Language Selection

புதிய ஜனநாயகம் 2008

"நல்ல காலம் முடிந்தது''  இப்படி அலறுகிறது, இந்தியாடுடே வார இதழ். 21,000 புள்ளிகளாக இருந்த பங்குச் சந்தை வளர்ச்சி, 10,000 புள்ளிகளுக்கும் கீழே சரிந்து விழுந்த பிறகு; பங்குச் சந்தை சூதாட்டத்தால் உலகக் கோடீசுவரர்களான இந்தியத் தரகு முதலாளிகளின் சொத்து மதிப்பு சடசட வெனச் சரியும்பொழுது, இப்படித்தான் ஓலமிட முடியும்.


 பங்குச் சந்தையும், தகவல்தொழில்நுட்பத் துறையும், ரியல் எஸ்டேட் வியாபாரமும், சுற்றுலா உள்ளிட்ட சேவைத் துறையும், ஏற்றுமதி சார்ந்த தொழில்களும் இந்தியாவை வல்லரசாக்கி வருவதாகக் கூறி வந்தார்கள். ஆனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமி இந்தத் தொழில்கள் அனைத்தையும் ஆட்டம் காண வைத்துவிட்டது; தாராளமயம் உருவாக்கியிருந்த நீர்க் குமிழி உடைந்து விட்டது. ஆளும்வர்க்கம் பீற்றிக் கொண்ட 9 சதவீத பொருளாதார வளர்ச்சி, வேரோ விழுதோ அற்ற வளர்ச்சி என்பது நிரூபணமாகிவிட்டது.


 அரசு, பொருளாதாரத்தில் தலையீடு செய்வதை "லைசென்ஸ் ராஜ்ஜியம்'', "கோட்டா ராஜ்ஜியம்'' எனத் தூற்றிய முதலாளிகள், இன்று அரசாங்கம் உதவ வேண்டும் எனத் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார்கள். ஆட்குறைப்புச் செய்வதன் மூலம், புதிய முதலீடுகளைச் செய்யாமல் பணத்தை இரும்புப் பெட்டிக்குள் பூட்டி வைத்துக் கொள்வதன் மூலம் அரசையும் மக்களையும் ""பிளாக் மெயில்'' செய்கிறார்கள். முதலாளிகளின் மிரட்டலுக்கு ஆடிப் போன மன்மோகன்  ப.சிதம்பரம் கூட்டணி 1,85,000 கோடி ரூபாயைச் சந்தையில் கொட்டுகிறது.


 மனசாட்சியோடு கொஞ்சம் ஒப்பிட்டுப் பாருங்கள். ஏறத்தாழ ஒரு இலட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட பிறகுதான்; பல இலட்சக்கணக்கான விவசாயிகள் தாராளமயத்தால் ஓட்டாண்டியாகி, விவசாயத்தை விட்டு நகர்ப்புறங்களுக்கு அகதிகளாக இடம் பெயர்ந்த பிறகுதான், மன்மோகன் சிங் விவசாயக் கடன் தள்ளுபடி என்ற அரைகுறை திட்டத்தை அறிவித்தார்.


 இப்பொருளாதார நெருக்கடியால் எந்தவொரு முதலாளியும் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவில்லை; எந்தவொரு முதலாளியும் ஓட்டாண்டியாகித் தெருவுக்கு வந்துவிடவில்லை. ஆனாலும் கடந்த அக். 6 தொடங்கி அக்.20க்குள், இரண்டே வாரத்திற்குள் 1,85,000 கோடி ரூபாய், முதலாளிகள் வாரிக் கொள்ளும்படி சந்தையில் கொட்டப்பட்டது. இது, மன்மோகன் சிங்கின் சொந்தப் பணமோ, முதலாளிகளின் அப்பன் வீட்டுச் சொத்தோ அல்ல. இந்த 1,85,000 கோடி ரூபாயும் இந்திய மக்களின் சேமிப்புப் பணம்; மக்கள் அரசாங்கத்திற்கு வரியாகக் கட்டிய பணம்.


 இந்திய முதலாளிகளும், அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் சுவிஸ் நாட்டு வங்கிகளில் போட்டு வைத்துள்ள கருப்புப் பணம் மட்டும் 55 இலட்சம் கோடி ரூபாய் என்றும்; கருப்புப் பணத்தை சுவிஸ் நாட்டு வங்கிகளில் பதுக்குவதில் இந்தியாதான் முதலிடத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன (தினமணி 16.10.2008) மன்மோகன் சிங் இந்தக் கருப்புப் பணத்தை முடக்கினால், பங்குச் சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள "நட்டத்தை' மட்டுமல்ல, இந்தியாவின் உள்நாட்டுவெளிநாட்டுக் கடன்களைக் கூட அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம். ஊழல்வரி ஏய்ப்பின் மூலம் குவிக்கப்பட்ட இந்தக் கருப்புப் பணத்தின் மீது கை வைக்கத் தயங்கும் மன்மோகன், பொதுமக்களின் சேமிப்பைப் பங்குச் சந்தை சூதாடிகளுக்காக வாரியிறைக்கிறார்.


 மாணவர்களுக்குக் கல்விக் கடன் தர மறுக்கும் வங்கிகள்; சிறு தொழில்களுக்கு உரிய நேரத்தில் உதவ மறுக்கும் வங்கிகள்; விவசாயக் கடன் தர மறுக்கும் வங்கிகள், பங்குச் சந்தைச் சூதாடிகளைக் காப்பாற்ற வட்டியைக் குறைத்து, தங்கள் கஜானாவைத் திறந்து வைத்துவிட்டன.


 அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அமெரிக்க முதலாளிகளைக் கைதூக்கி விட 70,000 கோடி அமெரிக்க டாலர் பெறுமான மானியத் திட்டத்தை அறிவித்த பொழுது, அதற்காக அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் நாடகத்தை நடத்த வேண்டியிருந்தது. மன்மோகன் சிங்  ப.சிதம்பரம் கும்பலோ, 1,85,000 கோடி ரூபாய் மானியத்தை வாரிக் கொடுக்க, யாருடைய ஒப்புதலுக்காகவும் காத்திருக்கவில்லை.
 விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பொழுது, அதனால் வங்கிகள் நட்டமடையும் எனக் கவலைப்பட்ட பொருளாதார நிபுணர்கள்; அத்திட்டத்தை ஓட்டுவங்கி அரசியல் எனக் கிண்டலடித்த நடுத்தர வர்க்கக் கனவான்கள், முதலாளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த மானியம் பற்றி வாய் திறக்க மறுக்கிறார்கள். ஏதோ நாட்டு நலனுக்காகத்தான் இந்தப் பணம் கொடுக்கப்பட்டதைப் போலச் சாதிக்கப் பார்க்கிறார்கள்.


 பங்குச் சந்தை வளர்ச்சி 20,000 புள்ளிகளாக ஊதிப் பெருத்திருந்தபொழுது, முதலாளித்துவ நிறுவனங்களின் பங்கு மதிப்பு 62,16,900 கோடி ரூபாயாக வீங்கியிருந்தது. இந்தச் சரிவினால், இந்தச் சந்தைத் திரட்சி சரிபாதியாக வீழ்ந்து விட்டது. இதனால், அம்பானி, மிட்டல் போன்ற உலகக் கோடீசுவரர்களின் சொந்த சொத்து மதிப்பும் படுத்துவிட்டது. மீண்டும் பங்குச் சந்தை வீங்கினால்தான் இவர்களின் சொத்து மதிப்பு உயரும். அதற்குத்தான் இந்த 1,85,000 கோடி ரூபாய் பயன்படும். வீட்டுக் கடன் மூலம் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் கைகளுக்கும்; நுகர்பொருள் கடன் மூலம் மேட்டுக்குடி ஊதாரிக் கும்பலின் பாக்கெட்டுக்கும்தான் இந்த 1,85,000 கோடி ரூபாய் செல்லப் போகிறது.


 மாறாக, பங்குச் சந்தை வளர்ச்சியின் கவர்ச்சியில் மயங்கி, அதில் பணத்தைப் போட்டு, 3,00,000 கோடி ரூபாய் நட்டமடைந்திருக்கும் நடுத்தர வர்க்கத்து ஆசாமிகளுக்குக் கூட இந்தப் பணம் உதவப் போவதில்லை.


···


 பங்குச் சந்தையை சேவைத் துறை எனப் புகழ்ந்து தள்ளிக் கொண்டிருந்த மன்மோகன் சிங், இன்று அதனைச் சூதாட்டப் பொருளாதாரம் எனச் சொல்லும் அளவிற்கு இடிந்து போய் நிற்கிறார். "பங்குச் சந்தை சூதாட்ட பேர்வழிகளைக் கட்டுப்படுத்த உலகளாவிய அளவில் கண்காணிக்கும் நிர்வாக அமைப்புகள் தேவை'' என சமீபத்தில் ஜப்பானில் நடந்த ஆசிய  ஐரோப்பிய நாடுகளின் மாநாட்டில் உபதேசம் செய்திருக்கிறார்.


 இந்தியப் பங்குச் சந்தையின் சரிவுக்கு அந்நிய முதலீட்டு நிறுவனங்கள்தான் காரணம் என முதலாளித்துவப் பத்திரிகைகள் கூடக் குற்றஞ் சுமத்துகின்றன. அந்நிறுவனங்கள் 1,000 கோடி டாலர் பெறுமான பங்குகளைத் திடீரென விற்று, இலாபத்தை எடுத்துக் கொண்டு ஓடிப் போனதால், பங்குச் சந்தை மட்டுமல்ல, இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து விட்டது. மன்மோகன் சிங், இந்த வெளியேற்றத்தைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால், அவரோ பங்குச் சந்தை சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், மேலும் பல சலுகைகளை வாரியிறைத்து வருகிறார்.


 ஒருவர், தான் இன்னார் எனக் காட்டிக் கொள்ளாமல் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய பங்கேற்புப் பத்திரம் என்றொரு வசதி இருக்கிறது. கருப்புப் பணத்தை நல்ல வெள்ளைப் பணமாக மாற்றிக் கொள்ளப் பயன்படும் குறுக்கு வழி இது. இந்தியாவின் கருப்புப் பண முதலைகள், அந்நிய நிதி நிறுவனங்களின் மூலம் இந்த வழியைப் பயன்படுத்திக் கொண்டுதான் சூதாடுகிறார்கள் என மோப்பம் பிடித்துவிட்ட பங்குச் சந்தை பரிமாற்ற வாரியம், இந்தக் குறுக்கு வழியை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டும் எனக் கோரியது. மன்மோகன் சிங் இத்தடைக்கு ஒத்துக் கொள்ளாததால் அந்நிய நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தையில் செய்யும் முதலீட்டில், பங்கேற்புப் பத்திரங்கள் 40 சதவீத அளவிற்குள்தான் இருக்க வேண்டும் எனக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. ஆனால், இப்பொழுதோ, பங்குச் சந்தை சரிவைத் தடுத்து நிறுத்துவது என்ற பெயரில், இக்கட்டுப்பாடு முற்றிலுமாக நீக்கப்பட்டு, கருப்புப் பணப் பேர்வழிகளின் முதலீட்டுக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. பூனைக்கு மணி கட்ட வேண்டும் என்ற அவரது உபதேசம் ஊருக்குத்தான் போலும்!


···


 பங்குச் சந்தையை மட்டுமல்ல, இந்திய நிதி சந்தை முழுவதையும் அந்நிய நிறுவனங்களிடம் தூக்கிக் கொடுத்துவிட வேண்டும் என்பதுதான் மன்மோகன் சிங் கும்பலின் இலட்சியம். அந்நிய நிதி நிறுவனங்கள் காப்பீடு துறையில் 26 சதவீதம் அளவிற்கு மூலதனம் இடுவதை அனுமதித்திருக்கும் மன்மோகன் சிங், அதனை 49 சதவீதமாக உயர்த்த விரும்புகிறார்.


 இந்தியாவிலுள்ள தனியார் வங்கிகளைப் பன்னாட்டு பகாசூர வங்கிகள் கைப்பற்றிக் கொள்வதற்கு வசதியாக, அந்நிய வங்கிகள் இந்திய வங்கிகளில் மூலதனமிடுவதை 74 சதவீதமாக உயர்த்தவும்; இதற்காக வங்கி ஒழுங்குமுறைச் சட்டத்தைத் திருத்தவும் முயன்று வருகிறது, காங். கூட்டணி ஆட்சி.


 தொழிலாளர் சேமநல நிதியை நிர்வகிப்பதை முற்றிலுமாகத் தனியார்மயமாக்கி, அந்நிதியைப் பங்குச் சந்தையில் கொட்டிச் சூதாடுவதைச் சட்டபூர்வமாக்குவதற்காக சேமநல நிதி ஒழுங்கு மற்றும் வளர்ச்சி ஆணையத்தை நிறுவ சட்டம் தயாரிக்கப்பட்டு, அது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றது.


 மன்மோகன் சிங்கால் நிதித்துறை தொடர்பாக எடுக்கப்படும் ஒவ்வொரு "சீர்திருத்தமும்'' வாடிக்கையாளர் நலனுக்கானது அல்ல; அரசின் அரைகு றைக் கட்டுப்பாட்டில் இயங்கும் நிதித்துறையை, அமெரிக்காவைப் போல நிதி ஆதிக்கக் கும்பலிடம் கொடுத்து விட வேண்டும் என்ற நோக்கமுடையது. பூனைக்கு மணிகட்ட வேண்டும் என்றால், மன்மோகன் சிங் இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும். ஆனால், அவரது சிஷ்யப் பிள்ளை ப.சிதம்பரமோ, அமெரிக்காவின் தனியார் வங்கிகள் திவாலானதைப் பார்த்த பிறகும், "இந்திய நிதித்துறையைச் சீர்திருத்தம் செய்வதற்குத் தடை போட முடியாது'' எனத் திமிராக அறிவிக்கிறார்.


 அமெரிக்காவின் வீட்டுக் கடன் பிரச்சினையில் சிக்கிக் கொண்டு, இந்தியப் பொதுத்துறை வங்கிகள் 450 கோடி ரூபாயும்; இந்தியத் தனியார் வங்கிகள் 2,100 கோடி ரூபாயும் இழந்துவிட்டதாக அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் இது அரைகுறை உண்மைதான் என்ற சந்தேகம் ஒருபுறமிருக்க, இந்திய வங்கிகள் வகைதொகையின்றி அளித்திருக்கும் கிரெடிட் கார்டு கடன்கள், வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள், நுகர்வோர் கடன்கள் ஆகியவை எதிர்காலத்தில் இந்தியாவிலும் அமெரிக்க பாணியில் ஒரு நெருக்கடியைத் தோற்றுவிக்கலாம் என வல்லுநர்களே அச்சப்படுகின்றனர். குறிப்பாக, தகவல்தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் வேலையிழப்பும், சம்பள வெட்டும் வங்கிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்கிறார்கள்.


 மேலும், இந்தியப் பணத்தின் சந்தை மதிப்பை அரசின் தலையீடின்றி, சூதாடிகள் தீர்மானிக்க விட்டு விடவேண்டும் என்பதுதான் மன்மோகனின் வாழ்நாள் இலட்சியம். ஒருவேளை அவரது கனவு முன்பே நிறைவேறியிருந்தால், இந்நேரம் இந்தியா திவாலாகியிருக்கும். கட்டுப்பாடு பற்றி உபதேசிக்கும் மன்மோகன் சிங், தனது இந்தக் கனவைக் கைகழுவிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


···


 இந்தியா, அமெரிக்கா போல மாற வேண்டும் எனக் கத்திக் கொண்டிருந்த நடுத்தர வர்க்கத்துக்கு, இந்த ""நெருக்கடி'' சரியான பாடம் புகட்டிவிட்டது. தகவல் தொழில்நுட்பத் துறையில் கொழுத்த சம்பளத்தில் அதிகாரியாக வேலை பார்க்கும் சீமா குக்ரேஜாவை, அவரது நிர்வாகம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, வேலை நீக்க உத்தரவில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, வீட்டிற்கு அனுப்பி விட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைச் சேர்ந்த 1,900 ஊழியர்கள் ஒரே நொடியில் வேலையில் இருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் போராடிய பிறகு, ஜெட் ஏர்வேஸ் முதலாளி நரேஷ் கோயல் அவர்களைத் ""தாயுள்ளத்தோடு'' வேலைக்கு எடுத்துக் கொண்டார். இந்தக் கருணைக்குப் பின்னே சம்பள வெட்டு என்ற குருவாள் மறைந்திருந்தது. இரண்டு இலட்சம் வரை சம்பளம் வாங்கிய தனியார் விமான நிறுவன ஊழியர்களுக்கு இன்று 10,000 ரூபாய் சம்பளமாகக் கிடைத்தால் அதிருஷ்டம்தான்!
 வேலை பறி போய்விடும் என்பதால் தகவல் தொழில்நுட்பத் துறையில் யாரும் வருடாந்திர சம்பள உயர்வு பற்றியோ, போனசு பற்றியோ வாயே திறப்பதில்லை எனக் கூறப்படுகிறது. சம்பள வெட்டு, இல்லையென்றால் வேலையிழப்பு  இந்த இரண்டில் ஒன்று ஊழியர்களின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிறது.


 தெருவில் இறங்கிப் போராடும் தொழிலாளர்களை, "நான்சென்ஸ்'' என எரிச்சலாகப் பார்த்த இந்த மூளை உழைப்பாளிகள், இன்று தெருவில் இறங்கி "வாழ்க, ஒழிக'' முழக்கம் போட வேண்டிய நிர்பந்தம் உருவாகி விட்டது. தொழிற்சங்கத்தில் சேர்வதை கௌரவக் குறைச்சலாகப் பார்த்த இந்த மூளை உழைப்பாளிகள், இன்று தங்களுக்காக யாராவது பரிந்து பேச மாட்டார்களா எனத் தவிக்கிறார்கள். தாராளமயத்தால் இவர்கள் அனுபவித்த வசதிகள்  கிரெடிட் கார்டு, வண்டிக் கடன், வீட்டுக் கடன் ஆகியவை இன்று வேலையிழப்பாலும், சம்பள வெட்டாலும் சுமையாக மாறி, அவர்களுக்கு மன அழுத்தத்தை கொடுக்கத் தொடங்கியிருக்கிறது. நிரந்தரமானது என அவர்கள் நம்பிக் கொண்டிருந்த இந்த சொர்க்க வாழ்க்கை, இன்று நொறுங்கி விழுகிறது.


 நெருக்கடியில் சிக்கிக் கொண்ட ஜெட் ஏர்வேஸ், கிங் ஃபிஷர் ஆகிய நிறுவனங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்கும், இந்திய விமான ஆணையத்திற்கும் தர வேண்டிய 3,000 கோடி ரூபாயை மெதுவாக அடைக்கலாம் என கருணை காட்டியிருக்கிறார், மன்மோகன் சிங். அதேசமயம், ஏர்இந்தியாவில் இருந்து கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ள 15,000 ஊழியர்களுக்குக் கருணை காட்ட அரசு தயாராக இல்லை.
 இதுதான் அமெரிக்க பாணி; தொழிலாளர்களை வேலையில் இருந்து கறிவேப்பிலை போலத் தூக்கியெறிவதுதான் அமெரிக்காவின் தொழில் உறவுக் கொள்கை. இந்தத் தீவட்டிக் கொள்கையைத்தான் தொழிலாளர் நலச் சீர்திருத்தம் என்ற பெயரில் அமலாக்கத் துடிக்கிறார், மன்மோகன் சிங்.


 தனியார்மயம் சூதாடிகளைத் தவிர, உழைக்கும் மக்களில் எந்தவொரு பிரிவினருக்கும்  விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள், ஊழியர்கள், இடைநிலை அதிகாரிகள்  குறைந்தபட்ச வாழ்க்கை பாதுகாப்பையோ, வேலை பாதுகாப்பையோ அளிக்கப் போவதில்லை என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணமாகி விட்டது. இச்சூதாட்டப் பொருளாதாரத்தை, அமைப்பாகத் திரண்டு போராடி வீழ்த்துவதை விட்டுவிட்டு, விதியே என்று நமது தலையில் சுமப்பது இனியும் அறிவுடைமையாகாது!


· ரஹீம்