Language Selection

வயவைக்குமரன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
  பரிமளத்தின் சாமத்தியச் சடங்குகள் டாம் டாமென நடந்து முடிந்திருந்தது. இருபது வயதாகிய பின்னாவது பரிமளம் குந்திவிட்டாளே என்பது, அவளது தாயார் இந்துமதிக்கும், தகப்பனார் அருணாசலத்தாருக்கும் 'அப்பாடா' என்றிருந்தது.
பரிமளமும் இப்பொழுது பாடசாலைக்குப் போகத் தொடங்கி இருந்தாள்.
அந்தப் பாடசாலையில் மட்டுமென்ன அந்த ஊரிலும் அவள்தான் முதல் அழகு. அருணாசலத்தாரின் ஊர்ச் செல்வாக்கும், அவள் அழகும் பாடசாலையில் அவளுக்கென்று ஒரு தனி மரியாதையைக் கொடுத்திருந்தாலும், அவள் குந்தாமற் பிந்தள்ளிப் போவது அவளுக்கு ஒரு குறையாகவே முன்பு இருந்தது. இப்பொழுது இரட்டிப்பு மரியாதை. எல்லோரும் கலகலத்துப் பேசினார்கள். சிலர் அவளின் அழகில் பொறாமைப்பட்டதும் உண்டு. பரிமளம் சதா யோசனையில் மூழ்கிக் கிடப்பாள். இதுபற்றிய பிறரின் சந்தேகங்களுக்கு அவள் காது கொடுப்பதில்லை.
இப்பொழுது பரிமளத்துக்கு பல விசயங்கள் ஆச்சரியத்தைக் கொடுத்தது. சிலது புதிது புதிதாகவும் இருந்தது. பல 'அற்வைஸ்கள்' அவளைத் தேடியும் வந்தன. தன்னிடம் இருந்த குறும்புத்தனங்களையும், தனது இயல்பான உணர்வுகள் சிலவற்றையும் வலுக்கட்டாயமாக ஓட விரட்ட வேண்டியும் இருந்தது. அளவுக்கதிகமாகவே போலியான நாணத்தை தனக்குள்ளேயே வரவழைத்துக்கொள்ள வேண்டியும் இருந்தது. பல பார்வைகள் பலவிதமான அர்த்தங்களைப் பேசுவன போலவும், சிலது புரியாத புதிராகவும் அவளுக்குக் காட்சி தந்தன. பருவகாலங்களால் உப்பிவிடும் அங்கங்களை முதல் முதலாய் வருடி பெற்றுவிட்ட இதமான சுய இன்பங்களை, சினிமாக் கனவுகளை கூச்சமின்றிப் பேசுகின்ற ஒரு பெண்கள் வட்டம் அவளுடன் ஒட்டியிருந்தது. இது அவளுக்கும் ஒருவகை இன்பத்தைக் கொடுப்பதாகவே இருந்தது. இப்பொழுது பலரது பார்வைகள் பட்டுவிடும்போது தனது உடல் தொட்டாச் சுருங்கி போல சுருங்கி விடுவதாகவும், மேனி கூசுவதாகவும் ஏனோ அவளுக்குள் இருக்கும். ஆனாலும், ரங்கனது பார்வைகளால் இவைகள் ஏதும் அவளுக்கு நிகழ்வதாக இல்லை.
ரங்கன் அந்தப் பாடசாலையில் முதல் தர மாணவன். ஆனாலும் தலைமை ஆசிரியருக்கும் அவன் மீது சாதுவான வெறுப்பு இருந்தது. அவன் ஏதோ ஓர் இயக்கத்தில் இருக்கிறான் என்பதே அதற்குக் காரணம். ரங்கனின் வீட்டிலுள்ள பாதிப்பேர் அந்த இயக்கத்துக்கு உழைத்தார்கள். இதனால் அவனுடன் யாரும் அதிகமாகப் பேசுவதற்குத் தயங்கினார்கள். நட்பை வைத்துக்கொண்டால் எங்கே தமக்கு வீண்சோலி வந்துவிடுமோ எனப் பலரும் பயந்தார்கள். சிலருக்கு இதுதொடர்பாக வீட்டில் கண்டிப்பும் இருந்தது. பாடசாலையில் ரங்கனுக்கென்று நட்புக் கொண்டாட பரிமளமும், அவள் சிநேகிதியும் மட்டுமே இருந்தார்கள்.
அன்று பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது ரங்கன் பரிமளத்திடம் நேராக வந்தான். அவளிடம் ரோஜா ஒன்றை நீட்டியதும், அவள் அதை சொட்டும் எதிர்பார்த்திருக்க வில்லை. அவளுக்குள் 'திக'; கென்று இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தாள். பின் தயங்கித்தயங்கி வாங்கினாள். அவள் கைகள் லேசாக நடுங்குவது போல இருந்தது. அடிவயிற்றிலிருந்து 'குப்' என்று ஏதோ ஒன்று உடம்பு பூராகவும் பரவுவதைப் போல இன்பமாக இருந்தது. அவள் நாணத்தால் குனிந்த தலை நிமிராமல் நின்றாள்.
''நான் இந்த ரோஜாவை எதற்குக் கொடுத்தேன். என்று உனக்குப் புரிகிறதா?'' என்று கேட்டான் ரங்கன்.
பரிமளம் ரோஜாவின் காம்பை இரு விரல்களில் சுற்றியவாறு நாணம் கலந்த சிரிப்போடு ''ஓம்''; எனக் குனிந்த தலைநிமிராமல் தலையசைத்தாள். பின் லேசாகப் புருவங்ளை உயர்த்தி மேல் விழியால் ரங்கனை ஏறிட்டுப் பார்த்தாள். சூரியக் கதிர்களை நிலைக் கண்ணாடியில் குவித்து நேராகக் கண்ணுக்குள் பாச்சுவதைப் போல ரங்கனின் பார்வை முதல் முதலாகக் கூசியது அவளுக்கு. அவளோ தடுமாறி மீண்டும் நிலம் நோக்கினாள்.
''காதலர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு இவ்வாறு ரோஜா வைக் கொடுப்பதுண்டு. ஆனாலும் இவற்றையும் விட மேலனான ஓர் அர்த்தத்துடனேயே இவற்றை உன்னிடம் தந்தேன்.'' என்று ரங்கன் சொல்லி வாய் மூடுவதற்குள், ஆச்சரியமாக விழிகளை உயர்த்தி, அவனை நிமிர்ந்து பார்த்தாள் பரிமளம்.
''நல்ல மனிதர்கள் பூவுக்குச் சமமானவர்கள் என்று சில இலக்கியங்களில் நான் படித்ததுண்டு. இந்த மலர்களைப் போலவே அவர்களின் வாழ்க்கையும் மணம் வீசிக் கொண்டே இருக்குமாம்! எனக்கு இந்தப் பாடசாலையில் உன்னைப் போன்ற ஒரு சிலரைத் தவிர நண்பர்கள் என்று யாரும் இல்லை. இப்பொழுது இருக்கும் நட்புக் கூட கைநழுவிப் போய்விடுமோ எனப் பயமாக இருக்கிறது. அதற்கு நீ என்ன செய்வாய். நீயும் ஒரு சராசரிப்பெண் தானே. எங்கள் நட்பு தொடர்ந்து நீடித்தால், இந்த ஊர் உலகம் அதற்கென்று கை, கால், மூக்கு வைச்சு சோடித்து விடும். அதை நீ விரும்பமாட்டாய். இந்தப் பொய்மையை எதிர்க்கின்ற தைரியம் உன்னிடம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நாங்கள் நல்ல மனிதர்களாக வாழ முற்படுவோம். அப்பொழுது அவற் றினால் வீசுகின்ற சுகந்தங்களை இந்தப் பூக்களில் இருந்து வருவதைப் போல, நல்ல மனிதர்களின் வாழ்விலிருந்து பெறுவதைப் போல சுவைத்துக் கொள்ளலாம். அவ்வாறான வாழ்வை அறிமுகம் செய்வதற்கும், அதை வேண்டுவதற் குமாகவே இம் மலரை உன்னிடம் கொடுத்தேன். நான் மனோரஞ்சிதத்தையே இதற்குக் கொடுக்க நினைத்தேன். அவைதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும் அதன்வாசம் எங்கும் கிட்டக் கூடியது. அது எனக்கு இன்று கிடைக்கவில்லை.'' என்று கூறிவிட்டு அவளின் எந்தப் பதிலுக்கும் காத்திராதவன் போலத் திரும்பி விட்டான்.
ரங்கன் சென்று மறையும் திசையையே பார்த்தபடி நின்றாள் பரிமளம். பின் அந்த ரோஜாவை ஒரு முறை முகர்ந்து பார்த்தாள். அதன் வாசம் என்றுமில்லாதவாறு இருந்தது. ''தாங்ஸ் ரங்கன்'' என்று தன்னையே மறந்து கூறியவள், ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லி விட்டதாக புளியம் பிஞ்சொன்றைக் கடித்து விட்டவள் போல தன் விரலைக் கடித்துக் கூசினாள் ஒரு கனம்;. பின்னர், உழவு மாட்டின் பின்னால் தீவனம் பொறுக்கும் ஒரு புறாவைப் போல கெந்தல் நடையுடன் வீடு திரும்பினாள் அவள்.
ரங்கனின் நினைவுகள் பரிமளத்தை ஆட்கொள்ளத் தொடங்கி விட்டன. அவளாள் அவற்றிலிருந்து மீள முடிய வில்லை. இப்பொழுதெல்லாம் தான் ரங்கனிடம் ஏதோ ஓர் இனம் புரியாத ஈர்ப்பு விசையால் ஈர்க்கப்படடுக் கொண்டிருப்பதாகவும் உணரத் தொடங்கினாள். தன்னை ரங்கனிடம் ஈர்த்துக் கொண்டிருப்பது என்ன? அவனது அறி வா? அலலது அழகா? அல்லது கள்ளங் கபடமில்லாத அவனது உயர்ந்த நட்பா? அல்லது மற்ற மனிதரிடம் வேறுபடும் அவனின் பண்பா? எது? இவைகள் ஏதும் இல்லையென்றால் இந்த இனம் புரியாத ஈர்ப்பு விசைக்குப் பெயர்தான் காதலா? அவ்வாறானால் நான் ரங்கனைக் காதலிக்கிறேனா? இதைத்தான் அவன் ஏற்பானா? ''சீ அற்பம்'' எனப் பேசமாட்டானா? அல்லது இந்தக் காதலைத்தான் என்னால் ஏற் றுக் கொள்ள முடியுமா? அது ரங்கனை நான் ஏமாற்றுவதாக இருக்காதா? அப்படியானால் ரங்கனின் நினைவுகளிலிருந்து என்னை நான் எப்படி விடுவித்துக் கொள்வது? பாடசாலையில் அவனது பார்வைகளையும், நட்பையும் முறித்துக் கொள்வதால் இது முடியுமா? இவ்வாறு செய்தால் ரங்கன் என்னை என்ன நினைப்பான்? இப்படியாக பரிமளம் தனக்குள்ளோயே நன்றாகக் குளம்பிப்போய் இருந்தாள்.
பாடசாலையின் இறுதிக் காலங்கள் நெருங்கிக் கொண்டிருந்தன. இன்னும் சில மாதங்களில் பாடசாலை வாழ்க்கை முடிந்துவிடும். அதன்பின் ரங்கனின் நினைவிலிருந்து தன்னை முழுமையாகவே விடுவித்துக்கொண்டு விடலாம், அதுவரையும் சமாளித்துக் கொள்ள வேண்டியதுதான் என எண்ணிக் கொண்ட பரிமளம், அவற்றை வெளியில் காட்டாமல் ரங்கனுடன் பழகினாள். திடீரென ஒரு நாள் ரங்கன் கலவரப்பட்டுக் காணப்பட்டான். ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்துக் கதைக்க முற்படுவது அவனை மீறியும் தெரியத்தான் செய்தது. அன்று பாடசாலை முடிந்ததும் பரிமளத்திடம் நேராக வந்தான்.
''இம் முறையும் உனக்கு பரிசு ஒன்று தரப்போகிறேன்.'' என்றான் ரங்கன்.
''என்ன பூவா?'' சிரித்துக் கொண்டே கேட்டாள் பரிமளம்.
''இம்..ம்'' எனத் தலையாட்டியவாறே ''என்ன பூவென்று சொல் பார்க்கலாம்.''; என்றான்.
''மனோரஞ்சிதம்.''
''இல்லை.'' என்றவாறு கைகளில் இருந்த பூவை நீட்டினான் அவளிடம்.
''இது என்ன பூ?''
''செம்பகப் பூ'' என்றான் ரங்கன்.
''இம்முறை எனது ஞாபகார்த்தமாகவே இப்பூவைத் தருகிறேன்.'' என்று ரங்கன் கூறியதும்
''இவன் ஏதோ புதிர் விடப் போகிறான்.'' என்று தனக்குள் எண்ணியவாறு ஆச்ச ரியமாக அவனைப் பார்த்தாள் பரிமளம். நீரிலிருந்து இழுத்துப் போட்ட மீனின் பரிதாபக் கண்களாய் அவனின் கண்கள் காட்சியளித்தன.
''செம்பகப் பூ பூக்கும் போது அதன் மரத்தில் இலைகள் இருப்பதில்லை. ஒரு மரத்திலேயே பூவுக்கும் இலைகளுக்கும் எவ்வளவு பகை. இது போலத்தான் எனது இன்றைய நிலையும். இனி நான் பாடசாலைக்கு வரப் போவதில்லை. மேற்கொண்டு எதையும் என்னிடம் கேட்காதே.'' என்று அவன் சொல்லும் போது கனியாத நாவல் பழங்களை அள்ளித்தின்றவனின் தொண்டையைப் போல அவனுக்கு அந்தக் கடைசி வார்த்தைகள் அடைத்தது. கண்களில் நீர் அரும்பிவிடுமோ என அவன் பயந் திருக்க வேண்டும். சைக்கிளை உதைந்தவாறு போய் விட்டான்.
பாடசாலைக் காலங்கள் முடிந்த இந்த ஒரு வருடத்துக்குள் எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன. அருனாச லத்தாரின் சொத்து சுகங்களெல்லாம் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டன. தாங்க முடியாத யுத்தங்களால் தாய் வேறு பிள்ளை வேறு என்று உயிரை அவரவர் கையில் பிடிக்கும் நிலையும் உருவாகிவிட்டது. குடியிருந்த வீடு, கோயில், கிணற்றடி எல்லாம் விட்டோடி, ஊரோடி வாழ்கின்ற ஒரு நிலை. இதற்குள் பரிமளம் எங்கே ரங்கனை நினைக்கப் போகிறாள். வேலை வெட்டிகள் ஏதும் கிடைக்காமல் சாப்பிடுவதற்கே பிறரில் தங்கியிருக்க வேண்டிய நிலை, அருணாசத்தாருக்கு பெரிய சுமையாகவே இருந்தது.
அருணாசலத்தாரின் குடும்பப் பசியைப் போக்குவதற்கு இந்த உலகத்தில் ஒரே ஒரு ஜீவன் மட்டும் தான் இருந்தது. அது பரிமளத்தின் முறைமாமன் மகன் நந்தன் தான். அவன் கனடாவிருந்து செய்யும் உதவியில் தான் அவர்களது உயிரே உடலில் ஒட்டியிருந்தது. நந்தன் கனடாவுக்குப் போய் கன வருடங்கள் ஆகிவிட்டன. பரிமளத்தின் சாமத்திய வீட்டுக்கு முன்பே அவன் கனடாவுக்குப் போய்விட்டான். அருணாசலத்தாரும் அடிக்கடி நந்தனின் உதவியை எதிர்பார்த்திருந்தார். நந்தன் பரிமளத்தை எந்தச் சீதனமும் இல்லாமல் கைப் பிடிக்க விரும்புவதாக லண்டனில் இருக்கும் சித்தி மூலமாக தனது விருப்பத்தைத் தெரிவித்தான். நந்தனின் விருப்பம் சித்தி மூலமாக இந்துமதியிடம் வந்தது. இந்துமதியும் மேலும் ஒரு மனப்பாரம் குறைந்து விட்டதாகவே நினைத்தாள். தனது அண்ணருடன் கதைத்து சம்மந்தத்தை ஒருவாறு முற்றாக்கியும் வைத்தி ருந்தாள்.
பரிமளத்துக்கு முன்னரைப் போல ரங்கனின் நினைவுகள் இப்பொழுது வருவதில்லை. இந்த யுத்தத்திற்குள்ளும் எங்காவது பூக்களைக் கண்டுவிட்டாள் உடனே ரங்கனின் ஞாபகம் வந்துவிடும். பூக்களைப் பார்க்கும் போது ரங்கள் எங்கோ சந்தோசமாக வாழ்ந்து கொண் டிருப்பதாகவும், அந்தப் பூக்களுக்குள் அவன் இருந்து சிரிப்பதைப் போலவும் அவளுக்குத் தோன்றும். அவைகளை ஆசையோடு பறித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து விடுவாள். அவை ஒவ்வொன்றாக இதழ்களை உதிர்த்து வாடிவிடும் போது அவளால் அதைத் தாங்கிக் கொள்ளவே முடிவதில்லை. ஒரு நாள் யுத்த நெருக்கடிக்குள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஊரோடிப்போன போதுதான் அவளது பள்ளிச் சிநேகிதி தர்சினியைச் சந்தித்தாள் பரிமளம். ரங்கனைப் பற்றி அவளிடம் விசாரித்த போதுதான் அவளுக்கு அந்த செய்திகள் கிட்டின.
ரங்கன் தங்களைக் கடைசியாகச் சந்தித்தபோது அவனுக்கும் அவனது இயக்கத்துக்கும் இடையில் ஏதோ கருத்து முரண்பாடுகள் தோண்றியிருந்ததாகவும், அதனால் அவன் இயக்கத்தையும் படிப்பையும் விட்டு ஒதுங்கி தலைமறைவாகி வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் இன்னோர் இயக்கத்தினால் 'தேசத்துரோகி' என்று கைது செய்யப் பட்டதாவும், அவன் இப்போது அந்த இயக்கத்திடம் கைதியாக சிறையில் அடையுண்டு இருப்பதாகவும், அவன் இப்போது உயிருடன் இல்லையென்றும் இரண்டுவிதமான கதைகள் உலாவுவதாகவும் அவள் சொன்னாள். எது உண்மையென்று தெரியவில்லையாம். ''இவைகளைக் கதைத்தால் எங்கள் உயிருக்குத்தான் ஆபத்து'' எனச் சொல்லிவிட்டு அவள் அவசரமாகப் போய் விட்டாள்.
பரிமளத்துக்கு இவற்றையெல்லாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. சாதாரணமான ஒரு நட்பைக் கூட உயிராக நேசிக்க நினைப்பவன் ரங்கன். தான் உயிருக்குயிராக நேசிக்கும் இந்தத் தேசத்துக்கு அவன் துரோகம் புரிவானா? ஒருபோதும் இருக்காது. அவ்வாறானால் இந்த ஊர் உலகம் கூறுவது பொய்தானே. நாங்கள் என்ன பாழ்கிணற்றுக்குள்ளா வாழ்ந்து வருகின் றோம்? என்றவாறு தன்னைத் தானே சபித்துக்கொண்டு எதிலும் மனம் ஒட்டாமல் அங்கலாய்தபடி இருந்தாள். எங்கோ ஒரு மூலையில் உறங்கிக் கிடந்த ரங்கனின் நினைவுகள் தேனீக்கள் மொய்பதைப் போல அவளைச் சூழ்ந்து தொல்லை கொடுக்கத் தொடங்கியது.
கலியாணம் ஒப்பேறி விட்ட செய்திகள் நந்தனுக்குக் கிடைத்து விட்டன. நந்தன் மனக் கோட்டைகட்ட ஆரம்பித்தான். கார் வாங்குவது பற்றியும், வீடு வாங்குவது பற்றியும், தங்களது ராஜபோக வாழ்க்கை எப்படி எப்படியெல்லாம் அமைய இருக்கிறது என்பது பற்றியும் பரிமளத்துக்குக் கடிதம் வரைந்தான். பரிமளம் இவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. தனது நடைப்பிணமான வாழ்க்கைக்கு ஒரு கலியாணமா? அவளுக்கே அவள் மீது ஒரு வெறுப்பாக இருந்தது. இவ்வளவு காலமும் யாருக்கும் தெரியாமல் தனக்குள்ளேயே புதைத்து வைத்திருக்கும் அந்த புதினத்தை இன்னும் எவ்வளவு காலத்தக்குத்தான் அவளால் அப்படியே வைத்திருக்க முடியும். அவள் இருதலை கொள்ளி எறும்பாகத் தவித்தாள். இறுதியாக நந்தனிடம் மட்டுமே அந்த உண்மையைத் தெரிவிப்பது என்ற முடிவுக்கு வந்தாள். தான் தாம்பத்திய உறவுக்கு லாயக் கற்றவள் என்பதையும், தான் இன்னுமே பருவத்துக்கு வரவில்லை என்ற உண்மையையும், அவள் நந்தனுக்கு எழுதினாள். கூடவே இந்த இக்கட்டான நிலையிலிருந்து தன்னைக் காப்பாற்றி விடும்படியும், இந்த உண்மையை யாருக்கும் தெரிய விடவேண்டாம். எனவும் அவள் மன்றாடிக் கேட்டிருந்தாள்.
நந்தனின் மனக் கோட்டைகள் சோளகக் காற்றில் பறக்கும் புழுதி போல பறந்து விட்டது. இவ்வளவு காலமும் இவள் இதை மறைத்து வைத்திருக்கிறாள் பார்! அதுகுமல்லாமல் தான் சாமத்தியப்பட்டுவிட்டதாகவும்,அந்தச் சடங்குகளுக்கு தனது கைப்படவே எனக்குக் 'காட்' வேறு அனுப்பி நாடகமாடியிருக்கிறாளே. நான் நகைசெய்து போடும்படி காசனுப்ப அவற்றையும் வாங்கி குசாலாகப் போட்டுத் திரிய அவளுக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் வேணும்... அவளின் செய்கைகளை நினைக்க நினைக்க நந்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. திடீரென குகைக்குள் இருந்து வெளிப்படும் பயங்கர மிருகத்தைப் போல அவனது ஆத்திரம் ஆணவமாக மாறியது.
''என்ன சித்தி உவள் பரிமளம் இன்னும் குந்தவில்லையாம். எல்லாரையும் பேய்காட்டிப் போட்டாள். உவளுக்கு எவ்வளவு தடிப்பெண்டு பாத்தியளே!. ஒரு பெட்டைச்சி இப்பிடிச் செய்து போட்டாள்.. இவள் குடும்பத்துக்கு உதவுவாளே.. கேக்கிறன். செய்யிறதையும் செய்து போட்டு உதை யாருக்கும் சொல்ல வேண்டாமாம்...உவ பெரிய அவ, அவ சொல்லிறதை நாங்க கேட்கவேனும்!.. தன்னைக் காப்பாற்றட்டாம்.. உவளை நான் கூப்பிட்டு இஞ்சை வச்சென்ன ஓராட்டுறதே?... சித்தி. நான் வேற கலியாணம் செய்யப் போறன் இனி அவையளுக்கு காசனுப்பிக் கொண்டிருக்கேலாது..'' நந்தன் ஒரே முடிவாகச் சொல்லிப் போட்டான்.
பரிமளத்தின் பரம ரகசியம் சித்தி மூலமாக இந்துமதிக்கு வந்து விட்டது. இந்துமதி நெருப்பெடுக்க ஆரம்பித்து விட்டாள். ''இவள் எனக்கு அழிகுடிக்கு தான் பிறந்திட்டாள்... என்ன காரியம் பண்ணிப் போட்டாள்... எங்கட மானம் மரியாதையெல்லாம் போகுது... இவளை ஆரினி நம்பிக் கட்டப் போகினம்.. நான் இனி என்ன செய்வன்..'' எனத் தலை தலையாய் அடிக்கத் தொடங்கி விட்டாள்.
பரிமளத்துக்கு இந்துமதியின் தொன தொனப்புகளைத் தாங்க முடியவில்லை. வரவர இந்துமதி பத்திரகாளி ஆகிவிட் டாள். ஏதோ ஒரு வேண்டாத பொருளை தான் பெத்துப் போட்டதாக அவளுடைய நினைப்பு. ஊராரும் அவளை ஒரு செல்லாக் காசாகத் தூக்கியெறிந்து விட்டார்கள். பரிமளத்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தன்னை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறொன்றும் அவளுக்குத் தோண்றவில்லை. தனது சிநேகிதி தர்சினியை அழைத்து தனது நிலைமைகளைச் சொல்லி அழுதாள். ''நான் ஏதாவது குளம் குட்டையிலை விழுந்து சாவதைத் தவிர எனக்கு ஏதும் தெரியவில்லை'' என்று அழுது கொண்டேயிருந்தாள் பரிமளம்.
''ரங்கனுக்கு உதைவிட எவ்வளவு கஸ்டம் வந்திருக்கும். அவனை தேசத்துரோகி என்று தேடித்திரிந்த போதெல்லாம் அவன் சாக நினைக்கவில்லையே, அவன் வாழத்தானே நினைத்தான்... உதென்ன கோழைத்தனம்... சாகிற நினைப்பை மட்டும் விட்டுத் தள்ளு'' தர்சினி பரிமளத்துக்கு உறுதி கூறினாள். ''நீ இங்கதானே வாழமுடியாது என்கிறாய், நான் ரங்களின் உயிர் சிநேகிதன் ஒருவன் மூலமாக உன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கிறன். சாகிற எண்ணத்தை மட்டும் விட்டிடு என்ன?'' அவள் முகத்தை இரண்டு கைகளாலும் வருடிக்கொண்டு கண்களுக்குள் எதையோ தேடியவளாக ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தாள் தர்சினி. ரோஜா இதழின் விளிம்பு ஓரத்தில் தேங்கி நிற்கும்; நீர்த் திவளை போல அவள் கண் மடல்களில் தேங்கிய கண்ணீரில் வாழவேண்டுமென்ற ஆவலின் ஆயிரம் ஆயிரம் எதிர்பார்புகள் சிதறி வான வில்லாய்க் காட்சி தந்தன...
வெளிநாட்டு வாழ்க்கை பரிமளத்துக்கு கொஞ்சம் நின்மதியைக் கொடுத்தது. ரங்கனின் நண்பனும் நல்லவர். அவளின் மனம் ஓரளவு ஆறதல் அடைந்திருந்தது. ''வெளி நாட்டுப் பெண்களுக்குத்தான் எவ்வளவு சுதந்திரம். பூப்படைவதைக் கூட இவர்கள் ஒரு கொண்டாட்டமாகக் கொண்டாடுவதில்லை. தாலி, கூறை, சீதனமென்று எந்தப் பிசகுகளும் இவர்களுக்கு இல்லையே! கற்பென்ற இழவுகூட இதுகளிட்டை இல்லை. என்ன நின்மதியான வாழ்க்கையப்பா'' சொல்லிக் கொண்டே சோபாவில் சாய்கிறாள் பரிமளம்.
இவையெல்லாம் ரங்கனின் நண்பனுக்குக் கேட்டிருக்கவேணும். ''ஏன் இதுகள் எங்கட நாட்டிலை இல்லையே? நித்தம் நித்தம் உழைத்துச் சாப்பிடும் அந்த கூலிச்சமூகத்திடம் இவைகள் எல்லாம் இருக்கு! அவர்களும் இப்படித்தான் வாழுகிறார்கள். என்ன, இங்கை தனிமனித சுதந்திரத்திற்கு அதிக அழுத்தம் கொடுத்து, ஒருவருக்கு ஒருவர் அன்னியமாகும் போக்கில் இவற்றை அனுபவிக்கிறார்கள். அங்க கூட்டாக உழைப்பை விற்கும் கூட்டுவாழ்க்கையில் அவர்கள் அதை அனுபவிக்கிறார்கள்.'' சொல்லிக் கொண்டே பரிமளத்தைப் பார்கிறான் அவன். பழக் குவியலில் நல்ல பழங்களைத் தெரிவதைப் போல அவனது பார்வைகள் அவளது எண்ணக் குவியலின் மீது விழுகின்றதோ!
ரங்கனைப் போலவே இவனும் எவ்வளவு அறிவைக் கொண்டிருக்கிறான்... வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படுகிறது பரிமளத்துக்கு. பெண்களின் விடுதலை தொடர்பாக அதிகம் சிந்திக்கின்றாள். தன்னை ஒரு பொருளாகப் பெத்துப் போட்டதாக நினைத்த நினைப்புகளையும், வேண்டாத உபயோகமற்ற பொருளாக தூக்கி வீசிய சமூகத்தையும், பெண்களின் பருவ மாற்றங்களை கலாச்சாரம் என்ற பெரில் விளம்பரப்படுத்துகின்ற இந்த சமூக அமைப்பின் மீதும் அவளுக்குக் கோபம் ஏற்படுகிறது. அவளின் நியாயமான கோபத்தை ஆக்கப் படைப்பாகத் துணைபுரிகிறான் அவன். பெண்களின் விடுதலை இந்தச் சமூகத்தின் கடைசி மனிதனின் விடுதலையுடன் இரண்டற ஐக்கியப்பட்டிருப்பதை உணர்கின்றாள் பரிமளம். அவளின் வாழ்விடச் சூழ்நிலைகள் அவளை வர்க்க உணர்வில் புடம் போடுகிறது. அவளின் ஆக்கப் படைப்புகள் காத்திரமாக வெளியாகுகின்றன.
அவளின் முதற் படைப்பு வெளியான அன்று அவளால் தூங்க முடியவில்லை. முதல் முதலாகச் சுதந்திரம் பெற்றுவிட்ட நாட்டு மக்களின் ஆரவாரங்களை ரசிப்பதைப்போல விடிய விடிய அவற்றை ரசித்து வாசிக்கின்றாள்... அவள் எழுத்துக்களில் அக்கினிப் பிரவேசம் செய்கிறாள். அவளது தபால் பெட்டிகள் வாசகர் கடிதங்களால் தினமும் நிரம்பிக் கிடக்கிறது. அவற்றை வாசிப்பதால் அவளிடம் வேகமும், வைராக்கியமும் வளர்ந்து வருகிறது...
அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் அவளின் அன்பு மகன் ''அம்மா!..'' என மழலை மொழி சிந்தி யவனாக ஒடி வருகிறான.; அவள் அவனைக் கட்டியணைத்து முத்தமழை பொழிகிறாள். தனக்கு வந்திருக்கும் அன்றைய வாசகர் கடிதங்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் படிக்கின்றாள்.
பிரியமுடன் பரிமளத்துக்கு!
''உனது பேனாவின் கூரிய முனைகள் இந்த சமூகத்தின் ஆழ அகலங்களை இன்னும் இன்னும் ஆழமாகவே உழுது புரட்டட்டும்! அவற்றில் விதைக்கப்படும் புதிய விதைகள் மனோரஞ்சிதமாக எங்கும் வாசம் வீசட்டும்!..''
அவளின் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை. முதல் முதலில் உலகைப் பார்த்துவிட்ட பூனைக் குட்டியைப் போலத் துள்ளிக் குதித்தாள். தனது அன்பு மகனைத் தூக்கி முத்தமிட்டவளாக ரங்கனின் அந்தக் வரிகளைத் திரும்பத் திரும்பப் படித்தாள். அவளுக்குள் வர்க்க உணர்வுகள் இன்னும் இன்னும் உரமேறுகிறது.
வயவைக்குமரன்