Fri11222019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் யாழ். விதவைகள்

யாழ். விதவைகள்

  • PDF

யாழ். விதவைகள்: கவனிக்கப்படாமலே உருவாகிவரும் மற்றுமொரு சமூகம்

மதியம் தாண்டியும் அந்த வரிசை அசையாது நின்ற இடத்திலேயே நிற்கிறது. பெரும்பாலான பெண்களின் முகங்களில் இனி ஏதுமில்லையென்ற வெறுமை மட்டுமே பரவிக்கிடக்கிறது.

 உள்ளூர் உபதபாலகத்தில் வழங்கப்படப்போகும் அரசின் உபகார உதவிக்கொடுப்பனவிற்காகவே அந்த விதவைகள் காத்திருக்கின்றனர். உள்ளூர் மக்களால் 'பிச்சைக்காசு' என்றழைக்கப்படும் அந்த உதவித்தொகை உண்மையிலேயே அரசாங்கம் போடும் பிச்சைதான் என்று சொன்னாலும் அது மிகைப்படுத்தல் அல்ல.

 

widows_4

கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான விதவைகளுக்கு அரசாங்கம் உபகாரத்தொகையாக மாதமொன்றிற்கு நூறு ரூபாவை வழங்கிவருகின்றது. இத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அக்கறையற்றே இருக்கின்றது.


யாழ்.குடாநாட்டில் தொடரும் யுத்த அவலம், விதவைகளது எண்ணிக்கையை வேகமாக அதிகரிக்க வைத்துள்ளது. அதிலும் அண்மைக்காலங்களில் தொடரும் படுகொலைகளால், கணவன்மாரை இழந்துள்ள இளம் விதவைகளது எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. இவற்றைவிட 1996 முதல் இன்று வரை தொடரும் கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல்களால் கணவரை இழந்த பெண்கள் எந்தவொரு வகைப்படுத்தல்களுக்குள்ளும் அடங்காத வாழ்வொன்றையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.


தொடரும் படுகொலைகள், இயற்கை அனர்த்தங்கள் என குடாநாட்டு விதவைகளின் எண்ணிக்கை இவ்வாண்டின் முற்பகுதியுடன் 30 ஆயிரத்தினை தாண்டிவிட்டது. அதிலும் 50 வயதிற்கும் குறைவான இளம் விதவைகளின் எண்ணிக்கை மட்டும் ஏழாயிரத்தினைத் தாண்டிவிட்டதாக யாழ்.செயலகத்தின் அண்மைய புள்ளி விபரங்கள் கூறுகின்றன.


குடாநாட்டிலுள்ள விதவைகள் முக்கியமாக ஐந்து வகைகளாகப்பிரிக்கப்பட்டுள்ளனர். வன்முறைகளால் கணவரை இழந்தோர், விபத்துக்கள், இயற்கை அனர்த்தங்கள் நோய்களால் கணவரை இழந்தோர் மற்றும் தற்கொலை செய்து கொண்டமையால் விதவைகளானோர் என அது உள்ளடங்குகின்றது. இவ்வாறு விதவைகளென அடையாளங்காணப்பட்டோரில் சுமார் 11 ஆயிரம் பேர் பிறரது எந்தவொரு உதவியும் இன்றியே வாழ்ந்து வருகின்றமையும் அதிர்ச்சி தரும் செய்தியாகும்.


குடாநாட்டில் இரண்டு தசாப்பதங்களுக்கு மேலாக நீடிக்கும் யுத்தம், விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வழிகோலியது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் ஆகஸ்ட் 2006 இன் பின்னரான காலப்பகுதி, நாளுக்கு குறைந்தது ஒரு விதவையென்ற அடிப்படையில் புதிய விதவைகளை உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றது. இவர்களுள் காணாமல் போன கணவர் இதுவரை வீடு திரும்பியிராதவர்களும் உண்டு. ஏனெனில் காணாமல் போன எவருமே இதுவரை வீடு திரும்பியதற்கான வரலாறு எதுவும் குடாநாட்டில் நடந்ததேயில்லை.


widows_1

யாழ்.குடாநாட்டில் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் வேகத்திற்கு நேர் எதிராக அவர்கள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ளோரது எண்ணிக்கையும் குறைவடைந்து வருகின்றது. இறுதியாக நடாத்தப்பட்ட ஆய்வொன்றின் படி இவ் விதவைகளுள் 21 ஆயிரம் பேர், தமது குடும்பங்களுடன் மாதாந்தம் வெறும் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானத்துடன் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.சுமார் 3 ஆயிரத்திற்கும் குறைவான விதவைகளே ஓய்வூதியம் மூலம் மாதாந்தம் ஜயாயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட வருவாயுடன் குடும்பத்தை நடாத்தியும் செல்கின்றனர்.


குடாநாட்டில் தொடரும் யுத்தம் நேரடியாகவும் மறைமுகமாகவும் பெண்கள் மீது தாக்கங்களைச் செலுத்தியே வருகின்றது. அதிலும் அண்மைக்காலங்களில் என்றுமில்லாத அளவில் அதிகரித்துள்ள பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதுவும் ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில் இவ்வாறான பாலியல் வல்லுறவுகள் தொடர்வது அவதானிப்பிற்குரியது.


குறிப்பாக தென்மராட்சிப் பகுதியில் இவ்வாறான பாலியல் வல்லுறவுகள் அதிகளவில் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் ஒரேதரப்பை நோக்கியதாகவே இருக்கின்றன. ஆனாலும் உள்ளூர் பழமொழிபோல 'விதானையும் அவனே கள்வனும் அவனே' எனும் நிலைதான். விசாரிக்கின்றோம். உரிய தண்டனை வழங்கப்படும் என்ற உறுதிமொழியுடன் எந்தவொரு நிவாரணமுமின்றி அது ஓய்ந்து போய்விடுகின்றது.


அண்மையில் வடமராட்சிப் பகுதியில் இவ்வாறு இளந்தாய் ஒருவர் அதிகாலை வேளை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுள்ளார். கணவரும், ஒரு வயதான அவரது சிறு குழந்தையும் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றிருந்த நிலையில், தனித்திருந்தவேளை இச்சம்பவம் நடந்துள்ளது. அருகிலுள்ள பனங்கூடலுக்குள் கடத்திச் செல்லப்பட்டே இவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். சம்பவம் பற்றி முறைப்பாடு செய்த கணவர் பின்னர் படையினராலேயே தாக்கப்பட்டுமிருந்தார். இவ்வாறான சம்பவங்கள் சமூக கௌரவம் கருதி மூடிமறைக்கப்பட்டே வருகின்றது.


ஆனாலும் குடாநாட்டில் கூடுதலாக இவ்வாறான பாலியல் வல்லுறவுக்குள்ளாவோர் இளம் விதவைகளாக உள்ளதாக உள்ளூர் பெண்கள் அமைப்பொன்று கூறுகின்றது. ஏற்கனவே சமூகப்பாதுகாப்பற்றதோர் சூழலில் குடும்பத்திற்கான தலைவனான ஆண் பாதுகாப்பு இன்மையும் இவ்வாறான சம்பவங்களுக்கு வழிகோலி விடுகின்றது. ஆண் பாதுகாப்பற்ற குடும்பங்கள் இலகுவான இலக்குகளாவதாக அவ்வமைப்பு மேலும் கூறுகின்றது.


widows_2

குறிப்பாக அண்மைய இருவருட காலப் பகுதியினுள் கணவனை படுகொலைகளால் இழந்த பெரும்பாலான விதவைகள் தொடர்ந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டேயிருக்கின்றனர். சோதனைச் சாவடிகளிலும், காவலரண்களிலும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் தொடர்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் பல புகார்கள் செய்யப்பட்டு வருகின்றது. மறு புறத்தே படைத்தரப்புகளுடன் தொடர்புபடுத்தி எதிர்த்தரப்புக்களாலும் சொல்லிக்கொள்ளத்தக்க அளவினில் குடும்பத்தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அந்தவகையில் கணவரை இழந்த விதவைகளை சமூகமும் ஒதுக்கி வைக்கும் அவலமும் தொடர்கின்றது. இத்தகையதோர் வாழ்வு காணாமல் பொன குடும்பத்தலைவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கும் இருக்கின்றது.


தொடரும் யுத்த அவலம் விதவைகளின் எண்ணிக்கையை அதிகரித்தே செல்கின்றது. வலிகாமத்தின் ஆனைக்கோட்டை, சாவற்காடு கிராமத்தில் மட்டும் ஒட்டு மொத்தப் பெண்களில் 30 சதவீதமானவர்கள் விதவைகள். அவர்களுக்கு எந்தவொரு தரப்புமே உதவுவதுமில்லை. பெரும்பாலான விதவைகள் மோசமான உளவியல் நோய்களிற்கு உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கு விரைந்து உரிய சிகிச்சை அளிக்கப்படவேண்டும். இல்லாவிடின் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றார் உளவள வைத்திய நிபுணர் சி.யமுனானந்தா. இதே நிலை தீவகம் மற்றும் தென்மராட்சியின் பல கிராமங்களிலும் தொடர்கின்றது.


விதவைகளை குடும்பத்தலைவிகளாகக் கொண்ட குடும்பங்களிற்கு அரசு வழங்குவது வெறும் பிச்சைக்காசு உதவியே. அதையும் கூட 18 ஆயிரத்திற்கும் குறைவான குடும்பங்களே பெறுகின்றன. எஞ்சிய 12 ஆயிரம் குடும்பங்களிற்கு அது கூட இல்லை. உள்ளூர் அரச அதிகாரிகளது பரிதாபப் பார்வைக்குட்பட்டு ஒரு பகுதி குடும்பங்கள் சில வேளைகளில் உலர் உணவு நிவாரணத்தையோ அல்லது சமுத்தி நிவாரணத்தையோ பெற்றுக்கொள்கின்றன. அதுவும் கூட வெறும் ஆயிரத்தி இருநூறிற்கும் குறைவான பணப் பெறுமதியை மட்டுமே மாதாந்தம் கொண்டுள்ளது.


பெண்களுக்கான உதவிகளுக்கென பல அமைப்புக்கள் செயற்படுகின்ற போதும் அவர்கள் விதவைகள் தொடர்பில் கூடிய கரிசனை எடுப்பதாகத் தெரியவில்லை. இடையிடையே விதவைகளுக்கு தையல் இயந்திரங்களையோ அல்லது நல்லின ஆடொன்றையோ வழங்குவதோடு மட்டும் தமது பணியை நிறுத்திக் கொள்கிறார்கள். விதவைகளுக்கு நீண்ட காலத்தில் உதவக் கூடியவாறான எந்தவொரு உதவியும் இப் பெண்கள் அமைப்புகளிடமிருந்து கிடைப்பதாகத் தெரியவில்லை.


கிராமங்களுக்கு நாங்கள் போகின்ற போதெல்லாம் உதவி கேட்டு பெருமளவில் விதவைகள் வருகின்றார்கள். எல்லோருக்கும் முழுமையாக உதவ எம்மிடம் நிதி இல்லை. அனைத்து உதவி அமைப்புக்களும் இணைந்து பொதுவான திட்டமொன்றை வகுத்துச் செயற்படுத்த வேண்டும் என்கின்றார் யாழ். மாவட்ட அரச சார்பற்ற அமைப்பக்களின் இணையத்தினைச் சேர்ந்த க. சுப்பிரமணியம். உண்மையிலேயே உரிய திட்டமிடல்கள் இல்லாத அரைகுறை உதவிகளே இவர்களைக் கிட்டி வருகின்றன என்hது மறுக்கப்படமுடியாத ஒன்று.


இத்தகைய நெருக்குவாரங்களின் மத்தியில் யாழ். மாவட்டத்தில் மகளிர் தினக் கொண்டாட்டங்களை நடாத்தவும் பெண்கள் நலன்களுக்கு போராடுவதாக கூறிக்கொள்ளும் சில அமைப்புக்கள் தவறவில்லை. மகளிர் தின கொண்டாட்டங்கள் தேவையில்லை என்பது என் வாதமல்ல. அவை உன்னதமான நோக்கங்களளைக் கொண்டதாக இருக்கவேண்டும். அண்மையில் இவ்வாறான மகளிர் தின கொண்டாட்டத்திற்கென உள்ளூர் மகளிர் அமைப்பொன்றால் செலவிடப்பட்ட விளம்பரச் செலவுகள் மட்டும் நூற்றுக்கணக்காக குடும்பங்களின் மாதாந்த உணவுச் செலவிற்கு போதுமானவை. தன்னைச் சுற்றி புறத்தே என்ன நடக்கிறது என்பது பற்றி அறிந்து கொள்ளவோ அல்லது அதில் ஆர்வம் காட்டவோ இத்தகைய அமைப்புக்கள் தயாரில்லை என்பதே உண்மை.


யாழ். செயலக தகவல்களின் பிரகாரம் 19 ஆயிரத்திற்கும் அதிகமான விதவைகள் முற்று முழுதாக குடும்பத் தலைவர்களது பாரங்களை சுமக்கின்றனர். ஒன்று முதல் ஐந்து வரையான குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் இவர்களை நம்பியே வாழ்கின்றன. ஆனால் இக் குடும்பத்தலைவிகளோ பெரும்பாலும் 1000 ரூபாய்க்கு குறைவான மாத வருமானத்தை மட்டுமே கொண்டுள்ளனர். அதுவும்கூட அரசின் பிச்சைக்காசாகவோ அல்லது நிவாரணக் கொடுப்பனவாகவோ இருக்கலாம். இவ்வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் இவர்களது குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்?


widows_3

இத்தகைய குடும்பங்களில் பெருமளவில் தற்கொலை முயற்சிகள் அதிகரித்து வருவதாக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பெருமளவிலான சிறார்கள் அனாதை இல்லங்களில் கொண்டவந்து விடப்படுகின்றார்கள். மற்றுமொரு பகுதியினர் சிறுவர் கூலித் தொழிலாளரகள் ஆக்கப்படுகின்றனர். கணிசமான அளவினில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களும் அரங்கேற வழிகோலப்படுகின்றது.


உண்மையிலேயே குடாநாட்டில் விதவைகளின் எதிர்காலம் என்ன? ஒட்டுமொத்த சனத்தொகையில் 8 சதவீதம் உதவிகள் ஏதுமற்ற விதவைகள் வாழும் தேசம் என்னவாகும்? உண்மையில் விதவைகள் மற்றும் அவர்களை நம்பி வாழும் குடும்பங்களின் எதிர்காலம் தொடர்பில் அனைத்து தரப்புக்களும் இணைந்ததான திட்டமிடலொன்று தேவை. அதுவும் உடனடி மற்றும் நீண்ட கால அடிப்படையில் அத்திட்டமிடல்கள் அமையவேண்டும். பொருளாதார ரீதியான மேம்பாடு மற்றும் சமூக பாதகாப்பு அவற்றினுள் முக்கியமானது.


எல்லாவற்றிலும் மேலாக யாழ்ப்பாண சமூககட்டமைப்பில் முக்கிய மாற்றங்கள் தேவை. குறிப்பாக விதவைகளுக்கு மறுவாழ்வளிக்கும் திருமணங்கள் தேவை. அதற்கு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் போதிய விழிப்புணர்வு தேவை. அதன் ஆரம்பம் கிராமமட்டங்களில் தொடங்கப்பட வேண்டும். அவ்வாறு அடித்தளத்தில் திட்டமிடப்படும் எழுச்சியே முழுமையான விழிப்புணர்வையும் வெற்றியையும் தேடித்தரும். ஏனெனில் நேற்று அயல் வீட்டில் நடந்தது. நாளை உன் வீட்டிலும் நடக்கலாம்.

 

ஐஎன்லங்கா இணையம்

http://thakavalgal.blogspot.com/2008/11/blog-post_9826.html

Last Updated on Saturday, 01 November 2008 07:44