12072022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

ஆயுத வியாபாரம்

சிறியரக ஆயுதங்களின் பரவலினால் உலகெங்கும் அதிகரித்திருக்கும் வன்முறைகள் தொடர்பாக ஆராய்வதற்கு அண்மையில் ஜெனீவாவில் கூட்டப்பட்ட சர்வதேச மகா நாடொன்றில் வெளியிடப்பட்ட தகவல்களை நோக்கும் போது உண்மையான பேரழிவு ஆயுதங்கள் சிறியரக ஆயுதங்களே என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

 

 

60 கோடிக்கும் அதிகமான சிறியரக மற்றும் இலகு ஆயுதங்கள் உலகம் பூராவும் புழக்கத்தில் இருக்கின்றன. கடந்த வருடம் 5 இலட்சத்துக்கும் அதிகமானவர்களின் மரணத்துக்கு சிறியரக ஆயுதங்கள் காரணமாக இருந்திருக்கின்றன. அதாவது, சிறியரக ஆயுதங்களினால் கடந்த வருடத்தில் வாரமொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் பேர் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். உலகில் இடம்பெற்று வருகின்ற மோதல்களில் பெரும் எண்ணிக்கையானவர்களின் மரணத்துக்கு றைபிள்கள், றொக்கெட் லோஞ்சர்கள், இயந்திரத் துப்பாக்கிகள் மற்றும் கைத்துப்பாக்கிகள் போன்ற சிறியரக ஆயுதங்களே காரணமாக இருந்திருக்கின்றன என்ற தகவல் ஜெனீவா மகா நாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளினால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

 

60 கோடிக்கும் அதிகமான இத்தகைய ஆயுதங்கள் பகிரங்கச் சந்தைகளிலும் கறுப்புச் சந்தைகளிலும் கிடைக்கக் கூடியதாக இருக்கின்ற போதிலும், உலகளாவிய ரீதியில் சிறியரக ஆயுதங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எந்தவொரு சர்வதேச உடன்படிக்கையுமே இல்லை என்று மகாநாட்டில் பிரதிநிதிகள் விசனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்க உலகில் தனவந்த மற்றும் சக்திமிகு நாடுகளின் தலைவர்கள் வர்த்தகம், வறுமை ஒழிப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கடன்பளு போன்ற விவகாரங்கள் குறித்து அடிக்கடி கூடி ஆராய்கிறார்கள். ஆனால், ஒரு பிரச்சினையை இவர்கள் தொட்டும் பார்ப்பதில்லை. உலகின் வறிய நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதன் மூலம் பெரும் ஆதாயத்தை அடையும் தனவந்த நாடுகள் உலகளாவிய ரீதியில் ஆயுதங்களின் பெருக்கத்துக்கு தங்களின் செயற்பாடுகளே காரணம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. தனவந்த நாடுகளைப் பொறுத்தவரை ஆயுத விற்பனை மிகப் பெரிய தொழில்துறையாகும். அரசியல் உறுதிப்பாடற்ற வளர்முக நாடுகளே அவற்றின் சிறந்த வாடிக்கையாளர்கள். 
ஜி8 என்று அழைக்கப்படுகின்ற உலகின் மிகப் பெரிய தனவந்த கைத்தொழில் மய நாடுகள் 2005 ஆம் ஆண்டில் ஆசியா, மத்தியகிழக்கு, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கப் பிராந்தியங்களில் உள்ள அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு விற்பனை செய்த ஆயுதங்கள் உலக ஆயுதவர்த்தகத்தில் 66 சதவீதமாகும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலும் வறியநாடுகளிலும் மக்கள் ஒருவரையொருவர் கொலை செய்வதற்கான ஆயுதங்களை அபரிமிதமாக விநியோகம் செய்யும் அழிவுத் தனமான பணியை தனவந்த நாடுகளே செய்துவருகின்றன. சிறிய ரக ஆயுதங்கள் தொடர்பான சர்வதேச நடவடிக்கை வலையமைப்பு (International Action Network on Small Arms), ஒக்ஸ்பாம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய மூன்று நிறுவனங்கள் வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில் உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் 84 சதவீதத்துக்கு ஜி8 நாடுகளே பொறுப்பாயிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மனித உரிமைகளை மீறுகின்ற நாடுகளுக்கு, சொந்த மக்களைப் பட்டினி போட்டு வதைக்கும் நாடுகளுக்கு, அயல் நாடுகளுடன் போரில் ஈடுபடுவதில் நாட்டம் கொண்ட நாடுகளுக்கு பொறுப்பற்ற முறையில் ஆயுத விநியோகங்களைச் செய்து ஜி8 நாடுகள் பெரும் இலாபத்தைச் சம்பாதிக்கின்றன என்று அந்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
 
உலகளாவிய ஆயுத விற்பனையில் அமெரிக்காவே மேலாதிக்கம் செலுத்துகிறது. 1998 2005 காலகட்டத்தில் 20,500 கோடி டொலர்கள் பெறுமதியான பாரம்பரிய ஆயுதங்களை (Conventional Weapons)அமெரிக்கா விற்பனை செய்திருக்கிறது. அதேவேளை, பிரிட்டன் வருடாந்தம் 500 கோடிடொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடைய பாரம்பரிய ஆயுதங்களை விற்பனை செய்கிறது, ரஷ்யா வருடாந்தம் 350 கோடி டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்கிறது. பிரான்ஸ் வருடாந்தம் 360 கோடி டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்கிறது. ஜேர்மனி 260 கோடி டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களையும் இத்தாலி 360 கோடி டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களையும் வருடாந்தம் விற்பனைசெய்கின்ற அதேவேளை, கனடா 2005 இல் மாத்திரம் 75 கோடி டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்திருக்கிறது. ஜப்பான் உத்தியோகபூர்வமாக ஆயுத விற்பனையில் ஈடுபடுவதில்லையென்றாலும், இராணுவரீதியான தளபாடங்களை ஏற்றுமதி செய்கிறது. 
அதேவேளை, பல வறிய நாடுகள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக செலவிடுகின்ற தொகை மலைப்பைத் தருவதாக இருக்கிறது. உலகின் மிகவும் வறிய நாடுகள் பெறுகின்ற கடனில் 20 சதவீதமானவை கடந்த காலத்தில் ஜி8 நாடுகளிடமிருந்து வாங்கிய ஆயுதங்களுக்கான கொடுப்பனவுக்கே பயன்படுத்தப்பட்டிருக்கின்ற என்று கணிப்பிடப்பட்டிருக்கின்றது. பெரும்பாலான அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அரசாங்கங்கள் சுகாதாரம், கல்வி, சமூக அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றுக்கு செலவிடுவதிலும் பார்க்க பலமடங்கு கூடுதலான நிதியை இராணுவசெலவினங்களுக்கே ஒதுக்கீடு செய்கின்றன. ஆயுதக்கட்டுப்பாடு என்பது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் கோடிக்கணக்கான மக்களைப் பொறுத்தவரை ஒரு ஜீவமரணப் போராட்டவிவகாரமாகும். ஆனால், தனவந்த நாடுகள் அந்தவிவகாரம் குறித்து ஆராய்வதற்கு தயக்கம் காட்டிவருகின்றன. ஆயுத வியாபாரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் வறுமைக்கு எதிரான போராட்டம் தொடர்பில் தனவந்த நாடுகள் அளிக்கும் உறுதிமொழிகளினால் எந்தவிதமான பயனும் ஏற்படப்போவதில்லை. ஆயுதக்கட்டுப்பாடு தொடர்பில் உருப்படியான சர்வதேச உடன்படிக்கையொன்று செய்யப்படாமல் உலகளாவிய வறுமையைத் தணிப்பது குறித்தும் சுதந்திரம் மற்றும் பந்தோபஸ்தைப் பேணுவது குறித்தும் பேசுவதென்பது வெறும் பகட்டு ஆரவாரமேயாகும். 
thinakural

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்