கத்தரி
வெள்ளையாக
மாறுமா?
மாறும்!
வெள்ளையாக மட்டுமென்ன
செம்மையாக, மஞ்சளாக .. இன்னும் இன்னும்

கத்தரி வாழையுடன் கூட்டிணைந்து
தேங்காய்ப் பாலில் முக்குளித்து,
தேசியுடன் கலக்கும் போது
வாசனை கமழும், வாயூறும்

அக்கம் பக்கமும்
பொட்டுக்குள்ளால்
எட்டிப் பாரக்கும்.

ஊர்க் கத்தரியானால்
ஊரே கூடும்.

சுவைப்போமா?

தேங்காய்ப் பால் கத்தரி

தேவையான பொருட்கள்

1. பிஞ்சுக் கத்தரிக்காய் - 2
2. வாழைக்காய் - 1
3. சின்ன வெங்காயம் - 5,6
4. பச்சை மிளகாய் - 2
5. வெந்தயம் - ½ ரீ ஸ்பூன்
6. தேங்காய்த் துருவல் - ½ கப்
7. மஞ்சள் தூள் விரும்பினால்
8. தேசிப்பழம் - ½
9. கறிவேற்பிலை – 1 இலை
10. உப்பு தேவையான அளவு

தாளிக்க

1. சின்ன வெங்காயம் - 3,4
2. தாளிதக் கலவை - 1 ரீ ஸ்பூன் (கடுகு, உழுத்தம் பருப்பு, சீரகம், சோம்பு,)
3. கறிவேற்பிலை – 1 இலை
4. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

1 ம் கெட்டிப் பாலை எடுத்து தனியே வைத்துவிடுங்கள். 2ம், 3ம் பாலை ஒரு கோப்பையில் விட்டுக் கொள்ளுங்கள்.

கத்தரிக்காயை முழுதாகக் கழுவி எடுத்து தண்ணீரில் சின்னவிரலளவு நீள் துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள்.

வாழைக்காயின் தோலை உட் தோலுடன் சீவிக் கழிக்கவும், காயை தண்ணீரில் கத்தரியைப் போல வெட்டிக் கொள்ளுங்கள்.

வெங்காயம் மிளகாயை தனித்தனியே நீளமாக வெட்டிக் வையுங்கள்.
அடுப்பில் வைக்கும் பாத்திரத்தை எடுத்து 2ம், 3ம் பாலை ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகளை 2-3 தண்ணீரில் கழுவிக் கொண்டு பாத்திரத்தில் போடுங்கள். பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மஞ்சள், வெந்தயம் சேர்த்து இறுக்கமான மூடி போட்டு 5-7 நிமிடம் அவிய விடுங்கள்.

திறந்து பிரட்டிவிடுங்கள். மீண்டும் மூடி போட்டு 2 நிமிடம் அவியவிட்டு எடுத்து கிளறி, தண்ணிப்பால் வற்ற, 1ம் பாலை ஊற்றி 1 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, எலுமிச்சம் சாறு சேர்த்துவிடுங்கள்.

எண்ணெயில் தாளித்துக் கொட்டி கிளறிவிடுங்கள்.
தேங்காய்ப்பால் மணத்துடன் குழந்தைகளும் விரும்பி உண்ணும் கறியாகிவிடும்.

குறிப்பு

வாழைக்காய்க்குப் பதில் உருளைக்கிழங்கு, பலாக்கொட்டை கலந்து கொள்ளலாம்.

அசைவம் உண்போர் கருவாடு சேர்த்துக் கொண்டால் சுவை தரும்.
http://sinnutasty.blogspot.com/2008/10/blog-post_15.html