"வளர்ச்சியடைந்த நாடுகள் நேர்மையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே தற்போது ஏற்பட்டுள்ள சர்வதேசப் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும்...''
"தற்போதைய சூழலில் உலக வங்கி மற்றும் சர்வதேச செலாவணி நிதியம் ஐ.எம்.எஃப். ஆகியன சுதந்திரமாக செயல்பட வேண்டியது அவசியம். வளரும் நாடுகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் ஐ.எம்.எஃப். மற்றும் உலக வங்கியில் எடுபடும் அளவுக்கு சீரமைப்புகள் இருக்க வேண்டும்...''
"வளரும் நாடுகளிலிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல லட்சம் கோடி டாலர்கள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது... இத்தகைய சூழலால் தற்போது படிப்படியாக முதலீடு குறைந்து வருகிறது...''
சூதாடி முதலாளித்துவம் அடித்த கொள்ளையின் விளைவாக, உலகம் முழுவதும் கொள்ளைநோய் போலப் பரவி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து உலக முதலாளித்துவத்தைக் காப்பாற்றும் பொருட்டு இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரமுகர் முன்வைத்திருக்கும் ஆலோசனைகள் இவை. அந்தப் பிரமுகர் யாராயிருக்கும் என்று யூகிக்க முடிகிறதா? மன்மோகன் சிங்? கமல்நாத்? அலுவாலியா? ப.சிதம்பரம்?
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா என்பதுதான் சரியான விடை. நியூயார்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுக்குழுவின் நிதி மற்றும் பொருளாதாரக் குழுவின் கூட்டத்தில் அவர் ஆற்றிய உரையில் கண்டெடுத்த முத்துக்கள் இவை. (பார்க்க: தினமணி 15.10.08)
நேர்மையான கொள்ளை! கொள்ளைக் கூட்டத்தின் ஒருங்கிணைந்த செயல்பாடு! இவை உலக முதலாளித்துவத்தைக் காப்பாற்ற ஒரு கம்யூனிஸ்டு முன்வைக்கும் ஆலோசனைகள். இதனைக் கேட்டு முன்வாயால் அழுவதா, பின்வாயால் சிரிப்பதா என்று தெரியவில்லை.
அமெரிக்க வர்த்தகச் சூதாடிகள் நடத்தியிருக்கும் இந்தக் கொள்ளையையும், அந்தக் கொள்ளையினால் திவாலான வங்கிகளை மீட்கும் பொருட்டு 700 பில்லியன் டாலர் மக்களின் வரிப்பணத்தை மேற்படி கொள்ளையர்களுக்கே கொட்டி அளக்கும் அமெரிக்க அரசின் கொள்கையையும் முதலாளித்துவ வெறியர்களாலேயே கூடச் சகித்துக் கொள்ள முடியவில்லை. இது பணக்காரர் நல அரசு என்கிறார் அமெரிக்க கோடீசுவர முதலீட்டாளர் ஜிம் ரோஜர்ஸ். இது பகற்கொள்ளை என்று அலறுகிறார்கள் அமெரிக்கப் பொருளாதார வல்லுநர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் வளர்முக நாடுகளிலிருந்து ஏகாதிபத்தியங்கள் அடித்திருக்கும் கொள்ளை இலாபத்தை, கொள்ளை என்று சொல்வதற்கு திருவாளர் ராஜாவுக்கு நாக்கூசுகிறது. பல இலட்சம் கோடி டாலர்களைப் பரிமாற்றம் செய்திருக்கிறார்களாம்!
"சூதாட்ட முதலாளித்துவத்தை ஒழித்து, தொழில் முனைவு முதலாளித்துவத்தை வளர்க்க வேண்டும். டாலரை உலகச் செலாவணியாக்கிய பிரெட் அண்டு வுட்ஸ் ஏற்பாட்டை மாற்றியமைக்க வேண்டும்'' என்கிறார் பிரெஞ்சு அதிபர் சார்க்கோசி. சார்க்கோசி எதைக் கலைக்க வேண்டும் என்கிறாரோ, அதைப் பாதுகாக்க வழி சொல்லிக் கொடுக்கிறார் நம்மூர் கம்யூனிஸ்டு. டாலரை உலக நாணயமாகப் பாதுகாக்கும் பொருட்டும், ஏழை நாடுகளைக் கொள்ளையிட ஏற்பாடு செய்து கொடுக்கும் பொருட்டும் உருவாக்கப்பட்ட உலக வங்கி எனும் கந்து வட்டி நிறுவனத்தைச் சீரமைக்க வழி சொல்லிக் கொடுக்கிறார் ராஜா.
இந்த கம்யூ...னிஸ்டு கட்சியின் நாளேடு (ஜனசக்தி 20.10.08) "உலகப் பொருளாதார நெருக்கடி: மார்க்சின் பக்கம் பார்வை திரும்புகிறது' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. மார்க்ஸின் நூலான "மூலதனத்தின்' விற்பனை உலகெங்கும் அதிகரித்திருப்பதாகவும், அறிவு ஜீவிகளும் மெத்தப் படித்தவர்களும் நிர்வாகிகளும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளைப் புரிந்து கொள்ள மார்க்ஸ் பக்கம் திரும்பியிருப்பதாகவும் கூறுகிறது, அந்தக் கட்டுரை.
அது கிடக்கட்டும். கட்சியின் செயலாளர் எந்தப் பக்கம் திரும்பியிருக்கிறார்? அவர் மேற்கு நோக்கி மண்டி போட்டு உலக வங்கியைப் பார்த்தல்லவா தொழுகை நடத்துகிறார்! வேறென்ன செய்ய முடியும்? கோட்டு சூட்டு போட்டு டை கட்டி, "இந்தியாவின் பிரதிநிதி' என்ற கவுரவத்துடன் சான்றோர் அமர்ந்திருக்கும் அந்த அவையில், சரிசமமாக அமரும் வாய்ப்பை மன்மோகன் சிங் அரசு வழங்கியிருக்கும்போது, அங்கே போய் "கம்யூனிசம், சோசலிசம், முதலாளித்துவக் கொள்ளை' என்று கீழ் மக்களின் கொள்கையை அவரால் எப்படிப் பேச முடியும்? அவருடைய சிரமம் புரிகிறது.
நம்முடைய சிரமத்தையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வலது இடது கம்யூனிஸ்டுகள் மார்க்சியத்தைத் திரிப்பதால் "திருத்தல்வாதிகள்' என்று அழைத்தோம். பிறகு மக்களுக்குத் தெளிவாகப் புரியும்படி "போலி கம்யூனிஸ்டுகள்' என்று பெயரிட்டோம். ஆனால், அவர்கள் போகும் வேகத்துக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியவில்லை. இப்பவும் கூட ராஜா என்ன சொல்கிறார் என்பது தெளிவாகப் புரிகிறது. ஆனால், அவருடைய கட்சியை என்ன பெயரிட்டு அழைப்பது என்பதுதான் புரியவில்லை. தமது கொள்கைக்குப் பொருத்தமான நல்லதொரு பெயரை அவர்களே சூட்டிக் கொண்டால் பேருதவியாக இருக்கும்.
· தொரட்டி