இந்த இணையத்தளம் மக்களின் வாழ்வியல் உரிமை சார்ந்த, சமூக உண்மைகளுக்காக போராடுகின்றது. இந்தப் போராட்டத்தில் நாம் எமது கருத்துச் சுதந்திரத்தை தக்கவைக்கும் ஒரு போராட்டமும், இதில் ஒரு அங்கமாகிவிடுகின்றது.

 இந்த இணையத்தளத்தை குழப்பவும், செயலிழக்கப்பண்ணவும், 10க்கு மேற்பட்ட தரம் இணையத்தின் இயங்கும் தளத்துக்குள் இனம் தெரியாத நபர்கள் புகுந்து முயற்சி செய்துள்ளது தெரியவந்துள்ளது. சமூக உண்மைகளையும், சமூக உணர்வுகளையும் எதிர்கொள்ள வக்கற்ற சமூகவிரோதக் கோழைகளின், இழிந்த ஒரு வக்கிரமே இந்த முயற்சி. இதன் செயல்பாட்டை நிறுத்துவது அல்லது சமூக உண்மைகளை எழுதுபவர்களையே கொன்றுவிடுவது என்பது இன்றைய தேசியமாக வக்கரித்துக் கிடக்கின்றது. இந்த அடிப்படையில் புலி ஆதரவு, புலியெதிர்ப்புக்கு இடையில் எந்த வேறுபாடும் கொள்கையளவில் கூட கிடையாது. மக்களின் சமூக வாழ்வியலுக்கு எதிராக இயங்குவதில் இவர்கள் ஒன்றுபட்டு கைகோர்த்து நிற்கின்றனர்.


இது ஒருபுறமிருக்க, புலி ஆதரவு இணையதளங்களும் சரி புலியெதிர்ப்பு இணையத்தளங்களும் சரி எமது இணையத் தளத்துக்கு இணைப்பு கொடுக்காமல் விடுவதில் கூட ஒன்றுபட்டு நிற்கின்றன. மக்களுக்காக பேசுவது, இவ்விரண்டு அரசியல் பிரிவினருக்கும் சகிக்க முடியாத ஒன்றாக உள்ளது. இதில் கொள்கை முரண்பாடு அற்றவர்கள் என்பதை நடைமுறையில் அவர்களின் எழுத்துகள், கூட்டுகள் தெளிவாக உணர்த்தி நிற்கின்றன. இந்த வகையில் மக்களின் தனித்துவமான உண்மைகளை எமது இணையத்தளம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. மக்களுக்கு எதிராக உலகெங்கும் இயங்கும் ஏகாதிபத்திய தலைவர்களின் பேட்டிகளையும், உலகத்தை அடக்கியாள நினைக்கும் மனித விரோத கயவர்களின் வக்கிரங்களையும் தேடியெடுத்து மொழிபெயர்த்து தமது இணைய பக்களை நிரப்பும் புலியெதிhப்பு இணையங்கள், எமது இணையத் தள கட்டுரைகள் எதையும் போடத் தயாரற்ற நிலையில் உள்ள அரசியல் வக்கிரத்தை நாம் காண்கின்றோம்;. சமரில் வெளிவந்த முஸ்லீம் மக்கள் பற்றிய கட்டுரை ஒன்றைப் போட்ட தேனீ இணைத்தளம், அதன் கீழ் நன்றியை ~சமரசம்(http://tamailcircle.net/samar01-31/samar29/samar29-25.htm) என்று போட்டனர். இதை நாம் ஆட்சேபித்து திருத்தக் கோரியபோதும், அதை அவர்கள் அலட்சியம் செய்தனர். இதே தேனீ இணையம் எமது இணைத்தளத்தை தமது இணைப்பில் போட்ட ஓரிரு நாளிலேயே, அவசரமாக நீக்கினர்.

 

மக்களுக்காக பேசுவது, அதை அறிமுகப்படுத்துவதும் ஆபத்தான ஒன்று என்பது அவர்களின் அரசியல் அகராதி மட்டுமின்றி, அவர்களின் ஆலோசர்களும் எடுத்துரைத்தன் விளைவே இது. இதில் அவர்களுக்கு இடையில் ஒரு கூட்டுமுள்ளது. மக்களுக்காக பேசாது, புலிக்கு எதிராக மட்டும் இயங்குவதே புலியெதிர்ப்பு அணியின் மக்கள்விரோத அரசியல். மறுபக்கத்தில் புலிகள் மக்களுக்காக பேசாது, புலி அல்லாத அணியை பற்றி மட்டும் பேசுவது அவர்களின் மக்கள் விரோத அரசியல். புலியெதிர்ப்பு அணியினர் புலிகளைப் பற்றி பேசுவதும், புலிகள் புலியெதிர்ப்பு அணியைப் பற்றி பேசுதுமே இன்றைய செய்திகளாகின்றது. இதுவே அவர்களின் உயாந்தபட்ச அரசியலாகி விடுகின்றது. இங்கு தூற்றுதல் முதல் உண்மைக்கு புறம்பான கற்பனைகளையும் கலந்த செய்திகளை புனைகின்றனர். ஒருவர் மறைக்கும் விடையத்தை மற்றவர் கொண்டு வருவது இவர்களின் உயர்ந்தபட்ச நடவடிக்கையாக உள்ளது.

 

ஆனால் இவர்கள் விமர்சனத்தில் இருந்து தப்பிக் கொள்ள, தம்மை அரசியல் செயல்பாட்டில் இருந்த விலத்திக் காட்டும் இவர்கள், தாம் வெறுமனே செய்திகளை கொண்டு வருபவர்கள் என்ற காட்டமுனைகின்றனர். உண்மையில் செய்தியை ஒரு செய்தியாக கொண்டுவரும், அரசியல் உள்நோக்கமற்ற வகையில் இவர்கள் இயங்குகின்றனரா! அதாவது செய்தியை தமது சொந்தக் கருத்தின்றி செய்தியாக மட்டும் கொண்டு வருகின்றனவா என்றால் இல்லை. செய்திகளை தேர்ந்தெடுத்தல் என்பதைக் கூட, ஒருவிதமான காழ்ப்புடன், வெறுப்பை உருவாக்கும் வகையில் தம்மை வெளிப்படுத்துகின்றன. இன்று செய்தியை செய்தியாக மட்டும், உண்மையை அடிப்படையாக கொண்ட வருவது கூட பாசிச கட்டமைப்பில் முக்கியமானதது தான். ஆனால் புலி அல்லாத செய்திகள் எதுவும், இதனடிப்படையில் செயல்படவில்லை. மாறாக அவை தமக்கு தாமே ஒரு களங்கம் எற்படும் வகையில், தம்மைத்தாம் கறைப்படுத்திக் கொண்டு புலிகளைப் போல் போட்டிச் செய்தியை வெளியிடுகின்றன. புலிகள் ஒரு பக்கத்தை  எப்படி மறைக்கின்றனரோ, அதையே புலி அல்லாத  செய்திகளும் செய்கின்றன. செய்தியை செய்தியாக கொண்டு வரும் பத்திரிகை உள்ளடகத்தைக் கூட, நாம் தமிழ் பரப்பில் காணமுடியாது. கறைகளால் தம்மை ப+சிக் கொண்டபடி, தாம் வெறும் செய்திகள் கொண்டு வருவதாக கூறுவதில் என்னதான் அர்த்தமுண்டு.

 

உண்மையில் மக்களைப்பற்றி, மக்களின் வாழ்வியல் பற்றி இவர்கள் யாரும் பேசுவதில்லை. மக்களின் தேசியம் பற்றி பேசுவதில்லை. ஏகாதிபத்தியம் உலகமயமாதல் போன்றன, உலகளவில் மக்களுக்கு எதிராக இயங்குவதை (இதில் தமிழ் மக்களும் உள்ளடங்கும்), இரண்டு பகுதியும் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். ஏகாதிபத்தியத்தின் கால் தூசுக்கு ஏங்கி தவிக்கும் இவர்கள், மக்களை எதிரியாக கருதியே அவர்களின் வாழ்வியல் அவலத்தை மூடிமறைத்து நிற்கின்றனர்.இது இணையம் முதல் ஊடகவியல் எங்கும் ஒரேவிதமாகவே உள்ளது. ஒரு மனிதன் தனது கருத்தை, எழுத்தை, பேச்சுச் சுதந்திரத்தை மக்கள் நலனில் இருந்து பயன்படுத்தும் உரிiமையை மறுப்பதே, புலியெதிர்ப்பு, புலியாதரவு அணிகளின் அன்றாட அரசியலாகும். இதையே அவர்களின் எழுத்துகள், நடைமுறைகள் முதல் அவர்களின் திட்டமிட்ட புறக்கணிப்புகள் வரை, தெளிவாக உழைத்து வாழும் மனித இனத்துக்கு எடுத்துக் காட்டுகின்றது. ஏகாதிபத்திய கைக்ககூலிகளாக செயல்படத் தயாராக இருக்கும் எல்லைக்குள் இருந்தபடிதான், இரண்டு பிரிவினரும் மக்கள் விரோத அரசியலை முன்வைக்கின்றனர். இந்த உண்மையை புரிந்து கொள்வது, புரிந்துகொள்ள முனைவது சமூக அக்கறை உள்ளவர்கள்  ஒவ்வொருவரினதும் சமூகக் கடமையாகும். இவற்றை புரிந்து கொள்ளாமல் மக்களுக்காக ஒரு நாளுமே போராடமுடியாது.