08112022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும்

மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் எம்மத்தியில் உள்ளனரா? அப்படி யாரும் அரசியல் ரீதியாக எம் மத்தியில் கிடையாது. மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் என்பது, மக்களுக்காக வைக்கப்படும் புரட்சிகர கருத்துகளின் அடிப்படையில் தான், அரசியல் ரீதியாக அதை வரையறுக்க முடியும்;. அரசியல் அல்லாத தளத்தில், இது வெறும் நபர்கள் அல்ல.  

 

 

எமது அரசியல் கருத்துடன் நிற்கின்ற பல்வேறு தரப்பினர் மத்தியில், திடீரென ஒரு குழப்பத்தை சிறிரங்கன் எழுதிய கட்டுரை (புலம்பெயர் குழுக்களின் அரசியல் - மூன்றாவது அணியும், மூக்கணாங் கயிறும்.) ஒன்று ஏற்படுத்தியுள்ளது. பலர் இது எம்மைக் குறித்த ஒரு விமர்சனமாக, சுட்டிக் காட்டினர். ஏனென்றால் மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் எங்களுக்கு வெளியில் இல்லை என்ற அடிப்படையில், இதை எமக்குச் சுட்டிக்காட்டினர்.

 

அரசியல் ரீதியாக எம் வாசகர்கள் சூழலைப்புரிந்து கொள்வதனால், இதை சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த வகையில் இதை நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.  

 

எம்மை குறித்த அரசியல் ரீதியான எந்த விமர்சனமும், எப்போதும் ஆரோக்கியமானது தான். இதை நாம் வரவேற்கும் அதேநேரம், சிறீரங்கன் எழுதியது எம்மைக் குறித்த விமர்சனமல்ல என்பதை, எம் நேரடி உரையாடலில் சிறிரங்கன் தெளிவுபடுத்தியுள்ளார். அப்படியாயின் இது யாரைக் குறித்த விமர்சனம்;? இந்தக் கேள்வியையே நாமும் அவரிடம் எழுப்பினோம்.

 

புலி, புலியெதிர்ப்பு அல்லாத தளத்தில் உள்ள எதிர்ப்புரட்சி சக்திகள் மேலான ஒருதொடர் விமர்சனத்தின், ஒரு அங்கம் தான் இது என்றார். அவர் எம்மிலிருந்து வேறுவிதமாக அவர்களையும், சமூகத்தையும் பார்க்கவில்லை என்பதை இங்கே நாம் குறித்துக்கொள்ள வேண்டும்.

 

இது எம் மீதான விமர்சனமல்ல என்ற வகையிலும், இதில் ஏற்பட்ட குழப்பத்தை அரசியல் ரீதியாக தெளிவாக்குவது அவசியமாகின்றது. புலி மற்றும் புலியல்லாத தளத்தில் உள்ளவர்களை, மூன்றாவது அணியாக, புரட்சிகர சக்தியாக எம்முடன் பொதுமைப்படுத்தி சிறிரங்கன் வரையறுத்தது தவறானது. அப்படி அவர்களை அரசியல் ரீதியாக அவர் கருதாவிட்டாலும், பொதுப்படையாக ஒன்றுக்குள் வகைப்படுத்தியதே இதில் உள்ள அரசியல் தவறாகும். எம்மை அரசியல் ரீதியாக வேறுபடுத்தாத பொதுமைப்படுத்தல், அவர்களை தவறான இடத்தில் வைத்து அடையாளப்படுத்துதல், அரசியல் ரீதியாக தவறாக வழிகாட்டும். 

 

மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் எமக்கு (சிறிரங்கன் உள்ளிட்ட எமக்கு) வெளியில் எவரும் அரசியல் ரீதியாக கிடையாது. இன்றைய எமது அரசியல் நிலைக்கு, நாம் வந்தடைந்த போராட்டத்தின் போது, மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் என்று தம்மை அடையாளப்படுத்தக் கூடிய வகையில் அரசியல் தளத்தில் வேறு யாரும் எமக்கு சமாந்தரமாக போராடியிருக்கவில்லை. பலர் இடையில் நின்றுவிட்டனர். இந்த எதார்த்தம் மிக முக்கிமான அரசியல் வரையறையையும், அடிப்படையையும் எமக்கு வழங்குகின்றது.

 

மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் கொண்டிருக்கக் கூடிய விரிந்த ஒரு முன்னணிக்குரிய அரசியல் என்பது, மார்க்சியம் முதல் முரணற்ற முதலாளித்துவ ஜனநாயகம் வரை அடங்கும். எமது இந்த இணையத் தளமும், இந்த அரசியல் வரையறையிலான எல்லைக்குள், மாறுபட்ட கருத்துக்களுக்கான சுதந்திரத்தை அனுமதிக்கின்றது.

 

இங்கு மூன்றாவது அணியும், புரட்சிகர சக்திகளும் யார் என்ற அரசியல் குழப்பத்தை, எந்த அரசியல் வரையறை வழங்குகின்றது? புலியை மையப்படுத்திய வரையறைதான், புலி மற்றும் புலியெதிர்ப்பு அணியல்லாதவர்கள் யார் என்பதை வரையறுக்க முடியாத, அரசியல் குழப்பத்துக்கு இட்டுச் செல்கின்றது. புலியை மையப்படுத்திய வரையறை என்பது, இரண்டு தசாப்தங்களாக, புலியல்லாத அனைத்தையும் தீர்மானிக்கும் ஒரு கருதுகோளாக எம்முன் இருந்துள்ளது. இதுதான் புலியல்லாத தளத்தின் எதிர்ப்புரட்சி அரசியல் தளத்தை உருவாக்கியது. அது இன்று இலங்கை அரசுக்கு சேவை செய்கின்றது.

 

இரண்டாவது புலியை மையப்படுத்திய அளவுகோல், கோட்பாடல்லாத இருப்பையும், அமைப்பு வடிவமல்லாத இருப்பையும் நியாயப்படுத்துகின்றது. இதை முற்போக்காக, புரட்சிகரமான போக்காக வரையறுத்த கருதுகோள், இன்னமும் செல்வாக்கு வகிக்கின்றது. இந்த வரையறையிலான சிந்தனை முறையும், இதற்குட்படும் அனைத்தையும் மறுக்கும் வடிவம், ஒரு இருப்பு சார்ந்த விமர்சனம் கோட்பாடாகியது. 

 

புலி இருப்பு, எப்படி புலியெதிர்பு அரசியலைத் தக்கவைக்கின்றதோ, அதுபோல் கோட்பாடும் அமைப்புமில்லாத இருப்பை தக்கவைக்க, அனைத்தையும் மறுப்பது அரசியலாகின்றது.

 

இதற்கு ஒரு அரசியல் வரலாற்று இயங்கியல் தொடர்ச்சியை மறுப்பது, இன்று இயங்கியல் மறுப்பாகி வருகின்றது. கடந்ததை மறுப்பது, அதில் இருந்து பார்க்க மறுப்பது, இருப்பு சார்ந்த எதிர்ப்புரட்சியை தக்கவைக்கும் அரசியல் விமர்சன முறையாகின்றது.  இந்த இடத்தில் சுவிஸ் ரவி சரியாக சுட்டிகாட்டிய '80 களின் நடுப்பகுதியிலிருந்து ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராக கடுமையாக புகலிட சஞ்சிகைகள் போராடிப் பெற்ற ..."  என்ற கட்டுரையில் '80 களின் நடுப்பகுதியிலிருந்து ஜனநாயக மறுப்புகளுக்கு எதிராக கடுமையாக புகலிட சஞ்சிகைகள் போராடிப் பெற்ற பெறுபேறுகளை தம் போன்ற புலியெதிர்ப்பாளர்களின் வரலாற்றிலிருந்து தொடங்கப்பட்டதாய் தேனீ ரிபிசி மட்டுமல்ல தேசம் இணையத்தளமும் தான் படம் காட்டின, வரலாற்றை அறுத்தெடுத்துக் காட்டின." இப்படி எதிர்ப்புரட்சி அரசியல் தான், புலி மற்றும் புலியெதிர்ப்பு தளத்தில் தம்மை நிலைநிறுத்த முனைகின்றது. அவர்கள் தொடர்ச்சியான அரசியல் இயங்கிலை மறுத்து, இயக்க மறுப்பியலை அடிப்படையாக கொண்டு, எதிர்ப்புரட்சிக்கான அடித்தளத்தை இடமுனைகின்றனர்.  

 
 
இந்த அடிப்படையில் மூன்றாவது அணியையும் புரட்சிகர சக்திகளையும் சிறிரங்கன் இனம் காட்டாது, அனைத்தையும் பொதுமைப்படுத்தியது என்பது தவறானது. ஒரு அரசியல் நீட்சியை உள்வாங்காததும், மாற்றங்களை உள்வாங்காததுமான ஒரு அரசியல் எதிர்வினையாகின்றது. (இங்கு சிறிரங்கனைப் புரிந்துகொள்ள ஒரு குறிப்பு : சிறிரங்கன் உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் ஆளாகும் கணங்களில், ஆய்ந்து கொள்ளும் இயல்பை இழந்துவிடுவது அடிக்கடி நிகழ்கின்றது. இதனால் அந்தக் கண உணர்வுகள் மேலோங்க, அவரின் கடைசி உரையாடல் கூட கருத்துகளை தீர்மானிக்கின்றது. உணர்ச்சிக்கும் உணர்வுக்கும் உள்ளாகும் போது, இடைவெளியெடுத்து எழுதுவதை அரசியல் ரீதியாக வளர்த்துக் கொள்ளக் கோருகின்றோம்.)   
 
இங்கு புலி மற்றும் புலியல்லாதவர்கள் யார்? அவர்களின் அரசியல் என்ன? இதை சரியாக மதிப்பிடாத அளவுகோல்கள், எம்மை தவறாக வழிநடத்தும்.

 

புலியின் பாசிசத்தாலும், புலியின் ஜனநாயக மீறலையும், அளவுகோலாகக் கொண்ட புலியல்லாத பொது அரசியல் பார்வையே, அனைவரையும் அருகில் நிறுத்திவைத்தது. இடதுசாரி முதல் வலதுசாரி வரை ஒரே அணியாக பார்ப்பது, உறவாடுவது, விவாதிப்பது என்று, ஒரு அரசியல் விபச்சாரமே நடந்தது. சூழல் அதற்குரிய ஒரு அடித்தளத்ததை இட்டது.

 

ஆனால் இவர்களின் அரசியல் பின்னணியும், கோட்பாடுகளும், இவர்கள் யார் என்பதை தெளிவாக்கியுள்ளது. இந்தியா இலங்கை சார்புக் குழுக்களுடன் ஒன்றாக, ஒரே மேடையில்  இவர்களுடன் உள்ளே இருக்க முடிந்தது. ஏகாதிபத்;தியம் முதல் இந்தியா இலங்கை சார்புக் குழுக்களுடன் உறவாடவும், அரசியல் உறவுகளை கொண்டிருக்கவும் கூட முடிந்தது. இது இவர்களின் வர்க்க அரசியலையும், மக்கள் விரோதத்தன்மையையும் எடுத்துக் காட்டுகின்றது. புலியை முன்னிறுத்திய அளவுகோல், இருப்பைத் தக்க வைக்கும் அளவுகோல், இவர்களின் எதிர்ப்புரட்சி அரசியலின் ஒரு இருப்பிடமாக உள்ளது.

 

இவர்கள் மூன்றாவது அணியாக புரட்சிகர சக்தியாகவும் வரமுடியாதவர்கள். அந்தளவுக்கு கடந்த காலத்தை சுயவிமர்சனம் செய்யும், எந்த அரசியல் பண்புமற்றவர்கள். மாறாக சந்தர்ப்பவாதம் மூலம் தம்மை மூடிமறைத்து, வேசம் போடும் எதிர்ப்புரட்சியாளர்கள்.  

 

பி.இரயாகரன்
15.03.2009
         

        
 


பி.இரயாகரன் - சமர்