Fri07032020

Last update01:00:51 pm

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

புலிகள் ஆயுதத்தை கீழே வைத்தல் என்பது துரோகமே

  • PDF

எம் மக்கள் போராட்டம் தவறான போராட்டமாகி, பாரிய மக்கள் அழிவை ஏற்படுத்தும் போராட்டமாகி, குறுகிய வட்டத்துக்குள் குறுகிய நலன்களுடன் நடந்த புலிப் போராட்டம் இன்று சிதைகின்றது. இது தன் மீட்சிக்கான எந்த வழியுமின்றி, ஏகாதிபத்தியம் வரை இரந்து வேண்டுகின்றது. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, அது எதையும் செய்யத் தயாரான நிலையில் உள்ளது. வேறுவழியின்றி தவிக்கின்றது. தவித்த முயலை அடித்துண்ண இந்தியா முதல் ஏகாதிபத்தியம் வரை வலை வீசுகின்றது. அதில் சிக்கி விடுவார்களா என்ற கேள்வி, எம்முன் எழுகின்றது.

இந்தப் புலிப் போராட்டம் இனியும் தொடரக்கூடாது என்பதும், இதனுடன் முடியவேண்டும் என்பதையுமே பலர் விரும்புகின்றனர். ஏனெனில் இத்துடன் ஒரு தவறான போராட்டத்தினால் ஏற்படும் அழிவு முற்றுப் பெறவேண்டும். தொடர்ந்தால் அழிவைத் தவிர, வேறு எதையும் புலிகளால் எம் மக்களுக்கு தரமுடியாது. நாளை அவர்கள் இருப்பதால், இன்னும் சில பத்தாயிரம் மக்களின் மரணத்தின் பின் மீண்டும் அழிவதா அல்லது இன்றே அழிவதா  என்பதே இதில் உள்ள அடிப்படையான கேள்வி. அவர்கள் தொடர்ந்து இருப்பதாயின், தம் தவறுகளை ஏற்றுக்கொண்டு, தம்மைத்தாம் திருத்திக்கொள்ள முனைய வேண்டும். இதை அவர்கள் செய்யாத வரை, இந்தப் புலிப் போராட்டம் முடிவுக்கு வருவது அவசியமானது.

 

ஆனால் இது தன்னிடமுள்ள ஆயுதத்தைக் கையளித்தல்ல. ஒரு சரணடைவாகவல்ல. அப்படிச் செய்தால், அதுவே துரோகம். உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம், ஒரு தவறான போராட்டத்தில் ஏன், எது துரோகம் என்று?

 

நடைபெற்ற புலிப் போராட்டம், பல பத்தாயிரம் மக்களை பலிவாங்கியுள்ளது. இதையே போராட்டம் என்று நம்பி சில பத்தாயிரம் இளைஞர்கள் தியாகம் செய்துள்ளனர். தவறாக வழிநடத்திய போராட்டம் ஏற்படுத்திய அழிவுகள், இழப்புக்கள் ஊடாக, இதைத்தான் போராட்டம் என்று நம்பும் கண்ணோட்டம் செல்வாக்கு செலுத்துகின்றது.

 

இந்த நிலையில் ஆயுதத்தைக் கையளித்தல், சரணடைவு, திணிக்கப்படும் தீர்வை ஏற்றல், இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் மந்தைகளாக எம் சமூகம் உள்ளது. ஆயுதத்தைக் கையளித்தல், சரணைடைவு, திணிக்கப்படும் தீர்வை ஏற்றலை, ஒரு போராட்டமாக ஏற்றுக்கொண்டு, போராட்டத்தில் அதன் நீட்சியாக விளங்கும் துரோகம் நியாயப்படுத்தப்படும். துரோக மரபை உணர்வாக கொள்ளும் அபாயத்தை, இது ஏற்படுத்தும்;. நாம் கோரிய ஜனநாயகம், இன்று இலங்கை அரசுடன் கூடிய துரோகமாகியுள்ளது. இது போல் தேசியமும் துரோகமாக நியாயப்படுத்துவதை மன்னிக்கமுடியாது.

 

இதற்கு பதில், மக்களை விடுவித்துவிட்டு போராடி மடியுங்கள். இதன் அர்த்தம், உங்களை நீங்கள் சுயவிமர்சனம் செய்ய முனையுங்கள். முற்றுகையை உடையுங்கள். இதன் அர்த்தம் சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு, உங்களுடைய முந்தைய பிரதேசத்துக்குள் மீளச் செல்லுங்கள். அங்கு சுற்றிவளைப்பும், முன்கூட்டியே தெரிந்த இலக்குகளும் இருக்காது. நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கி நிற்காது, இராணுவத்தை அலைக்கழித்து சிதறடியுங்கள். புலிகள் முற்றுகையை உடைத்து வெளியேறினால், இது பற்றிய கருத்தை நாம் தொடரலாம். இங்கு சுயவிமர்சனத்துடன் கூடிய, கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தல் முன் நிபந்தனையானது.

 

இதைத் தவிர போராடுவதற்கு வேறு மார்க்கம் கிடையாது. சுற்றிவளைப்பில் சிக்கி மரணிப்பதை விட, கூட்டாக தற்கொலை செய்வதை விட, துரோகமிழைத்து சரணடைவதை விட, இது தான், இதில் இருந்து உடனடியாக மீளவுள்ள ஒரே வழி.      

    

மக்களை விடுவித்தல் என்பதும், அதையொட்டிய எமது முந்;தைய கோசத்தின் சாரத்தையும் இன்று ஏற்பதும், காலந்கடந்த ஒன்று. இன்று இது சரணடைவு நிபந்தனைக்கு உட்பட்டது. அன்று இதை வைத்திருந்தால், கவுரமாக இதிலிருந்து வெளிவரும் சந்தர்ப்பத்தை உருவாக்கியிருக்கும். இன்று வெளியாகியுள்ள அறிக்கைகளின் படி,

 

1.'இலங்கையில் போர் நடைபெறும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் வெளியேற அனுமதிக்க வேண்டும் என்ற உலக நாடுகளின் கோரிக்கையை ஆய்வு செய்வதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்."

 

2.'தமிழ் மக்கள் வெளியேறுவதை அனைத்துலக அமைப்புக்கள் கண்காணிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் இதில் அடங்கும்" 'அப்பாவி மக்களை வெளியேற்றும்போது பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளின் புனிதத் தன்மையை சிறிலங்கா அரசு, விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும்."

 

என்ற அறிக்கையின் சாரமே, நாம் முன்பு கோசமாக முன்னிறுத்தியது. நாம் வைத்தது  

 

1.இலங்கை அரசே! யுத்தத்தை நிறுத்து!

2.புலிகளே! மக்களை விடுவி!

3.சர்வதேச சமூகமே! மக்களை பொறுப்பெடு!

4.புலிகளே! மக்களை விடுவியுங்கள்! நீங்கள் உங்கள் வழியில் போராடி மீளுங்கள்!

 

என்பவை உள்ளடங்கியது. இதை புலிகள் இன்ற ஏற்பது, காலம் பிந்திய ஒருநிலை. இதனால், யுத்தத்தை நிறுத்தாது அல்லது தற்காலிமான நிலைக்குள் இவை நிறைவேறியுள்ளது.

 

தவறான காலத்தில், சர்வதேச நெருக்கடிக்குள் இந்த நிலைக்குள் புலிகள் வந்தது என்பது, தவறான கோசத்தினதும், அதன் மூலமாக முன்னெடுத்த போராட்டத்தின் ஒரு விளைவாகும். தமக்குத்தாமே விலங்கை போட்டனர்.

 

இதனால் அடுத்த தவறான சரணடைவு அல்லது மொத்தமாகவே தற்கொலை தாக்குதலில்; அழிதல் அல்லது இந்த முற்றுகைக்குள் மரணித்தல் என்பதற்கு பதில், இந்த முற்றுகையை உடைத்து இராணுவத்தின் பின்னால் சுதந்திரமாக முதலில் வெளிவாருங்கள். எதிர்கால தலைமுறைக்கு உங்கள் தவறுகளை, நீங்களாகவே இனம் காட்டுங்கள். உங்களின் தவறை உணர்த்தி, உங்கள் மதிப்பை உயர்த்துங்கள். அதில் இருந்து மீண்டும், மக்களுக்காக போராட முனையுங்கள்.

 

பி.இரயாகரன்
25.02.2009
 

Last Updated on Wednesday, 25 February 2009 09:13

சமூகவியலாளர்கள்

< February 2009 >
Mo Tu We Th Fr Sa Su
            1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 26 27 28  

AllVideos Reloaded

புதிய ஜனநாயகம் :- புதியவை