12092022வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

புதியதோர் அத்தியாயம் : பிரதீபன்

 

இன்று நாம் கடக்கும் ஒவ்வொரு தினங்களும் இலங்கையின் குடிமக்களாக எமக்கு மிக முக்கியமான தினங்கள். இலங்கையின் கொடூரமான யுத்த வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாதவாறு மனிதப் பேரழிவுகள் நடக்கும் தினங்களில் நாம் வாழ நேரிட்டிருக்கிறது. வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிறைவுபெறக்

காத்திருக்கிறது. புதிய அத்தியாயங்கள் எப்படி இருக்கப் போகின்றது என்பதையெல்லாம் தீர்மானிக்கப்போகும் நாட்களை நாம் கடந்து கொண்டிருக்கிறோம். 30 வருடகால யுத்தமும் அதன் அனர்த்தங்களும் அடுத்து வரப்போகும் அத்தியாயத்தில் வரவிடாமல் பார்க்க வேண்டிய தருணமும் இதுவே.
மீண்டும் ஒரு முறை தவறிழைக்கும் பட்சத்தில் அழிவுகள் பாரதூரமானதாக இருக்கும். சிதறும் உடலின் துகள்கள் காற்றின் ஒவ்வொரு துணிக்கைகளிலும் கலந்துவிடும். சிங்கள, தமிழ், முஸ்லிம், மலையக, வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு, தலித், வேளாள, பார்ப்பன, உடரட்ட, பிட்டரட்ட.... என யாரும் இதிலிருந்து தப்பிக்க முடியாமல் போகும். ஒவ்வொருவரும் தத்தம் குழுவைக் காக்க பேரம் பேசப் புறப்பட்டால் சக மனிதனின் பிணங்களை மிதித்தே செல்ல வேண்டி இருக்கும்.
 
1.
வரலாற்றைப் பதிந்து வைக்க மனிதர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு வகையான ஊடகங்களைக் கையாண்டிருக்கிறார்கள். கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் எனப் பல வகையான வரலாற்றுப் பதிவுகள் நம்முன் உள்ளன. நவீன வரலாற்றுப் பதிவில் அதிமுக்கியம் வாய்ந்ததும் பொருத்தமானதுமாக புகைப்படங்களே கருதப்படுகின்றன. எம்முன் கிடக்கும் அதிமுக்கிய வரலாற்று ஆவணங்களான புகைப்படங்களை எடுத்து நோக்கினோமானால், அவை பெரும்பாலும் வெறுமனே பதிவாக மட்டுமே அல்லாமல் கலையாகவும் ஆகி இருக்கிறது. இவ்வாறான காலத்தால் அழியாத புகைப்படங்கள் காலங்கள் கடந்தும் இன்றும் அக்காலகட்டப் பிரச்சினையின் தாக்கத்தையும் வரலாற்றையும் சிறு சட்டகத்தினுள் பொதித்துக் காட்டியுள்ளன. இந்த இடத்தில் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினால் வெளியிடப்பட்ட "அமிர்தலிங்கம்: ஒளியில் எழுதுதல்" எனும் நூலின் முன்னுரையில் மு. நித்தியானந்தன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுவது கவனத்திற்குரியது.


"வட சைபீரியப் பழங்குடிகள் புகைப்படம் எடுப்பதனை ‘ஒருவரின் நிழலைக் கல்லில் வடித்து விடுவது’ என்று தங்களின் மொழியில் அர்த்தப்படுத்தி இருக்கிறார்கள்.


Graphos, Phos என்ற கிரேக்க மூலத்தில் இருந்து உருவான Phழவழபசயிhல என்பது Writing in light  என்று அர்த்தம் கொள்கிறது. ‘ஒளியில் எழுதுதல்’ என்ற இத்தொகுப்பின் தலைப்பு இந்த மூலத்தில் இருந்தே பெறப்படுகின்றது. புகைப்படங்கள் காலத்தின் ஒரு கணத் துகளை சாஸ்வதமாகச் சிறைப்பிடித்து விடுகின்றது. காலத்தை உறைநிலையில் வைத்திருக்கும் அசாத்திய வேலை அது. அழிவின் இருளில் இருந்து மீட்கப்பட்ட வரலாற்றுப் படிமங்களாக புகைப்படங்கள் தனிச்சிறப்புப் பெறுகின்றன. முப்பரிமாணத்தில் இயங்கும் வெளியை இருபரிமாண அசையாநிலைப் படிமங்களாக்கிவிடும் புகைப்படங்கள் இந்த இயல்பான பலவீனத்தை மேவி வரலாற்றின் உன்னத சாட்சியங்களாக அங்கீகாரம் பெறுகின்றன. ஒவ்வொரு படமும் ஒரு சிந்தனைத் துகள்தான். எழுத்தில் வடிக்கப்படும் நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதமுடியாத அரசியல் உணர்வலைகளை ஒரு படம் ஒரு கணத்துள் எழுப்பிவிட வல்லது. புகைப்படங்களை ‘சங்கேதக் குறிகள் இல்லாத செய்தி’ (ஆநளளயபந றiவாழரவ யஉழனந) என்றார் ரோலன்ட் பார்த். புகைப்படங்கள் தம்மளவில் வெளிப்படுத்தும் செய்தியைவிட சமூகம் தனது இருப்பில் உள்ள பாரம்பரிய சங்கேதக் குறிகளின் அர்த்தத்தில் இருந்து புகைப்படங்களை வாசிப்புச் செய்கின்றது. இத்கைய சமூக ஊடாட்டத்திற்கூடான செய்தியைப் பெறுதல் என்பது (ஊழnழெவநன அநளளயபந) ஓர் அமைப்பினை பிறிதோர் அமைப்பாக மாற்றுவதாக அமைவதாயினும் யாந்திரீகமான ஒரு விம்பத்தினை சமூக நிறுவனத்தின் அந்தஸ்த்துக்கு உயர்த்தும் பலமும் இதிலிருந்தே உருவாகிறது." என்று கூறிச் செல்கிறார்.


இன்று இணையத்தின் வாயிலாக ஒரு கொச்சைத்தனமான வியாபாரம் புகைப்படங்களினாலும் வீடியோக் காட்சிகளினாலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. வன்னியில் இருந்து வெளியாகும் இக்காட்சிப் பதிவுகள் புலிகளின் ஊடகங்களிலும் அதன் பினாமி ஊடகங்களிலும் பெரும் தொகையாகப் பதிவாகியபடியே இருக்கின்றன. இவை மிகக் குறுகிய நோக்கத்திற்காகவும் பிரச்சாரத்திற்காகவும் மலினமாகப் பயன்படுத்தப்படுகின்றன.


வன்னியில் நடக்கும் மனித அவலங்கள் பதிவிடப்பட வேண்டும். அது பரவலாக எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் எடுத்துச் செல்லப்படும் விதமும் நோக்கமும் கண்டனத்துக்குரியவை என்பதே இங்கு குறிப்பிடப்பட வேண்டியது.

 

2.
மார்ச் மாதம் 27ம் திகதி தொடக்கம் 29ம் திகதிவரையிலான ஒரு மாநாடு இலங்கை அரசாங்கத்தினால் சிங்கப்பூரில் ஏற்பாடு செய்யப்படுகின்றது. பேரினவாத அரசின் நேசமிகு நபர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருக்கும் இக்கூட்டத்தில் இலங்கை அரசு தன்னுடைய தமிழர்களுக்கான அரசியல்தீர்வு குறித்த நிலைப்பாட்டைக் கூறுவதற்கான கூட்டமாக இது இருக்குமென சொல்லப்படுகிறது. இது போன்ற கூட்டங்கள் பல நடைபெற்றிருந்தாலும் தற்போதைய இக்கூட்டம் உற்று நோக்கப்பட வேண்டியதாக இருக்கும்.


இதன் நோக்கத்தைக் கண்டுகொள்வது அவ்வளவு ஒன்றும் கடினமில்லை. சர்வதேச சமூகத்திடம் நாங்கள் புலம்பெயர் தமிழ் மக்களிடம் பேசினோம் என கதையளப்பதற்கான ஒரு கபட நாடகமாகத்தான் இது பெரும்பாலும் இருக்கப்போகிறது. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தம்முடன் உண்டு என நிறுவ அரசுக்கு டக்ளஸ் தேவானந்தா, ரிஎம்விபி, கருணா தொடக்கம் ஆனந்தசங்கரிவரை பலர் உண்டு. இதைச் சற்று விரிவுபடுத்தும் நோக்கில் மேற்குறிப்பிட்டவர்களின் விசுவாசமான ‘மாற்று’ என்று சொல்லிக் கொள்ளும் வேடதாரிகள் இங்கு அழைக்கப்படுகிறார்கள்.


இது இப்படி இருக்க அரக்கப் பரக்க ஏப்ரல் 11ம், 12ம் திகதிகளில் பெங்களுரில் ஒரு கூட்டத்திற்கான அழைப்பு விடப்பட்டிருக்கின்றது. இதன் உள்ளடக்கம், ஜெயலலிதா உண்ணாவிரதமிருப்பதைவிட அப்பட்டமான அரசியல் வியாபாரம். கிட்டத்தட்ட ஒரு தமிழீழப் பிரகடன அழைப்புக்கான தொனியிலேயே இவ்வழைப்பு விடப்பட்டிருக்கின்றது. கூடவே ஈழத்தமிழ் இனத்துக்கே ஒரு தலைவரைக் கண்டடையவே இந்தக் கூட்டம் கூட்டப்படுவதாக அழைப்பிதழ் தெரிவிக்கின்றது. இவ்வழைப்பை பரந்தன் ராஜன் தலைமையிலான ENDLF  விடுக்கிறது.

 

***


30 வருட கால சிவில் யுத்தத்திற்கும், பேரவலத்திற்கும் பல வரலாறுகள் உள்ளன. அவை பெரும்பாலும் துரோக வரலாறுகளாகவும், சகோதர பலியெடுப்புகளாகவும், தலைமைத்துவ மோகத்தால் எழுந்த அரசில் அனர்த்தங்களாகவும் இருக்கின்றன. இவற்றால் நாம் அடைந்த இழப்புகள் எமதும், எமது சந்ததியினதும் வாழ்வையே நிர்மூலமாக்கி உள்ளது. இரண்டு அதிகார வெறிகொண்ட காட்டு மிருகங்களான சிங்கமும் புலியும் யுத்தம் செய்து, ஒன்றையொன்று கடித்துப் பிறாண்டி, இறுதியில் இன்று புலி தன் இறுதி நாட்களை எண்ணியபடி இருக்கிறது. ஆனால் எமக்குத் தேவையானது காட்டிலுள்ள மான்களினதும் பறவைகளினதும் இன்னோரன்ன அத்தனை ஜீவராசிகளுக்குமான விடுதலை. வீழ்ந்து கிடப்பது புலி மாத்திரமேயொழிய சிங்கம் அல்ல. அது முன்னெப்போதையும் விட அதிகமாக கர்ஜிக்கிறது. அதன் எதிர்கால வேட்டைக்கு அது தயாராகிறது. இப்போது இதைத் தடுக்க முயற்சிக்கவில்லை எனில் இன்னும் 30 வருடங்களோ 3000 வருடங்களோ காத்திருக்க வேண்டி வரும். புலிக்குப் பதிலாக அல்லது பிரதியீடாக இன்னும் பல இரத்தப் பசி கொண்ட மிருகங்கள் மண்ணில் இருந்து எழுந்து வரக்கூடும். இதைத் தடுக்கும் பணி ஆடுகளான நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது என் நேசமிகு தோழர்களே!

http://www.puhali.com/index/view?aid=122


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்