இன்றைய தமிழீழப் போராட்டத்தின் தேக்கநிலையும், இந் நிலைக்கு உரிமையுடைய பாசிச சக்திகளின் வளர்ச்சியை முறியடித்து ஒரு சரியான போராட்டத்தை முன்னெடுத்து நெறிப்படுத்த ஒரு தலைமையின் தேவை நம்மெல்லார் முன்னுமுள்ளது. இத் தேவையின் பிரதிபலிப்பாகவே ஜரோப்பிய நாடுகளில் பல சஞ்சிகைகளும், தனிநபர் கருத்துக்களும் வெளிவருகின்றன.

 

அனேகமான இச்சஞ்சிகைகளின் வெளியீட்டாளர்களும், தனிநபர்களும் கடந்தகாலப் போராட்டத்தில் ஏதோ ஒருவகையில் பங்கு கொண்டவர்களாகவே உள்ளனர்.

 

இவர்களது தேடலும், விமர்சனங்களும் போராட்டத்தை விளங்கப்படுத்தி, நெறிப்படுத்த வேண்டும் என்பதே, சமூக நோக்கம் கொண்டவர்கள் அனைவரினதும் விருப்பபாகும்.

 

இன்று வெளிவரும் கருத்துக்கள் தொடர்பாகவும், குறித்த கருத்துக்களைச் சொல்பவர்கள் தொடர்பாகவும் சமர் கடந்த இதழ்களில் கருத்துச் சொல்ல முற்பட்டது. இக் கருத்துக்கள் தொடர்பாக விமர்சித்த பலரில் ஒரு சாரார் எம்முடன் கடந்தகாலங்களில் கொண்டிருந்த சாதாரண உறவைக் கூடத் துண்டித்துக் கொண்டனர். சமர் பற்றி ஆதாரமற்ற வகையில் வதந்திகளைப் பரப்பும் சக்திகளில் கணிசமான பங்கு மேற்குறிப்பிட்ட நபர்களுக்குண்டு. இவை பற்றி சமரின் நிலை யாதெனில், குறித்த எந்த விமர்சனத்தையோ வதந்தியையோ, எழுத்தில் முன்வைக்காது வெறும் திண்ணைப் பேச்சோடே முடிந்து விடுவது ஆரோக்கியமான விமர்சனமல்ல என்பது மாத்திரமல்லாமல் சோம்பேறித்தனத்தின் வெளிப்பாடுமாகும். சமர் தொடர்பான எக்கருத்தையும் நாம் திறந்த மனத்துடன் விமர்சனம், சுயவிமர்சனத்துடன் அணுகத் தயாராகவுள்ளோம்.

 

கடந்ததகாலத்தில் எமது விமர்சனங்கள் தொடர்பான எமது நிலையை தெளிவுபடுத்துவது அவசியமானது. எதிர்காலத்தில் கருத்துக் கூறுபவர்கள் யாராக இருப்பினும் எமது விமர்சன அணுகுமுறையைச் செய்யத் தவறின் ஒரு சரியான தலைமையை உருவாக்க முடியாதென திட்டவட்டமாக நாம் கூறுகின்றோம். இன்று வருங்காலப் போராட்டத்தை தனிநபர்களின் கடந்தகாலம் அத்துடன் இன்றைய அவர்களின் கருத்துக்களையும் மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். இவ் விமர்சனத்தை மறுக்க அல்லது அவர்கள் தொடர்பான விமர்சனத்தை ஜீரணிக்க மறுப்பதென்பது ஒரு சரியான அரசியல் தலைமைக்கப்பால் ஒரு புலியையோ, அல்லது ஒரு சில பிரமுகர்களையோ உருவாக்கவே முயல்பவர்களாகவே இருப்பார்கள். குறித்த கருத்துக்கள் தொடர்பாக அக் கருத்தின் முழுப்பக்கத்தைவும் எந்த ஒளிவுமறைவுமின்றிச் சொல்லல் வேண்டும். அப்படிச் சொல்லும் போது அவை நாகரீகமில்லை, முற்போக்குக்குள் இப்படிப்பட்ட விவாதமா? இது புலிகளைப் பலப்படுத்தவே உதவும், இது பத்திரிகை தர்மமில்லை, இது முத்திரை குத்தல் ....... இப்படிச் சொல்லப்படும் எந்த வாதமும் விமர்சனத்தை தடுக்கும் செயற்பாடு மாத்திரம் அல்லாமல் ஒரு ஆரோக்கியமான சரியான தலைமையின் உருவாக்கத்தை தடுக்க முயலும் செயலுமாகும். ஒரு கருத்தின் மீது பிழையான விமர்சனம் வைப்பின் அதைக் கூட விமர்சிக்கும் உரிமையுண்டு. விமர்சனமென்பது சமூக இறுக்கத்துடன், ஆதாரங்களுடன் அமைவதாகயிருக்க வேண்டும். அப்போது தான் ஒரு சரியான தலைமை உருவாகும்.