நடராஜர் ஆலயத்தின் நிர்வாகத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டுள்ள இடைக்கால வெற்றியைக் கொண்டாடுவோம்.பிப்ரவரி 2, 2009  தமிழகத்தின் வரலாற்றில் இதுவொரு முக்கியமான நாள் என்றால், அது மிகையானதல்ல.  அன்றுதான் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைத் தமிழக அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் தீர்ப்பு வெளியானது. 

தீட்சிதப் பார்ப்பனக் கும்பலுக்கு எதிராகத் தமிழக மக்கள் அடைந்த இந்த வெற்றி எளிதாகக் கிடைத்த ஒன்றல்ல.  சிவனடியார் ஆறுமுகசாமியை முன்னிலைப்படுத்தி, மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நீதிமன்றங்களில் நடத்திய போராட்டங்கள்; மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளை ஒருங்கிணைத்து மனித உரிமை பாதுகாப்பு மையம் கடந்த ஐந்தாண்டுகளில் நடத்திய பல்வேறு விதமான தெருப் போராட்டங்கள்; இப்போராட்டங்களுக்கு மக்கள் கொடுத்த ஊக்கம்;  விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., உள்ளிட்ட பல்வேறு தமிழின அமைப்புகளும், முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் திரு.வீ.வீ.சாமிநாதன், பா.ம.க.வின் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கொடுத்த ஆதரவு —  ஆகியவற்றின் பின்னணியில்தான் இந்த வெற்றியைச் சாதிக்க முடிந்தது. 


""எங்களின் கோயிலை நாங்கள் போனால் போகிறதென்று பக்தர்கள் வந்து வழிபடுவதற்கு அனுமதித்திருக்கிறோம்'' என்று தெனாவட்டாகப் பேசித் திரிந்த தீட்சிதர்களின் திமிரை, நடராஜர் கோயிலில் உண்டியல் வைக்கக்கூட அனுமதிக்காமல், இத்தனை ஆண்டுகளாகப் பக்தர்கள் கொடுத்த காணிக்கை அனைத்தையும் சுருட்டிக் கொண்டிருந்த தீட்சிதர்களின் பகற்கொள்ளையை இப்புரட்சிகர அமைப்புகள் நடத்திய போராட்டம்தான் தடுத்து நிறுத்தியிருக்கிறது.


ஆனால், பெரும்பாலான வணிகப் பத்திரிகைகளோ இப்போராட்டங்களைப் புறக்கணித்துவிட்டு, குறிப்பாக நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளின் பங்கினை இருட்டடிப்பு செய்துவிட்டு, ""ஏதோ சென்னை உயர்நீதி மன்றம் எப்போது உத்தரவிடும் என்று தி.மு.க. அரசு காத்துக்கொண்டு இருந்ததை''ப் போல தில்லை நடராஜர் கோயில் நிர்வாகம் கைமாறிய கதையை எழுதுகின்றன. 


•••

 

தில்லை நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைப் பொது தீட்சிதர்களின் பிடியில் இருந்து விடுவித்து அரசிடம் ஒப்படைக்கும் முயற்சிகள் நூறு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. நடராஜர் ஆலயம் தீட்சிதர்களுக்குச் சொந்தமானதா என்பது குறித்து 1885இல் அப்போதைய இந்து சமய வாரியம் மதராஸ் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில், "இந்தப் பழமையான ஆலயம் தீட்சிதர்களின் தனிச் சொத்து என்பதை நிரூபிப்பதற்கு ஒரு சிறு ஆதாரம்கூடக் கிடையாது,'' என முத்துசுhமி அசூயர் மற்றும் ஜே.ஜே.ஷெப்பர்டு என்ற இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு மன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. 

 

1933இல் மதராஸ் ராஜ்தானியைச் சேர்ந்த இந்து சமய அற வாரியம், தில்லை நடராஜர் ஆலயத்தை பொதுமக்களுக்குரிய இந்து வழிபாட்டுத் தலம் என வரையறுத்து, ""ஆலயத்தை நிர்வகிக்க மேலாளரை நியமிக்க வேண்டும்; காணிக்கைகளைப் போட உண்டியல் வைக்க வேண்டும்; அர்ச்சனை செய்வதற்குக் கட்டணங்கள் நிர்ணயிக்க வேண்டும்'' என 08.05.1933இல் உத்தரவொன்றைப் போட்டது.  இந்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் கடலூர் மாவட்ட நீதிமன்றத்திலும், அதன் பின்னர் மதராஸ் உயர்நீதி மன்றத்திலும் மேல்முறையீடு செய்தனர்.  இந்த இரண்டு நீதிமன்றங்களுமே நடராஜர் ஆலயம் தீட்சிதர்களின் தனிச்சொத்து என்ற வாதத்தை மறுத்துவிட்ட அதேசமயம், அவ்வாலயத்தை நிர்வகிக்க அறிவிக்கப்பட்ட திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்தன.  எனினும் "சர்வ வல்லமை' பொருந்திய தீட்சிதர்கள் ஆலயத்தில் உண்டியலை வைக்கக்கூட விடவில்லை. 

 

"சுதந்திரத்திற்கு'ப் பின் அப்போதைய மாநில அரசு நடராஜர் ஆலயத்தின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ளும் அரசாணையொன்றை 28.08.1951 அன்று பிறப்பித்தது.  இவ்வுத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கில் அரசாணையை ரத்து செய்து உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. மேலும், உயர்நீதி மன்றம் அத்தீர்ப்பில் தீட்சிதர்களைத் தனி மதக் குழுவாகவும் அங்கீகரித்தது.  மாநில அரசு இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இதனிடையே என்ன மாயம் நடந்ததோ மாநில அரசு மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டதோடு, ஆலய நிர்வாகத்தைக் கையகப்படுத்தும் அரசாணையையும் ரத்து செய்துவிட்டது. தீட்சிதர்கள் நடராஜர் ஆலயத்தைத் தங்களின் தனிச் சொத்தாகக் காட்டிக்கொண்டு ஆட்டம் போடுவதற்கு இத்தீர்ப்பைத்தான் இதுநாள் வரை பயன்படுத்தி வருகிறார்கள்.

 

இத்தீர்ப்பு வந்து முப்பது ஆண்டுகள் கழிந்த பிறகு 1982இல் தமிழக அரசு ஆலயத்தின் நிர்வாகத்தில் நடந்துள்ள பல்வேறு முறைகேடுகளையும் மோசடிகளையும் குறிப்பிட்டு, ஆலயத்தை நிர்வகிக்க அரசு சார்பில் நிர்வாக அதிகாரியை நியமிக்கப் போவதாக நோட்டீஸ் அனுப்பியது.  இதற்குத் தடை கோரி தீட்சிதர்கள் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில், இதனை அரசாங்க உத்தரவாகக் கருதத் தேவையில்லை; "ஷோகாஸ் நோட்டீஸாக '' க் கருதிக் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்க வேண்டும்  என 09.08.1983இல் தீர்ப்பளிக்கப்பட்டது.  பதில் அளிப்பது, விசாரணை என நான்கு ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட பிறகு, தமிழக அரசு 31.7.1987 அன்று நிர்வாக அதிகாரியை நியமிக்கும் உத்தரவைப் போட்டது.

 

இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில் பத்தாண்டுகள் கழித்து, 11.02.1997 அன்று நிர்வாக அதிகாரியை நியமித்தது செல்லும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.  இத்தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்கள் மீண்டும் வழக்கு தொடர, அவ்வழக்கில் அரசிடம் முறையீடு செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது.  
 

அதன்பின் ஒன்பது ஆண்டுகள் கழித்து 09.05.2006 அன்று தீட்சிதர்களின் முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த தமிழக அரசு, நிர்வாக அதிகாரியை நியமித்து வெளியிடப்பட்ட உத்தரவை உறுதி செய்தது.  இந்த உத்தரவை எதிர்த்து தீட்சிதர்கள் தொடுத்த வழக்கில்தான் சென்னை உயர்நீதி மன்றம் நடராஜர் ஆலயத்தின் நிர்வாகத்தைத் தமிழக அரசு எடுத்துக் கொள்வதை உறுதி செய்து 02.02.2009 அன்று  தீர்ப்பளித்திருக்கிறது. 

 

இவ்வழக்கில் சிவனடியார் ஆறுமுகசாமியையும் சேர்த்துக்கொள்ள மனித உரிமை பாதுகாப்பு மையம் எடுத்த முயற்சியினால்தான், இவ்வழக்கில் மூன்று ஆண்டுகளுக்குள் சாதகமான தீர்ப்பைப் பெற முடிந்திருக்கிறது.  இல்லையென்றால், இவ்வழக்கில் எப்படித் தீர்ப்பு வரும், எப்பொழுது தீர்ப்பு வரும் என்பது அந்த தில்லை ஆண்டவனுக்குக்கூடத் தெரிந்திருக்காது.


•••

 

சிம்மவர்மன் என்ற இரண்யவர்மன், ஆதித்ய சோழன், குலோத்துங்க சோழன் ஆகிய சோழ மன்னர்களால் தான் நடராஜர் கோயில் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தது என்பதற்கும்; சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் சோழ பரம்பரையைச் சேர்ந்த பிச்சாவரம் ஜமீன் சிதம்பரநாத சூரப்ப சோழகனார் குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில்தான், (98 ஆண்டுகளுக்கு முன்பு வரை) நடராஜர் கோயில் இருந்து வந்ததற்கும்; தீட்சிதர்கள் சூழ்ச்சி செய்து, சிதம்பரநாத சூரப்ப சோழகனாரின் பாட்டனார் தில்லைக்கண்ணு சூரப்ப சோழகனாரிடமிருந்து கோவிலைப் பறித்துக் கொண்டனர் என்பதற்கும் பல்வேறு வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.

 

பொதுக்காரியத்திற்காக ஏழைக் குடியானவனிடமிருந்து அவனது நிலத்தைப் பறிக்கச் சற்றும் தயக்கம் காட்டாத அரசாங்கம், இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், தீட்சிதர்களிடமிருந்து முழுமையாகக் கோவிலைக் கைப்பற்ற முடியாமல் தடுமாறி நிற்பதன் இரகசியம் என்ன?

 

பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கிய தடா, பொடா சட்டங்கள் தன்னை நிரபராதி என நிரூபிக்கும் பொறுப்பைக் குற்றம் சாட்டப்பட்டவனின் தலையில் சுமத்துகின்றன. அதுபோல, எவ்வித ஆதாரமும் காட்டாமல் கோயிலைச் சொந்தம் கொண்டாடிவரும் தீட்சிதர்கள், ""கோயில் எங்களுக்குச் சொந்தம் இல்லை என்பதை நீ நிரூபி'' என அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார்கள்.

 

சிதம்பரம் கோவிலில் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின் உண்டியல் வைக்கப்பட்டதை மறைமுகமாகக் கண்டித்து எழுதுகிறது, தினமணி. (11.02.2009). அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை ஆண்டவனுக்குப் (பார்ப்பானுக்கு?) போய்ச் சேராது என்பதுதான் தினமணியின் ஆதங்கமாம். தினமணி வக்காலத்து வாங்கும் தீட்சிதர்களின் யோக்கியதை என்ன தெரியுமா? உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் கோயிலுக்கு 2007ஆம் ஆண்டு கிடைத்த மொத்த வருமானம் ரூ. 37,199 என்றும்; அதில் பல்வேறு இனங்களுக்காக 37,000 ரூபாய் செலவு செய்தது போக ரூ. 199 கையிருப்பாக இருக்கிறது எனக் "கணக்கு'க் காட்டியுள்ளனர், தீட்சிதர்கள்.

 

அதேசமயம், சிதம்பரம் கோயிலில் நிர்வாக அலுவலகம் திறக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்ளாகப் பக்தர்கள் காணிக்கையாகக் கொடுத்த தொகை ரூ. 2,000 எனக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. (தினமலர், 04.02.2009) குத்து மதிப்பாகப் போட்டால்கூட சிதம்பரம் கோயிலின் ஆண்டு வருமானம் 50 இலட்சத்தைத் தொடும் என்று கூறலாம். 37,199 ரூபாய் போக, மீதி 49,62,801 ரூபாய் எந்த ஆண்டவனிடம் போய்ச் சேர்ந்தது என்பதை தினமணிதான் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வேண்டும். சிதம்பரம் கோயில் தீட்சிதர்களின் பிடியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது எனும் பொழுது கொள்ளையின் பிரம்மாண்டத்தைப் பக்தர்கள்தான் கணக்குப் போட்டுக் கொள்ள வேண்டும்.

 

இந்து ஆலய பாதுகாப்புக் குழு என்ற போர்வைக்குள் புகுந்து கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல், ""திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடந்த வேல் திருட்டு உள்ளிட்டு, அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோவில்களில் நடைபெற்றுள்ள திருட்டு  மோசடிகளைப் பட்டியல் போட்டு, அரசு கட்டுப்பாட்டுக்குப் போனால் நடராஜர் சொத்தும் களவு போகும்'' என நோட்டீஸ் போட்டு பக்தர்களைப் பயமுறுத்தி வருகிறது.

 

தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் நடராஜர் ஆலயம் இருந்தபொழுதுதான், தங்க ஓடு வேயப்பட்ட கோபுரத்தில் 9 கலசங்களின் மேல் இருந்த 30 பவுன் பெறுமான தங்கப் பூக்கள் களவு போனது உள்ளிட்டு, பல்வேறு நகை திருட்டு குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன. 1994ஆம் ஆண்டு சங்கர தீட்சிதர் என்பவர் நகை திருட்டுக்காக சக தீட்சிதர்கள் மீது கொடுத்த புகார் சிதம்பரம் போலீசு நிலையத்தில் (குற்ற எண்: 42-94) பதிவாகியிருக்கிறது.

 

சிதம்பரம் கோவிலுக்குச் சொந்தமான தங்கவைர நகைகளை மதிப்பீடு செய்யும் ஆய்வு அரசால் நடத்தப்பட்டபொழுது, தீட்சிதர்கள் கருவறைக்குள் 200 பவுன் நகையைத் தங்கப் பாளங்களாகப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைப் பற்றி அதிகாரிகள் கேள்வி எழுப்பியபொழுது, அது தங்களின் வீட்டு நகை என்றும்; திருட்டு பயத்தால் கருவறைக்குள் பத்திரமாக வைத்திருப்பதாகப் பதில் அளித்தார்கள், தீட்சிதர்கள். ஒரு பானைக்கு ஒரு சோறு பதம்!

 

சிதம்பரம் கோயிலுக்குத் தமிழக அரசு நிர்வாக அதிகாரியை நியமித்தது செல்லும் என 1997ஆம் ஆண்டு தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், அந்த உத்தரவில், ""நகை திருட்டு போன்ற குற்றங்களைச் செய்த தீட்சிதர்கள் மீது கிரிமினல் வழக்குகள் ஏன் போடப்படவில்லை?'' எனக் கேட்டு அரசின் மெத்தனத்தைக் கண்டித்துள்ளது. எனவே, ஆர்.எஸ்.எஸ். கும்பலின் புலம்பல், ஈயத்தைப் பார்த்து இளிக்கும் பித்தளையின் கதை போன்றதுதான்.

 

அமெரிக்க வங்கிகளில், சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளைப் பார்த்துவிட்டு, தனியார்துறையை அரசு கண்காணிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியது தினமணி. தீட்சிதர்கள் விசயத்தில் அதைத்தான் அரசு செய்திருக்கிறது. ஆனால், தினமணியோ, கனமாக இருப்பது பார்ப்பனர்களின் மடி என்பதால் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறது.


 "தீட்சிதர்கள் ஏதோ பாசுமதி அரிசியில் நடராஜனுக்கு உகந்த நைவேத்யங்கள் செய்து கொடுப்பது போலவும்; அரசின் கைகளுக்குப் போனால், நடராஜனுக்கு ரேசன் அரிசிதான் கிடைக்கும்'' என ஆர்.எஸ்.எஸ். கும்பல் தனது மேல்சாதிக் கொழுப்பைக் கக்கியிருக்கிறது. கண்ணப்ப நாயனார் சிவனுக்குப் பச்சை மாம்சத்தைப் படையலாகக் கொடுத்ததையும்; விஷத்தை அருந்தியதால்தான் சிவனுக்குத் திருநீலகண்டன் என்ற திருநாமம் ஏற்பட்டதையும் புராணங்கள் பக்தர்களுக்குப் போதிக்கின்றன. விஷத்தையே விழுங்கிய சிவனால் ரேசன் அரிசியை விழுங்க முடியாதா? பூசாரியே தொன்னைக்கு அலையும்பொழுது, லிங்கம் பஞ்சாமிர்தம் கேட்டதாம் என்ற பழமொழியைப் பக்தர்கள் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு நினைவுபடுத்துவது நல்லது!

 

கோயிலில் உண்டியல் வைப்பது உள்பட, பணம், நகை, சொத்து விவகாரங்களைக் கையாளுவதை மத நடவடிக்கையாக வரையறுக்க முடியாது. அதில் சட்டத்திற்குப் புறம்பாக முறைகேடுகள் நடக்குமானால், தனி வகையறா கோவிலாக இருந்தாலும், அரசு தலையிட்டு அக்கோயிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்கலாம் என உச்சநீதி மன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்திருக்கிறது. இதன் அடிப்படையில்தான், சென்னை உயர்நீதி மன்றம் சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை அரசு எடுத்துக் கொள்வது சரியானது என உத்தரவிட்டுள்ளது.

 

சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பும், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையும் தீட்சிதர்களின் மத உரிமைகளில்  பூசை செய்வது போன்றவை  அரசு தலையிடாது என உத்தரவாதம் அளித்து, பார்ப்பனக் கும்பலின் மனதைக் குளிர வைத்துள்ளன. எனினும், ஆர்.எஸ்.எஸ்.  தீட்சிதர் கும்பல், ""இனி நடராஜர் கோயிலில் ஆறுகால பூஜைகள் ஒழுங்காக நடக்காது'' என்ற அழுகுனித்தனமான பொய்யைப் பக்தர்கள் மத்தியில் பரப்ப முயலுகின்றன.

 

ஆனால், தற்பொழுது அக்கோயிலுக்குள் நடப்பது என்ன? சூடத் தட்டில் விழும் துட்டு குறைந்தவுடன், தீட்சிதர்கள் நடராஜருக்கு சூட ஆராதனையைக் கூட ஒழுங்காகக் காட்ட மறுக்கிறார்கள் என்ற புகாரைப் பக்தர்கள்தான் நிர்வாக அதிகாரியிடம் கூறியிருக்கிறார்கள்.

 

""அரசின் கட்டுப்பாட்டுக்குக் கோவில் போனால், நடராஜருக்கு "நைவேத்யம்' கிடைக்காது பக்தர்களுக்குத் தரிசனம் கிடைக்காது'' என நோட்டீஸ் அடித்து சிதம்பரம் நகருக்குள் கொடுத்து வரும் தீட்சிதர்கள், நீதிமன்றத்தில் இந்த மதப் பிரச்சினைகளைப் பற்றி, பக்தனைப் பற்றிப் பேசுவதில்லை. மாறாக, தனது சொத்துரிமைப் பற்றிப் பேசுகிறது. முதலாளித்துவத்தின் கீழ், மத உரிமையைக் காட்டிலும் சொத்துரிமை புனிதமானதல்லவா!

 

நடராஜர் ஆலயத்திற்குள் நந்தனை நுழையவிடாமல் தடுத்த நம்மால், உண்டியல் நுழைந்ததைத் தடுக்க முடியவில்லையே என்பதுதான் தீட்சிதர்களின் பிரச்சினை! திருச்சிற்றம்பல மேடையேறி நடராஜனைத் தரிசிக்க துண்டுச் சீட்டு எழுதிக் கொடுத்து பக்தர்களிடம் நடத்திய கொள்ளையை இனித் தொடர முடியாது என்பதுதான் தீட்சிதர்களின் பிரச்சினை! சிதம்பர நடராஜர் கோவில் வளாகத்தைத் தமது காமக் களியாட்டங்களுக்கான உல்லாச விடுதியாக இனி பயன்படுத்த முடியாதே என்ற ஆதங்கம்தான் தீட்சிதர்களின் பிரச்சினை! நடராஜரைத் தரிசிக்க வரும் பக்தர்களைக் கிள்ளுக்கீரைகளைப் போல எண்ணி அவமானப்படுத்தி வந்த தீட்சிதர்களின் கொட்டம் ஒடுக்கப்பட்டதுதான் பிரச்சினை!

 

•••

 

சென்னை உயர்நீதி மன்றம் இத்தீர்ப்பை வெளியிட்ட அன்றே (பிப்.2, 2009) இரவோடு இரவாக நடராஜர் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமித்து, கோயில் நிர்வாகப் பொறுப்பைத் தனது கையில் எடுத்துக் கொண்டது, தி.மு.க. அரசு. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன், 1997இல், அப்பொழுதும் தி.மு.க. ஆட்சி நடந்து வந்த சமயத்தில், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வெங்கிடாசலம், நடராஜர் கோவிலுக்கு நிர்வாக அதிகாரியை நியமிக்க உத்தரவு போட்டார். அப்பொழுதும் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, இது போன்று ஏன் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பொழுது, தி.மு.க. அரசிற்கு தீட்சிதர்களை எதிர்த்து நிற்கும் வீரம் எங்கிருந்து வந்தது?

 

இதற்குக் காரணம், நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளும், மனித உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து, ""தில்லை நடராஜர் கோவிலின் திருச்சிற்றம்பல மேடையில் தமிழ் மறைகள் ஒலிக்க வேண்டும்; தில்லை கோயிலை தீட்சிதர்களின் பிடியில் இருந்து விடுவித்து, பொதுமக்களின் உடமையாக்க வேண்டும்'' என்ற கோரிக்கைகளை முன் வைத்து, கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நடத்திய தெருப் போராட்டங்கள்தான்! ""தில்லை கோயிலில் தீட்சிதர்கள் கடைபிடிக்கும் மொழித் தீண்டாமை ஒழியாதா? தீட்சிதர்கள் நடத்திவரும் கொள்ளை, கொலை, காம களியாட்டங்களை யாராவது தட்டிக் கேட்க மாட்டார்களா?'' என ஏங்கிக் கொண்டிருந்த தமிழின உணர்வாளர்களும், பக்தர்களும் இப்போராட்டங்களை முழு மனதோடு ஆதரித்து நின்றார்கள். புரட்சிகர அமைப்புகளின் கோரிக்கை, மக்கள் மத்தியில் பௌதீக சக்தியாக உருவெடுத்து நின்றுவிட்டது.

 

இப்படிப்பட்ட நிலையில், தீர்ப்புக்குப் பிறகு நிர்வாக அதிகாரியை உடனடியாக நியமிப்பதைத் தி.மு.க. அரசிற்கு வேறுவழியில்லாமல் போய் விட்டது. தி.மு.க. அரசு இரவோடு இரவாக நடவடிக்கை எடுக்காமல் சுணக்கம் காட்டியிருந்தால், தீட்சிதர்கள் அதிகார வர்க்கம் மத்தியில் தங்களுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்திக் கொண்டு, தீர்ப்புக்குத் தடையுத்தரவு வாங்கியிருப்பார்கள். பொதுமக்கள் தி.மு.க. அரசு மீது காறி உமிழ்ந்திருப்பார்கள்.

 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையும்; உயர்நீதி மன்றத் தீர்ப்பும்  கோயில் நிர்வாக விசயத்தில்கூட, தீட்சிதர்களின் ஆதிக்கத்தை முற்றாக ஒழித்து விடவில்லை. வரவுசெலவு கணக்குகள் விசயத்தில் பொது தீட்சிதர்களின் ஒப்புதலைப் பெறவேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதால், இந்த ஆணை நிர்வாக அதிகாரியை தீட்சிதர்களின் கணக்குப் பிள்ளையாக மாற்றுகிறது என மனித உரிமை பாதுகாப்பு மையம் குற்றஞ் சுமத்தியுள்ளது.

 

எனவே, ""அரசாணை பிறப்பித்து தில்லைக் கோயிலை அறநிலையத் துறையின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வா! நகைக் களவு உள்ளிட்ட கிரிமினல் குற்றங்கள் புரிந்த தீட்சிதர்களைக் கைது செய்! நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்திருக்கும் தீண்டாமைச் சுவரைத் தகர்த்தெறி!'' என்ற முழக்கங்களை முன்வைத்து, மனித உரிமை பாதுகாப்பு மையமும், நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகளும் அடுத்த கட்ட போராட்டத்தை நடத்தத் தொடங்கிவிட்டன. இதனின் தொடக்கமாக, இக்கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் நகரில் 21.02.09 அன்று ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடத்தப்பட்டன.

 

இந்த இடைக்கால வெறறியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் கூட, இப்படிப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களை நடத்துவது அவசியமானது, தவிர்க்க முடியாதது என்பதை தமிழக மக்கள் உணர வேண்டும். இல்லையென்றால் தீட்சிதர்கள் மாமி, சாமி போன்ற பார்ப்பன அரசியல் புரோக்கர்கள் மூலம், நடராஜர் கோயிலைத் தங்களின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் கடத்திக் கொண்டு போய்விடுவார்கள்.

மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

 

அடக்கினோம் தீட்சிதத் திமிர்! அடுத்தது.. தெற்குவாயில் சுவர்!!
— தில்லைப் பேரணியின் போர்முழக்கம்!

 

 "தில்லையில் தீட்சிதரை வென்றாரில்லை' என்ற தீட்சிதர்களின் இறுமாப்பு தகர்க்கப்பட்டு விட்டது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி தில்லைக் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரி நியமிக்கப்பட்டுவிட்டார். மனித உரிமைப் பாதுகாப்பு மையம், ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ஆகிய எமது அமைப்புகள் மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் விடாப்பிடியாக நடத்திய போராட்டம் தீட்சிதர்களின் ஆதிக்கப் பிடியைத் தகர்த்திருக்கிறது. இந்த வெற்றியை அறிவிக்குமுகமாகவும், அடுத்த கட்டப் போராட்டத்துக்கான கோரிக்கைகளை வெளியிடுமுகமாகவும் எமது அமைப்புகளின் சார்பில் பிப்ரவரி 21ஆம் தேதியன்று எழுச்சி மிகு பேரணியும் பொதுக்கூட்டமும் சிதம்பரத்தில் நடத்தப்பட்டன.


ஆடல் வல்லானைப் பணிய,  ஆதிரைக்கும் ஆனித் திருமஞ்சனத்துக்கும் திரண்டு வரும் பக்தர்களை மட்டுமே ஆயிரக்கணக்கில் கண்டிருந்த தில்லை நகரம், அன்று ஆர்த்தெழுந்த மக்கள் ஆயிரக்கணக்கானோரின் அணிவகுப்பை முதன்முறையாகத் தரிசித்தது. பணிய மறுக்கும் போர்க்குணத்தின் நடனம் கண்டு பரவசம் கொண்டது.


மாலையில் வழக்குரைஞர் ராஜுவின் தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தோழர் அம்பிகாபதி வி.வி.மு, தோழர் பாலு  பு.மா.இ.மு, தோழர் அனந்தகுமார் பு.ஜ.தொ.மு, திரு.காவியச்செல்வன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, வழக்குரைஞர் செந்தில், தோழர் காளியப்பன்  ம.க.இ.க ஆகியோர் உரையாற்றினர். இந்தத் தீர்ப்பைப் பெறுவதற்கு தாங்கள் நடத்திய நீண்ட போராட்டத்தை விவரித்தார் ராஜு. திரு.வி.எம்.எஸ். சந்திரபாண்டியன் (பா.ம.க), கோயிலை அறநிலையத்துறை மேற்கொள்வதற்கு எதிராக, பக்தர்கள் என்ற போர்வையில் உண்ணாவிரதம் நடத்தியவர்களெல்லாம், தீட்சிதர்களுடன் கூட்டுச் சேர்ந்து கோயில் சொத்தைக் கொள்ளையடித்தவர்களே என்பதை ஆதாரங்களுடன் அம்பலமாக்கினார்.


""மக்களைப் பாதுகாக்கத்தான் கடவுளும் ஆலயங்களும் என்று கூறியவர்கள் இன்று ஆலயப் பாதுகாப்புக்கு கமிட்டி போடுகிறார்கள். ஆலயத்தையே மனிதன் தான் பாதுகாக்க வேண்டும் என்பதிலிருந்தே ஆண்டவன் இல்லை என்பது அம்பலமாகவில்லையா?'' என்று கேள்வி எழுப்பி, பக்தியின் கண்மூடித்தனத்தைப் பகுத்தறிவால் கிழித்தார் பேராசிரியர் பெரியார்தாசன். தீட்சிதர்களின் வாதங்களை எள்ளி நகையாடிய தோழர் மருதையன், 'தில்லை ஈழம் உயர்நீதிமன்ற தாக்குதல்' என்ற மூன்று பிரச்சினைகளையும் இணைக்கும் கண்ணியை அடையாளம் காட்டினார்.


""அரசாணை மூலம் கோயிலை முற்றாக அறநிலையத்துறை எடுக்க வேண்டும்; கொலை, கொள்ளை முதலான கிரிமினல் குற்றங்கள் புரிந்த தீட்சிதர்களை உடனே கைது செய்ய வேண்டும்; நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்திருக்கும் தீண்டாமைச் சுவரைத் தகர்க்கவேண்டும்'' என்ற கோரிக்கைகளை முன்வைத்து, போராட்டத்தைத் தொடர அறைகூவல் விடுத்தார்.