Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ் பேசும் மக்களின் விருப்பம் எதுவோ, அது எப்போதும் நிராகரிக்கப்பட்டே வருகின்றது. தமிழ் மக்கள் விரும்புவது அமைதியான சமாதானத்தைத் தான். இதை புலிகள் முதல் பேரினவாத அரசு வரை அனைவருமே நிராகரிக்கின்றனர். மக்கள் புலிகளின் யுத்தத்தை விரும்புவதாகவும்,

 அரசு புலிகளின் அடிமைத்தனத்தை விரும்புவதாகவும கூறி யுத்தத்தைத் திணிக்கின்றது. யாரும் ஒரு தலைப்பட்சமாகத்தன்னும் கூட, நேர்மையாக மக்களுக்கு சமாதானத்தையும், அமைதியையும் பிரகடனம் செய்துவிடவில்லை.

 

மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் ஒன்றிணைந்து கூட கருத்துரைக்கவில்லை. இதைப் புலிகள் சரி, புலியெதிர்ப்புக் கும்பல் சரி, கருணா சரி, அரசு சரி யாருமே மக்களின் வாழ்வுடன் ஒன்றிணைந்து கருத்துரைக்கவில்லை. மக்களின் வாழ்வியல் துன்பங்கள் மலையாகி, அதுவே கண்ணீர் ஆறாக ஒடுகின்றது. அண்மையில் நடந்த தேர்தலில் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைத்த ஒவ்வொரு தமிழனும், சமாதானம் வேண்டியே வாக்களித்தனர். ஆனால் இந்தச் செய்தியைக் கூட பிரபாகரனின் மாவீரர் தினச்செய்தி மறுதலிக்கின்றது. மாறாக தாம் விரும்பித் திணித்த முடிவையே, தமிழ் மக்களின் விருப்பார்ந்த முடிவாக காட்டுவதே நிகழ்கின்றது.

 

புலிகள் யுத்தத்தை நோக்கி மீளச் செல்லுதல் என்ற புலிகளின் அரசியல் நிலையும், புலிகள் யுத்தத்தை விரும்பியவாறு தொடங்க முடியாத வகையில் நிர்பந்தத்தைந் செய்வது என்ற அடிப்படையில் பேரினவாதம் கடிவாளங்களைப் போட்டுள்ளது. இரண்டு பகுதியும் தத்தம் பக்கத்துக்கு பரஸ்பரம் இழுக்கின்றனர். புலிகள் யுத்தத்தை நோக்கி படுகொலைகள், இராணுவம் மீதான தாக்குதல் என்ற அடிப்படையில் ஒரு யுத்தத்தையே ஆரம்பித்து விட்டனர். அரசு அதை தடுக்க சர்வதேச சமூகத்தையே நாடிநிற்கின்றது. ஏகாதிபத்தியம் புலிகளின் இந்த நிலையை, அமைதியாகவே அனுமதிக்கும் என்ற நிலையை கடந்து செல்லுகின்றது.

 

இந்த நிலையில் ஏகாதிபத்தியங்களின் அதிகரித்த தலையீடு, தமிழ் சிங்கள மக்கள் முதல் இலங்கை வாழ் மக்களின் அடிப்படையான சுதந்திரத்தையே கேள்விக்குள்ளாக்கி உள்ளது. ஒரு அன்னிய தலையீட்டின் மூலம் தான் அமைதி நிலவமுடியும் என்ற மக்கள் மத்தியிலான ஒரு நம்பிக்கையை, தமிழ் சிங்கள அரசியல் வாதிகள் பலாக்காரமாகவே மக்களிடம் வலிந்து திணிக்கின்றனர். இந்த நிலையில் இலங்கையை அடிமைப்படுத்தும் வகையில், அதிகரித்து வருகின்ற நெருக்குவாரங்கள், புலிகளை வரலாற்றில் இருந்தே அரசியல் அனாதையாக்கின்றது.

 

பேரினவாதமும் குறுந்தேசியப் புலிகளும்

 

யாரும் இனம் கண்டுகொள்ள முடியாத வகையில், பேரினவாதம் தமிழ்மக்களின் அடிப்படையான ஜனநாயக உரிமையை இழிவாடியே மறுக்கின்றது. தமிழ் மக்களின் பிரச்சனைகள் அரசியலில் இனம் காணமுடியாது சூக்குமாகி காணமால் போய்விட்டது. தமிழ் மக்களுக்கு கூட அரசியல் ரீதியாக தமக்கு என்ன பிரச்சனைகள் என்று தெரியாது போய்விட்டது. இதுவே உண்மை. பிரச்சனைகள் வெறும் புலிப்பிரச்சனையாக மாற்றப்பட்டுவிட்டது. தமிழ் மக்களின் பக்கதிலும் கூட இப்படித்தான் மாறிவிட்டது. புலியை ஆதரிப்பவர்களும் சரி, எதிர்ப்பவர்களும் சரி, தமிழ் மக்களின் பிரச்சனைகள் என்னவெனத் தெரியாத ஒரு நிலைக்குள் அம்மணமாகவே தெருப்பிணமாகிவிட்டனர்.

 

எங்கும் இந்த நிலை. இந்த அரசியல் உண்மையை புலிகளின் இராணுவாத அரசியல் நடத்தைகள், வெளித்தெரியாத வகையில் சூக்குமமாக்கின்றது. இலங்கையில் எந்தப் பேரினவாதக் கட்சியும், தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனையை பிரச்சனையாகக் கூட எடுக்கவில்லை. இதை தமிழ் மக்கள் உணர முடியாத வகையில், புலிகளின் இராணுவாத அரசியலே விலங்கிட்டுள்ளது. இதுவே படிப்படியாக வெறும் பிரபாகரன் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த நிலையில் சர்வதேச ரீதியாகவே சமூகங்கள் தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கை சாhந்த உண்மைகளைக் கண்டு கொள்ளமுடியாத வகையில், புலியின் மக்கள் விரோத அரசியலே முன்னிலைப்பட்டு நிற்கின்றது.

 

இந்த நிலையில் இன்று பேரினவாத அரசு வெறும் புலிப் பிரச்சனையாக மட்டும் தான், தமிழ் மக்களின் பிரச்சனையை எடுக்கின்றனர். இதைத் தான் புலிகளும் கூட தமிழ் மக்களிடம் மட்டுமல்ல, சிங்கள இனவாதிகளிடமும் திணித்துவிடுகின்றனர். பொதுவாக சிங்கள இனவாதிகள் தமது சொந்த இனவாத முகத்தை மூடி நிற்கும் வண்ணம், புலிகளின் ஜனநாயக மீறல்களையே தமிழ் மக்களின் பிரச்சனையாக மாற்றும் வகையில், புலியின் செயல்பாடுகள் முன்னிலைப்படுத்தப்பட்டு விடுகின்றது. புலிகளின் நடத்தைகளும் கூட இதுவாக மாறி நிற்கின்றது. இதைத்தான் புலியல்லாத தரப்பும் கூட, தமிழ் மக்களின் பிரச்சனையை புலிப் பிரச்சனையாகவும், புலியின் ஜனநாயக மீறலைத் தான் தமிழ் மக்களின் பிரச்சனையாக காட்டுகின்றனர். அந்தளவுக்கு புலியின் இராணுவாத அரசியல், மக்களின் நலனில் இருந்து சிந்திப்பதையே மறுக்கின்றது. மக்கள் தமக்கு அடங்கி வாய்பொத்தி கைகாட்டி நிற்பதைத்தான், தேசியமாக புலிகள் புணர்ந்து காட்டுகின்றனர். நினைத்துப் பார்க்கவே முடியாதளவுக்கு, தமிழ் மக்களின் குரல் வளையில் புலிகள் கையை வைத்தபடி தான், தமிழ் மக்களின் ஏக பிரநிதிகளாக தம்மைதாம் கூறிக் கொள்கின்றனர்.

 

இந்த நிலையில் புலியின் ஜனநாயக மீறலைப் பற்றி நாம் நேர்மையாக பேச முற்பட வேண்டும் என்றால், நிச்சயமாக தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனையின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கைகளை நாம் முதலில் அங்கீகரிக்க வேண்டும். தமிழ் மக்களின் தேசியம் சார்ந்த ஜனநாயகக் கோரிக்கைகளைக் கூட புலிகள் அங்கீகரிக்கவில்லை என்ற உண்மையை நாம் கண்டு கொண்டு, அதை உயர்த்திப் போராட வேண்டும். இதன் மூலம் புலிகளின் குறுகிய தமிழ் தேசிய வரையறைகளை தெளிவாக இனம் பிரித்துக் காட்டவேண்டும். இதை முதன்மையான அரசியல் பணியாகச் செய்தபடிதான், புலிகளின் மக்கள் விரோத ஜனநாயக மீறலை அம்பலப்படுத்த வேண்டும். இதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் யாருடனும், இதை அங்கீகரிக்க மறுக்கும் யாருடனும் நாம் இணங்கிப் போகமுடியாது. இதை அங்கீகரிக்க மறுப்பவர்களை கடுமையாக விமர்சித்து தனிப்படுத்த வேண்டும். இந்த வகையில் தமது கொள்கையை கொண்டிராத யாரும், புலிகளின் ஜனநாயக மீறலைப் பற்றி பேச எந்தத் தகுதியும் கிடையாது. இவர்களிடம் எந்த அரசியல் நேர்மையும் இருப்பதில்லை. சுற்றி வளைத்துப் பார்த்தால், அதே புலிப் பாணி அரசியலையே கொண்டிருப்பர். இதைப் புரிந்து கொள்ள, நேர்மையான ஒருவனுக்கு விளக்கங்கள் எதுவும் தேவையற்றது. இது அரசியலில் ஈடுபடாத, தனிப்பட்ட மக்களுக்கு மட்டும் விதிவிலக்காக உள்ளது. புலிகள் அல்லாத அணி எல்லோரும் ஒரே அணி என்ற வாதமும் பொய்யானது. நேர்மையற்ற சமரசத்தையே குறிக்கின்றது. மக்களுக்காக போராட முற்படாத அனைவரும், மக்களே தமது விடுதலைக்காக போராட வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படாதவர்கள் அனைவரும், ஒரே அணியாக இருக்கவே முடியாது.

 

பொதுவாக அரசியலில் மக்களின் அடிப்படை கோரிக்கைகளைப் பற்றி பேச மறுப்பவர்கள், புலிகளுடன் பேசுவது பற்றியும், புலிக்கு எதிராக அரசியல் நடத்தவும் கூட முனைகின்றனர். இலங்கையில் தமிழ் மக்களின் நியாயமான ஜனநாயகக் கோரிக்கையை ஏற்று, ஒரு அரசியல் தீர்வை தனது கட்சி சார்பாக அல்லது தமது அரசியல் சார்பாக முன்வைப்பதேயில்லை. இது புலியல்லாத தரப்பினதும் பொதுவான இன்றைய நிலையுயாகும். இலங்கையில் பேரினவாத கட்சிகளிடையே, இதுவே கொலுவேறி கிடக்கின்றது.

 

இந்த நிலையில் சர்வதேச அரங்கிலும், இலங்கை வாழ் மக்கள் மத்தியிலும், ஏன் தமிழ் மக்கள் மத்தியிலும் கூட பேரினவாதம் தனது சொந்த இனவாத முகத்தை மறைத்து வெற்றிபெறுவது நிகழ்கின்றது. இதற்கு அடிப்படைக் காரணம் என்ன. உண்மையில் புலிகளின் மக்கள் விரோத நடத்தைகளே முக்கியமான காரணமாகும். புலிகளின் இராணுவவாத அரசியல், தமிழ் மக்களின் பிரச்சனையையே இல்லாதாக்குன்றது. வெறும் புலிப் பிரச்சனையாக்கி அதைக் குறுக்கி விடுகின்றது. இதனால் மக்களின் மத்தியில் இருந்தும், சர்வதேச அரங்கில் இருந்தும் அன்னியமாகும் புலிகள், தமது சொந்த நிலையைத் தக்கவைக்க அதிகரித்த மனித உரிமை மீறலை தொடாச்சியாகச் செய்கின்றனர். இதைத்தான் அரசு மிக நேர்த்தியாகவே, தனக்கு பக்கபலமாக கொண்டு தனது சொந்த பேரினவாத நிலையைத் தற்காக்கின்றனர். தனது இனவாத ஒடுக்குமுறையை விட, புலிகளின் மனிதயுரிமை மீறலே முதன்மையான மனிதவிரோதச் செயலாக காட்டிவிடுகின்றது. இது தமிழ் மக்கள் மத்தியிலும் கூட, படிப்படியாக அங்கீகரிக்கும் நிலையே உருவாகி வருகின்றது.

 

சிங்கள பேரினவாத அரசு தொடர்ந்தும் பேச்சுவார்தையில், புலிகளின் பலவீனங்கள் மற்றும் ஜனநாயக மீறல்களின் மீது தன்னைத்தான் தற்காக்கின்றது. இதுவே புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சு வாhத்தையிலும், புலிக்கு பாதகமாக இருந்தது. புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சு வார்த்தையிலும் புலிகள் தோல்வி பெற்றனர். பேச்சுவார்த்தையை ஒரு தலைப்பட்சமாக முறித்து, முந்திக் கொண்டு இராணுவத் தாக்குதலை நடத்தினர். இராணுவ இலக்கில் புலிகள் தமக்கு சாதகமாக கருதியவை அனைத்தும், அரசியல் இலக்கில் பாதகமாக அமைந்தது. மிகக்குறுகிய வட்டத்தில் நின்று புலிகள் சிந்திக்கும் ஒவ்வொரு கணமும், இந்த இராணுவ சூனியவாதம் புலிகளின் வெற்றியாகவே எண்ண வைத்தது. ஆனால் உண்மையில் அது அரசியல் ரீதியான தோல்வியையே ஏற்படுத்தி வருகின்றது.

 

புலிகள் அரசியல் தீர்வைப்பற்றி எப்போதும் பேச மறுக்கும் அரசியல் உள்ளடகத்தின் பின்னால், இராணுவவாதமே முதன்மை பெற்று நிற்கின்றது. அதாவது புலிகள் ஆயுதத்தை கைவிட்டால், அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசுவதற்கு என்று எந்த மாற்று அரசியலும் கிடையாது. இந்த அடிப்படையான அரசியல் உண்மைதான், புலிகளை பேச்சு வார்த்தை மேசையை விட்டு இராணுவவாதத்தை நோக்கி ஒடவைக்கின்றது. இதனால் குறுகிய இராணுவவாதக் கோரிக்கைகளுடன் பேச்சு வார்த்தைகள் முறிந்து போகின்றன. பேச்சுவார்த்தை மேசையில் இருந்து ஓடுவதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதே, எப்போதும் புலியின் அரசியல் நிலையாக இருந்தது, இருக்கின்றது. 1995 இல் புலிகள் சந்திரிக்கா அரசுக்கு இடையில் பரிமாறப்பட்ட பேச்சுவார்த்தை உள்ளடக்கம் சார்ந்த கடிதங்கள், (இதில் ஒரு பகுதியை பாலசிங்கத்தின் போரும் சமாதானமும் என்ற நூலில் பார்க்கமுடியும்) தெளிவாக புலிகளின் அரசியல் வங்குரோத்தைத்தான் எடுத்துக் காட்டுகின்றது. பேச்சுவார்த்தை என்றும், மக்களின் அடிப்படையான இயல்பு வாழ்வு என்றும் புலிகள் எப்போதும் கூறுவது எல்லாம், ஒரு சமாதானத்தை நோக்கியல்ல. மாறாக பேரினவாதம் தடுத்து வந்த பொருளாதார தடை சார்ந்த பொருட்களை மீளப் பெறவும், இராணுவநோக்கில் நிலைமைகளை மாற்றி அமைக்கவும் தான் அனைத்துப் பேச்சு வார்த்தைகைளையும் புலிகள் நடத்தினர். இந்த வகையில் புலிகள் நடத்திய அனைத்துப் பேச்சுவார்த்தையையும், புலிகளை மேசையில் இருந்தே ஒடவைத்தது. புலிகள் ஆயுதம் இல்லாத எந்த ஒரு நிலையிலும், அவர்கள் மக்கள் முன் சென்று அரசியல் செய்ய என எதுவும் இருப்பதில்லை. மக்களிடம் அடாத்தாக மிரட்டி அணி பணியவைத்தே, எப்போதும் தமது அரசியல் செய்ய பழக்கப்படுத்தபட்டவர்கள் தான் புலிகள். மக்களிடம் தமது சொந்த அரசியலை விளங்கப்படுத்தி ஏற்கவைக்கும், அரசியல் நேர்மையும் தார்மீகப் பலமும் இவர்களிடம் கிடையாது.

 

இந்த நிலையில் புலிகளின் பேச்சுவார்த்தைகளை மிக நெருங்கிப் பார்த்தால், இராணுவம் அத்துமீறுகின்றது, பொருளாதாரத் தடை என்ற வழமையான பல்லவியைத் தாண்டி புலிகள் வேறு எந்த அரசியலையும் பேசுவதில்லை. பேச்சுவார்த்தை மேடையில் இதுவே புலிகளின் அதியுயர்ந்த அரசியலாகவும் உள்ளது. இந்த நிலையில் எப்படி புலிகள் ஆயுதம் அல்லாத ஒரு நிலையில் நீடிக்கமுடியும். மக்களின் இயல்புவாழ்வு பற்றி அடிக்கடி கூறும் இவர்கள், மக்களுடன் கொண்டுள்ள உறவு அனைவருக்கும் மிகத் தெளிவாகத் தெரிந்ததே. மக்களின் இயல்பான வாழ்வை மறுப்பதில், புலிகளின் பங்கே மிக முக்கியமானதாக உள்ளது. (பார்க்க யுத்த நிறுத்த மீறல் அறிக்கைகளை) இது எப்போதும் மக்கள் விரோதத் தன்மை கொண்டதாக உள்ளது. யுத்தமற்ற சூழல்களில் மக்களின் இயல்பு வாழ்வை, படுபயங்கரமாக நெருக்கடிக்கு உள்ளாக்குபவர்கள் புலிகளாகவே உள்ளனர்.

 

மக்களின் இயல்பு வாழ்வு என்ற பெயரில் புலிகள் கோருவது எல்லாம், புலிகளின் இராணுவவாத போக்குக்கு ஏற்ற பொருளாதார மற்றும் இராணுவ செயல்பாடுகளைத் தான். இதை பேரினவாதம் மிகச் சிறப்பாக வரவேற்கின்றது. உண்மையில் இனப்பிரச்சனையை பேசி முடிவெடுக்க விரும்பிய காலகட்டங்கள் தவிர, மற்றைய நேரங்களின் புலிகளை அம்பலப்படுத்தவும் அவர்களைத் தனிமைப்படுத்தவும் இது போதுமானதாகவே அமைந்தது. புலிகளின் சொந்த நலன் சார்ந்த பொருளாதாரக் கோரிக்கைகளுடன் அதற்கு ஏற்ற ஒரு நிர்வாகக் கட்டமைப்பு, என்ற வகையில் தமிழ் மக்களின் பிரச்சனையை சுருக்குவது எதிரிக்கு லாபமாகிவிடுகின்றது. இனப்பிரச்சனையின் தீர்வைப்பற்றி பேசவேண்டிய அவசியமல்லாத நிலைக்கு, புலிகள் எதிரிகளை இட்டுச் சென்று விடுகின்றனர். அரசியல் ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பேரினவாதத்தை தனிமைப்படுத்த முடியாத முட்டுச்சந்தியில், புலிகளை தள்ளிவிடுவதன் மூலம் தான், அன்றாடம் புலிகளை அம்பலமாக்கி வருகின்றனர். இந்த நிலையில் பிரபாகரனின் மாவீரர் தினச் செய்தி சிணுங்கி சிங்காரித்து வெளிவருகின்றது.

 

பிரபாகரனின் மாவீரர் உரையில் அரசியல் வறுமையே பிரதிபலிக்கின்றது.

 

புலிகளின் தலைவர் மாவீரர்தின உரையில், தமது சொந்த நிலையை விளக்க முனைகின்றார். தாமே வலிந்து உருவாக்கிய முட்டுச் சந்தியில் தாமே திணறுவதையும், அதை நேரம் அதைக் கவர்ச்சியாக ப+சிமெழுகி தம்மைத்தாம் நியாயப்படுத்திவிட முனைகின்றார். தாமே உருவாக்கிய ஒரு முட்டுச் சந்தியில் நிற்பதை ஒத்துக் கொள்கின்றனர். பிரபாகரனின் மாவீரர் உரையில் "சமாதானப் பேச்சு என்பது எமது விடுதலைப் போராட்டப் பாதையில் வைக்கப்பட்ட பொறி" என்று கூறுகின்றார் பிரபாகரன். இந்த பொறியில் சிக்கியது எப்படி? அவர்கள் சிக்க வைத்தனரா? அல்லது நீங்களாக வலிந்து சிக்கிக் கொண்டீர்களா?

 

இந்தக் கேள்வியை நாம் கேட்பது அவசியமாகிவிடுகின்றது. எப்படி நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள். இந்த சிக்கலில் இருந்து மீள்வது ஏப்படி? யுத்தநிறுத்தத்தை 2001 இல் ஒருதலைப்பட்சமாக முதலில் நீங்கள் தான் அறிவித்து சமாதானக் கதவை தட்டியதாக பெருமைப்பட்டவர்கள் தான் புலிகள். இதே நோக்கில் 2000ம் ஆண்டு இறுதியில் தொடங்கி நாலு மாதகால யுத்த நிறுத்தத்தையும் ஒரு தலைப்பட்சமாகவும் நீங்கள் தான் அறிவித்தீர்கள். இப்படி பேச்சுவார்த்தை நோக்கி நீங்கள் அறிவித்த உங்கள் முடிவு, எப்படி இன்று ஒரு பொறிக் கிடங்காக அமையமுடியும். நீங்களே சிந்தித்து ஏற்படுத்திய புரிந்துணர்வு ஒப்பந்தம், எப்படி பொறிக் கிடங்காக அமைந்தது. பொறிக் கிடங்கை நாங்களே எமக்கு தோண்டினோமா அல்லது எதிரி தோண்டினானா?

 

முதலில் எதிரிக்கு வெளியில், எமது தவறு என்ன என்ற சுயவிமர்சனமற்ற பார்வைதான், முதலில் எமது பொறிக் கிடங்காகும். இதற்கு உங்கள் அரசியல் தவறுகளே அடிப்படைக் காரணமாகும். அரசியலை வெறும் இராணுவவாதமாக சிந்திக்கும் போது, அதை நடைமுறைப்படுத்தும் போது, பொறி ஆழமாகவே இறுகிவிடுகின்றது. தமிழ் மக்களின் வாழ்வுடன் நீங்கள் ஒன்றியிருந்தால், தமிழ் மக்களின் இயல்பான சமூக அரசியல் பொருளாதார கோரிக்கையுடன் ஒன்றியிருந்தால், இந்தப் பொறியென்பது சாத்தியமில்லை. இன்று புலிக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் என்ன வகையான உறவுள்ளது. ஆண்டான் அடிமைகள் என்ற நிலப்பிரத்துவ அடிமை உறவுமுறையே காணப்படுகின்றது. மக்களை கண்காணிப்பதே உங்கள் அரசியல் இராணுவ வேலையாகிவிட்டது. இந்த மக்களை கூலிப்பட்டாளமாக எதிரியின் முன் தள்ளிவிட்டு, அவர்களை உங்கள் கோசங்கள் மூலம் கோசம் போடவைக்கும் இந்திய பிழைப்புவாத அரசியல் முறையே இங்கும் காணப்படுகின்றது. பொறி இப்படி பல தளத்தில் இறுகிவிடுகின்றது.

 

அரசியல் ரீதியாக எதிரியை எதிர்கொள்ளும் அரசியல் ஆளுமை அனைத்தையும் அழித்தொழித்தாயிற்று. பாலசிங்கம் "அங்கே பொறிகள் இருக்கும். சதி வலைப் பின்னல்கள் இருக்கும். என்ன மாதிரி பாலசிங்கத்தை மடக்கலாம். புலிகளை என்ன மாதிரி அவர்களது இலட்சியத்திலிருந்து திருப்பி வேறு பாதையில் கொண்டுபோகலாம் என்று சதிகள் இருக்கும். இவைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை என்றால் சாதாரண விடயம் அல்ல. சிங்கள எதிரி தங்களிடம் உள்ள சிறந்த சாணக்கியர்கள், சிறந்த அறிவுஜீவிகள், பெரிய படிப்பாளர்கள், சட்ட மேதைகளை அனுப்புவார்கள்." என்று கூறுகின்றாh. ஏன் உங்களால் இப்படிச் செய்யமுடியவில்லை. பொறியை தாங்களே தமக்கு வெட்டிவிட்டு, சதியை தமக்கு தாமே உருவாக்கிவிட்டு, அதை எதிரியின் புத்திசாலித்தனத்தின் மீது சோடித்துக் காட்டுகின்றனர். பாலசிங்கம் உளறும் போது "சிங்களவனின் மேல்மாடியில் ஒன்றும் இல்லை" என்கின்றார். கேட்கிறவன் கேனல் பயல் என்ற நினைப்பு. "சிங்களவனின் மேல்மாடியில் ஒன்றும் இல்லாதவன் தான் பொறியை வெட்டி வைத்திருப்பதாக் தலைவர் கூறியழுகின்றார். "சிங்களவன் மேல்மாடியில் ஒன்றும் இல்லாதவன் தான் "சிறந்த சாணக்கியர்கள், சிறந்த அறிவுஜீவிகள், பெரிய படிப்பாளர்கள், சட்ட மேதைகளை அனுப்புவார்கள்." என்று கூறும் போது, அதற்கும் உற்சாகமாகவும் விசிலடித்து கைதட்டுகின்றனர். மேல்மாடியில் ஒன்றும் இல்லாதவன் உண்மையில் யார் என்றால், இதை கேட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் தான் என்பதை, பாலசிங்கம் சூட்சுமமாகவே சொல்லிவிடுகின்றார்.

 

"மேல்மாடியில் ஒன்றும் இல்லாத சிங்களவன் வெட்டிய பொறியில் "மேதகு" தேசிய தலைவர் பொறிந்து போனது எப்படி.? பொறியை எமக்கு நாமே வெட்டினோம். இதுவே உண்மை. பேரினவாதம் தனது நோக்கில் சதிகள், மோசடிகள், அடக்குமுறைகள் என்ற எல்லாவிதமான மனித விரோத ஆயுதங்கள் மூலம் தன்னைத்தான் ஆயுதபாணியாக்கிபடி புத்திசாலித்தனமாக இயங்குகின்றது. இதுவே உண்மை. நாமும் அப்படி இயங்க முடியாது. எல்லாவிதமான சதிகள், மோசடிகள், மனிதவிரோத நடத்தைகள், அடக்குமுறைகளைக் கொண்டு புத்திசாலித்தனமாகக் கூட இயங்க முடியாது. புத்திசாலித்தனமாக இயங்குவதாக நம்பிய எந்த விடையமும், புலிக்கு பாதகமாகவே அமைந்தது. நாங்கள் விடுதலைக்காக போராடுவது என்ற பணியை கைவிட்டு, சதிகள், படுகொலைகள், சித்திரவதைக் கூடங்கள் என்ற மனிதவிரோத செயலையே விடுதலையாக காட்ட முற்பட்ட போது, பொறி தன்னளவில் எமக்கு ஏற்ப அதுவாகவே பொருந்திவிடுகின்றது. பொறி எதையும் பேரினவாத அரசு எமக்கு மேல் திணிக்கவில்லை. நாமே எமக்கு ஏற்ப போட்டுக் கொண்டவைதான் இவை. இந்த மனிதவிரோத செயலை செய்துவிட்டு, அதை நாம் செய்யவில்லை என்று மறுப்பதைக் கூட யாரும் (ஏன் நீங்களும் கூட அதை) உண்மையானது என்று ஏற்றுக் கொண்டதே கிடையாது. உண்மை வேறு ஒன்றாகவே எப்போதும் இருக்கின்றது. அது பொறி வடிவில் பேய் உருவம் எடுத்து நிற்கின்றது.

 

"சிங்கள எதிரி தங்களிடம் உள்ள சிறந்த சாணக்கியர்கள், சிறந்த அறிவுஜீவிகள், பெரிய படிப்பாளர்கள், சட்ட மேதைகளை அனுப்புவார்கள்." என்றால் ஏன் எம்மால் முடியவில்லை. எமது பலவீனம் என்ன? நாம் எமது சமூகத்தின் மிகச்சிறந்த சுய அறிவுள்ளவர்களை கொன்று ஒழித்துவிட்டோம் அல்லது தலைகுனிந்து வாழும் கன்னிப் பெண்ணாக்கிவிட்டோம். பினாமிகளைக் கொண்டு அரசியல் நடத்தினால், பொறிகள் பலவாகவா மாறிவிடும். அந்த பினாமிகளே (இன்று புலி பாட்டுப்பாடும் சந்தர்ப்பவாத விசுவாசிகள்) எதிர் காலத்தின் மிகப் பெரிய பொறியாக புலிக்கே சவால் விடுவார்கள். சிங்களப் பேரினவாதத்தின் நயவஞ்சகமான அணுகுமுறைகளை புத்திசாலித்தனமாக எதிர்கொள்ளக் கூடிய, ஆற்றல் உள்ளவர்களை நாமே எமது சுயநலத்துடன் வேட்டையாடிவிட்டோம். புலிகளுடன் கூடி நிற்பவர்கள், எந்த சுயமுமற்ற, சுயமான அறிவற்ற சந்தர்ப்பவாதிகள் தான். இதைக் காலம் தெளிவாக அவர்களுக்கே நிறுவிக் காட்டும். லண்டன் ஜெயதேவன் போன்றவர்கள் கூட ஒரு உதாரணம்.

 

நலமடிக்கப்பட்ட ஒரு தமிழ் சமூகத்தை நாமே உருவாக்கி வைத்துக் கொண்டு, பேச்சு வார்த்தை என்பது சூழ்ச்சியும் சதியும் கொண்ட பொறிகள் இருப்பதாக, இராணுவவாத நோக்கில் கூறுவதில் எந்தவிதமான அர்த்தமும் அதற்கு இருப்பதில்லை. இதில் இருந்து தப்பிப்பிழைக்க "மேதகு" பிரபாகரன் வழிகாட்டும் இராணுவாத நடவடிக்கைகள் கூட, உண்மையில் மற்றொரு பொறிதான்.

 

மிக நுணுக்கமாக பார்த்தால் பொறிக்கிடங்கு புலிகளின் இராணுவாதத்தில் இருந்தே தொடங்குகின்றது. சமாதானம் என்ற பெயரில் உருவான அமைதியான காலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான படுகொலை அரசியல் இன்று, இராணுவம் மீதான குண்டுவீச்சுகளாகவும் தாக்குதலாகவும் மாறிவருகின்றது. இது எந்தவிதத்தில் பொறிக்கிடங்காக அமையாது என்பதை புலிகள் விளக்குவதில்லை. புலிகளின் இந்த அணுகுமுறையை பேரினவாத அரசு எப்படி அணுகுகின்றது என்பதுதான், இதன் மற்றொரு பொறி. இந்த பொறியில் புலிகளை மாட்டிவிட்டு, இடைக்கிடை பொறிக்கு தீனி போடுவது போல், ஒரு சில படுகொலைகளை புலிகள் பாணியில் இனம் தெரியாத வகையில் இன்று பேரினவாதம் செய்து விடுகின்றது. புலிகள் மிகப் பெருமளவிலான சமாதானப் படுகொலை அரசியலை, மேலும் உசுப்பி விடும் வண்ணம் அண்மைக்காலத்தில் ஒரு சில படுகொலைகளை நடத்திவிடுகின்றனர். இதன் மூலம் புலிகள் ஒரு தலைப்பட்சமாக படுகொலைகளை வகைப்படுத்தி கண்டிப்பதன் மூலம், மற்றைய படுகொலைகளை உரிமைகோர வைப்பதன் மூலம், அதேநேரம் புலிகள் தமது சொந்த மனிதவிரோத அராஜகத்தை அதிகரிக்கும் போது, அரசு அம்பலப்படுவதை விட புலிகள் வேகமாகவே தம்மைத்தாம் அம்பலமாக்கி விடுகின்றனர். இந்த பொறி புலிகளை அரசியல் ரீதியாக மேலும் தனிமைப்படுத்தி வருகின்றது. இராணுவாத நோக்கில் நடத்தும் அரசியல் படுகொலைகள், இராணுவம் மீதான தொடர்ச்சியான குண்டு வீச்சுகள், படிப்படியாக ஒரு தலைப்பட்சமான ஒரு தாக்குதலாக மாறிவிட்டது. இது புலிகளை எப்படி பொறிக்குள் விழ்த்துகின்றது.

 

யுத்தத்தை நோக்கிய வன்முறையில் புலிகள் ஒரு தலைப்பட்சமாக இறங்கி நின்று குதிராட்டம் போடுகின்றனர். மறுதளத்தில் இந்தத் தாக்குதல்கள் அரசை சமாதான மேடைக்கு மீண்டும் கொண்டுவரும், மற்றொரு தந்திர உபாயம் என்ற உள்ளடக்கம் உள்ளதாக கருத இடமிருந்த போதும் கூட, புலிகள் சர்வதேச ரீதியாக அம்பலமாவதை இது எந்தவித்திலும் தடுத்துவிடவில்லை.

 

உண்மையில் இந்த இடத்தில் பேரினவாதம் இதை எதிர்கொள்ள, இராணுவாத அணுகுமுறையை கையாள்வதை திட்டவட்டமாக மறுத்து நிற்கின்றது. மாறாக இதை தனது சொந்த கட்டுப்பாட்டின் மூலம், மிகவும் நிதானமாகவும் நுட்பமாகவும் அணுகுகின்றது. பொறி துல்லியமாக வெட்டப்படுகின்றது. தமிழ்மொழி பேசும் மக்கள் மத்தியிலும் கூட, சமாதானத்தின் எதிரிகள் புலிகள் மட்டும் தான் என்று ஒரு செய்தியை தெளிவாக புலியின் நடத்தைகள் மூலம் நிறுவிவருகின்றது. இதன் மூலம் தனது பேரினவாத அணுகுமுறையை பாதுகாக்கின்றது. சர்வதேச சமூகங்களிடையேயும் கூட, சமாதானத்தின் எதிரிகள் புலிகள் தான் என்பதை புலிகளின் அன்றாட நடத்தைகள் மூலம் சொல்லி வருகின்றது. அன்னிய தலையீட்டின் அவசியத்தையும், புலிகளின் நடத்தைகள் மீது பேரினவாதம் சொல்லாமலேயே அவர்களே முடிவு எடுக்க விட்டுவிடுகின்றது. அமைதி சமாதானத்தின் பெயரில் ஏகாதிபத்தியம் கொண்டுள்ள நிலைப்பாட்டை, புலிகள் தகர்த்து வருவதாக அவர்களே சொந்தமாக உணரும் வண்ணம் பேரினவாதம் நிறுவிவிட்டது. இங்கு பேரினவாதம் அரசு கட்டமைப்பு இருப்பதைக் கூட, வெளித் தெரியாத வகையில் சூக்குமமாகி வருகின்றது.

 

பொறி என்பது பேச்சு வார்த்தைகளில் மட்டுமல்ல, இராணுவாதத்திலும் காணப்படுகின்றது. மனிதவிரோத நடத்தைகள் அனைத்தும் பொறிகள் தான். அந்த பொறியை நாமே நமக்கு உருவாக்கிக் கொள்வதுதான். எதிரி அதை பயன்படுத்திக் கொள்கின்றான். உலகில் பல நாடுகளின் இராணுவவாதப் பொறிகளில் தான், பல அதிகார மையங்கள் தகர்ந்துபோனது. இராணுவவாதம் எல்லா நேரங்களிலும் வெற்றிபெறுவதில்லை. இங்கு புலிகள் மற்றும் சிறிலங்கா என்ற இரண்டு இராணுவங்கள் மோதுவதையிட்டு நான் பேசவில்லை. புலிகளின் அரசியல் மற்றும் இராணுவ நடத்தைகள் சர்வதேச நிகழ்ச்சி நிரலான பின்பாக, சர்வதேச ரீதியாக ஏற்படும் நெருக்கடிதான் இங்கு மிகப் பெரிய பொறியாகும். சர்வதேச தலையீட்டை வலிந்து கோரியவர்கள் நாம் என்ற வகையிலும், ஆப்பிழுத்த குரங்காட்டம் குரங்குச் சேட்டைகளையே "மேதகு" தலைமையில் நாம் சிறுபிள்ளைத்தனமாக செய்த வண்ணம் உள்ளோம்.

 

இந்த நிலையில் "மேதகு" பிரபாகரன் கூறுகின்றார் ".. நாம் ஆயுத வன்முறையிற் காதல்கொண்ட போர் வெறியர் அல்லர் என்பதையும் சமாதான மென்முறையில் நாம் பற்றுறுதி கொண்டவர்கள் என்பதையும் உலகுக்கு உணர்த்திக் காட்டவேண்டிய தேவையும் எழுந்தது." என்கின்றார். இப்படி அடுப்படியில் கண்ணை மூடிக் கொண்டு பால் குடிக்கும் பூனையாட்டம், கதை சொல்வதைத் தாண்டி, இதில் உண்மை எதுவும் கிடையாது. வன்முறையும், படுகொலையுமின்றி புலிகள் குசு கூட விடுவது கிடையாது. எம்மை நோக்கி எச்சரிக்கும் போது, காத்து போகாத இடத்திலும் கூட நாம் புகுந்து விளையாடுவோம் என்றதன் பின்னால் கொலுவேற்று இருப்பது, ஆயுத வன்முறையிற் காதல்கொண்ட மனநோய்தான் என்பதைத் தாண்டி வேறு எதுவுமல்ல. சமாதானம், அமைதிக் காலத்தில் தொடர்ச்சியான படுகொலைகள் (அண்ணளவாக 1000 படுகொலைகள்), கடத்தல்கள், சித்திரவதைகள், கப்பம் என்று மனித விரோத வன்முறை பரந்த தளத்தில் காணப்பட்டது. இது "போர் வெறியர் அல்லர்" என்ற கூற்றை நகைப்புக்குரியதாக்கி விடுகின்றது. இதைச் சொல்லிக் கொண்டிருந்த சமகாலத்தில், தாம் "போர் வெறியர் அல்லர்" என்ற சொந்த அரசியல் பினாற்றலையே, நடைமுறையில் புலிகளே மறுத்து நிற்கின்றனர். இந்த வாதம் உரையை மெருகூட்ட சேர்க்கப்பட்ட வெறும் அழகான சொற் கோவைகள் தான்.

 

ஏன் தாம் பேச்சு வார்த்தைக்கு போனார்கள் என்பதை மாவீரர் உரையில் ".. எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை உலகமயப்படுத்தி சர்வதேசச் சமூகத்தின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்றுக்கொள்வதற்கும் இது அவசியமாக இருந்தது." என்கின்றார். இதை சாதிக்க முடிந்துள்ளதா? அல்லது மேலும் தனிமைப்பட்டு வெறும் "பயங்கரவாதக்" குழுவாக அம்பலமாகியுள்ளனரா? உண்மையில் உலகளவில் நடந்தது, புலிகள் தங்களைத் தாமே அம்பலமாக்கிக் கொண்டது தான். பல நாடுகள் புலிகளை தடையெய்யும் நிலைக்கு நிலைமை மாற்றமடைந்துள்ளது. இதைத்தான் "மேதகு" மற்றும் "மதியுரையர்" வழிகாட்டலில் உருவான சமாதானம் செய்து முடித்துள்ளது. இதை விட்டு வேறு எதுவுமல்ல. எதற்காக பேச்சு வார்த்தை தொடங்கினரோ, அதைக்கு எதிர்மறையில் இது முடிந்துள்ளது. இதை சிங்கள பேரினவாதம் தனது பிரச்சார வலிமையால் செய்யவில்லை. புலிகளின் மக்கள் விரோத அரசியலைக் கொண்டு, அந்த நாடுகளே சொந்த முடிவை இலகுவாக எடுக்கத் தூண்டியது. நாம் எமக்கு பொறியை வெட்டினோம். இது தான் உண்மை. இதைத் தான் பேச்சு வார்த்தை சாதித்தது.

 

இந்த நிலையில் மாவீரர் உரையில் பிரபாகரன் "தமிழீழ மக்களின் அடிப்படையான அரசியற் கோரிக்கைகளை ஏற்று ஒரு நியாயமான தீர்வுத் திட்டத்தைச் சிங்கள இனவாத ஆட்சியாளர் முன்வைக்கப் போவதில்லை என்ற உண்மையைச் சர்வதேச சமூகத்திற்கு நிரூபித்துக் காட்டுவதும் எமது நோக்கமாக இருந்தது. இப்படியான குறிக்கோள்களுடனேயே நாம் பேச்சுக்களிற் பங்குகொண்டோம்." என்று கூறுகின்றார். நல்லது. இதைக் கூட புலிகளால் சாதிக்க முடிந்தா? எனின் இல்லை. பிரச்சனை எப்படி உள்ளது. தனிப்பட்ட புலிப் பிரச சனையாக விடையம் சுருங்கிவிட்டது. தமிழ் மக்களின் பிரச்சனை படிப்படியாக காணமால் போய்விட்டது. சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கு கூட தமிழ் மக்களின் பிரச்சனை என்னவெனத் தெரியாத நிலைக்கு சரிந்து சீரழிந்து சென்றுவிட்டது. இதுவே புலிகளின் நிலை கூட. பிரச்சனை புலிப் பிரசைனையாகவும், புலியின் தலைவரின் பிரச்சனையாகவும் கூட மாறிவிட்டது. இவர்கள் அரசியல் பேசும் போது பேரினவாதம் நடாத்திய சில கொலைகளைச் சொல்வது, அல்லது பேரினவாதத்தின் சில நடத்தைகளைச் சொல்வதுடன் அரசியல் கூனிக் குறுகிப் போய்விட்டது. தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனை படிப்படியாக மறைந்து மடிந்துவிட்டது.

 

ஏன் சிங்களப் பேரினவாதம் தேசிய இனப்பிரச்சனை இருப்பதைக் கூட கருத்தில் எடுக்கவில்லை. அதை வெறும் புலிப்பிரச்சனையாக சுருக்கி காட்டுகின்றது. இந்த நிலைக்கே புலிகளின் அரசியல் வழிகாட்டி நிற்கின்றது. ஏகப்பிரநித்துவம் என்ற பெயரில், பிரச்சனை வெறும் புலி சாhந்த பிரச்சனையாக மாறிவிட்டது.

 

தமிழ் மக்களின் பிரச்சனைக்கு ஒற்றை ஆட்சி அமைப்பில் ஒரு தீர்வு என்ற பேரினவாதச் செய்திக்கு மாற்றாக, சமாதானத்தை ஆதரிப்பவர்கள் இதை அம்பலப்படுத்தி எதையும் யாரும் முன்வைக்கவில்லை. அமைதி முயற்சியில் ஈடுபடுவதாக கூறும் புலிகள் கூட, மௌனமாகி விடுவது கூட, பேரினவாத அரசுக்குச் சார்பானது தான். இலங்கையில் அமைதி வழியில் பேசி தேசிய பிரச்சனையை தீர்க்க முற்படுபவர்கள் யாராக இருந்தாலும், இதனை முழுமையாகவும் தெளிவான வகையில் இதனை அணுகவேண்டும். இது மட்டும்தான் சரியான அரசியல் வழியாகும். குறிப்பாக இலங்கையில் ஆட்சி அலகுகள் நிச்சயமாக இனரீதியாக பிரிக்கப்பட வேண்டும். தமிழ்பேசும் வடகிழக்கு மக்களுக்கு மட்டும் ஒரு தீர்வு என்பது, அது எந்த வகையான அரசியல் அலகாக இருந்தாலும் கூட, அதன் பின்னால் பேரினவாதம் கொலுவேற்று இருக்கும்.

 

மாறாக இனரீதியாக தெளிவாக வரையறுக்கப்பட்ட வகையில், இலங்கை முழுக்க ஒரே விதமான ஆட்சியலகுகள் உருவாக்கப்பட வேண்டும். இது சிங்கள மக்களுக்கும் கூட பொருந்தும். அதாவது சிங்கள மக்களுக்கும் கூட இன ரீதியான ஒரு ஆட்சியலகை உள்ளடக்கிய ஒரு தீர்வு அவசியமானது. இதுவே தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இது மட்டும் தான் குறைந்தபட்சம் இன முரண்பாட்டை சரியான வழியில் தணிக்கும். இல்லாது தமிழருக்கு மட்டும் ஒரு தீர்வு என்பது, மற்றைய ஆட்சி என்பது பழையபடி இனரீதியானதாகவே அமையும். தமிழ் சிங்கள மக்களின் தனித்துவமான இன ஆட்சி அலகுகள் மட்டுமின்றி, முஸ்லீம் மலையக மக்களின் ஆட்சி அமைப்பு வடிவங்களை உள்ளடக்கிய வகையில் நான்கு தனியான ஆட்சி அமைப்புகள் இனப்பிரச்சனையின் தீர்வில் தெளிவாக உருவாக்கப்பட வேண்டும். இது சட்டமியற்றும் அதிகாரத்துடன் கூடியதாக அமையவேண்டும்.

 

இதை அடிப்படையாக கொண்ட ஒரு கூட்டாச்சி அமைப்பு முறை, இதனுடன் அக்கபக்கமாக அமைய வேண்டும். இது இலங்கை முழுமைக்கும் ஒரு அமைப்பாக கொண்டு அமைய வேண்டும். அதேநேரம் இந்த கூட்டாச்சி இனரீதியான சட்டங்களை தன்னிச்சையாக ஏற்படுத்த முடியாத வகையில், அதிகாரம் கொண்ட சமமான பிரதிநிதித்துவம் கொண்டதும் அவற்றின் முடிவில் தாங்கியிருக்கும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். இதை இனப்பிரச்சனையில் அமைதித் தீர்வுக்கான குறைந்தபட்ச ஜனநாயகக் கோரிக்கையாக முன்னிறுத்த வேண்டும்.

 

இப்படி எதையும் தெளிவாக பிரபாகரனின் பேச்சு வார்த்தை, அரசியல் ரீதியாக முன்வைத்தது கிடையாது. அவர்கள் எதைப் பேசினார்கள் என்று கேட்டால் அதுவும் தெரியாது. பாலசிங்கம் வெளியிட்டுள்ள 790 பக்கங்களைக் கொண்ட "போரும் சமாதானமும்" என்ற நூலில் கூட இதை காணமுடியாது. பிரபாகரனின் மாவீரர் உரை முடிவாக நான்கு வருடங்களின் பின் எதையாவது சாதிக்க முனைந்ததா எனின் எதுவுமில்லை. பேரினவாதம் எதையும் கொடுக்க முன்வரவில்லை என்பது ஒருபுறம். மறுபுறம் புலிகள் அரசியல் ரீதியாக தமது சரியான அரசியல் நிலையைக் கூட தம்மளவில் தன்னும் சாதிக்க முடியவில்லை.



இந்த நிலையில் குறைந்தபட்சம் அனுதாபத்தைக் கூட பெறமுடியவில்லை. பிரபாகரன் நினைத்த மாதிரி, சொன்ன மாதிரி சர்வதேச அரசுகளைத் தானும் வென்று எடுக்கவில்லை. சர்வதேச மக்களை இப்போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் வெற்றிகொண்டுள்ளனரா எனின் அதுவும் இல்லை. சொந்த மக்களின் அனுதாபத்தை ஆதரவை பெற்றுள்ளனரா எனின் இல்லை. வெடி குண்டும், துப்பாக்கியும், வாள்வெட்டும், அடியுதையும், ரயர் எரிப்பும், பினாமி பெயரில் எச்சரிக்கையும் இன்றி, புலிகள் உயிர்வாழவே முடியாது உள்ளனர். புலிகள் குசு விட்டாலும் இவை அவசியமாகிவிட்டது. இதுவே சமாதானம் சாதித்த ஒரேயொரு உண்மை.

 

இதற்கான அடிப்படைக் காரணம் என்ன? புலிகளின் இராணுவவாதம் தான். ஆயுத வன்முறையில் காதல் கொண்ட நடத்தை நெறிகளே அனைத்துக்குமான காரணமாகும். மக்களை நம்பி அரசியல் செய்வதில் எந்தவிதமான நம்பிக்கையும் அற்றவர்கள் தான் புலிகள். பேச்சுவார்த்தை தொடங்கியது முதலே கொலைகள் தொடங்கியது. ஒப்பந்த விதிகளை அரசைப் போல் கடுமையாகவே மீறி வந்தனர். புலிகளின் இராணுவவாத மீறல்தான், தனது தவிர்க்க முடியாத அரசியல் நிலையென பறைசாற்றத் தொடங்கியது. இந்த அத்துமீறல்கள் படிப்படியாக இராணுவம் மீதான தாக்குதலாக மாறிவிட்டது. இதுவே புலிகளை மிகத் துல்லியமாக, அரசியலில் இருந்து தனிமைப்படுத்தும் சர்வதேச நிலைக்கு நகர்த்திச் சென்றது, செல்லுகின்றது.

 

நாம் ஏகாதிபத்திய அரசுகளை விடுவோம், அந்த நாட்டு மக்களைக் கூட நாம் வென்று எடுக்க முடியவில்லை. எங்கள் மனிதவிரோத அரசியல் நடத்தைகளை, அவர்களால் கூட துளியளவுக்கு கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற உண்மை பளிச்சென்று எம்முன்னுள்ளது. ஐரோப்பிய யூனியனுக்கு முன்னால் நின்று, தம்மீதான தடையை நீக்கக் கோரி தாழ்மையான விண்ணப்பம் செய்கின்றனர். இப்படி செய்வது கூட அடிமைத்தனம் தான். ஐரோப்பிய மக்கள் தான் தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் செய்யலாமே ஒழிய, நாங்கள் அதைச் செய்யமுடியாது. ஏகாதிபத்தியங்கள் என்பது நாடுகளை காலனியாதிக்க எல்லைக்குள் கொண்டுவரும் அரசியல் அடிப்படையில் தான் திட்டமிட்டு செயல்படுகின்றன. இந்த நிலையில் ஏகாதிபத்தியம் பற்றி எந்த உணர்வும் உணர்ச்சியும் இன்றி, அவர்களின் அரசியல் தயவுக்காக மக்களை நகர்த்துவது அர்த்தமற்றது. மாறாக அந்த நாட்டு மக்கள் போராடவேண்டும் என்ற அடிப்படையில், நாம் எமது சரியானநிலையை உருவாக்க எம்மை நாம் சுயவிமர்சனம் செய்வதன் மூலமே அவர்களுடன் நாம் இணைந்து நின்று போராடவேண்டும்.

 

ஏகாதிபத்தியங்கள் தடைக்கு கூறும் பகிரங்கமான அனைத்தும் காரணங்களும், புலிகளின் மனித உரிமை மீதானதாக காணப்படுகின்றது. அதாவது மக்கள் பற்றி தான், புலிகளைப் போல் ஏகாதிபத்தியமும் மூக்கால் சிந்துகின்றனர். இதைப் பயன்படுத்தியே, ஏகாதிபத்திய தடைகள் அமைகின்றன. இந்த நிலையில் மக்கள் விரோதச் செயலை, புலிகள் இல்லாதொழிக்க முன் வரவில்லை. மாறாக அதையும் அங்கீகரிக்க கோருகின்றனர். அத்துடன் மனிதயுரிமை மீறல்களை அதிகரித்த வகையில் தொடர்ச்சியாக கையாளுகின்றனர். உண்மையில் புலிகளின் சமாதானம் எப்போதும், படுகொலைகளின் தொடக்கமாகவே அமைகின்றது. முடிவாக அமைதி குலையும் போது, ஒரு பாரிய படுகொலைகளுடன் நிறைவு செய்யப்படுகின்றது. யுத்தம் தொடங்கியவுடன் கொலைகள் உச்சத்தை அடைகின்றது.

 

புலிகள் தமது மாவீரர் உரையில் மக்கள் பற்றி மிக இழிவாகவும் தாழ்வாகவும் மதித்தே எப்போதும் கருத்துரைக்கின்றனர். மக்களை வெறும் மந்தைகளாக அடிமைப்படுத்தியபடி, மக்களுக்காக போராடுவதாக பீற்றும் உரை, எப்போதும் பொய்யையும் புனைவையும் கொண்டு மக்களின் பெயரில் வாசிக்க முனைகின்றனர். மக்கள் தாமாகவே விரும்பி தேர்தலை பகிஸ்கரித்ததாகவும், மக்கள் தாமாகவே முன்வந்து பாரிய போராட்டங்களை நடத்துவதாகவும் கூட கூற முனைகின்றனர். ஏன் இன்று இராணுவம் மீதான கிளைமோர் தாக்குதலைக் கூட மக்கள் செய்வதாக கூட புலிகள் கூறுகின்றனர். இவை எதையும் மக்கள் செய்யவில்லை. இது எல்லாத் தமிழ்மக்களுக்கும் நன்றாகவே தெரியும். புலிகள் தமது வழியில் தமது அராஜக வழிகளில் செய்கின்றனர். புலிகளின் "தத்துவவாசிரியர்" பாலசிங்கம் கூறியது போல் "பிரபாகரன் வன்னியிலிருந்து கொண்டு பகிரங்கமாகக் கூடச் சொல்லவில்லை. மறைமுகமாகச் சொன்னார்- தேர்தல் தேவையில்லை என்று." இப்படி மக்களின் பெயரில் வெடி குண்டுகள், ரயர் எரிப்புகள் என்ற எல்லாவிதமான அராஜகத்தையும் கட்டவிழ்த்துவிட்டு நடைமுறைப்படுத்துகின்றனர். இதன் பின்பான உதிரி லும்பன் தனமான செயல்பாட்டுத் தளம் உள்ளது. மக்கள் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன என்பது, உண்மையில் மக்கள் போராட்டங்களே அல்ல. மாறாக நடப்பது புலிகளின் லும்பன் தனமான அராஜகப் போராட்டங்களே. மக்களின் இயல்பான எந்தப் பங்களிப்புமின்றி, களத்தில் அவர்கள் எதோ ஒரு வேஷத்தில் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களிடையே நின்றபடிதான் இந்த அராஜகம் கட்டவிழ்க்கப்படுகின்றது.

 

இதன் மூலம் புலிகள் வரலாற்றால் நீடித்து வாழ்ந்து விடமுடிமா? "சத்தியம் மீது கட்டப்பட்ட இலட்சியத்திற்காக மடிபவர்கள் என்றுமே சாவதில்லை. அவர்கள் ஒவ்வொருவருமே தனிமனித சரித்திரங்களாக என்றும் வாழ்வார்கள்." என்று கூறும் போது, சொந்த உணர்வுடன் தான் பிரபாகரன் இதைக் கூறுகின்றரா? அல்லது புலிகள் மக்களை மனப்ப+ர்வமாக ஏற்று நிற்பதாக அப்பாவித் தனமாக நம்புகின்றாரா? அல்லது அவருக்கு இப்படிக் கூறப்படுகின்றதா! சரித்திரங்களாக தியாகங்கள் வாழும் என்றால், சரித்திரத்தை பாதுகாப்பவர்கள் மக்கள் என்பதை பிரபாகரன் என்றும் உணர்ந்தாக கூறமுடியாது. சரித்திரங்களில் புலி பினாமிகள் வாழவே முடியாது. மக்களின் நலன்கள் தான், மக்களால் போற்றப்படும் சரித்திரங்கள்.

 

எவ்வளவுதான் உன்னதமான இலட்சியமும், மாபெரும் தியாகங்களும் கூட, மக்களுக்கான போராட்டமாக இல்லாத வரை, ஒரு நாளுமே தமது சரித்திரத்தை இது எழுதிச் செல்வதில்லை. எந்தச் சரித்திரமும், எந்த இலட்சியமும் அந்த மக்களின் நேரடி நலனுடன் தொடர்புடையவை. இதை புலிகள் என்றைக்கும் கடைப்பிடித்தது கிடையாது.

 

மக்களை அடக்கியொடுக்காத புலிச்சரித்திரம் கிடையாது. மக்களின் நலனுக்காக போராடிய புலிச் சரித்திரம் கிடையாது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வே, புலிகளின் உணர்வுடன் முற்றிலும் முரண்பட்டு காணப்படுகின்றது. புலிகளின் வரலாற்றை, தியாகத்தை ஒரு நடுநிலை (இது ஒரு சார்பாக இருந்த போதும் கூட) ஆய்வாளன் எப்படி மதிப்பிடுவான் என்பதை சிந்தித்துப் பார்ப்பது அவசியம். இன்று "மாமனிதன்", "மேதகு", "மதியுரையா", "தத்துவாசிரியர்" எவையும், உண்மையான கருத்துருவத்தில் கூட யாரும் உச்சரிப்பதில்லை. புலிக்கு பயந்து அல்லது புலிகள் மூலம் சொந்த நலனை பேணுபவர்கள் தான் இப்படி உச்சரிக்கின்றனர். அத்துடன் மந்தைகளாக உள்ள ஒரு கூட்டம் இதை விசிலடித்து உச்சரிக்கின்றது. இதுவே உண்மை. இது வரலாற்றால் நிச்சயம் நிறுவப்படும். இதனால் தான் இதை நாம் பிழைப்புவாத பினாமியத்தின் நக்கிபிழைக்கும் வம்புச் சொற்கள் தான் என்கின்றோம்.

 

தமிழ்மக்களின் தேசியவிடுதலைப் போராட்டம் தொடங்கிய போது எப்படி நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளுடன் இருந்ததோ, அதே வடிவத்தில் இன்றும் அப்பிரச்சனை அப்படியேயுள்ளது. இந்த வகையில் நாம் தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கைக்காக உரத்துக் குரல் கொடுக்க வேண்டியவராக உள்ளோம். இதுவே எம்முன்னுள்ள அடிப்படையான கடமையாக உள்ளது. அன்று தொடங்கிய போராட்டம் பல ஆயிரம் மனிதர்களை பலி கொண்டு, இன்று முட்டுச் சந்திக்கு வந்து செய்வதறியாது நிற்கின்றது. பல ஆயிரக்கணக்கானோர் முதுகில் குத்த தயாரான நிலையில், போராட்டம் சிதைவின் விளிம்பில் காத்துக் கிடக்கின்றது. புலிகளை முதுகில் குத்துவோர் அவர்களுக்குள்ளேயே புளுத்துக் கிடக்கின்றனர். இது அவலமானது தான், ஆனால் இதுவே எதார்த்த உண்மை. இதன் நோக்கில் பேரினவாதம், ஏகாதிபத்தியமும் இணைந்து நடத்தும் சதிராட்டம், புலிகளின் ஜனநாயக விரோத செயல்களின் மீது கொலுவேற்று நிற்கின்றது.

 

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு பிரச்சனை உண்டு என்று ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும், தமது அரசியல் கட்சி சார்பாக தாம் என்ன தீர்வை முன்வைக்கின்றனர் என்ற வகையில் கட்சி கொள்கைகளைக் கூட பிரகடனம் செய்வதில்லை. இது அடிப்படையில் தான் பேரினவாதத்தின் கட்டமைப்பில் கட்சிகள் அனைத்துமே உள்ளன என்பதை தெளிவாக காட்டுகின்றது. பேச்சுவார்தத்தை மேடையில் இந்த விடையத்தைத் தொட்டு புலிகள் பேசமறுத்து நிற்பதன் மூலம் தான் பேரினவாதம் புலிகளை இலகுவாக வெற்றிகொள்ள முடிகின்றது. புலிகள் மீதான பொறிகள் அனைத்தும் இதன் மூலம் தான் உருவாக்க முடிகின்றது. புலிகள் அரசியல் ரீதியாக பேரினவாத அரசை நெருங்கி அணுகுவதை தவிர்க்கின்றனர். இதை விட்டே விலகி வந்து விடுகின்றனர் அல்லது அதில் இருந்து தப்பியோடுகின்றனர். எந்தப் பேச்சுவார்த்தையும் இதை அடிப்படையாக கொண்ட தொடங்க நிர்ப்பந்திக்க வேண்டும்.

 

இதற்கு வெளியில் பேரினவாத அரசு இலகுவாக பேசிக் கொண்டு காலத்தைக் கடத்துகின்றனர். துணிச்சலாகவே யுத்ததுக்கு செல்வதில் இருந்து விலகி நிற்கின்றனர். புலிகள் எப்போதும் இயல்புவாழ்வை மீள கட்டமைத்தல் என்ற கோரிக்கையின் ஊடாக, சொந்த பொருளாதார நலன் சார்ந்து பேசமுனைகின்றனர். இதன் மூலம் இராணுவ இலக்கை குறிவைக்கின்றனர்.

 

ஆனால் அமைதி இயல்பில் படிப்படியாக, மக்கள் இயல்பான வாழ்வாக மாறிவிடுகின்றது. இதைத்தான் தமிழ் மக்கள் சிங்களப் பேரினவாதிகளிடம் எதிர்பார்ப்பதாக கருதுமளவுக்கு நிலைமை மாறிவிடுகின்றது. தமிழ் மக்களுக்கு, முன்பு இதே நிலையில் இயல்பு வாழ்வு ஒன்று இருந்து வந்த வரலாறே தெரியாது போகின்ற நிலையில், கிடைப்பது அமைதியான தீர்வாக கருதும் நிலைக்கு சென்று விடுகின்றனர். இதைக் குழப்பும் போது, புலிகளுக்கு எதிரான நிலைக்கு மக்கள் மாறுகின்றனர். புலிகள் தமது சொந்தக் கோரிக்கைக்குள்ளேயே முடங்கும் போது, மக்கள் தமது சொந்த நிலைப்பாட்டுடன் புலிகளுடனான முரண்பாட்டுக்கு இட்டுச் செல்லுகின்றனர். இதைத் தான் ஏகாதிபத்தியம் செய்ய விரும்புகின்றது. புலிகள் இதற்கு துணை நிற்கின்றனர்.

 

தமிழ் மக்களின் ஜனநாயகக் கோரிக்கை என்ன என்பது கூட புலிகளுக்கும் தெரியாது போய்விட்ட நிலையில், மக்கள் அடக்குமுறைக்குள்ளாகி மோசமான மந்தைக் கூட்டமாக மாறிவிடுகின்றனர். எங்கும் சூனியம். எப்படி எங்கிருத்து மீள்வது என்று தெரியாத வகையில் நெருக்கடி உருவாகின்றது.

 

இது புலிகளுக்கும் இயல்பில் ஏற்படுகின்றது. இந்தநிலை அரசுக்கு அல்ல. அரசு இந்த சூனியத்தை பாதுகாக்க விரும்புகின்றது. இதை உருவாக்கும் வலை, விரிந்த தளத்தில் விரிக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக இதை எதிர்கொள்ள வக்கற்றுப் போன புலிகள், இதில் இருந்து மீற கடந்த ஜந்து மாதத்தில் மட்டும் 300 மேற்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களை இராணுவத்துக்கு எதிராக நடத்தினர். இதன் மூலம் அரசை நிர்ப்பந்தித்து சண்டையைத் தொடங்க விரும்புகின்றனர் அல்லது அமைதி பேச்சு வார்த்தைக்கு செல்ல முனைகின்றனர். கதிர்காமர் கொலை மூலம், அரசு யுத்த பிரகடனத்தை செய்யும் என எதிர்பார்த்தனர். ஆனால் அரசு இதை சரியாக புரிந்து நிற்கின்றது. புலிகள் சண்டையைத் தொடங்கும் முயற்சியை மறுத்து, அமைதியை பதிலாக பேணுகின்றது.

 

புலிகள் வலிந்து சண்டையைத் தொடங்க, மேலும் தீவிரமாக இப்படித் தாக்குதலை நடத்துவர் என்பது தெரியவருகின்றது. மிகப் பெரிய நடவடிக்கைளைக் கூட செய்யமுனைவர். அரசைப் பொறுத்தவரையில், அரசு சண்டையை தொடங்க மறுக்கும். தாக்குதலை அரசியல் ரீதியாக காட்டி, புலியை மேலும் தனிமைப்படுத்துவர். பொறி இயல்பில் எங்கும் எதிலும் ஏற்படுகின்றது. இதுதான் அன்றாடம் நடக்கின்றது. மற்றொரு தளத்தில் புலிகள் நடாத்திய தொடர்ச்சியான பல நூறு கொலைகள் ஒருபுறம், பதிலடியாக அரசு ஒரு சில கொலைகளை நடத்த தொடங்கியுள்ளது. இதைப் புலிகளுக்கு பதிலடியாக புலிக்கு எதிரான குழுக்கள் செய்வதாக காட்டப்படுகின்றது.

 

சமாதானம் அமைதி என்ற போர்வையில் இருந்து யுத்தத்தைத் நோக்கி புலிகள் செல்ல விரும்புகின்றனர். ஆனால் அரசியல் வங்குரோத்தால் நேர்மையாக செல்லமுடியாது உள்ள நிலையில், கொலைகளையும் இராணுவத்துக்கு எதிரான தாக்குதலையும தீவிரமாக்குகின்றனர். இனங்களுக்கு இடையில் மோதலை உருவாக்கினர். அரசு தற்காப்பு நிலையில் நின்றுமட்டும் இதை எதிர்கொள்கின்றது. சதிகள் மூலம் புலிப்பாணி நடத்தைகளை மேலும் உசுப்பிவிட்டுள்ளனர். எது புலி எது அரசு என்று இனம் காணமுடியாத சூனியத்தை, அரசு ஏற்படுத்தி அனைத்தையும் புலியாக்குகின்றது. அதேநேரம் புலிகளின் அராஜகத்தை உலக சமூகங்களின் முன்பும், உலகம் முன்பும் அம்பலப்படுத்தி புலிகளை தனிமைப்படுத்தி வருகின்றனர். புலிகள் மேலும் மிக கடுமையான சிக்கலான நெருக்கடிக்குள் சென்ற வண்ணம் உள்ளனர்.



அரசியல் ரீதியான சரியான அணுகுமுறையற்ற பேச்சுவார்த்தைகள் முட்டுச் சந்திக்கு வருவது தவிர்க்க முடியாதது. யுத்தத்துக்கும் மீள முடியாத நிலை வேறு. வடக்குகிழக்கு தமிழ் மக்கள் சரி, இலங்கை வாழ் மக்கள் சரி யுத்தத்துக்கு எதிரான தெளிவான நிலைப்பாட்டுடன் தான் உள்ளனர். இதை யாரும் மறுக்கமுடியாது. யுத்தம் தொடங்குபவர்கள் குற்றவாளியாகவே இலங்கையில் உள்ள அனைத்து சமூகத்தாலும் காணப்படுவர். இந்த வகையில் தான் ஜே.வி.பி மதில் மேல் பூனையாக காத்துக்கிடக்கின்றனர். அரசில் சேராது விலகி இருந்தபடி எதற்காகவோ காத்துக் கிடக்கின்றனர் என்றால், யுத்தத்தைத் தான். ஆனால் அந்த குற்றம் தம் மீது வீழ்ந்துவிடக் கூடாது என்பதால் அரசில் சேரவில்லை. அதேபோல் பேச்சு வார்த்தைக்கு செல்வதைக் கூட தனது முடிவு அல்லவெனக் காட்டுவதற்காக, அரசில் சேராது வெளியில் காத்துக் கிடக்கின்றனர். தாம் இவற்றில் எதிலும் சம்பந்தப்படவில்லை என்று, நாளை சந்தர்ப்பவாதமாக குலைக்கவே, அரசில் இணையவில்லை. இந்த நிலையில் இருந்து தீர்க்கமாக அரசு எப்போது வெளிவருகின்றதோ, அன்று இவர்கள் அரசில் சேர காத்துக்கிடக்கின்றனர்.


இந்த நிலையில் யுத்தத்தை புலிகள் தொடங்க கோரும் மேற்கு மந்தைகளான விசிலடிக் கூட்டங்கள், வடக்குகிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளுடன் கலக்காத வன்முறை மேல் காதல் கொண்ட லும்பன் சமூகமாக சிதைந்து கிடக்கின்றது. சண்டையை விசிலடித்து கொண்டாடுகின்றனர். மாவீரர் தின உரையைக் கேட்போரை கவர, உணவுவிடுதிகள் ஆட்டுக்கொழுப்பு இறைச்சியும் விஸ்கியும' விசேடமாக அன்று பரிமாறினர். கிரிக்கட் போட்டியின் போது உணவு விடுதிகள் வர்த்தக நோக்கில் கையாளும் அதே அளவுகோலையே, இதற்கும் பயன்படுத்தினர். எங்கும் மாவீரர் இழிவாடப்பட்ட நிலையில், யுத்தவெறி கூடிய லும்பன் ரசனைக்குரிய நிலையில் இது மேற்கில் கொண்டாடப்பட்டது. யுத்தம் ஒரு தீர்வாக அமையுமா? எப்படி? யுத்தம் இருதரப்பிலும் பல ஆயிரம் பேரை பலி கொள்வதுடன், பல ஆயிரம் மக்களை கொல்லவும் அவர்களின் வாழ்வையும் சீரழிக்கும். ஆனால் யுத்த வெறியர்கள் இதை நோக்கியே புலம்புகின்றனர். சரி அப்படி யுத்தம் நடந்தால், யாழ்குடாவை பிடித்தால் எல்லாம் எப்படி சரியாகிவிடும்!

 

இயல்பாக பூரணமான பொருளாதார தடை அமுலுக்கு வரும். இராணுவம் இருக்கும் வரைதான் உணவு விநியோகம், அரசு ஊழியருக்கான சம்பளம் கூட. இந்த நிலையில் உலகில் எந்த நாடும் அங்கீகரிக்க மாட்டாது. புலிகளை பயங்கரவாத இயக்கமாக மேலும் பலநாடுகள் அறிவிக்கும். எப்படி இதில் இருந்து மீள்வது. மக்கள் உயிர் வாழ்வதற்கு, உற்பத்தி செய்வதற்கு எம் மண்ணில் நீடித்த முழுமையான ஆதாரத்தையும் புலிகளின் சூறையாடும் கொள்கையால் சமூகமே அனைத்தையும் இழந்து நிற்கின்றது. புலிகள் சமூகத்தில் இருந்து அன்னியமான நிலையில், சமூகத்தை சுரண்டி வாழும் லும்பன்களாகவே உள்ளனர். எப்படி சமூகத்தைப் பாதுகாப்பது? மீட்பது? இந்தக் கேள்விக்கு புலிகள் "மேதகு"கள் என்றும் பதிலளிப பதில்லை. தன்னெழுச்சி வாய்ந்த நிலைமைகேற்ற வாய்வீச்சை மட்டும் எப்போதும் நடத்துகின்றனர்.

 

யுத்தம் சர்வதேச ரீதியான கடுமையான எதிர் நடவடிக்கைக்கு இட்டுச் செல்லும். பயங்கரவாதப் பட்டியலில் தமிழ் இனத்தையே சேர்த்து, தமிழ் மக்களின் கழுத்தை இறுக்கிக கொல்லும். மறுபுறத்தில் சர்வதேச தலையீட்டுக்கான சூழலும் காணப்படுகின்றது.

 

இந்த நிலைமையில் இருந்தது மீள்வது எப்படி?

 

பேரினவாதம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தனது சொந்த தீர்வை முன்வைக்காத இன்றைய நிலையில், யுத்தத்துக்கு செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகவும் உள்ளது. ஆனால் புலிகளின் வழமையான பாணியில் அல்ல. அப்படியாயின் எப்படி? பேச்சுவார்தைகள் அனைத்தும் பகிரங்கமாக இருக்கவேண்டும். இலங்கையில் வாழும் சமூகங்களும், சர்வதேச சமூகமும் சொந்த முடிவை இதன் மேல் எடுக்க நிர்ப்பந்திக்க வேண்டும். பேச்சுவார்த்தை மேசையில் தெளிவாக அரசியல் கோரிக்கையை முன்னிறுத்த வேண்டும். நிரந்தர சமாதானம் என்ற வகையில், அரசின் யோசனையை பகிரங்கமாக முன்வைப்பதை நிபந்தனையாக்க வேண்டும். அந்த வகையில் பேச்சுவார்த்தை தொடங்கவேண்டும். தேசியம் சார்ந்த ஜனநாயகக் கோரிக்கையை முன்னிறுத்த வேண்டும். இதை சிங்கள சமூகத்தின் ஜனநாயகக் கோரிக்கைக்கு இயல்பானதாக இணங்கி வரும் வண்ணம், தெளிவாக முன்னிறுத்த வேண்டும். சிங்கள பேரினவாத தேசியத்தில் இருந்து, சிங்கள தேசியத்தை தனிமைப்படுத்தும் வகையில் கோரிக்கையை, தமிழ் மக்கள் சார்பாக முன்னிறுத்த வேண்டும். அதாவது சாரம்சத்தில் சிங்கள மக்களுடன் இணங்கி போகும் வகையில் கோரிக்கையை சரியாக முன்னிறுத்தி, பேரினவாதத்தை சிங்கள மக்களிடம் இருந்து பிரிக்கவேண்டும். இப்படி அரசை சிங்கள மக்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். சர்வதேச சமூகத்தை ஏகாதிபத்திய அரசுகளிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும். வெளிப்படையான நேர்மையான அணுகுமுறை, எந்த தீர்வையும் நியாயமாக போராட்டத் தரப்புக்கு சார்பாக மாற்றும்.

 

மறுபக்கம் தமிழ் மக்களுடனான உறவை புலிகள் மாற்றியமைக்க வேண்டும். தமிழ் மக்களின் ஜனநாயக கோரிக்கையை முன்னிறுத்த வேண்டும். இந்த அடிப்படையில் சிங்கள அரசின் கூலிக் கும்பலாக உள்ளவர்களையும், ஏகாதிபத்திய கூலிகளாக வரத்துடிக்கும் கும்பலையும் தமிழ் மக்களிடம் இருந்து அரசியல் ரீதியாக தனிமைப்படுத்த வேண்டும். இதற்கு முதலில் புலிகள் பகிரங்கமான சொந்த சுயவிமர்சனத்தை செய்யவேண்டும். செய்வார்களா! மக்கள் தமது சொந்த விடுதலையை அடைவார்களா!

 

கருணாவின் புலி அரசியலும், அன்னிய கைக்கூலித்தனமும்

 

கருணா தனது கொலைகார புலிப்பாணி அரசியல் செயல்பாட்டுக்கு கூட நியாயம் கற்பித்துள்ளார். கருணாவின் மாவீரர் தினக் கூற்று அதே நிலைப்பாட்டில் இருந்து வெளிவருகின்றது. "எங்கள் இளைஞர்களையும் மக்களையும் வன்னி ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக வீடுகளுக்குச் சென்ற எங்கள் இளைஞர்கள் மீண்டும் ஆயுதங்களை எடுத்து இந்த இனத்துரோகிகளை விரட்டியடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். சிறிது காலம் ஒதுங்கியிருந்துதான் பார்ப்போம் என்று நினைத்திருந்த என்னை பிரபாகரனது கொலைவெறி உடனடியாகவே களத்துக்கு இழுத்து வந்துவிட்டது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நாம் பல தற்காப்பு தாக்குதல்களை நடத்தியுள்ளோம்." இப்படி தமது பக்க கொலைக்கலாச்சாரத்தை நியாயப்படுத்தியுள்ளார். ஆனால் குற்றம் தர்க்க ரீதியாக புலிகள் மேலானதாக குற்றச்சாட்டப்படுகின்றது. கொலை செய்யும் உரிமையை எப்படி இது நியாயப்படுத்தும்! கொலைகளை தொடங்கியது புலிகள் தான். இன்று இராணுவத்துக்கு எதிரான தாக்குதலை நடத்துவதும் புலிகள் தான்.

 

அதனால் புலிப்பாணி அரசியலையை, கொலைக் கலாச்சாரத்தை செய்வது எப்படி நியாயமாகும். கருணா புலிகளின் பிரதேசவாதம் தான், தனது சொந்த தனிப்பட்ட பிரிவுக்கு காரணம் என்று சொன்னவர். எப்போதாவது அதன் அடிப்படையில் இவர் செயல்பட்டுள்ளாரா எனின் கிடையவே கிடையாது. பிரிவுக்கு முன்னும் சரி, பிரிவின் போதும் சரி, பிரிந்த பின்பும் சரி எந்த விதத்திலும், அந்த பிரதேச மக்களின் நலன்களுடன் தன்னை இணைத்துக் கொண்டவரில்லை. மாறாக அதே புலி அரசியலை, புலிக்கு மாற்றாக படுகொலை அரசியலை நடத்துகின்றார். இதைத்தான் பிரதேசவாத அரசியல் என்கின்றனர்.

 

இதற்கு ஒரு படி மேலே போய் "எங்கள் இனத்துக்கான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க எம் இனத்துடன் தொடர்புடைய எங்கள் பூர்வீகத்தை நன்கு தெரிந்து கொண்ட நாடுகள் முன்வர வேண்டும். ஒன்று இந்தியா, அல்லது பிரித்தானியா ஆகிய இரண்டு நாடுகளும் தான் எங்கள் பிரச்சனைகளை நன்கறிந்தவர்கள். இவர்களது மத்தியஸ்தம் தான் எமக்குத் தேவையானது. குறிப்பாக இந்தியாதான் எங்கள் இனத்துக்கான பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க வேண்டியநாடு. பிரித்தானியா ஆட்சியாளராக இருந்து பொறுப்புகளை கொழும்புவாசிகளிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற நாடு. இந்த இரண்டு நாடுகளும் எங்கள் பிரச்சினையில் தலையிடாது இருப்பதற்கு யார் காரணம், வேறுயாருமல்ல பிரபாகரன்தான்." இப்படி தனது மாவீரர் தினச் செய்தி மூலம் கூறி, அன்னிய கைக்கூலியாகி நிற்கின்றார். பிரபாகரனை விட கீழ் இறங்கி நிற்கின்றார். கிழக்கு வாழ் மக்கள் எங்கே போய்விட்டார்கள். கிழக்கு மக்களிடம் தங்கி நிற்காது, இந்தியாவையும் அன்னிய நாடுகளையும் சார்ந்து நிற்கும் விபச்சார அரசியலைத் தான், கருணா அறிவித்துள்ள நிலையில் இவர்கள் வன்னிப்புலிகள் என்று குற்றம்சாட்டும் அரசியல் அருகதையைக் கூட இழந்து விடுகின்றனர்.

 

நடைமுறையில் இந்தியாவுடனும், அரசுடனும் கூடிக்குலாவும் அரசியல் வளர்ச்சியே கண்டுவருகின்றது. முற்றாகவே இந்தியாவின் வளர்ப்பு நாயாக வளர்ந்த பரந்தன் ராஜன் கும்பலான ஈ.என்.டி.எல்.எவ் யுடன் கூடிய கூட்டின் போதே, இதன் பின்னனி அம்பலமாகத் தொடங்கியது. இவர் தனது முன்னாள் துரோகியுடன் கண்ணால் காணாத திடீர் காதல் கொண்டு கூடிய போது, இவரின் கைக்கூலி அரசியல் அம்பலமாகியது. இதே போன்று டக்கிளஸ்சுடன் கொண்டிருந்த ஆரம்ப உறவுகள் எல்லாம், அரசியல் ரீதியாக துரோகத்தனமானவை. நியாயப்படுத்த முடியாதவை.

 

இங்கு துரோகம் என்ற அரசியல் பதத்தை, புலிகள் பாணியில் நாம் பயன்படுத்த முனையவில்லை. மாறாக நாம் தெளிவாக சொந்த மக்களைச் சார்ந்து நிற்காது, அன்னிய அரசுடன், அன்னிய இராணுவங்களுடன், எதிரி இராணுவங்களுடன் கூடிச் செயல்படும் அனைத்தையும் துரோகத்தனமானதாகவே நாம் கருதுகின்றோம். புலிகள் படுபயங்கரமான மக்கள் விரோத செயல களை செய்த போதும் கூட, இந்த கைக்கூலித்தனத்தை நியாயப்படுத்திவிட முடியாது. நீ நேர்மையாக இருந்தால் மக்களுடன் நில், போராடி நேர்மையாக அதில் மடி. இல்லையென்றால் ஒதுங்கிப் போ. இது அரசியல் நேர்மை. மக்கள் என்ற வார்த்தையை புலிகளைப் போல், கெடுகெட்ட அன்னிய ஆக்கிரமிப்பாளருக்கு சாதகமாக பயன்படுத்துவதை, நாம் ஒரு நாளுமே புலிகளின் பெயரில் அனுமதிக்க முடியாது. இதை யார் செய்தாலும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

 

சாதாரணமான மக்கள் புலிகளின் கொடுமைகளின் போது, புலிகள் அல்லாத ஒருவரின் துணையை நாடுவதை நாம் துரோகமாக கருதுவதில்லை. ஆனால் அரசியல் குழுக்கள், அதன் தலைவர்களை, அரசியல் செய்வோர் இப்படி செயல்படும் போது, அரசியல் ரீதியாக மன்னிக்கவோ சலுகை வழங்கவோ முடியாது. புலி அல்லாத அணி, ஒரு அணியாக இதனால் இருக்கவும் முடியாது. நீங்கள் புலிகளின் கொடுமைகளை எதிர்க்க வேண்டும் என்று விரும்பினால், மக்களை மட்டும் சார்ந்து நில்லுங்கள். இதில் தனித்து நிற்கின்றீர்கள் என்றால், அப்படி மட்டும் நில்லுங்கள். மக்கள் அல்லாத அனைத்துச் செயல்பாடுகளும் துரோகத்தனமானவை தான். வரலாற்றில் மக்கள் அல்லாத புலியின் வரலாறு எப்படி தூக்கியெறியப்படுமோ, அப்படித்தான் இந்த துரோக வரலாற்றுக்கும் நிகழும். முடிந்தால் நேர்மையாக போராடுங்கள்.

பி.இரயாகரன்
10.12.2005