Language Selection

புதிய ஜனநாயகம் 2009

பு.ஜ. வின் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க முடியாத பெரியாரிய தமிழினவாதக் குழுக்கள் அவதூறுகனை அள்ளி வீசுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கின் சந்தர்ப்பவாத அரசியலை விமர்சித்து புதிய ஜனநாயகம் இதழ், ""காக்கை குயிலாகாது'' என்ற கட்டுரையைக் கடந்த ஜனவரி இதழில் வெளியிட்டிருந்தது.

 

இட ஒதுக்கீட்டுக்கு மட்டும் இயக்கம் நடத்தும் குழுக்கள் எவையும் இதற்கு மறுப்பு தெரிவிக்க இயலாத நிலையில், பெரியார் தி.க.வின் பத்திரிக்கையான பெரியார் முழக்கம் "வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் புதிய ஜனநாயகம்' எனும் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளது.

 

வி.பி.சிங் பற்றிய பல்வேறு கேள்விகள் எழுவதால் பெ.தி.க. தொண்டர்களைத் திருப்திப்படுத்திடப் பல்வேறு முரண்களோடும் திரிபுகளோடும் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

 

எந்தப் பிரச்சினையிலும் மாற்றுக்கருத்தை வைத்திருப்பவர்களை எல்லாம் பார்ப்பனர் என லென்ஸ் வைத்துத் தேடும் மலினமான மரபு தமிழகத்தில் நிலவுகிறது. நம்மை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள இயலாதபோது ""மறைமுகப் பார்ப்பனியம்'' என அவதூறு செய்வது சில தமிழினவாதக் குழுக்களின் வழக்கம். பெ.தி.க.வும் இதனைச் சுற்றிவளைத்து ""பு.ஜ.வின் பார்ப்பனிய எதிர்ப்பையே சந்தேகிப்பதாக''க் கூறியுள்ளது. வி.பி.சிங்கை விமர்சிப்பதையும், இடஒதுக்கீட்டில் மாற்றுப்பார்வை வைத்திருப்பதையும் மட்டும் வைத்து ஓர் அமைப்பின் பார்ப்பனிய எதிர்ப்பை அளவிடுவதுதான் பகுத்தறிவுப் பார்வையா?

 

பெரியார்முழக்கம், ""வி.பி.சிங்கின் வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளை எல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தலாமா?'' என்று கேட்டிருக்கிறது.

 

இந்தக் கட்டுரையை எழுதிய விடுதலை ராசேந்திரனே, வி.பி.சிங்கின் நினைவேந்தல் கூட்டத்தில் ""1969இல் உ.பி.யில் சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இந்திரா காந்தி அமைச்சரவையில் வர்த்தகத் துறை துணை அமைச்சரானார். ராஜீவ் அவரைத் தொழில்துறை அமைச்சராக்கி, நிதி அமைச்சராக்கினார்'' (பெரியார் முழக்கம் 18.12.2008) என்றெல்லாம் வி.பி.சிங் வகித்த பதவிகளை நினைவுகூர்ந்துள்ளார். எல்லாப் பதவிகளையும் அனுபவித்தவரை "முடங்கிக் கிடந்தார்' என்று மதிப்பிடுவதே மோசடி இல்லையா?

 

காங்கிரசு கட்சியால் வி.பி.சிங் அடைந்த புகழையும் பதவிகளையும் பேசலாம். ஆனால் அவர் கடைசிவரை ஆதரித்த அவசரநிலைப் பாசிசத்தை நாம் சுட்டிக் காட்டினால், ""காங்கிரசு செய்த தவறுகளை எல்லாம் அவர்மீது சுமத்தலாமா'' என்று வாதிப்பது, பெ.தி.க.வுக்கும் சமயத்தில் பயன்படக்கூடிய வாதம்தான்.

 

தி.க. தலைவர் வீரமணி, ஜெயலலிதா பஜனை பாடிக்கொண்டிருந்தபோது அதனை இன்றைய பெ.தி.க.வினர் ஆதரித்துக் கொண்டு இருந்தார்களே!'' என யாரேனும் சுட்டிக் காட்டினால் தி.க. செய்த தவறுகளை எல்லாம் எங்கள் மீது சுமத்தலாமா? எனக் கேட்டுவிடலாமே!

 

இந்த வாதத்தை நிரூபிக்கும் வகையில் ராசேந்திரனே, ""ஈழத்தமிழர் பிரச்சினையில் 8 ஆண்டு கால மவுனப் புரட்சி'' (பெ.மு. 08.01.2009) என்றொரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் ""தி.க, 1998இல் இருந்து 2006 வரை 8 ஆண்டுகளாக ஒரு துரும்பைக்கூட ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அசைக்கவில்லை'' எனச் சாடி இருந்தார். உண்மையில் ஈழத்தைப் பற்றிப் பேசுவதை தி.க. ராஜீவ் செத்த உடனேயே (1991) நிறுத்தி விட்டது. சுமார் 15 ஆண்டுகள் கழித்து 2006இல் தான் வாயைத் திறந்தது. 91 முதல் 96 வரை தி.க. தலைமையின் ஈழத் துரோகத்தைத் தாம் ஆதரித்தது கேள்விக்குள்ளாகும் என அஞ்சிய ராசேந்திரன், 15 ஆண்டுகளை 8 ஆண்டுகளாகச் சுருக்கி வரலாற்றையே திருத்தி விட்டார்.

 

காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி, காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு'' என்று வி.பி.சிங்குக்கு ராசேந்திரன் முட்டுக் கொடுத்திருக்கிறார். ஆனால் இரங்கல் கூட்டத்தில் ""போபார்சு பீரங்கி ஊழலை சிங் அம்பலப்படுத்தியதை அடுத்து "ராஜீவ் வி.பி.சிங்கை சந்தித்து, நமக்குள் இடைவெளி விழுந்து விட்டது, இனி இணைந்து செயல்பட முடியாது' என்று கூறியவுடன் வி.பி.சிங் அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்தார்'' (பெ.மு. 18.12.2008) என்று மட்டும்தான் ராசேந்திரன் சொல்லி இருந்தார். வி.பி.சிங், எந்தக் காலத்திலும் "காங்கிரசின் பார்ப்பனிய சார்பையும், மண்டல் கமிசனைக் குப்பைக்கு அனுப்பியதையும் அதாவது காங்கிரசின் சுயரூபத்தை அறிந்ததால்தான் வெளியேறினேன்' என்று சொன்னது கிடையாது. வி.பி.சிங்கே சொல்லாத விசயம் எல்லாம் ராசேந்திரனுக்கு மட்டும் எப்படித் தெரிந்தது?

 

மண்டல் பரிந்துரை ""பார்ப்பன அரசியல் தலைமையையே புரட்டிப் போட்டு பார்ப்பனரல்லாத, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அணிதிரட்டலுக்கு வழியமைத்த''தாகவும், ""தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே அந்த அரசியலில் அதிர்வுகளை நிகழ்த்தியவர்'' என்று வி.பி.சிங்கை மதிப்பிட்டு, அந்த அதிர்வுகளின் தாக்கத்தால் "சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' எனப் பார்ப்பனக் கும்பல் புலம்புவதாகவும் ராசேந்திரன் சொல்கிறார். பார்ப்பன அரசியல் தலைமைகளை அகற்றிவிட்டு முலாயம், லாலு போன்ற புதிய கிரிமினல் தலைமைகள் உருவானதைத் தவிர, வேறு எதனை அந்த அதிர்வு சாதித்தது? ""தனியார்மயம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு இடஒதுக்கீடே செல்லாக்காசாகி வரும் சூழலில் மண்டல் அதிர்வு சமூகத்தை தலைகீழாகப் புரட்டியது என்று நம்பச் சொல்லுவது மோசடி'' என நாம் மதிப்பிடுவதும் பார்ப்பனரின் புலம்பலும் ஒன்றாகுமா?

 

அதிகார மையத்தை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினரை நோக்கித் திருப்பிய ஒரே தலைவர் வி.பி.சிங்'' (பெ.மு. 04.12.2008) என்று மதிப்பிட்டு, வி.பி.சிங் செய்தது புரட்சியோ, மாபெரும் சீர்திருத்தமோ அல்ல என்பதையும் பெ.முழக்கமே நிறுவியுள்ளது. ஒரு சிலரை அதிகார மையம் நோக்கித் திருப்புவதும், சமூக மாற்றமும் ஒன்றாகுமா? மேலும், மண்டல் அறிக்கை, பிற்படுத்தப்பட்டோர் நலனை மட்டும்தானே பேசியது? இதில் எங்கே தாழ்த்தப்பட்டசிறுபான்மையினர் எல்லாம் வருகின்றனர்?

 

தஞ்சை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்டோர் மீது பண்ணை ஆதிக்கம் விதித்திருந்த சாணிப்பால் சவுக்கடிகளை பொதுவுடைமை இயக்கம்தான் 1940களிலே ஒழித்துக் கட்டியது. நக்சல்பாரி எழுச்சிக் காலத்திலிருந்தே மாலெ இயக்கம், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தொடர்ச்சியாக செயல்பட்டு வந்திருக்கிறது. பீகாரில் தாழ்த்தப்பட்டோர் மீது தொடர் தாக்குதலை நடத்தி வந்த ஆதிக்க சாதிக் குண்டர் படையான ரண்வீர்சேனையை எதிர்கொள்ள, மாலெ இயக்கம்தான் மக்கள் போர்ப்படைகளைக் கட்டியது. இவ்வரலாறெல்லாம் தனது அணியினருக்கு எங்கே தெரியப்போகிறது என்று கருதிக்கொண்டு ""அதுவரை பார்ப்பன மேலாதிக்கம், சாதியமைப்புகளைக் கவனத்திலே எடுக்காமல், வர்க்கக் கண்ணோட்டத்தில் "புதிய ஜனநாயக'ப் புரட்சிகளைப் பேசி வந்த பொதுவுடைமைக் கட்சிகளும் மண்டல் பரிந்துரையின் விளைவாக நெருக்கடிக்கு உள்ளாயின'' என்று ராசேந்திரன் எழுதி இருக்கிறார். மண்டல் கமிசனுக்கும் வி.பி.சிங்குக்கும் முன்பே சாதி ஆதிக்கத்துக்கு எதிராக கம்யூனிஸ்டுகள் போராடி வந்துள்ள நிலையில், தனது அணிகளிடமே வரலாற்றைத் திரிப்பதற்கு கம்யூனிஸ்டுகள் மீது அவருக்கிருக்கும் காழ்ப்புணர்ச்சிதானே காரணம்?

 

மண்டல் பரிந்துரை வந்தபோது புதிய ஜனநாயகம் என்ன நிலைப்பாடு எடுத்தது என்பதை மறைக்கும் நோக்கில் "அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை. ஆதரிக்கவும் இல்லை' என்று பு.ஜ. எழுதியதாக பு.ஜ. கட்டுரையில் இடம்பெற்ற சில வாக்கியங்களை மட்டும் உருவி எடுத்துப் போட்டு பெரியார் முழக்கம் எழுதியுள்ளது. "கோழி முதலில் வந்ததா? முட்டை முதலில் வந்ததா?' எனக் கேட்கப்படும்போது பகுத்தறிவாளர்கள் என்ன பதில் சொல்வர்? இரண்டில் ஒன்றைச் சொல்லமுடியாது. பரிணாம வளர்ச்சியின்படியே வந்ததென்றுதான் சொல்லமுடியும். அவ்வாறு சொல்லாமல் ஏதாவது ஒன்றுமட்டுமே பதிலாக இருக்க முடியும் எனக் கருதுவது பகுத்தறிவுதானா? அதேபோல் "நாங்கள் முன்வைக்கும் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறாயா? எதிர்க்கிறாயா? மூன்றாவது ஒன்றெல்லாம் கிடையாது' எனக் கருதுவதும் பகுத்தறிவுதானா?

 

தங்கள் ஏகபோக உரிமை போய்விடும் எனும் அச்சத்தில் பார்ப்பனக் கும்பல் மண்டலை எதிர்த்தது. இக்கும்பலின் போராட்டத்தை பு.ஜ. எதிர்த்த அதே சமயத்தில், ஆண்ட பரம்பரை என்று தம்மைக் கருதிக் கொண்டு பிற சாதி மக்களைக் கடுமையாக ஒடுக்கும் ஆதிக்க சாதியினரெல்லாம் "பிற்படுத்தப்பட்டோர்' எனப் பட்டியலிடப்பட்டு இடஒதுக்கீட்டை அனுபவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சொன்னது. மண்டல் ஆதரவுஎதிர்ப்புப் போராட்டங்களை, ஆதிக்க சாதிகளுக்கும் பார்ப்பன கும்பலுக்கும் இடையே ஆதிக்கத்துக்காக நடந்த நாய்ச்சண்டையாகத்தான் பு.ஜ. பார்த்தது.

 

பு.ஜ.வின் இந்நிலைப்பாட்டை மறைத்து விட்டு, பெரியார் முழக்கம் சில வாக்கியங்களை மட்டும் உருவி எடுத்துப் போட்டு வாதம் செய்வது நேர்மையான செயலா?

 

அருண் ஷோரி, சோ போன்றவர்கள் "வி.பி.சிங், நாட்டை சாதிவாரியாகக் கூறுபோட்டு விட்டார்' என்று எழுதியதற்கும் "சாராம்சத்தில் நாடு ஒரு உள்நாட்டுப்போரில் மூழ்கி விட்டது' என்றெழுதிய பு.ஜ. கட்டுரைக்கும் ஒரே பார்வைதானுள்ளது'' எனப் பெரியார் முழக்கம் சாதிக்கிறது.

 

மண்டல் எதிர்ப்புப் போராட்டத்தை பா.ஜ.க., பார்ப்பன சாதிக்கும்பலும், மண்டல் ஆதரவுப் போராட்டத்தை யாதவ்கள் போன்ற ஆதிக்கசாதிக் கும்பலும் தூண்டிவிட்டுக் கொண்டிருந்தபோது, புதிய ஜனநாயகம் எழுதிய ""இரத்த வெள்ளத்தில் இந்தியா'' எனும் கட்டுரையில் ""இப்படிப்பட்ட வெறியாட்டங்கள் இன்னும் பல மடங்கு நடக்க வேண்டும் என்றுதான் இப்போது யாத்திரைகள் போய்க் கொண்டிருக்கும், யாத்திரைகளுக்குத் திட்டமிட்டிருக்கும் சர்வகட்சித் தலைவர்களும் மதத் தலைவர்களும் காத்திருக்கின்றனர்'' என்று எழுதி இருந்தது. (புதிய ஜனநாயகம், நவ.15, அக். 16, 1990) மேலும் மண்டல் கமிசன் எதிர்ப்பு மேல்சாதிக் கலவரத்தில் தாமே தீக்குளித்தனர் என்று காட்டுவதற்காக பலாத்காரமாக கொளுத்தப்பட்ட மாணவஇளைஞர்கள் பற்றியும் எழுதி இருந்தது. இவையும் சோ, அருண்ஷோரியின் பார்ப்பன வெறிக் கருத்துகளும் ஒன்றுதானா?

 

மண்டல் பரிந்துரையை எதிர்த்து நடந்த கலவரத்தை உருவாக்கிய பார்ப்பன சக்திகளைக் கண்டித்து ஒடுக்கப்பட்ட மக்கள் போராடியதாக'' பெ.முழக்கம் எழுதுகிறது. மண்டலை ஆதரித்துப் போராடிய யாதவ்களும், குர்மிகளும், ஷைலன்வார்களும் தாழ்த்தப்பட்டோரைக் கடுமையாக ஒடுக்குபவர்கள் என்பது ஒருபுறமிருக்க, மண்டல் பரிந்துரையே ஒடுக்கப்பட்டோருக்கானதில்லை. எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் மண்டல் பரிந்துரையை ஆதரிக்கவில்லை. பார்ப்பனிய, சத்திரிய, வைசிய வழிவந்த சாதிகள்தான் இருபிரிவாகப் பிரிந்து நின்று கலவரம் செய்து மோதிக்கொண்டனர். எனவே ஒடுக்கப்பட்ட மக்கள் போராடியதாகப் பெரியார் முழக்கம் சொல்வதெல்லாம் கற்பனையைத் தவிர வேறில்லை.

 

அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மேல்சாதி மேட்டுக்குடியினரிடையே நடக்கும் சாதிச் சண்டைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்'' என்று பு.ஜ. எழுதியதையும் குற்றச்சாட்டாக பெ.முழக்கம் வைத்திருக்கிறது. அரசின் அதிகாரம் எப்போதுமே உழைக்கும் மக்களுக்கெதிரானது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளதால்தான், அரசு ஒடுக்குமுறை எந்திரத்தில் இடஒதுக்கீடு கேட்டு நாம் போராடுவதில்லை. அதேசமயம், பார்ப்பன மேட்டுக்குடி கும்பல் இடஒதுக்கீட்டை எதிர்ப்பதனைக் கடுமையாக எதிர்க்கிறோம். அரசின் அனைத்து ஒடுக்குமுறைக் கருவிகளையும் சாதி ஆதிக்கத்தையும் ஒழித்துக்கட்டி, ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவுவதுதான் நமது இலக்கும் கூட. இதில் என்ன குற்றமிருக்கிறது?

 

செல்லும் வழியெங்கும் இரத்தக்களறி ஏற்படுத்திய அத்வானியின் ரத யாத்திரையை வி.பி.சிங் தடுக்கவே இல்லை என்று பு.ஜ.வில் குறிப்பிட்டிருந்தோம் ""பீகாரில் லாலு, அத்வானி யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது வி.பி. சிங் ஒப்புதல் பெற்றுத்தானே?'' எனப் பெ.முழக்கம். கேள்வியெழுப்புகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரைக் (அத்வானியை) கைது செய்தால் சபாநாயகருக்கு தகவல் தந்தால் மட்டும் போதும் என்பதும், பிரதமருக்கு இதில் சம்பந்தம் ஏதுமில்லை என்பதும் பெ.முழக்கத்துக்குத் தெரியாதா?

 

வி.பி.சிங்கைத் தியாகியாக்குவதற்காக பெ.முழக்கம் செய்திருக்கும் காலவரிசைக் குழப்பமே அதன் தகிடுதத்தங்களை நிரூபித்துக் காட்டுகிறது.

 

அத்வானி நடத்திய இரத யாத்திரையை அவர் அனுமதிக்கத் தயாராக இல்லை. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசுப் பணிகளில் உறுதி செய்யும் மண்டல் பரிந்துரையை ஏற்கும் ஆணையையும் பிறப்பித்தார். பா.ஜ.க.வின் ஆதரவோடு ஆட்சியைத் தக்க வைப்பதைவிட, அதிகாரத்தை சமூகநீதிக்காக இழக்கலாம் என்ற உறுதியான கொள்கை முடிவை எடுத்தார்'' (பெ.மு. 04.12.2008) என்று அது எழுதி இருக்கிறது.

 

அதாவது, முதலில் வி.பி.சிங் ரத யாத்திரைக்குத் தடை விதித்தது போலவும், இரண்டாவதாக மண்டல் பரிந்துரை வந்தது போலவும் பெ.முழக்கம் சொல்கிறது. ஆனால், உண்மையில் ஆகஸ்ட் 90இல் மண்டல் பரிந்துரை வெளிவந்து பலநாட்கள் கழித்துத்தான் ரத யாத்திரையை அத்வானி தொடங்கினார். ""வி.பி. சிங் ரத யாத்திரையை அனுமதிக்கத் தயாராக இல்லை'' எனச் சொல்லும் பெ.முழக்கம்தான் வேறோரிடத்தில் ""பீகாரில் லாலு, அத்வானி யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது வி.பி.சிங் ஒப்புதல் பெற்றுத்தானே?'' என்றும் கேட்கிறது.

 

வி.பி.சிங் யாத்திரையை அனுமதிக்கவில்லை என்றால் அது எப்படி நடந்திருக்கும்? நடக்காத யாத்திரையையா லாலு தடுத்தார்? வி.பி.சிங் யாத்திரையைத் தடுக்கவில்லை என்பதுதானே உண்மை. இந்த முரண்பாடே வி.பி.சிங்கின் இந்துமதவெறி சேவைக்கு சாட்சியாகி விடுகிறதே!

 

ம.க.இ.க, தனது கட்சித் திட்டத்தில் "இந்திய மக்களின் அடிப்படை எதிரிகளாக பார்ப்பனர், பார்ப்பனியச் சக்திகள்" என 1998க்கு முன்பு வரை வைத்திருந்தது போலவும் 1998இல் திட்டத்தில் இருந்து "பார்ப்பனியச் சக்திகளை' நீக்கிவிட்டது போலவும் பெரியார் முழக்கம் திரிபுவேலையைச் செய்திருக்கிறது. ""இந்திய மக்கள் மீது மூன்று மலைகளான அமெரிக்கா தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்'' எனும் வரிதான் கட்சித் திட்டத்தில் உள்ளது.

 

கட்சித் திட்டம் குறிப்பிடும் "நிலப்பிரபுத்துவத்தை' இந்தியச் சூழலில் "பார்ப்பனிய சாதி ஒடுக்குமுறை' என விளக்கிக் கட்சி இதழில் வெளியான கட்டுரையில் (1993) ""இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தை, சாதிய அடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து நமது போராட்டம் இருக்கும்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கட்சி இதழில் வெளியான ஒரு கட்டுரைக்கும், கட்சித் திட்டத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் இரண்டையும் ஒன்றெனக் குழப்பி, அதில் ஏதோ பெரிய கண்டுபிடிப்பு செய்துவிட்டது போல ராசேந்திரன் பெருமைப்படுகிறாரே, அவர் சொல்வது போல 1998இல் பார்ப்பன சக்திகளை எதிரிப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்ட(!) ம.க.இ.க. ஏன் 2004இல் பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை நடத்தியதாம்? கட்சித் திட்டத்தில் இல்லாத பார்ப்பன எதிர்ப்பை நடைமுறையில் செயல்படுத்திடும் அமைப்பு உள்ளபடியே தீவிர பார்ப்பன எதிர்ப்பு அமைப்பாகத்தானே இருக்கமுடியும்.

 

பு.ஜ. தோலுரித்த வி.பி.சிங்கின் இந்துமதவெறி ஆதரவுப் போக்குகளுக்கெல்லாம் பதிலேதும் சொல்லாமல் மவுனம் சாதிக்கும் பெ.முழக்கம், ஈழப் பிரச்சினை ஒன்றை மட்டும் முன்னிறுத்தி சி.பி.ஐ., பா.ஜ.க. இரண்டையும் சேர்த்துக் கூட்டணி கட்டிய நெடுமாறன் விசயத்திலும் அதே போக்கைத்தான் கடைப்பிடிக்கிறது. நெடுமாறன், பா.ஜ.க.வுடன் சேர்ந்துகொண்டு ""ஈழத்தில் புத்தமதத்தினர் இந்து மதத்தினரைக் கொல்லுகின்றனர்'' என்று பேசி இனப்பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்ற முயலுவதைக் கண்டிக்காமல் பெ.தி.க. அவரையே மீண்டும் தனது கூட்டங்களுக்கு அழைத்துக் கவுரவிக்கிறது.

 

ஆர்.எஸ்.எஸ். அரை டவுசர் அண்ணாச்சி "மாவீரன்' பொள்ளாச்சி மகாலிங்கத்தைப் பாராட்டி நெடுமாறன் 'உலகப் பெருந்தமிழர்' எனும் விருது கொடுத்த மாநாட்டில் ஆதித்தமிழர் பேரவையின் நீலவேந்தனும் பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணனும், மகாலிங்கத்துக்கு விருது கொடுப்பதை விமர்சித்துப் பேசினர். பொங்கி எழுந்த "மாவீரன்' மேடையிலேயே அவர்களிருவரையும் அவமானப்படுத்திப் பேசியதும், அவர்கள் தொண்டர்களுடன் வெளியேறினர். நெடுமாறனின் இந்த சந்தர்ப்பவாத, பிழைப்புவாத அரசியலை பு.ஜ. கட்டுரையாக வெளியிட்டுத் தோலுரித்திருந்தது. ஆனால் நெடுமாறனின் "நட்பினால்' தனது பொதுச்செயலாளர் கொடுத்த சரியான பதிலடியைக் கூட பெ.முழக்கம் செய்தியாகப் பதியவில்லை.

 

பெ.முழக்கம், ""பா.ஜ.க.வையும் இடதுசாரிகளையும் கூட்டாளியாக்கிய வி.பி.சிங் "முரண்பாடுகளை நிர்வகித்தல்' என்று இதற்குப் பேர்சூட்டியதாக'' வும், ""பா.ஜ.க.வின் பிரச்சார மேடையில் வி.பி.சிங் பேச மறுத்ததாகவும், தனது இயல்பான நட்புசக்தி இடதுசாரிகள்தான் என்று கூறிய வி.பி.சிங் பா.ஜ.க.வை அரசியலுக்கான கூட்டணி என்று கூறியதாகவும்'' (பெ.மு. 25.12.2008) வி.பி. சிங்கின் சந்தர்ப்பவாதத்தை நியாயப்படுத்தி இருந்தது.

 

அது என்ன "இயல்பான நட்புசக்தி', "அரசியலுக்கான கூட்டணி'? சந்தர்ப்பவாதத்துக்கு இப்படியும் பொழிப்புரையா?

 

வி.பி.சிங்கிடம் மட்டுமல்ல பெ.தி.க.விடமும் இதே சந்தர்ப்பவாதம்தான் உள்ளது. "இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்' சார்பில் ஈழப்போர் நிறுத்தம் கோரி பிரெஞ்சுத் தூதரகத்தில் மனுக் கொடுக்கச் சென்ற குழுவிலும், தூத்துக்குடி பொதுக்கூட்டத்திலும் பா.ஜ.க.வுடன் பெ.தி.க. கைகோர்த்துள்ளது. பார்ப்பனிய பா.ஜ.க.வுடன் கைகோர்த்துள்ளவர்கள்தான், பு.ஜ.வின் பார்ப்பனிய எதிர்ப்புப் போக்கை சந்தேகிக்கிறார்களாம்!

 

ஈழப்பிரச்சினையில் துரோகமிழைத்த காங்கிரசையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிப்போம் என்று இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். காங்கிரசைத் தோற்கடிப்பது என்பது தமிழகத்தில் ஜெயலலிதாவையும் மத்தியில் பா.ஜ.க.வையும் வெற்றிபெறச் செய்வதுதான்! இதுதான் பெரியார் திராவிடர் கழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பா? நரேந்திர மோடியை எதிர்க்க முஸ்லிம் அமைப்புகளுடன் கூட்டு. ஈழப்பிரச்சினைக்கு பா.ஜ.க.வுடன் கூட்டு என்பதுதான் பெரியார் பாதையா?

 

தி.க. நாளிதழான விடுதலை, எழுத்தாளர் வ.கீதாவை "எஸ்.வி.ராஜதுரையின் பார்ப்பனத் தோழி' எனத் தரம்தாழ்ந்து எழுதியிருந்தது. இதனைக் கண்டித்து "வ.கீதா பிறப்பால் பார்ப்பனர்தான். ஆனாலும் பெரியாரியல்வாதி' என்று பெரியார் முழக்கம் எழுதியுள்ளது. மேலும் சின்னக்குத்தூசி, ஆந்திர நாத்திகர் கோரா, அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரி போன்றவர்களையும் பிறப்பால் மட்டும் பார்ப்பனர்களாகப் பார்க்கவில்லை என்று பெரியார் முழக்கம் அக்கட்டுரையில் உணர்த்தியுள்ளது. (பெரியார் முழக்கம் 19.03.2009) பெ.தி.க.வின் பார்ப்பனியம் குறித்த பார்வை இதுதான் என்றால், பு.ஜ.வின் பார்ப்பனிய எதிர்ப்பை மட்டும் எதன் அடிப்படையில் பெரியார் முழக்கம் சந்தேகிக்கிறது? இடஒதுக்கீட்டில் மாற்றுக்கருத்து ஒன்றை வைத்திருப்பதால் மட்டும் பார்ப்பனியம் என அது கருதுகிறதா?

 

பார்ப்பனியத்தின் சாயலோ, நிழலோ எங்காவது பு.ஜ.வில் இருந்தால் அதனை பெ.முழக்கம் சுட்டிக்காட்டியிருக்கலாம். அதை விடுத்து, கருவறை நுழைவுப் போராட்டம் முதல் தீட்சிதப் பார்ப்பனர்களுக்கெதிரான போராட்டம் வரை பார்ப்பனியத்துக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருபவர்களின் பார்ப்பனிய எதிர்ப்பை சந்தேகிப்பதாகக் கூறுவது, அதன் நாணயமற்ற சந்தர்ப்பவாதத்தைத்தான் நிரூபித்துக் காட்டுகிறது.

 

ஆசிரியர் குழு