Language Selection

புதிய ஜனநாயகம் 2009

மக்களின் பேராதரவுடன் ஆயுதப்போராட்டம் நடத்தி, மன்னர் ஆட்சியைத் தூக்கியெறிந்த நேபாள மாவோயிஸ்ட் கட்சியை அரசியல் நிர்ணய சபையில் இருந்து வெளியேற வைத்து, மீண்டும் ஆயுதப் போராட்ட பாதைக்குத் திருப்பித்

 தனிமைப்படுத்துவது எனும் செயல் உத்தியை நேபாளத்தில் இருக்கும் எதிர்ப்புரட்சி கும்பல்கள் ஒன்றுபட்டு செயல்படுத்தி வருகின்றன. நேபாளத்தில் அன்றாடம் நடக்கும் அற்ப விசயங்களைக் கூடப் பூதாகரமாக்கி மாவோயிஸ்டுகள் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி எரிச்சலூட்டுவதில் அங்கிருக்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சியும் நேபாள காங்கிரசு கட்சியும் கை கோர்த்துச் செயல்படுகின்றன. இதற்கு இந்திய அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அன்னிய சக்திகளும், கிரீடத்தை இழந்த மன்னரும் துணை நிற்கின்றனர். அண்மையில் பரபரப்பாகப் பேசப்பட்ட காத்மண்டு பசுபதிநாதர் கோவில் விவகாரம் இதைத்தான் உணர்த்துகிறது.


நீண்ட காலமாக தென்னிந்திய பார்ப்பனர்களைத்தான் பசுபதிநாதர் சிவாலயத்தின் தலைமை அர்ச்சகர்களாக நேபாள மன்னராட்சி நியமித்து வந்தது. தனக்கு ஏற்பட்டிருக்கும் தீராத முதுகுவலியின் காரணமாக செப்டம்பர் 2008இல் தலைமைக் குருவான மகாபலீஸ்வர பட் வேலையை விட்டு விலகினார். மேலும் இரண்டு பட்டர்களும் அடுத்தடுத்து விலகினர். பல நூற்றாண்டுகளாக பசுபதி நாதருக்கு தென்கன்னடத்தைச் சேர்ந்த பட்டர்களையும், மராட்டி, தெலுங்குப் பார்ப்பனர்களையும் நியமிப்பது மரபாக இருந்தபோதிலும் "தகுதியுள்ள நேபாள நாட்டவரையே நியமிக்க வேண்டும்' என்ற நேபாளப் பார்ப்பனர்களின் கோரிக்கை, தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வந்திருக்கிறது. எனவே, இம்முறை காலியான இடங்களில் நேபாள நாட்டில் சமஸ்கிருதத்தில் தேர்ச்சிப் பெற்றவர்களை அர்ச்சகர்களாக புதிய நேபாள அரசு நியமித்தது.


நேபாள மன்னரால் நியமிக்கப்படும் தலைமைக்குருவுக்கு அளவு கடந்த அதிகாரமும் வழங்கப்பட்டிருந்தது. அவர் நினைக்கும் ஆட்களையே கோவிலின் இதர அர்ச்சகர்களாக அவரே நியமித்துக்கொள்ளலாம். மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, புதிய அரசு பொறுப்பேற்ற பிறகுதான், அதுவரை கோடிக்கணக்கில் கோவிலின் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது வெளியே தெரியவந்தது. பசுபதி பகுதி வளர்ச்சி அறக்கட்டளையின் பொறுப்பிலிருந்து மன்னர் ஞானேந்திராவும், ராணி கோமலும் துரத்தப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்குள் கோவில் கொண்டுவரப்பட்டது. புரோகிதர்கள் வக்கிரமான பாலியல் வேட்டை நடத்தி வந்ததும் கண்டறியப்பட்டு அவர்கள் மக்களால் நையப் புடைக்கப்பட்டிருக்கின்றனர். பசுபதிநாதருக்கு பூசை செய்யும் பிஷ்ணுதாஸ் எனும் 30 வயது புரோகிதன், சென்ற ஜூன் மாதத்தில் கோவிலுக்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை சாக்லேட் தருவதாகச் சொல்லி ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்முறை செய்தான். மக்களால் பிடிபட்டு உதைவாங்கிய பிறகும், "இறைவன் இதனைச் செய்யவே தன்னைப் பூமிக்கு அனுப்பியதாக'' நியாயமும் பேசினான். அப்பூசாரி மூன்று முறை இதே போன்ற குற்றங்களைச் செய்துள்ளான்.


இப்பேர்ப்பட்ட தென்னிந்தியப் பார்ப்பன பூசாரிகளுக்கு ஆதரவாக நேபாள மக்கள் மத்தியில் இருந்து எந்தக் குரலும் எழவில்லை. நேபாள காங்கிரசு, போலி ஐக்கிய மாலெ கம்யூனிஸ்ட் ஆதரவில் குடியரசுத் தலைவரான ராம் பிரன் யாதவும், முன்னாள் பிரதமர் கொய்ராலாவும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களோடு அரியணையை இழந்த மன்னரும் சேர்ந்து கொண்டு, "மதம் அரசியலுக்கு மேலானது'' என்று சீறினார்.


ஆனால், இந்தியாவில் இருந்து வரிந்து கட்டிக்கொண்டு அத்வானி யும் ராஜ்நாத் சிங்கும் நேபாளப் பிரதமருடன் தொலைபேசியில் பேசி அர்ச்சகர் நியமனப் பிரச்சினையைச் சுமுகமாகக் கையாளுமாறு அறிவுரை கூறினர். சமாஜ்வாதி கட்சியின் முலாயம்சிங்கும், அமர் சிங்கும் நேபாள பிரதமர் பிரசந்தாவை நேரில் சந்தித்து முடிவை மாற்றிக் கொள்ளக் கோரினர்.


உலகெங்குமுள்ள இந்துக்களின் மத உணர்வை நேபாள மாவோயிஸ்டுகள் புண்படுத்திவிட்டதாக இங்குள்ள இந்துவெறியர்கள் கூச்சலிட்டனர். இந்திய ஊடகங்கள் மாவோயிஸ்டுகள் மீது அவதூறு சேற்றை வாரியிறைத்தன.


பா.ஜ.க.வின் கூட்டாளியான சிவசேனாக் கும்பலோ, புதுதில்லியில் ஆர்ப்பாட்டம் நடத்தி பிரசந்தாவின் கொடும்பாவியைக் கொளுத்தியது. இதே கட்சிதான் மும்பை நகரம், மராட்டியருக்கே சொந்தம் என்று மராட்டிய தேசியவெறியைக் கிளறி விட்டு மும்பையில் வாழ்கின்ற தமிழர்கள் மீதும் வட இந்தியர்கள் மீதும் இனவெறித் தாக்குதல்களைப் பலமுறை நடத்தியிருக்கிறது. மும்பையில் அக்கட்சி முன்வைக்கும் மண்ணின் மைந்தர் கொள்கை நேபாளத்துக்கு மட்டும் பொருந்தாதா?


அதிகாரத்தை இழந்த போதிலும் தமது இந்தியப் பங்காளிகள் மூலம் புதிய நம்பிக்கையைடைந்த தென்னிந்திய பார்ப்பனப் பூசாரிகளும் அவர்களது எடுபிடி கும்பலும் பசுபதிநாதர் கோயிலின் கதவை மூடிக்கொண்டு உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். பக்தர்களின் வழிபாட்டுரிமை பாதிக்கப்பட்டதால், மாவோயிஸ்டுகளின் இளைஞர் அமைப்பினர் கோவில் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து, அப்பூசாரிக் கும்பலை வெளியேற்றினர். உடனே, "ஐயோ! மாவோயிஸ்டுகள் வன்முறை!'' என்று இங்குள்ள இந்துவெறியர்களும் ஊடகங்களும் கூச்சலிட்டன. நேபாள உச்சநீதிமன்றமோ, பிற்போக்கு சக்திகளுக்கு ஆதரவாக "பாரம்பரியத்துக்கு மாறாக நேபாள பூசாரிகளை நியமித்தது செல்லாது'' எனத் தீர்ப்பளித்தது. மிக அற்பமான விவகாரத்தை ஊதிப் பெருக்கி கலகம் செய்யும் பிற்போக்குக் கும்பல்களின் சூழ்ச்சிகள் சதிகளை உணர்ந்த நேபாள மாவோயிஸ்டுகள், தென்னிந்திய பார்ப்பன பூசாரிகளையே நியமிப்பதை அரசின் முடிவாக அறிவித்துள்ளனர்.


பசுபதிநாதர் கோயி லில் நேபாளிகளைத் தலைமை அர்ச்சகர்களாக அந்நாட்டு அரசு நியமித்த நடவடிக்கையானது மிக நியாயமான, மிகச் சாதாரணமான உள் நாட்டு விவகாரம்தான். ஆனால் புனிதம், பாரம்பரியம், மத உணர்வு என்ற பெயரில் இந்தியப் பிற்போக்கு ஆளும் கும்பல்கள் நேபாளத்தின் அற்பமான விவகாரத்தில் கூட பிராந்திய மேலாதிக்கத் திமிரில் மூக்கை நுழைக்கின்றன. அதிகாரத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட போதிலும், மன்னராட்சி பிற்போக்குக் கும்பல் இழந்த சொர்க்கத்தை மீட்க இந்தியாவின் மறைமுகத் துணையோடு கலகம் செய்யத் துடிக்கின்றன.


நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் இடைக்கால அரசைப் பலவீனப்படுத்தி வீழ்த்த, அதிகாரத்தை இழந்த பிற்போக்கு கும்பல்கள் எத்தகைய கீழ்த்தரமான சதிகளில் இறங்கியுள்ளன என்பதையும், பிராந்திய மேலாதிக்க இந்தியப் பிற்போக்கு அரசு ஈழத்தில் மட்டுமின்றி, நேபாளத்திலும் எப்படியெல்லாம் தலையீடு செய்து வருகிறது என்பதையும் பசுபதிநாதர் கோயில் விவகாரம் அம்பலப்படுத்திக் காட்டியுள்ளது.


· கதிர்