Language Selection

புதிய ஜனநாயகம் 2009
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஈழத்தமிழ் மக்கள் மீது மிகக்கொடிய இன அழிப்புப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்தை எச்சரித்து வெளியேற்றிவிட்டு, ஊடகங்களுக்கும் சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும்

 தடைவிதித்துவிட்டு, புலிகளுக்கு எதிரான போர் என்று கூறிக்கொண்டு, முல்லைத்தீவு மக்கள் அனைவரின் மீதும் குண்டு மாரி பொழிந்துள்ளது சிங்கள ராணுவம். முல்லைத்தீவின் பெரும்பகுதியை சுடுகாடாக்கி, புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள புதுக்குடியிறுப்பு பகுதியில் தற்போது மூர்க்கமான இருதித்தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. உயிரிழந்தவர்கலை அப்புறப்படுத்த இயலாததோடு, காயமடைந்த மக்கள் மருத்துவ வசதியின்றி சித்திரவதை அனுபவித்து மெல்ல மெல்லச்சாகும் கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது

          ஐநா பொதுச்செயல‌ரும் மேலைநாடுகளும் சம்பிரதாயமாக போர்நிறுத்தக்கோரிக்கை வைத்துள்ள போதிலும் இதை அலட்சியப்படுத்திவிட்டு ஆணவத்தோடு போரைத்தொடர்கிறது சிங்கள இனவெறி அரசு. போருக்கு எதிராக குரல் கொடுத்து, சிங்கள அரசை அம்பலப்படுத்திய சிங்கள பத்திரிக்கையாளர்களையும், அறிவுத்துறையினரையும், ரகசிய கொலைப்படையை ஏவி கொன்றொழித்து வருகிறது ராஜபக்சே அரசு.

 

இலங்கை அரசின் இந்த ஆணவத்துக்கும் திமிருக்கும் முக்கிய காரணம், இந்திய அரசு இலங்கை அரசுக்கு தைரியமூட்டி துணையாக நிற்பது தான். மூர்க்கத்தனமான இக்கொடிய போரை நடத்திப் புலிகலைத்துடைத்தொழிப்பது; ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டாலும், எத்தனை கண்டனங்கள் எழுந்தாலும் அவற்றைப்பற்றி கவலைப்படாமல் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்துவதென்பது ராஜபக்சே அரசின் ‘கொள்கையாக’ மட்டும் இல்லை. அதுவே இந்திய அரசின் கொள்கையாக இருக்கிறது.

          போர்முடிந்தபின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்படவிருக்கும் அரசியல் பொருளாதார மறு நிர்மாணப்பணிகளில் இந்தியாவின் பங்கைப்பற்றிப்பேசுவதற்குத்தான் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச்சென்றுவந்தார் என்பது அண்மையில் அவர் விடுத்துள்ள அறிக்கையின் மூலம் நிரூபணமாகியுள்ளது. போருக்குப்பின் இலங்கையின் மீது தனது அரசியல் பொருளாதார ராணுவ மேலாதிக்கத்தை உறுதிசெய்துகொள்வது; இந்த நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள, சிங்கள அரசின் தமிழின அழிப்புபோரை தனது சொந்தப்போராகக்கருதி நடத்துவது என்பதே இந்திய அரசின் கொள்கை.

           இருப்பினும் நெடுமாறன் போன்றோர், ஈழப்பிரச்சனையில் இந்தியா தவறான நிலை எடுக்கக்காரணம் இந்திய அரசின் வெளியுறவுத்துறையைச்சேர்ந்த பார்ப்பன மற்றும் மலையாள அதிகாரிகள் தாம் என்றும், அவர்களது தவறான வழிகாட்டுதல் காரணமாகவே சிங்கள அரசை சோனியாவும் மன்மோகனும் நம்புகின்றனர் என்றும் வாதிடுகின்றனர். வேறுசிலர் தனது கணவனைக்கொன்ற புலிகளைப் பழிவாங்கவே சோனியா ராஜபக்சேவுக்கு உதவுகிறார் என்கின்றனர். இத்தகைய வாதங்கள் அனைத்துமே மையமான பிரச்சனையிலிருந்து மக்களை திசைதிருப்புவதற்கும், இந்திய மேலாதிக்கத்தின் பின்னேயுள்ள ஆளும் வர்க்க நலனை மூடிமறைப்பதற்க்குத்தான் பயன்பட்டிருக்கின்றன.

          ஈழ மக்களுக்கு தமிழகத்தில் நிலவும் ஆதரவு என்பது இன்னமும் ஒரு மனிதாபிமான அடிப்படையிலும், இன உணர்வின் அடைப்படையிலும் தான் இருக்கிறதேயன்றி, இந்திய மேலாதிக்கத்தை எதிர்ப்பது, ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உறிமையை ஆதரிப்பது என்ற நோக்கில் மக்கள் இதைப்புறிந்து கொள்ளவில்லை. ஏனெனில் ஈழப்பிரச்சினை தமிழக மக்களிடம் அரசியல் ரீதியான கொந்தளிப்பை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதில் ஆளும் வர்க்கங்களும் ஓட்டுப்பொறுக்கிக்கட்சிகளும் மிகக்கவனமாக இருக்கின்றனர்.

          காங்கிரசுடான கூட்டணியை இறுகப்பற்றிக்கொண்டு, தனது வாரிசுகளின் எதிர்காலத்தையும் அவர்களது அரசியல் அதிகாரத்தை உத்திரவாதப்படுத்திக்கொள்வதையே தனது முதல் நோக்கமாகக்கொண்டிருக்கும் கருணாநிதி, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஈழப்பிரச்சனையை தந்திரமாக நீர்த்துப்போகவைக்கிறார். யாராலும் எதுவும் செய்ய முடியாது, நம் கையில் எதுவுமே இல்லை என்பதைப்போன்றதொரு பிரச்சினையாக இதனைச் சித்தரித்துக்காட்டுகிறார். தமிழர்கள் தன் தலைமையில் ஒன்றுபடாமல் பிரிந்து இருப்பதால் தான் எதுவும் செய்ய இயலாத நிலைக்கு தான் தள்ளப்பட்டிருப்பதைப் போன்றதொரு பொய்த்தோற்றத்தையும் உருவாக்குகிறார்.

          பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதாவோ கொள்கை ரீதியாகவே ஈழத்தமிழினப்போரை ஆதரிக்கிறார். ஈழ மக்கள் போரில் கொல்லப்படுவதை வெளிப்படையாகவே ஆதரித்துப்பேசிய ஜெயலலிதா இப்போது தேர்தல் ஆதாயத்தை மனதிற்கொண்டு தந்திரமாக மவுனம் சாதிக்கிறார். ஜெயலலிதாவைப்போலவே சிபிஎம் கட்சியினரும் இப்பிரச்சனையில் கொள்கை ரீதியாகவே சிங்களப்பேரினவாத ஒடுக்குமுறையையும், அதற்கு இந்திய அரசு துணை நிற்பதையும் ஆதரிக்கின்றனர். இதனால் தமிழக மக்கள் மத்தியில்மிகவும் அம்பலப்பட்டுப்போனதன் காரணமாக இப்போது பேரணி ஆர்ப்பாட்டம் என்று நாடகமாடுகின்றனர்.

          சவடால் அடிக்கும் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் சிங்கள இனவெறிப்போருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டு அடையாள எதிர்ப்பு நாடகமாடுவதைத்தவிர வெறெதுவும் செய்யவில்லை. இவர்கள் எவரையும் ஊடகங்கள் அம்பலப்படுத்துவதும் இல்லை. இவர்கலது தந்திர மவுனம் குறித்து கேள்வியும் எழுப்புவதில்லை. பார்ப்பன ஊடகங்கள் அனைத்தும் சிங்கள இனவெறிக்கு ஆதரவாக நின்று நஞ்சை கக்குகின்றன. சிங்கள‌ அரசின் பாசிச அடக்குமுறை பற்றிய செய்திகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்துவருகின்றன.

          இத்தகைய சூழலில் வைகோ நெடுமாறன் ராமதாசு, திருமா, தா பாண்டியன், பாஜாக ஆகியோர் ஒன்று சேர்ந்து மிகவும் படாடோபமாக அறிவித்திருக்கும் “இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்” ஆபாசமான சந்தர்ப்பவாதத்தின் முழுவடிவமாகவே இருக்கிறது. வரவிருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் ஜெயலலிதா அணிக்கு தாவுவதற்க்கு தோதாக ராமதாசு தயாரித்திருக்கும் உந்து பலகையாகவே இந்த அணி அமைந்திருக்கிறது. தன்னுடைய மகனை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலகச்சொல்லி, கடைசி இரண்டே மாதங்களில் அன்புமணி கல்லா கட்டக்கூடிய தொகையை கூட தியாகம் செய்யத்தயாராக இல்லாத மருத்துவர் ஐயா கருணாநிதியை மட்டும் விமர்சிப்பதை பாமர மக்கள் கூட எள்ளி நகையாடுகின்றனர். ஏதோ அதிபயங்கர போராட்டங்களை கைவசம் வைத்திருப்ப்பதைப்போலவும், கருணாநிதிதான் அதை தடுத்துக்கொண்டிருப்பதைப்போலவும் பேசிய ராமதாசும் தா பாண்டியனும், இப்போது கருணாநிதி கூறும் வகையில் போராட்டம் நடத்தத்தயாராக இருப்பதாக அறிவிப்பதெல்லாம், இது நாடாளுமன்ற நாற்காலி பேரத்திற்காக நடத்தப்படும் நாடகம் என்பதையே நிரூபித்துக்காட்டுகின்றன.

          காங்கிரசின் காலை நக்குவதற்கென்றே யுசிபிஐ என்றொரு கட்சியை ஆரம்பித்து, ராஜீவ் காந்திக்கு கூஜா தூக்கி சிறீபெரும்புதூரில் ராஜீவ் கொல்லப்பட்ட நிகழ்வையொட்டி புலிகளுக்கு எதிராக காங்கிரசுடன் சேர்ந்து வெறிக்கூச்சல் போட்ட தா பாண்டியனுக்கு இப்போது திடீர் தமிழுணர்வு வந்து புலிவேசம் கட்டி ஆடுகிறார். மைய அரசுக்கு எதிராக வீரதீர சவடால் அடிக்கும் பாண்டியனாரின் அனைத்திந்திய கம்யூனிஸ்ட் கட்சி மைய அரசை எதிர்த்து நாடு தளுவிய அலவில் ஒரு பிரச்சாரஇயக்க‌த்தைக்கூட நடத்தவில்லை. தமிழகத்தின் மாணவர் இளைஞர்களும் வழக்குரைஞர்களும் வணிகர்களும் போராடிக்கொண்டிருக்கும் சூழலில் தனது தொழிற்சங்கங்களை இத்தகைய போராட்டங்களில் இக்கட்சி ஈடுபடுத்தவுமில்லை.

          கருணநிதியையும் காங்கிரசையும் எதிர்த்து அனல் கக்கும் இந்த பாதுகாப்பு இயக்கத்தினர், சிங்கள பாசிச அரசின் தமிழின அழிப்புப்போரை நேரடியாகவே ஆதரிக்கும் ஜெயலலிதாவுக்கு எதிராக மட்டும் ஒருவார்த்தை கூட பேசுவதில்லை. துப்பாக்கி ஏந்துவேன், ஈழத்துக்கு போவேன், இதனால் என் அரசியல் வாழ்வே முடிந்தாலும் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன் என்று நெருப்பைக் கக்குகிறார் வைகோ. கருணாநிதியை பேடி என்று துரோகி என்றும் அர்ச்சிக்கிறார். ஆனால் அம்மாவைப்பற்றி மட்டும் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. நெடுமாறன், தா பாண்டியன், ராமதாசு ஆகிய அனைவருமே அம்மா விசயத்தில் மட்டும் அர்த்தமுள்ள மவுனம் சாதிக்கிறார்கள். அதேபோல புலி ஆதரவாளர் என்று கருணாநிதையை சாடும் ஜெயலலிதா வைகோவையோ ராமதாசையோ அவ்வறு விமர்சிப்பதில்லை. இவர்களுடன் கைகோர்த்துக்கொண்டிருக்கும் திருமாவளவனோ, கருணநிதியையும் விமர்சிக்க விரும்பாமல், ஜெயலலிதாவையும் விமர்சிக்க முடியாமல் எந்த அணியில் தன்னுடைய எதிர்காலம் என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்.

          இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல் இந்தத் தமிழர் பாதுகாப்பு அணியில் இந்துவெறி பாரதிய ஜனதாவையும் செர்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்ப வாதிகள் தனது பிறப்பிலேயே தமிழ் விரோதியும், புலிப்பூச்சாண்டி, தீவிரவாதப்பூச்சாண்டி காட்டி அரசியல் நடத்துவதில் ஜெயலலிதாவின் கூட்டாளியுமான பாரதிய ஜனதாவையும் தங்கள் அணியில் சேர்த்துக்கொண்டிருப்பதின் மூலம் அந்த பார்ப்பன பாசிஸ்டுகளுக்கு தமிழக மக்கள் மத்தியில் ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தருகிறார்கள். இந்த சந்தர்ப்பவாதிகள் காங்கிரசுக்கு பதிலாக பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இலங்கையில் தலையிடும் என்பதுபோறதொரு பிரமையை மக்களிடம் உருவாக்குகிறார்கள்.

          ஆனால் வாஜ்பாயி பிரதமராக இருந்த காலத்தில் புலிகளுடைய முற்றுகையில் யாழ் கோட்டையில் சிக்கிக்கொண்ட ஏறத்தாழ 20000 சிங்கள சிப்பாய்களை மீட்கும் பொருட்டு சிங்கல அரசின் சார்பில் தான் பாஜக கூட்டணி அரசு இலங்கையில் தலையிட்டிருக்கிறது. அன்று பாரதிய ஜனதா கூட்டணி அரசில் மதிமுகவும் பாமகவும் பங்கேற்று அமைச்சர்களாகவும் அங்கம் வகித்தனர் என்பதும் நெடுமாறன் உள்ளிட்டோரின் முழு ஆதரவோடுதான் சிங்கள அரசுக்கு ஆதரவான இந்த தலையீட்டைவாஜ்பாயி அரசு நட்த்தியது என்பதும் மறுக்கவியலாத உண்மைகள்.

          அரசியல் வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தமிழர் நலன் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் அடிப்படையிலேயே கொள்கை வேறுபாடுகள் கொண்ட வலது கம்யூனிஸ்ட் கட்சிமுதல் பாரதிய ஜனதா வரை அனைவரும் ஒரே அணியில் நிற்பதாகக்கூறி தங்கள‌து அருவெறுக்கத்தக்க அயோக்கியத்தனத்தையே மாபெரும் பெருந்தனமை போலவும் தமிழர் மீதான அக்கரை போலவும் இவர்கள் சித்தரித்துக்கொள்கின்றனர். ஒருவேளை மைய அரசை பாரதிய ஜனதா கைப்பற்றக்கூடும் என்பதும், அத்தகைய ஒரு வாய்ப்புக்கிடைத்தால் கூட்டுச்சேர்ந்து பொறுக்கித்திண்ணலாம் என்பதுமே இவர்களின் திட்டம்.

          இதன்படியே இந்த இயக்கத்தில் எந்தக்காரணத்திக்கொண்டும் அரசியல் நோக்கம் இருக்கக்கூடாது; எந்த ஒரு தேசியக்கட்சியைப்பற்றியோ, மாநிலக்கட்சியைப்பற்றியோ விமர்சிக்கக்கூடாது; மைய அரசு மாநில அரசு மீது கண்டனங்களையோ விமர்சனங்களையோ கூறக்கூடாது; உருவ பொம்மை எரிப்பு, சிலைகள் அவமதிப்பு, கொடி எரிப்பு போன்றவை கூடாது எனப் பத்துக்கட்டளைகள் போட்டு இந்தச்சந்தர்ப்பவாதிகள் போராட்டம் நடத்தக் கிளம்பியுள்ளார்கள். மன்மோகன் சிங்கும், ஜெயலலிதாவும், கருணாநிதியும் சுப்பிரமணிய சாமியும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ள இக்கட்டளைப்படி அதிதீவிர போராட்டம் நடத்தப்போவதாக இவர்கள் கூறுவதைக்கேட்டு மானமுள்ள தமிழன் எவனும் பின்வாயால் கூட சிரிக்கமாட்டான்.

          மொத்தத்தில் ஈழத்தமிழ் மக்களின் பிணங்கள் மலையாய் குவிந்தாலும் காங்கிரசை கெட்டியாகப் பிடித்துக்கொள்வதன் மூலம் தனது பதவி நாற்காலியையும் தனது வாரிசுகளின் எதிர்காலத்தையும் காப்பாற்றிக்கொள்வது என்பதே கருணாநிதியின் நோக்கம். ஈழத்தமிழ் மக்களின் பிணங்களை பயன்படுத்தி நாடாளுமன்ற நாற்காலிகளை முடிந்தமட்டும் கைப்பற்றிக்கொள்வதே ராமதாசு அணியினரின் நோக்கம்.

          இத்தகைய ஓட்டுப்பொருக்கிகள் மற்றும் பிழைப்புவாதிகளின் கையில் சிக்கியதன் காரணமாக ஈழப்பிரச்சனையின் அரசியல் உள்ளடக்கம் இன்று சிதைந்து சின்னாபின்னமாக்கப்பட்டுவிட்டது. இந்திய மேலாதிக்கத்தை எதிர்த்துப்போராடுவது, ஒடுக்கப்பட்ட தேசிய இனமான ஈழத்தமிழினத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமைக்கும் குரல் கொடுத்து அதனை அங்கீகரிக்குமாறு இந்திய அரசை நிர்ப்பந்தித்துப்போராடுவது இவ்விரு மையமான ஜனநாயகக்கடமையிலிருந்து தமிழக மக்களை திசைதிருப்பியுள்ளன இந்த ஓட்டுக்கட்சிகள். இச் சமரச சந்தர்ப்பவாத ஓடுப்பொருக்கிகளையும் பிழைப்புவாதிகளையும் தமிழக மக்களிடம் இனங்காட்டி அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி முடமாக்குவதின் மூலம்தான் இந்திய மேலாதிக்க அரசுக்கும் சிங்கள இனவெறி பாசிச அரசுக்கும் எதிரான பிரச்சாரத்தையும் போராட்டத்தையும் முன்னெடுத்துச்செல்லமுடியும். ஈழத்தமிழ் மக்களின் நியாயமான சுய நிர்ணய உரிமைப்போரை வெற்றிபெறச்செய்ய முடியும். இது ஈழ விடுதலையில் அக்கரை கொண்டுள்ள புரட்சிகர ஜனநாயக சக்திகளின் முதன்மைப்பணி; நம் பணி.

புதிய ஜனநாயகம் மார்ச் 2009