Language Selection

வழமைக்கு மாறான முறையில் அல்லது இன்னுஞ் சரியாகச் சொல்வதானால், வழமையாகி வருகிற ஒரு முறையில், இன்னுமொரு பத்திரிகையாளர் கைதாகியுள்ளார். எவரையும் கைதுசெய்வதற்கான சில விதிமுறைகள் உள்ளன. அவசரகாலச் சட்டமும் அவற்றுக்கு விலக்களிக்காது.

 

எனினும், 1978இற்குப் பிறகு தொடங்கிய அராஜகம் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்துடனுங் கூடிவந்துள்ளதேயொழியக் குறையவில்லை. அரசியல் யாப்பின் துணையுடனேயே அதில் வழங்கப்பட்டுள்ள உத்தரவாதங்களை மீறக்கூடியளவுக்கு ஆட்சித் தலைவருக்கு முடிந்தது. அதை ஒழித்துக் கட்டுவதாக உறுதியளித்து ஆட்சிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்க அதன் கீழ் இயலுமான அதிகாரத் துஷ்பிரயோகங்கள் அனைத்தையும் நடைமுறைப்படுத்தினார். அந்த வரலாறு தொடர்கிறது. அது இனியொரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும் இன்னும் பல காலத்துக்கு நடக்கும் என்பதற்கான சாடைகளையே ஒவ்வொரு சில நாட்களிலும் நாங்கள் திரும்பத் திரும்பக் காண்கிறோம். கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான மிரட்டல் அதில் நீக்க இயலாத ஒரு பகுதி என்பதில் ஐயம் வேண்டாம்.

ஊடகத்துறையை சனநாயக விரோத ஆட்சிகள் சந்தேகத்துடனேயே நோக்குகின்றன. ஊடகத்துறை மீதான முழுமையான கட்டுப்பாட்டை அவை விரும்புகின்றன. சனநாயகப் பழக்கங்கள் சிலவற்றைக் கைவிடுவது சிலருக்குக் கடினம். எனவேதான் ஊடகத்துறையில் உள்ள சிலர் தொந்தரவில் மாட்டிக்கொள்கிறார்கள். இவ்விடயத்தில் ஊடகத்துறையினர் தமது அரசியல் வேறுபாடுகட்கு அப்பாற்பட்டுச் செயற்பட வேண்டிய தேவை உள்ளது. எனினும், அவ்வாறு எல்லா வேளைகளிலும் நடப்பதில்லை. நமது ஊடகத்துறை பல அடிப்படைகளிற் பிளவுபட்டுக் கிடக்கிறது. அரசாங்கத்துக்கு விசுவாசமாக மட்டுமன்றி அதிகாரபீடத்திலுள்ளவர்களுக்கு விசுவாசமாகவும் இருக்கப் பயிற்றப்பட்டவர்கள், தமக்கு ஆபத்தில்லாத அளவில் ஒரு ஊடகவியலாளர்கள் பற்றிக் கவலைப்படாதவர்களாகவே இருந்து வந்தனர். அந்த விதமான பாதுகாப்புக்கூட உறுதியற்றுப் போனநிலையிலும் அவர்களிற் பலர் திருந்தவில்லை. அது மட்டுமன்றிக் குறுகிய தேசியவாத சிந்தனையும் பலரது நடத்தையைக் கடுமையாகப் பாதிக்கிறது. இது, நீண்ட காலத்தில் மட்டுமல்லாது, குறுகிய காலத்திலும் ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் கேடானது.

"சுடரொளி" ஆசிரியரின் 'கைது' நடைபெற்ற விதம் முறைகேடானது என்பதைச் சுட்டிக்காட்டக்கூடச் சில ஏடுகள் தயக்கங்காட்டியுள்ளன. அது முறைகேடானது என்று சுட்டிக்காட்டி ஞாயிற்றுக்கிழமை "ஐலன்ட்" ஏட்டில் எழுதியுள்ள ஒரு பத்தி எழுத்தாளர் துணிவாக எழுதியுள்ளார். எனினும் இவ்விதமான முறைகேடான கைதுகளும் விசாரணையின்றி அவசரகாலச் சட்டத்தின் கீழும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழும் எவரையுந் தடுத்து வைப்பதையும் கண்டித்துள்ளார். அவரது பத்தியில் ஒரு இடத்தில் இந்தவிதமான நடத்தைப் பிசகுகள் விடுதலைப் புலிகளின் "பேரினவாத சிங்கள அரசு" என்ற பிரசாரத்துக்கு உதவும் என்று கூறி அவற்றை நிறுத்த வேண்டும் என்று வாதித்துள்ளார். இந்த வாதத்தின் நோக்கம் அப்படிச் சொன்னால் அது அதிகமானவர்களால் ஏற்கப்படும் என்பதாக இருக்கலாம். அது முக்கியமான சில வழிகளில் தவறான ஒரு அணுகுமுறையாகும்.

"சிங்களப் பேரினவாத அரசு" என்பது தவறான கருத்து என்பதைப் பத்தி எழுத்தாளர் உணர்த்த முயலுகிறார். அதன்மூலம், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பேரினவாத நோக்கமற்றவை என்று மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஒரு விடயம் தவறானது என்பதற்காகவே தவிர்க்கப்படவேண்டும் என்பதற்கு மாறாக அது "எதிரிக்கு' நன்மையானது என்பதற்காகத் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது கெடுதலான ஒரு அணுகுமுறை. சிங்கள ஊடகவியலாளர்கள் சிலர் சிங்களப் புலிகள் என்று இரண்டு ஆண்டுகட்கும் மேலாகத் தடுப்புக் காவலிலும் சிறையிலும் இருந்து வந்துள்ளனர். அவர்களிற் சிலரும் மலையகத்தின் தமிழ் இடதுசாரிகளிற் சிலரும் அண்மையிலேயே நிபந்தனை இல்லாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களது கைது "சிங்களப் பேரினவாத அரசு" என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்துமா? எனவே பிரச்சினை வெறுமனே பேரினவாத அரசு பற்றியதல்ல.

சட்டவிதிகட்குப் புறம்பான முறையில் ஒரு ஆட்கடத்தல் போல ஒருவர் கைதாவதும் கைது செவதற்கான பிடியாணை இல்லாமலே அது செயப்படுவதும் நாட்டில் சட்டத்தின் ஆட்சி இல்லை என்று மட்டுஞ் சொல்லவில்லை. அவ்விதமாக நடப்பதற்கு எதிராக எவரும் தமது சுட்டு விரலைத் தன்னும் அசைக்க இயலாது என்றும் அறிவிக்கிறது. முழுச் சமுதாயத்திற்கும் எதிரான ஒரு சவாலாகவும் மிரட்டலாகவும் அது அமைகிறது. எனவேதான் அதைத் தமிழருக்கு எதிரானது என்று பார்ப்பதை விடச் சனநாயகத்திற்கும் நாட்டின் சட்ட ஒழுங்குவிதிகட்கும் எதிரானது என்று பார்ப்பது முக்கியமானது.

இலங்கையின் பிரதான பிரச்சினை தேசிய இனப்பிரச்சினை என்பது பற்றி எனக்கு ஐயமில்லை. ஆனாலும் தேசியவாதம் என்பது தேசிய இனங்களின் பெரும்பான்மையினரது நலனை முன்னிறுத்திச் செயற்படுவதில்லை. அது "ஒடுக்குகிற" சமூகத்தில் முக்கியமாகவும் "ஒடுக்கப்படுகிற" சமூகத்தில் அதிலுங்குறைவாகவும் ஆதிக்கத்திலுள்ள ஒரு சிறுபான்மையின் நலனையே இன்றுவரை வலியுறுத்தி வந்துள்ளது. இது கொலனி ஆதிக்கம், இனவாதம், நிறவாதம், பிரதேசவாதம் போன்ற அனைத்திற்கும் பொருந்தும். எனினும் தேசிய இனப்பிரச்சினையும் பிற அடையாளப் பிரச்சினைகளும் சமூகங்கட்கு இடையிலான பகைமையாகக் கற்பிக்கப்பட்ட பிறகு, அச் சமூகஞ் சார்ந்தோர் தமது நலன்களையும் அவற்றுக்குத் தடையாக உள்ளவற்றையும் அந்தந்த முரண்பாடுகளின் சார்பாகவே காணத் தலைப்படுகின்றனர். எதெதெல்லாம் தம்வசமானால், எதெதெல்லாம் பிற சமூகத்தினருக்கு மறுக்கப்பட்டால் தாம் உயர முடியும் என்று கற்பிக்கப்பட்டதோ, அதெதெல்லாம் ஈடேறிய பின்னரும் ஆதிக்கச் சமூகத்தின் பெரும்பான்மையினர் நன்மை காண்பதில்லை. அவ்வாறே, எவையெவையெல்லாவற்றுக்காகவும் போராடினால் ஒழிய ஒரு சமூகம் அழியும் என்று அச்சமூட்டப்பட்டாலும் எத்தகைய வெற்றியும் தோல்வியும் அச்சமூகத்தின் சிறிய ஒரு பகுதியினருக்கே நன்மை தருகிறது.

இனங்களிடையிலான முரண்பாடு போராக்கப்படுகிற போது எல்லாரும் நஷ்டப்படுகின்றனர் இரண்டு தரப்பிலும் உள்ள ஒரு சிறு பகுதியினர் தவிர. எனினும், போரிடுகிற சமூகங்களின் ஏகப் பெரும்பாலோர் தாம் இழந்ததே அதிகம் என்று உணருவதில்லை. ஏனெனில் "எதிரியின்" இழப்புகளின் பெறுமதி தமது இழப்புகளை விட எப்போதுமே கூடிய முக்கியத்துவம் பெறுகின்றது. இந்தவிதமாக ஒவ்வொரு சமூகமும் தான் முற்றுகையிடப்பட்டுள்ளதாக உணருகிற போது, தனது பாதுகாப்புக்குப் போர் அவசியமானது என்றும் எதிரி ஒடுக்கப்படவோ இல்லாதொழிக்கப்படவோ வேண்டும் என்றும் எண்ணுமாறு தூண்டப்படுவது இயல்பானது. இந்த முற்றுகை மனப்பான்மை முதலில் தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையுமே தனக்கு மிரட்டலாக அடையாளங்காண்கிறது. பிறகு ஒரு முழுச் சமூகமும் சந்தேகத்திற்குட்படுகிறது. இதுதான் இன்று மேற்குலகில் முஸ்லிம்கள் தொடர்பாக உருவாகி வளர்ந்துள்ள சிந்தனைப்போக்கு. இங்கே அது என்ன வடிவை எடுக்கும் என நான் விவரிக்க வேண்டிய தேவை இல்லை. அதன் விளைவுகள் எல்லாருக்கும் கேடானவை. அனைத்தினும் முக்கியமாக ஒரு அதிகார வர்க்கம் சனநாயக உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அந்த முற்றுகை மனப்பான்மையின் அடிப்படையிலேயே மேலும் மேலும் மறுத்துஞ் சிதைத்துங் கொண்டு செல்ல இயலும்.

இந்த உண்மை இன்னமும் ஊடகத்துறையில் உள்ளவர்கட்குச் சரிவர விளங்குவதாக நான் நம்பவில்லை. எவரும் தமக்கு உடன்பாடான கருத்துகளைக் கொண்டிருக்கிறபோது அதற்கான உரிமைக்காகக் குரல் கொடுப்பது சனநாயகத்தின் மீதான அக்கறை காரணமாக என்று கூறஇயலாது. நமக்கு உடன்பாடற்ற கருத்துகளைக் கூறுகிற உரிமைக்காகப் பேசுகிற போதே, நாம் சனநாயகத்திற்காகவுங் கருத்துச் சுதந்திரத்திற்காகவும் குரல் கொடுக்கிறோம். தமது எதிரிகள் அநீதியாகத் தண்டிக்கப்படுகிற போது அந்த அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கிறபோதே நாம் நீதியைச் சார்ந்து நிற்கிறோம்.

ஊடகத்துறையில் அந்தவிதமான நெஞ்சுரம் இன்னமும் போதியளவில் வளரவில்லை. இன்னுஞ் சரியாகச் சொன்னால், 1978இற்குப் பிறகு ஏற்பட்ட சரிவினின்று அறஞ்சார்ந்த ஊடகப் பார்வை இன்னமும் மீள இயலாமல் தவிக்கிறது.

தங்களுக்கு உடன்பாடற்ற கருத்துகட்கு ஆதரவான தகவல்களைத் திரிக்கவும் மூடிமறைக்கவும் பல ஊடகவியலாளர்கள் தயங்குவதில்லை. பொய் என்று அறிந்து கொண்டே சில தகவல்களை முக்கியத்துவங் கொடுத்து வெளியிடக் கூசுவதில்லை. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலேயே விடயங்களை வெளியிடுவதையும் வெளியிடாததையும் காணுகிறோம்.

எனவே ஊடகத்துறை ஊடக அறங்கள் பற்றிக் கூடிய அக்கறை காட்டுவதன் மூலமே தன்னையும் சனநாயகத்தையும் காப்பாற்ற உதவ முடியும்.