Thu02272020

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்

தலைவரின் உரையைக்கடந்து...

  • PDF

தேசியத் தலைவரின் மாவீரர் உரையும்,வை.கோ.அவர்களின் வீராவேசமும். -புரிதலுக்கான உரையாடல்.


2008 க்கான மாவீரர் தின உரையைப் பெரியவர் தந்துவிட்டார்!,திரு.கோபாலசாமி அவர்களும் உணர்ச்சிமிகு உரையைச் செய்து புலம் பெயர்ந்த மக்களை மேலும் போராட்டத்தோடும்,புலிகளோடும் ஈழத்தைக் கனவுகாணவும்,நிதிப் பங்களிப்புச் செய்யவும் அவர் தனது பங்களிப்பைச் செய்துவிட்டார்.எனினும்,சிங்கள அரசு போரை நிறுத்தி மக்களினது நலன்களைக் கவனிக்கப் போறதில்லை!அது,இந்திய மத்திய அரசின் சொல்படி யுத்தத்தில் முனைப்புற்றுப் புலிகளைச் சொல்லித் தமிழர்களைக் கொன்று குவித்துவருகிறது.

 

தேசியத் தலைவரின் உரை மிக உருக்கமானதாக இருக்கிறது.எப்போதும்போல நாம் அதை இப்போது,உடைத்துக்கூத்துக்காட்ட விரும்பவில்லை!அவர் புலம் பெயர்ந்த இளைய தலைமுறையை மையப்படுத்துகிறார்.இது சரியானதே.எனினும்,தமிழ்பேசும் மக்களைப் புலித் தலைமை ஏமாற்றிய தவறை அவர் இன்னும் உணர மறுக்கிறார்!

 

இந்த நிலையில்,இன்றைக்குச் சிங்களப் பாசிஸ்ட்டுக்கள் செய்துவரும் அரசியல் கபடத்தனம் எமது வருங்காலத்தையே இல்லாதாக்கும் பெரும் பலம் பொருந்திய வியூகத்தைக் கொண்டிருக்கிறது.இலங்கையில் பல் தேசிய இனம் இருப்பதே கிடையாதென்கிறது சிங்களம்.இலங்கையர்கள் எனும் அரசியல் கருத்தாக்கத்தின் மறுவடிவம் சிங்களம் என்பதன் நீட்சியாகும்!இன்றைய மகிந்தாவின் குடும்பம் மிக மோசமான இனவழிப்புத் தந்திரத்தோடு,இலங்கைச் சிங்கள ஆளும் வர்க்கத்தினது கனவை நிறைவேற்றுகிறது.இதைப் புரிவதற்குக் கீழ்வரும் பேட்டியே போதுமானது.கோத்த பத்த ராஜபக்ஷ பெரும் தந்திரத்தோடு பேட்டியளிக்கின்றார்.அரசியல் முதிர்ச்சியும்,விவேகமும் அவர்களிடம் கரை புரண்டோடுகிறது.நம்மிடம் உணர்ச்சி அரசியலைக்கடந்து எதுவுமில்லை!கோபால்சாமி அவர்கள்வேறு,உணர்ச்சியைத் தூண்டும் காரியத்தைவிட எதுவும் செய்யவில்லை!

 

நாம் தமிழ் பேசுபவர்கள். நமது தேசம் பாரம்பரியமாக நமது மக்களின் வாழ்வோடும்,வரலாற்றோடும் தொடர்புடைய தமிழ் மண்ணே. அது, வெகு இலகுவாகச் சிங்களமாகிவிட முடியாது.

 

நமது மக்களை வெறும் பேயர்களாக்கும் அரசியலைப் புலிகளுட்பட அனைவரும் செய்துவரும்போது, நாம் மௌனித்திருக்க முடியாது!கருணாவும்-பிள்ளையானும் மட்டுமல்ல சித்தார்த்தனும்,டக்ளசும்,ஆனந்த சங்கரியும்கூடப் பாசிஸ்டுக்கள்-பயங்கரவாதிகள்!இவர்களுக்கு நவீன அரசியல்,அது கொண்டிருக்கும் பரிணாமம்,அது சார்ந்தெழும் பொருளாதார வியூகங்கள்-விஞ்ஞானம்,இன உளவியல் பற்றியெந்த அக்கறையுமில்லை.ஒரே நோக்கம் பதவி,பந்தா,பணம்,பொருள்.தமக்கு எதிரானவர்களைக் கொன்று குவித்தல்!

 

நமக்கோ நமது வரலாற்றுத் தாயகம் சிதைவதில் வேதனை.


இனியும் புலிகள் என்ற ஒரு குழு தமிழரின் எல்லா அறிவுசார்-சமூக மதிப்பீடுகளையும் தீர்மானிக்கமுடியாது.அவர்கள் அங்ஙனம் செய்வது துரோகத்தனமாகும்.நாம் நடாற்றில் தவிக்கும்போது தமது பதவிகளுக்காக யாராவது ஒரு தமிழர் காரியமாற்றுவது முழுமொத்தச் சமுதாயத்தையுமே புதை குழிக்குள் தள்ளுவதாகும்.

 

இந்தத் தருணம் பொல்லாத தருணமாகும்.எதிரி ஈழத்தின் அனைத்துபாகத்திலும் தனது ஆதிக்கத்தைப் பொருளாதாரம் மற்றும் இராணுவத்தின் மூலம் பலப்படுத்தியுள்ளான்.இந்த ஆதிக்கத்தை உடைப்பதற்காக இராணுவத்தைத் தாக்குவது மிகக் கொடிய நிகழ்வுகளைச் செய்யும்.இத்தகையவொரு வியூகத்துள் தமிழ்பேசும் மக்களை வீழ்த்தியுள்ள அன்னிய சக்திகள்.இனவொடுக்குமுறை அரச ஆதிகத்தையும் அதன் அரச வன் முறையந்திரத்தையும் ஒருங்கே இணைத்து,இராணுவ ஆட்சியை நோக்கி மக்ளை வேட்டையாடுகிறான்.இதுவே இன்றைய உலகம் அனைத்திலும் நடந்தேறும் வகையில் அரச-பொருளாதாரச் சூழல் நிலவுகிறது.எனினும்,இலங்கை இத்தகையவொரு நிலையைக் கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னமே எட்டிவிட்டது.


தமிழருக்கான அரசியல் வெறும் சிறுபிள்ளைத்தனமாக விரிகிறது.ஏதோவொரு நாடு-ஏதோவொரு காரணத்துக்காக நம்மை ஆதரித்தால் உடனடியாக மகிழ்ந்து குலாவுகிறோம்.தலைகீழாகத் தாண்டிப் பார்க்கிறோம்.இது அரசியல் வியூகமல்ல.நாம் நமது அரசியலை நமது மக்களின் வேதனைகளோடு பரிசோதித்துப் பார்க்கிறோம்.எங்கள் அறிவு மாற்றானிடம் தஞ்சமடைவதில் பெரு மகிழ்வு கொள்கிறது.இப்போது,அமெரிக்கப் புதிய ஜனாதிபதியும் அவரது வெளிநாட்டு மந்திரியாகிவரும் திருமதி கிளின்டனும் நமக்கு எதிர்பார்ப்புடையவர்களாக விரிகிறார்கள்.இவர்களால் எதுவும் ஆகப்போவதில்லை என்பது முன் தீர்ப்போ-ஜோதிடமோ அல்ல!

 

இது(அந்நிய சக்திகளின் தயவை நாடுதல்) ஏற்புடையதல்ல!


இலங்கை-இந்திய அரசுகளின் இன்றைய வன்னியுத்தம் தமிழ்பேசும் மக்களை அநாதவராக்கும் ஒரு யுத்தமாகும்!

 

வன்னிப் பெரும் யுத்த அழிவானது மக்களின் நிரந்தரமான வாழ்சூழலாக மாற்றப்பட்டு வருகிறது.

 

தமிழ்பேசும் மக்களின் நாளாந்த அழிவுகள் "புலிகளின் பயங்கரவாத்தை" அழிக்கிறோம் எனும் அரசியல் பரப்புரையூடாக நியாயப்படுத்தும் அதி இழிவான செயலில் ஆளும் மகிந்த அரசும்,இந்திய நாடாளுமன்றமும் செயற்பட்டுவருகிறது.தினமும் புதுப்புது இராஜ தந்திரத்தோடு புலிகளும் தத்தமது நியாயப்பாடுகளைச் சொன்னாலும், யுத்தம் நிறுத்தப்படும் வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது.இன்றைய இராணுவச் சமமின்மையான புலிகளின் இராணுவ வலுவானது சிங்கள அரசையும், இந்தியாவையும் பெரு மகிழ்வுக்குள்ளிட்டுச் சென்று, அவர்கள் தமது தந்திரங்களை,சாணாக்கியத்தை செயற்படுத்த வழிவிட்டுள்ளது.திரு.பிரபாகரனின் மாவீரர் உரையைக் கேட்டபின்,இந்தியா எமக்கு உதவுமானால்,அது எப்போதோ இதைச் செய்திருக்கும்.அதைவிட அந்நியர்களை நம்புந்தோரணத்தில் உரை நிகழ்த்துவதே சுத்த மோசமான நிலை!இதுவும்,இராஜதந்திரமென்றுரைக்கப்படலாம்!


இந்த நிலையில் நம்மை இன்னொருவின அரசியல்-அரசு அடிமை கொண்டு பல தசாப்தமாகிறது.

 

நாம் நமது மக்களையே பற்பல பிரிவினைகளுக்குள் தள்ளிவிட்டு,அதைக் கூர்மைப்படுத்தி மேய்த்து வந்திருக்கிறோம்.இந்த நிலையில் நமது மக்களை இனவழிப்புச் செய்து வந்த சிங்கள இனவாத அரச பயங்கரவாதமானது நம்மைக் காவுகொண்ட வரலாறு நீண்டபடியேதான் செல்கிறது.எதிரி ஆயுதத்தை ஒரு நிலையிலும் பல நிலைகளில் அரசியல் வியூகத்துக்கூடாக நம்மை வெறும் கையாலாக இனமாக்கிவிடுகிறான்.


இதை எதிர் கொள்வதற்கான எந்த வியூகமும் தமிழ் பேசும் மக்களிடமில்லை.அவர்கள் இனவுணர்வு மேலோங்க உரையாற்றும் பேச்சுக்களுக்கள் காலத்தைக் கடக்க விரும்புகிறார்கள்.

 

எமது மக்களின் அனைத்துத் தளைகளும் அப்படியேதான் இருக்கப்போகின்றன.அவற்றைக் களைந்துவிடும் புரட்சிகரமான அரசியல் நம்மிடமிருந்து முன்னெடுக்கப் படவில்லை.சிங்கள இனவாதத்துக்கு எதிராகத் தமிழ் இனவாதம் தூக்கி நிறுத்தப்படுகிறது.இது நமக்கு வெற்றியைத் தரமுடியாது.சிங்கள இனவாத்தை சிங்கள ஆளும் வர்க்கம் மட்டுமல்ல அங்கீகரிக்கப்பட்ட அரசுகளும்,அவைகளின் வர்த்தக-வர்க்க நலன்களும் முன் நகர்த்துகிறது.இத்தகைய நலன் நம் இனத்தின் மத்தியிலுள்ள ஓட்டுக்கட்சி அரசியல் வாதிகளை,இயங்கங்களை தமக்குச் சார்பாக அணைத்தெடுத்து நமக்கு எதிராக முன் நிறுத்துகிறது.

 

கோபாலசாமிவகை உணர்ச்சி அரசியற்பார்வையால் சமூகத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய்வுசெய்யமுடியாது!

 

புலிகளின் சிந்தனாமுறை, வேலைத்திட்டம்,அரசியல் அமைப்பு, இவர்கள் பின்னாலுள்ள வர்க்கச் சக்திகள்-இராணுவ உபாயங்கள்,போராட்டச் செல் நெறி போன்ற யாவும் விரிவாகப் பரிசீலிக்க வேண்டிய இன்றைய நிலையில்,மீளவும் இனப் பெருமைபேசிப் பயனில்லை!இதைப் புலம் பெயர்ந்த மக்கள் புரியவேண்டும்.

 

மகிந்தாவினதும்-சிங்கள ஆளும் வர்க்கத்தினதும் அரசியல்-இராணுவ வியூகம் தொடர் வெற்றிகளைப் பெறுகிறதே,அது எங்ஙனம் சாத்தியமாகிறது?

 

தமிழர் தரப்பு,இராணவரீதியாகவும்,அரசியல் ரீதியாகவம் இப்போது தோற்றுவருவதற்கு நமது சிந்தனா முறையின் வீழ்ச்சியல்லக் காரணமாகும்.

 

இதன் காரணத்துக்கு எமது வர்க்க உறவுகளே காரணமாகிப் போகிறது.

 

நாம் வெறும் பிற்போக்குவாதச் சக்திகளோடு கூடி குலாவிய அளவுக்கு முற்போக்குத் தளங்களை அண்டவேயில்லை.

 

நமது காலாகாலமான ஓட்டுக் கட்சி அரசியலானது பிற்போக்குத் தனத்தின் கடைக்கோடி அரசியலையே தமிழரின் வீர அரசியலாக்கியது.அதன் அறுவடையே இன்றைய இந்தத் தோல்விகள்,குழறுபடிகள்-குழிப்பறிப்புகள்.

 

ஒவ்வொரு தமிழ்ப்பிரதேசமும் தனக்கெதிராகவே செயற்படுகிறது.

 

குறுகிய நலன்கள் எதிரிக்கான நீண்டகால நலன்களை உறுதிப்படுத்துகிறது.


தமிழர்கள் தத்தமது குறுகிய நலன்களுக்காக முழுமொத்த மக்களினதும் நீண்டகால நலன்களை இழப்பது மிகக் கேவலமான சிந்தனையற்ற சிறுபிள்ளைத்தனமானதாகும்.இது மக்களை உயிரோடு புதைப்பதாகும்.இன்றைய இந்தவுண்மையைப் புலிகளின் தலைவரின் உரையினூடாக மெல்லவுணர முடியும்.எனினும்,இது காலாங்கடந்த ஞானம்.எதிரி குரல்வளையை நசிக்கும்போது இத்தகைய குரலைக்கேட்டு என்ன செய்யமுடியும்?அல்லது,அவரே சொல்வதுபோன்று இந்தியாவிடம் மடிப்பிச்சை எடுப்பதா நமது விடுதலை?

 

நாம் நிறையச் சிந்திக்க வேண்டும்


தலைவரின் உரையைக்கடந்து,


எதிர்கால அரசியல்-போராட்டம் குறித்து!


ப.வி.ஸ்ரீரங்கன்.
29.11.2008

Last Updated on Saturday, 29 November 2008 18:20