Language Selection

பி.இரயாகரன் -2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் மக்களாகிய எம் கையில் அது உள்ளது. ஆனால் நாம் அடிமைகளாக்கப் பட்டுள்ளோம். செயலற்ற நிலைக்கு தள்ளப்பட்டு, நாம் நடைப்பிணமாகியுள்ளோம். தமிழ் மக்களையே அழித்தொழிக்கும் பேரினவாத யுத்தத்தை ஒட்டி, தமிழ் மக்களாகிய நாம் எந்தக் கருத்தையும் சுதந்திரமாக கூற முடியாத அவலம். தமிழ் மக்களாகிய நாம், எம் சொந்தத் தலைவிதியைத் தீர்மானிக்க முடியாத வகையில் எமக்கு எதிராக பல துப்பாக்கிகள்.

 

ஒன்றலல் இரண்டல்ல. பல. புலிகள், துரோகக் குழுக்கள் முதல் பேரினவாதம் வரை, தமிழ் மக்கள் மேல் தம் துப்பாக்கியை நீட்டி வைத்து, இது தான் உங்கள் தலைவிதி என்கின்றன. சாதாரணமான மனித உரிமை முதல் இனத்தின் சுயநிர்ணயவுரிமை வரை மறுத்து, இது தான் தீர்வுகள் என்கின்றனர். இதைத்தான் இன்று தமிழ் மக்களாகிய நாம் அனுபவிக்கின்றோம்.

 

தமிழ் மக்களாகிய நாம் எம் விடுலையை நாமே தீர்மானிக்க முடியாது என்கின்றனர். நாம் எமக்காக போராட முடியாது என்கின்றனர். ஒட்டுமொத்தத்தில் தமிழ் மக்களாகிய எம்மை, இவர்கள் இப்படி தோற்கடித்துள்ளனர்.

 

இதை மூடிமறைக்க, இவர்கள் மக்களுக்கு வித்தைகள் காட்டமுனைகின்றனர். சலுகைள், தீர்வுகள், தேர்தல்கள், பதவிகள், பந்தாக்கள், பிரதேசவாதங்கள், முதல் ஒரு வெற்றிகரமான ஒரு இராணுவத் தாக்குதல், இதன் மூலம் தமிழ் மக்களையே மீள மீள ஏமாற்றி விடவே முனைகின்றனர். இதுவே தமிழ் மக்களின் விடுதலைக்கான பாதை என்று சொல்லமுனைகின்றனர்.   

 

இவைகள் எல்லாம் மீளமீள தமிழ் மக்களை அடிமையாக வைத்திருக்க செய்கின்ற முயற்சிகள். தமிழ் மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமைகளையே மறுப்பது முதல், சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளவே கூட இவர்கள் மறுக்கின்றனர். இது வெட்ட வெளிச்சமானது. இவர்கள் யாருக்கும் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி, எந்த அக்கறையுமில்லை.. பேரினவாதத்துக்கு மட்டும் எப்படி இருக்கும்? தம் அதிகாரங்கள், பதவிகள், பட்டங்கள், சுகபோகங்கள், சொத்துக்கள் பற்றித்தான், இவர்களின் தீராத கவலைகள். 

 

புலிகள் முதல் துரோகக் குழுக்கள் வரை மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதன் மூலம்தான், தமிழ் மக்களை தோற்கடித்துள்ளனர். இதன் மேல் தான் பேரினவாதம் கடிவாளம் கட்டி, தமிழ் மக்களை குதறுகின்றது. இதுவே தான் உண்மை. இதை யாராலும் மறுக்க முடியுமா? 

 

இதை தடுத்து நிறுத்த நாம் என்ன செய்ய வேண்டும்

 

தமிழ் மக்களாகிய நாம், எம் சொந்த அடிப்படை உரிமைகளை மீட்க வேண்டும். இதுவல்லாத எதுவும், தனிமனித உரிமையைக் கூட வழங்காது. அடிமையாய் நடைப்பிணமாய் நாம் இருப்பதா இல்லையா என்பதை, இது தான் தீர்மானிக்கின்றது. இதுவல்லாத எந்த வழியிலும், பேரினவாதத்தின் வெற்றியை நாம் தடுத்து நிறுத்த முடியாது.

 

பேரினவாதத்துக்கு எதிராக மக்கள் போராட, தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை புலிகள் வழங்க மறுக்கின்றனரே ஏன்!? பேரினவாதத்தை ஒரு கையால் அடிப்பதற்கு பதில், பல கையால் அடிப்பதை ஏன் புலிகள் தடுக்கின்றனர்!? பேரினவாதத்துக்கு எதிராக சுதந்திரமாக போராடுவதை, ஏன் புலிகள் அனுமதிக்க மறுக்கின்றனர்!? அப்படி போராடுவதை துரோகம் என்கின்றனரே, ஏன்!?

 

பேரினவாதத்துக்கு எதிராக போராட முனைபவர்களை துரோகியாக்கி, எதிரியை நோக்கி தள்ளுவது ஏன்? இன்று எதிரியுடன் சேர்ந்துள்ள தமிழ் துரோகிகளை, எதிரியின் பக்கத்தில் அணிதிரள வைத்தது புலிகள் தானே!? இல்லையென்று யாராலும் சொல்ல முடியுமா? இதை தவறு என்ற சொல்ல யாரும் என் முனையவில்லையே ஏன்? அச்சமா!?

 

எதிரியைப் பலப்படுத்திய புலியா, தமிழ் மக்களின் மீட்பாளர்கள்!? எதிரி எவ்வளவு நுட்பமாக, புலிகளின் பாசிசத்தின் கோரப்பிடியில் இருந்து தப்பி வருவபர்களை எல்லாம் அரவணைத்து, தன்னைப் பலப்படுத்தியுள்ளது. எதிரி தமிழ் மக்களின் போராட்டத்தை தோற்கடிக்க, அனைத்து சக்திகளையும் பயன்படுத்துகின்றது. இதற்கு உதவுவதையே, புலிகள் செய்தனர். இப்படி எதிரியைப் பலப்படுத்தினர். தமிழ் மக்களை பல கூறுகளாக புலிகள் பிளந்தனர். இந்த பிளவைத்தான் எதிரி பயன்படுத்தி, தமிழ் மக்களின் நண்பனாக வேடம் போடுகின்றான். இல்லை என்று யாராவது சொல்லத் துணிவுண்டா? இதை கண்டிக்க கூட முடியாது, நீங்கள் யாரைக் கண்டு அஞ்சுகின்றீர்கள். சொல்லுங்கள். 

 

இந்த தவறுகளை திருத்தவும், சுயவிமர்சனமும் செய்யத்தயாரற்ற ஒரு நிலையில் தான், போராட்டம் தோற்கடிக்கப்படுகின்றது. 

 

இந்தத் தோல்வியில் இருந்து தப்ப, தமிழ் மக்களின் தம் சொந்த செயல் மட்டும் தான் சாத்தியமானது. இது தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து செயல்களையும் எதிர்த்து நிற்பதாகும். மக்களை வெறும் மந்தைகளாக, தம் தேவைக்கு பயன்படுத்துவதை எதிர்த்து, மக்கள் தாமே தீர்மானம் எடுக்கும் ஒரு நிலைமை தான் பேரினவாதத்தை தோற்கடிக்கும். 

 

மக்களைத் தோற்கடித்த புலிகளை தோற்கடிப்பதன் மூலம், பேரினவாதம் தமிழ்மக்களின் அடிமைத்தனத்தை ஊர் உலகம் அறிய பறைசாற்ற முனைகின்றது. இப்படி புலிகள்  மக்களை தோற்கடித்ததன் மூலம், பேரினவாதம் கொக்கரிக்கும் வகையிலான ஒரு வெற்றியைத் தங்கத் தட்டில் வைத்துப் பரிசளிக்கின்றனர்.

 

இதை மக்கள் மட்டும் தான் இன்று தடுத்த நிறுத்த முடியும். புலிகளால் முடியாது. மக்கள் தம் உரிமைகளை மீளப் பெறுவதன் மூலம், பேரினவாதத்தின் கொட்டத்தை அடக்க முடியும். பேரினவாதத்தை எதிர்த்துப் போராடும் உரிமையை மீளப் பெறுவதும், அதை நோக்கி நகர்வதும் தான் தமிழ் மக்களை இன்று பாதுகாக்கும்.

 

பேரினவாதத்தின் பாதத்தை நக்கும் துரோகிகளை புறம்தள்ளி, மக்கள் உரிமையை மறுக்கும் புலியை மறுத்து, மக்கள் தம் சொந்த விடுதலைக்காக போராடுவதால் மட்டும்தான், தமிழ் மக்கள் தம் சொந்த தலைவிதியை தீர்மானிக்கமுடியும்.

 

புலிகளை நம்பினால் தோல்வி நிச்சயம்

 

இது எமது கற்பனையல்ல. மக்களின் உரிமையை பறித்த, எந்தப் போராட்டமும் வெற்றிபெற முடியாது. அது மக்களின் விடுதலையுமல்ல. யாருக்கு விடுதலை? மக்களுக்கு விடுதலை என்றால், மக்கள் தான் போராட வேண்டும். இதை மறுப்பவர்கள், மக்களின் எதிரிகள் தானே. மக்களை எதிரியாக்கி, மக்களின் போராட்டத்தை தோற்கடிப்பவர்கள் தானே. மக்களை ஒடுக்கி அவர்களை தம் அடிமைகளாக்கி, அவர்களையே கண்காணிக்கும் புலிகளின் போராட்டம், தோல்வியை தழுவுவது தவிர்க்கமுடியாது. அது அதன் சொந்த தலைவிதி.

 

பேரினவாதத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தை புலிகள் நடத்துகின்றனர் என்ற ஒரு மைய அம்சம், அது அவர்களின் சொந்த இருப்பு சார்ந்த போராட்டத்தின் அடிப்படையிலானது. இது இல்லாது அவர்கள் உயிர் வாழவே முடியாது. ஆனால் இது எந்த விதத்திலும் தமிழ்மக்களின் உரிமைகளுடனும், சுயநிர்ணயத்துடனும் தொடர்புடையதல்ல. அதை மறுப்பவர்களாக புலிகள் உள்ளனர். 

 

புலிகள் பேரினவாதத்தை எதிர்த்து நிற்பதால் தான், நாங்கள் அதை மக்கள் போராட்டமாக மாற்றும்படி தொடர்ச்சியான ஒரு விமர்சனத்தை முன் வைத்து வந்தோம். இது மட்டும் தான் பேரினவாதத்தின் வெற்றியை தடுத்து நிறுத்தும் என்ற உண்மையை, முன் வைத்து வந்தோம். இந்த வகையில் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் புலியை நோக்கிய விமர்சனத்தையும், மக்கள் சுயமாக தம் சொந்த போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலம், பேரினவாதத்தின் கடிவாளத்தை கைப்பற்றி அதை தடுத்து நிறுத்த முடியும். இதைவிட வேறு எந்த மாற்றும், இன்று எம்முன் கிடையாது.    
        
பி.இரயாகரன்
21.11.2008