Language Selection

புதிய ஜனநாயகம் 2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காஷ்மீர் மக்கள் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க முன்வந்ததை தேசிய ஒருமைப்பாட்டின் வெற்றியாகக் காட்டுவது அரைவேக்காட்டுத்தனமானது. காஷ்மீரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல் இந்திய தேசியவாதிகளை ஆனந்தக் கூத்தாட வைத்துவிட்டது.  அமர்நாத் பனிலிங்கக் கோவிலுக்கு நிலம்

 ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்குக் குலுங்கியதைக் கண்டு கிலி பிடித்துப் போயிருந்த இந்திய அரசு, அம்மாநிலத்தில் தேர்தலை நடத்தலாமா எனத் தடுமாறிக் கொண்டிருந்தது.  தேர்தலை நடத்தினால், மக்கள் வாக்களிக்க வருவார்களா எனச் சந்தேகப்பட்டுக் கொண்டு இருந்தது.

  

ஆனால், யாருமே எதிர்பாராதவண்ணம் அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டசபைத் தேர்தலில் 61.23 சதவீத வாக்குகள் பதிவாகின.  அம்மாநிலத் தலைநகர் சிறீநகரில் 2002 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெறும் 5 சதவீத வாக்குகள்தான் பதிவாகின. இம்முறையோ அந்நகரைச் சேர்ந்த சட்டசபை தொகுதிகளில் 21.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.  காஷ்மீரில் ஆயுதப் போராட்டம் தொடங்கிய பிறகு நடந்துள்ள தேர்தல்களில், இச்சட்டசபைத் தேர்தலில்தான் 1989ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தபடி அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.


சட்டசபை தேர்தல்கள் அமைதியாகவும் வெற்றிகரமாகவும் நடந்துள்ளதைக் காட்டி, காஷ்மீர் மக்கள் ""தீவிரவாதத்தை''ப் புறக்கணித்துவிட்டதாகவும்; பிரிவினைவாதத்திற்கு டாட்டா காட்டிவிட்டதாகவும் இந்திய அரசு கூறி வருகிறது.  நடுநிலையாளர்களோ, "காஷ்மீர் மக்கள் தேர்தல் முறையில் நம்பிக்கை கொண்டு வாக்களித்திருப்பதால், இந்திய அரசு ஜனநாயக முறைப்படி காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும்'' என ஆலோசனை சொல்கிறார்கள். 


காஷ்மீர் மக்களின் விடுதலை வேட்கை தணிந்துவிட்டதா எனப் பார்ப்பதற்கு முன், இந்திய அரசு காஷ்மீரில் தேர்தலை எந்த அளவிற்கு "ஜனநாயக'ப்பூர்வமாக நடத்தியது என்பதைப் பார்ப்போம். 


காஷ்மீரில் வெறும் 800 தீவிரவாதிகள்தான் பதுங்கி இருப்பதாக இந்திய அரசு சமீபத்தில் கூறியிருக்கிறது.  ஆனால், இந்த 800 தீவிரவாதிகளைப் பிடிக்கப் பல பத்தாயிரக்கணக்கான இராணுவச் சிப்பாய்களை காஷ்மீரில் குவித்திருக்கிறது, இந்திய அரசு  இதுவும் போதாதென்று தேர்தல் சமயத்தில் தேர்தலை அமைதியாக நடத்துவது என்ற பெயரில் பல்வேறு துணை இராணுவப் படைகளைச் சேர்ந்த சிப்பாய்கள் (மொத்தமாக 538 கம்பெனி) காஷ்மீரில் நிறுத்தப்பட்டனர்.  இவ்வளவு படைகளைக் குவித்த பிறகும் தேர்தலை ஒரே சமயத்தில் நடத்தாமல், ஏழு தவணைகளில் நடத்தியது தேர்தல் ஆணையம்.  காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு இடத்தில் தேர்தல் நடந்தால், மற்ற இடங்களில் எல்லாம் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.  சட்டசபை தேர்தலைப் புறக்கணிக்கக் கோரிய {ஹரியத் மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வீட்டுக் காவலிலோ சிறையிலோ அடைக்கப்பட்டனர். 


இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ததனால்தான் காஷ்மீரில் அமைதியாகத் தேர்தல் நடந்தது என்ற முடிவுக்கு வருவது அரைவேக்காட்டுத்தனமாகும்.  காஷ்மீரில் ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் பல்வேறு அமைப்புகளும் தேர்தலைச் சீர்குலைக்கும் வண்ணம் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம் என அறிவித்திருந்தது, தேர்தலை அமைதியாக  வெற்றிகரமாக நடத்தி முடிப்பதற்குப் பெரும் பங்காற்றியது.  இத்தேர்தலில் வாக்களித்தவர்களில் வெறும் 15 சதவீதப் பேர்தான் தேர்தலைப் புறக்கணிக்குமாறு {ஹரியத் மாநாட்டுக் கட்சி அறிவித்திருந்ததைத் தவறு எனக் கூறியுள்ளனர்.  வாக்களித்தவர்களில் 54 சதவீதப் பேர் தேர்தல் புறக்கணிப்புக் கோரிக்கையை நியாயப்படுத்தியே கருத்துக் கூறியுள்ளனர். தேர்தலைப் புறக்கணித்தவர்களுள் பெரும்பாலோர் அரசியல் காரணங்களுக்காகவே தேர்தலைப் புறக்கணித்திருந்தார்களே தவிர, நடுத்தர வர்க்க விரக்தி மனப்பான்மையில் தேர்தலைப் புறக்கணிக்கவில்லை.  அதே சமயம், வாக்களித்தவர்கள் (குறிப்பாக பள்ளத்தாக்கு முஸ்லீம் வாக்காளர்கள்) தேர்தல் மூலம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்த்துவிட முடியும் என்ற கனவிலும் மூழ்கிக் கிடக்கவில்லை.


"தேர்தலுக்கும் விடுதலைப் போராட்டத்துக்கும் இடையே எவ்விதமான உறவும் கிடையாது.  குடிநீர், சாலை வசதி, கல்வி போன்றவை எங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக மட்டும்தான் நாங்கள் ஓட்டுப் போடுகிறோம்.''


"ஆளுநர் ஆட்சியைவிட உள்ளூர் ஆட்கள் ஆட்சிக்கு வருவது மேல் என்பதால்தான் வாக்களிக்கிறோம்.''


"தேர்தல் என்பது உள்ளூர் அரசாங்கத்தை அமைப்பது என்பதோடு முடிந்துவிடுகிறது. நாங்கள் விடுதலைக்கான போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம்; காஷ்மீரை விடுதலை செசூவதில் உறுதியாக நிற்போம்.'' இவையெல்லாம் தேர்தலில் வாக்களித்தது குறித்து காஷ்மீர் மக்கள் பல்வேறு பத்திரிகையாளர்களிடம் கூறிய கருத்துகள். 


சட்டசபைக்கான தேர்தல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற குழுவைச் சேர்ந்த தளபதிகளுள் ஒருவரான ராயீஸ் அகமது தர், டிசம்பர் 17 அன்று இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது இறுதி ஊர்வலத்தில் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.  காஷ்மீர் மக்கள் தேர்தலில் வாக்களித்தாலும் "தீவிரவாதிகளை' அவர்கள் புறக்கணித்து விடவில்லை என்பதைத்தான் இது எடுத்துக் காட்டுகிறது.


"பிரிவினைவாதிகள் விடுத்த தேர்தல் புறக்கணிப்பு கோரிக்கையை மீறி காஷ்மீர் மக்கள் வாக்களித்து விட்டதாகக் கூத்தாடும் இந்திய அரசு, தான் ஐ.நா. சபையில் ஒப்புக் கொண்டபடி காஷ்மீர் சுயநிர்ணய உரிமை குறித்து பொது வாக்கெடுப்பு நடத்திப் பார்க்கட்டுமே?'' எனச் சவால் விடுகிறார், {ஹரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுள் ஒருவரான செயத் அலி ஷா கிலானி.  இந்தக் கோரிக்கை "எல்லை' மீறியதாகக் கருதினால், "இராணுவத்திற்கு வரம்பற்ற அதிகாரம் அளிக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்குவது; காஷ்மீர் பள்ளத்தாக்கைக் கலவரப் பகுதியாக அறிவித்திருப்பதை நீக்குவது; அரசியல் கைதிகளை விடுதலை செய்வது; விசாரணைக்காக "அழைத்து'ச் செல்லப்படும் காஷ்மீர் முஸ்லீம்களை நாகரிகமாக நடத்துவது'' உள்ளிட்ட சில சாதாரண அரசியல் கோரிக்கைகளையாவது உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.  அப்படிச் செய்வது வாக்களித்த மக்களுக்குத் திருப்பிச் செலுத்தும் நன்றிக்கடனாக அமையும்.


ஆனால், தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையில் அமைந்துள்ள கூட்டணி அரசோ, காஷ்மீரில் இராணுவப் பாசறைகள் அமைக்கப்பட்டிருக்கும் தனியார் நிலங்களுக்கான வாடகையை உயர்த்திக் கொடுப்பதற்கே தில்லியில் உள்ள இராணுவத் தலைமையைக் கேட்க வேண்டும் என்று கையை விரிக்கிறது.  அந்தளவிற்கு ஜனநாயகப் பூர்வமாக தேர்தல் நடந்து முடிந்துள்ள காஷ்மீரில் இராணுவத்தின் அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது.


இச்சட்டசபைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.  தேர்தலில் எதிரும் புதிருமாகப் போட்டியிட்ட காங்கிரசும், தேசிய மாநாட்டுக் கட்சியும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துக் கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளன. இத்தேர்தலில் காங்கிரசு கட்சிக்குக் கிடைத்த 16 இடங்களில் 3 இடங்கள்தான் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவை. மீதி 13 இடங்களும் ஜம்மு பகுதியைச் சேர்ந்தவை.  ஜம்மு பகுதியில் இத்தொகுதிகளில் காங்கிரசு வெற்றி பெறுவதற்கு அமர்நாத் போராட்டத்தை ஜம்மு பகுதியில் நடத்திய இந்துவெறி அமைப்பான ""அமர்நாத் சங்கர்ஷ் சமிதி'' உதவியிருக்கிறது.  நாடாளுமன்றத் தேர்தலில் ஜம்மு பகுதி இந்துக்களின் வாக்குகளை அள்ளிவிட வேண்டும் என்பதற்காகவே காங்கிரசு கட்சி, மென்மையான தீவிரவாதக் கட்சியாக அறியப்படும் (தனது முந்தைய கூட்டாளியான) மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் மீண்டும் கூட்டணி கட்டிக்கொள்ள மறுத்துவிட்டு, தேசிய ஒருமைப்பாட்டு பஜனையில் ஐக்கியமாகிவிட்ட தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ளது.


ஜம்முகாஷ்மீரில் 2002ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெறும் ஓரேயொரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க., இம்முறை அமர்நாத் நில விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு இந்து மதவெறியைத் தூண்டிவிட்டதன் மூலம் 11 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  ஜம்முகாஷ்மீரில் பிரிவினைவாதத்திற்கு எதிராகப் போராடுவதாகக் கூறிவரும் காங்கிரசும் பா.ஜ.க.வும் ஓட்டுப் பொறுக்குவதற்காக மதவெறியைத் தூண்டிவிட்டு மக்களைப் பிளந்துவரும் அயோக்கியதனத்தை என்னவென்பது?


காஷ்மீரின் விடுதலைக்கு ஆயுதந்தாங்கிப் போராடும் குழுக்களுக்கு இத்தேர்தல் உணர்த்தும் பாடம் என்னவென்பதும் பரிசிலனைக்குரியது. அமர்நாத் நில ஒதுக்கீடு விவகாரத்தின்பொழுது தன்னெழுச்சியாகத் திரண்டு எல்லையைக் கடக்கும் போராட்டத்தை உணர்வுபூர்வமாக நடத்திய மக்கள், தேர்தலில் ஏன் வாக்களித்தார்கள் என்ற விளக்கத்தை இந்த அமைப்புகளின் பலவீனத்தில்தான் தேட முடியும்.


காஷ்மீரில் ஆயுதந்தாங்கிப் போராடும் குழுக்களில் பெரும்பாலானவை முஸ்லீம் மத அடிப்படைவாதத்தைத் தங்களின் சித்தாந்தமாகக் கொண்டுள்ளன. மேலும், இந்திய இராணுவத்தோடு மோதுவதை மட்டுமே ஒரே அரசியல் நடவடிக்கையாகக் கருதும் இக்குழுக்கள் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்காகப் போராடுவதைத் திட்டமிட்டே புறக்கணிக்கின்றன.  அமர்நாத் நில ஒதுக்கீடு போராட்டத்தின்பொழுது, பள்ளத்தாக்கில் விளைந்த ஆப்பிள் பழங்களை எல்லையைத் தாண்டி பாகிஸ்தானுக்கு எடுத்துச் செல்வதன் மூலம், பள்ளத்தாக்கு முஸ்லீம் மக்கள் மீது ஜம்முவைச் சேர்ந்த இந்துவெறி அமைப்புகள் திணித்த பொருளாதார முற்றுகையை முறியடிக்கும் போராட்டத்தைப் போராளி குழுக்கள் அறிவிக்கவில்லை.  வர்த்தக சங்கங்களும், பொது மக்களும்தான் அறிவித்து நடத்தினார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


இக்குழுக்கள் மக்களை வெறும் பார்வையாளராகவே வைத்திருக்கின்றன் அல்லது தங்களது கட்டளைக்குக் கீழ் படிய வேண்டிய பொம்மைகளாகப் பார்க்கின்றன.  இப்படிபட்ட பெரிய அண்ணன் கண்ணோட்டத்திற்கு மத அடிப்படைவாதக் கண்ணோட்டம்தான் அடிப்படையாக அமைகிறது என்பதை நாம் இங்கு அழுத்தமாகப் பதிவு செய்ய வேண்டும்.  மேலும், இக்குழுக்கள் தங்களைத் திருத்திக் கொள்ளும் என்ற அதீத கற்பனையிலும் நாம் சிக்கிக் கொள்ள வேண்டியதில்லை.


காஷ்மீரின் விடுதலை பிரச்சினையை {ஹரியத் மாநாட்டுக் கட்சி தீர்த்து வைக்கும்; குடிநீர், சாலைலை வசதி போன்ற அன்றாட பிரச்சினைகளை ஓட்டுக் கட்சிகள் தீர்த்து வைக்கும் எனக் கருதிக் கொண்டிருக்கும் காஷ்மீர் மக்களின் அப்பாவித்தனத்தைக் களையெடுக்காத வiர் அவர்களை அரசியல்படுத்தி, அமைப்பாக்கி, அவர்களது முன்முயற்சிகளைக் கட்டவிழ்த்துவிடாத வiர் இதனைச் செய்து முடிக்கும் வல்லமை கொண்ட புரட்சிகரஜனநாயக இயக்கங்கள் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் தலைமையைக் கைப்பற்றாத வரை, ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சில சமயங்களில் தேர்தலை "வெற்றிகரமாக' நடத்தி முடிப்பது வியப்பான விசயம் அல்ல!


• பச்சையப்பன்