல காரணத்தை காட்டி அதன் ஊடாக கட்சிக் கோட்பாட்டை புதை குழிக்கு அனுப்ப முனைகின்றார் கரிகாலன். சோவியத்தில் குருசோவ், பிரஸ்னோவ் வர்க்கப்போராட்டத்தை கைவிட்டபோது மாவோவும் சீனக்கம்யூனிஸ்ட் கட்சியும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். அவ் விமர்சனத்தை ஏற்றிருப்பின் சோவியத் தோல்வி பெற்றிருக்காது. வர்க்கப்போராட்டம் சோவியத் சமூகத்தில் 4-5 தலைமுறைக்கு நீடிக்கும் என மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ எல்லோரும் மீண்டும் மீண்டும் கூறினர். மாவோ தனது கட்சிக்கு சோவியத் நிலைமையுடன் விளக்கி எச்சரித்ததும் சீனத்திரிபுவாதிகள் வர்க்கப்போராட்டத்தை கைவிட்டனர். சோவியத், சீனாவின் தோல்வி மார்க்சிய, லெனினிய, மாவோவின் கட்சிக்கோட்பாட்டை நிராகரித்தமையால் எழுந்ததே. அதுவே இவ்விரு நாடுகளிலும் அவர்களின் சிலைமுதல் கட்சிக்கருத்துக்களை புதைகுழிக்கு அனுப்பி வருகின்றனர். கட்சிக்கோட்பாட்டை நிராகரித்த இக்கட்சிகள் அவ்வவ் நாடுகளில் முதலாளித்துவத்தை மீட்டனர்.

 

அன்று கட்சிக்கோட்பாட்டை நிராகரித்த போது நீண்ட பல போராட்டங்களை மார்க்சிஸ்டுக்கள் நடத்தினர், நடத்திவருகின்றனர். கரிகாலன் அவர் சார்ந்த பத்திரிகைகள் வரலாற்றை சேற்றுக்குள் மூடமுனையும் வேலையில் தொடர்கின்றனர்.

 

உள்நாட்டு யுத்தம் என்பது ஒரு புரட்சியின் தவிர்க்க முடியாத அம்சம். ஒரு உள்நாட்டு யுத்தம் இன்றி ஒரு புரட்சி நடைபெறவே முடியாது. பின்தங்கிய பொருளாதாரம் என்பதன் ஊடாக வாதிட முற்படுவர் வேறு வர்க்கப் போராட்டமின்றி பின்தங்கிய பொருளாதாரம் எனக் கூறின் டெங்கின் திரிபை பாதுகாப்பவர்களே. டெங் கும்பல் சீனாவில் திரிபை ஏற்படுத்த உயர்த்தியது நவீன பொருளாதாரமே. ஒரு சமுதாயத்தில் பொருளாதாரம் வளர்க்கப்படவேண்டும். ஆனால் அது வர்க்கப்போராட்டத்துடன் பின்னிப்பிணைந்தது. சோவியத்தில் 1955க்கு முந்திய காலத்தில் பொருளாதாரம் மற்றைய நாடுகளுடன் போட்டிபோடும் வகையில் முன்னேறியதாகவும், தரம்மிக்கதாகவும் இருந்தது. ஆரம்பகால ஊழியர்களை இழந்ததும் அதிகாரத்தில் இருந்தவர்களும் காரணம் என்பதன் ஊடாக லெனின், ஸ்டாலின் மீது தாக்குதலை தொடுத்துள்ளார். லெனின், ஸ்டாலின் மரணிக்கவேண்டும் என விரும்பியவர் ஏகாதிபத்தியவாதிகள், திரிபுவாதிகள், கரிகாலன் போன்றோரே. அதுதான் அதிகாரத்தில் இருந்தோர் என்கின்றார். அதிலிருந்தே ஆரம்பகால ஊழியர்களை இழந்து இருந்ததாம். ஆரம்பகால ஊழியர்கள் என கரிகாலன் கருதுவது ரொஸ்க்கி, புகாரின்---- போன்ற திரிபுவாதிகளேயே. இவர்கள் கட்சியில் இருந்த காலத்தில் புரட்சிக்கு முன்பே இருந்தே தீர்க்கமான வர்க்கப்போராட்டத்தை இவர்களுக்கு ஏதிராக கட்சி நடத்தியது. இது புரட்சியின் பின்பும் தொடர்ந்தது. திரிபுகளில் ஏற்பட்ட பண்புமாற்றம் பகை முரண்பாடாக மாறியது. கட்சி ஆட்சியை பிடித்த பின்பும் வர்க்கப்போராட்டமே பிரதானமானது. எதிரி எங்கே என்கின்ற போது, கட்சிக்கு உள்ளேயே என்கின்றனர் மூலவர்கள் அதையும் பார்ப்போம்.

 

சோவியத்துக்களின் உறுப்பினர்களை நாடாளுமன்றவாதியாக அல்லது அதிகார வர்க்கத்திற்காக மாற்றும் குட்டிமுதலாளித்துவப் போக்கு இருக்கிறது. இந்தப் போக்கை முறியடிக்க சோவியத்துக்களின் எல்லா உறுப்பினர்களையும் நிர்வாக நடைமுறைவேலைகளில் இழுக்கவேண்டும். (சோவியத் அரசாங்கத்தின் உடனடிப்பணிகள்-லெனின்)

 

முதலாளித்துவத்திலிருந்து கம்யூனிசத்துக்கு மாறிச்செல்வது ஒரு முழுமையான வரலாற்று சகாப்தத்தையே குறிக்கிறது. இந்த சகாப்தம் முடிவுறும் வரை சுரண்டலாளர்கள் தவிர்க்க முடியாமல் மீட்சிக்கான நம்பிக்கையை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கை மீட்சிக்கான முயற்சிகளாக மாற்றப்படுகின்றன. (பாட்டாளி வர்க்கப் புரட்சியும் ஓடுகாலிக் காவுஸ்க்கியும்--லெனின்)

 

வர்க்கப்போராட்டத்தையும் வர்க்கங்களையும் மறந்துவிட்டால் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை மறந்துவிட்டால், பிறகு நீண்ட காலம் பிடிக்காது. சில ஆண்டுகள் மட்டுமே அல்லது ஒரு பத்து அல்லது அதிகம் போனால் சில பத்து ஆண்டுகளுக்கு முன்பே எதிர்ப்புரட்சி மீட்பு தேசிய அளவில் நடந்து விடும். மார்க்சிய, லெனினிய கட்சி சந்தேகத்திற்கு இடமின்றி ஒரு திரிபுவாதக் கட்சியாக அல்லது பாசிசக் கட்சியாக மாறிவிடும். சீனத்தின் மொத்த நிறமும் மாறிவிடும். தோழர்களே இதுபற்றி சிந்தியுங்கள்.( ஷ நூல் பக்கம் 164-1963 மாவோ) தற்போதைய இயக்கத்தின் பிரதான தாக்குதல் இலக்கு முதலாளித்துவப் பாதையை மேற்கொள்ளும் அதிகாரத்தில் உள்ள கட்சிநபர்களாகும்.(ஷ-நூல் -மாவோ)

 

நீங்கள் சோசலிசப் புரட்சியை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இருப்பினும் முதலாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறியவில்லை. அவர்கள் பொதுவுடமைக் கட்சிக்குள்ளேயே இருக்கிறார்கள். அதிகாரத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவப் பாதையை மேற்கொள்கின்றார்கள்.(ஷ-நூல் பக்கம் 31--மாவோ)

 

கட்சிக்குள்ளே மார்க்சியத்தை உச்சரித்தபடி முதலாளித்துவத்தை மீட்க கட்சியின் அனைத்து மட்டத்திலும் முதலாளித்துவ மீட்பாளர்களாக இருந்த ரொஸ்க்கி, புகாரின்- போன்றோர்களை கரிகாலன் காப்பாற்றக் குரல் கொடுத்ததுடன் கட்சிக்கோட்பாட்டு விதியை புதைகுழிக்கு அனுப்ப முயல்கின்றார். அதுதான் அதிகாரத்தில் இருந்தவர்கள் புரட்சிக்குப் பின் கட்சியில் ஒட்டிக்கொண்டமை எனக் கூறி தோல்விக்கு காரணம் கற்பிக்கின்றனர். ஒருகட்சி தலைமை தாங்குபவர்கள் அதிகாரம் என்பதன் ஊடாக ஒரு பயங்கரமான அதிகார அடக்குமுறையாளராக காட்ட முனைகின்றார். ஒரு கட்சி என்கின்ற போது அது தனக்கே உரிய அமைப்பு வடிவத்தை கொண்டிருக்கும். இது தொடர்பாக கீழே பார்ப்போம். புரட்சிக்குப் பின் ஒட்டிக் கொண்டனர் என்றதன் ஊடாக புரட்சியின் பின் அவர்கள் கட்சியை விட்டு நீங்க வேண்டும் என்கின்றார். இதை யார் விரும்புகின்றனர். ஏகாதிபத்தியமும், எதிர்ப்புரட்சிவாதியுமே ஒழிய புரட்சிவாதிகள் அல்ல. புரட்சி முன்னணிகள் விலக வேண்டும் என்பதும், கொன்று ஒழிக்கவேண்டும் என்பதும் ஒன்றே. ஒரு புரட்சியை நடத்த எவ்வளவு சுழிவான வழிகள் ஊடாக வழிநடத்த முன்னணிச் சக்தி முனைகின்றது. அப்படி கிடைக்கும் முதற்படி வெற்றி பலத்த உயிர் சேதங்களின் ஊடாக ஏற்படுகின்றது. ஆனால் ஆட்சியைப் பிடித்தவுடன் முன்னணிச் சக்தியை கலைக்கக் கோரும் கரிகாலன் போன்றோர் டெங், குருசோவ் வாரிசுகளே. அவர்களின் கனவுகள் இவைகள் மட்டுமின்றி ஏகாதிபத்திய சேவையும் கூட.

 

வர்க்கப்போராட்டம் ஆட்சியை பிடிப்பது அல்ல மாறாக புரட்சியை தொடர்வதே. ஆட்சியைப் பிடிப்பது புரட்சியை தொடர்வதை விட இலகுவானது. புரட்சியை தொடர்வது என்பது வர்க்கப்போராட்டத்தை தொடர்ச்சியாக நிகழ்த்துவதே. அதற்கு புரட்சிக்கு முன் தலைமை தாங்கியவர்கள் தலைமை தாங்குவது யதார்த்தமானது. அதை நிராகரிப்பவர்கள் முதலாளித்துவ மீட்சிக்காக கனவு காண்பவர்களே. இவைகளை ஒட்டி மூலவர்கள் என்ன கூறுகின்றனர் எனப் பார்ப்போம்.

 

1) இழந்த சொர்க்கத்தை மீண்டும் பெறுவதற்காகத் தூக்கி எறியப்பட்ட சுரண்டலாளர்கள் ஆயிரத்தொரு வழிகளிலும் முயலுகின்றனர்.


2) குட்டி முதலாளித்துவ குழியில் முதலாளித்துவத்தின் புதியசக்திகள் அல்லது நபர்கள் தொடர்ச்சியாகவும் தன்னிச்சையாகவும் தோன்றிக்கொண்டேயிருக்கின்றனர்.

 

3) குட்டிமுதலாளித்துவத்தின் மாசுபடுத்தும் சூழல் முதலாளித்துவ செல்வாக்கு மற்றும் அது எங்கும் விரவி நிற்பதன் விளைவாக, பாட்டாளிவர்க்கத்தின் அணிவரிசையிலும், அரசாங்க அலுவலர்கள் மத்தியிலும் அரசியல் ரீதியில் சீரழிந்து போனவர்களும் புதிய முதலாளித்துவ நபர்களும் அல்லது சக்திகளும் தோன்றக் கூடும்.


4) சர்வதேசிய முதலாளித்துவ முற்றுகை, ஆயுதம் தாங்கிய தலையீடு என்ற ஏகாதிபத்தியத்தின் அச்சுறுத்தல், அமைதிவழியில் சீரழிவை கொண்டுவருவதற்கான நாசவேலைகள் ஆகியவற்றை சோசலிச நாட்டில் வர்க்கப்போராட்டம் தொடர்வதற்கான புறக்காரணிகளாகும்.

 

என அக்டோபர் புரட்சிக்கு பின் லெனின் பல தடவைகள் சுட்டிகாட்டியுள்ளார்.

சீனாவிலகிப் போகிறதா பக்கம் 54-சி-பொ-க-1961

 

தூக்கியெறியப்பட்ட நிலப்பிரபுத்துவம் மற்றும் தரகுமுதலாளித்துவ வர்க்கங்களின் மிச்ச சொச்சங்கள் இன்னமும் இருக்கின்றன. இன்னமும் முதலாளித்துவ வர்க்கம் இருக்கின்றது. குட்டி முதலாளித்துவ வர்க்கத்தை மறு வார்ப்பு செய்வது இப்போது தான் தொடங்கியிருக்கிறது.

(சீனா விலகிப்போகிறதா பக்கம் 154 மாவோ)

 

சோசலிய சமுதாயத்தை விளக்கிய மார்க்ஸ் சொன்னார் இங்கு நாம் கையாளவேண்டியது அதன் சொந்த அடித்தளத்தின் மீது வளர்ச்சியுற்ற என்கின்ற முறையிலான கம்யூனிச சமுதாயத்தைப் பற்றி அல்ல. ஆனால் மாறாக முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து இப்போது தான் உதிக்கும் சமுதாயத்தைப் பற்றி, அது பொருளாதார ரீதியில், தார்மீக ரீதியில், அறிவுத்துறை ரீதியில் இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் இன்னமும் அது உதிக்கும் கருப்பையான பழைய சமுதாயத்தின் பிறப்பு சின்னங்களால் முத்திரை குத்தப்பட்டிருக்கிறது.

(கோதா வேலைத்திட்டம் பற்றிய விமர்சனம்)

 

வர்க்கப்போராட்டம் என்பது ஆட்சியதிகாரத்தைப் பெற்ற பின்பே தீவிரமடைகிறது. சொர்க்கத்தை இழந்த வர்க்கம் தனது கனவுடன் மிக தீவிரமாக முன்பு இருந்ததை விட போராட முனைகின்றது. அங்கு எப்படி ஒரு கட்சி ஆட்சிக்கு வரமுடிந்ததோ அதேபோன்றே கட்சி இருப்பதுடன் ஆட்சியை கைப்பற்ற முனையும் முதலாளித்துவ மீட்பாளர்களிடமிருந்து ஆட்சியை பாதுகாக்க தீவிரம் மிக்க போராட்டத்தை நடத்துவர். இன்று ஒரு கரிகாலன் ஆட்சியை பிடிக்கமுன் போராடுவது போல் அல்ல. ஆட்சியை பிடித்த பின் பல ஆயிரம் கரிகாலன்கள் பலமுகத்துடன் வெளிவருவர். உலகெங்கும் பெரும்பான்மையாக உள்ள புரட்சிகர கட்சிகள் குழுக்கள் தமது பெரும்பான்மை நிலைப்பாடுகளை போல்ஷிவிக் கட்சியில் பெற்றுக் கொண்டன. போல்ஷிவிக் கட்சியின் முக்கிய சித்தாந்தவாதியான லெனின் தலைமையில் அதன் சித்தாந்தங்கள் உருவாக்கப்பட்டன. அதனாலேயே லெனினியக் கட்சிக்கோட்பாடுகளை விமர்சனத்துக்குள்ளாக வேண்டும் என்கின்றேன் என கரிகாலன் தொடர்கின்றார்.

 

இது மார்க்சியத்தை கொச்சைப்படுத்துகின்ற மார்க்சியத்தின் உலகளாவிய விஞ்ஞான உண்மையை சேறடிக்கின்ற முயற்சியே. உலகில் உள்ள கட்சிகள் போல்ஷிவிக் கட்சியில் இருந்து மட்டுமல்ல மாறாக மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையிலிருந்தே மார்க்சியத்தைப் பெற்றன. லெனின் போல்ஷிவிக் கட்சிக்கான தனது சிந்தாந்தத்தை வளர்த்து எடுத்தது மார்க்ஸ், ஏங்கல்ஸ் தத்துவத்திலிருந்தே. இன்று உள்ள கட்சிகள் மார்க்சிய, லெனினிய, மாவோ சிந்தனையிலிருந்தே தம்மை உருவாக்குகின்றனர். வெறும் லெனின் என காட்ட முனைவது மார்க்சிய, மாவோ சிந்தனையை ஒன்றுக்கு ஒன்று எதிராக காட்டுவதுடன் கொச்சைப்படுத்தலுமே. அடுத்து லெனினிய கட்சிக்கோட்பாட்டை விமர்சித்தவர், லெனின் கட்சிக்கோட்பாட்டு பற்றி என்ன சொன்னார் எனச் சொல்லமுயலாதது அப்பட்டமான முதலாளித்துவ கோசமே. லெனின் சிலைகளை தகர்க்க முனையும்

 

இன்றைய ஏகாதிபத்தியவாதிகளுக்கும், லெனின் கருத்தை வைக்காதீர்கள் எனச்சொன்னபடி லெனின் தத்துவத்தை திரிக்க முனையும் மறுக்க முனையும் இவர்களும் ஒரே வகைப்பட்டோரே. லெனினின் கட்சிக் கோட்பாடுகளை திரித்துப் புரட்டும் போது திரிக்கப்பட்ட கருத்தின் மேலான சரியான கருத்தை முன்வைத்தால் அவர்கள் ஆத்திரத்துடன் வைக்காதீர்கள் என அலறுவது ஏன் தான் என்பது நாம் எல்லோரும் அறிவோம். லெனினிய கட்சி கோட்பாடுகள் நடைமுறைகளுக்கு ஊடுருவியிருக்கும் பொருளாதாரவாததன்மைக்கு எதிராக அவை பலமுறை விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

 

சமுதாய வளர்ச்சிக்கு தேவையான ஆன்மீகப் பண்புகளை வளர்த்துக்கொள்ளுவதற்கு லெனினிய கட்சிகள் போதிய கட்சிகள் கவனம் செலுத்தவில்லை. இந்த விடயத்தில் போல்ஷிவிக் கட்சியிலிருந்து மிகவும் மாறுபட்ட தன்மையைக் கொண்டிருந்ததாலேயே சீன கம்யூனிஸ்ட்கட்சி ஒரு கலாச்சாரப்புரட்சியை நடாத்த முன்வந்தது என கரிகாலன் தொடர்கிறார். சீனக் கலாச்சாரப் புரட்சியை சோவியத் புரட்சிக்கு முற்றாக மாறுபட்டதாக காட்ட முனைகிறார். ஆன்மீகப்பண்பு எனக் கூறியபடி கலாச்சாரப் புரட்சியை ஏற்றபடி பொருளாதார வாதத்துக்கு எதிராக உள்ளார். இதை ஒட்டி சோவியத் சீன புரட்சியை முன்னெடுத்தவர்கள் கூறியதைப் பார்ப்போம்.

 

கலாச்சாரப் புரட்சிபற்றி மாவோ முதலாளித்துவ வர்க்கம் மற்றும் பிற அனைத்துச் சுரண்டல் வர்க்கங்களுக்கெதிராக பாட்டாளிவர்க்கம் நடாத்திய ஒரு மாபெரும் அரசியல் புரட்சியாகும். அது கோமிங்டாம் பிற்போக்குவாதிகளுக்கு எதிராக சீன பொதுவுடமைக்கட்சியும் அதன் தலைமையில் பரந்துபட்ட புரட்சிகர மக்கள் திரளினரும் தொடுத்த நீண்ட நெடிய போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். பாட்டாளி வர்க்கத்துக்கும் முதலாளிவர்க்கத்திற்கும் இடையிலான வர்க்கப் போராட்டத்தின் ஒரு தொடர்ச்சியாகும். (ஷ-நூல்- மாவோ)

 

இப்போதைய சோசலிச கல்வி மற்றும் மகத்தான பாட்டாளி வர்க்கக் கலாச்சார புரட்சியின் பிரதான இலக்கு முதலாளித்துவ பாதையை மேற்கொள்ளும் கட்சி நபர்களைத் தாக்குவதே. (ஷ-நூல் மாவோ)

 

சோசலிசத்தைக் கட்டியமைப்பதில் சோவியத்யூனியன் அப்பொழுது முதலாவது நாடாகும். தொடர்ந்து செல்ல அந்நிய அனுபவம் இல்லை. சோசலிச சமுதாயத்தில் வர்க்கப்போராட்டத்தின் விதிமுறைகள் பற்றி அவரது புரிதலின் மார்க்சிய-லெனினிய இயங்கியலில் ஸ்டாலின் விலகிப்போனார். ஆகையால் விவசாயம் அடிப்படையில் கூட்டுத்துவ மயமான பிறகு சோவியத் யூனியனில் பகைமையான வர்க்கங்கள் இனிமேலும் இல்லாமல் போய்விட்டன. வர்க்கமோதலிலிருந்து விடுதலையடைந்து விட்டது என்று (அவ்வாறு நடப்பதற்கு முன்பே) முதிராத நிலையிலேயே பிரகடனப்படுத்தினார். சோசலிசத்தின் உக்கிரமான தன்மைக்கு ஒரு தலையாய் அழுத்தம் கொடுத்தார். அதன் முரண்பாடுகளை அலட்சியம் செய்தார். முதலாளித்துவத்துக்கெதிரான மற்றும் பரந்துபட்ட மக்களைச் சார்ந்திருக்கத் தவறிவிட்டார். முதலாளித்துவ மீட்சிக்கான வாய்ப்பு சர்வதேசிய ஏகாதிபத்தியத்தின் ஆயுதமேந்திய தாக்குதலோடு மட்டுமே இணைந்திருப்பதாக கருதினார்.

 

இக்கோட்பாடு நடைமுறை இரண்டிலும் பிழையானது. எவ்வாறாயினும் ஸ்டாலின் ஒரு மாபெரும் மார்க்சிய- லெனினியவாதியாக இருந்தார். சோவியத்கட்சி மற்றும் அரசினை அவர் வழிநடத்திய வரை, அவர் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தையும் சோசலிசப் பாதையையும் உறுதியாகப் பற்றி நின்றார். ஒரு மார்க்சிய-லெனினிய பாதையைக் கடைப்பிடித்தார். சோசலிசப் பாதையில் வெற்றிகரமாக சோவியத்யூனியன் முன்னேறுவதை உறுதிசெய்தார்.

(சீனா விலகிப் போகிறதா?- பக்கம் 61--62-மாவோ)

 

முழுக்கட்சியும் பாட்டாளிவர்க்கக் கலாச்சார புரட்சியின் மாபெரும் பதாகையை உயர்த்திப் பிடிக்க வேண்டும். கட்சியையும் சோசலிசத்தையும் எதிர்க்கின்ற கற்றறிந்த பண்டிதர்கள் எனக் கூறப்படுபவர்களின் பிற்போக்கு நிலைப்பாட்டை முற்றிலும் அம்பலப்படுத்த வேண்டும். நடைமுறை சாரா ஆராய்ச்சிப்பணி, கல்வி, பத்திரிகைத்துறை, இலக்கியம் மற்றும் கலைப்பிரசுரம் ஆகிய துறைகளில் உள்ள பிற்போக்கு முதலாளித்துவக் கருத்துக்களை முற்றிலுமாக மறுதலிக்க வேண்டும். இந்த கலாச்சாரத்துறைகளில் தலைமையைக் கைப்பற்ற வேண்டும். பிசிக் ரிவ்யூ 67 தொகுதி 2 எண்-10-)

 

போதுமான அளவு கலாச்சாரம் வளர்ந்திராத ஒரு நாட்டில் சோசலிசத்தை நிலைநாட்டுவதை மேற்கொள்வதில் நாம் மிகவும் அவசரப்பட்டு விட்டோம் என்று நமது எதிர்ப்பாளர்கள் திரும்பத் திரும்ப நம்மிடம் கூறியிருக்கிறார்கள். தத்துவத்தில் குறிப்பிட்டுள்ள முடிவுக்கு நேர்மாறான முடிவிலிருந்து நாம் தொடங்கியதால் அவர்கள் இத்தவறான கருத்திற்கு வருகிறார்கள். நமது நாட்டில் அரசியல் மற்றும் சமூகப்புரட்சி, கலாச்சாரப்புரட்சியை முந்திவிட்டது. ஆயினும் அதே கலாச்சாரப்புரட்சி இப்போது நம்மை எதிர்கொண்டுள்ளது. (லெனின் தொகுதி 33 பக்கம்474)

 

சீனாவில் கலாச்சாரப் புரட்சி என்பது ஒரு வர்க்கப் போராட்டமே. அது பொருள்சார்ந்ததே. கரிகாலன் நினைப்பது போல் ஆன்மீகத்தின் அனைத்து விருப்புக்களையும் அங்கீகரிக்கவில்லை. பாட்டாளி வர்க்கம் சார்ந்த விருப்புக்களை நிறைவுசெய்யவே கலாச்சாரப் புரட்சி நடாத்தப்பட்டது. இதையே போல்சிவிக் கட்சியும் செய்தது. லெனின் கலாச்சாரப் புரட்சி எமது அடுத்த இலக்கு என்கிறார்.

 

அது தொடர்ச்சியான ஸ்டாலினின் சில தவறுகளும், முன் அனுபவம் இன்மையுமே ஒரு கலாச்சாரப் புரட்சியையோ, மக்களையோ சார்ந்திருக்கத் தவறினார். 1930 பிந்திய 1935 இற்கு முந்திய கட்சி விரோத திரிபுவாதிகளை அழிப்பதில் மக்களை சார்ந்திருக்கத் தவறினார். மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி ஒரு புரட்சி ஊடாக அழிப்பதில் தவறு இழைத்தார். ஆனால் அவர் சோசலிசத்தை முன்னெடுப்பதில் எப்போதும் உறுதியாக இருந்தார். சீனக் கலாச்சாரப் புரட்சி முதலாளித்துவ சிந்தனையை அதன் அனைத்து மூலத்திலும் அழிப்பதை கொண்டிருந்தது. இது லெனினிய வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது.

 

ஆனால் கரிகாலன் ஒன்றுக்கொன்று எதிராகக் காட்டி தனது திரிபை லெனினியத்தின் மீது கையாண்டுள்ளார். மனிதனின் ஆன்மீகமானது அவனின் உணர்வு வெளிப்பாட்டின் விருப்புகளே. இதை லெனினிய கட்சி நிராகரிக்கிறது என்றதன் ஊடாக முதலாளித்துவ திரிபை உயர்த்தி பிடித்துள்ளார். மனித விருப்புக்கள் அவனின் வர்க்க இருப்பில் ஆனது. ஒருவன் உல்லாசமாக வாழ மற்றவனை சுரண்ட உழைக்காமல் இருக்க விரும்பின் அதை லெனினிய கட்சி அங்கீகரிக்க மறுக்கிறது. இதுவே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம். இதையே மாவோவும் கலாச்சாரப் புரட்சியும் செய்ததாகும்.

 

ஆனால் கரிகாலன் ஒன்றுக்கொன்று முரணாக, லெனின் மாவோவைக்காட்டி திரிபை புகுத்த முனையும் பாதை ஆன்மீகமாகப் புலப்படுத்துகிறது. பாட்டாளி வர்க்கத்திற்கு எதிராக எந்த ஆன்மீகத்தையும் மார்க்சியம் அங்கீகரிப்பதில்லை அதை மறுதலிக்கின்றது. அதை அழிக்கின்றது. அது இல்லாத சமூகம் உருவாகும் போதே வர்க்கமற்ற சமுதாயம் உருவாகின்றது. அப்போதே அரசும் உதிர்கின்றது.


(1) லெனினிய கட்சி அமைப்பு வடிவம், ஊழியர்களுக்கிடையிலான உறவு.
(2) அரசு-கட்சி பற்றி நிலைப்பாடுகள்


(3) கட்சி-சிவில் சமூக நிறுவனங்களுக்கிடையிலான உறவு

 

மேலே குறிப்பிட்ட மூன்று விடயங்களிலும் பல வருடங்களாகப் பாரிய மாற்றங்கள் எதுவும் இல்லாமல் இறுகிய நிலைப்பாட்டையே லெனினிய கட்சிக் கோட்பாடுகள் கொண்டுள்ளன. நடந்து முடிந்த எத்தனையோ புரட்சிகள் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாமல் தேக்க நிலையை அடைந்தபோதும் இந்த விடயங்களில் எந்த ஒரு மாற்றமும் நடைபெறவில்லை என கட்சிக்கோட்பாட்டை அதன் அடிப்படை விதிகளை டெங், குருசேவ் கும்பல் உடன் இணைந்து தாக்குகிறார். சோவியத் சீன கட்சிக் கோட்பாடுகளை குருசோவும், டெங்கும் கரிகாலன் விரும்புவது போல் மாற்றி அக்கட்சியை சீரழித்ததை நாம் மேல் உள்ள அட்டவணை ஆதாரத்தின் ஊடாகப் பார்க்கலாம்.

 

காங்கிரஸ் வருடம் தொழிலாளர் விவசாயிகள் அறிவுஜீவிகள்

 

13                      1924            63.2 வீதம்       5.4வீதம்           31.4வீதம்

15                      1927            71.0                    5.7                       23..3

16                      1930            71.2                    6.7                       22.1

17                      1934            60.0                    8.0                       32

20                      1956            18.5                  13.8                       67.7


புள்ளடி இடப்பட்டவை குருசேவ் மாற்றி அமைத்த அங்கத்தவர்களின் விபரமே. இறுகிய கட்சிக் கோட்பாட்டை கரிகாலன் விரும்புவது போல் திறந்து ஆன்மீகத்தை உயர்த்திப் பிடித்து திரிபுவாதக் கட்சியாக மாற்றினார்.

 

நன்றி சஞ்சீவி.

 

சோவியத்கட்சியை எல்லா மக்கள் கட்சி எனக் கூறி கட்சி கட்டுப்பாடுகளை நீக்கி திறந்த கட்சியாக்கி பாட்டாளிவர்க்கக் கட்சியையே திரிபுவாத முதலாளித்துவக் கட்சியாக மாற்றினார். கரிகாலன் கட்சிக்கட்டுப்பாட்டை நீக்கக் கோருவது திரிபுவாத கட்சியாக ஆரம்பம் முதலே கொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே. (உ-ம்) ------ இன்று உள்ள மூன்றாவது பாதைக்கான திட்டம் இறுக்கம் கூடியது திறந்து விடுங்கள் எனக் கோருபவர்கள் யாராக இருக்கமுடியும். திரிபுவாதிகளும், பிழைப்புவாதிகளுமே. இன்று மனிதம் வேண்டுமெனின் யாரும் வந்து செல்லும் வடிவம் கொண்ட ஒரு கதம்பக் கூட்டமாக இருக்கலாம். ஆனால் கட்சி அப்படியல்ல. அது தனக்கென வகுக்கப்பட்ட கொள்கையை என்றும் விட்டுக்கொடுக்காத உறுதியான தலைமையை கொண்ட வடிவமே. அது இறுக்கமாக இல்லாதபோது புரட்சி ஏற்படாது. உலகில் இன்று புரட்சிக்கு தேக்கம் எனக் கூறுவது வரலாற்றில் நகைப்புக்குரியது. இன்று புரட்சியை முன்னெடுத்துச் செல்வதில் முன்னேறியுள்ள அனைத்துக் கட்சியும் இறுக்கமான கட்சிகோட்பாட்டைக் கொண்டவையே.

 

இதுவரை காலமும் நிலவி வந்த லெனினியக் கட்சி வடிவம் செயலாளர், அரசியல் குழு, மத்தியகுழு, ஏனையகுழுக்கள், அமைப்பாளர்கள், கிளைகள் என்ற வடிவத்தில் உள்ள இறுக்கமான மத்தியப்படுத்தப்பட்ட வடிவத்தையே கொண்டுள்ளது. கம்யூனிசத்தை இலட்சியமாக கொண்ட புரட்சிகரக் குழுக்கள், கட்சிகள் எவையும் தமது ஊழியர்களில் பெரும்பாலானவர்களை கம்யூனிஸ்டுக்களாக கொண்டிருப்பதில்லை. மாறாக அதன் ஊழியர்கள் கம்யூனிஸ்டுக்களாக வளரவேண்டும். அதற்கேற்றவாறு ஸ்தாபன கட்டமைப்பை ஸ்தாபனம் கொண்டிருக்கவேண்டும். இங்கு நான் சொந்த நலன்கள் என்று வெறும் பொருளாதார நலங்களை மட்டும் குறிப்பிடவில்லை. என கரிகாலன் தொடர்கிறார். ஒருகட்சி தனது அங்கத்தவர்களைத் தவிர பலரை கட்சிக்கு வெளியில் ஊழியர்களாக கொண்டுள்ளது.

 

இவர்களை கட்சிக்குள் உள்வாங்க வேண்டின் இவர்களின் அரசியல் வணர்ச்சி மட்டம் உயரவேண்டும். இங்கு அவர்களின் அரசியல் தத்துவ தரத்துக்கு ஏற்ப கட்சிவிதியை மாற்றுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அதேநேரம் இவ் ஊழியர்களைக் கொண்ட கட்சி ஸ்தாபன அமைப்பு ஊடாக அரசியல் தரத்தை உயர்த்துகின்றது. அந்த வகையில் கட்சியில் அல்லாத ஊழியர்கள் பெண்கள் அமைப்பு,மாணவர் அமைப்பு,தொழிலாளர் அமைப்புகள்,விவசாய அமைப்புகள் இளைஞர் அமைப்புக்கள்,கலாச்சார அமைப்புகள் என எண்ணற்ற வடிவத்தில் இவர்களை ஸ்தாபனப்படுத்தி அரசியல் மயப்படுத்துகின்றனர். இங்கு அரசியல் மயப்படுத்லை செய்வோர்கட்சி ஊழியர்களாக இருக்கின்றனர்.

 

இது பகிரங்கமாகவும், இரகசியமாகவும் நிலைமைகளுடன் கையாளப்படுகின்றன. அதுபோல் இப்படி உள்ள வெகுசன அமைப்புக்கள் கட்சியின் நேரடியான கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதும், சில மறைமுக கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும் இருக்கிறது. இது அவ் அமைப்பின் அரசியல் வளர்ச்சியுடன் இருந்த ஸ்தாபன வடிவத்தில் உள்ள உறவு தொடர்பான நிலைப்பாடுகள் சம்மந்தப்பட்டது.

 

அடுத்தது கரிகாலன் குறிப்பிடும் சொந்த நலன் என்பது பொருளாதார நலன்களை மட்டும் குறிப்பிடவில்லை என்கின்றார். அங்கு சொந்தநலன் என்பது அனைத்தும் பொருளாதார நலன் சார்ந்ததே. பொருளாதார நலன் சாராத, வர்க்கம் சாராத ஒரு சொந்தநலனைக் காட்டமுடியுமா? ஏதோ வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் உருவாகிவிட்டது என்ற கனவோ என்னவோ புரியவில்லை.

 

லெனினிய கட்சிகள், ஸ்தாபனங்கள் கூட்டுத்தலைமை உடையன என்று பிரகடனப்படுத்தினாலும் நடைமுறையில் அது உண்மையல்ல. நடைமுறையில் அங்கு தனிநபர் அதிகாரங்களே நிலவின. நிலவுகின்றன. லெனினிய கட்சிக்கு ஒருவர் வருவாராயின் அவருக்கு எதிராக ஒரு கவிழ்ப்பு நடந்தால் ஒழிய அவர் சாகும் வரை தலைவராக இருந்தே சாவார். இதற்கு லெனின் ஸ்டாலின், மாவோ, சண்முகதாசன் போன்ற எத்தனையோ பேரை நாம் உதாரணமாகக் காணலாம். ஒருமுறை தலைமையில் இருந்த அங்கத்தவர்கள் கீழே இறங்கிப் போய் கீழ் அணியில் வேலை செய்வதற்குரிய ஸ்தாபன அமைப்பு விதிகள் அங்கு இல்லை.

 

எந்த ஒரு நபரும் நீண்டகாலம் மேல் மட்ட பொறுப்புக்கள் மட்டுமே செய்து கொண்டிருக்க முடியாதவாறு புதிய விதிகளை உருவாக்கவேண்டும். எந்த ஒரு நபரும் தனக்கு தரப்பட்ட உயர்மட்ட பொறுப்புக்கள் தான் மீண்டும் கீழ்மட்டத்துக்கு சென்று வேலை செய்வதிலிருந்து தன்னை காப்பாற்ற மாட்டாது என உணர வேண்டும். அப்போது தான் ஒருவர் தனது சொந்த நலன்களைத் தான் சார்ந்த ஸ்தாபனத்தின் ஊடாக அடைவதை தடுப்பதற்கான அடிப்படையை ஏற்படுத்த முடியும். ஆக அதிகாரங்கள் உடைய பொறுப்புகளை ஸ்தாபனத்தில் தனிநபர்கள் குறிப்பிட்ட காலமே வகிக்கக் கூடியவாறு விதிகள் உருவாக்கப் படவேண்டும்.

 

தகுதியும் திறமையும் உடையவர்கள் ஸ்தாபனத்தின் உயர் பொறுப்புக்களை ஏற்பது நல்லது தானே என்று சிலர் வாதிடலாம். மாறாக தகுதியும் திறமையும் உடையவர்கள் ஸ்தாபனத்தின் உயர் பொறுப்புக்களை வகித்தால் மட்டும் தான் தமது திறமையை கட்சிக்கு வெளிப்படுத்துவார்களா? கீழ் அணியில் இருந்து தமது பங்களிப்பை வழங்கமுடியாதா? எனக் கரிகாலன் தனது திரிபுவாதத்தை மிகச்சிறப்பாக கையாள நரித்தனத்துடன் முனைகிறார். கரிகாலன் யாருக்காக வக்காலத்து வாங்குகிறார் என நாம் பார்ப்பின் ஏகாதிபத்தியங்கள் கூறும் ஜனநாயகத்தை காப்பாற்றவும், வர்க்கப் போராட்டமே பிரதான கண்ணி என்பதை நிராகரிப்பதையுமே. இது தொடர்பாக கரிகாலன் புதிய கவலையுடன் அவற்றை எழுப்பும் அதேநேரம் இது முன்பே லெனினுக்கு அவர் சார்ந்த மத்திய கமிட்டிக்கு எதிராக எழுப்பப்பட்டு லெனினால் முறியடிக்கப்பட்டவையே. லெனின் குறிப்பிடுகிறார் தலைவர்கள் எப்போதும் நிரந்தரமானவர்கள் ஏனெனின் அவர்கள் நீண்ட நெடிய பல போராட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்டவர்கள்.

 

பல நீண்ட நெழிவுசுழிவான போராட்டத்தின் ஊடாக உருவாகும் தலைவர்களை தள்ளிவிட முனைபவர்கள் யார்? அழித்துவிட முனைபவர்கள் யார்? எதிர்ப்புரட்சி வாதிகளே. லெனின் தனது அரசியல் வரலாற்றில் 2ம் அகிலத்தில் எப்போதும் சிறுபான்மையாக இருந்தார். அதிலிருந்து விலகி தனது அரசியலை தனித்துவமாகப் பிரதி செய்தவர். அதுபோல் சோவியத்தில் போல்ஷ்விக், மென்சிவிக் கட்சிகள் பிரிய முன்பு லெனின் பெரும்;பான்மையாக இருந்ததில்லை. லெனினின் தலைமை போல்ஷிவிக் வரலாற்றுடன் தான் தொடங்குகிறது. இக்காலம் முதல் 1917வரை லெனின் போன்ற தலைமையை கீழ் சென்று வேலை செய்யக்கோருவது, தலைமைப்பொறுப்பிலிருந்து விலகக்கோருவது யாரென நாம் பார்ப்பின் எதிர்ப்புரட்சிவாதிகளே. அவர்களின் தேவையே அது.

 

ஸ்டாலின் ஆட்சியில் ஸ்டாலின் மரணிப்பதை, விலகுவதை கோரும் கரிகாலன் யாரைப் பாதுகாக்க முனைகிறார் என்றால் ரொஸ்கி, புகாரின், குருசோவ் கும்பல்களையே.

 

மாவோ சீன கம்யூனிஸ்ட் கட்சியில் 20ம் நூற்றாண்டுகளில் இணைந்தபோது அவர் தலைவராக இருந்ததில்லை. நீண்ட படையெடுப்புடன் தான் கட்சியின் பெரும்பான்மையைப் பெறுகின்றார். மாவோவை தலைமையிலிருந்து இறக்க விரும்பியோர் யார்? திரிபுவாதிகளே. அதாவது டெங் கும்பல் வகையறாக்களே. என்ன கரிகாலன் விதிவிலக்கா? சண்முகதாசனை குறிப்பிடுகின்றார்.

 

சண்முகதாசனின் கட்சி ஒரு புரட்சிகர கட்சியாக தன்னை மாற்றிக் கொள்ள முடியாது போனதுடன் அது சிதைந்து பல கூறுகள் பல வடிவங்களாக மாறின. சண்முகதாசனின் அமைப்பு ஒரு சில தனிநபர்கள் கொண்ட ஒரு வடிவமே ஒழிய கட்சியல்ல.

 

கட்சியென்பது பரந்த மக்களை தன்னகத்தே அணிதிரட்டும் செயற்பாட்டை கொண்டதாக இருக்க வேண்டும். ஒரு கட்சி அமைப்பு அதில் உள்ள நபர்கள் தவறிழைக்கும் பட்சத்தில் அதைத் தடுப்பது எப்படி? கட்சி ஊழியர்கள் மத்தியில் வேலை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். தொடர்ச்சியான வர்க்கப்போராட்டத்தை கட்சிக்குள் நடத்த வேண்டும். ஒரு போராட்டத்தில் வர்க்கப்போராட்டம் எவ்வளவு பிரமாண்டமான மாறுதலைச் செய்கின்றதோ அதை கட்சிக்குள்ளும் இருந்தே மொத்த சமூகம் மீது நிகழ்த்தும் போது அனைத்துத் தவறுகள் வர்க்கவிரோத சக்திகள் துடைத்தெறியப்படுகின்றனர்.

 

இது ஆட்சியைப் பெற்ற பின் பிரதான பணிமட்டுமின்றி கம்யூனிச சமூகம் உருவாக்கப்படும் வரை 20வது தலைமுறையல்ல 30தலைமுறை நடாத்தப்படவேண்டும். சீனா, சோவியத்தின் தோல்வி வர்க்கப்போராட்டத்தை நிராகரித்ததே. ஸ்டாலின் போன்றோர்களின் தவறுகள் வர்க்கப்போராட்டத்தை சோவியத்துக்குள் குறைத்து மதிப்பிட்டதும் மக்களைச் சார்ந்து நிற்கத் தவறியதும் தனது பாட்டாளி வர்க்க சொந்த விருப்பின் மீது சார்ந்து நின்றதுமே. இவை கூட அமைப்புக்குள்ளான வர்க்கப்போராட்டத்தை நடத்துவதை குறிக்கோளாக கொண்டு வரையறுக்க வேண்டும். கம்யூனிச சமுதாயம் உருவாகும் வரை வர்க்கப் போராட்டமே பிரதான வடிவம் என்பதை கட்சித் திட்டம் மேலும் சிறப்பாக வரையறுக்க வேண்டும்.

 

கட்சி கூட்டுத்தலைமை இல்லை என்ற வாதம் சுத்த அபத்தமானது. புரட்சியில் வெற்றி பெற்ற வீறு நடை போடுகின்ற அனைத்துக்கட்சியும் கூட்டுத் தலைமையை கொண்டே செயற்படுகின்றன. அங்கு ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்டோரின் கருத்து ஆதிக்கம் இயல்பானதே. எல்லா மனிதர்களும் ஒரே மாதிரி ஒரே அளவு சிந்தனையைக் கொண்டிருப்பது இல்லை. இது மத்திய குழுவிற்கும் பொருந்தும். ஆனால் எல்லாம் விவாதிக்கப்படுகின்றன. கூட்டுத்தலைமையை நிராகரிக்கின்ற போக்கு அல்லது சொந்த நலனை(இதுவர்க்கம் சார்ந்தது) கட்சியில் ஒருவர் அல்லது குழு செய்ய முனையும் போது வர்க்கப்போராட்டமே அங்கு நிகழ்த்தப்படவேண்டும். வெறும் விதிகள் எதையும் செய்து விடாது. வர்க்கப் போராட்டத்தை நிராகரிப்பவர்களே வெறும் விதிகளை பெயரளவில் கோருவதும் பேசுவதும் ஆரம்பமுதல் புரட்சி ஆட்சியை பிடிக்காது தடுக்கவே.

 

ஒரு கட்சியில் தலைவர் 5வருடம் இருக்கலாம் எனின் சீனா, சோவியத் எதிலும் புரட்சி நடைபெற்று இருக்கமுடியாது. ஒரு புரட்சி சரியாக முன்னெடுக்கப்பட முன்நிபந்தனையானது ஒரு கட்சி. கட்சி இருந்தால் மட்டும் போதாது. சிறந்த தலைவர்களும் இருக்கவேண்டும். தலைவர்கள் தவறு இழைக்கும் பட்சத்தில் கட்சியே முற்றாக அழிகிறது. சிறந்த தலைவர்கள் வானத்திலிருந்து விழுபவர்கள் அல்ல. மாறாக நீண்டகால தியாகங்களுடன் கீழிருந்து வேலை செய்து உருவாகுபவர்களே. புரட்சிக்கு ஒரு கட்சி தேவை அது போல் சிறந்த தத்துவத்தால் உருவான சிறந்த தலைவர்களால் கட்சி வழிநடாத்தப்படவேண்டும். தலைவர்கள் தமது பொறுப்புகளிலிருந்து கீழிறங்கி வேலை செய்யவேண்டும்.

 

அது ஒரு புரட்சியாளனுக்கு பெரிய விடயமல்ல. பிரச்சனை தலைமையை ஏற்க அவரைவிட சிறந்த தலைவர்கள் இருக்க வேண்டும். அதுவே தலையாய பிரச்சனை. எல்லாரையும் விட சிறந்த தலைவர்களே நாட்டைச் சிறப்பாக வழிநடத்த முடியும். உதாரணமாக ஒரு சிற்பத்தை ஒரு வர்ணப்படத்தை பலர் தனித்தனியாக படைக்க முடியும். ஆனால் அதில் ஒன்றே சிறப்பானதாகவும் பிரமிக்கத்தக்கதாகவும் இருக்கும். அவ் ஓவியக் கலைஞனை இனிக் கீறக்கூடாது எனக் கூறி வேறு வேலைக்கு அனுப்பின் ஓவியக் கலையின் அழிவுக்கே வழியிடப்படும். நீ ஜந்து வருடம் வரைந்தால் போதும் என்பது கலைஞனின் கண்டுபிடிப்புக்கள் பரப்பப்படாது தடுத்து அக்கலை சீரழிக்கப்படுகிறது. இதை யார் செய்வார் எனின் அக்கலையை எதிர்க்கின்ற ஓவியன் போல் நடிப்பவனே.

 

சிறந்த ஓவியனை அல்லது சிற்பியை எல்லாச் சிற்பிக்கும்; வழிகாட்டும் தலைவராக நியமிக்க வேண்டும். அங்கு எல்லோரின் திறமைகளையும் மையப்படுத்த வேண்டும். தலைவர் அகங்காரமாக மற்றைய திறமைகளை நிராகரிப்பின் அவருக்கு எதிராகப்போராடவேண்டும். இதுவே பிரச்சனை. தலைவர்கள் எழுந்தமானமாக ஒரு கூட்டத்தில் உருவாகுபவர்கள் அல்ல. மாறாக சிறுசிறு போராட்டங்களிலிருந்து மிக நீண்ட போராட்டங்களின் ஊடாக மக்களால் உருவாக்கப்படுபவர்கள். மக்களைத் தட்டி எழுப்புவதுடன் ஊடாகவே தலைவர்களின் சரி-பிழைகளை சோதிக்க முடியும். அதுவே வர்க்கப்போராட்டம்.

 

இங்கு வர்க்கப்போராட்டம் என்பது ஆட்சியைப் கைப்பற்றுவது மட்டுமல்ல. அதன் பின் தொடரப்படவேண்டும். அரசுக்கும் வர்க்கங்களுக்கும் இடையிலான மதிப்பீட்டில் அரசை வெறுமனே வர்க்கங்களின் கருவியாக மட்டுமே, கணிதத் தோற்றம் போல் பிரயோகிப்பது தவறு..... பொருளாதார வளர்ச்சி குன்றிய பல நாடுகளில் அரசுக்கு தகவமைந்து வர்க்கங்கள் இயங்க வேணடிய தேவையுள்ளது. இவை இரண்டிற்கும் இடையிலான உறவை ஒன்றின் கருவி மற்றொன்று என்று நேரடியாகப் பார்ப்பது தவறு.....

 

ஸ்ரீலங்கா போன்ற நாடுகளில் அரசு என்பது வர்க்கங்களின் மேல் தீர்மானகரமான பங்கைச் செலுத்த கூடிய நிறுவனம். அங்கே அரசு என்ற இயந்திரத்தின் மீது வர்க்கங்கள் காத்திரமான பங்கை ஆற்றிவிட முடியாது. சில சமுதாயங்களில் வர்க்கங்கள் அரசின் மேல் மேலாதிக்கம் புரிவதையும் நாம் அவதானிக்கலாம்.--.... எதுவும் எதன் மீதும் நேரடியான ஆதிக்கம் கொள்ளவில்லை என நாம் கொள்ளவேண்டும். எனக் கரிகாலன் தொடர்கிறார்.

 

மார்க்சியத்தை ஆய்வு செய்வதாகக் கூறிக் கொண்டு மார்க்சியத்தின் அரிச்சுவட்டையே புதைகுழிக்கு அனுப்பமுனைகின்றார். இதிலிருந்தே வர்க்கமற்ற புலிகளை முன்வைத்து இச்சமூக அமைப்பை பேண முனைகின்றார். சோவியத்தில் வர்க்கமற்ற சமூகம் உருவாகி விட்டதாக குருசேவ்,பிரஸ்னேவ் கூறி எல்லாமக்கள் அரசு எனக்கூறி அரசு வர்க்க மற்றது என பிதற்றி திரிபை புகுத்தி முதலாளித்துவத்தை மீட்டதை நாம் அறிவோம். கரிகாலன் என்னவெனில் புரட்சியே நடக்கமுன் வர்க்கமற்ற அரசு உள்ளதாக கூறி போராட்டத்தை அரசுக்கு எதிராக மாற்றுவதை தடுக்க முனைகிறார். அதே நேரம் இச்சமூக அமைப்பை பாதுகாக்க முனைகிறார். மார்க்சிஸ்டுகள் போராட முனைவது வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கவே. அது பல கட்டத்தை கடந்து அரசு உதிக்கின்ற காலகட்டத்தில் தான் வர்க்கமற்ற சமூகம் பரிணாமிக்க முடியும். சுரண்டலற்ற சமூகம் பரிணமிக்க வேண்டும்.

 

ஆனால் கரிகாலன் இந்த சமூக அமைப்புக்குள் வர்க்கமற்ற அரசை காட்ட முனைவது திரிபு இல்லாமல் என்ன-இது எல்லா மக்களின் ஜனநாயகம் என ஏகாதிபத்தியங்கள், இவ் வாரிசுகள் கூறுவதை அப்படியே மார்க்சியம் பூசி வாந்தி எடுக்கின்றார். அவ்வளவே.

 

பொருளாதாரம் குன்றிய நாடுகளில் அதாவது மூன்றாவது உலக நாடுகளில் அரசுகள் வர்க்க அரசு இல்லையாம். இது தொடர்பாக முன்பு நாம் கரிகாலன் கட்டுரையில் மீண்டும் மீண்டும் விவாதித்தோம். மூன்றாம் உலக நாடுகள் அனைத்தும் இன்று எந்த விதிவிலக்கும் இல்லாமல் நவகாலனியாக ஏகாதிபத்தியத்தின் கீழ் உள்ளது.

 

இவ் நவகாலனித்துவ நாடுகளின் அரசுகள் ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்யும் வகையில் உளளது. அதாவது தரகு முதலாளித்துவமாகவும் அரை நிலப்பிரபுத்துவ நாடுகளாகவும் உள்ளன. இவை இரண்டையும் கொண்ட அரசுகளின் இருப்பை மட்டுமே ஏகாதிபத்தியங்கள் அங்கீகரிக்கின்றன. இதற்கு மாறாக கரிகாலன் அரசு வர்க்கத்தின் கருவி அல்ல என வாதிட முற்படுவது இவ்வரசுகளைக் காப்பாற்றவே.

 

தரகு முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவ உற்பத்தியை (பொருளாதாரத்தை) மட்டும் அங்கீகரிக்கின்ற ஒரு அரசாகவே உள்ளது. உதாரணமாக தேசிய முதலாளித்துவ உற்பத்திகளை இன்று கட்டுப்படுத்துதல், அல்லது அழித்தல் விழுங்குதல் என, இருந்து வந்த முதலாளித்துவ சொத்துக்கள் நொருக்கப்பட்டே வருகின்றன. தேசிய சுய உற்பத்திகள் இன்று பல்நாட்டுக் கம்பனிகளால் நிறுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு நிறுத்தப்பட்டு வருகின்றன. இது இலங்கை முதல் உலகெங்கும் பல ஆதாரத்துடன் எம் கண்முன் நீளக் காணமுடிகின்றது. அப்படியாயின் இதை நடைமுறைப்படுத்தும் அரசு எது? அது தரகு முதலாளித்துவ அரை நிலப்பிரபுத்துவ அரசே.

 

இலங்கை அரசு வர்க்கங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியும் என்கிறார். ஆனால் வர்க்கங்கள் அரசின் மீது வர்க்க ஆதிக்கம் செலுத்த முடியாது என்று கூறும் கரிகாலன் நரித்தனமான வகையில் தனது திரிபை புகுத்த முனைகின்றார். எல்லா வர்க்கங்களையும் ஒரே தட்டில் வைத்து இவ் வர்க்க இருப்பை காப்பாற்ற முனைகிறார். அரசு வர்க்கங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்கிறார். அது எந்த வர்க்கம்? இது கண்ணை மூடிக்கொண்டு பால் குடிக்க சொல்ல முனையும் வாதத்தின் ஊடாக இச்சமூக அமைப்பை பேண மார்க்சியத்தை திரித்துப் புரட்டும் கோமாளித்தனமான செயற்பாடே.

 

அரசு வர்க்கங்களின் மேல் ஆதிக்கம் செலுத்தும் என்கின்றபோது தரகு, நிலப்பிரபுத்துவ பிரிவின் மீது சாத்தியமே இல்லை. அரசினால் முடியுமா இன்று அந்நிய தரகு நிறுவனங்களை அகற்ற? உள்ளுர் உற்பத்தி உள்ள பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கமுடியுமா? முடியாது. ஏனெனில் அரசே அதுவாகவும் அது சார்ந்தும் உள்ளது. அவர்களின் பிரதிநிதிகளே அரசை ஆள்கின்றனர். வர்க்கங்கள் அரசின் மீது ஆதிக்கம் புரிய முடியாது என்கின்ற போது தரகு நிலப்பிரபுத்துவ பிரிபுகள் ஆதிக்கம் புரிய முடியாதா? ஏகாதிபத்திய தரகுமுதலாளிகள் அரசுகளிடம் விரும்பியதை செய்யமுடியாதுள்ளதா? அரசுகள் தரகு, நிலப்பிரபுத்துவ பிரிவுகளாhல் உள்ள போது இவ் வர்க்கமே அரசாகவும் உள்ளது. அரசு சுயாதீனம் என்பது கிடையாது. ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு செயற்பாடும் வர்க்க உலகம் சார்ந்ததே. அரசு என்ற கூட்டு மையம் வர்க்கம் உலகம் சார்ந்ததே. சுயாதீனமானது என்பது கற்பனையானது. அது ஒரு வர்க்கம் சார்ந்ததே. அரசுகள் எப்படி உருவாகின என்பதே இதற்கு பதில் அளிக்கின்றது.

 

செய்யப்படவேண்டியது வர்க்கப்போராட்டம் மட்டுமா? அரசு என்ற சமுதாய வளர்ச்சிக்குத் தடையான இயந்திரத்துக்கு எதிரானது இல்லையா?---- வர்க்கப்போராட்டத்தின் போது அல்லது கம்யூனிச சமுதாயத்தில் அரசு உதிர்ந்து விடும் என்கிறார்கள். அது நடைபெறவில்லை. அரசு தானாக உலர்ந்து உதிர்ந்துவிடமாட்டாது. உலர்ந்து உதிர்ந்து விடுவது என்பது தனக்குள்ளேயே நடக்கும் மாற்றத்தை குறிக்கிறது. அரசு இயந்திரம் என்பது தனக்குள்ளேயே நடக்கும் மாற்றத்தால் இல்லாது ஒழிந்து போக மாட்டாது. மாறாக வெளிச்சக்திகள் செயற்பாட்டிலேயே இல்லாது ஒழிக்கப்படும்.---அரசு என்ற சமுதாய வளர்ச்சிக்கு தடையாக உள்ள இயந்திரத்துக்கு எதிராக நாம் ஒரு புரட்சிகர ஸ்தாபனத்தை முன்னிறுத்த வேண்டும்.--- அது(இங்கு அரசைக் குறிக்கும்) தானாக மடியும் என்றார்கள். அதுவும் நடைபெறவில்லை...... ஆக சமுதாயவளர்ச்சிக்கு தடையாக இருக்கும் சகல அம்சங்களுக்கும் எதிராக போராடும் போது அரசு இயந்திரத்துக்கு எதிராகவும் போராடவேண்டியுள்ளது. ஆகவே ஒரு புரட்சிகர ஸ்தாபனமானது ஒரு அரசைக் கைப்பற்றவோ அன்றி அரசுபோன்ற ஒரு நிறுவனத்தை உருவாக்குவதையே திட்டமாக கொண்டு போராடக் கூடாது. எப்பவும் புரட்சிகர ஸ்தாபனம் அரசு என்ற இயந்திரத்துக்கு எதிராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேணடும். இதனைச் சிலர் அராஜகவாதம் என்று முத்திரை குத்தலாம்.--- சமுதாயத்தில் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் தேவையான நிர்வாக அமைப்புக்கள் நிறுவப்படவேண்டும். நிர்வகிக்கப்பட வேண்டும். மாறாக அது இன்றைய இறுகிய மையப்படுத்தப்பட்ட வடிவத்தில் இருக்க கூடாது.--- என கரிகாலன் தனது முதலாளித்துவ கோட்பாட்டை திரிபுவாதத்தின் ஊடாக உயர்த்துகின்றார். அரசு உதிர்வதில்லை என மார்க்சிய மூலவர்கள் சொன்னதாக திரித்துப் புரட்டுகின்றார். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என நாம் பார்ப்போம்.

 

(ஒரே நாட்டில் கூட) தூக்கியெறியப்படுவதால் அதன் எதிர்ப்பை பத்து மடங்கு அதிகரிக்கும் ஒரு சக்தி வாய்ந்து எதிரியாகிய முதலாளித்துவவர்க்கத்துக்கு எதிராக புதிய வர்க்கம் நடாத்தும் மிகவும் தீர்க்கமான மிகவும் ஈவிரக்கமற்ற ஒரு யுத்தம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமாகும். முதலாளித்துவ வர்க்கத்தின் சக்தி அதன் சர்வதேச மூலதனத்தில் மட்டுமல்ல முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வதேசிய தொடர்புகளின் பலத்திலும் நம்பகமான தன்மையிலும் மட்டுமல்ல, பழக்கவழக்கங்களின் சக்தி வாய்ந்த பிடிப்பாலும் சிறு உற்பத்தியின் பலத்திலும் கூட இருக்கின்றது. ஏனெனில் துரதிஸ்டவசமாக உலகில் இன்றும் மிக பரந்த அளவிலான சிறு உற்பத்தி இருக்கிறது. இடையறாதும், தினந்தோறும், மணிதோறும் தன்னியல்பாகவும் ஒரு திரளான அளவிலும் முதலாளித்துவம் முதலாளித்துவ வர்க்கத்துககான தோற்றுவாய்க்கும் காரணமாக சிறு உற்பத்தி இருக்கிறது. இந்தக் காரணங்களினால் எல்லாம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் இன்றியமையாததாக இருக்கின்றது.

 

சளையாத கட்டுப்பாடான உறுதியான, வெல்லற்க மற்றும் திடசித்தம் ஆகியவற்றைக் கோரும் ஒரு யுத்தமின்றி, நீண்ட உடும்புப் பிடியான மற்றும் ஜீவமரண யுத்தமின்றி முதலாளித்துவத்தின் மீது வெற்றி சாத்தியமில்லை.

(லெனின் இடதுசாரி கம்யூனிசம்)

 

அரசு உலர்ந்து உதிர்கிறது என்னும் தொடர் நன்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் இத்தொடர் இந்த நிகழ்ச்சிப்போக்கின் படிப்படியாய் நடந்தேறும் தன்மை. தன்னியல்பாய்த் தானே நடந்தேறும் தன்மை ஆகிய இரண்டையும் குறிப்பிடுவதாய் உள்ளது. பழக்கத்தில் மட்டுமே இதுபோன்ற விளைவு ஏற்படமுடியும்.

 

ஜக்கியப்பாட்டுக்கு இடமின்றி நிச்சயம் ஏற்படவும் செய்யும். ஏனெனில் சுரண்டல் இல்லாத போது, ஆத்திரம் உண்டாக்க கூடியதும் கண்டனத்தையும் காலத்தையும் எழச்செய்து அடக்கவேண்டியதற்கான தேவையை தோற்றுவிப்பதும் இல்லாதபோது, மக்கள் எப்படி தயக்கமின்றி சமுதாய ஒட்டுறவுக்கு அவசியமான விதிகளை பற்றியொழுகப் பழகிகொண்டு விடுகிறார்கள் என்பதற்கு இலட்சோபலட்சம் எடுத்துக்காட்டுகளை நம்மைச் சுற்றிலும் காண்கின்றோம். (அரசும் புரட்சியும்--லெனின்)

 

வர்க்கங்கள் ஒழியும் போது அரசும் ஒழிந்துவிடும் என்று தான் மார்க்சியம் எப்போதும் போதித்து வந்திருக்கிறது. டூரிங்க்கு மறுப்பு என்னும் நூலில் அரசு உலர்ந்து உதிர்வது பற்றி கூறும் புகழ்பெற்ற வாசகம் அராஜகவாதிகளைச் சாடுவது அவர்கள் திடுதிப்பென ஒரேநாளில் அரசை ஒழித்து விடலாமென உபதேசிக்கிறார்கள் என்பதற்காகவே அன்றி, அரசு ஒழிவதை ஆதரிக்கிறார்கள் என்பதற்காக அல்ல(அரசும் புரட்சியும்---லெனின்)

 

கம்யூனிச சமுதாயத்தில் தான் முதலாளிகளுடைய எதிர்ப்பு அடியோடு நசுக்கப்பட்டு, முதலாளிகள் மறைந்துபோய், வர்க்கங்கள் இல்லாமல் போய்விடும்(அதாவது சமுதாயத்தின் உறுப்பினர்களிடையே சமுதாய உற்பத்திசாதனங்களுடன் அவர்களுக்குள்ள உறவு சம்மந்தமாய் எந்தப் பாகுபாடும் இல்லாமல் போய்விடும்) அப்பொழுது மட்டும் தான் அரசு----இருப்பதற்கு முடிவு ஏற்படுகிறது. சுதந்திரம் குறித்தும் பேசுவது சாத்தியமாகிறது(அரசும் புரட்சியும்--லெனின்)

 

இல்லை ஜனநாயகமும், சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்கு கீழ்ப்படிதலும் ஒன்றல்ல சிறுபான்மையோர் பெரும்பான்மையோருக்கு கீழ்ப்படிதலை அங்கீகரிக்கும் அரசுதான் ஜனநாயகம் எனப்படுவது. அதாவது ஒரு வர்க்கம் பிறிதொன்றின் மீது, மக்கள் தொகையில் ஒரு பகுதி பிறிதொன்றின்மீது, முறைப்படி பலாத்காரத்தைப் பிரயோகிப்பதற்கான ஒழுங்கமைப்பே ஜனநாயகம் எனப்படுவது.(அரசும் புரட்சியும்)

 

கம்யூனிய சமுதாயத்தின் முதற்படி நிலையில் (வழக்கமாக சோசலிசம் என்றழைக்கப்படுவது) முதலாளித்துவ உரிமை அதன் முழுமையில் ஒழிக்கப்படவில்லை. ஆனால் ஒருபகுதி மட்டுமே, எது வரை பொருளாதாரப் புரட்சி எட்டியிருக்கிறதோ அதற்கு நேர்விகிதத்தில் மட்டும், அதாவது உற்பத்திச் சாதனங்களைப் பொறுத்து மட்டுமே ஒழிக்கப்பட்டிருக்கிறது. முதலாளித்துவ உரிமை தனிநபர்களது சொத்துடமையை அங்கீகரிக்கிறது. சோசலிசம் அவற்றைச் சொத்துடமையாக மாற்றுகிறது. ஒரு குறிப்பிட்டளவு மேலும் ஒரு குறிப்பிட்டளவு மட்டுமே முதலாளித்துவ உரிமை வீழ்த்தப்படுகிறது. (அரசும் புரட்சியும்----லெனின்)

 

ருஸ்சியாவில் தற்போதுள்ள நமது அமைப்பு முறையில் கம்யூனிசத் தன்மையுடையது ஏதாவது இருக்குமானால் அது சேவை உழைப்புகள்(சப்போத்னிக்குகள்)மட்டுமே. மற்றெதுவும் சோசலிசத்தை உறுதிபடுத்துவதற்கான முதலாளித்துவத்திற்கெதிரான ஒரு பேரம் தவிர வேறில்லை. (ரு.பொ.கட்சி(போ)இன் மொஸ்கோ மாநாட்டில் சப்போத்னிக்குகள் பற்றி அறிக்கை லெனின்) அதிகார எதிர்ப்பாளர்கள் அரசியல் அதிகாரத்தை எதிர்த்து, கூச்சலிடுவதோடு நிறுத்திக் கொண்டால் என்ன? வருகிற சமுதாயப்புரட்சியின் விளைவாய் அரசும் அதனுடைய அரசியல் அதிகாரமும் மறைந்து விடும் என்று, அதாவது பொதுப்பணிகள் அவற்றின் அரசியல் குணத்தை இழந்து சமுதாய நலன்களைக் கண்காணித்துக் கொள்ளும் வெறும் நிர்வாகப் பணிகளாகி விடும் என்று எல்லா சோசலிஸ்டுக்களும் ஒத்துக் கொள்ளுகிறார்கள் ஆனால் அதிகார--எதிர்ப்பாளர்கள் அரசியல் வழியிலான அரசினை, அதைப் பெற்றெடுத்த சமூக உறவுகள் அழிக்கப்படுவதற்கு முன்பே, ஒரே மூச்சில் உடனடியாக அழித்துவிட வேண்டுமெனக் கோருகிறார்கள். அதிகாரத்தை ஒழித்து விடுவதே சமுதாய புரட்சியின் முதற் செயலாயிருக்க வேண்டுமெனக் கோருகிறார்கள்.

 

இந்தக் கனவான்கள் எப்போதாவது புரட்சியைப் பார்த்திருப்பார்களா? புரட்சியைப் போல அதிகார ஆதிக்கம் செலுத்தும் எதுவுமே இருக்க முடியாது. துப்பாக்கிகளும் துப்பாக்கிக் குத்தீட்டிகளும் பீரங்கிகளும் கொண்டு- இவை எதுவுமே மிகக் கடுமையான அதிகார ஆதிக்கச் சாதனங்கள்- ஒரு பகுதி மக்கள் எஞ்சிய பகுதியின் மீது தமது சித்தத்தைத் திணிக்கும் செயலே புரட்சி. வெற்றி பெறும் தரப்பு தனது படைப்பலம் பிற்போக்குவாதிகளிடத்தே உண்டாக்கும் குலை நடுக்கப் பயங்கரத்தின் மூலமாய் தனது ஆட்சியை நிலைநிறுத்திக் கொண்டாக வேண்டும். பாரிஸ் கம்யூன் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராய் ஆயுதமேந்திய மக்களுடைய அதிகாரத்தை பிரயோகிக்காது இருந்தால் அதனால் ஒருநாளுக்கு மேல் நீடித்திருக்க முடியுமா? அதிகாரத்தை பிரயோகித்ததென்று கண்டிப்பதற்குப் பதில் இந்த அதிகாரத்தை மிகச் சொற்பமாகவே உபயோகித்தது என்றால் அல்லவா அதன் மீது குற்றம் சாட்டவேண்டும்? ஆகவே இரண்டில் ஒன்று தான் உண்மை. ஒன்று அதிகார---எதிர்ப்பாளர்கள் என்ன பேசுகிறோம் என்பது தெரியாமலே பேசிக்கொண்டிருக்கிறார்கள்.-----அப்படியானால் அவர்கள் குழப்பம் உண்டாக்குவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. அல்லது அவர்கள் தெரிந்தே பேசுகிறார்கள் என்றால், பாட்டாளி வர்க்கத்திற்கு துரோகம் புரிகின்றனர். இரண்டில் எதுவாயினும், அவர்கள் பிற்போக்குக்கு பணியாற்றுபவர் ஆவார். (அரசும் புரட்சியும் லெனின்--- பக்கம் 39)

 

போல்ஷ்சிக்குகள் எவ்வளவு தான் ஏளனமாகப் பேசினாலும் சரி- பழைய இயந்திரத்தை விலக்கி இன்னொன்றை அதனிடத்தில் நிறுவுவதல்ல விசயம். அந்தப் பழைய இயந்திரத்தை சீர்திருத்துவது மட்டுமே விஷயமாகும்-தோழர் பஸாராவின் இந்த வாதங்கள் எல்லாம் முதலாளிவர்க்கத்தின் வாதங்களின் மறுபிரதியாகவும், அதன் வர்க்கப்பார்வையின் ஒரு பிரதிபலிப்பாகவும், வியக்கத்தக்க விதத்தில் பயனற்றவையாகவும் இருக்கின்றன. உண்மையில் ருஸ்சியாவில் எங்காவது சோவியத்துக்கள் பூரண அதிகாரம் பெற்றுள்ளன என்று கூறுவது(முதலாளிகள் கூறிவரும், தன்னலங் கருதுவதும், வர்க்கச் சார்பான பொய்யைத் திரும்பச் சொல்லுவதாகும். இல்லையேல் கேலிக்கிடமாகும். பூரண அதிகாரரம் என்பது எல்லா வங்கிகள் மீதும் எல்லா ஆலைகள் மீதும் எனப் பொருள்படும். வரலாறு கொஞசமாவது தெரிந்தவரும், அரசியலுக்கும் பொருளாதாரத்துக்குமுள்ள தொடர்பு பற்றி விஞ்ஞான பூர்வமான விஷய விபரங்களைக் கொஞ்சமாவது அறிந்தவரும் இந்த அற்ப விசயத்தை மறந்து போயிருக்க முடியாது. (அரசும்- புரட்சியும் லெனின்)

 

நமது நோக்கம் ஒவ்வொரு உழைப்பாளரும் உற்பத்திக்கான உழைப்பில் எட்டு மணி நேரப் பணியை முடித்த பிறகு ஊதியமின்றி அரசுபணிகள் ஆற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான மாறுதல் குறிப்பான இடாப்;பாடுகள் நிறைந்தது. ஆனால் இந்த மாறுதல் மட்டுமே சோசலிசத்தின் இறுதி உறுதிப்படுத்தலை இறுதி உறுதிப்படுத்தலை உத்திரவாதம் செய்யமுடியும்.( சோவியத் அரசாங்கத்தின் உடனடிப்பணிகள்--லெனின்)

 

தொழிலாளர் வர்க்கம் பழைய முதலாளித்துவ சமுதாயத்திலிருந்து ஒரு இனப் பெருஞ்சுவற்றால் பிரிக்கப் பட்டிருக்கவில்லை. மேலும் ஒரு தனிநபர் இறந்து போகும் விவகாரத்தில் இறந்தவர் சதாரணமாக தூக்கிச் சென்று விடப்படுவதைப் போல் புரட்சியின் போது நடப்பதில்லை. பழைய சமுதாயம் சிதைவுறும் போது அதன் பிணத்தை சவப்பெட்டியில் வைத்து ஆணி அடித்து சவக் குழியில் புதைத்துவிட முடியாது. நமது மத்தியிலேயே அது உருக்குலைகிறது, பிணம் அழுகுகிறது நமக்கு நச்சிடுகிறது.

(லெனின் பஞ்சத்தை முறியடிப்பதன் மீதான அறிக்கை)

 

சோவியத் பொறியியலாளர்கள், சோவியத் ஆசிரியர்கள் சலுகை பெற்றவர்கள் அதாவது மிகவும் அதி உயர்திறனும் மிகச் சிறந்த அந்தஸ்த்தும் உள்ளவர்கள் மத்தியில், சோவியத் ஆலைகளில் உள்ள தொழிலாளர்கள் மத்தியில் முதலாளித்துவ நாடாளுமன்றவாதத்திற்கே உரித்தான முற்றும் முழுதான எல்லா எதிர்மறைத் தன்மைகளும் இடையறாது நெடிய, விடாப்பிடியான மாற்றம் மீண்டும் மீண்டும் நடத்தும் போராட்டத்தில் பாட்டாளிவர்க்க ஸ்தாபனம் கட்டுப்பாட்டில் மட்டும் சிறுக சிறுக இந்தச் சனியனை வெற்றி கொள்கிறோம்.(லெனின்-இடதுசாரி கம்யூனிசம்)

 

ஒரு கம்யூனிச சமுதாயத்திற்கு முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து மாற்றமடைவது கம்யூனிசத்தை நோக்கி அது வளர்வது ஒரு அரசியல் ரீதியில் மாறுதலடையும் காலகட்டமின்றி சாத்தியமில்லை. இந்தக் காலகட்டத்தில் அரசு புரட்சிகர பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமாக மட்டுமே இருக்கமுடியும்.(லெனின்-அரசும் புரட்சியும்)

 

எல்லாப் புரட்சிகளிலும் இந்த வரலாற்று அனுபவத்தைத் தான், இந்த வரலாற்று பொருளாதார அரசியல் படிப்பினையைத்தான் மார்க்ஸ் தனது இரத்தினச் சுருக்கமான, கூர்மையான தெளிவான வரையறுக்கப்பட்ட சூத்திரமாகத் தொகுத்தது தான் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்.(லெனின்-சோவியத் அரசாங்கத்தின் உடனடிக் கடமைகள்)

 

ஒவ்வொருவரிடம் இருந்தும் அவருடைய ஆற்றலுக்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் அவருடைய தேவைக்கு ஏற்ப என்னும் விதியை சமுதாயம் அனுசரிக்கையில் தான், அதாவது மக்கள் தாமே மனமுவந்து தமது ஆற்றலுக்கேற்ப வேலை செய்யும்படி சமுதாய ஒட்டுறவுக்கான அடிப்படை விதிகளைப் பற்றியொழுக அந்த அளவுக்குப் பொருளுற்பத்தி ஆற்றல் மிக்கதாய் விடும்போது தான் அரசு பூரணமாய் உலர்ந்தே உதிர முடியும். வேறொருவரைவிட நாம் அரை மணிநேரம் வேலைசெய்யவில்லையா? வேறொருவரைவிட நாம் குறைவாய் சம்பளம் பெறவில்லையா என்று ஷைலாக்கின் கல்நெஞ்சுடன் கணக்கிட்டுப் பார்க்கும்படி நிர்ப்பந்தம் செய்யும் முதலாளித்துவ உரிமையின் குறுகிய வரம்பு அப்பொழுது கடக்கப்பட்டுவிடும். அப்பொழுது சமுதாயத்தின் உற்பத்திப் பொருட்களை விநியோகிக்கையில் அனைவரும் பெறவேண்டிய அளவை ஒழுங்கு செய்யவேண்டிய தேவையிருக்காது. ஒவ்வொருவரும் தமது தேவைகளுக்கேற்ப தடங்கலின்றி சுதந்திரமாய் எடுத்துக்கொள்வர். அரசும் புரட்சியும்---லெனின்)

; ;
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் வர்க்கப்போராட்த்தின் முடிவல்ல. ஆனால் புதிய வடிவங்கள் அதன் தொடர்ச்சியாகும் தோற்கடிக்கப்பட்ட ஆனால் துடைத்தெறியப்படாத ஒரு முதலாளித்துவ வர்க்கத்துக்கு எதிராக மறைந்து போகாத எதிர்ப்பைத் தருவதை நிறுத்தாத, ஆனால் எதிர்ப்பை மேலும் ஆழப்படுத்தியுள்ள ஒரு முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக வெற்றி பெற்று அரசியல் அதிகாரத்தை கரங்களில் எடுத்துக்கொண்ட பாட்டாளிவர்க்கத்தால் தொடுக்கப்படும் போராட்டமே பாட்டாளிவர்க்க சர்வாதிகாரமாகும்.(லெனின் சுதந்திரம் சமத்துவம் என்ற முழக்கங்களால் மக்களை ஏமாற்றுவது பற்றி உரைக்கு முன்னுரை)

 

மேற்கூறிய ஆசான்களின் வாதங்கள் ஒரு கம்யூனிச சமுதாயத்தை உருவாக்க மிக நீண்ட நெடிய போராட்டத்தை தொடர்வதையும் அது பாட்டாளிவர்க்கம் தனது கைகளில் அரசை தக்கவைப்பது அவசியமானது என்பதை காட்டுகிறது. (அதாவது சோசலிச சமுதாயத்தில்) மொத்த மக்களின் உடமை முறைக்கும் கூட்டுறவு உடமைமுறைக்கும் இடையிலான வேறுபாடுகள் நீடிக்கின்றன. தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்குமிடையில் நகரத்துக்கும் கிராமத்துக்கும், உடல் உழைப்புக்கும், மூளை உழைப்புக்கும் தேவைக்கேற்றவாறு இல்லாது உழைப்புக்கேற்றவாறு ஊதியம், வினியோகம் இருக்கும் வரை செல்வத்தை பகிர்ந்து கொள்வதிலும், வேறுபாடுகள் தொடர்கின்றன. இங்கு வர்க்கப்போராட்டம் தொடர்கிறது. இப்போராட்டம் இத்தன்மையில்லாது ஒழிகின்றபோது வர்க்கத்தைப் போல் அரசு அற்றுப் போகின்றது. இப்படியிருக்க கரிகாலன் மார்க்சியத்தின் மீது நடாத்தும் தாக்குதல் மார்க்சியத்தை திரிபாக்கி முதலாளித்துவத்தை மீட்க முனைகின்றார். அரசு உதிரக்காணவில்லை என்கிறார். சோசலிசத்தில் ஒரு அரசு உதிர்வதில்லை. மாறாக அங்கு வர்ககப்போராட்டம் பிரதானமானது. இச் சோசலிச காலகட்டம் சில தலைமுறைக்குத் தொடரும். சோசலிச காலகட்டத்தின் முடிவிலேயே அரசு உதிரத்தொடங்குகிறது. இங்கு அரசு உதிர்வதென்பது நீண்ட நெடிய போராட்டம் அரசுக்குள்ளும் நடைபெறுகிறது. அது வர்க்கப் போராட்டத்தின் ஊடாக தொடர்கிறது. அரசை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றக் கூடாது என்ற கரிகாலனின் வாதம் அப்படியே ஏகாதிபத்தியத்திடம் இருந்து வாந்தி எடுத்ததே. அரசையும் கைப்பற்றக் கூடாது என்றால் எதையும் சாதிக்கமுடியாது. கரிகாலன் விரும்பியது போல் சோவியத்தில் குருசேவ் எல்லா மக்களின் அரசு எனக் கூறி கதவைத் திறந்தபோது(மேல் அட்டவணையை பார்க்கவும்) அங்கு பாட்டாளிவர்க்கம் பாதுகாத்த உரிமைகள் புதைகுழிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு என்பது ஒரு வர்க்கம் சார்ந்ததே. அரசு எந்த வர்க்க அரசோ அது சார்ந்த சமூகம் இருக்கும். ஒரு புரட்சியில் பாட்டாளிவர்க்கம் ஆட்சியை கைப்பற்றி முதலாளித்துவத்திடம் (தலையை மாற்றி) ஒப்படைக்க கோருவோர் யார்? ஜனநாயகம் எனக் கூறி கூக்குரலிடும் இவ் ஏகாதிபத்தியங்களே. கரிகாலன் என்ன விதிவிலக்கா.

 

ஒரு அரசுக்கெதிராக போராட பாட்டாளிவர்க்கம் சார்ந்த அரசை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அது தனக்கே உரிய வடிவத்தை முன்வைக்கும். இதை அக்கட்சியே செய்ய முடியும். அப்படி இருக்க பெயர் தெரியாத இச் சமூதாயத்தில் உள்ள யாரோ ஒரு முதலாளித்துவ சிந்தனையாளரை ஆட்சியில் அமர்த்த வேண்டும் எனக் குரல் கொடுப்பது என்பது எந்த வர்க்கத்திற்கு கரிகாலன் சேவை செய்கின்றார் என்பதை நாம் அறியமுடியும். சோவியத் சரி, சீனா சரி ஆட்சியை கைப்பற்றிய பின் வர்க்கப்போராட்டம் கட்சியில் தீவிரமடைகின்றது. அங்கு முதலாளித்துவ கட்சிக்குள் இருந்தே திரிபுவாதமாக வெளிப்படுகிறது. அங்கு கட்சி தொடர்ச்சியான போராட்டத்தை நடத்துகின்றது. கட்சிக்குள் இருவழிப் போராட்டம் பிரதானமாக இருப்பதாகவும் இருக்கிறது. எப்போதும் இதுவே பிரதானமாகவும் உள்ளது. கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் எல்லா முதலாளித்துவவாதிகளும் கட்சியின் ஏதோ ஒரு கருத்தின் பின் அணிதிரண்டு போராட்டம் கட்சிக்குள் தீவிரமடைகின்றது. அங்கு அரசை கைப்பற்ற இரு வர்க்கமும் போராட்டத்தை கட்சிக்குள் தொடர்கிறது. இது தொடர்ச்சியாக ஒவ்வொரு கணமும் நடைபெறுகின்றது.

 

அரசு உலர்ந்து உதிர்வது என்பது தன்னகத்தே தனக்குள் நிகழ்கின்றது. இங்கு அரசு என்கின்ற போது படிமுறை வளர்ச்சியின் ஊடாக நீண்ட போக்குகள் ஊடாக அனைத்து மக்கள் அரசாக மாற்றம் பெறுகின்றன. ஒரு பூ, காயாகி பழமாகி பின் உலர்வது என்பது தனக்குள் மாறுகின்றது. தனக்குள் பல போராட்டத்தை நிகழ்த்துகின்றது. இதுபோல் தான் அரசும் உலர்ந்து உதிர்கிறது. அரசு என்பது ஒரு வர்க்கத்தை அடக்க இன்னுமொரு வர்க்கம் பயன்படுத்தும் அடக்குமுறைக் கருவியே. அந்த வகையில் பாட்டாளிவர்க்கம் அரசைக் கைப்பற்றவும் தொடர்ந்து அதை பாதுகாக்கவும் சுரண்டும் வர்க்கம் மீது அடக்குமறையைக் கைக்கொள்ளவும் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை கையாளவேண்டும். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தில் ஜனநாயகத்தில் என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமானதே. அது போல் சமத்துவமும் இங்கு அனைத்து வகை முதலாளித்துவ செயற்பாட்டுக்கும் சுதந்திரம் சமத்துவம் மறுக்கப்படும். படிப்படியாக அழிக்கப்படும். இது நீடித்த ஒரு வர்க்கப் போராட்டமே. இதை நிகழ்த்த பாட்டாளிவர்க்க அரசு தேவையானது. இதை எல்லாம் நிராகரிக்கின்ற கரிகாலன் சுரண்டும் வர்க்கம் ஆட்சியை பேண முன்கூட்டியே அரசை கைப்பற்றக் கூடாது என்கின்றனர். கட்சிக் கோட்பாட்டின் இறுக்கத்தை இல்லாது ஒழிக்க வேண்டும் என்கின்றார். அதாவது குருசேவ் செய்தது போல் (அட்டவணையைப் பார்க்கவும்) செய்யவேண்டும் என்கின்றார். கரிகாலன் கனவுகள் திரிபான கட்சியாக மாறும் போது மட்டுமே சாத்தியமானது. பாவம் கரிகாலன் முன்கூட்டி கட்சிகளைத் திரிபாக்க முனையும் முயற்சி அடித்து நொருக்கப்படும். குருசேவ் செய்ததை இன்றே ஆரம்பத்தில் செய்ய முனையும் கரிகாலன் போன்ற முதலாளித்துவ திரிபுவாதிகள் என்ன தான் முக்கினாலும் முடியாது. ஏன் எனில் மக்கள் வரலாற்றை அதன் போலித்தனமான ஜனநாயக் கூக்குரல்களையும் போலிச் சோசலிசத்தையும் போலிக் கம்யூனிசத்தையும் கண்டு அதிலிருந்தே தம்மை புரட்சியுடன் இணைக்கின்றனர்.

 

கரிகாலன் போன்றோரும் அது சார்ந்த மார்க்சிய முகமூடிகளும் எல்லா விடுதலைப் போராட்டத்திலும் உருவாகினார்கள், உருவாகுவார்கள். ஏனெனின் சமுதாயம் வர்க்கங்களாக பிளவுபட்டுள்ளது. வர்க்க ஆதிக்கத்துக்கு உள்ளானவர்களே மக்கள். பாட்டாளிகளுக்கு எதிரான மட்டுமல்ல முதலாளியின் நண்பனாகவும் தோழனாகவும் நின்று போராட முனைகின்றனர் திரிபுவாதிகள். இதுவே கரிகாலன் போன்ற அவதாரிகள். குருசோவ், டெங், கரிகாலன் என யாரும் சமுதாயத்தில் தவிர்க்கமுடியாது தொடர்ந்து உருவாகும் முதலாளித்துவ மீட்பாளர்களே. இவர்கள் மிக அபாயகரமானவர்கள். கரிகாலன் கருத்தையே கொண்டுள்ள மனிதம், உயிர்ப்பு சந்தர்ப்பவாதமாக இருந்தபடி ஒரு இரு சொற்களால் வெளிவருகின்றனர். உழைக்கும் மக்களுக்கு உடனடியாக வெறுப்பூட்டும் அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தைப் போன்று அபாயகரமானதும் ஊறுவிளைவிக்கக் கூடியதும் அல்ல மூடிமறைக்கப் பட்ட சந்தர்ப்பவாதம.; தனது சந்தர்ப்பவாத நடைமுறைக்கு உரிய தருணம் வரவில்லை என்றும் இன்ன பிறவாகும் என நிருபிக்க அடுக்கடுக்காக மார்க்சிய சொற்தொடர்களைப் பயன்படுத்துகிறது.(லெனின்)

 

இன்று அரசு இயந்திரம் (பொலிஸ் இராணுவம் நிர்வாக அமைப்புக்கள்------- என அனைத்தும்) மீது வர்க்கம்(தரகு, நிலப்பிரபுத்துவம்) ஆதிக்கம் செலுத்தவில்லை என கரிகாலன் வாதிடுகிறார். அப்படியாயின் இந்த அரசு இயந்திரம் சரியானது என்கின்றார். நபர்களை மாற்றினால் சரி என்கின்றார். அதுவே பாட்டாளிகளின் கடமை எனகின்றார். எவ்வளவு கடைக்கோடித்தனமான திரிபுவாதத்துடன் கூடிய முதலாளித்துவ மீட்பே இது. புரட்சிகர அமைப்பு ஆட்சியைக் கைப்பற்றாது தொடர்ச்சியாக பல ஆயிரம் வருடங்கள் புரட்சியை நடத்திகொண்டிருக்க வேண்டும் என்கிறார் கரிகாலன். கடந்து முடிந்த சமுதாயங்களில் பாட்டாளிவர்க்கம் இருந்தது போல் தொடர்ந்து போராடுவது(அரசு அதிகாரத்துக்காக அல்ல) பின் மீண்டும் போராடுவது என இருக்க வேண்டும் என்கின்றார். இது தொழிற்சங்கவாத பொருளாதாரவாத கோரிக்கையே. அரசு அதிகாரத்தை கைப்பற்றாத கோரிக்கையாக(1) அகிலம் (2) அகிலம் இன்று உள்ள திரிபுவாதக் கட்சிகள் போல் போராட வேண்டும் என்கின்றார். அதாவது இச்சமூக அமைப்பை பேணவேண்டும். வெறும் சீர்திருத்தங்களை கோரவேண்டும் என்கிறார். அரசு அதிகாரத்தை கைப்பற்ற முனையாத அனைத்துப் போராட்டங்களும் எவ்வளவு முற்போக்காக இருந்தாலும் இச்சமூக அமைப்பை பேணுவதையே செய்யும். அதை தலைமை தாங்குவோர் நோக்கம் முதலாளித்துவமே. இதை கரிகாலன் மார்க்சியத்தை திரித்தபடி முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்தோடு சேவை செய்கின்றனர். இறுதியாக சிவில் சமூக நிறுவனங்கள் தொடர்பாக கரிகாலன் தொடர்கிறார். இன்று உள்ள சமூக அமைப்பில் சிவில் மற்றும் சமூக வடிவங்கள் அனைத்தையும் காப்பாற்ற முனைகின்றார். இவ் அரசு அமைப்பை பேண தன்னால் இயன்றளவு வன்முறை சாராத பகுதியின் ஊடாக போராடுகிறது. இவ் அரசின் முரண்பாட்டின் வெளிப்பாடாக இச் சிவில் சமூகநிறுவனத்தில் இருந்து அன்னியப்பட்டாலும் அதே சிவில் சமூக அமைப்புகள் இருப்பதுடன் நபர்கள் மாறுகின்றனர். அங்கு அச் சிவில் நிறுவனங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. மாறிமாறி அதே சமூக அமைப்பை பேணுவதை பல வழிகளில் இச் சிவில் சமூக அமைப்புகள் செய்கின்றனர். இதே நேரம் ஒரு புரட்சிகர அமைப்பு இயங்கும் போது அரசமைப்பைக் கைப்பற்றுவதை தனது குறிக்கோளாகக் கொள்கிறது. அப்போது புதிய சமூக சிவில் சமூக அமைப்புக்களை முற்றிலும் மாறாக அமைக்க முனைகிறது. அதாவது பழையதுக்கு மாற்றாக உருவாக்குவதுடன் அதைச் சார்ந்ததுமே புரட்சிகர அமைப்பு செயல்படுகின்றது. அரசமைப்பு உருவாகும் போது முற்றாக பழைய அமைப்பு அடித்து நொருக்கப்பட்டு புதிய அமைப்புக்கள் (இவர்கள் உருவாக்கிய) சமூக வடிவங்களாக உருவாகின்றன. இவற்றின் செயற்பாட்டில் மட்டுமே அரசு உள்ளது. இங்கு தொடர்ந்தும் கட்சி வர்க்கப்போராட்டத்தை தனது இலக்காக கொண்டிருக்கிறது. இச் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து கட்சி தனக்குள் வர்க்கப்போராட்டத்தை பகமை, பகமையில்லாத வழிகளின் ஊடாக போராடுகிறது. சீனாவில் நடைபெற்ற கலாச்சாரப் புரட்சி ஒரு வர்க்ப் போராட்டமே. அங்கு அழிவுகள் நிகழ்கின்றன. புதியன பிறக்கின்றன. இது 20 அல்லது 30 முறை சோசலிச சமுதாயத்தில் நிகழ்கிறது.

 

சிவில் சமூக அமைப்புகளுக்கான சுதந்திரம் என்ற விடயத்தில் சில வடிவங்கள் கட்சியின் நேரடி வழிகாட்டலின் ஊடாகவும். சில மறைமுக வழிகாட்டலுக்கும் உள்ளாகிறது. இது நிலைமைகள் காலகட்டங்கள்--என பல மாறுபட்ட சூழ்நிலையுடன் மாறிக் கொண்டே இருக்கும். சுரண்டலை அங்கீகரிக்கும் சீரழிவை கோரும் அல்லது இது போன்ற அனைத்தும் ஒரு புரட்சிகர அரசின் கீழ் தடைசெய்யப்படும். அதே நேரம் சுரண்டலை எதிர்க்கின்ற அனைத்துக் கருத்துகளும், அனைத்து சமூக வடிவங்களும் அங்கீகரிக்கப்படுகின்றன. அதாவது சோசலிச காலகட்டத்தில் ஜனநாயகம், சமத்துவம் என்பது எல்லோருக்குமானதல்ல. அங்கு இவை ஒடுக்கப்படும் மக்களுக்காக மட்டுமே இவை அனுமதிக்கப்படுகிறது. மற்றைய வர்க்கங்கள் அடக்கப்படுகின்றன. அவர்கள் அனைத்து வடிவங்களிலும் எப்படி வரினும் அனுமதிக்கப்படுவதில்லை.