06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

பேரம் பேசும் எந்த ஆற்றலுமற்ற புலிகளின் கோமாளித்தனமே மேடையேறியது

அரசியல் தீர்வையும் உடனடிப் பிரச்னையையும் ஒன்றுக்கொன்று எதிராக நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கே குழிவெட்டியவர்கள், இதன் மூலம் தமிழ் மக்களின் எதிரிகள் என்பதையே தமது சொந்த அணுகுமுறை மூலம் மறுபடியும் புலிகள் உலகறிய நிறுவிக் காட்டினர்.

 

 

இப்படி ஆடிக்காட்டும் கூத்துத்தான் அண்மைய அரசியல் பேச்சுவார்த்தை. குறைந்தபட்சம் பேரம் பேசும் எந்தத் தகுதியுமற்ற, ஒற்றைப் பரிணாமத்தின் மலட்டுத்தனத்தை உலகறிய மறுபடியும் நிறுவிக்காட்டினர். மாபியாத்தனமும் பாசிசமும் வாழ்வியலாக, அதை மேலும் விரிந்த தளத்தில் நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தையையே தமது கருவியாக்க முனைந்தனர். முன்கூட்டிய நிபந்தனைகளுடன் நிபந்தனைகளற்ற பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை நடத்தி, தமது சொந்த மக்கள் விரோதத்துடன் கூடிய கோமாளித்தனத்தை நிறுவிக்காட்டினர். தமிழ் மக்களின் வாழ்வியல் அவலங்கள் மீது, தமது இழிந்த குரங்குப் புத்தியைக் காட்டி நிற்கும் புலிகள், தமிழ் மக்களின் மகிழ்ச்சிக்கு எதையும் தமது சொந்த பாசிச வரலாற்றில் பெற்றுத் தரப்போவதில்லை. அதேபோல் தாங்களும் எதையும் உருவாக்கப்போவதில்லை.

 

பேரினவாதம் தமிழ் மக்களுக்கு எதையும் தராது என்று எப்படி சொல்லுகின்றோமோ, அதுவே தான் புலிகளுக்கும் பொருந்தும். முதலில் தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சனை மீதான தீர்வு என்பதுதான், புலிகள் எல்லாப் பேச்சு வார்த்தையிலும் முன்வைக்கும் முதல் நிபந்தனையாகும். இப்படி கடந்தகால முழுப் பேச்சு வார்த்தையிலும் தமது சொந்த சுயநலம் மூலம் பேரினவாதத்தையே பாதுகாத்தனர். புலிகள் கடந்காலங்களில் நடத்திய தொடர்ச்சியான எல்லாப் பேச்சுவார்த்தையிலும் புலிகளின் சுயநல நோக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவை அமுல் செய்யப்பட்ட போதும், அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறியது கிடையாது. அதை புலிகளும் விரும்பவில்லை, பேரினவாதமும் விரும்பவில்லை. தீர்வுக்கு முயலுதல் என்ற நோக்கம் புலிகளுக்கு கிடையாது என்பதே உண்மை. உண்மையில் தமது சொந்த நலன்களை அடைகின்றதும், மீளவும் வளங்களைத் திரட்டிக்கொண்டு யுத்தத்துக்கு வலிந்து செல்வதுமே அவர்களின் பேச்சுவார்த்தை அரசியலாகும.

 

இந்த பேச்சு வார்த்தையில் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள். இந்தக் கேள்வி புலிகளைத் தவிர அனைவருக்கும் வெளிப்படையானது. அதே போல் பதிலும் வெளிப்படையானது. மக்கள் விரும்பியது யுத்தமற்ற அமைதியையும் சமாதானத்தையும், அதற்கான ஒரு தீர்வையுமே. இதை யாரும் மறுதலிக்க முடியாது. மக்களின் விருப்பம் இது தான். இதைத் தவிர வேறு எதுவுமல்ல. இதை மறுத்துத் தான், புலிகள் தமது கோமாளித்தனத்தை மக்களுக்கு நாடகமாக ஆடிக்காட்டினர். யாருமே மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம். பேரினவாதம் இதை அரசியல் ரீதியாக முன்னிலைப்படுத்தியுள்ளது. அரசு கூறும் தீர்வுகான முயற்சியை மக்கள் நம்புகின்றனர். தமிழ்செல்வனே பி.பி.சி பேட்டியில் இதையொட்டி தடுமாறுகின்றார். இப்படி மக்களின் விருப்புக்கு எதிராக, யுத்தம் தான் தீர்வு என்று புலிகள் உணர்த்தி நிற்கின்றனர்.

 

யுத்தம் அவசியமா? இல்லையா? என்பதை புலிகள் தீர்மானிக்க முடியாது?. அந்த உரிமை அவர்களுக்கு கிடையாது. மக்கள் தான் எந்த வழியூடாக, எப்படி நாம் போராடுவது என்பதை தீர்மானிக்க வேண்டும். எதை எப்படி அடையவேண்டும் என்று தீர்மானிக்கின்ற உரிமை மக்களுக்குத்தான் உண்டு. இதை புலிகள் என்றும் அங்கீகரித்தது கிடையாது. மக்களை கேவலமாக நடத்தும் புலிகள், தமிழ்மக்களுக்கு ஜனநாயக உரிமையே கிடையாது என்கின்றனர். மாறாக மக்களின் பெயரில், மக்களின் மனிதாபிமான பிரச்சனை என்று கூத்தாடுகின்றனர், புலம்புகின்றனர். யுத்தம் சமாதானம் என்ற நீடிப்பில், மக்களின் மரணங்களின் மேல் புலிகள் தாம் வாழவே விரும்புகின்றனர். மக்களின் அதிக மரணம் அதிக செல்வத்தைத் தரும் என்ற இழிநிலைக்கு, தமிழ் இனத்தின் ஏகபிரதிநிதிகள் மிகக் கீழ்த்தரமாகவே தரம்தாழ்ந்து கிடக்கின்றனர்.

 

புலிகள் தாங்கள் வாழவேண்டும், தங்கள் சந்ததிகள் செழிப்பாகவும் சிறப்பாகவும் யுத்தத்தைப் பயன்படுத்தி வளம்கொழிக்க வாழ வேண்டும். இதுவே புலித் தலைவர்களின் எதார்த்தமான இன்றைய நிலை. தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும், தம்மளவில் சொந்தமாகவே மூன்று கேள்வியை நீங்களே உங்களவில் கூட கேட்டுபார்க்கலாம்.

1. இந்தப் போராட்டம் மூலம் எனக்கு, எனது குடும்பத்துக்கு எந்த வகையில் என்ன நன்மை கிடைத்தது? அல்லது கிடைக்கும்! இதற்கு பதில் இல்லை என்றால்

 

2. இந்தப் போராட்டம் எனக்கு வெளியில், எனக்குத் தெரிய எனது சமூகத்தில் யாருக்கு எந்த விதத்தில் நன்மையளித்தது? அல்லது நன்மை அளிக்கும்? இதற்கும் பதில் இல்லையென்றால்

 

3. சரி நாளைக்கு எந்த வகையில் எப்படி எனக்கு அல்லது எனது சமூகத்துக்கு நன்மையாக அமையும்?

 

மக்களுக்கு எதுவுமில்லை. மக்களிடம் இருப்பதை அழிப்பதும், புடுங்குவதும் தான் புலிப் போராட்டம். மக்கள் அதிகம் செத்தால் புலிக்கு கொண்டாட்டம். நீலிக் கண்ணீh வடித்துக்கொண்டு பணம் திரட்டவும், மலிவு அரசியல் செய்யவும் அதிக தமிழ் மக்களின் மரணங்கள் புலிகளின் அன்றாட எதிர்பார்ப்பாகிவிட்டது.

 

இந்த மூன்று கேள்விகளுக்கும் பின்னால் சிலர் நன்மையை அடைந்துள்ளனர். அவர்கள் புலிகளும், யுத்தத்தைப் பயன்படுத்திய சமூக விரோதக் கும்பலுமே. உதாரணமாக ஒரு மாட்டு வண்டில் வைத்து மண்ணெண்ணை வியாபாரம் செய்த மகேஸ்வரன், இன்று இலங்கையிலேயே மிகப்பெரிய கோடீஸ்வரன். இப்படி புலிகள் முதல் பலர் மக்களை கொள்ளையிடNட செழித்துள்ளனர். புலித் தலைவர்களின் குழந்தைகளுக்கு ஊரார் பணத்தில் வெளிநாட்டில் சொகுசான வசதியான கல்வி. சொந்த நாட்டில் தேசியக் கல்வியை மேம்படுத்த ஒரு திட்டம் கிடையாது. அதனால் தமது குழந்தைகளுக்கு மேல்நாட்டுக் கல்வி. சரி எந்த தலைவரின் குழந்தை தமிழீழத்துக்காக மண்ணில் போராடுகின்றது, அதற்காக மரணிக்கின்றது. மக்கள் தமது வாழ்வின் அனைத்துக் கூறையும் இழந்து, இழிந்து வாய்பொத்தி அடிமையாகி அனைத்தையும் இழக்கின்றனர். பெண்கள் தமது தாய்மையை இழந்து நிற்கின்ற சமூக அவலம். இவற்றைத் தவிர வேறு எதையும் புலிகள் மக்களுக்கு தரப்போவதில்லை.

 

இந்த கொடூரத்தில் இருந்து தப்பிப்பிழைக்கவே மக்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் மக்கள் எதைத்தான் விரும்புகின்றனர். ஒரு அரசியல் தீர்வையும், அமைதியையும், சமாதானத்தையுமே கோருகின்றனர். மக்கள் தெளிவாகவே யுத்தத்தை நிராகரிக்கின்றார்கள். இதுவே வடக்குகிழக்கு மக்களின் இன்றைய நிலையாகும். மக்களின் இந்த விருப்பத்தையே மறுதலிக்கும் பாசிசப் புலிகள், மக்களின் பெயரில் மனிதாபிமான பிரச்சனைக்கு தீர்வு என்கின்றனர். மனிதாபிமானம் என்ற சொல்லையும் அதன் உள்ளடகத்தையுமே, புலிகள் கற்பழித்து கேவலப்படுத்தி அர்த்தமற்றதாக்கினர். மக்கள் விரும்புவது வேறு, புலிகள் மக்கள் பெயரில் கோருவது வேறு. அனைத்தும் மக்களுக்கு எதிரானதே.

 

ஏ-9 பாதையைத் திற என்ற புலிகளின் நிபந்தனையும், அதையொட்டிய புலிகளின் ஒரு தலைப்பட்சமான பேச்சுவார்த்தை நகர்வும், பேச்சவார்த்தையை ஒரு தலைப்பட்சமாக மறுதலித்ததன் மூலம், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் அளிக்கப்போவதில்லை. மக்களின் அவலத்தை மேலும் அதிகரிக்க வைப்பதற்கு அப்பால், இது எதையும் சாதிக்கப்போவதில்லை. புலிகளுக்கு பேரம் பேசும் எந்தத் தகுதியும் கிடையாது என்பதையே மீளவும் நிறுவிக்காட்டியுள்ளனர். சொந்த நலன்களை முதன்மைப்படுத்திய புலிகளின் குறுகிய நோக்கங்கள், மக்களை நட்டாற்றில் கைவிட்டு வேடிக்கை பார்ப்பதைத் தவிர இது வேறு எதுவுமல்ல.

 

பேரினவாதம் இதை திறக்க மறுப்பது அவர்களின் அரசியல் இராணுவ யுத்த தந்திரமாகவே உள்ளது. இதேபோல் புலிகளின் வரி முதல், புலிகளின் அரசியல் யுத்த தந்திரங்களுக்கு அப்பாதை முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. மாபியாத்தனதும், பாசிசமும் ஒருங்கே கொண்ட கோரிக்கையாக இது குறுகிக் கூனிநிற்கின்றது. இராணுவ ரீதியான நகர்வுக்கும், பண அறவீட்டுக்கும் அப்பால், இந்தப் பாதையை மீளத்திறக்கக் கோருவதில், மக்கள் நலன் சார்ந்து எதையும் கோரவில்லை. மக்களை யுத்தத்தின் விளிம்பில் தள்ளி, இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களில் தொடர் தாக்குதலை நடத்தவும், அரசியல் படுகொலைகளை செய்யவும், மக்களின் வாழ்வை பதற்றத்துக்குள் இட்டுச்செல்வதற்காகவும் பாதை திறப்பு புலிகளுக்கு அவசியமாகின்றது. இதுமட்டும் தான் புலிகளின் அரசியல் வங்குரோத்துக்கு ஏற்ற, புனர் நிவாரணமாக அவர்கள் காண்கின்றனர். இதற்கு மாறாக மக்களின் விரும்பம் நேர்மாறானது. மக்கள் உடனடியான அமைதியையும், ஓரு தீர்வு ஊடாக நிரந்தரமான சமாதானத்தையும் விரும்புகின்றனர். இதன் மூலம் அனைத்து கொலைகார கும்பலிடமும் இருந்து ஆயுதங்களைக் களைவதையும், குறைந்தபட்சம் நாட்டில் இயல்பான சட்டதிட்டத்துக்கு உட்பட்ட ஒரு அமைதியான வாழ்வையும் விரும்புகின்றனர். இது புலிகளால் ஏற்றக்கொள்ள முடியாத ஓன்று. இதனால் தான் அவர்கள் அரசியல் தீர்வைப்பற்றி என்றும் பேசியது கிடையாது. தீர்வை நிபந்தனையாக விதித்தது கிடையாது. அவர்களின் வருமானத்தை பற்றியும், தொடர்ந்தும் யுத்த சூழலுக்கு ஏற்ற நிலையையும் மட்டும் முன்னிலைப்படுத்தி எப்போதும் எங்கும் பேசுகின்றனர்.

 

இப்படி குறுகிய இராணுவ மற்றும் நலன்களை அடிப்படையாக கொண்ட யுத்த வெறியர்களிடையே, ஒரு முக்கியபாதை சிக்கி திணறுகின்றது. மக்களுக்காக இரண்டு பகுதியும் பேசுவதாக கூறுவதே நகைப்புக்குரியது. மனித அவலத்தின் மீது நின்று இவர்கள் ஊளையிடுவதாகும்.

 

தமிழ் மக்கள் அமைதியையும், சமாதானத்தையும், ஒரு அரசியல் தீர்வையும் விரும்புகின்றார்கள் என்றால், அதை மையமாக வைத்து பேச்சவார்த்தையை நடத்த வேண்டும். இது கூட தெரியாதவர்கள் தான், தமிழ்மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று தம்மைத்தாமே கூறிக்கொள்கின்றனர். பேரம் பேசும் ஆற்றலையே இழந்த மலட்டுப் புலிகள், பேரினவாதத்தின் வால்களில் பிடித்து தொங்கியபடியே மக்களை எட்டி உதைக்கின்றனர்.

 

இந்த பேச்சுவார்த்தையை தமது பாசிசத்துக்குள் மாபியாத்தனத்துக்குள் வெற்றிகரமாக முறியடித்த புலிகள், மாறாக எதை மக்களுக்கு தரப்போகின்றார்கள். இது சுய புத்தியுள்ள ஒவ்வொருவன் முன்னும், ஒரு சிந்தனைக்குரிய அடிப்படைக் கேள்வியாகும். யுத்தம் மட்டுமே தமது மாற்றுவழியாக அவர்கள் காட்டுகின்றனர். சரி யுத்தம் ஏ-9 பாதையை மீளத் திறக்குமா? எப்படி? யுத்தம் பாதையை மீளத் திறக்காது. இதற்கு புலியின் கிறுக்கு வழியில் குறுக்குத் தீர்வு எதுவும் கிடையாது. இன்று இந்த தடைகளுக்குள்ளும், வன்னிக்கு பேரினவாதிகள் அனுப்பும் உணவும் கூட நிறுத்தப்பட்டுவிடும் என்பதும் உண்மை. வன்னிக்கு தாராளமாக உணவு செல்வதால், அது ஒரு கோரிக்கையாகவே முன்வைக்கவில்லை.

 

புலிகளில் சிலர் ஊளையிடுவது போல், யாழ்குடாவை புலிகள் பிடித்துவிட்டால் என்னதான் நடக்கும். ஏ-9 பாதை நிரந்தரமாகவே மூடிக்கிடக்கும். அப்போது எப்படி வன்னிக்கும் யாழ்குடாவுக்கும் உணவும், அத்தியாவசிய பொருட்களும் வரும். தேசிய பொருளாதாரத்தை இனிமேல் தான் கட்டப் போவதாகவும், அன்னிய தொழில்நுட்பத்தை புலம்பெயர் தமிழன் திருடித்தரும்படியும், அண்மையில் பொருண்மிய மேம்பாட்டு பொறுப்பாளர் கரிகாலன் புலிகளின் தொலைக்காட்சியல் அலம்பி அழுது வடித்தார்.

 

பார்க்க : புலிப்பொருளாதாரம் என்பது ஊரையே ஏமாற்றும் கானல் நீர் தான்

 

புலிகளிடம் மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவையை ப+ர்த்திசெய்யக் கூடிய, தேசிய பொருளாதாரக் கூறும் அதற்கான அரசியல் அடிப்படையும் கூட புலிகளிடம் கிடையாது. வியட்நாம் போராட்டத்தை தலைமை தாங்கிய கோசிமின், அமெரிக்காவை யுத்தத்தில் வென்று நாட்டின் தலைவராக பதவியேற்கச் சென்ற போது, அவர் போட்டிருந்த ஒரேயொரு உடுப்பைத்தவிர வேறு எந்த மாற்று உடுப்பு இருக்கவில்லை. மற்றொருவரிடம் இரவலாக பெற்ற உடுப்பை அணிந்து கொண்டே தமது பதவியை ஏற்றவர். மாவோவின் நிலை கூட இது தான். அவரின் போராட்ட காலத்திய படங்கள் அவரின் எளிமையான வாழ்வைக் காட்டுகின்றது. அவர் அணிந்திருக்கும் உடுப்பு, மாற்று உடுப்பின்றி பினாட்டாகவே காட்சியளிக்கின்றது. அந்தளவுக்கு மனவலிமையுடன் மக்களின் அன்றாட எளிய வாழ்க்கையையும், தேசிய பொருளாதாரத்தையும் முதன்மைப்படுத்தி, மக்களின் வாழ்வுடன் ஓன்று கலந்து நின்ற அரசியல் வலிமையை வரலாறு எடுத்துக்காட்டுகின்றது. மாவோ, ஸ்ராலின் ஆட்சிக்கு வந்த பின்பு, யுத்த முனையில் தமது சொந்த குழந்தைகளை யுத்தத்தில் இழந்தவர்கள். அந்தளவுக்கு சொந்த மகனைக் கூட, ஒரு சாதாரணமான மக்களாக, வாழ்வில் அனைத்து கூறுகளுடனும் தான் வாழ வைத்தவர்கள். எந்த சலுகையையும் மக்களிடம் இருந்து வேறுபடுத்தி தனித்துவமாக தனக்கோ, தமது குடும்பத்துக்கோ ஏற்படுத்தியவர்கள் அல்ல. மக்கள் போராட்டத்தில் இது ஒரு அங்கமாக இருந்தது. ஆனால் புலிகள் ஆடம்பரமும், அவர்களின் குடும்பத்தின் சிறப்பு வாழ்க்கையும், மேற்கத்தைய வாழ்க்கையும் கல்வியும், சலுகைகளும், புலிகளின் எடுபிடிகளின் வாழ்க்கை முறையுயே மக்களின் வாழ்வை அழிப்பதாகவே உள்ளது. இதற்குள் தேசிய வாழ்க்கையை, தேசிய பொருளாதாரத்தை நினைத்தே பார்க்கமுடியாது.

 

இவர்களால் சொந்த தேசியவளத்தை இனம் காணமுடியாது. அவர்களின் வாழ்க்கை முறை அதற்கு எதிரானது. பரந்த வளம்கொண்ட எமது நிலம், காய்ந்து போன தேசிய மறுப்பாளர்களின் குறுகிய சுயநலன் சார்ந்த போர்வெறிக்குள் வரண்டு கிடக்கின்றது. மக்களை நாயிலும் கீழாக, அடிமைகளாக, தாம் விரும்பியவாறு ஏற்றியிறக்குவதே புலிகளின் மலட்டு அரசியல். அந்த மக்களைக் கொண்ட தேசியத்தை ஒருநாளும் கட்டமுடியாது. இந்த மண் புலிகளின் மலட்டுத்தனத்தில் தேசியத்தையோ, தேசிய பொருளாதாரத்தையோ ஒருநாளும் உருவாக்காது. தேசிய பொருளாதாரம் என்பது, தேசிய அரசியலை அடிப்படையாக கொண்டது. தேசிய பொருளாதாரம் என்பது, தேசிய சுரண்டலை அனுமதிக்காத, தனக்குள் சமூக ஓடுக்குமுறைகளற்ற, உண்மையான மக்களின் ஜனநாயகம் சுதந்திரத்தில் அடிப்படையானது. அந்த அரசியலை மாற்றாது, தமது கடந்தகாலத்தை சுயவிமர்சனத்தை செய்யாது, ஒருநாளும் தேசிய பொருளாதாரத்தைக் தலைகீழாக நின்றாலும் கட்டமுடியாது. மக்கள் அதற்குரிய அரசியல் அடிப்படையை கூட நெருங்க, புலிகள் அனுமதிக்க மாட்டார்கள். அதை புலிகள் தமக்கு எதிரானதாகவே, தமது வாழ்வியல் முறைக்கும் எதிரானதாகவே பார்ப்பார்கள்.

 

இந்த நிலையில் புலிகள் அரசியல் ரீதியாக, தமது சொந்த சுயநலத்தால் பேரம்பேசும் ஆற்றலையே இழந்து கிடக்கின்றனர். தமிழ் மக்களுக்காக எதையும் பேச முடியாதவர்களாக, தமக்கு மட்டும் பேசுபவர்களாக, அதில் மூக்குடைபட்டவர்களாக சீரழிந்து கிடக்கின்றனர். தமிழ் மக்கள் விரும்பும் அமைதி சமாதானம் பற்றிய ஒரு தீர்வு சார்ந்த தெரிவை முன்னிலைப்படுத்தி, பேச மறுப்பவராக புலிகளின் பாசிசம் இறகுகட்டிப் பறக்கின்றது. மக்களின் முதல்தரமான எதிரியாக, தம்மைத் தாமே மறுபடியும் பிரகடனம் செய்கின்றனர். மக்களுக்கு அமைதியையும், சமாதானத்தையும் புலிகளால் என்றுமே தரமுடியாது.

 

மறுபக்கத்தில் வடக்குக்கு வெளியில் கிழக்கில் வாழும் மக்களின் குறிப்பான பிரச்சனையை பற்றி யாரும் கவலைப்படவேயில்லை. அமைதியாகவும் சமாதானமாகவும் தமது சொந்த பிரதேசத்தில் வாழ்வதற்காகவும், ஒருநேர உணவுக்காகவும் கையேந்தி நிற்கின்றனர். ஏ-9 பாதை பற்றி தமக்காக மக்களின் பெயரில் சிணுங்கியவர்கள், கிழக்கு மக்களின் அவலத்தையிட்டு சிணுங்கக் கூட அருகதையற்ற இழிபிறவிகளாக கிடக்கின்றனர். கிழக்கு மக்களையிட்டு கதைப்பது தமக்கு எந்தவிதத்திலும் இலாபம் கிடையாது என்பது புலிகளின் சரியான கணக்குத்தான். மக்களுக்காக பேரம் பேசும் ஆற்றலையிழந்த, தமக்காக மட்டும் மூக்குடைபட்டும் பேரம் பேசுகின்றனர்.

 

கிழக்கு மக்களின் மீள் குடியிருப்பையும், நிவாரணத்தையும் வழங்குவது உடனடியான அவசரமான மனிதாபிமானப் பிரச்சனையாக உள்ளது. கடந்த ஒருசில மாதத்தில் பல பத்தாயிரம் மக்கள் குடியெர்ந்து, ஒரு இடத்தில் அகதியாகக் கூட வாழமுடியாத ஒரு மனித சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதையிட்டு புலிகளுக்கும், தமிழ் தேசியத்தை போலியாகவே வக்கரித்து பிழைப்பவர்களுக்கும், எந்தவிதமான அக்கறையும் கிடையாது. அந்தளவுக்கு யாழ் மையவாதம், தமது குறுகிய நலனுக்குள் குதர்க்கமாகவே குண்டு சட்டிக்குள் தமிழ் மக்களையே குதிரையாக ஓட்டுகின்றனர்.

 

பேச்சு வார்த்தையில் அரசியல் தீர்வும், உடனடிப் பிரச்சனைகளையும் சமமாக எடுத்து, ஓன்றை ஓன்று சார்ந்து நின்று பேரம் பேசும் ஆற்றல் ஆளுமை எதுவும் புலிகளிடம் கிடையாது. மாறாக இதை ஓன்றுக்கு ஓன்று எதிராக நிறுத்தி, தீர்வை உடனடி பிரச்சனைக்கு எதிரானதாக நிறுத்துவது, தமிழ் மக்களையே அவலாக இடிப்பதுதான். இப்படி இடித்து இடித்து திணிப்பதுதான் புலிப் பாசிசம். தமிழ் மக்களுக்கான தீர்வு, தமது உடனடி நலனுக்கும், தமது அரசியல் எதிர்காலத்துக்கும் எதிரானதாக புலிகள் கருதுவது தெளிவாக இதன் மூலம் மறுபடியும் உறுதிசெய்யப்படுகின்றது. பேரினவாதம் இதை பயன்படுத்தி வெற்றிகரமாகவே தீர்வை முன்வைக்காதது மட்டுமல்ல, புலிகளை இதற்குள்ளேயே சீரழித்து எந்தவிதமான பேரம் பேசும் ஆற்றலையும் இல்லாதாக்கி விடுவதில் வெற்றி பெற்றுவருகின்றது.

 

தமிழ் மக்களின் நலன்களை குறைந்தபட்சம் இந்த சமூக அமைப்பில் ஓரு தீர்வு மூலம் அடைதல் என்ற குறிக்கோள், படிப்படியாக சிதைகின்றது. இந்த சமூக அமைப்பில் பேரம்பேசும் ஆற்றல், அதை மக்கள் நலன்சார்ந்து நகர்த்துதல் என்ற அனைத்தையும் தமிழ் இனம் இழந்து நிற்கின்றது. நாதியற்ற ஒரு சமூகமாக, அனாதைச் சமூகமாக இழிகின்றது. சுயநலக் கும்பல்களின் மாபியாத்தனத்துடன் கூடிய சொந்த வாழ்வில், இவை அனைத்தும் பாசிசமாகவே அரங்கேறுகின்றது. தேசியம், தேசிய நலன், மக்கள் நலன் என எதுவும் இந்த பாசிசத்தின் முன்பாக முளைப்பதில்லை.

 

இந்த சமூக அமைப்பில் ஓரு அரசியல் தீர்வு, மக்களுக்கானதாக இருக்கும் என்று நாங்கள் கருதுபவர்கள் அல்ல. இந்த சமூக அமைப்பில் தமிழ் மக்களின் நியாயமான தேசிய அபிலாசைகள் தீர்க்கப்பட முடியாதது என்பது உண்மை. ஆனால் இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் நிலையில், இன்று நாம் இல்லை. ஆனால் மக்கள் அவலம் எல்லையற்றதாக மாறி நிற்கின்றது. இந்த சமூக அமைப்பில் ஒரு சமரசத்தை வந்தடைவது, உடனடியான அவசரமான தேவையாக உள்ளது. இந்த சமூக அமைப்பின் எல்லைக்குள் புலிகள் உட்பட அரசு வரை செயல்படுவதால், இதற்குள் அவர்கள் ஓரு அமைதியை சமாதானத்தை ஒரு தீர்வை வந்தடைவதை மறுப்பது, மக்களை இழிவுபடுத்தும் மன்னிக்க முடியாத ஒரு மனித விரோதக் குற்றமாகும்.

 

இந்த அமைப்பில் அவர்கள் வந்தடையும் எந்தத் தீர்வும், மக்களின் அடிப்படை நலன்களை பூர்த்தி செய்யாத போதும், மக்களின் இன்றைய விருப்பு அமைதியை சமாதானத்தை ஒரு தீர்வை காண்பதுதான். இல்லையென்றால் இருப்பதையும் இவர்களிடம் இழந்து விடுவார்கள். இதை மக்கள் அன்றாட வாழ்வில், தமது சொந்த நடைமுறையில் உணருகின்றனார். மக்கள் யுத்தமற்ற ஒரு சூழலில், யுத்தத்துக்கும் தமக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு அமைதியான சூழலில் உடனடியாக வாழ விரும்புகின்றனர். இந்த புலி யுத்தம் எதையும் மக்களுக்கு பெற்றுத்தராது என்பதை, அவர்கள் தமது சொந்த அனுபவத்தில் கற்றுள்ளனர். மனித அழிவையும், அவலத்தையும், சமூக சீரழிவையும், சிதைவையும், இழிவையும், அடிமைத்தனத்தையும் தவிர, வேறு எதையும் இந்த யுத்தம் மக்களுக்கு பெற்றுக்கொடுக்காது. யுத்தம் என்று ஊளையிடுபவர்கள், மக்களுக்கு எதையும் தருவதாக ஓரு வரியில் தன்னும் கூற முடியாத பாசிட்டுகளே.

 

மக்கள் விரும்பும் அமைதி சார்ந்த ஒரு தீர்வை, இந்த சமூக அமைப்பில் பேரம் பேசும் அரசியல் தகுதியை, அந்த ஆளுமையை தமிழ் இனம் புலிகளிடம் இழந்து நிற்கின்றது. புலிகளை நம்பினால், தமிழ் மக்கள் இருப்பதையும் இழக்கின்றதைத் தவிர, வேறு எதையும் அடையப்போவதில்லை. இதுவே இன்றைய எதார்த்தமான நிலைமை. புலிகளின் கிறுக்குப் புத்திக்கு வெளியில், பேரினவாதிகள் இந்த அமைப்பில் ஒரு தீர்வை முன்வைக்கின்ற ஒரு நிலைமைக்குள் அவர்கள் செல்லுகின்றார்கள். புலிகள் இதை பேரம் பேசத்தவறினால், பேரினவாதம் தான் விரும்பிய ஒரு தீர்வை புலியல்லாத புலியெதிர்ப்பு கும்பல் மூலம் அதை முன்வைத்து, தமிழ் மக்களின் பேரம்பேசும் ஆற்றலற்ற எடுபிடிகளின் இழிநிலையில் அதை திணிப்பர். சர்வதேசம் இதை ஆதரிக்கின்ற ஒரு எதார்த்தம், எம்முன்னால் அரங்கேறுவதை தமிழ் மக்கள் தடுக்கமுடியாது. இப்படித்தான் புலிகள் அழிக்கப்படுவார்கள.

 

இதை மீறிச் செல்லமுடியாத ஒரு சர்வதேச நிகழ்ச்சிக்குள், எமது பிரச்சனை பிணைக்கப்பட்டு விட்டது. பேரினவாதம் செய்யப்போவது தெளிவானது. யாரும் மீற முடியாத இந்த சர்வதேச நிகழ்ச்சியில் புலிகள் ஓத்துழைக்க மறுத்தால், புலிகள் அல்லாத புலியெதிர்ப்பு தரப்பூடாக ஓரு தீர்வு அரங்கில் வரவுள்ளது. அதை சர்வதேச அங்கீகாரத்துடன் தான், பேரினவாதம் முன்வைக்கவுள்ளது. இதன் மூலம் புலிகளை தனிமைப்படுத்துவதும், மக்கள் தமது அவலங்களின் ஊடாகவே இதை தவிர்க்கமுடியாது ஏற்றுக்கொள்ளும் ஒரு தீர்வாகவுமே அது அமையும். புலிகளை மக்கள் மத்தியில் இருந்து தனிமைப்படுத்துகின்ற அரசியல் நகர்வின் மூலம், பேரினவாதம் புலிகளை வெற்றிகொள்கின்ற பரிதாபகரமான காட்சியை காண்கின்ற ஒரு நிலையை நோக்கி புலிகள் வலிந்து செல்லுகின்றனர். இந்த எதார்த்தமே இன்றைய தமிழ் மக்களின் சொந்தத் தலைவிதியாக உள்ளது.

பி.இரயாகரன்
03.11.2006


பி.இரயாகரன் - சமர்