ஆனால் போர் வெறி யூட்டப்பட்டிருந்த உழைக்கும் மக்களின் காதுகளில் இது ஏறவே இல்லை. போர் மேலும் மேலும் உக்கிரமடைந்த போதுதான் அவர்களுக்கு இது உறைத்தது. பல லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். பஞ்சம் தலைவிரித்தாடியது. எங்கும் பசி பட்டினி, தொழிலாளர்கள் ஜாருக்காக சண்டையிட்டு மடிந்து கொண்டிருந்தனர். அவர்களின் குடும்பங்கள் பட்டினியால் மடிந்து கொண்டிருந்தனர். இந்தக் கஷ்டம் தொழிலாளர்களுக்குத் தான் முதலாளிகளோ போரைப் பயன்படுத்தி எல்லா பொருட்களுக்கும் விலை ஏற்றினர். கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.
லெனினுடைய வார்த்தைகள் எவ்வளவு சரியானவை என்ற மக்கள் புரிந்து கொண்டனர். இந்தக் கொள்ளைக்காரப் போரை நிறுத்தும்படி படைவீரர்களும், தொழிலாளர்களும் கொடுத்த மனுக்கள் குப்பையில் வீசப்பட்டன. மக்களின் கோபம் எல்லை மீறியது. 1917-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் புரட்சி வெடித்தது. ஒரே நாளில் வெற்றியும் பெற்றது. மன்னராட்சி முறை ஒடுக்கப்பட்டது. ஆனால் மக்களை ஏமாற்றிவிட்டு அரசு அதிகாரத்தை முதலாளிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த லெனின் ரசியாவிற்கு விரைந்து வந்தார். பெத்ரோகிராடு ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் முன்னே லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நின்றனர். அவருடைய பேச்சைக் கேட்பதற்காக அவர்கள் ஓடோடி வந்திருந்தனர்.