பாசிசத்தின் வேர் சமூகத்தில் எங்கும் ஊடுருவி, சமூகவிரோத நஞ்சைக் கக்குகின்றது. கொழும்பில் இருக்கும் வரை 'சுதந்திர" ஊடகவியல் வேஷம் போட்டவர்கள், இன்று புலியின் பாசிசத்துக்காக ஐரோப்பா எங்கும் பாசிசத்தை நவீனமாக பிரச்சாரம் செய்ய முனைகின்றனர். இது போல் தம்மைத்தான் இடதுசாரிகள் முற்போக்குகள் என்று காட்டிக்கொண்ட பல பொறுக்கிகள், இன்று பாசிசத்தின் தூண்களாகின்றனர்.

முன்னாள் சரிநிகர் ஆசிரியர்கள் முதல் இதில் பலர் அடங்குவர். இதில் பலர் எம்முடன் சேர்ந்து போராடியவர்கள் அல்லது எம்முடன் அரசியல் உறவை வைத்திருந்தவர்கள். இன்று புலிப் பாசிசமே சரி என்றும், அதை காப்பாற்றுவதே இன்றைய வரலாற்றுத் தேவை என்கின்றனர். இந்த வரலாற்று தேவை எந்த மக்களுக்கு, எப்படி, ஏன் தேவை என்பதை இவர்களால் சொல்ல முடிவதில்லை. என்ன செய்கின்றனர், புலிகளின் கடந்தகால பாசிச வெறிச் செயல்களை நவீனமாக தம் அறிவைக்கொண்டு நியாயப்படுத்த முனைகின்றனர். வேறு எதைத்தான் இந்த புதிய பாசிசக் கும்பல் பிரச்சாரம் செய்யமுடியும்.

 

மக்கள் பல்வேறு சந்தேகங்கள், கேள்விகளுடன் புலிகளை விமர்சிக்கின்றனர். இதை பூசி மெழுகுவது தான், இந்தக் கும்பலின் நவீன பாசிசப் பாட்டு.   

 

இவர்கள் தமிழ் மக்களின் உண்மை அவலத்தையிட்டு, உண்மையாக அக்கறைப்படுவது கிடையாது. புலிப்பாசிசத்துக்கு ஏற்பத் தாளம் போடுபவர்களாக, சிங்சிங்காக என்கின்றனர். இதற்கு அன்று  சூழலைக் காரணம் காட்டித் தப்பியவர்கள், இன்று தாம் யார் என்பதை காட்டுகின்றனர். புலிக்காக, புலிப் பாசிசத்தை தலையில் தூக்கிகொண்டு, நாடு நாடாக அலைகின்றனர். கொள்கை கோட்பாடு என எல்லாவற்றையும் துறந்து, பாசிசத்துக்காக  விபச்சாரம் செய்கின்றனர்.

 

கொள்கை கோட்பாடு எதுவுமற்ற ஒரு பாசிச இயக்கம், தனக்கு பிரச்சாரம் செய்யும் ஆட்களை பல விதத்தில் விலைக்கு வாங்க முடிகின்றது. அதற்கு அமையவே, புலிகள் இவர்களின் தனிப்பட்ட பலவீனங்களையும் அற்பத்தனத்தையும் இனம் கண்டு அணுகுகின்றது. ஆசைகாட்டியும், உழைக்காது சொகுசாக வாழ மாதச் சம்பளத்தைக் கொடுத்தும், மிரட்டியும், பணத்தைக் கொடுத்தும், போத்தலைக் கொடுத்தும், பெண்ணைக் கொடுத்தும் கூட விலைக்கு வாங்கியுள்ளது. இதில் இவர்களில் ஒரு சிலரின் நடத்தையை, கூத்தை, வீடியோ பண்ணியும் வைத்துள்ளது. இப்படி புலிக்கு பிரச்சாரம் செய்யும் இந்திய அரசியல்வாதிகள் வரை, இந்த வலைக்குள் அடங்கும். இவர்கள் தான் தமிழ் தேசியத்தை பாசிசமாக்கி, அதைப் பிரச்சாரம் செய்;கின்றனர்.

 

மக்கள் அரசியலை விபச்சாரம் செய்து பிழைக்க வெளிக்கிட்ட பின், பாசிசத்தை நெளிவு சுழிவாக பிரச்சாரம் செய்வதைத் தவிர வேறு எந்த அரசியலும் இதன் பின் இருப்பதில்லை. மக்களைப் பற்றி, அவர்களின் மேலான சமூக ஒடுக்குமுறையைப் பற்றி, இவர்கள் யாரும் இன்று பேசுவது கிடையாது. 

 

இதில் சிலர் 'ஊடகவியலாளர்கள்" என்ற வேஷத்தை களைந்து, தாம் நவீன புலிப் பாசிட்டுகள் தான் என்பதை மூடிமறைத்தபடியே பிரச்சாரம் செய்கின்றனர். இதை வெளிப்படையாக சொல்வதும் எழுதுவதும் கிடையாது. ஊர் உலகத்தை ஏமாற்ற, இதிலும் சந்தர்ப்பவாதம். மதில் மேல் பூனைகள் போல் அங்குமிங்குமாக நெளிந்தபடி, தம்மை மூடிமறைத்துக் கொண்டு சந்தர்ப்பவாதிகளாக புலித்தேசியம் பேசுகின்றனர்.

 

இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான், முன்னாள் சரிநிகர் ஆசிரியர் சிவகுமார். அண்மையில் எனது நண்பருடன் நடத்திய உரையாடலில், பாசிசத்தைக் கக்கிய விதமோ நவீன பாசிசம்.

 

இவர், புலிகள் ரெலோவை அழித்தது சரி என்கின்றார். ஏனென்றால் அவர்கள் புலியை அழிக்க இருந்தனராம்! வடக்கு முஸ்லீம் மக்களை வெளியேற்றியது புலிகள் அல்ல, கிழக்கு (கிழக்கு மக்களின்) நிர்ப்பந்தம் என்கின்றார். இப்படி புலிப் பாசிசத்தை நவீனமாக காரணம் சொல்லி நியாயப்படுத்தும் இவர்கள், 'சுதந்திர ஊடகவியல்" பெயரில் புலி பாசிசத்துக்கு சார்பாக குலைத்தது இன்று அம்பலமாகின்றது. 

 

புலிகள் மாற்று இயக்கத்தை படுகொலை செய்தது அழித்தது சரி என்கின்றனர்.  சமூக இயக்கத்தில் முன்னின்றவர்களை புலிகள் கொன்றது சரி என்கின்றனர். ஆயிரம்  ஆயிரமாக காரணம் சொல்லியும், காரணம் சொல்லாமலும் படுகொலை செய்த புலிகளின் செயல்கள், நியாயமானது என்கின்றனர். புலிகளால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் பலர். இந்த செயல்கள் விடுதலைப் போராட்டத்துக்கு அவசியம் என்கின்றனர். கொடுமையும் கொடூரமும் நிறைந்த புலிகளின் சிறைகள் சித்திரவதைக் கூடங்கள் அவசியமானது என்கின்றனர்.

 

இதை நியாயம் என்றும், இதற்கு காரணம் கற்பிப்பது தான் இந்த நவீன பாசிட்டுகளின் அரசியல் வேலையாகின்றது. இவை தான் புலிப் பாசிட்டுகள், இவர்களுக்கு வழங்கியுள்ள சமூகக் கடமை. அதாவது சமூகம் தம் பாசிச பிடியில் இருந்து விலகாது இருக்க, அதை நவீனமாக பிரச்சாரம் செய்வது தான் இவர்களின் புலித் தேசியக் கடமை. 

 

இவர்கள் இன்று இதைத்தான் செய்கின்றனர். இவர்கள் ஒருவர் இருவர் அல்ல, பலர். பாசிச நியாயவாதங்களை கற்பிப்பதும், அதை ஆளுக்காள் விதவிதமாக நியாயப்படுத்துவதும் தான் தேசியமென்கின்றனர். புலியைப் பலப்படுத்துவது தான் தேசியம் என்கின்றனர். புலிப் பாசிசத்துகாக குலைக்கும் இவர்கள், புலிக்களுடன் தாம் இல்லையென்று காட்டவும் முனைகின்றனர். இப்படி பாசாங்கு செய்து கொண்டு, ஊர் உலககெங்கும் புலியின் பணத்தில் மிதப்பதுடன், அங்கு பாசிசப் பிரச்சாரம் செய்கின்றனர்.

 

முன்னாள் புலிகள் படுகொலையில் இருந்து தப்பி வந்தவர்களை தேடிச்சென்று சந்திக்கும் இவர்கள், மேற்கெங்கும் சுற்றுப் பயணங்களையும் சந்திப்புகளையும் நடத்துகின்றனர். தொலைபேசி உரையாடல்கள் முதல் ஊடகவியல் வரை, இவர்களின் பாசிசம் புளுக்கின்றது. 

 

விதவிதமாக பாசிசத்தின் ஒரே பாட்டுத்தான். புலிகள் செய்தது சரி அல்லது தவறுகள் உண்டு, இப்ப இவர்களை விட்டால் யார் உள்ளனர்?, உள்ளே போனால் தான் புலியை திருத்த முடியும், பேரினவாதம் எதுவும் தராது, என்று விதவிதமாக கதைகள ;சொல்லி, பாசிசத்தை ஆதரிப்பதே சரி என்று நியாயவாதம் செய்கின்றனர். இவர்கள் வைக்கும் நியாயவாதம், புலிப் பாசிசத்தை நவீனமாக நியாயப்படுத்த முனைவது தான்.

 

ஆயிரம் ஆயிரம் மனிதர்களை கொன்று குவித்து, உயிருடன் ரயர் போட்டு எரித்தும், சித்திரவதையும் சிறைக் கூடங்களையும் கொண்டு தமிழ் மக்களை வதைத்தவர்கள் புலிகள். இப்படி தமிழ் இனத்தையே அழித்ததை நியாயப்படுத்தும் இந்த முன்னாள் மாற்று இயக்க நவீன பாசிட்டுகளை, இன்று மக்களை ஏய்த்துப் பிழைக்க களத்தில் புலிகள் இறக்கியுள்ளனர்.

 

பாசிசத்தை நியாயப்படுத்தும் இந்த பொறுக்கிகள்

 

முன்பு மார்க்சியம் பேசியவர்கள். ஜனநாயகம், சுதந்திரம் என்று நீட்டி முழங்கியவர்கள். பின் தம் முகத்தை நிறத்தை மாற்ற வெளிக்கிட்டவர்கள், மார்க்சியத்தை திரித்தும் திருத்தியும், விமர்சிக்கத் தொடங்கினர். இன்று வலதுசாரியத்தை ஆதரிக்கும் பாசிட்டுகள். அதை நவீனமாக சொல்ல, நியாயப்படுத்த, அவர்கள் இடதுசாரியத்தில் கற்ற அறிவு உதவுகின்றது.

 

எம்முடன் முன்பு ஒன்றாக போராடியவர்கள், அறிமுகமானவர்கள். ஆனால் இன்று பாசிசத்தை நியாயப்படுத்தி, தமிழ் மக்களின் முதல்தரமான எதிரியாக மாறி அவர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர்.

 

புலிகள் கருத்து, எழுத்து, பேச்சு சதந்திரத்தை மறுத்ததையும், மறுப்பதையும் சரி என்று கூற முனைகின்ற இவர்கள், என்னதான் கத்தி முனகினாலும் புலிப் பாசிசத்தை மனித விடுதலைக்கான ஒன்றாக ஒருநாளும் நியாயப்படுத்திவிட முடியாது. 

 

அன்று புலியை எதிர்த்து மக்களுக்காக போராடியதால் பெற்ற அறிவை, அந்த அறிமுகத்தை, அந்த அடையாளத்தை பயன்படுத்திக்கொண்டு தான், இன்று புலிப் பாசிசத்தை நியாயப்படுத்த தொடங்கியுள்ளனர். எப்படிப்பட்ட ஒரு துரோகம். இன்றும் தம்மை மூடிமறைத்துக்கொண்டு, ஆளுக்கு தக்க மாதிரி பிரச்சாரம் செய்கின்றனர். புலியிசத்தை தம் வரியாக அணிந்து கொண்டு, புலிப்பாசிசமே சரியானது என்கின்றனர். இன்று அதை பாதுகாப்பது அவசியமானது என்கின்றனர்.

 

பேரினவாதத்தை தடுத்த நிறுத்த வேறு மாற்று கிடையாது என்று விதண்டாவாதமாக நியாயப்படுத்திக் கொண்டு, பாசிசத்தின் நவீன பிரதிநிதிகளாக பவனி வருகின்றனர். இதுவரை புலிக்கு மாற்றாக, வெளியில் எதைத்தான் மாற்றாக முன் வைத்தீர்கள். அதை எப்படி உருவாக்க முனைந்தீர்கள். எதுவுமில்லை. அதை உருவாக்கவிடாது, புலிக்காக சோரம் போன நீங்கள், இப்ப 'புலியை வி;ட்டால் யார் உள்ளனர்" என்று கேட்பது தர்க்கமாகாது. 

 

தமிழ்மக்கள் படுகின்ற துன்ப துயரங்கள் எதையும், நேர்மையாக இவர்கள் இன்று பேசுவது கிடையாது. புலிகள் சொல்வதைத்தான், தமிழ் மக்களின் அவலமாக காட்டி, பாசிச பிரச்சாரம்  செய்கின்றனர். தமிழ் மக்களின் அவலத்தை தமிழ் தேசியமாக்கி, புலியிசத்தை, நியாயப்படுத்துவது தான் தமிழ்மக்களின் விடுதலை என்கின்றனர். அதாவது சமூகம் புலிப் பாசிசப் பிடியில் இருந்து விலகாது இருக்க, இவர்கள் அதை தேசியமாக காட்டி அதை நவீனமாக பிரச்சாரம் செய்கின்றனர். 

 

பி.இரயாகரன்
11.12.2008