Language Selection

தமிழரிடையே என்றுமே தீர்க்க தரிசிகட்குப் பஞ்சமில்லை. நெருக்கடிக் காலங்களில் அவர்கள் புற்றீசல்கள் போலப் பெருகுகின்றனர். குறிப்பாக, அரசியல் ஆவாளர்களாகவும் பத்திரிகைகளில் அரசியல் பத்திகளை எழுதுவோராகவும்

 நிபுணர்களாகவும் உள்ளவர்களில் தீர்க்க தரிசிகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளாதவர்கள் மிகச் சிறுபான்மையானவர்களே. இரண்டு வகையான தீர்க்கதரிசிகள் உள்ளனர். ஒரு சாராருக்கு ""இப்படி நடக்கும் என்று அப்போதே தெரியும்.' ஆனால் இப்போது தான் சொல்கிறவர்கள். இன்னொரு சாரார் இப்படி நடக்கும் என்று அப்போதே சொன்னதாக அறிவித்துக் கொள்ளுகிறவர்கள். பலவாறான சோதிடக்காரர்கட்கும் கைவந்த கலையான பொயும் புரட்டும் இவர்கள் எல்லாருக்கும் எளிதாகவே கைவருகின்றன.

இன்று விடுதலைப் புலிகள் வரன்முறையான போரில் பாரிய இழப்புகளைச் சந்தித்து ஒரு குறுகிய பிரதேசத்திற்குள் முடக்கப்பட்டுள்ளனர். எனவே, அவர்களது முடிவு நெருங்கிவிட்டது என்ற அடிப்படையில் முன்னர் விடுதலைப் புலிகள் பின்னடைவுகளைச் சந்தித்த வேளைகளிலும் அவர்களது அண்மைய பின்னகர்வுகளின் தொடக்கத்திலும் சொன்னவற்றின் பகுதிகளை மேற்கோள் காட்டித் தங்களை அரசியல் மேதைகளாக விளம்பரம்படுத்திக் கொள்கிறவர்களை இன்று போதியளவிற் காணலாம். இத்தகையவர்கட்கு ஆழமான அரசியற் சிந்தனையோ எந்தவிதமான அரசியல் ஈடுபாடோ இல்லை. தமது வசதிக்கேற்றபடி தம்மை "நடுநிலையாளர்களாகவோ' வெற்றி பெறுவதாகத் தோன்றுகிற தரப்பிற்கு அனுதாபமானவர்களாகவோ அடையாளப்படுத்திக் கொள்கிறவர்கள். இவர்கட்கு நடந்து முடிந்தவற்றைப் பார்வைக்குச் சரியாகக் கூற இயலுமே ஒழிய நாட்டின் அரசியற் போக்குகளையோ போர்களின் போக்குகளையோ விளங்கிக் கொள்ள இயலுவதில்லை.

இன்னொரு புறம் நிரந்தரமான விடுதலைப்புலிகளின் எதிர்ப்பாளர்கள் உள்ளனர். இவர்கட்கு மக்களைப் பற்றிய அக்கறையை விட விடுதலைப் புலிகளின் அழிவைப் பற்றிய அக்கறையே பெரிது. இவர்களிற் கணிசமானோருக்குத் தனிப்பட்ட காரணங்கள் உள்ளன. தனிப்பட்ட பகைமை என்பதால் காரணம் எதையும் நியாயமற்றது என்று நான் நிராகரிக்கவில்லை. ஆனால், விடுதலைப் புலிகள் மக்களின் பிரதிநிதிகளல்லர் என்று சொல்லிக் கொண்டே விடுதலைப் புலிகளை அழிக்கிற பேரில் மக்களது வாழ்க்கையையும் உயிர்களையும் பறித்து ஒரு சமுதாயத்தையே சிதைக்கிற காரியங்களை இவர்களில் யாருமே கண்டிப்பதில்லை. இன்றைய நிலைமைகளில் அரசாங்கத்தின் இராணுவ வெற்றிகளை மட்டுமன்றி அதன் நாடளாவிய சனநாயக மறுப்புச் செயற்பாடுகளையும் அவர்கள் மறுப்பின்றி ஏற்றுக்கொள்கின்றனர். அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களைப் புலி ஆதரவு என்று சொல்லிக் கண்டிக்கவும் அவர்களிற் பலர் கூசுவதில்லை.

மற்றொரு சாரார் விடுதலைப் புலிகளை எப்போதும் நிபந்தனையின்றி ஆதரிப்பவர்களாவர். இவர்கட்கு விடுத லைப் புலிகளின் அப்பட்டமான பிழைகள் தெரிவதில்லை. எல்லாவற்றையும் இவர்களால் நியாயப்படுத்த இயலுமாக இருந்து வந்துள்ளது. இவர்களிற் சிலரால் விடுதலைப் புலிகளின் எந்தத் தோல்வியையும் ஏற்க இயலுவதில்லை. எல்லாவற்றுக்கும் இவர்களிடம் விளக்கங்கள் உள்ளன. அவற்றில் எதுவுமே உருப்படியாக இல்லை என்பது தான் முக்கியமானது. இவர்களிலே ஒரு சிலர் தாங்கள் முன்பே எச்சரித்தபடி விடுதலைப் புலிகள் இதையோ அதையோ செயாததால் தான் இன்றைய நெருக்கடியில் அகப்பட்டுள்ளனர் என்று கூறுவதையும் இடையிடையே கேட்கலாம். விடுதலைப் புலிகள் வலுவாக இருந்தபோது அந்த எச்சரிக்கைகள் விடுக்கப்படவில்லை.

எனக்கு அரசியல் ஆரூடந் தெரியாது. நான் சொன்ன எதுவுஞ் சரிவந்திருந்தால் அது எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்களைச் சரியாக விளங்கிக் கொண்டதன் விளைவாகவே இருந்திருக்கும். எதுவும் தவறாக அமைந்திருந்தால் அது தகவல்களின் போதாமையாலும் எமது அணுகுமுறையின் குறைபாட்டினதும் விளைவாக இருந்திருக்கும். எனவே, எந்த விளக்கமும் சரியாக அமைந்தது பற்றி மார்தட்டிக்கொள்ள ஒன்றுமே இல்லை. ஆனாலும் நாம் மக்களிடம் சொல்கிற கருத்துகளுக்கு நாம் தனிப்படவும் கூட்டாகவும் பொறுப்பானவர்கள். நாம் எதையும் தவறாகச் சொல்லியிருந்து அதனால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டிருந்தால் அதற்கு நாம் பொறுப்பேற்றாக வேண்டும். இங்கே நமது மனச்சாட்சிக்கும் நம்மால் தவறான முடிவுகட்கு வழிகாட்டப்பட்டவர்கட்கும் முன்னால் நாம் குற்றவாளிகளாகிறோம். மனமறியப் பொ கூறுகிற சிலருக்கு இதெல்லாம் ஒரு பொருட்டல்ல. அவர்கள் தங்களின் பிழைகளை மூடி மறைக்கச் சரியான கருத்துகளை எடுத்துரைத்தவர்களை சிந்திப்பதுடன் சம்பந்த சம்பந்தமற்ற விடயங்களைப் பேசி மக்களின் கவனத்தைத் திசை திருப்பவும் முயலுவார்கள். இத்தகையோரைத் திருத்துவது பெருமளவும் இயலாத காரியம்.

எனினும் சமூகப் பொறுப்புடன் எழுதுவோர் தவிர்த்துக் கொள்ள வேண்டிய பல விடயங்கள் உள்ளன. அவர்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய விடயங்கள் மேலும் பல உள்ளன. நாம் எழுதுவதன் நோக்கம் நம்மை மேதைகளாகவும் நிபுணர்களாகவும் பெரிய சொற்சிலம்பக் காரர்களாகவும் நம்மை மற்றவர்களின் பார்வையில் நிலைநாட்டிக் கொள்வதுதான் என்றால், நாம் இன்னமும் முதிரவில்லை என்றுதான் கருத வேண்டும். வயதோ, கல்வித் தகைமையோ, சமூக அந்தஸ்தோ, பட்டம், பதவிகளோ முதிர்ச்சிக்கான சான்றுகளல்ல. சில தகுதிகளை வலிந்து வேண்டி அலைகிறவர்களும் தமது "தகைமைகளை' விளம்பரப்படுத்துவோரும் முதிரா மனத்தினர் தாம். நாம் எல்லாரும் வளர வேண்டும். நமது மனங்கள் வளர வேண்டும். நமது தனிப்பட்ட சாதனைகளையும் புகழையும் விட நம்மொவ்வொருவரதும் பங்களிப்புகள் முக்கியமானவை. அவற்றை விளம்பரமின்றியும் நேர்மையாகவும் கூட்டு முயற்சிகளாகவும் வழங்க இயலும். எனவேதான், நமது ஈழத்து அரசியல் நிபுணர்கள் முதலில் சில கேள்விகட்கான பதில்களைத் தாங்களே தங்களுக்குச் சரியாகவும் வஞ்சகமின்றியுங் கூறிக்கொள்ள வேண்டியவர்களாகின்றனர்.

போர் மூலம் மட்டுமே தேசிய இனப்பிரச்சினையைத் தீர்க்க இயலுமா?

போர்களை யார் வென்றாலும் தோற்றாலும் பேரினவாதத்தையும் குறுகிய தேசியவாதத்தையும் ஒழிக்க முடியுமா?

நமது தேசிய இனப்பிரச்சினை தனியே வடக்குகிழக்கின் தமிழருக்கும் சிங்களப் பெரும்பான்மையினருக்கும் இடையிலானதா?

மலையக மக்களும் முஸ்லிம்களும் தனித்துவமான தேசிய இனங்கள் என நாம் ஏற்கிறோமா?

எல்லாத் தேசிய இனங்களதும் சுயநிர்ணய உரிமை யை நிபந்தனையின்றி ஏற்கிறோமா?

இலங்கையில் மோசமாகிவரும் சனநாயகத்துக்கு எதிரான மிரட்டல் பற்றி நமது நிலைப்பாடென்ன?

இலங்கையில் சட்டமும் ஒழுங்கும் சீர்குலைவது பற்றி நமது பார்வை என்ன?
இலங்கையில் மனித உரிமை மீறல்களைப் பற்றிய நமது பார்வை என்ன?

மேற்கூறிய நெருக்கடிகள் தமிழரை மட்டுந்தான் பாதிக்கின்றனவா?

"உலக நாடுகட்கு" இலங்கைத் தமிழர் பற்றி அக்கறை எதுவும் உண்டா?

இந்தியாவின் அக்கறை எவரது நலன் சார்ந்தது?

இன்றைய சூழலில் இலங்கையில் எந்த நாடுகளின் மேலாதிக்கம் ஓங்கியுள்ளது?

இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையில் எந்த அயற் குறுக்கீட்டாலும் நன்மை கிட்டுமா? எவ்வாறு?

இந்தியா, சீனா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அயல்நாடுகளில் தமது படைகளை நிறுவியுள்ள நாடுகள் எவை?

அயல்நாடுகளை மிரட்டியுள்ள நாடுகள் எவை?

அயல் நாடுகளைப் படையெடுப்பின் மூலமோ இராணுவச் சதி மூலமோ தமது ஆதிக்கத்தின் கீழ்க் கொண்டு வந்தவை எவை?

ஐ.நா.சபை என்பது பக்கச்சார்பற்ற அமைப்பா?
இல்லையெனில் அது யாரின் சார்பாக இயங்கி வந்துள்ளது?

தமிழக அரசியல் தலைவர்களில் யாராவது இலங்கைத் தமிழருக்கு விரோதமாகச் செயற்பட்ட எந்த அரசாங்கத்திலிருந்தும் அந்தக் காரணத்திற்காக விலகிக் கொண்டுள்ளனரா?

தமிழக அரசியற் கூட்டணிகட்குக் கொள்கை அடிப்படை உண்டா?

புலம்பெயர்ந்த தமிழரதும் தமிழகத் தமிழரதும் உணர்ச்சிக் கொந்தளிப்பால் நன்மையடைய முயல்கிறவர்கள் யார்?

உலகத் தமிழரின் அனுதாபம் வீணாக்கப்படுகிறதா? ஓம் எனில், ஏன்? எவ்வாறு?
தமிழ்த் தேசியவாதிகளது அணுகுமுறை எப்போதுமே சரியாக இருந்து வந்துள்ளதா?

ஓமென்றால் இன்றைய அவலத்துக்குக் காரணமென்ன?

இல்லையென்றால் மாற்று வழியென்ன?

விரிந்து செல்லக்கூடிய இவ்வாறான கேள்விகளில் தமது அரசியல் வியாக்கியானங்கட்குப் பொருந்தி வருகிற சில கேள்விகட்கேனும் நெஞ்சுக்குப் பொய்யுரைக்காமல் விடைதேடிவிட்டு நமது அறிஞர்களும் நிபுணர்களும் ஆய்வாளர்களும் தமது கட்டுரைகளை எழுதினாற் பயனிருக்கும். தாங்கள் இதுவரை சொல்லி வந்த கருத்துகளில் பொய்த்துப் போனவை பற்றி நேர்மையாகச் சிந்தித்து அவை பற்றிய சில விளக்கங்களையேனும் இடையிடையே எழுதுவதற்கு மனதில் உறுதி வேண்டும்.

எதையுந் தவறாக மதிப்பிடுவதோ தவறாக விளங்கப்படுத்துவதோ பெரிய பாவச்செயலல்ல. அதை மனமறியச் செய்வது சமூகத்திற் கெதிரான பாவச் செயலாயிருக்கலாம். ஆயினும் அவற்றிலும் மோசமான பாவச் செயல் ஏதென்றால் தமது பிழைகளை மூடிக்கட்ட மேலும் மேலும் பொய்களை அடுக்கிக்கொண்டு போவதும் மழுப்பங்களால் அவற்றை மூடிமறைப்பதுமாகும்.