மகாராஷ்டிராவின் மலேகான் நகரிலுள்ள பிகூ சதுக்கத்தில் அமைந்துள்ள மசூதி அருகே கடந்த செப்டம்பர் 29ஆம் நாளன்று ஆர்.டி.எக்ஸ். வகைப்பட்ட குண்டுவெடித்து 5 பேர் கொல்லப்பட்டனர்; 80 பேர் படுகாயமடைந்தனர். அதேநாளில் குஜராத்திலுள்ள பனாஸ்கந்தா மாவட்டத்தின் மோடசா நகரின் சுகாபஜாரில் குண்டு வெடித்து ஒரு சிறுவன் கொல்லப்பட்டான்; 10 பேர் படுகாயமடைந்தனர்.


 மலேகான் நகரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் ஒரு வெள்ளி நிற மோட்டார் சைக்கிள் சிதிலமடைந்து கிடந்தது. இரண்டு மர்ம நபர்கள் ஒரு பையை அந்த மோட்டார் சைக்கிளில் வைத்து விட்டுச் சென்றனர் என்றும் அவர்கள்தான் பயங்கரவாதிகள் என்றும் போலீசார் தமது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டனர். ரம்ஜான் பண்டிகைக்கு இரு நாட்கள் முன்னதாக மசூதி அருகே இக்குண்டு வெடிப்பு நடந்ததால், முஸ்லீம்கள் ஆத்திரமடைந்து தங்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, போலீசார் மீது கல்லெறிந்து தாக்கவும் செய்தனர்.


 ஏற்கெனவே மலேகான் நகரில் 2006ஆம் ஆண்டில் முஸ்லீம்கள் மீது இந்துவெறியர்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளதால், மீண்டும் அதுபோன்ற தாக்குதல்கள் நிகழாமலிருக்க சிறுபான்மை முஸ்லீம்கள் பயம் கலந்த எச்சரிக்கை உணர்வுடனேயே வாழ்ந்து வருகின்றனர். கடந்த செப்டம்பர் 29 அன்று, மசூதி அருகே வெற்றிலைபாக்கு கடையை நடத்தி வரும் அன்சாரி என்ற முதியவர், தனது கடை எதிரே அனாதையாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருப்பதைக் கண்டு, அக்கம்பக்கக் கடைக்காரர்களிடம் விசாரித்துப் பார்த்து யாரும் அதற்கு உரிமை கொண்டாடாத நிலையில், சந்தேகத்திற்கிடமான அந்த மோட்டார் சைக்கிள் பற்றி போலீசாருக்குத் தொலைபேசியில் தகவல் கொடுத்தார். ஆனால் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த மோட்டார் சைக்கிளில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்து ஐந்து பேர் கோரமாகக் கொல்லப்பட்டனர். இக்குண்டு வெடிப்பில் அன்சாரியும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


 பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் இந்திய கைக்கூலிகள் இக்குண்டுவெடிப்பை நடத்தியிருக்கலாம் என்று தாம் சந்தேகிப்பதாக போலீசார் வழக்கம்போலவே கதை பரப்பினர். பார்ப்பன தேசிய பத்திரிகைகளோ இதற்கு கண்ணும் காதும் வைத்து இந்திய முஜாகிதீன் குழு, ""சிமி'' எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் முதலான பாக். ஆதரவு பயங்கரவாதிகளே இக்குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளனர் என்றும், சிறுபான்மை முஸ்லிம்களை அச்சுறுத்தி தமது தலைமையை ஏற்கச் செய்வதற்காகவே இப்பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்றும் திரைக்கதை எழுதின.


 மலேகான் குண்டு வெடிப்பு பற்றி புலன் விசாரணை செய்துவந்த மகாராஷ்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு அதிரடிப் படை போலீசார், நீண்ட முயற்சிக்குப் பிறகு, தற்போது மூன்று பேரைக் கைது செய்துள்ளனர். அவர்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளோ, பாக். உளவாளிகளோ அல்ல. காவியுடை தரித்த பெண் சன்னியாசியும் அவரது கூட்டாளிகளான ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுமான இந்து வெறியர்கள்தான் அவர்கள்!


 கைது செய்யப்பட்டுள்ள பெண் சன்னியாசியான சாத்வி பிரக்யாசிங், சிவ் நாராயண் கோபால்சிங் கல்சங்ரா, ஷ்யாம் பவார்லால் சாகு ஆகிய மூவரும் தான் மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதிகள் என்பது போலீசாரின் ஆரம்ப விசாரணையிலேயே நிரூபணமாகியுள்ளது. குண்டு வைக்கப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்வி பிரக்யாவினுடையது. குண்டு வெடிப்புக்குப் பிறகு அம்மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் பெயரை மாற்ற அவர் இரகசியமாக முயற்சித்துள்ளார். அதன் பதிவு எண் போலியானது. என்ஜின், சேசிஸ் எண்கள் தெரியாத வண்ணம் அதை அவர் சிதைத்துள்ளார்.


 குண்டு வெடிப்புக்குப் பிறகு குஜராத்திலுள்ள சூரத் நகருக்குச் சென்ற இந்த பெண் சன்னியாசி, அங்கு பக்திநெறிப்படி வாழும் சன்னியாசியாக நாடகமாடியுள்ளார். 38 வயதாகும் இப்பெண் துறவி, "ஜெய் வந்தேமாதரம் ஜன் கல்யாண் சமிதி'' என்ற அமைப்பை நடத்தி வருவதாகக் காட்டிக் கொண்டு இரகசியமாகப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளார்.


 கைது செய்யப்பட்ட மற்ற இருவரும் இந்திய இராணுவத்தில் ""மேஜர்'' பதவி வகித்து, ஓய்வு பெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள். இவர்கள் இந்துவெறி பயங்கரவாத  ஆர்.எஸ்.எஸ்.இன் முன்னாள் இராணுவத்தினர் அணியைச் சேர்ந்தவர்கள். ஆர்.டி.எக்ஸ் வகை குண்டு தயாரிப்பதிலும் தொலைக்கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தின் மூலம் குண்டுகளை வெடிக்கச் செய்வதிலும் இவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள்.


 மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இம்மூவரும் கூட்டுச் சேர்ந்து ""ராஷ்டிரிய ஜக்ரான் மன்ச்'' என்ற இந்துத்துவ அமைப்பை நிறுவிச் செயல்படுவதாகக் காட்டிக் கொண்டு, நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இரகசிய வலைப்பின்னலைக் கொண்டு இயங்கிவந்த இப்பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் பற்றியும் இவர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்களுக்கும் உள்ள உறவைப் பற்றியும் மகாராஷ்டிரா பயங்கர எதிர்ப்பு அதிரடிப் படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 மலேகான் குண்டுவெடிப்பை நிகழ்த்திய இந்துவெறி பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதும், பா.ஜ.க. தலைவர் வெங்கையா நாயுடு, "இவர்களுக்கும் இந்துத்துவ அமைப்புகளுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை; அப்படி ஏதேனும் தொடர்பிருப்பதாக விசாரணைக்குப் பின் நிரூபணமானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம்'' என்று யோக்கிய சிகாமணியைப் போல பேசுகிறார். பா.ஜ.கவிலிருந்து பிரிந்து சென்று பாரதீய ஜனசக்தி கட்சியைத் தொடங்கியுள்ள உமாபாரதியோ, "சன்னியாசியாகிய சாத்வி பிரக்யா வன்முறையில் ஈடுபட எந்த அடிப்படையும் இல்லை; இது, இந்துத்துவ சக்திகளை இழிவுபடுத்தி அவமானப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ள சதி'' என்று குதிக்கிறார்.


 மலேகான் குண்டு வெடிப்பு மட்டுமல்ல; நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் குண்டு வெடிப்புகள் பலவற்றை இந்துவெறி பயங்கரவாதிகளே திட்டமிட்டு நடத்தியுள்ளனர் என்ற உண்மைகள் அடுத்தடுத்து அம்பலமாகி வருகின்றன. ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள் குண்டர்கள் கையிலே தடியும் திரிசூலமும் வைத்திருப்பதால் மட்டும் அவர்களைப் பயங்கரவாதிகள் என்று கருதுவதாக சிலர் நினைக்கலாம். இந்த ஆயுதங்கள் தனிநபர்களை தாக்கிப் படுகொலை செய்வதற்குத்தான் பயன்படும். ஆனால், இந்துவெறி பயங்கரவாதிகள், பெருந்திரளான கொலைவெறியாட்டம் போடவும் பயங்கரவாதப் படுகொலைகளை நிகழ்த்தவும் கையெறி குண்டுகள், நேரங் குறித்து வெடிக்கும் குண்டுகள் முதல் குண்டு வீசித் தாக்கும் ஏவுகணைகள் வரை அதிநவீன ஆயுதங்களைத் தயாரிக்கவும் கையாளவும் கற்றுத் தரும் பயிற்சி முகாம்களை இரகசியமாக நடத்துமளவுக்கு முன்னேறியுள்ளார்கள்.


 இந்துத்துவ அமைப்புகளோடு தொடர்பில்லாததைப்போல காட்டிக் கொள்ள பல்வேறு பினாமி பெயர்களில் புதிய அமைப்புகளை நிறுவி, இரகசிய வலைப்பின்னலைக் கட்டியமைத்து இயக்கி வருகின்றனர். மும்பை, குஜராத்தில் நடந்த இந்துவெறி பயங்கரவாதப் படுகொலைகளிலும், அதன்பிறகு நடந்த பல்வேறு குண்டு வெடிப்புகளிலும் இவை நிரூபணமாகியுள்ளன.


 இந்து பார்ப்பன பயங்கரவாதிகள் "தெகல்கா'' வார ஏட்டுக்கு தமது சொந்த வார்த்தைகளில் அளித்த வாக்குமூலங்களே இவற்றுக்குச் சாட்சியமாக உள்ளன. மேலும், மகாராஷ்டிரா மாநிலத்தின் நாண்டெட் நகரில் ஏப்ரல் 2006 மற்றும் ஆகஸ்ட் 2007இல் நடந்த குண்டு வெடிப்புகளை பஜ்ரங் தள் குண்டர்களே நிகழ்த்தியுள்ளனர் என்பதை அம்மாநிலப் போலீசே ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளது.


 இவ்வாண்டு ஆகஸ்டு 24ஆம் தேதியன்று கான்பூரிலுள்ள ஒரு தனியார் விடுதியில் இரகசியமாக குண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் இருவர் மாண்டு போயினர். கான்பூர் நகர பஜ்ரங் தள் தலைவனான புபிந்தர் சிங்கும் அவனது கூட்டாளியுமே அவர்கள். இது பற்றி போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த போது, விசாரணையைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு இந்துவெறியர்கள் ஒரு பீதியைக் கிளப்பினர்.


 அதன்படி, தமிழக முதல்வர் கருணாநிதியின் தலையை வெட்டச் சொன்ன விசுவ இந்து பரிசத்தின் தலைவனும் முன்னாள் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் விலாஸ் வேதாந்தி, தனக்கு "சிமி'' மற்றும் அல்கய்தா பயங்கரவாதிகளிடமிருந்து தொலைபேசி மூலம் கொலைமிரட்டல் வந்துள்ளதாக அறிவித்தான். போலீசார் அத்தொலைபேசி எங்கிருந்து வந்துள்ளது என்பதை தொலைபேசித் துறையின் உதவியுடன் கண்டறிந்தனர். கத்ரா நகர பஜ்ரங் தள் தலைவன் ரமேஷ் திவாரி மற்றும் அவனது கூட்டாளிகளே இக்கொலை மிரட்டலை இஸ்லாமிய அமைப்புகளின் பெயரில் விடுத்துள்ளனர் என்பதைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்துள்ளனர். கான்பூர் குண்டு வெடிப்பு விசாரணையைத் திசைதிருப்பவும், வேதாந்திக்குக் கூடுதல் பாதுகாப்பு தரவும் இப்படிச் செய்யுமாறு மேலிடத் தலைவர்கள் தமக்குக் கட்டளையிட்டதாக அவர்கள் விசாரணையில் உண்மையைக் கக்கியுள்ளனர்.


 பயங்கரவாதிகளால் நாட்டுக்குப் பேராபத்து ஏற்பட்டுள்ளது என்று ஓயாமல் அலறுகிறது இந்திய அரசு. ஆம்; பேராபத்து ஏற்பட்டுள்ளது! அதுவும் காவியுடை தரித்த இந்துவெறி பயங்கரவாதிகளால் ஏற்பட்டுள்ளது என்பதையே அடுத்தடுத்து அம்பலமாகும் உண்மைகள் உணர்த்துகின்றன.
· இரணியன்