08112022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

ராக்கிங்க்கு எதிராக, இரயாகரன் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளியிட்ட துண்டுப்பிரசுரம்

1985 இல் இத் துண்டுப்பிரசுரத்தை சில மாணவர்கள் சார்பாக நான் வெளியிட்டேன். அப்போது ராங்கிங் செய்தவர்களோ, 'மனநோயாளி ஒருவர் யாழ் பல்கலைக்கழத்தில்" என்று பதில் துண்டுப் பிரசுரம் வெளியிட்டனர். நான் ராக்கிங்குக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை நடத்தினேன். இதைத் தொடர்ந்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், நான் வெளியிட்ட இந்தத் துண்டுப்பிரசுரத்தை ஆதரித்து ஊடகங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து ராங்கிங் செய்தவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தை இயங்கவிடாது தடுத்தனர். எனது துண்டுப் பிரசுரத்தையும், ஆசியர் சங்க அறிக்கையையும் வாபஸ் வாங்கும்படி கோரினர்.

pakidivathai1.jpg

இதனால் மூன்று நாட்கள் இயங்காத பல்கலைக்கழகம், இறுதியில் ராங்கிங் செய்தவர்கள் கோரிக்கைகள் தோல்விபெற்றதன் பின் இயங்க ஆரம்பித்தது.

ராக்கிங்குக்கு எதிரான எனது கடந்தகால போராட்ட வரலாறு இப்படி இன்னமும் உண்டு. புலி உட்பட எந்த பெரிய தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்களும், எம் இந்த துண்டுப்பிரசுரத்தின் அடிப்படையில் சமூகத்தை அணுகியது கிடையாது.

எமது தேசியவிடுதலைப் போராட்டம் எந்த அடிப்படையில், எப்படி அமைய வேண்டும் என்ற ஒரு விரிந்த சமூகப் பார்வை கொண்டு நாம் போராடியதை இந்த துண்டுப்பிரசுரம் 20 வருடங்கள் கடந்த பின் இன்று எடுத்துக்காட்டுகின்றது.

பாசிசத்துக்கு வெளியில், உண்மையான போராட்டம் இப்படித்தான் மனித வரலாறாய் இருக்கின்றது. வரலாற்றை இருட்டடிப்பு செய்வது, அதை திரிப்பது, அதை கொச்சைப்படுத்துவது, அதை புனைந்து புணர்வது,  போராடியவர்களை இழிவுபடுத்துவது, இன்று பலதளத்தில் அரங்கேறுகின்றது. இதன் மூலம் தான் புலிப் பாசிசம், தனது வரலாற்றை உருவாக்க முனைகின்றது.

இப்படி புலித்தேசியம், தமிழ்தேசியம் என்று இணையத்தில் உப்புச்சப்பில்லாமல் புலம்பும் கும்பல், விவாதத்துக்கு பதிலளிக்க முடிவதில்லை. அவர்கள் எம்மைப்பற்றி தமது தளத்தில் எப்படி எழுதுகின்றனரோ, அதையே கருத்தென்கின்றது.

தமது சொந்த மனவக்கிரத்தை, அப்படியே மற்றவர்கள் செய்ததாக காறியுமிழ்கின்றது. இவர்கள் பல்கலைக்கழகம் போனால் எதைச் செய்வார்களோ, அதை மற்றவன் பெயரில் அப்படியே சொல்லி மகிழ்ச்சி கொள்கின்றனர்.

இந்த மாதிரியான சமூக விரோத பொறுக்கிகளால் தான், எமது தேசியம் பேரினவாதிகளால்  கற்பழிக்கப்படுகின்றது. தமிழினம் ஏன் அழிக்கப்படுகின்றது என்றால், மக்களை பார்த்து கதைக்க தெரியாத முட்டாள்கள் கொண்ட ஒரு பாசிச இயக்கமாக புலிகள் இருப்பதால்தான். எதற்கும் பதிலளிக்க முடியாது போராடுபவனை கொல் அல்லது வாயில் வந்த மாதிரி தூற்று என்கின்றது புலித்தேசியம்.

அறிவு நாணயமற்ற வகையில் தூற்றும் போது முட்டாள்தனம், கொப்பளிக்கும். ஒரு சில உதாரணம். யாழ் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டைக் கூட முடிக்காத நான் (அங்கு உயிர்வாழ முடியாது போனநிலையில்) ராக்கிங் செய்ததாக புளுகுகின்றது. எப்படி? மாத்தையா ஏன் துரோகி என்றால், என்னை உயிருடன் தப்பிச் செல்ல அனுமதித்தது தான் என்கின்றது. இன்று தமக்கு கரைச்சல் இல்லாமல் இருக்க, அன்றே கொன்றொழித்திருக்க வேண்டும் என்கின்றது. கொல்லாமல் விட்டதால் மாத்தையா துரோகி. இங்கு கொல்லும் வெறி  கொப்பளிக்கின்றது. மாத்தையா இதற்காக துரோகி என்றால், புலிகளின் இன்றைய அனைத்து படைத் தளபதி தீபனும் தான் துரோகி. அவன் என் காதில் துப்பாக்கியை வைத்து கடத்திச்சென்றது முதல், அவன் பொறுப்பாக இருந்த முகாமில், அவர் இருந்த நேரத்தில் தான் நான் தப்பிச்சென்றேன். அப்படியானால் அவனும் துரோகிதானே.

இப்படி பல. மக்களுக்கு கருத்து எழுத்து பேச்சு சுதந்திரம் புலிகள் வழங்கினால், புலிகள் அரசியல் அனாதைகள் ஆகிவிடுவர் என்று புலிகள் வெளியிட்ட துண்டுப்பிரசுரம் எதைச் சொல்லுகின்றதோ, அது இங்கு உண்மையாகின்றது. எம்மை இணையத்தில் எதிர்கொள்ள முடியாது திணறும் புலிப்பாசிட்டுகள், தாம் அனாதையாகாது தப்பிப் பிழைக்க எம்மை கண்ணை மூடிக்கொண்டு தூற்றுகின்றது. இதனால் தமிழினம் விடுதலை பெறும் என்று நம்பும் முட்டாள்களைக் கொண்ட இயக்கம் அது. தமிழினத்துக்கு இதனால் விடிவு கிடையாது என்பது மட்டும் உண்மை.

பி.இராயாகரன்
09.01.2009


பி.இரயாகரன் - சமர்