Language Selection

உலகின் எந்தவொரு அரசாங்கமும் தமது ஒடுக்குமுறை நிகழ்ச்சி நிரலை மக்களுக்கு எதிரான அடக்குமுறை நடவடிக்கை என ஒப்புக்கொள்வதில்லை. தமது செயற்பாட்டை நியாயப்படுத்த தீவிரவாதம், பயங்கரவாதம். பிரிவினைவாதம் ஆட்சிக்கு எதிரான சதி

 முயற்சி போன்ற பெயர்களைப் பயன்படுத்திக் கொள்வர் . அவற்றைப் பரப்புரை செய்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பிக் கொள்ள பலமான ஊடக வலையமைப்பையும் கைகளில் வைத்துக்கொள்வார்கள். அதன் மூலம் அரசாங்க அடக்குமுறைகளுக்குப் பின்னால் காணப்படும் பலவேறு உண்மைகளும் யதார்த்தங்களும் மறைத்துக் கொள்ளப்படும்.ஒவ்வொரு பிரச்சினைக்குப் பின்னாலும் சமூக முரண்பாடுகளும் ஒடுக்குமுறைகளும் இருந்து வரவே செய்கின்றன. அவற்றின் காரணமாகவே அரசியல் சமூகப் பிரச்சினைகள் தாழ் நிலையில் இருந்து உயர் நிலைக்கு வளர்ச்சி பெறுகின்றன. அந்த வளர்ச்சியின் உயர்ந்த கட்டத்திலேயே போராட்டம், யுத்தம் என மாற்றம் பெறுகின்றன. இத்தகைய நெருக்கடிச் சூழலில் தமது நாட்டின் சொந்த மக்களை அடக்கி ஒடுக்குவதில் எந்தவொரு அரசாங்கமும் பின்நிற்பதில்லை. ஏனெனில், தமது ஆட்சி அதிகார இருப்பின் தேவையானது பரந்துபட்ட மக்களின் தேவைகள் அபிலாசைகளுக்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் சமூக அமைப்பில் மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்டோரின் சொத்து சுரண்டல் சுகபோக வாழ்வுக்கு அரணாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதையே அரசாங்கங்கள் முழு முதல் கடமையாகக் கொண்டுள்ளன. இவையே ஒட்டுமொத்த அரசியலின் அடிப்படையாகவும் இருந்து வருகின்றன.இத்தகைய நிலைமைகளை அனுபவ வாயிலாகக் கண்டறிவதற்கு உலகின் வேறு நாட்டுக்குச் செல்ல வேண்டியதில்லை. நமது நாட்டின் கடந்த கால , நிகழ்கால அனுபவங்கள் போதுமானவையாகும். கடந்த அறுபது வருடகால பாராளுமன்ற ஆட்சி அதிகார அமைப்பின் கீழ் அதிகாரத்திற்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் ஏகப் பெரும்பான்மையான மக்களின் நலன்கள், தேவைகள், அபிலாசைகள், எதிர்பார்ப்புகள் போன்றவற்றிற்கு விரோதமாகவே இருந்து வந்துள்ளன. அவற்றின் காரணமாக உருவாகி வளர்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்குப் பதிலாக அவற்றை வளரச் செய்வதற்கே இடம் வைத்து வந்துள்ளன. அவை சார்பாக மக்கள் குரலெழுப்பி போராட முன்வந்த பேதெல்லாம் அடக்குமுறை இயந்திரம் முழு வேகத்துடன் ஏவப்பட்டது. இத்தகைய நிலைமை தெற்கிலும் மேற்கிலும் வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெற்றன.வடக்கில் வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு கடலோடு அருகமைந்த சிறிய நிலப்பரப்பிலே நடைபெற்று வரும் யுத்தம் மிகக் கொடூரமானதாகும். ஏற்கனவே சிங்கள இளைஞர்கள் மேற்கொண்ட இரண்டு ஆயுதக் கிளர்ச்சிகளின் போதும் பின்வந்த இயற்கை அழிவான கடல்கோளின் போதும் அனுபவித்தவைகளை விடக் கொடுமையானவற்றையே இன்று புதுக்குடியிருப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அனுபவித்து வருகிறார்கள். சகல திசைகளாலும் படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட அப் பிரதேசத்தில் முற்றுகைத் தாக்குதல்களுக்கு மத்தியில் வாழ்வா, சாவா என்ற நிலையிலேயே மக்கள் அன்றாடம் உயிரிழப்புப்பொழுதுகளைக் கழித்து வருகின்றனர்.சுமார் முப்பத்தையாயிரம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வந்துள்ளனர். அவர்கள் கூட இலகுவான வழிகளில் வரவில்லை. நெருப்பாறு கடந்தே வந்துள்ளனர்.அப்படி வந்தவர்கள் கூட நிம்மதிப் பெருமூச்சுடன் இருக்கவில்லை. தமது உறவுகளையும் உற்றாரையும் தாக்குதல்களுக்குப் பலிகொடுத்துவிட்டும் எஞ்சியிருப்போரைப் பிரிந்துமே வந்திருக்கிறார்கள்.பயங்கரவாதத்தைப் பூண்டோடு ஒழிப்பது என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த யுத்தத்தின் மூலகாரணம், இன முரண்பாட்டுப் பிரச்சினையேயாகும். தேசிய இனப் பிரச்சினையாக வளர்ச்சி கண்ட வரலாற்றுப் போக்கில்அதற்குரிய அரசியல் தீர்வு என்றுமே காணப்பட்டதில்லை. தீர்வுக்கான முயற்சிகள் அவ்வப்போது முன்னெடுக்கப்பட்ட போதிலும் பேரினவாத சக்திகளின் தீவிர தலையீட்டாலும் தீர்வுகள் எனப்பட்டவற்றின் போதாமைகள் காரணமாகவும் எல்லாம் முடிந்த கதைகளாகிக் கொண்டன. இதன் தொடர்ச்சி தான் இன்றும் அரசியல் தீர்வு விடயத்தில் முன்னையவைகளை விட மும்முரம் காட்டி நிற்கின்றன. வெறும் ஒப்பிற்கு அரசியல் தீர்வு பற்றிப் பேசப்படுகிறதே தவிர, அரசின் இலக்கு அதுவல்ல.இத்தகைய போக்கின் உச்சத்தையே இன்று புதுக்குடியிருப்பில் காண முடிகின்றது. அரசாங்கம் அங்கே சிக்குண்டுள்ள மக்கள் மீது கவலை கொண்டுள்ளமை போன்று ஒரு காட்சியினைக் காட்டி வருகிறது. அதற்குக் காரணம், இந்தியாவிலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் எழுந்துள்ள வன்னி மக்களுக்கான அனுதாப நிலையேயாகும். முல்லைத்தீவுக்கு வடக்கே தாக்குதலற்ற பிரதேசத்தைப் பிரகடனப்படுத்தி அதன் ஊடாக மக்களின் வெளியேற்றத்தை அரசாங்கம் எதிர்பார்த்து நிற்கிறது. ஏற்கனவே காயப்பட்ட நோயாளர்கள், பெண்கள், வயோதிபர்கள் இப்பகுதியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் வெளியே கொண்டு வரப்பட்டுள்ளனர். அத்தகையோர் அனுபவிக்கும் துயரங்கள் விபரிக்க முடியாதவைகளாகும். ஏன்தான் உயிரோடு வந்தோம் என்று வாய்விட்டுக் கதறி அழும் நிலைக்குப் பலர் உள்ளாகி இருக்கிறார்கள். அங்கு கட்டாயத்தடுப்பு என்றால் இங்கு திறந்த வெளிச்சிறை வாழ்வுதான் . அத்துடன் கையேந்தி நிற்கும் அவல வாழ்வு. ""யாரோடு நோவோம் யார்க்கெடுத்துரைப்போம்' என்ற விரக்தி நிலையில் தான் வன்னியில் இருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்த மக்கள் கண்ணீர் கதைகளுடன் இருந்து வருகின்றனர்.மக்களின் இழப்பு அதிகரிக்க அதிகரிக்க அதுவே தமக்குரிய பலம் என புலிகள் இயக்கம் நம்புவதாகவும் கூறப்படுகிறது. தமது தாக்குதல் வீச்சின் எல்லைகள் சுருக்கமடைந்தநிலையில், தற்காப்பிற்கும் இருப்பிற்கும் உரிய உத்தியாக யுத்த நிறுத்தம் பேச்சுவார்த்தைக்கான கோரிக்கையை அண்மையில் புலிகள் இயக்கம் வெளியிட்டது. அதனை எவ்வித காலதாமதமும் இன்றி அரசாங்கம் நிராகரித்துக் கொண்டதுடன், புலிகள் இயக்கத்தைச் சரணடையுமாறு கூறி பதில் விடுத்துள்ளது. எப்படியும் இன்னும் சில நாட்களில் புலிகளையும் அவர்களது பயங்கரவாதத்தையும் அழித்து இறுதி வெற்றி இலக்கை அடைந்து விடப்போவதாகவே ஜனாதிபதி முதல் இராணுவத்தளபதி வரை சூளுரைத்து வருகின்றனர்.இவ்வாறு அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கும் புலிகள் இயக்கத்தின் இருப்பிற்குமான இன்றைய புதுக்குடியிருப்பு யுத்த களத்திலே மக்கள் உச்சநிலை அவலங்களிடையே அகப்பட்டு நிற்பது தான் நெஞ்சை உருக்குவதாக உள்ளது. இம்மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இனமும் ஒரு இருண்ட அரசியல் பாலைவனத்தில் திக்குத் திசை தெரியாது தவித்து நிற்க விடப்பட்டுள்ளனர். இதற்கான பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்கள்? எவ்வாறு பொறுப்புக் கூறப் போகிறார்கள்? இவையாவற்றுக்கும் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் மட்டும் பொறுப்புதாரிகள் ஆகிவிட முடியாது. அவர்கள் பெரும்பகுதிப் பிரச்சினைகளுக்கு காரணமாகிய போதிலும் தமிழ்த் தேசிய இனத்தை வழி நடத்தி அழைத்துச் சென்ற அனைத்துத் தலைமைகளும் இதற்குப் பொறுப்புக் கூறியே ஆக வேண்டும். இவை அரசியல் களத்தில் ஆழ்ந்து சிந்திக்கப்படவும் வேண்டும். சுமார் முக்கால் நூற்றாண்டு கால இலங்கையின் அரசியல் வரலாற்றின் சகல பக்கங்களும் தெளிவாகப் படிப்பிக்கப்பட வேண்டும். அதில் தமிழ்த் தேசியவாதத் தலைமைகளின் சாதக, பாதக நிலைப்பாடுகளின் தொடர்ச்சி உரியவாறு அலசி ஆராயப்படல் வேண்டும்.காலத்திற்குக் காலம் பேரினவாத ஒடுக்குமுறையாளர்கள் எடுத்து வந்த இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் அதற்கு எதிர் வினையாக முன்னெடுக்கப்பட்டு வந்த தமிழ்த் தலைமைகளின் கொள்கை நிலைப் போராட்ட வழிமுறைகள் பற்றியும் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டும். நாட்டின் பொருளாதார, அரசியல், புவியியல், வரலாற்றுச் சூழலின் வளர்ச்சிகளை உரியவாறு அடையாளம் கண்டு நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்பது தீர்க்கமான முறையில் தீர்மானித்திருக்கவேண்டும். அப்படியான ஒருகொள்கை முன்னெடுக்கப்பட்டிருந்தால் எதிரிகள் தனிமைப்படுத்தப்படவும் நேசசக்திகள் தமிழ் மக்கள் பக்கமும் இருந்திருக்கும் வாய்ப்புகள் அதிகரித்திருக்கும். அதன் விளைவு வெவ்வேறு வழிகளில் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளுக்கு பலம் சேர்த்திருக்க முடியும்.உள்நாட்டு அணுகுமுறைகளில் இழைக்கப்பட்ட தவறுகள் மட்டுமன்றி, இந்திய பிராந்திய மேலாதிக்கத்தையும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களையும் நம்பி ஏமாந்து நடுத்தெருவுக்கு வந்துள்ள அவலத்தையே இன்று தமிழ்த்தேசியவாதத் தலைமைகள் எதிர்கொண்டு நிற்கின்றன. இத்தகைய அரசியல் அவலம் தொடர்வதால் ஒடுக்கப்படும் தமிழ்த்தேசிய இனத்திற்கு விடிவு கிடைத்துவிடமாட்டாது. அரசாங்கத்தின் ஆட்சி அதிகாரத்தின் அதன் எதிர்காலம் நிலைப்பிற்கும் ஒட்டுமொத்தத் தமிழ்த்தேசிய இனமும் பலியாக்கப்படக்கூடாது. அவ்வாறே புலிகள் இயக்கத்தின் இருப்பிற்கும் நிலைப்பாட்டுக்கும் 2 இலட்சம் மக்கள் பாதுகாப்பு வேலியாக்கப்பட்டு அழிவுகளுக்கு உள்ளாக்கப்படக்கூடாது. அம்மக்கள் பாதுகாப்பாக புதுக்குடியிருப்புப் பிரதேசத்திலிருந்து வெளியே கொண்டுவரப்பட்டு சுதந்திரமாக வாழவிடப்படவேண்டும்.அதுவே முதற்பணியாக இன்று காணப்படுகின்றது.