Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர். உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர" செய்தி ஊடகங்கள் இஸ்லாமிய 'பயங்கரவாதம்" என்று மூளைச்சலவை செய்கின்றன.

அறிவு, நேர்மை என எதும் கிடையாத கும்பல்கள் எல்லாம் கொக்கரிக்கின்றது. ஐயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.

 

ஒரு மருத்துவர் நோய் வரக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு தான் மருந்து கொடுத்து அந்த நோயைக் சுகப்படுத்துகின்றனர். இன்று 'பயங்கரவாதம்" என்ற சமூக நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்த வேண்டும். இதுதானே அறிவும், நேர்மையுள்ள ஒருவன் செய்ய வேண்டிய பணி. இல்லாத எல்லோரும் 'பயங்கரவாத"த்தின் தோற்றத்துக்கு துணை போபவர்கள் தான். 

 

இந்து பயங்கரவாதத்தின் அடிப்படை

 

இது சாதி அடிப்படையிலானது. தனக்குக் கீழ் 'கீழ் மக்களை" உற்பத்தி செய்கின்றது. இதை மூடிமறைக்க முஸ்லீம் மக்கள் மேல், இந்து பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

 

இப்படி இரட்டை வடிவங்களின் சமூகத்தில் சுதந்திரம், ஜனநாயகம் சமத்துவம் என அனைத்தையும், தனக்கு (உயர்சாதிக்கு) அல்லாத மக்களுக்கு மறுக்கின்றது.

 

இந்த பயங்கரவாத பாசிசக் கும்பல், இந்த முஸ்லீம் மக்களுக்கு இழைத்த கொடுமைகள் எவையும் நீதி விசாரணைக்கு வந்தது கிடையாது. சட்ட ஒழுங்கை பாதுகாப்பதாக கூறிய அடக்குமுறை இயந்திரங்கள், அப்பாவி முஸ்லீம் மக்களை வகை தொகையின்றி குதறியது. இவர்கள் கட்டமைத்த நீதியின் முன், நீதி மறுக்கப்பட்டு மீண்டும் முஸ்லீம்கள் வதைக்கப்படுகின்றனர்.

 

ஒரு இந்திய முஸ்லீம், இந்து பயங்கரவாத பாசிச ஆட்சியில் உயிருடன் வாழ்வதும் சரி, 'பயங்கரவாத" நடவடிக்கையில் ஈடுபட்டு மடிவதும் அவனைப் பொறுத்தவரையில்  ஒன்றுதான். இதைவிட வேறு ஒரு தீர்வை சமூகம் வழிகாட்டவில்லை. இந்துத்துவ ஒடுக்குமுறையை எதிர்கொண்டு முஸ்லீம் வாழமுடியாத வகையில், மொத்த சமூக நிறுவனமும் இந்துத்துவ காவிமயமாகி நிற்கின்றது.

 

இவை அனைத்தும் சாதி ரீதியாக தாம் கொடுமைப்படுத்தி ஆளும் பார்ப்பனிய கொடுங்கோலாட்சியை மூடிமறைக்க அவர்களுக்கு தேவையானதாக உள்ளது. மதவாதத்தை உயர்த்தயி இந்திய ஆட்சி வடிவங்கள் தான், 'பயங்கரவாத'த்தை உற்பத்தி செய்கின்றது.

 

இந்து பார்ப்பனிய இந்துத்துவம் தான் ஒரிசாவில் கிறிஸ்துவ மக்கள் மேல் அண்மையில் கொலைவெறித் தாக்குதலை நடத்தியது. இதன் எதிர்வினையான கிறிஸ்துவ 'பயங்கரவாதம்" நாளை இந்தியா மேல் உருவாகலாம். குஜராத் படுகொலை, பம்பாய் படுகொலை, அத்வானியின் ரத யத்திரையுடன் அரங்கேறிய படுகொலை, பாபர் மசூதி இடிப்புடன் அரங்கேறிய படுகொலை, இப்படி முஸ்லீம் மக்கள் மேல் எண்ணிக்கையற்ற பார்ப்பனிய இந்துத்துவ படுகொலைகள். நாள்தோறும் ஒரு முஸ்லீம் என்பதால், இந்து பயங்கரவாதிகளால் அந்த மக்கள் ஒடுக்கப்படுகின்றனர். எத்தனையோ படுகொலைகள், எத்தனையோ விதமான ஒடுக்குமுறைகள் நடந்த போதும், இதற்கு எதிராக சட்டம் செயல்பட்டது கிடையாது, நீதி விசாரணை நடைபெற்றது கிடையாது. பெரும்பான்மை மக்கள் இந்த அநீதியை எதிர்த்து போராடியது கிடையாது.

 

'பயங்கரவாதம்" இப்படித்தான் உருவாகின்றது. சட்டமும், நீதியும் இந்து மயமான சமூக அமைப்பில் முஸ்லீம் மக்களுக்கு மறுக்கப்பட்ட நிலையில், அவர்களை வேட்டையாடி ஒடுக்கியவர்கள் ஆட்சியில் அமர்ந்து நாட்டை ஆளும் போது 'பயங்கரவாத" வழிதான் அவர்களுக்கு தம் எதிர்ப்பைக் காட்ட உதவுகின்றது. இதனால் இந்துத்துவ ஒடுக்குமுறை அதிகரிக்கும், என்பதை 'பயங்கரவாதத்"தில் ஈடுபடும் நபர்கள் புரிந்து கொள்வதில்லை. சமூகத்துடன் சேர்ந்து போராடுவது தான், விடுதலைக்கான மாற்றுவழி.

 

மறுபக்கத்தில் மற்றவர்களும் இதைத்தான் செய்கின்றனர். இன்று இந்தியாவில் இந்த பயங்கரவாதம், உங்கள் ஒத்துழைப்புடன் ஆட்சியைப் பிடிக்க பயன்படவில்லையா? உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். இந்து என்று சொல்லி கட்சிகள் இல்லையா? சாதியைச் சொல்லி கட்சிகள் இல்லையா? இவர்கள் தானே 'பயங்கரவாதிகளை" உற்பத்தி செய்கின்றனர். இதை கண்டித்து, இதற்கு எதிராக போராடுவதுதான் 'பயங்கரவாதத்தை' ஓழிக்க உள்ள ஒரே வழி. அதாவது முஸ்லீம் என்பதால், நீதி மறுக்கப்படுவதை எதிர்த்து நாம் போராடுவதன் மூலம் 'பயங்கரவாத"த்தை ஒழிக்க முடியும். முஸ்லீம் வெறுப்புணர்வை கட்டமைக்கும் சாதிய ஒடுக்குமுறை எதிர்த்து போராடும் ஒருவன் தான், உண்மையாக மூஸ்லீம் மக்களின் நீதிக்காக போராடி 'பயங்கரவாதத்தை" உண்மையாக ஒழிப்பான்.

 

பி.இரயாகரன்
28.11.2008