09212023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

பலமா?

முன்கதைச் சுருக்கம் 

 

யேர்மனியின் பெரிய வீதிகளில் ஒன்று.

 

எங்கு பார்த்தாலும் கார்கள்... லொறிகள்... பாரிய வாகனங்கள்.....

 

நீளத்திற்கு வரிசையமைத்திருந்தன.


 

பொறுமையிழந்தவர்கள் காரிலிருந்து இறங்கித் தாராளமாகத் திட்டினார்கள். மற்றும் பலர் சிகரெட் பிடித்தார்கள். கொண்டு வந்திருந்தவர்கள் எடுத்துச் சாப்பிட்டுக், குடித்தார்கள். ஒரு சிலர் புதினம் பார்க்க நடந்து போனார்கள்.

 

எல்லாக் கார்களுக்கும் முன்பாக பொலிஸ் வாகனங்கள். நீல வெளிச்சம் கக்கியபடி. தொடர்புக் கருவிகள் பரபரப்பாயிருந்தன.

 

முற்றிலும் ஆயுதபாணிகளாகவும், கவசமணிந்துமிருந்த பொலிசார் நிலமையைத் தலமையகத்திற்கு அறிவித்து அங்கிருந்து கட்டளைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

 

இவர்களுக்கும் முன்னால் சுமார் நூறுக்கும் மேற்பட்ட குர்திஸ்காரர்கள் பாதையில் குறுக்குமறுக்காகத் தங்கள் வாகனங்களை நிறுத்தி வைத்துக் கொண்டு தங்கள் பாசையில் முழங்கிக் கொண்டிருந்தார்கள். பாதையில் படுத்துமிருந்தார்கள். அவர்களில் சில யேர்மனியர்களும் கலந்திருந்தனர்.

 

அவர்களுக்கும், பொலிஸ்கார்களுக்குமிடையில் நின்ற மூன்று குர்திஸ்கார்கள் ஒரு கையில் பெற்றோல் வாளியும், மறு கையில் லைற்றருமாக விறைத்திருந்தார்கள்.

 

மேலால் இரண்டு ஹெலிகள் வட்டமடித்துக் கொண்டிருந்தன.

 

நேரம் போனது.

 

நாள் போனது.

 

பின்-

 

தலைமையக கட்டளைக்கிணங்க சில பொலிஸ்கார்கள் துப்பாக்கிகளை நீட்டிப் பிடித்தபடி அடியெடுத்து வைத்தார்கள்.

 

தங்களது எச்சரிக்கை மீறப்பட்டவுடன் முதலாவது குர்திஸ்காரன் தனக்கு மேல் பெற்றால் ஊத்தி, நெருப்பைப் பற்ற வைத்தான்.

 

தீப் பிடித்தது.

 

பொலிஸ் பின்வாங்கியது.

 

"குர்திஸ்தான் வாழ்க"

 

"துருக்கிய அரசை முறியடிப்போம்"

 

"யேர்மனியப் பணமும், இராணுவ உதவிகளும் குர்திஸ் மக்களைக் கொலை செய்கின்றன"

 

கோசங்கள் ஹெலியின் இரைச்சலையும் மீறி பலமாய் ஒலித்தன.

 

எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவன் முழுதாய் எரிந்து முடியும்வரை.

 

பொலிஸ்கார்கள் வீடியோவில் படம் பிடித்தனர். (தொடரும்....) 

 

 

மாரிகால மாலை. குளிர் கலந்த இருள். அவிழ்த்துப்போட்டு நின்ற மரங்கள் பனியில் சிலிர்த்துப் போயிருந்தன. பாதையையும், சிறிய செடிகளையும் வெண்பனி பக்குவமாய் போர்த்தியிருந்தது. காற்று விறைத்திருந்தது.

 

வீடுகளிலும், தெருக்களிலும் வெளிச்சம் போட்டிருந்தார்கள். சனி பிற்பகுதிக்குரிய நெரிசலற்ற போக்குவரத்து. ஆங்காங்கே சிறுவர்கள் பனியை எறிந்தும், உருவங்கள் செய்தும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். குதூகலித்து ஆரவாரித்தார்கள்.

 

குளிருக்கெதிராக அல்ககோலை சிலர் நாட, இளஞ்சோடிகளோ இறுக அணைத்து, உதட்டோடு உதடு சேர்த்து வெப்பமானார்கள்.

 

புள்ளி-எக்ஸ் என்ற கொஞ்சமாய் பாழடைந்துபோன அந்த மண்டபத்தில் நிறையப் பேர் குழுமியிருந்தார்கள். அவர்களது தோற்றம் யேர்மனிய அடையாளங்களுக்கு முரணாயிருந்தது. தலையைக் கோணல்மாணலாக வெட்டியிருந்தார்கள். அதற்கு பலவர்ணங்களும் பூசியிருந்தார்கள். எல்லோரும் கறுப்பு லோங்சும், ரீ சேட்டும் போட்டிருந்தார்கள். அவை கசங்கியும், பொறுத்த இடங்களில் கிழிந்துமிருந்தன. தடித்த இராணுவச் சப்பாத்துகள் பழசாயிருந்தன. மூக்குத்தி, காதுக்குத்திகளும் தென்பட்டன. கட்டிடத்துச் சுவர்களைப் போலவே ரீ சேட்டுகளிலும் அரசியல் விமர்சனங்களைத் தடித்த மையினால் கிறுக்கியிருந்தார்கள். நாஸிகளுக்கெதிரான சின்னம் பரவலாகக் குத்தப்பட்டிருந்தது. ஏ யைச் சுற்றி வட்டம் போட்டிருந்தார்கள்.

 

ஓட்டோனொமன்களாகிய அவர்களின் வருடாந்தச் சந்திப்பு. முன்னைய வருடங்களைப் போலவே இன்றும் நிறைய நிகழ்ச்சிகள். கலந்துரையாடல்கள், வாக்குவாதங்கள் பகலில் முடிந்து இப்போது ஆடல் பாடல்களை எதிர்பார்த்திருந்தார்கள்.

 

மேடை போன்ற இடத்தில் வாத்தியங்களைச் சிலர் சரிபார்க்க, ஒலிப் பெட்டிகள் பலமாகச் சத்தம் போட்டன.

 

பியர் போத்தல்கள் கிலுங்க, எங்கும் புகை மயம்.

 

பாதையில் போன ஒறிசினல் யேர்மனியர்கள் இவர்களை விசித்திரமாகப் பார்த்து, அருவருத்துப் போனார்கள். கடும் கோபம் கொண்டவர்கள் நடுவிரலை நீட்டிக் காட்டித் திட்டினார்கள்.

 

• • •

 

குற்றவியல் திணைக்களம்.

 

இரண்டு உயர் அதிகாரிகள் மட்டும் அந்த அறையிலிருந்து புகைத்துக் கொண்டிருந்தார்கள். முகங்கள் தீவிரமாயிருந்தன.

 

"அவர்களது நடவடிக்கைகள் மிகவும் மோசமாகிவிட்டன. பொறுத்திருப்பது ஆபத்தானது"

 

"எங்களுக்கு விளங்குகிறது. விளங்க வேண்டியவர்களுக்கும் விளங்க வேண்டுமே. பக்கம் பக்கமாக அறிக்கைகள் எழுதியனுப்பியாகிவிட்டது"

 

"தேர்தலை நினைத்துப் பயப்படுகிறார்கள் போலும். துணிவில்லாத அரசியல்வாதிகள்"

 

"இப்போது இப்படி இருப்பார்கள். நிலமை மோசமானபின் எங்கள் மீதுதான் பாய்வார்கள்"

 

"எமது ஒப்பிறேசன்-எக்ஸ் சரிவருமா?"

 

"நம்பிக்கை இருக்கிறது. இம்முறை பி.என்.டி.யை அணுகியிருக்கின்றேன். அவர்களிடம் நிறையத் தகவல்கள் இருக்கின்றன. எப்படியும் வென்று தருவார்கள். அவர்கள் முடிவு எந்த நேரத்திலும் வரலாம். நாம் தயாராக இருக்க வேண்டும்"

 

அவர்கள் இருவரும் உயிராயிருந்த கணனியின் முன் காத்திருந்தார்கள்.

 

முன்கதைச் சுருக்கம் (தொடர்ச்சி) 

இருள் சுத்தமாக நகரைப் பூசியிருந்தது. அவ்வப்போது வாகனங்கள் போய் வருவதைத் தவிர வேறு சத்தமில்லை. எறோற்றிக் படம் பார்க்காத வீடுகள் தூங்கிப் போயிருந்தன. ஏற்கெனவே அது ஒதுக்குப்புறமான குடியிருப்புத்தான்.

 

தெருவின் முடிவிலிருந்த நான்கு மாடிக் கட்டிடத்தின் முன் அந்த வான் சத்தமில்லாமல் நின்றது. மிக எச்சரிக்கையுடன் அதிலிருந்து இறங்கிய நால்வர் இருளுடன் கலந்தார்கள்.

 

உரிய திறப்புக்குப் பதிலாக வேறு கம்பிகள் முயற்சி செய்ததால் நான்கு மாடிக் கட்டிடத்தின் முன் வாசல் தாமதமாகவே திறந்தது. பேனா விளக்கு வெளிச்சம் படிகளில் ஏறியது. இரண்டாம் மாடியின் வலது பக்கக் கதவும் தாமதமாகவே சத்தமின்றித் திறந்து உடன் மூடியது.

 

உள்ளேயிருந்து சில பொருட்கள் உடைந்த சத்தமும் ஒருவனின் அலறலும் வெளியே கேட்கவில்லை.

 

எல்லாக் கதவுகளும் திரும்ப மூடி, வான் புறப்படும்போது, தற்செயலாக ஒரு வீட்டின் சன்னலால் எட்டிப் பார்த்த ஒருவர் வானைக் கவனித்தார். (தொடரும்....) 

 

 

இசைக் குழு முழங்கத் தொடங்கிவிட்டது.

 

எல்லாம் அடக்குமுறைகளுக்கெதிரான பாடல்கள்தான். வரிக்கு வரி சூடு கிளம்பியது. தங்களுக்குப் பிடித்த வரிகள் வரும்போது கைதட்டி விசிலடித்தார்கள். தாங்களும் சேர்ந்து பாடினார்கள்.

 

ஒரு பகுதி ஓரளவுக்குச் சுமாராக ஆடியது. பியர் போத்தல்கள் தொடர்ந்து காலியாகிக் கொண்டிருந்தன. அந்த நேரத்திலும் இரண்டொருவர் தனித்து நின்று அரசியல் கதைத்தார்கள்.

 

சுவர்களில் யேர்மனிய அரசியல் தலைவர்களின் கேலிச் சித்திரங்களுக்குக் கீழ் தாறுமாறாகக் கிழித்து எழுதியிருந்தார்கள். தூசணங்களும் பறவாயில்லை.

 

சேகுவராவின் தொப்பி போட்ட படம் மட்டும் அழகாயிருந்தது.

 

இசைக் குழு பொப்மாலியின் பாட்டை முடித்து, தாங்கள் சுயமாக இயற்றிய அகதிகளைக் கொளுத்துபவர்கள் பாராளுமன்றத்தில்... என்ற பாடலை ஆரம்பித்தார்கள்.

 

கேட்டுக் கொண்டிருந்தவர்கள் உணர்ச்சி வசப்பட்டார்கள். 

 

• • •

 

பி.என்.டி.யின் இரகசிய அறைகளில் ஒன்று.

 

அங்கிருந்த மூவரில் அரசியல்வாதியும் ஒருவர். மிகவும் கவனமாக வார்த்தைகளை அளந்து கதைத்துக் கொண்டிருந்தார்கள்.

 

"இது தேர்தல் வருடம். எதிர்க்கட்சிகள் உன்னிப்பாக இருக்கின்றன. சிறிய தகவல் கசிந்தாலும் உசாராகிவிடுவார்கள்"

 

"அவர்களுக்கும் இவர்கள் எதிரிகள் என்பதுதான் இங்கு முரண்நகை"

 

"இதுவரை எவ்வளவோ பெரிய வேலைகள் செய்திருக்கின்றோம். ஒன்று கூட வெளியாகவில்லை. இப்போது செய்யப்போவது மிக மிகச் சின்ன வேலை. ஒரு சிறு பிள்ளையின் விளையாட்டைப் போல"

 

"எதற்கும் எச்சரிக்கையாயிருப்பது நல்லது. பத்திரிகைகள் கூட எல்லா இடங்களிலும் உளவுக்கு ஆட்கள் வைத்திருக்கிறார்கள்"

 

"எங்களையே உளவா?" என்று சிரித்தார் பி.என்.டி. அதிகாரிகளில் ஒருவர்.

 

"இதில் மொத்தமாக எத்தனை பேர் சம்பந்தப்படுவார்கள்?"

 

"நாங்கள் மூவர், நீங்கள், உங்கள் நகர குற்றவியல் திணைக்கள அதிகாரிகள் இருவர், முக்கியமாக உள்நாட்டமைச்சர். இவ்வளவுதான்"

 

"அவரும் உங்கள் அரசியல் கட்சிதானே?"

 

"அவருக்கு ஏற்கெனவே விபரமாகத் தொலைநகல் அனுப்பிவிட்டோம். மேலதிக விபரங்கள் தேவைப்படின் அவர் எம்முடன் தொடர்பு கொள்வார்"

 

"அவருடைய பதிலைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளலாம்"

 

காத்திருந்தார்கள்.

 

 

முன்கதைச் சுருக்கம் (தொடர்ச்சி) 

யேர்மனிய, நெதர்லாந்து எல்லை.

 

ஐரோப்பிய இணைவில் உத்தியோகபூர்வ எல்லைகள் காணாமல் போயிருந்தன. என்றாலும் சாதாரண உடையிலும், சாதாரண கார்களிலும் பொலிஸ்கார்கள் ஆங்காங்கேயிருந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்.

 

கோடைகால விடுமுறைக்காலம். கார்களுக்கு மேலோ அல்லது பின்னாலோ சைக்கிள்கள் கட்டப்பட்டிருந்தன. படகுகளையும் இழுத்துக் கொண்டு போனார்கள். இத்தனைநாள் உழைத்தது ஊர் சுற்றிச் சந்தோசிக்கவே என்பதாக அவர்கள்.

 

வாகனங்களின் முன்பக்கத்தால் வந்த வெளிச்சக் கோடுகளும், பின் பக்கத்தால் தெரிந்த சிவப்புப் புள்ளிகளுமே அந்த நேரத்து இயக்கமாயிருந்தன.

 

நடுநிசிக்குப் பின்னதாக-

 

நெதர்லாந்து எல்லைப் பொலிசாருக்கு யேர்மனியப் பொலிசாரிடமிருந்து தகவல் வந்தது.

 

அவர்கள் காத்திருந்து, அந்த வான் வந்தபோது, குறுக்கே வந்து மறித்தார்கள். ஆயுதம் தரித்திருந்த பொலிசார் தடதடவென வானைச் சூழ்ந்தார்கள்.

 

சாரதி ஆசனத்திலும், பக்கத்திலும் யேர்மனியர்கள்.

 

பொலிசார் மிகக் கவனமாக வானின் பின் கதவைத் திறந்தபோது-

 

பயந்த விழிகளுடன் அல்ஜீரியர்கள். (தொடரும்....) 

 

 

உள்நாட்டமைச்சர் தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தார். கையில் தொலைநகல் இருந்தது.

 

"நீங்கள் எழுதிய சம்பவங்களுக்குத் தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றனவா?"

 

"நிச்சயமான ஆதாரங்கள் இருக்கின்றன. அவர்களின் கடந்தகால நடவடிக்கைகளை ஏற்கெனவே உங்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றோம். அண்மைக்கால நடவடிக்கைகளையும் சேகரித்திருக்கின்றோம். குர்திஸ்கார்களின் வீதித் தடை நடவடிக்கைகளில் இவர்கள் பங்குபற்றியது எம்மிடம் வீடியோ நாடாவாக இருக்கிறது. தம்மில் ஒருவனைத் தாக்கிய புதிய நாஸிக்காரனின் வீட்டுக்குள் புகுந்து அவனது உடமைகளைச் சேதமாக்கியதுடன், அவனையும் குற்றுயிராக்கிவிட்டு இவர்கள் தப்பிச் சென்றபோது இவர்கள் வானைப் பக்கத்து வீட்டுக்காரர் அவதானித்திருக்கிறார். தேவையென்றால் இன்னும் சாட்சியங்களை நாங்கள் உருவாக்கலாம். ஏனெனில் அந்தக் கட்டிடத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் புதியநாஸிக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். கடைசியாக நாடுகடத்தப்பட இருந்த அல்ஜீரியக் குடும்பங்களை சட்டவிரோதமாக நெதர்லாந்துக்குக் கடத்தியமைக்கு நெதர்லாந்துப் பொலிசாரின் விசாரணைகளும் எமக்கு வந்து சேர்ந்திருக்கின்றன"

 

"இவர்கள் எந்தளவுக்கு ஆபத்தானவர்கள் என்று இதுவரையான தகவல்கள் சொல்லுகின்றன"

 

"அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் என்பது தெளிவு. வெளிநாட்டு இடதுசாரிப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உண்டு. இங்குள்ள வெளிநாட்டு அரசியற் குழுக்களுக்கும் பின்னணியில் இருக்கிறார்கள். இதுவரை சாதாரண ஆயுதங்கள் வைத்திருப்பதே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பயங்கர ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளலாம்"

 

"இப்போது நீங்கள் உத்தேசித்துள்ள ஒப்பிறேசன்-எக்ஸ் இனால் எதிர்பார்க்கப்படுகின்ற விளைவுகள் நிச்சயமானவை என்று நம்புகின்றீர்களா?"

 

"ஆம். அவர்கள் கூடுவதற்கும், பொதுசன வேலைகளில் ஈடுபடுவதற்கும் அந்த மண்டபம்தான் உதவுகிறது. அதை அவர்களுக்கு இல்லாமல் ஆக்கிவிடலாம். அவர்களுக்கு ஆதரவு கொடுக்கின்ற சாதாரண மக்களுக்கு அவர்கள் மேல் வெறுப்பை உண்டாக்கிவிடலாம். சனனாயக நடவடிக்கையில் ஈடுபடாதவகையில் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தால் பொலிசார் அவர்கள் மீது எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்க உதவியாயிருக்கும். முக்கியமாக எமது நடவடிக்கையினால் அவர்களில் தீவிரமானவர்களை கைது செய்து சிறையிலடைத்தால் மற்றவர்கள் சிதறிவிடுவார்கள்"

 

"கவனம் தேவை. ஏற்கெனவே பேர்லினில் நடந்த ஊர்வலத்தில் பொலிசாரே ஊர்வலக்காரர்கள் போல கலந்து கலகத்தைத் தொடக்கி வைத்ததைப் பத்திரிகைகள் மோப்பம் பிடித்துவிட்டன"

 

"விட்ட பிழைகளிலிருந்து கற்றுக் கொண்டு கவனமாயிருக்கின்றோம்"

 

"உங்கள் நடவடிக்கைக்கு எனது சம்மதம்"

 

• • •

 

புள்ளி எக்ஸ் கட்டிடத்திற்கு முன்னாலுள்ள கத்தோலிக்க தேவாயத்திற்கு மிகவும் சாமர்த்தியமாக ஒளித்து ஒளித்து ஒருவன் வந்தான். தான் கொண்டுவந்த பொருட்களை எடுத்து முயற்சியில் இறங்கினான். பிறகு வந்தவழியே மறைந்தான்.

 

சிறிது நேரத்தின் பின் -

 

பலத்த சத்தம். தேவாலயம் தீப் பிடித்து எரியத் தொடங்கியது.

 

புள்ளி-எக்ஸில் குழுமியிருந்தவர்கள் பரபரப்புடன் வெளியே ஓடி வந்தார்கள். நெருப்பைப் பார்த்தார்கள். சிலர் தேவாலயத்தை நோக்கி ஓடினார்கள்.

 

அயல் வீடுகள் விழித்துக் கொண்டன. தூக்கக் கலக்கத்துடன் சன்னல்களைத் திறந்தார்கள். தேவாலயத்திற்கும், புள்ளி-எக்ஸுக்குமாக ஓட்டொனொமன்கள் ஓடித் திரிவதைப் பார்த்தார்கள். பொலிசுக்குப் போன் செய்தார்கள்.

 

தயாராக இருந்த பொலிசார் வந்து புள்ளி-எக்ஸைச் சுற்றி வளைத்தார்கள். வெளியே நின்றவர்களையும் உள்ளே இழுத்துவந்து அடைத்தார்கள். அவர்கள் எல்லோருடைய விபரங்களும் பொலிஸ் கணனியில் பதியப்பட்டன. ஏற்கெனவே திட்டமிட்டபடி குறித்த ஆறு பேருக்கு விலங்கு மாட்டி, பொலிஸ் வானில் ஏற்றினார்கள்.

 

• • •

 

..... இன்றிரவு நூறன்பேக் சங்ற் ஜோசப் தேவாலயத்திற்கு தீ வைக்கப்பட்டது. இத் தேவாலயத்திற்கு முன்பாக உள்ள புள்ளி-எக்ஸ் என்ற மண்டபத்தில் கூடியிருந்த இடதுசாரித் தீவிரவாதிகளே இந் நெருப்பை வைத்ததாக அயல் வீடுகளில் வசித்தவர்களின் சாட்சியங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. தீ வைப்புக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. கருக்கலைப்பைத் தடுக்க வேண்டுமென்ற பாப்பரசரின் அண்மைய வேண்டுகோளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவே தீ வைத்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஆறு பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். புள்ளி-எக்ஸ் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக நகர முதல்வர் அறிவித்துள்ளார். இம் மண்டபத்தை மூடிவிடும்படி ஏற்கெனவே இப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தது தெரிந்ததே. இக் குழுவினர் பொலிசாரின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கிளின்டனின் பாலியல்....

 

பின்கதைச் சுருக்கம் 

சில மாதங்களின் பின் -

 

புகையிரதங்கள் கடைசியாக நிறுத்தி வைக்கப்படும் தரிப்பிடம்.

 

இறுதிப் புகையிரதத்தையும் நிறுத்திவிட்டுப்போன சில மணி நேரங்களின் பின், அவை தீப் பிடித்து எரியத் தொடங்கின.

 

பொலிஸ், தீயணைப்புப்படை எல்லாம் விரைந்து வந்தன.

 

அணுக் கழிவுகளை ஏற்றி வருவதற்கான எமது எதிர்ப்பு. இந்த வடிவில் தொடரும் என்ற உரிமை கோரல் பொலிசுக்குக் கிடைத்தது.

 

 

இன்னொரு குட்டிக் கதை!

 

யேர்மனிக்குத் தமிழர்கள் புலம் பெயர்ந்து பல ஆண்டுகள் போயிருந்தன.

அவர்கள் -

திரையிசை நடனம் ஆடினார்கள்.

பெண்பிள்ளைகளுக்குச் சாமத்தியச் சடங்கு முடிந்ததும் இலங்கை அல்லது இந்தியாவில் விட்டு சுத்தமாக வளர்ப்பதைப் பற்றி யோசித்தார்கள்.

செற்றியிலிருந்து ஜொனிவொக்கர் அடித்தபடி சோவியத் யூனியனின் சரிவை ஆராய்ந்தார்கள்.

புலம்பெயர் இலக்கியம் விழாக் கொண்டது. 

 

 

 

 

 

('இன்னுமொரு காலடி', இங்கிலாந்து, 1998) 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்