12052021ஞா
Last updateச, 09 அக் 2021 9am

தமிழ் மக்களின் போராட்டம் வெறும் பாதுகாப்பு யுத்தமா? அல்லது அரசியல் அதிகாரத்துக்கான போராட்டமா?

இன்று தமிழீழப் போராட்டம் தவறானது எனவும் அது குட்டிபூர்சுவா,குறுந்தேசியவாத....... என வரையறுத்து பலர் இன்று கருத்துக்கூறுகின்றனர். அவர்கள் இதிலிருந்து ஜக்கிய இலங்கைப் புரட்சியைக் கோரி நின்றனர். ஜக்கிய இலங்கை புரட்சிககான ஒன்றுபட்ட கட்சியைக்கோரும் அனைவருக்கும் இக்கட்டுரை பதிலளிக்கின்றது. இக்கட்டுரையுடன் மாறனின் கட்டுரைக்கும் சமா 8 இல் மாறனின் கடிதத்துக்கும், மனிதம், உயிர்ப்பு, பனிமலரில் வெளிவந்த மாறனின் கருத்துக்களை உள்ளடக்கியதே இவ் விமர்சனம். அத்துடன் தேடலில் இந்திரனின் கருத்துக்களையும் இக்கட்டுரையில் விமர்சிக்கின்றோம். முதலில் மாறனின் கட்டுரையும் அதைத் தொடர்ந்து எமது கட்டுரையும் வெளிவருகின்றது.

 

சமர் இல் நான் தங்களுடன் பரிமாறிய கருத்துக்கள் தொடர்பாக பதில் அளித்திருந்தீர்கள். ஜக்கிய இலங்கை புரட்சி என்பதுடன் தொடர்புபட்டு நீங்கள் அளித்த பதில் தொடர்பாக எனது கருத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஜக்கிய இலங்கைப் புரட்சி பற்றி பேசுகின்றவர்கள் மாயையான தன்மையில் விரக்தி மனோபாவத்தில் தான் அப்படி ஒரு முடிவுக்கு வந்திருப்பார்கள் குழம்புகிறார்கள் என்கின்ற தங்கள் கருத்து மூலம் ஜக்கிய இலங்கைப் புரட்சி என்பது ஓர் ஆரோக்கியமான கருத்தின் தளத்தினது அல்ல (இக் காலகட்டத்தில்) என்று கூறுகின்றீர்கள் என கருதுகிறேன். எனினும் நீங்கள் சாத்தியப்பாடு ஏற்படும்போது தென்னிலங்கையில் புரட்சிகரசக்திகளின் வளர்ச்சி காணப்பட்டால் பிரிவினையைக் கைவிட்டு ஜக்கியப்பட்ட புரட்சியை நோக்கி போராடவேண்டும் . என சமரில் தொடர்ந்து கூறிவருகிறீர்கள்.

 

எனவே வர்க்கநலன் மீது அக்கறை கொண்ட சக்திகளின் முன்பாக உள்ளது அத்தகைய புரட்சி ஒனறுக்கான சாத்தியம் ஏற்படுகின்ற புறநிலை பற்றிய நம்பிக்கையோடு தொடர்புபட்டவையே ஒழிய ஜக்கிய இலங்கையை நிராகரித்து அல்ல என்பதே எனது நம்பிக்கை. இனி நீங்கள் உட்பட பிரிவினையை வலியுறுத்துகின்ற வாக்கசக்திகள், தேசிய சக்திகள் ஜக்கிய இலங்கையென்கின்ற கருத்தை கண்டவுடன் முன்வைப்பது

 

1) ஜக்கிய இலங்கைக்கு போராடும்போது முதன்மை பிரச்சனையாக உள்ள தமிழ்மக்களது தேசியவிடுதலைப் போரை கைவிடுவதா?

 

2) சிங்கள மக்கள் இனவாதத்தில் உள்ளார்கள். தென்னிலங்கையில் பலம் பெற்ற புரட்சிகர கட்சியில்லை என்கின்ற வாதங்களாகும். இதில்

 

1) வாதத்தை எடுத்துக்கொண்டால் இவ்வாதம் கடந்த கால போலிக் கம்யூனிஸ்ட்களின் அணுகுமுறையிலிருந்து வருகின்ற அச்சம் மதிப்பீடாகும். அதாவது வர்க்கம், தேசிய நலன்களை தேசிய அபிலாசைகளை கணக்கில் எடுக்காது வறட்டுத்தனமானது என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுவருவது. இதில் நிலைமை தெளிவாக்கப்பட வேண்டியதும் புரட்சிகர மார்க்சிய, லெனிய வர்க்க நிலைப்பாடு மாற்றாக முன்வைக்கப்பட வேண்டுமே ஒழிய இதுகாலவரையும் மிகுந்த துன்பத்துக்குட்பட்ட தமிழ் பேசும் மக்களின் சமூக பொருளாதார அரசியல் விடுதலைக்கு வழிகோலுவதே இச் சூழுநிலைக்கு சாத்தியமானது என நீங்கள் முன்வைப்பதன் மூலம் வர்க்க அடிப்படை நலன்ங்களிலிருந்து எழுகின்ற கோசமானது, தேசிய அபிலாசைகளை கருத்தில் கொள்ளாத புத்திஜீவிகளின் நடைமுறையுடன் தமது சிந்தனையை இணைத்தவர்களின் கருத்தமைவு என நிறுவ முற்படுகின்றீர்கள்.

 

இது தேசிய சக்திகளை அறுவடை செய்வதற்காக அல்லது அகநிலை விருப்பிலிருந்து வருகின்ற விமர்சனமாகும். இது விடயத்தில் ஜக்கியம், தேசியம் என்பதில் எனது கருத்தமைவை தெளிவாக்க முயல்கிறேன். வர்க்கநலன் முதன்மையாகும் புரட்சிகர சக்திகள் ஜக்கியம் பற்றிபேசும் போது இது எவ்வகையிலும் தேசிய அபிலாசைகளை, தேசிய நலன்களை கவனத்தில் எடுக்காதது அல்ல. தேசிய விடுதலைப் போரை எப்படி வர்க்க நலன்களுக்கமைவாக எதிர்காலத்துக்கு சரியான திசைவழியில் இட்டுசெல்வது என்கின்ற அவாவினது அடிப்படையிலேயே தான். எவ்வளவு தான் வர்க்கம் பேசிக்கொண்டும் தேசிய நலன்களின் ஊடும், வர்க்கங்களின் ஜக்கியத்து எதிரான கருத்துகளுடன் திருப்தியுறுபவர்கள் தேசிய கருத்தமைவின் எல்லைகளுக்குள் சிக்கியிருப்போரே. இவ்வகையில் 83லேயே வர்க்க நலனும், ஜக்கியமும் பேசிய (என்-எல்-எவ்-டி) இதன் தாய் வடிவம் பாதுகாப்பு பேரவை போன்றன அன்றைய கொதிநிலையை, தமிழ் மக்கள் மீதான பேரினவாத யுத்தத்தை எதிர்கொள்ளாது அடுத்த அடிவைக்க இயலாது என்று (சரியான முடிவுதான்) தமிழீழப்போரை முன்னெடுத்ததுடன் திருப்தியுற்றதும் தமக்கென வர்க்கநலன்கள் அடிப்படையிலான தளத்தை நிறுவுவதை புறக்கணித்தும் தேசிய போரிலும் பலம் அடையாமல் வர்க்கசக்திகளையும் ஒருங்கிணைக்காமல் போனது வரலாறு.

 

பாதுகாப்புப்பேரவை மக்கள் மத்தியில் தமிழீழம், தலைமை மட்டத்தில் ஜக்கிய இலங்கையென கூறியது. நான் கூற விரும்புவது எதுவெனின் வர்க்க நலன், தேசிய நலன் இரண்டையும் எதிர் எதிர் காண்கின்ற, காட்டுகின்ற அணுகுமுறையிருந்து விடுபட்டு தேசிய நலன்களை பூரணமாக பூர்திசெய்கின்ற வர்க்க அணுகுமுறை, வர்க்கசக்திகளது திட்டத்தை நாம் தெளிவாக அடையாளம் காட்டவேண்டும் அப்படி இல்லையெனின் கனடா வருகை தந்தபோது ஒரு கேள்விக்கு பதிலிளித்த பழ- நெடுமாறன் இந்திய கம்யூனிஸ்டுக்கள் எல்லாம் தேசிய இனவிடுதலையை எதிர்த்துத் தொழில்படுவதாகவும், அரசபயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பதாகவும் நமது மக்கள் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி, போலிக்கம்யூனிஸ்ட்டுகளுடன் தனது பணியை முடித்தார். அதற்கும் இவ் வாதத்துக்கும் வேறுபாடு அதிகம் இல்லை அவ் வகையிலேயே தமிழ் தேசிய நலன்களைப் பூர்த்தி செய்கின்ற போர்ப்பரப்பை உருவாக்கும் திட்டத்தை முன்வைப்பது அது வர்க்க நலன்களில் அடிப்படையின் கீழ்ப்படுவது என்கின்ற அணுகுமுறை அதாவது தேசிய நலன்களுக்காக போராடும்போதே அதை சர்வதேசிய நலன்களுக்கு இசைவாக கையாளுகின்ற விதமாக திட்டத்தை வரையறுப்பதென்பதே வர்க்கநலன் கொண்டோரினது அணுகுமுறை என்பது எனது அபிப்பிராயம். அவ்வகையிலேயே

 

'(1) பாரம்பரிய தமிழ்மக்களது சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு யுத்தம்

 

(2) மலையக மக்களது சுயநிர்ணய உரிமைப்போராட்டம்

(3)முஸ்லிம் மக்களது சுயநிர்ணய உரிமைப்போராட்டம்

(4) சிங்களமக்களது, ஏகாதிபத்திய சார்பு தரகு முதலாளிய அரசுக்கெதிரான சுயாதிபத்தியம், வர்க்க சுரண்டலுக்கெதிரான விடுதலை ஆகியவற்றுக்கான போர்ப்பரப்பு ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான திட்டம்.

 

இவற்றை ஒருங்கிணைத்து ஒரு திட்டத்தை இலங்கை புதிய ஜனநாயகப்புரட்சியை

மையமாக கொண்ட சக்திகள் முன்வைக்கவேண்டும்.

 

கட்சியை எப்படி நிறுவுவது என்பது நடைமுறையில் பாருண்மையான நிலைமையை ஒட்டிய விடயமாகும். அதாவது ஜக்கியமென்றவுடன் வடக்கு கிழக்கு பிரதேச வர்க்க சக்திகள் தென்னிலங்கைக்கு ஓடிவந்து சிங்கள மக்கள் மத்தியில் வேலைசெய்ய வேண்டுமென்பது போல நீங்கள் தமிழ்ப்புரட்சி சக்திகள் சிங்கள மக்கள் மத்தியில் ஈடுபாட்டோடு வேலைசெய்ய இயலுமென மிகவும் இலகுபடுத்திய பார்வையில் கருத்தை தெரிவிக்கின்றீர்கள்.

 

பிரிவினையை முன்னெடுத்துக்கொண்டே சிங்கள மக்கள் மத்தியில் உள்ள புரட்சிகர சக்திகளை அணிதிரட்ட வேண்டும். அவர்களுடன் ஜக்கியத்துக்கு முயலவேண்டுமென எப்படி வர்க்க நலம் நாடும் தமிழ் ஈழப்புரட்சி இலக்கு உள்ளவர்களால் கூறமுடிகின்றதோ அதைவிட சிறப்பாக பாதுகாப்புப் போரை, சுயநிர்ணய உரிமைக்கான போரை நிலைமை கோரும் பட்சத்தில் பிரிவினையை உள்ளடக்கிய போரை நிகழ்துகின்ற பிரிவில் இன்னும் சிறப்பாக மற்றைய பிரிவுமக்களுடன் ஜக்கியப்படவும் புரட்சிகர சக்திகளுடன் இணைந்து அவர்களுக்கு பலமளிக்கவும் முடியும.

 

(2) சிங்கள மக்கள் பேரினவாதத்திலுள்ளார்கள். சிங்கள மக்கள் மத்தியில் புரட்சிகர கட்சி இல்லை என்கின்ற வாதம்.

 

சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதம் இல்லையென்றே சிங்கள மக்கள் மத்தியில் புரட்சிகர கட்சி வளர்ச்சி பெற்றுள்ளதென்றும் கூற முடியாத நிலைமையே இன்றைய யதார்த்தம். எனினும் அதன் அர்த்தம் சிங்கள மக்கள் திரள் இனவாதத்தில மூழ்கி அடிமையாகிப்போயுள்ளது என்பது அல்ல. தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுக்கு கொண்டுவர அரசை நிர்ப்பந்திக்க மக்கள் போராடவில்லை என்பதோ இடதுசாரிக் குழுக்களால் அணிதிரட்டப்படவில்லையென்பதும் சரியான புரட்சிகர தலைமை அங்கு செயற்படாத நிலமையை வெளிக்காட்டுகின்றதே ஒழிய சிங்கள மக்களது இனவாதவீச்செனக் கொள்ள முடியாது. இனி புரட்சிகரத் தலைமையின் உருவாக்கம் என்பது வடக்கு, கிழக்கில், தென்னிலங்கையில் இலங்கை தழுவிய அளவில் விருத்தி பெற்று உச்ச நிலைபெற்றுள்ளது. பாசிசத்துடனும் பெருமளவு தொடர்பான விடயமாகும். இங்கு(வடக்கு கிழக்கு) முஸ்லிம் மக்கள் அடித்துவிரட்டப்பட்டு, கொன்று குவிக்கப்பட்டதும், சிங்கள மக்கள் கொல்லப்பட்டதும் தமிழ்மக்களிடமிருந்து எவ்வகை எதிர்ப்பும் வெளிப்படமுடிந்ததா? என்பதையும் அதை வைத்து மக்களை எடைபோடுவது சரியான அணுகுமுறையா? என்பதையும் சிந்தித்துப்பாருங்கள். சிங்கள மக்களிடம் இனவாதமும் பாரம்பரிய தமிழ்மக்களிடம் பிற்போக்கு தேசியவாதமும் முஸ்லிம்களது அணுகுமுறையில் தமிழ்ப் பேரினவாதமும் இருப்பது இன்றைய யதார்த்தம். எதுகூட, எது குறைய என ஒப்பிடுவது அவசியமற்றது. எதுவெனிலும் மக்களிடமிருந்து அகற்றப்பட வேண்டும். புலிகளின் பின்னால் அணிதிரண்டு உள்ள தமிழ் மக்கள் பிற்போக்கான இனவாதத்தை ஏற்றுள்ள மக்களே. மக்களுடைய சிந்தனைகளுக்குப் பின்னால் வாலாக சீரழிவதின் மூலம் மாற்றம் ஏதம் செய்துவிட முடியாது. இன்று உள்ள நிலைமையை எப்படி மாற்றி அமைக்க முயற்சிப்பது என்பதே புரட்சிகர சக்திகளின் பணியாகும். இறக்கும் இராணுவத்தினரை வீரபுருசர்களாக கருதுகின்றனர் என்றும் சிங்கள இளைஞர்கள் பெரும் தொகையில் இராணுவத்தில் சேருவதும் என்று தாங்கள் வைத்த கருத்துக்கள் பெரிதும் மிகையாவையும் உண்மைநிலையை திரிப்பதும் ஆகும்.

 

அண்மையில் ராவயா சஞ்சிகை எடுத்த ஆய்வுக்கணிப்பு பெருமளவு மக்கள் யுத்தத்தை வெறுப்பதை எடுத்துக்காட்டியது. 1000 இராணுவத்தை திரட்டக் கோரிய இராணுவ ஆட்சேர்ப்பு நிலையங்களுக்கு (மாத்திறையில் என ஞாபகம்) 4 பேர் சமூகமளித்திருந்தது உண்மை நிலைமை. எந்த கருத்துக்குப் பின்னும் மக்கள் அணிதிரள வேண்டுமென மக்களுக்கு தலைமையளிக்க ஸ்தாபன வடிவம் அவசியம். அவ்வகையிலேயே ஸ்தாபனம் ஒன்றினது உருவாக்கத்துடனேயே சிங்கள மக்களை வென்று எடுப்பதை பார்க்கமுடியுமே தவிர வெறுமனே மதிப்பிடும் பார்வை நிலைமையை சரியாக மதிப்பிடுவது ஆகாது. அவ்வகையிலான கண்ணோட்டத்தில் தமிழ் பேசும் மக்களை, இந்திய மக்கள் திரளை அணுகினால் கூட அவநம்பிக்கையே ஏற்படும். அடுத்ததாக சிங்கள மக்கள் மத்தியில் எந்தவொரு வர்க்க சிந்தனை கொண்டோரோ ஜனநாயக சக்திகளோ இல்லை என குறிப்பிடும் நீங்களே அதற்கு முன்பாக சமகாலத்தில் முற்போக்கு சிங்கள அரசியல் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கியுள்ளது நல்ல சகுனமே என குறிப்பிடுவதன் மூலம் முரண்படுகிறீர்கள். நடைமுறையில் அவர்கள் வேலைத்திட்டத்தை தெளிவாக்கவில்லை என்பது எமது சமகால நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதேயொழிய அவர்களும் இனவாதிகள் என்பது தங்களது கருத்தை நிறுவ உதவலாமே ஒழியே புற நிலை உண்மையல்ல.

 

சிங்கள மக்கள் மத்தியில் புரட்சிகர ஜனநாயக சக்திகள் ஒருவருமேயில்லை என்ற கூற்று முழு அபத்தமானது. அண்மையில் கனடாவில் இலங்கையில் சமாதான முனைப்புடன் சிங்கள ஜனநாயக சக்திகள் பங்காற்றும் மாநாடு நடைபெற்றது. புளட் இனது போலிப்புரட்சியை நம்பியே ஆயுதப்பயிற்சி பெற்ற சிங்கள இளைஞர்களும் இருந்ததாக செய்திகள் உண்டு. புரட்சித்தத்துவம் புரட்சிகர கட்சி மேலாண்மை பெறாது இலங்கை தழுவி தற்போது உள்ள நிலைமை மேலும் தமிழ்மக்களிடையே புரட்சிகர சக்திகள் பலம் பெறலாமெனவும் புலிகள் பாசிசத்தை வீழ்த்தி தலைமையளிக்குமெனவும் உறுதியுடன் செயற்படும் நீங்கள் சிங்கள மக்களை இனவாதத்திலிருந்து மீட்கின்ற சரியான மார்க்சிய லெனினிய புரட்சிகர கட்சி உருவானது என முன்வைப்பது பெரிய விந்தையாகும். தமிழ் சிங்கள மக்களை பிற்போக்கு கருத்தமைவில் இருந்து விடுவிப்பதில் நம்பிக்கை கொள்வது பற்றி வேறுவேறான அளவீடுகள் பயன்படுத்துவதற்கு வர்க்க கண்ணோட்டத்தில் உள்ள நியாயங்கள் எவை என்பதை தெளிவாக முன்வைக்கும்படி கோருகிறேன். இது அப்பட்டமாக சிங்களவன் மோடன் என்கின்ற வாதத்தின் நாகாரீகமான வர்க்கம் பூசிய வடிவமே ஒழிய வேறல்ல என்பதே எனது கருத்தாகும்.

 

இவ் அடிப்படையிலேயே இயங்கியலை நிராகரித்து சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள் என்ற வாசகத்தை ஆராய்ந்துள்ளீர்கள். சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான போரட்டமோ, பிரிவினைப் போராட்டமோ எதுவெனினும் விஜதுங்கா அரசோ சிறிமா அரசோ, எதிர்காலத்தில் எக்ஸ் அரசோ விரும்பி அங்கீகரிக்காதென்பது மிக வெளிப்படையாக தெரிந்த விடையம். புரட்சிகர வன்முறைப் போராட்டம் மூலமே அதை வென்றெடுக்க இயலுமென்பதால் யாரும் கருத்து மாறுபட்டு கொள்ளமாட்டார்கள்.

 

எனினும் சமரினது பதிவில் நான் சுட்டிக்காட்ட விரும்புவது எதுவெனில் பாரம்பரியத் தமிழ் மக்கள் மத்தியிலான புரட்சிகரவர்க்க சக்திகள் புலிகள் பாசி அபாயத்தை முறியடிப்பது மக்களை பிற்போக்கு கருத்தமைவுகளிலிருந்து விடுவித்து அணிதிரட்டி சுயநிர்ணய உரிமைப்போரில் வெல்கின்ற வளர்ச்சிக் காலகட்டம் வரை சிங்கள மக்கள் ஜ-தே-க- யினை அல்லது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இனை அல்லது அதையொத்த நபர்களை தெரிவு செய்கின்றவர்களாகவே இருப்பார்கள் என்ற வாதமாகும். இயங்கியலை ஏற்கின்ற அதற்காக உழைக்க உறுதி பூண்டுள்ள சமர் தமிழ் தேசியம் என்றவுடன் அல்லது சிங்கள மோடர்களின் மீது இயங்கியலை பிரயோகிப்பது எவ்விதம் எனக்காட்டி இயங்கியல் என்கின்றதை இவ்வகையில் கொச்சைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்கும் வளர்ச்சி நிலையில் பிரத்தியேக நிலைமைகள், விசேட காரணங்கள் நிலவும் பட்சத்தில் பிரிந்து போவதை மக்கள் தீர்மானிக்கும் உரிமை கொண்டவர்கள். ஜக்கியத்துக்கான திட்டங்கள், அதற்கான முயற்சிகள் எதுவுமே செய்வதில் கவனம் செலுத்தாது அகநிலையின் அடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியிலான புரட்சிகர சக்திகளின் வளர்ச்சியைப்பற்றி ஆருடம் கூறுவது(எதிர்வு) அகநிலைக் கண்ணோட்டமேயாகும்.

 

ஜ-தே-க போன்ற அரசிடம் சுயநிர்ணய உரிமை சாத்தியமாகாதென்பது உண்மையே. பாரம்பரிய தமிழர்களது போராட்டம் விடிவை வெல்கின்ற வளர்ச்சி நிலையிலும் தென்னிலங்கையில் புரட்சியின் வளர்ச்சி மந்தமாகத்தான் இருக்கும் என்பது நடைமுறையினூடும் அப்பிரதேசங்களின் புரட்சியின் அக புற நிலைமைகளுடனும் சம்மந்தப்படுத்தப்பட்டது. இதை வெகு எளிதாக யாரும் சொல்லவோ, கணிக்கவோ இயலாது. வடக்கு,கிழக்கில் கூட வர்க்கத் தலைமையிலான தேசிய விடுதலையென்பதற்கான வெற்றிக்கு உடனடி வாய்ப்பிருப்பாதாக யாரும் நிறுவமுடியாதெனவே கருதுகிறேன். எனவே வர்க்க நலன்களினடிப்படையில் தேசிய விடுதலையை பூரணமாக வென்றெடுக்கும் திட்டங்களை வகுக்கவேண்டும். சுயநிர்ணய உரிமைக்கும், சொந்த பாதுகாப்பான போருக்கும் (தேசிய அளவில்) வர்க்கத்தளத்தில்(முஸ்லிம்,மலையக மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான அறைகூவலும் இலங்கையில் புதிய ஜனநாயகப் புரட்சியை மையமாக கொண்ட கட்சியை, வேலைத்திட்டத்தை நிறுவுகின்ற பணியானதுமே வர்க்கநலனை முதன்மைப்படுத்துகின்ற சக்திகளின் திசைவழியாக இருக்க முடியும்.

'

பிரிவினை தான் என்பது இனங்களுக்கிடையே அவநம்பிக்கை கொண்ட சக்திகளையும், தேசிய நலனை முதன்மையாக்கும் சக்திகளையும் அதாவது வர்க்க கருத்தமைவை பலவீனமாக்கும் சக்திகளை அணிதிரட்டவே உதவும். வடக்கு, கிழக்கு தேசியவாதிகளுக்கான எமது சமரசமே பிரிவினைதான் என்பது மேலும் இன அடிப்டையிலான அவநம்பிக்கை கொள்கின்ற சக்தி ஒன்றினால் மக்களை இனவாதங்களிலிந்து விடுவிக்கும் திசையில் பயணிக்க முடியாது. விளைவு தேசியப்போருடன் திருப்தியுறுவதாகவே முடியும். தேசிய இனவிடுதலைக்கு உறுதியான, தெளிவான வேலைத்திட்டத்தை கொண்டிருந்தால் வரலாற்றில் இணைந்த போருக்கு வாய்ப்பாக கூடும் என குறிப்பிடுகிறீர்கள். தமிழ் தேசியஇனத்தின் சுயநிர்ணய உரிமைக்கும்,

 

தற்போதைய காலகட்டத்தில் பாதுகாப்புக்குமான போராட்டமானது தேசிய விடுதலைக்கு போதுமானதல்ல என கருதுவீர்களெனின் அதை தெளிவுபடுத்தியும் உறுதியான தெளிவான வேலைத்திட்டம், சுயநிர்ணய உரிமையினைவிட மேலதிகமான எவற்றை கோர வேண்டுமெனவும் தெளிவுபடுத்தவும். சாராம்சமாக சிங்கள, முஸ்லிம் மக்களில் ஒருவர்கூட தமிழ்மக்கள் மேலான அரசுபயங்கரவாதத்தை, அவர்கள் மீதான இனரீதியான (சிங்கள குண்டா, ஜீகாத்) காட்டுமிராண்டித்தன தாக்குதலை கண்டிக்கவில்லை என்பது மிகத்தவறான தகவல். ஒரு பலமான எதிர்ப்புக் குரலாக மாறாதவாறு இலங்கையின் பாசிச அபாயமுட்பட்ட புறநிலைமைகள் இருக்கின்றது. தமிழ்மக்களிடமிருந்து கண்டனக் குரல் வருவதாகவும் அவ்வகையில் இடதுசாரி அரசியலில் தமிழ்மக்கள் வளர்ச்சியடைந்திருப்பதாகக் கூறுவது மக்கள் திரளையும், உதிரிகளாக அரசியல் பிரக்ஞை கொண்ட முன்னைநாட் போராளிகளையும் சமப்படுத்துவதாகும். முஸ்லிம் சகோதரர்களில் பலர் ஜக்கியமாக, ஒற்றுமையாக வாழ்வதற்கான விருப்பையும் அதற்கான அனுமதியையும் கோரி நிற்கின்றனர். வட, கிழக்கு யுத்தத்தை நிறுத்தக் கோரி மருதானை பள்ளிவாசல் முன்பு முஸ்லிம் முற்போக்கு இளைஞர் அணி ஆர்ப்பாட்டம் செய்ததாக படித்தது ஞாபகம் வருகின்றது. சிங்கள புத்திஜீவிகளிடமிருந்து ஆணித்தரமாக பிரிந்து போவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து கருத்துக்கள் பத்திரிகைகளில் வெளிவருவதை பார்க்கமுடிகின்றது.

 

இந்நிலையில் தமது கருத்துக்கள் தவறான திசையில் வழிகாட்டுபவையாகும். அதற்காக புரட்சிகர கருத்துடையோர் பெருகியிருப்பதாகவும் எல்லாமே பிரகாசமாக இருப்பதாகவும் கூறவில்லை. பாரம்பரிய தமிழ்மக்களிடையே புரட்சிகர அரசியலை நிலைநிறுத்த உழைக்கும் போது அல்லது அத்திசையில் தற்போது எந்த நிலைமைகளை ,இடர்பாடுகளை எதிர் கொள்கின்றோமா அதையொத்த ஒரு சூழ்நிலையே மறுதரப்புகளிலும் நிலவி வருகின்றது. இவற்றை வெல்வது, புரட்சிகர கட்சியை கட்டுவது, கட்சி மக்களை அணிதிரட்டுவதுடன் தொடர்பான விடயமாகும்.

 

சமர் இதழ் தமிழ் தேசிய இனவிடுதலைக்கு பிரிவினை தான் தீர்வென முன்வைக்கின்றது, பாரம்பரிய தமிழ்மக்கள் எதிர் கொள்ளும் பேரினவாதம் போன்றே முஸ்லிம் மக்களும் இன்று எதிர் நோக்கி வருகின்றார். எனினும் சமர் முஸ்லிம் மக்கள் பிரிவினை மூலம் தமது விடுதலையை வென்று எடுக்க வேண்டுமென முன்வைக்காமல் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதை தமது கவனத்தில் கொண்டு முரண்பாடுகளுக்கான எமது சுயவடிவினை பரிசீலித்து சரியான கருத்துக்களை வந்தடையவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு ஆகும்.

 

மாறன் கனடா.


தமிழீழம் என்ற கோசத்தை அடிப்படையாக வைத்து போராடுபவர்கள் வெறும் குட்டிபூர்சுவா வர்க்க பிரதிநிதிகளா? ஒரு தேசிய இனப் போராட்டத்தை முன்னெடுத்துப் பிரிந்து போயின் அது சர்வதேசியத்துக்கு எதிரானதா? தமிழ் மக்களின் போராட்டத்தை வெறும் பாதுகாப்பு யுத்தமாக மட்டுமாகவா நடத்தவேண்டும்?... என இன்று தமிழீழத்தின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி இன்றைய முரண்பாடுகளை காணத்தவறியதுடன் தமது விவாதங்களையும் தொடர்கின்றனர். இன்று தமிழீழம் எனும் கோசம் வைப்பவர்கள் இலங்கைக்கான வர்க்கப் போராட்டத்துக்கு எதிரானவர்கள் என கற்பனையில் முடிவெடுக்க முனைந்துள்ளனர். இன்று இலங்கைக்கான கம்யூனிஸ்ட் கட்சி உள்ளதாகவும் அது தமிழ் மக்களை பிரிந்து போவதுடன் கூடிய சுயர்நிணய உரிமையை அங:கீகரித்துள்ளதாகவும் இச் சர்வதேசியவாதிகள் கற்பனை செய்தபடி எம்மை எதிர்க்கின்றனர். நாம் எதிர்க்க முற்படுவதால் அது வர்க்கப் போராட்டத்தை சிதைத்து ஒரு குட்டிபூர்சுவாப் போராட்டமாக மாறவும் கற்பனை பண்ணியுள்ளனர். இன்று மண்ணிலுள்ள யதார்த்த நிலையிலிருந்து ஒரு முடிவுக்கு வரமுடியாது போயுள்ளனர். மண்ணில் இன்றைய நிலைமைகள் நிலையானதல்ல. அவை மாறுபடக்கூடியவை. ஒரு திட்டம் என்பது எதிர்காலத்தில் மாறுபடும் நிலைமையை வைத்து தயாரிப்பதில்லை. ஏனெனில் அது எப்படி மாறும் எனக் கூறமுடியாது.

 

இன்று எது உள்ளதோ அவைகளை முனவைத்தே ஒரு திட்டம் உருவாகின்றது. ஒரு கட்சி, முன்னணி மற்றும் வெகுஜன ஸ்தாபனஙகள் எனத் தொடரும் அமைப்பு வடிவங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கட்சியமைப்பில் எபபோதும் எல்லாம் முழுமையாக முன்வைக்க வேண்டும். அங்கு தெரிந்த ஒரு பிரச்சனையை நிலைமையுடன் மறைக்கவோ, நிறுத்தவோ கூடாது. மற்றைய அமைப்பு வடிவங்கள் அன்றைய பிரதான முரண்பாட்டுடன் இசையும் வண்ணம் அது கூட்டிக்குறைப்புகளைக் கையாளுகின்றது.

 

இந்த வகையில் சமர் இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டை தெளிவாக சுட்டிக்காட்ட விரும்புகின்றது. இவ்விதழில் (சமரில்) பிரசுரிப்பது ஒரு முன்னணித்திட்டமே. இத்திட்டம் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கானது. இத்திட்டம் தமிழ் தேசியவிடுதலையை அதாவது முற்போக்குத் தேசியத்தை முன்னெடுக்கும் வகையில் உருவானது. இது இலங்கைப் புரட்சிக்கான ஒரு முன்னணியல்ல. இலங்கைப் புரட்சிக்கான பல கூறுகளைக் கொண்டிருந்த போதும் அதைப் பொதுக்கூறாக மாற்றுவது சிங்களப் புரட்சியாளர்களின் பிரதான கடமையாகவுள்ளது.

 

இன்று தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கம் மட்டுமே முற்போக்குத் தேசியத்தை உயர்த்த முடியும். தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சியின் உருவாக்கத்தை தொடர்ந்து பெரும்தேசிய இனத்தில் உருவாகும் கம்யூனிஸ்ட் கட்சி தேசிய இன முரண்பாட்டைக் கையாளும் நடைமுறை, கோட்பாட்டின் அடிப்படையில் மட்டும் தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களுடன் ஒன்றிணையும். இவைகளை நாம் இனி கட்டுரை மீதான விமர்சனத்தில் பார்ப்போம்.

 

பிரிவினைப் போராட்டமாகத் தான் முன்னெடுக்க வேண்டுமென்பதல்ல. தனது சொந்த தேசிய இனத்தினின்று பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்காக போராடும் போதே, பிற தேசிய இனங்களுடனான ஜக்கியத்திற்கான முழக்கத்தை முன்வைத்துப் பாட்டாளிவர்க்க ஒற்றுமைக்குப் பாடுபட வேண்டிய வர்க்கக் கடமையை பாட்டாளி வர்க்கம் மறுக்க இயலாது என்ற மாறனின் வாதத்தில் எமது நிலையை மறந்தபடி கூறுகின்றார்.

 

மக்கள் மத்தியில் ஜக்கியத்துக்கான முழக்கத்தை எதன் அடிப்படையில் கோருவது. இன்று சிங்கள இனவெறி அரசின் கொடூர முகங்களை மக்கள் காண்கின்றனர். சிங்களப் புரட்சிகர சக்திகள் சிங்கள மக்கள் மத்தியில் வேலை செய்வதை நாமே காண முடியாதுள்ளபோது எப்படி மக்களை அதை காணும்படி கோருவது? தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ஜக்கியத்துக்கான கோரிக்கையை முன்வைப்பது ஒரு நிபந்தனை. இவ்வாறு வைக்காத கட்சி ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியல்ல. மக்கள் இன்று முகம்கொடுக்கும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு முற்போக்குத் தேசியத்தை உயர்த்திப் பிடிக்க புதிய ஜனநாயக உருவாக்கம் உருவாகும் முன்னணியென்பது குட்டிபூசுவா பிரதிநிதிகளையும்,அதன் சிந்தனையுடன் உள்ளடக்கியதே. இம்முன்னணியில் தமிழ் குட்டிபூர்சுவா, தமிழ் முதலாளித்துவ பிரிவினர் போன்றோர் தரகு முதலாளித்துவம், ஏகாதிபத்திய எதிர்ப்பில் ஜக்கியப்படுவர். இங்கு கட்சி அதற்கு தலைமை தாங்கும்.

 

இப்பிரிவினர் ஒருக்காலும் ஜக்கிய இலங்கை என்ற கோட்பாட்டை தமது திட்டத்தில் ஏற்றுக் கொள்ள மறுப்பர். எப்படி இனவிடுதலைப்போராட்டம் ஆரம்பத்தில் குட்டிபூர்சுவாக்களின் தேவையாக உருவானதோ அதை ஒரு புதியஜனநாயகப் புரட்சிக்கு உள்ளடக்க முனையும் பாட்டாளி வர்க்கம் அவர்களின் தேசியக் கோரிக்கையை வெறும் பூர்சுவாக் கோரிக்கை யென சொல்லி நிராகரித்துவிட முடியாது. இனவெறி அரசின் படுகொலைகள் தொடரும் இந்நிலையை மறந்து அவர்களை ஜக்கியப்பட்ட புதியஜனநாயகப் புரட்சிக்கு அறைகூவி விடமுடியாது. இன்று பாசிசப் புலிகளைப் பலப்படுத்த முனையும் குட்டிபூர்சுவா இளைஞர்களின் இணைவு கற்பனையானதல்ல.

 

அவர்களின் இணைவுக்கான காரணத்தை மறந்த சர்வதேசவாதிகள் ஒருக்காலும் அவர்களையோ, முற்போக்குத் தேசியத்தையோ வென்று விடமுடியாது. அவர்களை வென்றெடுக்க சிங்களப் புரட்சியாளர்கள் இன்று உதயமாகி மக்களை தமக்குப் பின்னால் அனிதிரட்டி விடவில்லை. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தீவிர வளர்ச்சிக்கான 15-20 ஆண்டுகளில் சிங்களப் புரட்சிகர சக்திகள் எந்த முதலடியைக்கூட வைக்கவில்லை.

 

இது இன்னும் பலவருடங்கள் தொடரலாம். ஆனால் தமிழீழப் போராட்டம் தனது அடிகளை முன்வைத்தபடி உள்ளது. சிங்களப் புரட்சிகரப் பிரிவினர் சிங்கள மக்களை தமக்குப் பின் அணிதிரட்டி ஒரு அமைப்பாக மாறும் வரை தமிழீழப் போராட்டம் நின்றுவிடாது. நடக்கும் போராட்டம் ஒரு தமிழீழப் போராட்டமாகப் பரிணமிப்பின் அதை பூர்சுவா வர்க்கத்திடமோ, தரகுமுதலாளித்துவத்திடமோ சர்வதேசியவாதிகள் ஒப்படைக்கவேண்டுமா? தமிழீழம் உருவாகின் அதை தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சியே கைப்பற்றவேண்டும். அதனூடாக மீண்டும் இணைவோர் சர்வதேசியவாதிகளாக தமிழீழ மககள் இருக்கமுடியும். பாதுகாப்பு யுத்தத்தை தமிழ் பாட்டாளி வர்க்கம் கையில் எடுப்பது சரியானது என்ற வாதம் சுயநிர்ணய உரிமையை மறுப்பதாகும். தமிழ் பாட்டாளிகள் பாதுகாப்பு யுத்தம் என்ற எல்லையை தாண்டக்கூடாது. அதாவது சிங்களப் பாட்டாளி வர்க்கம் எழும்வரை யுத்தத்தை பாதுகாப்பு யுத்தமாக மட்டுபடுத்தக் கோருவதே. பாதுகாப்பு யுத்தம் ஏன் சுயநிர்ணய் உரிமைக்கான யுத்தமாக அமையக் கூடாது.

 

ஒரு யுத்தமென வரையறுப்பின் அவ் யுத்தம் ஒரு நோக்கை கொண்டது. தமிழ் மக்களின் தேசியத்துக்கான யுத்தம் வெறும் பாதுகாப்புக்கான எல்லை யுத்தமல்ல. அவ்யுத்தம் பிரிந்து போகக் கூடிய சுயநிர்ணய உரிமைக்கான யுத்தமே. இவ் யுத்தம் சிங்களப் பாட்டாளி வர்க்கம் முன்னணிக்குப் வராதவரையில் பிரிவினையாக மாறிவிடும். இன்று புலிகள் உள்ள இடத்தில் தமிழ் பாட்டாளி வர்க்கம் இருப்பின் அங்கு பிரிந்து போகும் வகையில் யுத்தத்தை நடத்துவது தவிர்க்கமுடியாது. முதல் வரியில் தமிழ் பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்கவேண்டும் என்றவர் அது பிரிவினையாக இருக்கக் கூடாது என்றவர் அடுத்தவரியில் அதைப் பாதுகாப்பு யுத்தமாக இருக்கக் கோருகின்றார். பாதுகாப்பு யுத்தம் என்ற வாதம் பிரிவினையை உள்ளடக்கிய சுயநிர்ணயத்தை கோருவதே.

 

இப்பிரிவினை சிங்களப் பாட்டாளி வர்கத்தின் எழுச்சியுடன் சம்மந்தப்பட்டது. சிங்களப் பாட்டாளி வர்க்கம் எழுச்சியின்றி இருப்பின் பிரிவினை தவிர்க்க முடியாதது. இது சர்வதேசியத்துக்கு எதிரானதல்ல. இவ்விடத்தில் குட்டிபுர்சுவா வர்க்கம் இருப்பின் கூட இதை எதிர்க்கமுடியாது. ஏன் எனெனில் அப்போராட்டம் ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்துவது. ஒடுக்கப்படும் மக்களை விடுவிக்க ஒடுக்கப்படும் இனக்கட்சி முயலும்போது ஒடுக்கப்பட்டவர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க மறுப்பின் அம் மக்களை விடுவிக்க ஒடுக்கப்பட்ட இனம் பிரிந்து போவதும் தவிர்க்கமுடியாது.

 

இதனூடாகவே ஒடுக்குமின மக்களின் விடுதலையைப் பெறமுடியும். தமிழ் பாட்டாளி வர்க்கத்தை பொறுத்தவரையில் தனது சொந்த தேசிய இன சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை கையிலெடுக்கும் போதே பிறதேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்கான கோசங்களை முன்வைப்பதும் தேசிய இனங்களிடையே ஜக்கியத்துக்கான முழக்கத்தை முன்வைக்க வேண்டும்.

 

தனது தேசிய இனப் போராட்டத்தை நிகழ்த்தும் போதே அனைத்து தேசிய இனங்களினது சுயநிர்ணய உரிமைகளை உத்திரவாதம் செய்யும் இலங்கையின் புதியஜனநாயகப் புரட்சியை நடாத்திடத் தனது பங்கைச் செலுத்த வேண்டும். என வாதிட்டுள்ளனர். பிற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைக்காக கோசங்களை முன்வைப்பது என்பதில் கோசங்கள் என்பது எதை தமிழ் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையைக் கோரும் அதேநேரம் மற்றைய தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதேநேரம் பெரும்பான்மை ஒடுக்கும் இனத்திடம் தமிழ் மக்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மைத் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க குரல் கொடுக்கவேண்டும. ஒவ்வொரு தேசிய இனமும் தன் சுயநிர்ணய உரிமையை வென்றுடுக்க ஒடுக்கும் இனத்துக்கு எதிராக தனியாகவோ, ஜக்கியப்பட்டோ கோரமுடியும்.

 

உதாரணமாக முஸ்லிம் மக்களின் சுயநிர்ணய உரிமையைத் தமிழ் தேசிய இனம் அங்கீகரித்தலும், அதேநேரம் சிங்கள இனவெறி அரசிடம் தனியாகவோ ,சேர்ந்தோ, கோரமுடியும். இதைவிடுத்து முஸ்லிம் மக்களிடம் சென்று தமிழ் கம்யூனிஸ்டுக்கள் நாம் உங்களுக்கு சுயநிர்ணய உரிமையை வென்று தருவோம் எனக் கூறி இன்றைய நிலையில் வேலை செய்யமுடியாது. ஏனெனில் முதலில் தமிழ் கம்யூனிஸ்டுக்களை முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

 

இதுவே தமிழ் சிங்கள நிலைமைகூட. இன்றைய நிலையில் இலங்கையில் ஒவ்வொரு தேசிய இனமும் தனியான கம்யூனிஸ்ட் கட்சியைக் கொண்டே ஆரம்பிக்க முடியும். இதுவே எதிர்காலத்தில் ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சியுடன் மட்டுமே இணையமுடியும். இதை விடுத்து ஒரு கட்சியுள்ளது என்று கற்பனை பண்ணின் அது வெறும் கனவு மட்டுமே. இக்கட்சிக்கு இடையிலான ஜக்கியம் என்பது ஒரு பரஸ்பரம் புரிதலுடன் கூடியதே. இவ் ஒவ்வொரு கட்சியும் தனது திட்டத்தில் ஜக்கியப்பட்ட கட்சிக்கான கோரிக்கையை நிபந்தனையாக கொள்ளவேண்டும். ஜக்கியம் என்பது மக்களைக் கொண்ட ஒரு சக்தியாக இருக்க வேண்டும். இன்று அப்படி ஒரு நிலையே கிடையாது.

 

மீந்தனா விடுதலைப் போராட்டம் முஸ்லிம் தேசிய இனத்தின தனிநாட்டுக்கான கோரிக்கையாக எழுந்தது. இன்று பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் சரியான கோரிக்கையுடன் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தவுடன் தனிநாட்டுக் கோரிக்கையை சுயநிர்ணய அடிப்படையில் ஏற்றுக்கொண்டு பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஜக்கியப்படுள்ளனர். இது ஈழப்போராட்டத்துக்கும் பொருந்தும். இது இன்றல்ல எதிர்காலமே அதைத் தீர்மானிக்கலாம். பிலிப்பைன்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி மாதிரி இலங்கையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உருவாகும் போது மட்டுமே இலங்கைப் புரட்சியை பொதுவான கோசத்தின் கீழ் அணிதிரட்டமுடியும்.

 

இலங்கைக்கான பொதுவான கம்யூனிஸ்ட் கட்சி மேற்குறிப்பிட்ட அடிப்படையில் தனித்தனியான கம்யூனிஸ்ட் கட்சியின் இணைவாகவே இருக்க முடியும் அதுவே சாத்தியம். தமிழ் புரட்சியாளர்கள் இன்று அனைத்துப் பிரிவு மக்களின் முற்போக்குப் பிரிவை விட முன்னேறிய நிலையில் இன்றுள்ளனர். தமிழ்ப் புரட்சியாளர்களே முதலில் ஒரு சரியான திட்டத்தின் அடிப்படையில் ஒரு கட்சியை உருவாக்கும் பலம் உடனடியாகப் பெற்றுள்ளனர். தமிழ்ப்பிரிவை மட்டும் கொண்ட தமிழ் பிரிவினர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியாகிவிட மாட்டார்கள். இது தமிழ் மக்களை மட்டும் சார்ந்ததாக இருக்கும். எல்லா இன கம்யூனிஸ்ட்டுக்களும் இணையும் போதே இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவாகும். இன்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக முடியுமா? சரியான சிங்கள கம்யூனிஸ்டை சமர் இன்று இனம் காணவில்லை. அப்படி யாரையாவது சுட்டிக்காட்ட முடியுமா? அப்படி இல்லாத போது எபபடித் தமிழ் பிரிவினர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க முடியும். அப்படி முடியாத இன்றைய நிலையில் தமிழ் கம்யூனிஸ்டுக்கள் இணையக் கூடாதா? அதன் பெயர் என்ன? மற்றும் நடந்துவரும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முற்போக்கு புதிய ஜனநாயகப் போராட்டமாக மாற்ற ஒரு கம்யூனிஸ்ட் கட்சி நிச்சயம் இருக்கவேண்டும். இல்லாத போது அது முற்போக்கை முன்னெடுக்க முடியாது. முற்போக்குப் போராட்டமாக முன்னெடுக்க தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சி உருவாவது தவிர்க்கமுடியாது. சிங்கள கம்யூனிஸ்டுகள் உருவாகும் வரை இலங்கை கம்யூனிஸ்டு கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. உருவாகும் சிங்கள கட்சியின் வளர்ச்சியின் பின்பே இலங்கைக்கான கம்யூனிஸ்ட் கட்சியும் இலங்கைக்கான புதியஜனநாயகப் புரட்சியும் முன்னெடுக்கமுடியும். ஒரு பகுதியான எமது சொந்த இனத்திற்காக மட்டும் போராட்டம் நிகழ்த்துவது மார்க்சியச் சொல் அலங்காரத்துடன் பிறந்திருக்கும் முதலாளிய தேசிய வாதமாகவே அமையும் என்ற இவ் விவாதம் சுத்த அபத்தமானது. இது வெறும் சொற்றெடரே. எப்படி இலங்கைக்கான கம்யூனிஸ்டுக் கட்சியை உருவாக்க முடியும் என நாம் மேலே பார்த்தோம். தமிழ் மக்கள் பாதுகாப்புப் போரை நடத்துவதை ஏற்று அதைத் தமிழ்ப் பாட்டாளிகள் தலைமை ஏற்க வேண்டும் என கோரும் மாறன் அடுத்த வரியில் அக் கோரிக்கையை முதலாளித்துவ தேசியவாதம் என்கிறார். மற்றைய தேசிய இனத்திலும் ஒரு பாட்டாளிவர்க்கம் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் போது மட்டும் ஜக்கியத்தை நிராகரித்தால் அது முதலாளித்துவ தேசிய வாதமாக இருக்கும். இன்று அப்படியொரு கட்சியே இல்லை. தமிழ்ப் பிரிவு முன்னேறிய ஒரு பாத்திரத்தை இன்று வகிக்கின்றனர். அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ இன்று முற்போக்கு தேசியத்தை முன்னெடுக்க நிர்பந்தித்து ஒரு கட்சியைக் கட்டவேண்டியுள்ளனர். அக்கட்சி தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சியாகவே இன்று இருக்க முடியும். அதுவே இன்று சாத்தியமானது. முன்னணியின் ஊடாக எடுக்க முனையும் இத்தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் தனக்கான வரையறைகளை மட்டும் கொண்டிருக்கும். ஆனால் கட்சி அப்படியல்ல. அது சர்வதேசியமானதாகவே இருக்கவேண்டும். உதாரணமாக இன்று இலங்கைக்கான கம்யூனிஸ்டுக் கட்சி இருப்பின் தனக்காக என இல்லாமல் உலகப்பாட்டாளியாக இருப்பதனூடாக சர்வதேசியவாதியாக இருப்பர். இதுவே தமிழ் கம்யூனிஸ்டுக் கட்சிக்கு இலங்கைக்குள் பொருந்தும். பிரிந்து போக ஒரு இனம் ஏன் பாட்டாளி வர்க்கத் தலைமையில் போராட்டம் நடத்தமுடியாது. எனவே பிரிவினை எப்போதும் முதலாளித்துவ தேசியவாதமாக மடடும் இருப்பதில்லை. அப்படித்தான் உள்ளது எனச் சொல்பவர்கள் பாதுகாப்பு யுத்தம் சுயநிர்ணய உரிமைக்குப் போராடுதல் என்பதெல்லாம் பிரிந்து போகாத சுயநிர்ணய உரிமையைத்தான். சர்வதேசியவாதத்தை கணக்கில் எடுக்காமல் தேசிய வாதம் பேசுவதை நியாயமெக் காட்டமுனைந்தாலும் அது பாட்டாளி வர்க்க அணுகுமுறையல்ல. எனின் சர்வதேசவாதியாகவுள்ள எவரும் தேசியத்தை எடுக்கமுடியாதா? தேசியத்தை முன்னெடுப்பது ஒரு சர்வதேசிய வாதியின் கடமை. அது பிரிந்து போவது, போகாதது மேல் குறிப்பிட்டது போல் இலங்கைக்கான கம்யூனிஸ்டுக் கட்சியின் உருவாக்கத்துடன் மட்டுமே சாத்தியம். தேசியத்தை சர்வதேசவாதி கவனத்தில் எடுக்கத்தவறின் அது பாட்டாளி வர்க்க அணுகுமுறையல்ல. மக்கள் மத்தியில் எழும் அனைத்து முரண்பாட்டையும் முன்னெடுக்க வேண்டும். அதற்கூடாகப் போராடவேண்டும். தேசிய இனமுரண்பாடு பிரிந்து போகும் வகையில் ஒடுக்கும் இனம் விழிப்படையாத நிலையில் சர்வதேசியவாதி பிரிந்து போகும் இனத்தின் விடுதலையை தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசானதாக அமைக்க வேண்டும. இது சர்வதேசவாதிகளின் கடமை. சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து போகும் பிரிந்து போகாத விடயங்களை உள்ளடக்கியதே. பிரிந்துபோகாத சுயநிர்ணய உரிமை என்பதை ஒடுக்கும் இனப் பாட்டாளிகளின் வளர்ச்சியும் பலமுமே தர்Pமானிக்கும். அவர்களின் பலவீனமான நிலையில் ஒடுக்கப்படும் இனம் பிரிந்து போவது தவிர்க்கமுடியாதது. இன்றைய நிலையில் ஒடுக்கப்பட்ட இனம் பிரிந்து போவதையே முன்னெடுக்க முடியும். எதிர்காலத்தில் ஒடுக்கும் இனப் பாட்டாளிகளின் வளர்ச்சியைப் பொறுத்தே ஒடுக்கப்பட்ட இனம் சேர்ந்து வாழ்வதா? இல்லையா என்பதை குறைந்த பட்சம் சிந்திக்க முடியும். அதுவரை அது கற்பனையானது. சுயநிர்ணய உரிமை என்பதையும் பிரிவினை என்பதையும் பிரித்துப் பார்க்கவேண்டும். பிரிந்து போவதற்கான உரிமையை பாட்டாளிவர்க்கம் கோரவேண்டும், அங்கீகரிக்கவேண்டும். ஆனால் ஜக்கியத்துக்கான முழக்கத்தை முன் வைப்பதற்குப் பதில் தனியரசு தமிழீழம் என வரையறுத்துக் கொள்வது தமிழ் தேசியவாதமே. இது ஆதரிக்கப்படவேண்டியது தான் எனினும் முதலாளித்துவ தேசியவாத கோசமே ஒழிய பாட்டாளிவர்க்க கோசமல்ல என்ற மாறனின் கூற்றை நாம் ஆராய்வோம். சுயநிர்ணய உரிமையென்பதனையும் பிரிவினையையும் பிரித்துப்பார்க்க வேண்டும் என்ற வாதம் தவறானது. சுயநிர்ணய உரிமை என்கின்றபோது பிரிவினையையும் உள்ளடக்கியதே. நாம் இங்கு விவாதிப்பது புலிகளின் பிரிவினையை அல்ல. மார்க்சிய அடிப்படையில் நின்றே விவாதிக்கிறோம். சுயநிர்ணய உரிமை என்பது பிரிவினையையும் உள்ளடக்கியதே. பிரிந்து போவதற்கான உரிமையை பாட்டாளி வர்க்கம் கோரவும் வேண்டும் அங்கீகரிக்கவும் வேண்டும். ஆனால் ஜக்கியத்துக்கான முழக்கத்தை முன்வைப்பதற்குப் பதில் தனியரசு, தமிழீழம் என வரையறுத்துக்கொள்வது தமிழ் தேசியவாதமே என்ற கூற்று ஒன்றுக்குகொன்று முரணானது. பிரிந்துபோவதற்கான உரிமையைப் பாட்டாளி கோரவேண்டும், என்கின்றபோது அது தமிழீழம், தனியரசாக மாறுகிறது. இது மாறும் வகையிலிருப்பது எப்போது எனின் பெரும்தேசிய இனப்பாட்டாளிகளின் எழுச்சி மட்டுமே தீர்மானிக்கும். இன்று இலங்கையில் பெரும் தேசிய இனமுள்ள நிலையில் தமிழ் பாட்டாளிகள் பிரிவினைக்காக போராடுவது தவிர்க்கமுடியாது. இதை நீங்களே ஏற்றுள்ளீர்கள் அதைப் பார்ப்போம். 83 இலேயே வர்க்க நலனும் ஜக்கியமும் பேசிய (என்-எல்-எவ்-டி இதன் தாய்வடிவம்) பாதுகாப்பு பேரவை போன்றன அன்றைய கொதிநிலையை தமிழ்மக்கள் மீதான பேரினவாதயுத்தத்தை எதிர்கொள்ளாது அடுத்த அடிவைக்க இயலாது என்று (சரியான முடிவுதான்)தமிழீழப்போரை முன்னெடுத்ததுடன்----- என்ற உங்கள் வாதத்தின் தமிழீழப்போரை முன்னெடுத்து என்பது தனியரசுக்கானது இந்நிலைமை இன்று எந்த விதத்திலும் மாறிவிடவில்லை தமிழீழம் என்ற தனியரசாக மாறும் ஒரு கோரிக்கை சுயநிர்ணய உரிமைக்கு உட்பட்டதே. ஏன் தமிழீழம் என போராடவேண்டி ஏற்படுகின்றது. எனின் பெரும் தேசிய இனத்தின் புரட்சிகர எழுச்சி தடைப்பட்டு உள்ளமையால் மடடுமே. தமிழீழம், தனியரசு என்பது எப்போதும் வெறும் தேசியவாதக் கோசமாக இருப்பதில்லை. மற்றைய இனங்களின் பாட்டாளிவர்க்க எழுச்சியும், ஒவ்வொரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் ஒரு கட்டத்தில் அவர்களுடன் இணைய மறுப்பின் மட்டும் அது முதலாளித்துவ தேசியவாதக் கோசமாக இருக்கும். இன்று அப்படி ஒரு நிலையே இல்லை. இன்றுள்ள நிலையில் திட்டம் தமிழீழக் கோரிக்கையைக் கொண்டதே. ஏன் எனில் மற்றைய தேசிய இனங்கள் எந்த முன்முயற்சியும் அற்ற நிலையில் உள்ளனர். ஆனால் தமிழீழப் போராட்டம் நடைபெறுகின்றது. அதை முற்போக்குத் தேசியமாக முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழ் பாடடாளிகள் கையில் உள்ளது. தமிழ்ப் பாட்டாளிகள் தமது கையில் எடுத்து தமிழீழப் போராட்டத்தை முன்னெடுப்பதுடன், மற்றைய ஒவ்வொரு தேசிய இனத்தின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்பதுடன் அவர்களின் ஜக்கியத்திற்கான கோரிக்கையை எபNபாதும் தமதாக்கிக்கொள்ள வேண்டும். தமிழ்ப் பாட்டாளிகள் ஜக்கியத்தை கோரும்போது வெட்டவெளியில் கோரமுடியாது. அதற்கான தளம் தேவை. சிறுபான்மை தேசிய இனம் ஜக்கியத்தைக்கோரவும் ஆதரவைக்கோரவும் எப்பவும் தயாராக இருக்கவேண்டும். இது இன்று முன்னணித்திட்டத்தில் சிறப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் இனவாத தரகுமுதலாளித்துவ பாசிச அரசைத் தூக்கி எறிய இலங்கையின் அனைத்து தேசிய இன தொழிலாள விவசாயிகள், தேசப்பற்றுள்ளவர்களே ஒன்று திரளுங்கள் என்ற உங்கள் கோசம் இலங்கைக்கான ஒரு கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே கோரமுடியும். இன்று நடைபெறும் தேசிய விடுதலைப்போராட்டத்தை வெறும் பாதுகாப்பு யுத்தமாக சித்தரித்த கோசமே. இதே கோரிக்கையையே என்-எல-எவ்-டி உருவாக முன்னிருந்த அமைப்பு முன்வைத்தது. பின் தம்மை மாற்றியவர்கள் தமிழீழம் என்ற அடிப்படையில் கோசம் வைத்தனர். உங்கள் கோசமும் இபபடித்தான் அமையமுடியும். இலங்கையின் இனவாத, தரகுமுதலாளித்துவ, பாசிச அரசைத் தூக்கி எறிய தமிழீழ தொழிலாள, விவசாயிகளே, தேசப்பற்றுள்ளவர்களே ஒன்று சேருங்கள் எனவே கோரமுடியும். இதுபோல் அனைத்துதேசிய மக்களும் தனித்தனியே கோரமுடியும். இவர்களின் ஒன்றிணைவே இலங்கையின் ஜக்கியப்பட்ட புரட்சியை நடத்தும். இவர்களின் ஒன்றிணைவுக்கு இக் கோசத்தை முன்வைக்கும் பிரிவினர் இருக்க வேண்டும். இன்று தமிழ் மக்கள் இக்கோசத்தில் முன்னேறிய நிலையில் உள்ளனர். இது மற்றைய தேசிய இன விழிப்பு இன்றி முந்திக்கொள்ளும் போது தனியரசாக மாறிவிடும். தேசிய விடுதலைப்போராட்டமா? ஜக்கியப்பட்ட புரட்சியா? என்ற கேள்வியை எழுப்புவதன் மூலம் ஜக்கியப்பட்ட புரட்சி என்பது தேசிய விடுதலையை உள்ளடக்கியதல்ல. தேசிய விடுதலைப் போராட்டத்தை கவனத்தில் கொள்ளாது மறுதலிக்கின்றது என்கின்றதான அவதூற்றை, மாயையை உருவகிப்பதன் மூலம் அதைக் களங்கப்படுத்த முயற்சிக்கின்றார்கள். தேசிய நலன்களையும் சர்வதேசிய நலன்களையும் எதிரெதிராக நிறுத்துவதன் மூலம் வர்க்கப்பார்வையை பலவீனப்படுத்துகின்ற அதைப் கொச்சைப்படுத்துகின்ற பணியைச் செய்கின்றார்கள். ஜக்கியப்பட்ட புரட்சி, தேசியவிடுதலைப்போராட்டம் என்பன சிலவேளை ஒன்றாக இருக்கும், வேறுவேறாகவும் உள்ளது. ஜக்கியப்பட்ட புரட்சியென்பது அனைத்துப் பிரிவுமக்களாலும் முன்னெடுக்கப்படுவதே. இப்புரட்சி 1983 களிலும் சில இடதுசாரிகள் கூறிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் அவர்களை மீறி தேசிய விடுதலைக்கான அலை மேலோங்கியுள்ளது. அன்று இதை கவனத்தில் எடுத்த என-எல்-எவ-டி மட்டும் அவ் இடதுசாரிகளில் இருநது வெளியேறி தமிழீழப் போராட்டத்தை தமதாக்க முனைந்தனர். இது என்றும் தவறானதல்ல. இதை மாறனும் ஏற்றுக்கொள்கிறார். ஜக்கியப்பட்ட புரட்சி நிச்சயமாக தேசிய சுயநிர்ணய உரிமையையும் உள்ளடக்கியதே. இங்கு இவை பிரச்சனையல்ல. பிரச்சனையாக உள்ளது இனங்களுக்கிவடயிலான தப்பெண்ணங்கள் நீக்கப்பட்டு ஒரு கட்சியின் முன்னோக்கிய அடியே. இவை தொடர்பாக மேல் விவாதித்துள்ளோம். இன்று அப்படி ஒரு கட்சி உருவாக முடியுமா? ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கான கட்சியை கட்டுவதும் அதன் வளர்ச்சியில் மட்டும் ஒரு ஜக்கியப்பட்ட கட்சி உருவாகமுடியும். இன்று நடைபெறும் யுத்தம் ஒரு தேசிய விடுதலைக்கான ஒரு யுத்தத்தை நாம் எம் கைகளில் மாற்றவேண்டின் முதலில் இத்தேசிய இனத்தின் பிரச்சனைகளை நமதாக்க வேண்டும். இங்கு பாட்டாளிகள் மக்களின் இன அழிப்பிலிருந்து காப்பாற்ற பிரிந்துபோக வேண்டும். இனவழிப்பு நிறுத்தப்படின் எங்கே யுத்தம் நடைபெறமுடியும். இன்று ஒரு வடிவாக நடைமுறையாக உள்ளது. இதை நிராகரிக்க முடியாது. இதை நிராகரிப்பின் எம்மால் ஒரு அடிதனினும் எடுக்க முடியாது. ஜக்கியப்பட்ட கட்சி இல்லாத, உடனடியாக உருவாக முடியாத இன்றைய நிலையில் இவ்யுத்தத்தை நாம் எம் கையில் மாற்ற நாம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியை கொண்டு இருக்க வேண்டும். அக்கட்சி விரும்பியோ, விரும்பாமலோ இன்று உடனடியாக தமிழ்பாட்டாளிகளையே கொண்டிருக்கும். இது தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருக்கும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக நடைபெறும் இன்றைய யுத்தம் ஒரு தனிநாடாக மாறும் வகையில் இன்று தவிர்க்கமுடியாமல் நகர்ந்த வண்ணம் உள்ளது. இவ் யுத்தத்தை பாட்டாளி வர்ககம் கைப்பற்றி சுயநிர்ணய உரிமையை பிரிவினைக் ஊடாக உறுதி செய்வது தவிர்க்க முடியாத வகையில் இன்று உள்ளது. ஏனெனில் சிங்களப் பாட்டாளிகள் எந்த விழிப்புணர்ச்சியையும் வெளிக்காட்டவோ, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கவோ இல்லை. இது உருவாகும் போது மட்டுமே நாம் ஜக்கியப் புரட்சியை யோசிக்க முடியும். இரண்டு விதமாக சுயநிர்ணய உரிமையைக் கோருவது தொடர்பாக எமக்கிடையில் விவாதம் நடக்கின்றது. ஒன்று இலங்கை என்ற ஒரு புரட்சியூடாக இரண்டாவது தனித்தனி தேசிய இனங்களாக போராடி தமது சுயநிர்ணய உரிமையை உறுதி செய்வது. இது கூட ஜக்கியப்பட்ட புரட்சியை நோக்கி நகரும் அதற்கு எல்லா இனத்திலும் சரியான கட்சி இருக்கவேண்டும. இன்று ஒரு ஜக்கிய புரட்சியை நடாத்த ஒரு கட்சி இல்லை. இது எதிர்காலத்தில் உருவாகாது என்றும் இல்லை. எதிர்காலத்தில் எதிர்வு கூறுவதற்கு பதில் இன்று உடனடியாக இவ்யுத்தத்தை எம் கைகளில் எடுக்க ஒரு முன்னணியும், கட்சியும், ஒரு படையும் உடன் அவசியம். இது தமிழீழப் போராட்டத்தின் ஊடாக முடியுமே ஒழிய ஜக்கியப்பட்ட புரட்சிக்கூடாகவல்ல. இதைப்போல் தேசியநலன் சர்வதேசியநலனுக்கு எதிரானது என்ற வாதம் இலங்கைப் புரட்சிக்குப் பொருந்தும். இலங்கைப் புரட்சி என்ற தேசியவாதம் சர்வதேசிய புரட்சிக்கு எதிரானது என உங்கள் பார்வையில் வாதிட முடியும். இது தவறானது. ஒவ்வொரு தேசியப் புரட்சியும் தனியாக நடக்கும் போது அது சர்வதேசியப் புரட்சிக்கு உதவும். புரட்சி யார் தலைமையில் நடைபெறுகின்றது என்பது சர்வதேசியப் புரட்சிக்கு எதிரானதா இல்லையா என்பதை தீர்மானிக்கும். நாம் எமது தேசிய இனநலன்கள் பற்றி மட்டுமே சிந்திக்கின்றதான முதலாளிய தேசியவாதப் போக்கில் இருந்து விடுபட்டு என்ற வாதம் சுத்த அபத்தமானது. இன்று இலங்கைப் புரட்சியை கதைப்பின் அதுவும் முதலாளிய தேசியவாதப் போக்கே என வாதிட முடியும். ஏனெனில் உலகப்புரட்சி பற்றி கதைக்காமல் உள்ளதால. எனவே புரட்சி என்பது எல்லைகளை கடந்தது. புரட்சிக்கான முரண்பாடு மட்டும் சில பிரச்சனைகளை விடுவிக்கும். அது உலகப் புரட்சியின் ஒரு பகுதி கூட. தமிழீழப் புரட்சி இலங்கைப் புரட்சியின் ஒரு பகுதி மட்டும் இன்றி உலகப் புரட்சியின் பகுதி கூட. தமிழீழப் புரட்சி ஏகாதிபத்தியத்தை தரகு முதலாளித்துவத்தை நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்தும். தமிழீழப் போராட்டம் முதலாளித்துவப் புரட்சியாக மட்டும் இருப்பதில்லை. பாட்டாளிகள் தலைமை தாங்கும் போது அது உலகப் புரட்சியின் ஒரு பகுதியாகவும் இலங்கைப் புரட்சியின் ஒரு பகுதியாகவும், ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சியாகவும் இருக்கும். பாரம்பரிய வடக்கு, கிழக்கு தமிழ்த் தேசிய இன பாட்டாளிவர்க்க சக்திகள் தமது தேசிய இன சுயநிர்ணய உரிமைப்போரை அம்மக்களினது பாதுகாப்பு, நிலம், மொழி, பண்பாடு ஆகியவற்றை பாதுகாப்பதற்கான போரை முன்னெடுக்கும்--- என்ற மாறனின் வாதத்தில் பாதுகாப்பு, நிலம், மொழி, பண்பாடு என்ற தேவைக்காக மட்டுமா யுத்தம். நிச்சயமாக இல்லை. தனது அரசியல் சுயாட்சியையும் உள்ளடக்கியதே யுத்தம். இன்று நடைபெறும் யுத்தத்தை பாதுகாப்பு, நிலம், மொழி, பண்பாட்டுடன் நிறுத்தக்கோரி ஜக்கிய இலங்கைப் புரட்சியை நடத்தக் கோருகின்றனர் இதன் ஊடாக சுயநிர்ணய உரிமையில் பிரிந்து போகும் உரிமையை மறுக்கின்றனர். மேல் குறித்த நான்கு விடையமும் தமிழ்மக்களின் அரசியல் சுயாட்சியை நோக்கி நகர்வதை தெளிவுபடுத்துகிறது. இதற்கு ஒரு கட்சியில் இன்றைய நிலையில் தமிழீழக் கம்யூனிஸ்ட் கட்சியாகவே இருக்கும். இப்போராட்ட சக்திகள் தமது குறிப்பான பிரச்சனைகளுக்கான போராட்டத்தை நிகழ்த்தும் போதே, இவற்றை இணைத்து சமுதாய வளர்ச்சியை உத்திரவாதம் செய்கின்றதான அதாவது இலங்கையில் புதிய ஜனநாயகப் புரட்சியை நிறைவேற்றுகின்றதான ஒருமைப்பாடற்ற தாபனத்தை, கட்சியை நிறுவவேண்டும். என்ற வாதம் மாறனின் கற்பனையே. இன்று தமிழ்மக்களின் போராட்டம் வெறும் அமைதியான வழியில் நிகழ்வதாக கற்பனை செய்தபடி மாறன் உள்ளார். இன்று தமிழ்மக்களின் போராட்டம் ஒவ்வொரு நாளும் பலரை இழக்கும் வகையில் தொடர்கிறது. ஆனால் மறுபுறத்தில் அப்படியல்ல. இங்கு ஜே-வி-பிக்கும் இலங்கையரசுக்கும் இடையிலான யுத்தம் இருவரும் இனவாதிகளாக இருந்தபடி தொடர்வதே. தமிழ் மக்களின் இன்றைய போராட்டத்தை தமிழ்ப் பாட்டாளிகள் கைப்பற்றவேண்டும். அதற்கு தமிழ்ப்பாட்டாளிகளை உள்ளடக்கிய ஒரு தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சியின் தேவை கோரி நிற்கிறது. இது மற்றைய இனப்பாட்டாளிகள் விழிப்படையும் வரை ஒத்திபோட்டுவிட முடியாத அவசியமான காலகட்டத்தில் நாம் உள்ளோம். எமது நிலையை மறந்து எமது மக்களை மறந்து கற்பனையில் ஜக்கியமான கட்சியைக் கட்டி புரட்சியை நடத்த முடியாது. தேசிய விடுதலைப்போரா? ஜக்கியப்பட்ட புரட்சியா? என்கின்ற விதமாக இரண்டையும் எதிரெதிராக நிறுத்துவது தவறானதாகும் என்ற விவாதத்தில் தேசிய விடுதலைப்போருக்கூடாகவும் ஜக்கியப்பட்ட புரட்சியை நிகழ்த்த முடியும். அதேபோல் ஜக்கிய இலங்கைப் புரட்சிக்கூடாக தேசிய இன விடுதலையை பெறமுடியும். இதில் இன்று இலங்கையில் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கூடாக ஜக்கியப்பட்ட புரட்சியை அடையமுடியும். ஆகவே தேசியவிடுதலைப்போராட்டத்தை முன்னெடுக்க அத் தேசிய இனம் தனக்கான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவது தவிர்க்கமுடியாதது. கடந்த சகாப்தத்தில் வர்க்க அரசியலைக் கொண்டிருந்த அமைப்புகள் வளர்ச்சியுறமுடியாமல் இருந்ததற்கு தனியே அவற்றினது தவறுகள் மடடுமே காரணமல்ல. மக்களிடையே நிலவிய முதலாளித்துவ சிந்தனைப்போக்கை பிற்போக்கு அமைப்புகள் பயன்படுத்திக் கொண்டார்கள். போராட்டப்பாதையினூடு தமிழ்மக்களிடையே சரியான அரசியலை வர்க்கப் போராட்டத் தலைமையை நிலைநிறுத்த இயலுமென முன்வைக்கின்ற நீங்கள் சிங்கள் மக்களிடையே சரியானதொரு புரட்சிகரத் தலைமையை தமிழீழம் பிரியும் மட்டும் உருவாகவே மாட்டாதென எனக் கூறுவது எவ் ஆய்வுகளின் அடிப்படையில்? என பனிமலரைக் கேட்டுள்ளார் மாறன். மக்களிடையே உருவான முதலாளித்துவ சிந்தனை தான் பிற்போக்கு அரசியலை முன்நோக்கி தள்ளியது என்பது சரிதான். ஆனால் வர்க்க அரசியல் முன்னுக்கு வரமுடியாமைக்கு இக் கருத்தோட்டத்தின் இருப்பே எனச் சொல்லுவது ஒருபக்கம் மட்டுமே உண்மை. வர்க்க அரசியலை கொண்ட அரசியலை கொண்ட அமைப்புக்கள் வளர்ச்சியுறாமைக்கும் 100 வீத காரணம் அவர்களின் அரசியலே. இதில் எந்தவிதத்திலும் வேறு ஒரு காரணத்தை புகுத்துவது தவறு. அடுத்த போராட்டப் பாதையில் தமிழ்மக்களிடையே சரியான அரசியலை, வாக்கப்போராட்ட தலைமையை நிலைநிறுத்த இயலுமென முன்வைக்கும் என்ற வாதத்தில் ஏன் முடிகிறது நாம் சம காலத்திலுள்ள பிரதான முண்பாடான தேசிய முரண்பாட்டில் தெளிவான ஒரு பார்வையைக் கொண்டுள்ளோம். நாம் தமிழ் மக்களாக இருப்பதுடன் ஒரு கட்சியை கட்டக்கூடிய நிலையில் உள்ளவர்கள். இன்று நடைபெறும் தேசியவிடுதலைப் போராட்டத்தின் தலைமையை மாற்றிவிட பெரும்பாலான விடயங்களில் ஒருமித்த கருத்தை வந்தடைந்து கொண்டிருக்கின்றோம். தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் தலைமையை மாற்ற ஒரு படையுடன் கூடிய கட்சி, முன்னணி என்பன உடனடித் தேவையாகயுள்ளது. இதை வந்தடையும் நிலையில் தமிழ்ப் பாட்டாளிகள் மட்டும் தெளிவான ஒரு நிலையை நோக்கி நகருகின்றனர். இன்று சிங்கள மக்கள் மத்தியில் அப்படியானதொரு நிலையில்லை. எதிர்காலத்தில் உருவாகாது என யாரும் கூறமுடியாது. எம் போராட்டம் மிகத்தீவிரம் அடைந்த 10 வருட வரலாற்றில் சிங்களப் புரட்சிகரப் பிரிவு எதுவும் உருவாகவில்லை. குறிப்பாக ஜே-வி-பி- இல் பிரிந்த நவ ஜே-வி-பி- கூட புரட்சிப்பிரிவினர் அல்லர். எதிர்காலத்தில் ஒரு புரட்சிகர சிங்கள எழுச்சி ஏற்படும்போது நாம் ஜக்கியப்பட்ட புரட்சியை நடாத்த எந்தவகையிலும் பின்வாங்கமுடியாது. இன்று நாம் போராடவேண்டும். அதுவும் தேசிய இன முரண்பாடு இயல்பான வளர்ச்சி இன அடக்கு முறை பிரிவினைக்கு இட்டுசெல்கின்றது. இது இன்று கற்பனையானதல்ல. இப் போராட்டத்தை நடத்துவது தமிழ்ப் பாட்டாளிகளின் கடமை. தமிழ்ப் பாட்டாளிகள் தமது கையில் போராட்டத்தை எடுக்க தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சியின் தேவையை கோருகின்றது. இப்போராட்டத்தை நாம் எடுக்க தேவையானது உருவாகும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி எனக் கூற முடியுமா. தமிழீழம் பிரியும் முன் ஒரு சிங்கள் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகி மக்கள் பலத்துடன் இருப்பின் நிச்சயமாக இணையவேண்டும். இது தமிழீழ கம்யூனி@ஸ்ட் கட்சியின் திட்டத்தில் பிரதான விடயமாவும் இருக்கவேண்டும். நாம் இப்போது விவாதிப்பது நிகழ்கால வேலைத்திட்டம் தொடர்பாகவே. நீங்கள் விவாதிப்பது எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பாகவே. இன்று உருவாகும் திட்டம் நிலையானதல்ல. அது மாறும் தன்மை கொண்டது. சூழ் நிலைமைகள், மாற்றங்களுடன் திட்டம் மாறிச்செல்லும். சிங்கள மக்கள் பிற்போக்கு இனவாத அரசுகளின் பிரசாரங்களிலிருந்து அவற்றின் கருத்து ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது சாத்தியமாகாது என நீங்கள் முடிவெடுக்கும் போதே பாட்டாளி வர்க்க கூறுகள் பலவீனமாக உள்ள தமிழ் மக்களிடையே இருந்து வர்க்கத் தலைமை கொண்ட புரட்சியை நடாத்திட இயலுமென எவ்விதம் உறுதிபட கூறுகின்றீர்கள்.? சிங்கள மக்களை விட விசேடமான சிறப்பியல்புகள் எதையும் தமிழ் மக்கள் கொண்டிருப்பதாக கருதுகின்றீர்களா? என்ற மாறனின் வாதத்தை எடுப்போம். நிச்சயமாக வேறுபாடு உண்டு. தமிழ் மக்கள் இன்று சிங்கள இனவெறி அரசுக்கு எதிராகப் போராடுகின்றனர். அதற்கூடாக விழிப்பைப் பெற்றுள்ளனர். கடந்த 10-15 வருட யுத்தத்தில் தமிழ் மக்கள் சமூகத்தை ஆராய்கின்றனர். வாழ்தலுக்கான போராக தீவிர நிலையை அடைந்துள்ளது. 1983,85 என்-எல்-எவ்-டி இந்திய எதிர்ப்புக்கோசம் முன்வைக்கப்பட்டபோது பரிகசிக்கப்பட்டனர். ஆனால் இன்று அப்படியல்ல. மக்களின் சிந்தனை ரீதியான வளர்ச்சி, விழிப்பு சிங்கள மக்களை விட விரிவுபட்டுள்ளது. இங்கு சிங்கள மக்களும் இந்திய எதிர்ப்புணர்வை கொண்டபோது அது இனவாத அடிப்படையிலானது. சிங்கள மக்கள் இந்திய ஆக்கிரமிப்பை மலையக மக்களுடாக இன்று இனம் காண்பது இனவாத அடிப்படையாகவுள்ளது. மலையக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டடு இலங்கை மக்களை விட மோசமான நிலையில் வைத்திருப்பது இனவாதத்தின் மொத்த வெளிப்பாடே. இங்கு தமிழ் மக்களின் விழிப்புணர்பு இன்று புலி போன்ற ஏகாதிபத்திய தரகுகளின் பின் உள்ளது. இது மக்கள் விரும்பியது அல்ல. தேசிய இன அழிப்பின் அடிப்படையில் விரும்பாத ஒரு நிலையில் புலியின் பின் விழிப்புணர்வுள்ளது. இவை மக்களைப் பொறுத்தவரை மட்டுமே. இதற்கு அப்பால் புரட்சியாளர்களின் வளர்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் தெளிவானவையாக இன்று உள்ளது. அதாவது தமிழ் மக்கள் மத்தியில் இன்று புரட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதி கொண்டோர் முன்னணிச் சக்தியாகவுள்ளனர். அவர்கள் உதிரியாகவும் சிறுகுழுக்களாகவும் உள்ளனர். அநேக விடயங்களில் ஒருமைப்பாட்டைப் பெற்றுள்ளனர். இது சிங்கள மக:கள் மத்தியில் கிடையாது. சிங்கள மக்கள் மத்தியில் ஜே-வி-பி வளர்ச்சியும் அதன் அழிவின் பின்னும் கூட புதிய சக்திகள் தம்மை இனம்காட்ட முடியாதுள்ளனர். இது உருவாகாது என்றில்லை. ஆனால் இன்று இல்லை என்பதே பிரச்சனை. எதிர்காலத்தில் உருவாகுவார்கள் எனக்கொண்டு கற்பனைத்திட்டம் தயாரிப்பின் அது புரட்சிக்கு உதவாது. மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் புரட்சிக்கான பாட்டாளிகளின் பலவீனத்தை சுட்டிக் காட்ட முற்பட்டவர் அதனால் இலங்கைப் புரட்சியைக் கோருகின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் பாட்டாளிகளின் பலவீனமான தன்மை இந்தியாவுடன் ஒப்பிடமுடியுமா? இந்தியாவுடன் ஒப்பிடின் இந்திய இலங்கை உட்பட்ட புரட்சியை கோர முடியும் தானே. பாட்டாளிகளின் பலவீனமான தன்மை ஒரு புரட்சியை தீர்மானித்து விடுவதில்லை. முரண்பாட்டின் கூர்மையும் அதை முன்னெடுத்துச் செல்ல ஒரு கட்சியும் இருப்பின் அங்கு பரட்சி சாத்தியம். சிங்கள மக்களிடையே இருந்து பல புத்திஜீவிகளும், ஐஜனநாயகசக்திகளும் தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து குரலெழுப்பி வருகின்றார்கள். வாராந்தம் 65,000 பிரதிகள் வரையில் விற்பனையைக் கொண்டுள்ள யுக்திய இதழ் ஆசிரியர் சுனந்த தேசப்பிரிய தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து அளித்த பேட்டியை வசதிக்கேற்ப மறைத்து விட்டார்கள். ........ பிரதேசங்களின் அடிப்படையில் அன்றி தமிழ் சிங்கள மக்கள் இணைந்த சோசலிசத்துக்கான போராட்டத்தில் ஈடுபட வேண்டுமெனக் கோருகின்றனர். இது வரட்டுத்துனமானதுதான். எனினும் நீங்கள் சுட்டுவதைப் போல் இனவாதத் தன்மை கொண்டது தான் அறுதியிட முடியாது. என்ற உங்கள் வாதத்தில் நீங்கள் வசதியாக மறந்த ஒரு விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுத்த வாசுதேவ நாணயக்கார போன்றோரை ஏன் மறந்து விடுகின்றீர்கள். சிங்கள புத்திஜீவிகள் முற்போக்கு பிரிவினர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து குரல் கொடுப்பதை ஒரு புரட்சியின் தலைமையுடன் ஒப்பிட முனைவது எவ்வளவு கேவலமானது. மார்க்சிசத்தை உச்சரிக்கும் பலரைப் பார்த்தும் அவர்களையெல்லாம் நாம் ஏற்கிறோமா? இல்லை. அது போல் தான் சிங்கள புத்திஜீவிகளும் முற்போக்குப்பிரிவினரும். (ஜரோப்பாவில் வெளிவரும் சஞ்சிகைகள் அநேகமாக முற்போக்கு என வரையறுக்க முடியும். ஆனால் அவர்கள் புரட்சியாளர்கள் அல்ல. புரட்சியாளர்கள் என நாம் கருதுவது கம்யூனிஸ்டுக்களையே. நாம் மீண்டும் கேட்பது ஒரு சிங்கள சரியான பத்திரிகையைக் கூடக் காட்ட முடியுமா? அப்போது அவர்களுடன் விவாதிக்க நாம் எப்போதும் தயாராகவுள்ளோம். சுனந்த தேசப்பிரியவின் சுயநிர்ணய உரிமைக்கான குரல் இனவாதம் கலந்தவையே. அது அரசுக்கெதிராகக் குரல் கொடுப்பது போல் இருந்தாலும் அவர்கள் மீண்டும் அதே அரசையும் இனவாதத்தையும் நிறுவுவதற்கு அப்பால் செல்ல முடியாது. இது வாசுதேவாவின் சுயநிர்ணய அங்கீகாரத்தைப் போல் பெரிய வேறுபாடு கிடையாது. நாம் விவாதிக்க முற்படுவது சிங்கள கம்யூனிஸ்டுகள் தொடர்பாக மட்டுமே. ஜக்கியத்துக்கான கட்சியை பற்றி சிந்திக்க அது மட்டுமே ஒரு வழி. நாம் இன்று கம்யூனிஸ்ட் கடசியை கட்டும் நிலையில் உள்ளவர்கள். தமிழ் சிங்கள மக்கள் இணைந்த சோசலிசத்துக்கான போராட்டத்தை கோருவதை வரட்டுவாதம் எனச் சொல்லும் நீங்கள் அதுவே உங்கள் கோரிக்கையாக உள்ளது. ஏன் எனில் ஜக்கியப்பட்ட புரட்சியைக் கோருகின்றனர். நீங்கள் கூறும் புதிய ஜனநாயகத்துடனான சோசலிசம் தமிழ் சிங்கள ஜக்கியத்துடன் கோரும் போது அது எப்படி வறட்டுவாதம் அற்றதாகிவிடும். தமிழ் மக்களது போராட்டநிலைமைகள் பற்றி விளக்கம் அளித்து வென்றெடுக்க வேண்டுமெயொழியே ஒரு முரணான கருத்தைக் காட்டி மறுதலிப்பது உங்களது அகநிலை விருப்பை நிரூபிப்பதற்காகவே என்ற உங்கள் வாதம் உங்கள் அகநிலைக் கருத்தாகும். தமிழ் மக்களது நிலைமையை விளங்கப்படுத்தி வென்றெடுக்கவேண்டும் என்பது சரியானதே. யார் செய்வது தமிழ்ப்பாட்டாளிகளா? இல்லை இது சிங்களப்பாட்டாளிகளின் முதலும், பிரதான கடமையுமாகும். இன்று இப்படியொரு நிலையே இல்லாதபோது எம்மைக் குற்றம்சாட்டி அகநிலையென வாதிடுட முற்படுவது கற்பனையானது. தமிழ்மக்களது போராட்டம் சிங்களமக்களுக்கு முரணனானது என கூற வருவது இனவாதமே. தமிழ் மக்களின் பிரச்சனையை சிங்களமக்கள் எதிரப்பார்கள் எனக் கூறுவது சந்தர்ப்பவாதமே. பிரிந்து போக தமிழ்மக்கள் விரும்பின் அதை சிங்கள மக்கள் ஏற்கவேண்டும். இதை சிங்கள மக்கள் மத்தியில் சொன்னால் முரணானது எனப் பாhப்பின் சந்தர்ப்பவாதத்துடன் கூடிய இனவாதமே. 60,0000 இளைஞர்கள் ஆற்றிலும், வீதியிலும் மிதந்தபோதும் தமிழ் மக்களிடம் இருந்து ஏதாவது எதிர்ப்புக் குரல் கேட்டதா? இன்று எல்லைப் புறங்களில் சிங்கள மக்கள் மட்டுமின்றி முஸ்லிம் மக்களும் ஆயிரக் கணக்கில் கொல்லப்படும் போது தமிழ்ச்சமூகம் மௌனம் சாதிக்கின்றதே. இன்று தென்னிலங்கையில் ஏகாதிபத்திய சார்பு அரசால், ஏகாதிபத்தியங்களின் வேட்டையால் சுதந்திர வர்த்த வலயங்களிலும், விவசாயத்திலும் ஒட்டசுரண்டப்படும் அம்மக்களது பிரச்சனைகள் பற்றி தமிழ்ப் புரட்சியாளர்கள் யாரும் குரல் எழுப்பியதுண்டா? இது தமிழ்ப் புரட்சியாளர்கள் பற்றி திரிபேயாகும். நீங்கள் மேலே குறிப்பிட்ட விடயங்களும், அதற்குமேலும் சிங்கள முற்போக்குகளை விட தமிழ்ப்புரட்சியாளர்கள் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ்ப்புரட்சியாளர்கள் தான் இவைகளை ஒரு அரசியல் கோட்பாட்டின் அடிப்படையில் கண்டிப்பதென்பது சிறப்பானது. அனுராதபுரம் சிங்களப்படுகொலைகளை புலிகள் தொடங்கியது முதல் அன்று இருந்த இயக்கங்களும், குறிப்பாக என்-எல்-எவ்-டி கோட்பாட்டுடன் அம்பலப்படுத்தியது. என்-எல்-எவ்-டி யின் இவ் அம்பலப்படுத்தல் குறிப்பாக புலிகளை பலமாக தாக்கியது. பின் அவர்களை அது தொடர்பாக என்-எல்-எவ்-டி யை கேட்கும் முக்கிய கேள்வியில் ஒன்றாகவும் இருந்தது. தென்னிலங்கையில், வடக்கில் நீக்கமற நிறைந்திருக்கும் பாசிசக்காட்டாட்சி களையெடுப்புகளுக்கு மத்தியில் சுதந்திரமான, ஜனநாயக குரல்கள் வெளிவராது முடக்கப்பட்டுள்ளது. இவ்விவாதம் தனது ஜக்கிய இலங்கைப்புரட்சிக்கான கருத்தை நிலைநிறுத்த கையாண்ட வாதமே. இந்த வாதம் வேடிக்கையானது. வடக்கு, கிழக்குக்கும் மற்றைய பகுதிக்கும் இடையிலான பாசிச வடிவம் பண்பால் பெரிதும் வேறுபட்டது. வடக்கு, கிழக்கில் புலியிசம் தவிர வேறுகதைக்கே இடமில்லை. ஆனால் மற்றைய பகுதிகள் அப்படியல்ல. மற்றைய பகுதிகளில் சிங்களப் புரட்சியாளார்கள் வேலைசெய்ய வடக்குக் கிழக்கைவிட பல வசதிகளைக் கொண்டுள்ளனர். கருத்து வெளிவருவதென்பது சட்டபூர்வ, சட்டவிரோத வழிகளில் வரமுடியும். இது வடக்கு கிழக்கு தவிர்ந்த பகுதிகளில் இன்று சாத்தியமான நிலையுள்ளது. இதை மறுப்பவர்கள் ஒருக்காலும் ஜக்கிய இலங்கை அல்ல ஒரு அடியைகூட முன்னெடுக்க முடியாது. வடக்குக் கிழக்கில் சட்டவிரோதமாக மட்டுமே வெளிவரமுடியும். வடக்குக் கிழக்குடன் மற்றைய பகுதிகளை ஒப்பிடுவது மடைத்தனம். கொழும்வில் சரிநிகர், அருவி...... என வரமுடிகிறது. ஆனால் ஒரு சிங்களப் புரட்சிகர சரியான கருத்து வர முடியவில்லை ஏனெனில் சிங்களப் புரட்சியாளர்கள் இன்னும் உருவாகவில்லை. இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். சாராம்சத்தில் புரட்சிகரசக்திகள் இலங்கை தழுவியளவில் பலவீனமாகவேயுள்ளனர். தென்னிலங்கையில் உருவாகாது வடக்குக் கிழக்கில் மட்டும் புரட்சிகரக் கட்சி அரசமைக்கும் என பனிமலர் சொல்வதற்கு ஆதாரம் ஏதுமில்லை. புரட்சியாளர்கள் இலங்கை தழுவியளவில் பலவீனமாகவுள்ளனர் என்பது இன்றைய நிலையை கவனத்தில் எடுக்காததன் விளைவே. நாடு தழுவிய ரீதியில் புரட்சியாளர்கள் பலவீனமாக இல்லை. தமிழ்ப்பாட்டாளிகள் விழிப்புப் பெற்று முன்னணியில் உள்ளனர். அவர்கள் ஒரு திட்டத்தில் இணையும் நிலையில் உள்ளனர். இது சிங்கள, முஸ்லிம், மலையக மக்களினது நிலையிலிருந்து வேறுபட்ட வளர்ச்சி நிலையை அடைந்துள்ளனர். இப்பிரிவினர் மத்தியில் முற்போக்குப் பிரிவினர் மட்டும் உள்ளனர். புரட்சியாளர்கள் அதாவது கம்யூஸ்ட்டுக்கள் உருவாகவில்லை. ஆனால் தமிழ்ப்பகுதியில் முற்போக்குகளின் எண்ணிக்கை பலமடங்காகவும் அதில் கம்யூனிஸ்டுக்களும் வளர்ச்சி பெற்றுள்ளனர். இதை மறுப்பவர் இன்றை நிலையை மதிப்பிடுவதில் தவறு இழைப்பவர். வடக்குக் கிழக்கில் புரட்சிகரக் கட்சி ஆட்சியமைக்கும் ஆதாரம் இல்லையென்ற வாதம் இலங்கையிலும் புரட்சிகர கட்சியாட்சி அமைக்கும் ஆதாரம் இல்லையே. பிரிதேசத்துக்குப் பிரதேசம் சமுதாய விழிப்பை மறுப்பது இயங்கியல் அல்ல. எங்கு முரண்பாடு தீவிரம் அடைகின்றதோ அங்கு போராட்டம் நிகழ்கின்றது. தமிழ் மக்களது தேசிய விடுதலைப்போராட்டத்தை கையில் எடுப்பதன் மூலம் இலங்கையின் ஜனநாயகப்புரட்சி இலக்கை நோக்கி செயல்படமுடியும் என்ற வாதம் சரியானது. தமிழ் மக்களது தேசிய விடுதலைப் போராட்டத்தை தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் போது சிங்களப் பாட்டாளிகளின் விழிப்பும், எழுச்சியும் ஏற்படும் போது இலங்கை ஜனநாயகப் புரட்சிக்காக போராhட வேண்டும். சிங்களப் புரட்சியாளர்களின் விழிப்பும், எழுச்சியும் பின் தங்கி அல்லது ஏற்படாது இருக்கும் பட்சத்தில் தமிழ் பாட்டாளிகள் தமிழீழ மக்கள் ஜனநாயகக் குடியரசு அமைக்க வேண்டும். இன்று நாம் எமது யுத்ததந்திரம், மற்றும் அது தொடர்பான அனைத்து விடையமும் ஒரு தனியான கட்டுரையாக மிகவிரைவில் சமரில் முன்வைப்போம். தமிழீழம் தான் என்பது பாரம்பரிய தமிழ் மக்களது கோரிக்கை மட்டுமே. அது நியாயமானது எனிலும் பாட்டாளி வர்க்க கோசமில்லை என்ற உங்கள் வாதம் குறைப்பார்வையே. தமிழீழம் என்பது பாரம்பரிய தமிழ் மக்கள் கோரிக்கை அல்ல. 1978 களின் இனவெறி அரசின் தீவிர அடக்குமுறையுடன் உருவான கோரிக்கையே. இக்கோரிக்கை பாரம்பரியமாக உருவாகவில்லை. இக்கோரிக்கை நியாயமானதென ஏற்கும் நீங்கள் அதை ஏற்கவேண்டும். ஏனெனில் தமிழ்மக்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை சிங்கள மக்கள் அரசை அமைக்க போராடாதவரை தமிழீழம் அமைக்க போராடும் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கையை ஏற்கவேண்டும். அப்படி தமிழீழம் அமையும் போது தமிழீழப்பாட்டாளிகள் அதைப் பெறத் தவறக்கூடாது. நீங்கள் உட்பட பிரிவினையை வலியுறுத்துகின்ற வர்க்கசக்திகள், தேசிய சக்திகள் ஜக்கிய இலங்கை என்ற கருத்தை கண்டவுடன் முன்வைப்பது என்ற வாதம் சுத்த அபத்தமானது. ஜக்கிய இலங்கையை கண்டவுடன் எதிர்க்கின்றவர்கள் என்ற வாதம் ஆதாரமற்றது. ஜக்கிய இலங்கைப் புரட்சியை விரும்பும் நாம் அது உருவாகமுடியாத இன்றைய நிலையை ஒட்டி நாம் வேறுபட முற்படுகிறோம். இன்றைய நிலையையும் உள்ள முரண்பாட்டையும் காணத்தவறும் நீங்கள் கற்பனையில் ஜக்கிய இலங்கைக்கான புரட்சிக்கு அறைகூவுகின்றீர்கள். ஒரு கட்சி உள்ளதாக உருவாகும் (உடனடியாக) என கற்பனை பண்ணி வரும் வாதமே. இது இன்று உள்ள நிலையை ஆராயாமையே. பிரிவினையென்பது இரண்டு வகையானது. பிரிவினை என புலிகள் போன்ற பிரிவினர் கோருவது ஒருவகை. இரண்டாவது வகை ஜக்கியப்பட்ட புரட்சியை விரும்பியும் அது சாத்தியமில்லாத இன்றைய நிலையில் பிரிந்துபோக நேருமென பிரிந்துபோகும் போது தமிழ்ப்பாட்டாளிகள் கைப்பற்றவேண்டும் என்பதே இரண்டாவது நிலை. இன்று மூன்றாம் உலக நாடுகளில் யுத்ததந்திரம் இதை ஊக்குவிக்கின்றது. மூன்றாம் உலகநாடுகளில் கிராமங்களிலிருந்து நகரைக் கைப்பற்றுதல் என்ற யுத்ததந்திரம் பொதுவாகப் பொருந்தும். அதுவும் இலங்கையிலிருந்து தேசியமுரண்பாட்டுடன் இணைத்து ஒரு தனிப்பிரதேசமாக தமிழ்ப் பிரதேசம் முதல் மாறிவிடும் நிலையில் உள்ளது. இத்தளப்பிரதேசம் மொத்தப்புரட்சிக்குத் தளமாக அமைய வேண்டுமா என்பதை சிங்களப் புரட்சியாளர்களின் எழுச்சியே தீர்மானிக்கின்றது. அப்படியொரு எழுச்சி வேகம் பெற்று எதிர்காலத்தில் எழும் பட்சத்தில் தமிழீழம் இலங்கைப்புரட்சிக்கான முதல் தளப்பிரதேசமாகும். அப்படி உருவாகத்தவறின் தமிழ்ப்பிரதேசம் தமிழீழம் என்ற குடியரசாக மாறுவது தவிர்க்கமுடியர்து. இது ஒரு மக்கள் குடியரசாக மாற தமிழீழப்பாட்டாளிகள் அதை கைப்பற்றவேண்டும். அதற்கு ஒரு கட்சியைக் கொண்டிருக்கவேண்டும். அதுவே தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சி. ஒரு கேள்விக்குப் பதிலளித்த ப-நெடுமாறன் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கள் எல்லாம் தேசிய இனவிடுதலையை எதிர்த்து தொழில்படுவதாகவும், அரசு பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும் நமது மக்கள் அறிந்த மார்க்கிச கட்சி போலிக்கம்யூனிஸ்டுகளுடன் தனது பணியை முடித்தார்கள். அதற்கும் இவ் விவாதத்துக்கும் வேறுபாடு அதிகமில்லை. இங்கு இவ்விவாதமென்பது இது காலவரையும் மிகுந்த துன்பத்துக்குட்பட்ட தமிழ்பேசும் மக்களின் சமூகப் பொருளாதார அரசியல் விடுதலைக்கு வழிகோலுவதே. இச்சூழ்நிலைக்கு சாத்தியமானது. மாறன் ஒப்பிடும் இவ்விடயம் தனது கருத்தை நியாயப்படுத்த நெடுமாறன் துணைக்கு வந்துவிடுகிறார். தமிழ் பேசும் மக்களின் பிரச்சனையை நெடுமாறனின் பிழைப்புவாத அரசியலுடன் ஒப்பிட்டு இன்று தேசிய விடுதலைப்போரில் ஊன்றி நிற்போரை கொச்சைப்படுத்தியுள்ளார். தமிழ்மககளின் விடுதலைப்போராட்டம் இன்று ஆயுதப்போராட்டமாக மாற போலிக்கம்யூனிஸ்டுக்களின் தவறான போலியான தன்மையால் எழுந்தது. இன்று தமிழ்மக்களின் தேசியவிடுதலைப்போராட்டம் ஆயுதப்போராட்டமாக வளர்ந்துள்ளது. இன்று போலியா உண்மையா என்பது காலம் கடந்த ஒரு நிலையில் எழும் விவாதமே. தமிழ் தேசிய இனம் எந்த உண்மைக் கம்யூனிஸ்டடையும் தேடிக்கொண்டு காலம் கடத்த தயாராகவில்லை. ஏனெனில் அவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மாறன் ஏதோவொரு கம்யூனிஸ்ட் கட்சியை வைத்துக்கொண்டு விவாதிப்பதாக தோன்றுகிறது. மாறனின் கற்பனையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி போலியற்றது என மாறன் சொல்ல தமிழ் தேசிய இனம் தனது போராட்டத்தைக் கைவிட்டு ஜக்கிய இலங்கைக்குப் போராட வரும்படி கோருகின்றார். இங்கு போராட்டத்தை கைவிட்டு என்பது சுயநிர்ணய உரிமையுடன் கூடிய பிரிவினையையே. மாறனின் கற்பனையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியை நாம் பார்க்கத் தவறுவதாக கூறி அதைப் பார்க்கும்படி எம்மை அழைக்க நெடுமாறன் துணைக்கு வருகின்றார். முதலில் புரட்சிகர மார்க்சிய நிலைப்பாட்டை சிங்கள மார்க்சிஸ்டுக்கள் வைத்தபின் எம்மை ஜக்கியத்துக்கு வர அறை கூவவேண்டும். அப்படி வைக்காமல் எம்மை ஜக்கியத்துக்கு வர அறைகூவுவது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தை கைவிட்டு சிங்கள இனவாத அரசிடம் சரணடையக் கோருவதே. இலங்கையின் ஜக்கியப் புரட்சிக்குஅறைகூவல் இடும் யாரும் முதலில் சிங்களக் கம்யூனிஸட்டுக்களை இனம் காட்டுங்கள். இல்லையெனில் அவர்களுடன் இணைந்து நீங்கள் உருவாக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டத்தை முன் வையுங்கள். அதை விடுத்து எம்மை (தமிழ்ப் பாட்டாளிகளை) சிங்கள மக்களுக்குத் திட்டம் வைக்கக் கோருவது இன்றைய பிரதான இனமுரண்பாட்டையே மறுதலிப்பதாகும். இன்று பிரதான முரண்பாடான தமிழ்ப்பாட்டாளிகள் தமக்கான ஒரு கட்சியூடாக இன்று முன்னெடுப்பது தவிர்க்க முடியாதது. எவ்வளவுதான் வர்க்கம் பேசிக்கொண்டும் தேசிய நலன்களினோடும், வர்க்கங்களின் ஜக்கியத்துக்கு எதிரான கருத்துகளுடனும் திருப்தியுறுபவர்கள் தேசிய கருத்தமைவில் எல்லைகளுக்குள் சிக்கியிருப்போரே தொடர்ந்து என்-எல்-எவ்-டியைக் குறிப்பிடுகின்றார். தேசிய நலனை உயர்த்திப்பிடிப்பது வர்க்க நலனுக்கு எதிரானதல்ல. ஏன் தேசிய நலன் உயர்த்தப்படுகிறது? இனமுரண்பாட்டின் தீவிரத் தன்மை இதுவே பிரதான முரண்பாடு. பிரதான முரண்பாட்டை கவனத்தில் எடுக்காது வர்க்கமுரண்பாட்டை தீர்க்கமுடியாது. தேசிய முரண்பாட்டின் ஊடாகவே வர்க்க முரண்பாடு தீர்க்கப்பட முடியும். இங்கு தேசிய முரண்பாடு பிரிவினை நோக்கி நகரும் போதே ஜக்கியத்துக்கு எதிரானதென மாறன் குறிப்பிடுகின்றார். ஏன் பிரிவை நோக்கி நகர்கின்றது இது தொடர்பாக மேல் பலதடவை விவாதித்துள்ளோம். அதாவது சிங்கள கம்யூனிஸ்டுக்களின் எழுச்சி இன்று இல்லை. இது தொடரும் பட்சத்தில் பிரிவினையை தடுக்கமுடியாது. எதிர்காலத்தில் சிங்களக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாகுமென நாம் இன்று முடிவெடுப்பது என்பது எதற்கும் உதவாது. எதிர்காலம் எல்லையற்றது. தேசிய இன முரண்பாடு தொடரும் வரையில் புரட்சிகர சிங்கள கம்யூனிஸ்ட் கட்சி உருவாகுவது என்பது மிகத்தீவிர முன்முயற்சியூடாகவே சாத்தியம். இது ஒரு கருத்தமைவு. அப்படியொரு கட்சி உருவாகுமென எதிர்வு கூறமுற்படுபவர்கள் முதலில் அவர்கள் ஒரு கட்சியாகவே இயங்கமுடியும். பின்பே இரு கட்சியும் இணைய முடியும். இது எல்லாத் தேசிய இனத்துக்கும் பொருந்தும். என்-எல்-எவ்-டி(இதன் தாய்வடிவம்) பாதுகாப்பு பேரவை போன்றவை அன்றைய கொதிநிலையை தமிழ்மக்கள் மீதான பேரினவாத யுத்தத்தை எதிர்கொள்ளாது அடுத்த அடிவைக்க இயலாது என்று(சரியான முடிவுதான்) தமிழீழப்போரை முன்னெடுத்ததுடன் திருப்தியுற்றதும் தமக்கென வர்க்க நலனடிப்படையிலான தளத்தை நிறுவுவதை புறக்கணித்தும்---- என்ற உங்கள் வாதத்தில் என்-எல்-எவ்-டி, பாதுகாப்புப் பேரவை ஒப்பிடமுடியாத வேறுபாட்டைக் கொண்டிருந்தன. பாதுகாப்பு பேரவை ஜக்கிய இலங்கையென்று கூறியது. நீங்கள் இன்று கூறுவது போன்றது. இதைவிடுத்து பாதுகாப்புப்பேரவை பொறுப்பாளர் நெப்போலியன் (இவரை பின் கண்டியில் ஈறோஸ் சுட்டுக்கொன்றது. ) வர்க்கம்பற்றி எந்த அறிவையும் கொண்டிருக்கவில்லை. பாதுகாப்புப் பேரவை ஒரு தனிநபர் பயங்கரவாத இயக்கமாகவே செயற்பட்டது. இனி என்-எல்-எவ்-டி யைப் பார்ப்போம். இது தொடர்பாக ஒரு விவாதம் தொடர்ந்து வெளிவருகின்றது. என்-எல்-எவ்-டி ஆரம்பத்தில் மத்திய தர இளைஞர்களிடம் வேலை செய்தனர். 1984 நடுப்பகுதியின் பின் கிராமப்புறங்களில் வேலை செய்தனர். 1985 ஆரம்பத்தில் இவ்வேலை முறையில் ஏற்பட்ட பிரச்சனை உடைவாகவும், பின்னர் நகர், கிராமம் என இரண்டிலும் வேலை செய்ய முடிவு எடுத்த அமைப்பு தொடர்ந்து அழிக்கப்பட்டு விட்டது. என்-எல்-எவ்-டி தனது தவறுகளை திருத்தி வேலைசெய்யும் காலம் என்பது குறுகியதாக இருந்தது. இக்கால இடைவெளியில் சில கிராமங்களை வென்றெடுத்தது. நிலப்பறிப்புக்களை நடத்தியது. யாழ் மண்ணில் நடைபெற்ற அனேகமான ஜனநாயகப் போராட்டத்தில் என்-எல்-எவ்-டி பின்னிப் பிணைந்து நின்றது. என்-எல்-எவ்-டி உருவாக்கத்துக்கும் அதன் அழிவிற்கும் இடையிலான இரண்டு வருடத்தில் ஒருமுறை உடைந்தும், மூன்று வேறுவேறான வேலைமுறை மாற்றியதாலும் மூன்றாவது வேலைமுறை 86 கடைசியில் கைவிட்டு அமைப்பின் கலைப்பின் கருத்துக்கு இட்டு சென்றது. எதிலும் ஒரு அடிப்படையை வைக்க முடியாமல் போய்விட்டது. என்-எல்-எவ்-டி குட்டிபூர்சுவா தன்மை ஒரளவு கொண்டிருந்த போதும் வர்க்க அடிப்படையில் ஊன்றி நின்றது. என்-எல்-எவ்-டி ஒரு முன்னணி. ஆகவே இது ஒரு வர்க்க கட்சியல்ல. அது எப்போதும் வர்க்க அடிப்படையில் ஊன்றி நிற்க முயன்றது. இது தொடர்பாக என்-எல்-எவ்-டி கட்டுரையில் விவாதிப்போம். என்-எல்-எவ்-டி தமிழீழம் என எடுத்தது சரியானது. அது இன்று ஒரு சக்தியாக வளர்ந்திருப்பின் இன்று தமிழீழம் பிரிவது தவிர்க்கமுடியாது இருந்திருக்கும். ஏன் எனில் சிங்களப் பாட்டாளிக் கட்சி இன்று இல்லை. தமிழ்ப் புரட்சிகரசக்திகள் சிங்கள மக்கள் மத்தியில் எப்படி ஈடுபாட்டோடு வேலை செய்ய இயலுமென மிகவும் இலகுபடுத்திய பார்வையில் கருத்தை தெரிவிக்கின்றனர் என்று எனது கருத்தை குறிப்பிடுகின்றார். பின் இதை ஏற்றபடி பிரிவினையை முன்னெடுத்துக் கொண்டே அதாவது பாதுகாப்புப் போரை சுயநிர்ணய உரிமைக்கான போரை, நிலைமை கோரும் பட்சத்தில் பிரிவினை உளளடக்கிய போரை இன்னும் சிறப்பாக மற்றைய பிரிவு மக்களுடன், ஜக்கியப்படவும், புரட்சிகர சக்திகளுடன் இணையவும் என கூறும் உங்கள் வாதம் சரியானதே. நாம் இலகுபடுத்திச் சொல்லும்போது உங்களால் இதை புரிந்து கொள்ளமுடியாதுள்ளது. உங்களது மேற்கண்ட வாதம் உங்கள் அனைத்து வாதத்துக்கும் எதிரானது. இதைத்தான் நாம் குறிப்பிடுகின்றோம். நீங்கள் நிலமை கோரும் பட்சத்தில் என்ற விடயம் இன்று பொருந்தும். எதிர்காலம் இதை மாற்றலாம். அது எதிர்காலத்திற்கு உரியது. நீங்கள் இலக்கம் 2 இல் சொன்ன விடயத்தில் நாம் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் போராடாமையை சுட்டிக்காட்டவில்லை. சிங்கள மக்களோ, தமிழ் மககளோ போராடவேண்டின் ஒரு புரட்சிகர கட்சி தேவை. நாம் ஒரு புரட்சிக்கட்சியையும், அணிதிரட்டபட்ட மக்களையும் குறிப்பிட்டோம். சிங்கள, முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது தமிழ்ப்புரட்சியாளர்கள் அவர்களுக்காக குரல் கொடுத்தனர் இங்கு தமிழ்மக்கள் குரல் கொடுக்கவில்லை. ஏன் ஏனெனில் தமிழ் புரட்சியாளர்களால் அணிதிரட்டப்படவில்லை. தமிழ் மக்கள் கொல்லப்படுவதை சிங்களப் புரட்சியாளர்கள்(அப்படி ஒருவரும் இல்லை) குரல் கொடுக்கவில்லை என்பதையே குறிப்பிட்டோம். புலிகளின் பின்னால் அணிதிரண்டுள்ள மக்கள் பிற்போக்கான இனவாதத்தை ஏற்றுள்ள மக்களே. மக்களுடைய சிந்தனைக்குப் பின்னால் வாலாக சீரழிவதன் மூலம் மாற்றம் எதுவும் செய்து விடமுடியாது. உங்கள் வாதம் உங்கள் கருத்தை நியாயப்படுத்த கையாளப்பட்டுள்ளது. புலிகளின் பின்னால் மக்கள் அணி திரட்டப்பட்டு உள்ளனர் என்ற வாதம் தவறானது. மக்கள் ஒரு அரசியல் வழிப்படுத்திய புலிகளால் அணிதிரட்டப்படவில்லை. புலிகளின் அரசியல் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அடிப்படையே. மக்கள் புலிகள் இவ்வரசியல் அடிப்படையில் அணிதிரட்டப்படவில்லை. மாறாக மக்கள் குட்டிப்பூர்சுவா தேசிய உணர்வையே கொண்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் இனவாதத்துக்கு பதில் சிங்கள மக்கள் வாழும் உரிமை போன்று எதிர்பார்ப்பவர்களே. இங்கு இவர்கள் தனிச்சலுகையை எதிர்பார்க்கவில்லை. மக்களின் சிந்தனையின் பின்னால் வாலாக சீரழிவது என்பது எவ்வளவு வேடிக்கை. சமூகம் தானாக மாறிவிடும் என கனவுகளில் இருந்து எழும்புவதே. எந்த மக்கள் கூட்டமும் புரட்சிக்கு முன்னர் பிழையான கருத்தைக் கொண்டிருப்பர். பிற்போக்கு கருத்தை மாற்றுவது பாட்டாளிகளின் கடமை. பாட்டாளிகள் சீரழிவார்கள் எனின் எந்தப் பிரச்சனைக்கும் பொருந்தும். இது சிறப்பாக மாறன் கருதுவது போல் தேசிய இனப்பிரச்சனைக்கு மட்டுமல்ல அனைத்துப் பிரச்சனைக்கும் பொருந்தும். இறக்கும் இரணுவத்தினரை வீரபுருசர்களாக கருதுகின்றனர் என்றும் சிங்கள இளைஞர்கள் பெருந்தொகையில் இராணுவத்தில் சேர்வதையும் தாங்கள் வைத்த கருத்துக்கள் பெரிதும் மிகையானவையும் உண்மை நிலையைத் திரிப்பதுமாகும். அண்மையில் ராவய சஞ்சிகை எடுத்த ஆய்வு கணிப்பு பெருமளவு மக்கள் யுத்தத்தை வெறுப்பதை எடுத்துக்காட்டியது. 1000 இராணுவத்தை திரட்டக்கோரிய இராணுவ ஆட்சேர்ப்பு நிலையங்களுக்கு (மாத்தறையில் என ஞாபகம்) 4 பேரே சமூகமளித்திருந்த உண்மைநிலை என்ற வாதத்தில் எமது வாதம் உண்மை இல்லை என்றும் திரிபு எனவும் மாறன் குறிப்பிட்டுள்ளார். 29-8-1993-வீரகேசரியில் 10 ஆயிரம் இராணுவ சேர்ப்புக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டு 5-8-1993 இல் 7500 இராணுவ வீரர்கள் சேர்க்கப்பட்டதை வீரகேசரியில் பார்க்க முடிந்தது. 7-8-1999 புலிகளின் செய்தியில் 10 ஆயிரம் இராணுவ வீரர்கள் சேர்க்கப்பட்டதாக அறிவித்தனர். சிங்களப்பகுதியில் சிலவற்றில் குறைந்த எண்ணிக்கையானோர் சமூகமளித்திருந்தனர். ஏனெனின் ஜே-வி.பி- செல்வாக்குப் பகுதியும், பல சிங்கள இளைஞர்கள் படுகொலை நடந்த பிரதேசம் என்பதால். இதில் மாத்தறை, அம்பாந்தோட்டை .... என சில பிரதேசங்கள் இப்படிப் பார்க்கமுடியும். உண்மை நிலைமை இதுவே. சிங்கள இராணுவத்தின் இறப்பு என்பது தியாகத்துக்குரியதாக புலிகளைப் போல் போலியாக அரசால் கூறப்படுகின்றது. இனவாத சிந்தனையின் பின் அணிதிரண்டுள்ள மக்கள் வீரபுருசர்களாக பார்க்கின்றனர். அமெரிக்க இராணுவத்திலுள்ள இராணுவ வீரராலும், அமெரிக்க மக்களும் இராணுவத்தின் செயற்பாட்டை புரட்சிகரமானதாகவும், வீரத்துக்கு உரியதாகவும் பார்க்கின்றனர். வியட்நாம் யுத்தத்தில் அமெரிக்க வீரர்களின் இழப்பு தொடர்ந்து மக்கள் யுத்தத்துக்கு எதிராக இருக்கின்றனர். இதன் வெளிப்பாடாக இராணுவத்தில் சேரமறுத்தல், ஓடுதல் .......என அனைத்தும் நிகழ்ந்தன. ஆனால் மீண்டும் அமெரிக்காவின் புதிய ஆக்கிரமிப்பை அங்கீகரித்து வீரர்களை தியாகிகள் ஆக்குகின்றனர். யுத்தத்தின் விளைவுடன் ஓடுதல், சேரமறுத்தல்..... என அனைத்தும் தொடரும். ராவய கணக்கு எடுப்பு யுத்தம் வேண்டுமா? வேண்டாமா? என்பதே கேள்வியாக கேட்கப்பட்டது. இதை தமிழ் மக்களிடமும், உலக மக்களிடமும் கோரின் 99 வீதமானோர் எதிர்ப்பர். அதுபோல் சிங்கள மக்களிடம் சுயநிர்ணய உரிமையை ஏன் சுயாட்சி தமிழ் மக்களுக்கு கொடுப்பது எனின் பெரும் பகுதியினர் எதிர்ப்பர். இது அடிப்படையில் இனவாதமே. எந்த கருத்தின் பின்னாலும் மக்கள் அணிதிரள வேண்டும் எனின் மக்களுக்கு தலைமை அளிக்க ஸ்தாபன வடிவம் அவசியம் என்பது உண்மைதான். அது இன்றில்லை. மதிப்பீடு என்பது எந்த ஸ்தாபனத்தின் பின் உள்ளனர் என்பதை வைத்தே. இன்று சிங்கள மக்கள் ஜ-தே-க, ஸ்ரீ-ல-சு-க என மாறி மாறி எது கூடிய இனவாதத்தை கைக்கொள்ளுகின்றதோ அதன்பின் அணிதிரள்கின்றனர். சிங்கள மக்கள் அணிதிரண்டுள்ளததை இது காட்டுகிறது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களின் போராட்டம் இனவாதம் அல்ல. மாறாக சிங்கள மக்களுடன் சரிசமமாக வாழும் உரிமையைக் கேட்கின்றனர். இக்கோரிக்கையை புலிகள் போன்ற இனவாதிகள் தமக்கு சாதகமாய் பயன்படுத்தி மற்றைய இன மக்களை அழிக்கின்றனர். இங்கு புலிகள் பின் அணிதிரட்டப்படவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் எந்தவொரு வர்க்க சிந்தனை கொண்டோரோ ஜனநாயக சக்திகளோ இல்லை என குறிப்பிடும் (நீங்கள் என்பது சமரை) அதற்கு முன்பாக சமகாலத்தில் முற்போக்கு சிங்கள அரசியல் பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கியுள்ளது நல்ல சகுனமே எனக் குறிப்பிடுவதன் மூலம் முரண்படுகீறிர்கள். இது முரண்பாடு இல்லை. நாம் பிரச்சனையை ஆராயும் விதத்திலும் உங்கள் ஆய்வுக்கிடையில் ஆன முரண்பாடாகவுள்ளது. நாம் எப்போதும் வர்க்க அடிப்படையை அடிப்படையாக வைத்தே புரட்சிகர சிங்கள சக்திகளை ஆராய்கிறோம். இதிலிருந்தே சிங்களப் புரட்சிகரப்பிரிவினர் இல்லை என்கிறோம். முற்போக்கு சிங்களப்பத்திரிகை வருகிறது என்ற வாதத்தில் நாம் அவர்களை வர்க்க சக்தியாக பார்க்கவில்லை. இப்படி வெளிவரும் முற்போக்குப் பத்திரிகைகள் எதிர்காலத்தில் புரட்சிகர சக்தியினரை இனம் காட்ட உதவும். இன்று ஜரோப்பாவில் வெளிவரும் 20 மேற்பட்ட சஞ்சிகைகளை பார்ப்போம். எல்லாம் புரட்சிகர சஞ்சிகையல்ல. இதை நீங்கள் ஏற்பீர்கள். அதுபோல் சிங்களப் பத்திரிகைகள் சில, கனடாவில் சில சிங்கள நண்பர்கள் கூடினர் என்பது எதற்காக, என்ன கதைத்தார்கள் என நீண்ட விவாதம் நிகழ முடியும். பிரான்சில் ஜே-வி.பி யினர் உள்ளனர். அவர்களே சுயநிர்ணய உரிமையை திரிக்கின்றனர். எம்மிடம் எத்தனை சஞ்சிகைகள், எத்தனை சந்திப்புக்கள் அதுபோல் ஒன்றாக ஏன் சிங்களப் மக்களுக்கு ஒரு கட்சியைக் கட்டமுடியும். அவர்கள் உருவாக்கும் கட்சி இலங்கைக்கானதாக இருக்கமுடியாது. இது அப்பட்டமாக சிங்களவன் மோடன் என்கின்ற வாதத்தில் நாகரிகமான வர்க்கம் பூசிய வடிவமேயொழிய வேறல்ல என்பதே எமது கருத்தாகும். எவ்வளவு முடடாள்தனமான ஆய்வு. ஒரு தேசிய இனத்தின் விடுதலையை வலியுறுத்தின் இன்றைய நிலையில் பிரிவினை தவிர்க்கமுடியாதுள்ளது என வாதிட்ட எம் கருத்தும், இந்நிலைமை ஏற்பட சிங்களப் புரட்சிகர சக்திகள் வளர்ச்சி இன்மையும், அதனால் ஒரு கட்சி இல்லை என சுட்டிக்காட்டியதை சிங்களவன் மோடன் என்ற வரைறையில் இருந்து சொன்னதாக ஆய்வு செய்துள்ளீர்கள். இது எந்த ஆய்வையும் விடையாகப் தரப்போவதில்லை. எந்தப் புரட்சிகர எழுச்சியும் அற்ற இன்றைய நிலையில், சிங்கள கம்யூனிஸ்டுக்கள் உருவாகும் வரை சிங்கள சமூகம் இனவாதத்துக்குள் இருப்பது தவிர்க்கமுடியாதது. தமிழ் தேசியத்தின் இன்றைய தேசிய விடுதலைப் போராட்டம் பல கம்யூனிஸ்டுக்களை (இவர்கள் அமைப்பாகவில்லை) உருவாக்கியுள்ளது. அவர்களின் இணைவு எதிர்காலத்தில் முற்போக்குத் தேசியத்தை முன்னெடுக்கும். சிங்கள கம்யூனிஸ்டுக்கள் உருவாகின் ஒரு ஜக்கிய இலங்கைக்கான புரட்சியாக மாறும். சிங்கள கம்யூனிஸ்டுக்கள் ஒரு சக்தியாக உருவாகாத நிலையில் தமிழீழம் ஒரு பாட்டாளிவர்க்கத் தலைமையில் ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுத்து ஒரு நாடாக பரிணமிக்கும். ஆகவே சிங்களவன் மோடன் என்ற கருத்தின் மீதான உங்கள் வாதம் ஆய்வுகளையும் யதார்த்த நிலைமைகளையும் நிராகரிப்பதே. இவ் அடிப்படையில் இயங்கியலை நிராகரிப்பது சுயநிர்ணய உரிமையை அங்கீகரியுங்கள் என்ற வாதத்தை ஆராய்ந்துள்ளீர்கள் என மேற் கூறிய சிங்களவன் மோடன் என்ற உங்கள் கருத்தில் இருந்து இதைக் கூறுகின்றீர்கள். முதல் ஆய்வே தவறாக இருக்கும் போது அதாவது இவ் அடிப்படையில் என்பதற்கு ஊடாக பின்னைய முடிவு தவறானதாக மாறிவிடுகின்றது. புரட்சிகர வர்க்க சக்திகள் புலிகளின் பாசிச அபாயத்தை முறியடித்து, மக்களைப் பிற்போக்கு கருத்தமைவுகளிலிருந்து விடுவித்து அணிதிரட்டி சுயநிர்ணய உரிமைப்போரில் வெல்கின்ற வளர்ச்சி காலகட்டம் வரை சிங்கள மக்கள் ஜ-தே-க யினை அல்லது ஸ்ரீ-ல-சு-க யினை அல்லது அதை ஒத்த நண்பர்களையே தெரிவுசெய்கின்றவர்களாகவே இருப்பார்கள் என்ற வாதமாகும். இயங்கியலை ஏற்கின்ற அதற்காக உழைக்க உறுதிபூண்டுள்ள சமர் தமிழ் தேசியம் என்றவுடன் அல்லது சிங்கள மக்களின் இயங்கியலை பிரயோகிகப்பது எவ்விதம் எனக்காட்டி இயங்கியல் என்கின்றதை இலங்கையில் கொச்சைப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்ற வாதம் சிங்களவனை மோடன் எனச் சொன்னதாக (உங்கள் ஆய்வு தவறுகளில்) கூறி அதில் இருந்து கற்பனையில் சமர் பற்றிய ஒரு கருத்தமைவை ஏற்படுத்தியதே உங்கள் வாதம். நாம் விவாதிப்பது இன்றைய நிலையை ஒட்டியே. நீங்களே எதிர்கால நிலைமைகளை கற்பனை பண்ணி நிகழ் காலத்திட்டம் தயாரிக்க கோருகின்றீர்கள். இதுவே எங்களுக்கும் உங்களுக்குமான தீர்மானமான பிரதான வேறுபாடு. உங்கள் இக் கட்டுரை முழுமையாக எதிர்காலத்தில், கற்பனைக் கட்சியில் இருந்தும் கோரும் விவாதமே. அதில் இருந்தே விவாதிக்க முற்பட்டுள்ளீர்கள். அதிலிருந்தே நாம் இயங்கியலை கொச்சைப்படுத்தியதாக கூறியுள்ளீர்கள். நாம் இன்று சிங்களக் கம்யூனிஸ்டுக்கள் இல்லை என்கின்றோம். ஆனால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ளனர். எதிர்காலத்தில் சிங்களக் கம்யூனிஸ்டுக்கள் உருவாக மாட்டார்கள் என எச் சந்தர்ப்பத்திலும் நாம் கூறவில்லை. எதிர்காலத்தில் உருவாகும் வீச்சுத் தொடர்பாக நாம் இன்று பாரபட்சமாக ஆய்வு செய்ய முடியும். இது இன்றைய நிலைமையில் இருந்தே சாத்தியம். அம்முடிவு சரியாக இருக்கவேண்டும் என்று இல்லை. ஏனெனில் சமூகம் இன்று இருப்பது போல் என்றும் இருப்பதில்லை. சர்வதேச அழுத்தங்கள், மற்றும் பல காரணிகள் நிலைமைகளை தலை கீழாக மாற்றிவிடும். இதை எதிர்வு கூறமுடியாது. ஆனால் பரிமட்டமான ஆய்வை செய்யமுடியும். அப்படி பரிமட்டமாக வரும் முடிவை வைத்து அதற்கு அமைய திட்டம் தயாரிக்க கோருவது கற்பனையானதும், கனவுக்கும் உரியதுமே. இன்றைய நிலைமை தான் ஒரு திட்டமாக பரிணமிக்கமுடியும். எதிர்காலத்தில் சிங்கள கம்யூனிஸ்டுக்ள் உருவாகும் போதே ஜக்கிய இலங்கைக்குப் போராடுவதா இல்லையா என்பதை அன்றைய நிலைமைகளுடன் மட்டும் தீர்மானிக்கமுடியும். இன்று நாம் போராடுவது இன்றைய பிரதான முரண்பாட்டுக்கு அமையவே. ஒரு தமிழ் கட்சி உருவாகும் போது அதில் ஜக்கிய இலங்கைக்கான புரட்சிகர நிலைமை ஏற்படின் போராடவேண்டும் என்பது கட்சியின் திட்டம் கொண்டிருக்கவேண்டும். அதற்காக இன்றே ஜக்கிய இலங்கைப் புரட்சியென வான்முட்ட முழங்குவதால் ஒரு புரட்சி நடந்து விடாது. ஏன் எனில் யதார்த்த நிலமைகளில் இருந்தே புரட்சி நடைபெற முடியும். உங்கள் வாதம் இன்றைய நிலமைகளை மறுக்கும் யதார்த்த இயங்கியல் மறுப்பாக உள்ளது. எதிர்காலத்தில் சிங்கள கம்யூனிஸ்டுகள் உருவாக மாட்டார்கள் என நாம் எச்சந்தர்ப்பத்திலும் கூறவில்லை. இங்கு எதிர்காலம் என்பது முடிவற்றதுடன் வறையறுக்க முடியாது. ஜக்கியத்துக்கான திட்டங்கள், திட்டங்கள் அதற்கான முயற்சிகள் எதுவுமே செய்வதில் கவனம் செலுத்தாது அகநிலையின் அடிப்படையில் சிங்கள மக்கள் மத்தியிலான புரட்சிகர சக்திகளின் வளர்ச்சியைப் பற்றி ஆருடம் கூறுவது அகநிலைக் கண்ணோட்டமே ஆகும். நாம் ஆருடம் கூறுகின்றோம் என்ற வாதம் உங்கள் அகநிலைக் கருத்தைமைவில் இருந்து எழுவதே. நாம் இன்றைய யதார்த்த நிலைமையில் நின்றே (இது அகநிலையல்ல) கருத்து கூறுகின்றோம். மறுதலையாக நீங்களே எதிர்காலத்தில் உருவாகும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பற்றி ஆருடம் கூறி அதற்கு இன்றே திட்டம் தயாரிக்க வேண்டும் என்கின்றீர்கள். ஜக்கியத்துக்கான திட்டம் என்பது தமிழீழ கம்யூனிஸ்ட் கட்சி தெளிவாக கொண்டிருக்கவேண்டும். அதற்கான முயற்சியை யாரும் நிராகரிக்க முடியாது. நாம் இன்று சிங்கள கம்யூனிஸ்ட் கட்சியோ, சக்திகளோ இல்லையென்கின்றோம். இது அகநிலையாகவும் ஆருடமாகவும் அமைந்துவிடும். நீங்களே அகநிலை விருப்புடன் ஆருடம் கூறி சிங்களப் புரட்சியாளர்கள் உள்ளிட்ட கட்சியை கோருவதுடன் ஜக்கிய இலங்கைப் புரட்சியை நடாத்தக் கோருகின்றீர்கள். இங்கு எமது திட்டம் பிரதான முரண்பாடான தேசிய விடுதலைப் போராட்டத்தை உள்ளடக்கியதே. வடக்கு கிழக்கு கூட வர்க்கத்தலைமையிலான தேசிய விடுதலை என்பதற்கான வெற்றிக்கு உடனடி வாய்ப்பு இருப்பதாக யாரும் நிறுவ முடியாதெனவே கருகின்றேன் என்ற உங்கள் வாதத்தை நிராகரிக்கின்றோம். இது உங்கள் அகநிலை நின்று எதிர் காலத்தை ஆருடம் பாhத்து வைக்கும் ஜக்கிய இலங்கைப் புரட்சியை நியாயப்படுத்தும் வாதமே. வடக்கு கிழக்கில் இன்று நடக்கும் யுத்தத்தையும், அங்கு உருவாகியுள்ள தளப்பிரதேசத்தையும் நிராகரித்த யதார்த்த இயங்கியல் மறுப்பே. இன்று பிற்போக்கு பாசிச தரகுப் புலிகள் இப்போராட்டத்தை அழிவுயுத்ததுடன் கூடிய பாதுகாப்புப் போரை நிகழ்த்துகின்றனர். இது இதற்கு மேல் முன்னேறாது. ஏனெனில் புலிகளின் அரசியலே காரணம். இந்த திட்டத்தில் ஒரு பாட்டாளி வர்க்க கட்சி இருந்திருப்பின் இப்போராட்டம் பாதுகாப்பு யுத்தமாக அல்ல (தற்காப்பு யுத்தமாக அல்ல) பிரிந்துபோகும் ஒரு தேசிய விடுதலையாக நகர்ந்திருக்கும். இன்று பாட்டாளி தலைமை இல்லையென்பதே பிரச்சனை. இதை தீர்க்கும் பட்சத்தில் தேசிய விடுதலைப் போராட்டம் வெற்றிபெறும். இது உடனடி வாய்ப்பை கொண்டிருக்குமா இல்லையா என்பதை ஒரு ஸ்தாபனத்தின் உருவாக்கத்துடன் சம்மந்தப்பட்டது. பிரிவினைதான் இனங்களுக்கிடையே அவநம்பிகை கொண்ட சக்திகளையும் அதாவது வர்க்க கருத்தமைவை பலவீனமாக்கும் சக்திகளை அணிதிரட்டவே உதவும். இவ்விவாதம் இலங்கை அரசின் இனவாத கருத்தமைவுக்கு மேல் சென்று விடவில்லை. ஒரு தேசிய இனப்பிரச்சனையைக் கோரும் போது வர்க்க நலம் கொண்டோர் கட்சியின் ஜக்கிய இலங்கைப்புரட்சியை கருத்தில் கொண்டு போராடும் அதேநேரம் அதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும். மறுதரப்பாக சிங்கள கம்யூனிஸ்டுகள் பிரிவினையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீரிக்கவேண்டும். பிரிந்து செல்ல தமிழ் மக்கள் விரும்பின் பிரிந்து செல்ல உரிமையுண்டு என சிங்கள மக்கள் மத்தியில் வேலை செய்து ஸ்தாபனமாகவும் இருக்கவேண்டும். இதன் போது மட்டுமே தமிழ் கம்யூனிஸ்டுகள் பிரிவினைக்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும். இனங்களுக்கு மத்தியில் அவநம்பிக்கை கொண்ட சக்திகள் இனவாதிகளே. அவர்கள் பிரிவினையை கைவிடின் இனவாதத்தை ஏற்பதே. தேசிய நலனை முதன்மையாக்கும் சக்திகளையும் அதாவது வர்க்க கருத்தமைவை பலவீனமாக்கும் என்ற வாதம் இனவாதமே. பிரிவினையையே முதல் அங்கீகரிக்க வேண்டும். அதனூடாக ஜக்கியப்படவும் முடியும். வடக்கு கிழக்குத் தேசியவாதிகளுக்கான எமது சமரசமே பிரிவினைதான் என்பது மேலும் இன அடிப்படையிலான அவநம்பிக்கை கொள்கின்ற சக்தி ஒன்றினால் மக்களை இனவாதங்களில் இருந்து மக்களை விடுவிக்கும் திசையில் பயணிக்க முடியாது. விளைவு தேசியப் போருடன் திருப்தியுறுவதாகவே முடியும் என்ற உங்கள் இவ்விவாதம் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இனவாத மூலம் பூசியுள்ளீர்கள். சிங்கள இன வாதத்துக்கும் அடக்குமுறைக்கும் உள்ளான தமிழ் மக்கள் போராடும் போதும் தமிழ் இன உணர்வு எழுவது இயல்பானது. இதை புலிகள் போன்ற சக்திகள் தமது நலனுக்கு தவறாக கையாண்டு தேசிய விடுதலைப்போராட்டத்தை தவறாக இட்டுச்செல்ல முயல்கின்றனர். இங்கு தேசிய விடுதலைப்போராட்டத்துடன் திருப்தியுறுவதாகவே அமையும் என்பது யார் தலைமையில் புரட்சி நடந்தது என்பதே தீர்மானிக்கும். பாட்டாளிகள் எப்போதும் சர்வதேசியவாதிகள். அவர்கள் குறித்த எல்லைக்குள் திருப்தியுறுபவர்கள் அல்ல. அவர்களுக்கு எல்லை கிடையாது. ஒரு தேசிய விடுதலைப்போராட்டம் எல்லையை உருவாக்கலாம். இதை எந்த மார்க்சிஸ்டும் நிராகிரிக்கமுடியாது. ஏனெனில் அப்போராட்டம் முற்போக்கானது. பாட்டாளிகள் ஆட்சியில் இருப்பின் அவர்கள் எப்போதும் சர்வதேசயவாதிகளாகவே இருப்பர் . தற்போதைய காலகட்டத்தில் பாதுகாப்புக்குமான போராட்டமானது தேசியவிடுதலைக்கு போதுமானதல்ல. என கருதிவீர்கள் எனின் அதை தெளிவுபடுத்தியும் உறுதியான தெளிவான வேலைத்திட்டம், சுயநிர்ணய உரிமையை விட மேலதிமான எவற்றை கோரவேண்டுமெனவும் தெளிவுபடுத்தவும் என்ற உங்கள் கேள்விக்கு கட்டுரை முழுதாக மேல் விளக்கியுள்ளோம். இதில் பாதுகாப்புக்கும் ஆன போராட்டமாக தேசியவிடுதலைக்கு போதுமானதல்ல என்ற வாதத்தில் பாதுகாப்பு யுத்தம் ஒரு தேசியவிடுதலைப் போராட்டமாக நடந்து விடாது. பாதுகாப்பு தேசிய குறிக்கோளை கொண்டதல்ல. இது தற்பாதுகாப்புக்கானது. தேசிய விடுதலைப்போராட்டம் தனியரசாக மாறும் குறிக்கோள் கொண்டது. இன்று பாதுகாப்பு யுத்தத்தை மாற்றி நாட்டை விடுவித்தல் என்ற நிலைக்கு யுத்தத்தை மாற்றியமைக்கவேண்டும். சுயநிர்ணய உரிமையை விட என்ற உங்கள் வாதம் யார் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துள்ளனர். சிங்கள கம்யூனிஸ்டுகள் அங்கீகரிக்கும் வரை சுயநிர்ணய உரிமையில் உள்ள பிரிவினையை முன்னெடுப்பது தமிழ் கம்யூனிஸ்டுகளின் கடமை. இதை மறுப்பது யதார்த்த நிலையை மறுப்பாகும்.

 

தேசிய இனப் பிரச்சனை பற்றி தேடலில் இந்திரன்

 

இவரின் கட்டுரையில் உள்ள முரண்பட்ட விடயங்களுக்கு மேல் உள்ள கட்டுரை பதில் அளிக்கிறது. அவைகளுக்கு அப்பால். இலங்கையில் முதலாளித்துவ வளர்ச்சியும் அத்தோடு இணைந்த தேசிய வாதத்தின் தோற்றமும் அவற்றில் அக்கம் பக்கமாக இனவாதத்தையும் வளர்த்துச் சென்றதையுமே இது வரைக்குமான இலங்கை வரலாறு எமக்கு காட்டி நிற்கின்றது என்ற உங்களது வாதம் முந்திய வாதத்துக்கு முற்றாக மாறானது. ஏகாதிபத்தியமானது இந்நாடுகளின் சுதந்திரமான முதலாளித்துவ வளர்ச்சியை தடைசெய்து கொண்டிருக்கிறது. அதற்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கின்றது. இலங்கையில் இனவாதம் என்பது முதலாளித்துவம் கூடிய தேசியவாதிகளால் உருவாக்கப்பட்டது அல்ல. ஏகாதிபத்தியத்தின் தேவையுடன் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ பிரிவினரே தேசிய இனப்பிரச்சனையை முன்னுக்கு கொண்டுவந்தனர். இதில் ஸ்ரீ-ல-சு க- ,ஜ-தே-க- என அனைவரும் தரகு முதலாளித்துவ பிரதிநிதிகளே. இவர்களால் முன்னெடுத்து சென்ற தேசிய இனமுரண்பாட்டை இன்று குட்டிபூர்சுவா பிரிவினர் இக்கோரிக்கையை தமதாக்கியுள்ளனர். இவர்கள் இக் கோரிக்கையின் அடிப்படையில் தரகு முதலாளித்துவ பிரிவுடன் இணைந்துள்ள அதேநேரம் இவர்களுக்கிடையில் கூர்மையான முரண்பாடு இருந்தபோதும் இனமுரண்பாட்டின் அடிப்படையில் ஜக்கியப்பட்டுள்ளனர். இதுவே சிங்கள மக்கள் மத்தியில் புரட்சிகர ஒரு கட்சியோ, பூர்சுவா தேசியவாத இயக்கங்களோ உருவாகாததற்கு பிரதான காரணம். தமிழ் முதலாளித்துவ தலைமையின் என்ற வசனத்தில் கூட்டணி ஒரு தமிழ் முதலாளித்துவ பிரிவினர் அல்ல. அவர்கள் தரகுமுதலாளித்துவ பிரிவினரே. இன்று எம்முன்னுள்ள பணியானது சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களின் போராட்டத்தை முன்னெடுத்து செல்லுவது, சிங்கள பேரினவாத ஆட்சியை எதிர்த்து ஈவிரக்கமற்ற போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் அதேவேளை, தமிழ் குறுந்தேசியவாதத்தை எதிர்த்து, தனித்துவமான போக்கை எதிர்த்தும்...... அனைத்து இனங்களுக்கும் மொழிகளுக்கும் சமத்துவம் என ஜக்கிய இலங்கைக்கான கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபடி கூறியுள்ளனர் . அதுதான் நாம் என அடிக்கடி கட்டுரையில் பயன்படுத்தியுள்ளனர். எமக்குத் தெரிய ஒரு கட்சியை நாம் அறியவில்லை. சிங்கள கம்யூனிஸ்டுக்கள் என நாம் இன்று யாரையும் இனம் காணவில்லை. கற்பனையில் ஒரு கட்சியாக நின்று நாம் கூறுகிறோம் எனக் கூறும் இவ்விவாதம் கற்பனையானது. நாம் இன்று உள்ள நிலையில் நின்றே பிரச்சனையை ஆராயமுடியும். உடனடியாக இன்று கட்சி உருவாக முடியாத இன்றைய நிலையில் நின்று அதற்கு தத்துவப்பலம் கோரி இன்றைய போராட்டத்தை இனவாதத்துக்கு தாரைவார்த்து கொடுக்க கோருகின்றார். ஒரு ஜக்கியப்பட்ட கட்சி உருவாக வேண்டின் சிங்களக் கம்யூனிஸ்ட்டுக்கள் இருந்தால் மட்டும் சாத்தியம். அதன் ஊடாக தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் போராட உரித்து உடையவர்கள் ஆக இருப்பர். அதன் ஊடாகவே அனைத்து மொழியும் சமத்துவத்தை அடைய முடியும். இன்று ஒரு கட்சி இல்லை. அப்படி இருக்க தமிழ் மக்கள் போராட்டம் எப்படி குறுந்தேசியவாதமாகும். இப்படி கூறுவதன் ஊடாக சிங்கள இனவாதத்துக்கு ஆலவட்டம் பிடிப்பதற்கு அப்பால் எதையும் சாதிக்காது. பெருந்தேசியஇனம் சிறுபான்மை தேசிய இனத்தின் பிரிவினையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தும் தமிழ்த்தேசிய இனம் பிரிந்து செல்லின் குறுந்தேசிய வாதமாகும். இன்று பெரும்பான்மை இனம் சிறுபான்மையின் பிரிவினையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து உள்ளதாக கற்பனை பண்ணி சிறுபான்மை இனம் சார்பான கோரிக்கையுடன் வேடிக்கையான ஒரு தத்துவக் கட்டுரையில் இன்று உள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரிவினையை எதிர்ப்பதென்பது இனவாதமே. இது இனவாதத்துக்கு துணைபோவதற்கு அப்பால் ஒரு அடிகூட நகரமுடியாது. நாம் பிரிவினையை கைவிடுவது எதைப் பார்த்து கைவிடுவது. வேண்டும் எனில் கனவுகளே காணமுடியும். ........... அரசையே சிங்கள உழைக்கும் மக்கள் ஜனநாயக புரட்சிகர தேசபக்த சக்திகளும் ஏனைய சிறுபான்மை இனத்தவரும் எதிர்த்துப்போராடிக்கொண்டிருக்கின்றார்கள். போராட்டம் என்பது ஒரு பாட்டாளிவர்க்க தலைமையில் நடைபெறும் போது மட்டுமே அது புரட்சியாக மாறும். தன்னியல்பான போராட்டம் புரட்சியாகிவிடாது. அந்த வகையில் சிங்கள பிரதேசத்தில் பாட்டாளிகள் தலைமையில் போராட்டம் நடைபெறவில்லை. ஜனநாயக, தேசபக்த சிங்கள மக்கள் போராடுகின்றனர் என்பது உண்மைக்குப் புறம்பானது. புரட்சிகர பாட்டாளிகள் இல்லை எனலாம். தேசபக்த ஜனநாயக சக்திகள் ஸ்தாபனமற்ற தன்னியல்பான வகையில் உள்ளதும் அவர்கள் பெரும்பாலும் எதிர்க் கட்சிக்குள் சென்று விடுகின்றனர். தமிழ் தேசிய இனம் விடுதலை பெறுவது சிங்கள இனத்தினதும் விடுதலையை சாதிக்கும் என்கின்றார். இவர்களின் கருத்துப்படி ஒரு முழு இலங்கை விடுதலைக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை ஒரு முன் நிபந்தனையாகவுள்ளது. இது அடிப்படையிலேயே தவறான வாதம் மட்டுமல்ல ஒரு கற்பனைப் புனைவுமாகும் என இப்படிக் கூறியவர் ஏன் தவறான என எந்தவிளக்கத்தையும் கொடுக்க முடியாதவர் ஜக்கிய இலங்கையை உயர்த்த இதை கற்பனை பண்ணி முடிவாக வைத்துள்ளார். தமிழ் மக்களின் தேசிய விடுதலைப்போராட்டத்தை நிராகரிக்கின்றார். இன்று நடைபெறும் தேசிய விடுதலைப்போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்றார். இதனூடாக சிங்கள இனவாதத்துக்கு பச்சை கொடிகாட்டி நிற்கின்றார். தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டம் இலங்கைப் புரட்சிக்கு உதவாது எனில் எப்படி? தமிழ்த்தேசிய விடுதலைப்போராட்டம் ஏகாதிபத்தியத்தையும், தரகு முதலாளித்துவத்தையும் பலவீனப்படுத்தும். தமிழ் மக்கள் இனவெறி அரசின் முழுமுகங்களையும், ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பையும் தெளிவாக இன்று பார்க்கின்றனர். அதற்கு எதிராக போராடுகின்றனர். தமிழ் மக்களின் தேசிய போராட்டத்தின் வெற்றி இன முரண்பாட்டை நீக்கும். அப்போது சிங்கள இனம் தனக்குமேல் உள்ள சுரண்டலை தெளிவாக புரிந்து போராடுவார். இது ஒரு புறம். இன்னும் ஒரு வழியில் பார்ப்பின் போராட்டம் தொடரும் போது சிங்களப் புரட்சிகரப் பிரிவுக்கு ஊக்கப்படுத்தும், உதவி வழங்கும், தளப்பிரதேசமாக........ என பலவழியில் உதவும்.

ஏன் நவ ஜே.வி-பி 84 களில் தமிழ்மக்களின் உதவியை நாடி தமிழ் இயக்கங்களிடம் வந்ததை நாம் மறந்து விட முடியாது. தமிழ் போராளிகள் இந்திய மக்களிடம் சென்றதை மறந்து விடமுடியாது. இவை எல்லாம் பரஸ்பரம் உதவியின் அடிப்படையில் புரட்சிக்கு உதவும் என்றதன் அடிப்படையிலேயே தமிழ்தேசிய இனம் பெறுவதே சிங்கள மக்களின் ஆதரவின்றி சாத்தியமில்லை. அவர்களுடனான ஒன்றுபட்ட செயற்பாடன்றி சாத்தியமில்லை இது தான் உண்மை. இதுபோன்று மாறனும் தமிழ் பாட்டாளிகள் கட்சி ஆட்சி அமைக்கும் என்பதற்கு ஆதாரத்தைக் கோருகின்றார். இது எப்படி எந்த ஆய்வு ஊடாக ? இங்கு தமிழ்த்தேசிய இனம் போராடுவது என்பது இவருக்கு தவறாகப்படுகின்றது. ஜக்கியப்பட்ட புரட்சிக்கு ஒரு அமைப்பு உருவாகும் வரை தமிழ்மக்கள் அமைதிகாக்க வேண்டும். அதற்கூடாக இலங்கை கம்யூனிஸ்ட்கட்சி என்ற ஒன்று உருவாகும் வரை மக்கள் இனவாத அழிப்புக்கு உட்பட்டு அழியவேண்டும். ஒரு பிரதான முரண்பாட்டின் இருப்பை பார்க்க முடியாத இவர் ஒரு கற்பனை இலங்கைப் புரட்சிக்கு அறைகூவல் இடுகின்றார். இருக்கும் பிரதான முரண்பாட்டின் அடிப்படையிலேயே எந்தத் தீர்வையும் பெறமுடியும். தமிழ் மக்கள் சரி இலங்கை மக்கள் சரி விடுதலை பெற குறிப்பாக இந்திய மக்களின் புரட்சி ஒத்துழைப்பு அவசியம். அல்லது உலகில் பெரிய நாடுகளில் புரட்சி அவசியம். இந்தியப் புரட்சி அல்லது ஒரு பெரிய நாட்டில் புரட்சி நடைபெறும் வரை போராடக் கூடாதென யாரும் வாதிட முடியாது. இன்று எந்த சிறிய நாட்டிலும் புரட்சி நடத்தலும் உயிர் வாழ்தலும் கடினம் என்பது யதார்த்தம். இது இலங்கை, தமிழீழம் எனத் தொடரலாம். எழும் போராட்டமும், அதன் வெற்றிக்கு உழைப்பதுமே பாட்டாளிகளின் கடமை. அதற்கு ஊடாக தொடர்ந்தும் பாட்டாளிவர்க்க ஆட்சியைக் காப்பாற்றப் போராடவேண்டும். இது முழு இலங்கை புரட்சியெனினும், தமிழீழப் புரட்சியெனினும் பொருந்தும். ஒரு முரண்பாட்டின் வெற்றியை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. சுயநிர்ணய உரிமை சமன் பிரிவினை என்கின்றனர். எனில் நீங்கள் சுயநிர்ணய உரிமை சமனில்லை பிரிவினை என வாதாடுகின்றீர்கள். சுயநிர்ணய உரிமை பிரிவினை, பிரிவினையல்லாத ஒரு நிலையை கொண்டது. இது எந்த சந்தர்ப்பத்தில் எது நடக்கும் என்பதை அங்குள்ள கட்சியின் பலம், பலவீனத்துடன் தீர்மானிக்கப்படுகின்றது. பிரிவினை எப்போதும் பூர்சுவா தேசியவாதமாக இருப்பதில்லை. பெருந்தேசிய இனம் பிரிவினையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த நிலையில் பிரியின் மட்டும் பூர்சுவா தேசியவாதமாக இருக்கும். இன்று இலங்கையில் பெருந்தேசிய இனம் அங்கீகரிக்காத நிலையில் பிரிவினை பூர்சுவாத் தேசியவாதமாக மட்டும் இருக்க முடியாது. அது பாட்டாளிகளின் கோரிக்கை கூட....... அன்னிய ஏகாதிபத்திய, மேலாதிக்க சக்திகளுக்கு எதிராகவும் அவர்களால் ஊட்டி வளர்க்கப்படும் பேரினவாத பாசிச ஜ-தே-க- அரசுக்கு ஏதிராக சிங்கள உழைக்கும் மக்களுடனும், ஜனநாயக சக்திகளுடனும் ஏனைய சிறுபான்மை இனங்களுடனும் ஜக்கியப்பட்டு போராடுமாறு நிச்சயமாகப் போராடவேண்டும். தமிழ் மக்கள் ஒரு தனித்துவமான கட்சியாக இருந்தபடி மற்றைய இன மக்களுடன் ஜக்கியப்பட்டு போராடுவதுடன், அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கவும் வேண்டும். தமிழ் மக்களின் போராட்டம் வெறும்........... இங்கு ஓரு கட்சியாக மாற சிங்கள மக்கள் தம்மை இனம் காட்டி ஸ்தாபனமாக இருக்கவேண்டும். இதன் வளர்ச்சியில் ஒரு கட்சியாக மாறமுடியும். இதை நிராகரித்து ஒரு கட்சி கோட்பாட்டை இன்று உயர்த்தக் கோரின் ஈ-பி-ஆர்-எல்-எவ், ஈரோஸ் வைத்த மலையகம் உட்பட ஈழமாக எந்த அர்த்தமும் அற்றதாவே இருக்கும். இவர்களின் பிழையான அரசியலுக்கு அப்பால் தமிழ் மண்ணில் இவர்களுடன் இணைந்த சக்தி போல் மலையகத்தில் எந்தச் சக்தியையும் அணிதிரட்டமுடியவில்லை. மலையகத்தில் இவர்கள் வேலை செய்ய முடியாது போனதுடன் அவர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருக்கவில்லை. ஒரு சிறுபான்மை தேசிய இனம் பிரிவினையை கைவிட்டு சுயநிர்ணய உரிமையிலுள்ள பிரிவினை அல்லாத ஜக்கியப்பட்ட புரட்சியை பெரும்பான்மை தேசிய இனம் பிரிவினையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து இருக்கவேண்டும். அப்போது மட்டுமே பிரிவினையை கைவிடக்கோருவதுடன் (ஐக்கியப்பட்ட புரட்சியை நடத்தவும் முடியும். இது இன்று அல்ல எதிர்காலத்துக்குரிய பிரச்சனைசயாக மட்டுமே இருக்கமுடியும்.