08112022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ஈ.பி.டி.பிக்கு மனித முகம் உண்டா?!

இல்லை. மாறாக அது மகிந்த சிந்தனையிலான நவீன பாசிசம். புலியின் பாசிசத்தைச் சொல்லி, மகிந்தாவின் வாலாக ஈ.பி.டி.பியின் பாசிசம் ஆட்டம் போடுகின்றது. இதுவோ மற்றொரு புலியிசம் தான். புலி அரசியலில் இருந்து, எந்த வேறுபாடும் இதற்கு கிடையாது. இதற்கு அப்பால் புலி எப்படி தன் பாசிசத்தை நிறுவியதோ, அதையே தான் சிங்கள பேரினவாத துணையுடன் ஈ.பி.டி.பியும் செய்கின்றது.

இதற்கு வெளியில் அது மக்களைச் சார்ந்து நிற்கும் சுயாதீனமான இயக்கமல்ல. 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி சென்ற டக்ளஸ் தேவானந்தா"வின் கூலிக்குழுவோ, ஒரு பாசிச சாக்கடை.

 

புலிகளின் பாசிசத்தின் முன் ஈ.பி.டி.பி நிற்க முடியாது, பேரினவாத பாசிச சேற்றில் புதைந்தவர்கள். அதற்கு முன்னம் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆக இருந்தபோது, இந்தியாவின் கைக்கூலி அமைப்பாகவே இந்தியாவால் வளர்க்கப்பட்டவர்கள். இப்படி ஈழதேச விடுதலை என்ற பெயரில், கைக்கூலி அமைப்பாகத் தான் அவர்களின் வரலாறு அறியக்கிடக்கின்றது. இவர்கள் புலிக்கு மாற்று, மக்கள் சேவை என்ற கூறிவருவது எல்லாம், 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி"யது என்று கூறுவது, தமது இந்தத் கைக்கூலித்தனத்தைத் தான்.

  

அண்மையில் நாவலன் எழுதிய 'மனிதப் பிணங்களின் கணித ஒப்பீட்டியல்" என்ற கட்டுரைக்கு, அரசியல் ரீதியாக பதிலளிக்க முடியாது போன ஈ.பி.டி.பியின் மகிந்த சிந்தனை, நாவலன் மீதான தனிப்புட்ட பல குற்றசாட்டுகளுடன் அதற்கு பதிலளித்தது. 'வரட்டுச்சித்தாந்த வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலும்! இதற்கு சபா நாவலன் ஒரு குறியீடு!…." என்று, தாம் மக்களுக்கு எதிராக இழைத்த தமது துரோகத்தை மூடிமறைக்க, இப்படி தலைப்பிட்டு கூறுகின்றனர். 

 

'மகிந்த சிந்தனையை மாவோ சிந்தனைக்குப் பதிலாக ஏற்றுக்கொண்டு அதற்காகப் பிரச்சாரம்" செய்வதாக டக்கிளசை நாவலன் கூறுவது என்னவோ புதிர்தான். டக்ளஸ் என்றும் மாவோ சிந்தனை கொணடவர் அல்ல. மாறாக சமூக ஏகாதிபத்தியமாக இருந்ததும், மாவோவுக்கு எதிராகவும் இருந்த, சோவியத்தினது ஏஜண்டுகளாக இருக்க விரும்பியதால், அவர்கள்  இந்தியாவின் கைக்கூலியாகவே எப்போதும் இருந்தனர். மற்றும்படி நாவலன் ஈ.பி.டி.பி நோக்கி எழுப்பிய கேள்வி, விவாதம் நியாயமானது, துல்லியமானது.

 

ஆனால் 'மாண்புமிகு" 'மக்கள் சேவையாளனால்" 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்திய"வரால் இதற்கு பதிலளிக்க முடிவதில்லை. இங்கு மாண்பு என்பது மக்களுக்கு எதிரான துரோகம், மக்கள் சேவை என்பது மக்களுக்கு எதிரான விபச்சாரம். சுதந்திரப்போராட்டம் என்பது மாமா வேலை. இப்படிப்பட்டவர்கள் புலிப்பாணியில், தனிநபரை நோக்கிய ஒன்றாகவே பதிலளிக்க முடிகின்றது. அதில் சில அரசியல் சொல்லாடல்கள்.

 

'வரட்டுச்சித்தாந்த வாதிகளும் சந்தர்ப்பவாத அரசியலும்!" என்று தலையங்கமிட்டு, எதைத்தான் சொல்ல முனைகின்றனர். இலங்கை அரசின் கைக்கூலியாக இருக்க மறுப்பதையே, இப்படி அவர்கள் கூறமுனைகின்றனர். நீங்கள் கூறுவது போல், மார்க்சியமும் அதை முன்வைப்பவர்களும் வரட்டுச் சிந்தாந்தவாதியாகவே இருக்கட்டும். ஆனால் உங்களைப் போன்று மகிந்தாவின் பின்னால் சென்று, புலியைப் போல் கொலை செய்யவில்லை. பிரேமதாச, சந்திரிக்கா, மகிந்தா என்று நக்கித் திரிந்த டக்ளஸ் போல் நக்கவில்லை.  ஈ.பி.ஆர்.எல்.எப் கொள்கையை சந்தர்ப்பவாதியாக மாறி சிங்கள பேரினவாதத்திடம் காட்டிக்கொடுக்கவில்லை. இதுதான் உண்மை. ஈழம் என்று கூறி, அதை கைவிட்டது தானே அசல் சந்தர்ப்பவாதம். பேரினவாதத்திடமிருந்தும் மக்களினதும் சமூகவிடுதலை என்று சொல்லி, பேரினவாதத்தை நக்குவது தான் சந்தர்ப்பவாதம். இப்படி மக்களின் பெயரில் சந்தர்ப்பவாதியாக நக்குவதைத்தான் நீங்கள் எதார்த்தம் என்பதும், இதை எதிர்ப்பதையே வரட்டுச்சித்தாந்தம் என்கின்றீர்கள். வெட்கம்கெட்ட நாய்கள், நக்கித் தின்பதற்கு ஏற்ப ஊளையிடத்தான் முனைகின்றனர். மகிந்த சிந்தனையிலான பாசிசம் கொடுக்கும் திமிர், அதிகார வெறி இது.    

   

இந்தப் பாசிச திமிரைக் கையில் எடுத்தபடி 'கால் வைத்து நிற்பதற்கு கடுகு நிலம் கூட இல்லை. உலகப்புரட்சி பற்றி கனவு காண்கிறார்கள் வரட்டுச்சித்தாந்த வாதிகள்" என்கின்றனர். இதற்கு பதிலாக நீங்கள் சொல்வது என்ன? எங்களைப் போல் மகிந்தாவை நக்குங்கள், அப்போது உலகப்புரட்சி வந்துவிடும் என்கின்றீர்கள். இப்படி சொல்லி நக்குவது, வெட்கமாயில்லை. இப்படித்தான் பலர் தமிழீழம் வந்துவிடும் என்று கூறி, புலியை நக்குகின்றனர். 

 

நீங்கள் கூறுவது போல், உலகப்புரட்சி கனவாகவே இருக்கட்டும். நீங்கள் மகிந்தாவின்  பாசிசத்துடன் சேர்ந்து எந்த புரட்சியை நடத்துகின்றீர்கள். அதைச் சொல்லுங்கள். மக்கள்விரோத பாசிச அரசுடன் சேர்ந்து, கும்மியடித்து மக்களுக்கு பிச்சை போடுவதா உங்கள் புரட்சி. நாட்டை விற்று, மக்களை காட்டிக் கொடுத்து கிடைக்கும் பணத்தில் இருந்து, சில்லறை போடுவதை மக்கள் சேவை என்பதும், புரட்சி என்று சொல்வதும் நன்றாகத்தான் இருக்கின்றது. இதைத்தான் மக்களுக்கு எதிராக புலிகளும் சொன்னவர்கள்.

 

மக்களைச் சார்ந்து நிற்க வக்கற்ற பாசிசத் திமிர் கொப்பளிக்க, புலிப் பாணியில் பதில் சொல்வதுதான் வேடிக்கை. 'ஆளுக்கொரு கணணியும் இணையத்தளமும் இருந்தால் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு எதையும் எவரும் எழுதலாம். இது சுலபமான அரசியல்." பதலளிக்க முடியாத போது, இதுவே சுலபமான தர்க்கம்.

 

சரி நாலு சுவருக்குள் என்றுதான் வையுங்கள், நீங்கள் என்ன செய்கின்றீர்கள். நாலு சுவருக்குள்ளும் நாலு துவக்களுக்கு நடுவில் இருந்து கொண்டு, மக்களுக்கு எதிராக துவக்கை நீட்டிப் பிடித்துக் கொண்டு என்ன செய்கின்றீர்கள்? மகிந்தாவின் சிந்தனையை பரப்புகின்றீர்கள். பாசிச புரட்சியாக 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே" நாலு துவக்குக்கு பின்னால் இருந்துதானே செய்கிறீர்கள்.

 

இந்த நாலு துவக்குக்கு மத்தியில் இருந்துதான், மகிந்த சிந்தனையிலான புலி ஒழிப்பை தொடங்கினீர்கள். குறைந்தபட்சம் 2000க்கு மேற்பட்ட இளைஞர்களை நீங்கள் 'கால் வைத்த" இடங்கள் எங்கும், கொன்று குவித்த குற்வாளிகள் தான் நீங்கள். புலிக்கு நிகரான குற்றவாளிகள்.  உங்கள் துணையின்றி, உங்கள் அனுசரணையின்றி அந்த இளைஞர்கள் காணாமல் போகவில்லை, வீதிகளில் பிணமாகவில்லை. நாலு சுவருக்குள் ஒளிந்து கொண்டு, நாலு துவக்கை வைத்துக் கொண்டு, புலிக்கு நிகராகவே கொலைகளை நடத்தியவர்கள் தான் நீங்கள். குற்றத்தை மறைக்க, 'ஆளுக்கொரு கணணியும் இணையத்தளமும் இருந்தால் நான்கு சுவர்களுக்குள் இருந்து கொண்டு எதையும் எவரும் எழுதலாம். இது சுலபமான அரசியல்." என்று புலியாகவே மாறி, அதை சொல்லவும் உறுமவும் கூட முடிகின்றது.

 

இவர்கள் புலியை ஒழிக்க, இவர்கள் கையாளும் வழியென்ன? 'நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் முன்னேற வேண்டும்" என்று கூறுவது எதை? புலிப் பாணியில் புலியை ஒழித்தல். புலிப்பாணியில் பாசிசத்தை நிறுவுதல். இதுவல்லாத வேறு எதையும், இவர்கள் கூறவில்லை.   இதைத்தான், இவர்கள் நடைமுறைச் சாத்தியமானது என்கின்றனர்.

 

தமிழ் மக்களின் தீர்வைக் கோரி போராடுவது நடைமுறை சாத்தியமானதல்ல என்பது உங்கள் நிலை. அரசியல் ரீதியாக புலியை ஒழிக்க, மக்களை அரசியல் ரீதியாக அரசுக்கு எதிராக அணிதிரட்டுவது நடைமுறைச் சாத்தியமானதல்ல என்று கூறி, அரச பாசிசம் மூலம் புலியை ஒழித்தலே நடைமுறைச் சாத்தியமானது என்கின்றனர். இப்படி பல ஆயிரம் இளைஞர்களை கொன்றீர்கள், கொல்ல உதவினீர்கள். இப்படி நடைமுறைச் சாத்தியமானதாக்கிய படுகொலை அரசியலையே, ஈ.பி.டி.பி நடத்துகின்றது, அதை ஆதரிக்கின்றது.

 

இவற்றை நியாயப்படுத்தவே இதற்குள் புலியை இழுக்கின்றனர். 'ஊடக சுதந்திரமில்லை, உண்மையை உரைக்கும் சுதந்திரமில்லை. அது உண்மைதான். சாதாரண அப்பாவி குடி மக்களுக்கே உயிர் வாழும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகின்றது" என்று கூறியபடி, அதை நீங்கள் மற்றவருக்கு மறுக்கின்றீர்கள். அனைவரையும் புலியாக காட்டியே இதைச் செய்கின்றனர். கோத்தபாய சொன்னது போல் 'தாம் அல்லாத அனைவரும் புலிகள்", என்று கூறித்தான், ஈ.பி.டி.பியும் ஓடுக்குகின்றது.

 

இன்று தாம் அல்லாத அனைவரையும் புலியாகக் கூறிக்கொண்டு, இலங்கை முழுக்க 'ஊடக சுதந்திரமில்லை, உண்மையை உரைக்கும் சுதந்திரமில்லை. அது உண்மைதான். சாதாரண அப்பாவி குடி மக்களுக்கே உயிர் வாழும் சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகின்றது"  என்ற உண்மை புலிக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தான் பொருந்துகின்றது. ஈ.பி.டி.பியின் சுதந்திரத்தில், இன்று யாரும் கருத்துக் கூற முடியாது. புலி முத்திரை குத்தியே அது ஒடுக்குகின்றது.

 

இந்த நிலையில் 'இழப்புகளை சந்தித்து வரும் நாம் இந்த தீர்வையா ஏற்பது என்று பாசிசப்புலிகளுக்கு வக்காலத்து வாங்கு"வதாக கூறுகின்றீர்கள். யாரிடம் இழப்பை சந்திப்பதாக கதை சொல்லுகின்றீர்கள். உங்கள் ஏஜமானைத்தானே குறிப்பிடுகின்றீர்கள். வேடிக்கையானது, ஆனால் 'இது சுலபமான அரசியல்" வாதம்.

 

நீங்கள் எஜமான் போடும் எலும்பை பிடி என்கின்றீர்கள். அது நாய்களுக்கு தான் போடுவார்கள். நாய்களின் எலும்பை மெச்சக்கோருவது, அதை மறுத்தால் புலிக்கு வக்காலத்து வாங்குவதாக முத்திரை குத்துவதும், அதே புலிப் பாசிச அரசியல் தான். புலிகள் இப்படி சொல்லித்தான், தமிழ் மக்களை தோற்கடித்தனர். நீங்களும் இதைத்தான் சொல்லி, தமிழ் மக்களுக்கு எதிராக வாலாட்டுகின்றீர்கள்.  

 

நீங்கள் கூறுகின்றீர்கள் 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி சென்ற டக்ளஸ் தேவானந்தா" என்று. எந்த சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தியவர். சிங்கள பேரினவாதத்தை புலிகளின் பெயரில் நக்குவதையா சுதந்திர போராட்டம் என்று கூறுகின்றீர்கள். சிங்கள பேரினவாதத்தின் கைக்கூலிகளாக செயல்படுவது, சுதந்திரப் போராட்டமாகிவிடுகின்றது.

 

இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஐனநாயகத்தையும் அரசியல் தீர்வையும் வழங்கி, புரட்சி செய்வார் என்று கூறுவது நக்கும் 'சுலபமான அரசியல்". அவர் அதில் புரட்சி செய்யட்டும். இப்படித்தான்  புலி மாமாக்களும் சுதந்திரம் பற்றி மக்களுக்கு சொன்னார்கள். 'டக்ளஸ் தேவானந்தா ஐனநாயகத்தையும் அரசியல் தீர்வையும் உருவாக்கி வைப்பார். அப்போது பெட்டிக்கடை போடுவதற்கு மட்டும் வந்து சேருங்கள்." பேரினவாத எஜமானுக்கு விசுவாசமாக  போட்ட பெட்டிக் கடையில் கொலைகள் முதல் எல்லாமே கொடிகட்டி பறக்குது. இப்படி 'ஒரு சுதந்திரப்போராட்ட இயக்கத்தையே வழி நடத்தி சென்ற டக்ளஸ் தேவானந்தா" மக்களை மந்தைக் கூட்டமாக மாற்றி அதில் ஏறி சவாரி விடுவதும், பிச்சை போட்டு ஆள் திரட்டுவதும், தன்னிடம் வந்து கையேந்தி  நிற்கவைத்து, அதை மக்கள் புரட்சியாக காட்டும் வித்தையும் தான், அவர்கள் வழங்கும் ஜனநாயகத்தின் எல்லை.  

 

புலிப்பாசிசத்துக்கு பதில், அரச பாசிசம் தான், இனி எம் மண்ணில் கோரத்தாண்டவமாடும். இலங்கை முழுக்க அது போடும் பாசிசக் கூத்தைத்தான், 'டக்ளஸ் தேவானந்தா ஐனநாயக"ம் என்பார். புரட்சி என்பார்.

 

பி. இரயாகரன்
22.02.2009
     


பி.இரயாகரன் - சமர்