Language Selection

லஸ்தீனத்தில் இஸ்ரேலின் மூன்றுவாரக் கால வெறியாட்டம் ஜனவரி 18இல் முடிவுக்கு வந்தபோது 1300 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டோரில் நூற்றுக் கணக்கானோர் குழந்தைகள்

என்று உறுதிப்படுத்தப்பட்ட பிறகு இஸ்ரேல் யாரை இலக்கு வைத்தது என்ற கேள்விக்கான பலரது பதில்கள் செல்லாதனவாகிவிட்டன. ஹமாஸ் இயக்கத்தை அழிப்பது இஸ்ரேலின் நோக்கம் என்றால், அது தன்னிடமுள்ள வலியபேரழிவு ஆயுதங்களைப் பாவித்து, காஸா முழுவதையும் அழித்திருந்தாலும் அதில் முழுமையான வெற்றி கிட்டியிருக்காது. அதன் கொடிய அழிவு நடவடிக்கையின் நோக்கம் காஸாவைச் சிதைத்து அதன் மக்களை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளி அதன் மூலம் அவர்களை நிரந்தரமாக அச்சுறுத்திப் பணிய வைப்பது என்பது நம்முள் உள்ள விளக்கங்களில் அதி நம்பகமான ஒன்று என்பேன்.

எல்லா விதமான மேலாதிக்கங்களும் ஒடுக்குமுறை இயந்திரங்களும் ஏறத்தாழ ஒரேவிதமான தர்க்கத்தின் வழியேதான் செயற்படுகின்றன. அவற்றுக்குத் தமது பிழைகளைத் திருத்திக் கொள்ள இயலுவதில்லை. தமது பிழைகளை வலிந்து நியாயப்படுத்திக் கொள்கிற அளவுக்கு உண்மைகளை ஆராந்து விளங்கிக் கொள்ள இயலாதபடி அவை தமது குற்றச் செயல்களின் விளைவுகளால் கட்டுண்டு கிடக்கின்றன. பின்நோக்கிய எந்த நகர்வும் அவற்றின் இருப்பிற்கு மிரட்டலாகவே தெரிகின்றன. எனவே, இஸ்ரேல் இன்னொரு கொடிய போரில் இறங்காது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. எனினும், இஸ்ரேல் இதுவரை ஹமாஸுக்கு விடுத்திருக்கும் மிரட்டல்கள் பெறுமதியற்றவை என்பது இஸ்ரேலுக்கு ஓரளவேனும் விளங்கியிருக்க வேண்டும். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு ஒரு கிழமைக்குள் இஸ்ரேலியப் படைக்குள் முற்றாக விலக்கப்படாவிடின் அவை தாக்குதலுக்கு உட்படும் என்று ஹமாஸ் எச்சரித்தது. அப்படி ஒரு காலக்கெடுவை ஏற்க இயலாது என்று வீம்பு பேசிய இஸ்ரேல், தன் படைகளைத் துரிதமாகவே வெளியேற்றிவிட்டது. எனவே, இப்போரின் மூலம் இஸ்ரேல் எதைச் சாதித்துள்ளது என்ற கேள்விக்கான பதில், இஸ்ரேலுக்கு நன்மை தரக்கூடியஎதையுமே அது சாதிக்கவில்லை என்பதுதான். காஸாவின் எல்லையில் உள்ள இஸ்ரேலியக் குடியிருப்புகட்கு எவ்விதமான புதிய பாதுகாப்பும் ஏற்படவில்லை. ஹமாஸ் மேலும் அரசியல் ஆதரவைப் பெற்றுள்ளது. இஸ்ரேலுக்கு உடந்தையான அரபு ஆட்சிகள் மீதான வெகுசன வெறுப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது.

எல்லா விதமான மேலாதிக்கங்களும் ஒடுக்குமுறை இயந்திரங்களும் ஏறத்தாழ ஒரேவிதமான தர்க்கத்தின் வழியேதான் செயற்படுகின்றன. அவற்றுக்குத் தமது பிழைகளைத் திருத்திக் கொள்ள இயலுவதில்லை. தமது பிழைகளை வலிந்து நியாயப்படுத்திக் கொள்கிற அளவுக்கு உண்மைகளை ஆராந்து விளங்கிக் கொள்ள இயலாதபடி அவை தமது குற்றச் செயல்களின் விளைவுகளால் கட்டுண்டு கிடக்கின்றன.


மேலும், பயனுள்ள பாடங்கள் கிட்டியுள்ளன. எனினும், அவை இஸ்ரேலுக்கோ புதிய நிர்வாகத்தின் கீழுள்ள அமெரிக்காவுக்கோ விளங்கும் என்று நான் நம்பவில்லை. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோரமான முகத்தை உலகுக்குக் காட்டிய குவண்டனாவோ எனும் கியூப நாட்டுத் தரைப் பிரதேசத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாமில் உள்ள சிறைக் கூடத்தை மூடுவதும் (புஷ்ஷின் ஆட்சியின் கீழ்ப் போர்க் கைதிகளைச் சித்திரவதைக் குட்படுத்தியதற்கான ஆதாரங்கள் வெளிவந்த சூழ்நிலையில்) இராணுவச் சித்திரவதையைத் தடைசெததும் ஒபாமா பற்றிய நல்ல படிமத்தை வழங்கலாம். ஆனால், இஸ்ரேலின் "தற்காப்புக்கான உரிமையை' எப்போதோ ஏற்றுக்கொண்ட ஒபாமா தான் பதவி ஏற்க மூன்று வாரங்கள் முன்பு இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்தைக் கண்டிக்க மறுத்து அதை நியாயப்படுத்தியவர் என்பதை நாம் மறக்கலாகாது. ஆப்கானிஸ்தானில் போரைத் தீவிரப்படுத்தப்போகிற ஒபாமா ஆட்சி ஈராக்கிலிருந்து படைகளை விலக்கிக்கொள்ள இருப்பது, அந்த நாட்டின் மீதான ஆக்கிரமிப்புத் தவறானது என்பதனால் அல்ல. இங்கே, இன்னமும் தனது கொரிய யுத்தமும் வியட்நாம் யுத்தமும் தவறானவை என்று ஏற்க மறுக்கிற ஒரு அரசு பற்றிப் பேசுகிறேன். ஏகாதிபத்தியம் எங்கேனும் தனது தவற்றை உணர்ந்து தனது படைகளை விலக்கிக் கொண்டதில்லை. படுதோல்வியும் தொடர்ந்தும் தனது இராணுவ இருப்பை நிலைநிறுத்த இயலாமையுமே அதைப் பின்வாங்கச் செகின்றன.

மேற்கூறிய தர்க்கம் இஸ்ரேலிய ஃபாஸிஸவாதிகட்கும் பொருந்தும். ஃபாஸிஸம் என்ற சொல்லை இஸ்ரேலுக்குப் பாவித்து எவ்வளவு தூரம் பொருந்தும் என்பது கடந்த இருபது ஆண்டுகளில் இஸ்ரேலியர் பலஸ்தீன மக்களை நடத்திய விதம் பற்றிய நிழற் படங்களை ஜேர்மன் ஃபாஸிஸவாதிகள் நடத்திய விதம் பற்றிக் காட்டும் பல நிழற் படங்களுடன் ஒப்பிட்டு ஒருவர் அனுப்பிய படங்களைப் பார்த்தபோது விளங்கியது.

இஸ்ரேலின் "தற்காப்புக்கான உரிமையை' எப்போதோ ஏற்றுக்கொண்ட ஒபாமா தான் பதவி ஏற்க மூன்று வாரங்கள் முன்பு இஸ்ரேல் நடத்திய வெறியாட்டத்தைக் கண்டிக்க மறுத்து அதை நியாயப்படுத்தியவர் என்பதை நாம் மறக்கலாகாது.


இந்திய மேலாதிக்கவாதிகளது தர்க்க முறையும் அதிகம் வேறுபட்டதல்ல. இந்திய மேலாதிக்க ஊடக நிறுவனங்களும் பிரதான அரசியற் கட்சிகளும் 19871989 காலத்தில் இங்கு இந்திய இராணுவம் நடத்திய வெறியாட்டத்தைக் கண்டிக்க ஆயத்தமாக இல்லை. இந்திய இராணுவத்துடன் விடுதலைப் புலிகள் மோதியது வெறுமனே தவறு என்றல்ல, குற்றச் செயல் என்றே அவர்கள் கருதுகின்றார்கள். இவ்விடயத்தில், ஜே.வி.பி.யும் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸவும் அவர்களின் கண்டனத்துக்குரியயோராகவே உள்ளனர். இந்திய ஆட்சியாளர்களால், காஷ்மீரிலோ நாகாலாந்து உட்பட கிழக்குப் பிரதேசங்களிலோ கிளர்ந்தெழத் தொடங்கியுள்ள பழங்குடியினர் வாழும் பகுதிகளிலோ தமது அடக்குமுறையை நிறுத்த இயலாதுள்ளது. எல்லா எதிர்ப்புகளும் பயங்கரவாதமாக்கப்படுகின்றன. மும்பைத் தாக்குதலை முன்னிறுத்தி வலுவூட்டப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டங்கள் எல்லா உரிமைப் போராட்டங்கட்கு எதிராகவும் பயன்படப் போகின்றன. இதை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பின்னணியிலேயே ஏன் சில விடுதலைப் போராட்ட அமைப்புகள் தாம் பெறுகிற இராணுவத் தோல்விகளால் துவண்டுவிடுவதில்லை என்று விளங்கும். காஸாவில் இரண்டாம் முறையாக நடந்துள்ளது போல, ஹமாஸ் தன்னுடைய இழப்புகளை அவற்றுக்கு நேரெதிரானவையாக எப்படி மாற்றியுள்ளது என்று விளங்கிக்கொள்ள இயலும்.

ஹமாஸ் தனது குறுகிய வரலாற்றிற் பல பயனுள்ள விடயங்களைக் கற்றுக் கொண்ட ஒரு போராளி அமைப்பு. எகிப்திய முஸ்லிம் தீவிரவாதிகளை முன்னோடியாகக் கொண்டு உருவானது என்று கூறப்படும் ஒரு அமைப்பால் மதவாத எல்லைகளைக் கடந்த ஆதரவையும் ஒத்துழைப்பையும் இன்ற பெறமுடிகிறது. தன்னுடைய கத்தோலிக்க அடையாளத்தை நிராகரிக்காத வெனசுவேலாவின் ஜனாதிபதி ஹியுகோ சாவெஸ் வழங்கிய ஆதரவை மெச்சவும் அவரைத் தன்னுடைய ஒரு தோழராகக் கொண்டாடவும் ஹமாஸுக்கு இயலுமாக உள்ளது. அதை விட முக்கியமாக இஸ்லாத்திற்குள் இருக்கும் மதப் பிரிவுகளைப் பாவித்து அரபு மக்களை மேலும் பிளவுபடுத்துகிற சிந்தனைப் போக்குகட்குச் சவாலாக ஹமாஸுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லாவுக் குமிடையே நட்புறவு உள்ளது. அனைத்திலும் முக்கியமாக மக்களை அனுசரித்துப் போகிற ஒரு போக்கு ஹமாஸிடம் வளர்ந்துள்ளது.

எனவேதான், எகிப்து அல்லது சவூதி அராபியா குறுக்கிட வேண்டும் என்று மன்றாட வேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. அமெரிக்கா தான் பிரதான எதிரி என்பதைப் பலஸ்தீன மக்கள் அறியுமளவுக்குச் சமமாக அல்லது சிறிது மேலாக ஹமாஸ் அறிந்து வைத்துள்ளது. ஒபாமாவைப் பற்றி அதனிடம் எந்தவிதமான பிரமையோ மயக்கமோ இல்லை. எனவேதான், என்னால் தைரியமாக ஒன்றைக்கூற இயலுமாயுள்ளது. ஹமாஸ் இயக்கத் தலைமை முழுவதையும் மட்டுமன்றிப் போராளிகள் அத்தனை பேரையும் பூண்டோடு அழித்தாலும் ஹமாஸ் போன்ற ஹமாஸை விட மனவுறுதியுடன் போராடவல்ல ஒரு பலஸ்தீன விடுதலை இயக்கம் மீண்டும் உருவாகச் சில வாரங்கள் கூட எடுக்காது.

ஏகாதிபத்தியம் எங்கேனும் தனது தவற்றை உணர்ந்து தனது படைகளை விலக்கிக் கொண்டதில்லை. படுதோல்வியும் தொடர்ந்தும் தனது இராணுவ இருப்பை நிலைநிறுத்த இயலாமையுமே அதைப் பின்வாங்கச் செய்கின்றன.


பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் அரபு மக்களின் விடுதலையின் முக்கியமான ஒரு குறியீடாக உள்ளது. பலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டம் உலகின் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்குகிற ஏகாதிபத்திய ஒடுக்குமுறைக்கு எதிரான பிரதான சவாலாகவும் இருக்கிறது. ஆனால், அதை அரபு மக்களுக்கும் முஸ்லிம்கட்கும் மட்டுமே உரியதாகக் குறுக்குவது அநீதியானது. ஏனெனில், அது உலகளாவிய முறையில் ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை, இனவாதம், ஃபாஸிஸ அடக்குமுறை போன்ற பல்வேறு கொடுமைகட்கும் எதிரான போராட்டங்களின் பொதுவான குறியீடாக நிற்கிறது.

அக்காரணத்தினாலேயே, அதனை ஒடுக்குவதற்கும் பலஸ்தீனம் என்பதை இல்லாமற் செயஅல்லது அதை இஸ்ரேலின் ஆதிக்கத்திற்குட்பட்ட அடிமைப்பட்ட மக்களின் மாகாணமாகக் குறுக்கவும் இஸ்ரேலும் அமெரிக்காவும் முனைப்பாக உள்ளன. ஐரோப்பிய முதலாளிய நாடுகள் அவற்றுடன் ஒத்துழைத்துக் கொண்டு நடுநிலை நாடகமாடுகின்றன. எனினும், நியாய உணர்வுள்ள மக்கள் அங்கெல்லாம் உள்ளனர். அவர்களால் அரசாங்கங்களினாலும் அவற்றுக்கு உடந்தையான ஊடகங்களாலும் விரிக்கப்படுகிற மாயைத் திரைகளைத் தாண்டி உண்மைகளைக் கண்டறிய முடியுமாயுள்ளது.

பலஸ்தீனத்தின் வரலாறு அறுபதாண்டுகால அடக்குமுறையினதும் நிலப் பறிப்பினதும் வரலாறு என்று சொல்ல முடியும். ஆனால், அறுபதாண்டுக் காலமாகத் தொடரும் மனந்தளராத ஒரு விடுதலைப் போராட்டம் என்று சொல்லுவது கூடப் பொருத்தமானது.

ஞாயிறு தினக்குரலில் கோகர்ணன் எழுதிய "மறுபக்கம்" பத்தியிலிருந்து.....