09202021தி
Last updateசெ, 07 செப் 2021 8pm

அல்லைப்பிட்டியின் கதை : "வஞ்சிக்கப்பட்டவர்களின் ரார்த்தனையையிட்டு அச்சமாயிருங்கள்! " -அல் குர் ஆன்

என்னைப் புதியவர்கள் சந்திக்கும் போது சிலர் "ஊரில எவ்விடம்?" எனக் கேட்பதுண்டு. நான் "அல்லைப்பிட்டி" என்பேன். அநேகமாக அவர்களில் பெரும்பாலானோருக்கு அல்லைப்பிட்டியைத் தெரிந்திருக்காது. அந்தச் சின்னஞ் சிறிய மணற் கிராமத்தின் பெயரைக் கடந்த சில தினங்களாகச் சர்வதேச ஊடகங்கள் விடாமல் உச்சரித்துக் கொண்டேயிருக்கின்றன. இணையத்தளங்களின் முகப்பில் என் கிராமத்தின் இரத்தம் வடிந்துகொண்டேயிருக்கிறது.

 

யாழ் நிலப்பரப்பையும் லைடன் தீவையும் பண்ணைத் தாம்போதி இணைக்கிறது. பரவைக் கடலுக்குள்ளால் போடப்பட்ட இப் பாதை அண்ணளவாக மூன்றரைக் கிலோ மீற்றர்கள் நீளமுடையது. இத் தாம்போதியின் அந்தலையில் அல்லைப்பிட்டிக் கிராமம் ஆரம்பிக்கிறது. அல்லைப்பிட்டி வரண்ட பூமி. நன்னீர் சில குறிச்சிகளில் மட்டுமே கிடைக்கும். கிராமத்தின் பெரும் பகுதி மணற் திட்டிகளைக் கொண்டது. அல்லைப்பிட்டியின் மேற்குத் திசையில் மண்கும்பான் கிராமம் இருக்க, கிராமத்தின் மற்றைய மூன்று திசைகளையும் கடல் சூழ்ந்திருக்கும்.

 

யுத்தத்திற்கு முன்பாக அல்லைப்பிட்டியில் 220 குடும்பங்கள் வரையில் வாழ்ந்தார்கள்.1977 பொதுத்தேர்தலின் போது கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் தொகை 940 ஆக இருந்தது. கிராமத்தில் சரி பாதித் தொகையினர் தலித்துக்கள். பதினைந்து குடும்பங்கள் முக்குவ சாதியினர். இரு முசுலீம் குடும்பங்கள் புலிகளால் துரத்தப்படும் வரை கிராமத்தின் ஓரமாக வயல் வெளிகளுக்குள் வசித்தார்கள். கிராமத்தின் மிகுதிப் பேர் வெள்ளாளர்கள்.

 

வெள்ளாளக் குடியிருப்பையும் தலித்துக்களின் குடியிருப்புப் பகுதியையும் கிராமத்தின் ஒரேயொரு தார்ச்சாலை நிரந்தரமாகப் பிரித்து வைத்திருந்தது. தலித்துக்களின் குடியிருப்பில் ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் அய்ந்தாம் வகுப்புவரை நடந்து கொண்டிருந்தது. இப்போது அதுவும் மூடப்பட்டு விட்டது. வெள்ளாளக் குடியிருப்பில் "பராசக்தி வித்தியாலயம்" என்றொரு பாடசாலையுள்ளது. அங்கே பத்தாம் வகுப்புக்கள் வரை நடைபெறுகின்றன. அதற்கு மேல் படிக்கவேண்டுமெனில் வேலணைக்கோ அல்லது யாழ்ப்பாணத்திற்கோ தான் போகவேண்டும்.

 

கிராமத்தின் 90 விழுக்காடு மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழேயே வாழ்ந்தார்கள். தலித் மக்களின் தொழிலாகக் கள்ளிறக்குதலும் மீன்பிடியும் இருந்தன. வெள்ளாளர்கள் பெரும்பாலும் சிறு விவசாயிகளாகவோ மண் அள்ளும் கூலிகளாகவோ இருந்தார்கள். ஒரு பெயர் சொல்லக்கூடிய கல்வியாளரையோ, தொழில் முனைவரையோ தன்னும் தந்திராத சபிக்கப்பட்ட கிராமமது.

 

அல்லைப்பிட்டிக்குள் 1978ல் தான் பேருந்து வந்தது (350 வழித்தடம்). 1981 ல் தான் அல்லைப்பிட்டிக்கு மின்சாரம் வந்தது. வறுமையிலும் அறியாமையிலும் உழன்றுகொண்டிருந்த அந்த மக்களிடையே 1984ல் முதலாவது வெடி விழுந்தது. மீனவரான அருமைநாயகம் கடற்கரையில் நின்றிருந்த போது சிறிலங்காப் படையினர் உலங்கு வானுர்தியிலிருந்து சுட்டனர். அருமைநாயகம் அவ்விடத்திலேயே மரணமானார். 1986ல் அல்லைப்பிட்டியில் சிறிலங்கா விமானம் குண்டு வீசியதில் ஞானமலர் அந்தோனி என்ற இளம்பெண் கொல்லப்பட்டார். இவை இரண்டும் வான்வழித் தாக்குதல்கள். சிறிலங்காப் படையினரின் கொலைப் பாதங்கள் 1990வரை அல்லைப்பிட்டி மண்ணிற் படவில்லை. முதன்முதலாகப் படையினரின் பாதங்கள் அங்கே பட்டபோது அவை என் கிராமத்து மனிதர்களின் உதிரச்சகதியில் நடந்தே வந்தன.

 

1990 யூன் மாதம் யாழ் கோட்டையிலிருந்த பெருந்தொகையான இராணுவத்தினரும் பொலிஸாரும் விடுதலைப் புலிகளின் முற்றுகைக்குள் சிக்கிக்கொண்டனர்.இக் கடுமையான முற்றுகை மாதக் கணக்கில் நீடித்தது. கோட்டைக்குள் சிக்கியிருந்த படையினருக்கு உணவோ, மருந்துகளோ, ஆயுதங்களோ வழங்க முடியாமல் சிறிலங்கா அரசு தவித்துக்கொண்டிருந்தது. கோட்டையைக் கைப்பற்றப் புலிகள் உக்கிரத்துடன் போரிட்டுக்கொண்டிருந்தார்கள். எக்கணத்திலும் கோட்டை புலிகளின் கைகளில் வீழ்ந்து விடலாம் என்ற நிலையில், ஓகஸ்ட் மாதம் 21ம் நாள் சிறிலங்கா அரசு பெருமளவு மீட்புப்படையினரை ஆகாய மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் லைடன் தீவில் தரையிறக்கம் செய்தது.

 

லைடன் தீவின் ஊறாத்துறையில் தரையிறக்கப்பட்ட மீட்புப் படையினர் கரம்பன், நாரந்தனை, சரவணை, வேலணை, சாட்டி, மண்கும்பான் வழியாக அல்லைப்பிட்டியை நோக்கி அசுர வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்க, லைடன் தீவில் நிலைகொண்டிருந்த புலிகள் பின்வாங்கிக் கொண்டிரு ந்தார்கள். மீட்புப் படையினர் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றிவிட்டால் பின் அவர்களுக்கும் கோட்டைக்கும் இடையில் மூன்றரைக் கிலோ மீற்றர்கள் நீளம் மட்டுமேயுள்ள -புலிகளின் ஆதிக்கமற்ற- ஆழங்குறைந்த பரவைக் கடற்பரப்பு மட்டுமேயிருக்கும்.

 

வரும் வழியெல்லாம் பெரும் மனித சங்காரத்திலும் பாலியல் வல்லுறவுகளிலும் கொள்ளையிலும் தீவைப்பிலும் ஈடுபட்டுக்கொண்டே வந்த மீட்புப் படையினர் எதிர்ப்பேயின்றி 22ம் திகதி காலையில் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றினார்கள். தரைப்படையினருக்கு ஆதரவு வழங்குமுகமாக விமானப்படையினர் கிராமம் முழுவதும் குண்டு வீசிக்கொண்டிருக்கக் கடற் படையினர் கடல் மார்க்கமாகவும் அல்லைப்பிட்டியைச் சுற்றிவளைத்தனர். அப்போது அல்லைப்பிட்டியிலிருந்து அருகிலிருந்த மண்டைதீவுக்குப் பின்வாங்கிச் சென்ற முப்பதுக்கும் மேற்பட்ட விடுதலைப் புலிப் போராளிகள் மண்டைதீவுக் கடற்படுகையில் கூட்டாகச் சயனைட் அருந்தி இறந்தனர்.

 

அல்லைப்பிட்டியைக் கைப்பற்றிய படையினர் முதற் காரியமாகப் பராசக்தி வித்தியாலயத்தைக் குண்டு வைத்துத் தரைமட்டமாக்கினார்கள்.படையினர் கண்ணில் அகப்பட்ட மனிதர்களையெல்லாம் சுட்டும் வெட்டியும் கொலை செய்தார்கள். சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் வதை செய்தார்கள். இப்போது போலவே அப்போதும் கிராம மக்கள் பிலிப்புநேரியார் ஆலயத்திலும், அங்கிருந்த பாதிரியார் நிக்கொலஸ் குருஸ் சந்திரபோஸிடமும் தஞ்சம் புகுந்தார்கள். ஆலயத்துக்குள் புகுந்த படையினர் அங்கு தஞ்சம் புகுந்திருந்த இளைஞர்களில் முப்பத்தைந்து அப்பாவிகளைக் கைது செய்து மண்டைதீவிற்கு கொண்டு சென்றனர். பின் அவர்களைக் கொன்று உடல்களை ஒரு கிணறுக்குள் ஒன்றாகப்போட்டு மண்ணால் நிரவினர். இந்த அரசபயங்கரவாத மனித சங்காரம் நிகழ்ந்துகொண்டிருந்த போது அப்போதைய சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்ன அல்லைப்பிட்டிக்கு நேரிலேயே வந்திருந்து படையினரை உற்சாகமூட்டினார். மீட்புப் படையினருடன் வந்திருந்த EPDPயினரும் PLOTE உறுப்பினர்களும் கொலைகார அரச படைகளுக்கு வழிகாட்டிகளாகவும் ஆட்காட்டிகளாகவும் செயற்பட்டார்கள். அவர்கள், அல்லைப்பிட்டியின் இரத்தத்தில் தமது கைகளையும் நனைத்துக்கொண்டார்கள்.

 

இறுதியில் மீட்பு படையினர் அல்லைப்பிட்டியிலிருந்தும், மண்டைதீவிலிருந்தும் கடல் மார்க்கமாகச் சென்று கோட்டை முற்றுகைக்குள் சிக்கியிருந்த படையினரை மீட்டுக்கொண்டு தீவாரின் பிணங்களுக்கு மேலால் அணிவகுத்து நடந்து "வெற்றிகரமாகத்" தளம் திரும்பினர்.

 

1991ல் மீண்டும் அரச படையினர் அல்லைப்பிட்டியைக் கைப்பற்றினார்கள். இம்முறை அவர்கள் முழுத் தீவுப்பகுதியையுமே தமது பூரண கட்டப்பாட்டின் கீழே கொண்டு வந்தார்கள்.அப்போது யாழ் குடாநாடு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. தீவுப்பகுதி படையினரால் கைப்பற்றப்பட்டதைக் குறித்துப் புலிகள் "தீவகம் முக்கியமற்ற நிலப்பரப்பு. தீவகத்தை இழந்தது எமக்கு ஒரு பொருட்படுத்தத்தக்க இழப்பேயல்ல." என ஒரு "புத்திசாலித்தனமான" புவியியல் அறிக்கையை விடுத்துத் தீவாரின் தலையில் தண்ணீர் தெளித்து விட்டார்கள்.

 

ஆனால் இம்முறை படையினர் வெறும் அல்லைப்பிட்டியைத் தான் கைப்பற்றினார்கள். படையினர் வந்துகொண்டிருப்பதை அறிந்தவுடனேயே ஒட்டுமொத்தக் கிராம மக்களும் கிராமத்தை விட்டுக் கட்டிய துணிகளுடன் பண்ணைத் தாம்போதியால் நடந்தும், தோணிகள் மூலமும் யாழ் குடாநாட்டுக்குச் சென்றுவிட்டார்கள். பின் அய்ந்து வருடங்களாக அல்லைப்பிட்டியில் மக்களே இருக்கவில்லை. அங்கே கடற்படையினரும் EPDPயினரும் மட்டுமேயிருந்தார்கள்.

 

1995-1996ல் யாழ் குடாநாடு மீண்டும் அரச படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து வன்னிக்கும் கொழும்புக்கும் வெளிநாடுகளிற்கும் இடம், புலம் பெயர்ந்தவர்கள் போக மிகுதிப்பேர் அல்லைப்பிட்டியில் மீளவும் குடியேறினார்கள். அவர்கள் தமது கிராமத்திற்குத் திரும்பியபோது கிராமத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் கடற்படையினர் நிலைகொண்டிருந்தனர். தீவகத்துள் நுழைவதற்கான படையினரின் பிரதான சோதனைச் சாவடி அல்லைப்பிட்டியிலேயே அமைக்கப்பட்டிருந்தது. கைகளுக்கும் கால்களுக்கும் இடையில் நித்தமும் "நேவி" திரிந்துகொண்டிருக்க, ஒரு பெரும் படைமுகாமையொத்த நிலப்பரப்பில் மக்கள் "வாழ" முற்பட்டனர்.

 

அப்போது பயிற்செய்கை நிலங்கள் காடுபற்றிக் கிடந்தன. மீன்பிடித் தோணிகள் காணாமற் போயிருந்தன. வீடுகள், பாடசாலைகள் எல்லாம் தரைமட்டமாகக் கிடந்தன. மக்கள் முதலிலிருந்து தமது வாழ்வைக் கட்டியெழுப்ப வேண்டியிருந்தது. அவர்கள் அரச நிவாரணப் பொருட்களிலேயே தங்கியிருந்தார்கள். மெல்ல மெல்லக் கிராமம் மறுபடியும் துளிர்த்தெழத் தொடங்கும் போது கடந்த 13.05.2006 அன்று அல்லைப்பிட்டியில் நான்கு மாதச் சிசுவிவிலிருந்து அறுபத்தொரு வயது முதியவர் வரையாக ஒன்பது அப்பாவிப் பொதுமக்கள் கடற்படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்.

 

'இக் கொலைகளை EPDPயினரும் சேர்ந்தே செய்தார்கள்' எனச் சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கிறது. அல்லைப்பிட்டி மக்களிடமிருந்து கிடைத்த நேரடித் தொலைபேசிச் செய்திகளும் இத் தகவலை உறுதி செய்கின்றன. EPDP இதை மறுத்திருக்கிறது. அவர்கள் செய்தார்களோ இல்லையோ, அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும், பேரினவாத அரசின் அமைச்சரவையில் பங்கெடுக்கும் EPDPயினரும் இக் கொலைகளுக்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்.

 

விடுதலைப் புலிகளால் சமூக விரோதிகளென்றும் துரோகிகள் என்றும் குற்றஞ் சாட்டப்பட்டு மக்கள் கொல்லப்படும் போதும், புலிகள் உரிமை கோராமலேயே மாற்றுக் கருத்தாளர்களைக் கொன்றொழித்த போதும், புலிகள் அப்பாவி முசுலீம் மக்களையும் சிங்கள மக்களையும் படுகொலை செய்த போதும், அதை நியாயப்படுத்திக்கொண்டிருந்த புலிகளின் ஊடகங்களும் புலி ரசிகர்களும் அல்லைப்பிட்டிக் கொலைகளையிட்டு 'அறச்'சீற்றம் கொண்டார்கள். பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டிக்கொண்டிருக்கும் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இதற்கு நீதி விசாரணை வேண்டும் என்கிறார்கள். EPDP இறந்தவர்களையிட்டு வருத்தம் தெரிவிக்கிறது. கடற்படைத் தளபதியோ கடற்படையினர் இக் கொலைகளைச் செய்யவில்லை என மறுப்புத் தெரிவித்திருக்கிறார். புகலிடத்திலிருக்கும் கோயில் முதலாளி ஜெயதேவன் போன்ற திடீர் சனநாயகவாதிகள் "புலிகள் படையினரை ஆத்திரமூட்டுவதாலேயே இத்தகைய சம்பவங்கள் நிகழுகின்றன" என 'அரசியல் ஆய்வு' நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அல்லைப்பிட்டி மக்களோ அவலமும் துயரும் பெருக மறுபடியும் ஒரு முறை ஒட்டுமொத்தமாக அல்லைப்பிட்டியை விட்டு ஏதிலிகளாக வெளியேறிவிட்டார்கள்.

 

****

 

அல்லைப்பிட்டியின் கதை தான் கடந்த இருபத்தைந்து வருடங்களாகத் தமிழீழத்தின் அநேக கிராமங்களின் கதையாகவிருக்கிறது. இன்பம் -செல்வம் கொலையிலிருந்து வெலிகடச் சிறைப் படுகொலைகள் கொக்கட்டிச்சோலை, வந்தாறுமூலை, குமுதினி, நவாலி போன்ற எண்ணுக்கணக்கற்ற படுகொலைச் சம்பவங்களில் இதுவரை எந்தவொரு சம்பவத்துக்கும் நீதி வழங்கப்படவில்லை. இனப் படுகொலைக் குற்றவாளிகள் எவரும் இதுவரை தண்டிக்கப்பட்டதில்லை. பொதுமக்கள் மீதும் அகதிமுகாம்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், தேவாலயங்கள் மீதும் தாக்குதல்களை நிகழ்த்திவிட்டுப் 'புலிகளைத் தாக்கி அழித்தோம்' என்றே அரசு சொல்லி வந்தது, வருகிறது. இந்த அல்லைப்பிட்டிப் படுகொலைக்கும் யாரும் நீதி வழங்கிவிடப்போவதில்லை.

 

சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போதெல்லாம் சிறிலங்கா அரசுகள் -அது அய்க்கிய தேசியக் கட்சியாக இருந்தாலென்ன சிறிலங்கா சுதந்திரக் கட்சியாக இருந்தாலென்ன- தமிழின அழிப்பை முடுக்கிவிடுகிறார்கள். இந்த அடிப்படைக் காரணம்தான் ஒரு தொகை மக்களும் சர்வதேசத் தமிழ் உணர்வாளர்களும் கண்ணை மூடிக்கொண்டு முன்பு விடுதலை இயக்கங்களை ஆதரித்ததற்கும் இப்போது விடுதலைப் புலிகளை ஆதரிப்பதற்கும் அடிப்படைக் காரணியாயாக அமைந்திருக்கிறது. தமது பொருளியல், வியாபாரம், பதவி போன்றவற்றுக்காகப் பஞ்சத்துக்குப் புலிகளை ஆதரிக்கும் ஒரு கூட்டத்தை விட்டுவிட்டால் மறுபுறத்தில் ஒரு தொகை இளைஞர்களும் மாணவர்களும் மக்களும் புலிகளை உண்மையிலேயே விசுவாசிக்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் புலிகளின் சனநாயக மறுப்பையும் பாஸிசச் செயற்பாடுகளையும் ஏற்க மறுத்தாற் கூட அவர்கள் சிறிலங்கா அரசின் பேரினவாதச் செயற்பாடுகள் ஊடாகப் 'புலிகள் ஆதரவு' என்ற நிலையை வந்தடைகிறார்கள்.அரச பயங்கரவாதத்திலிருந்து புலிகள் தமிழ் மக்களைப் பாதுகாப்பார்கள் என இவர்கள் உண்மையிலேயே நம்புகிறார்கள்.இவர்களின் விசுவாசமும் ஆதரவும் எவ்வளவுக்கு எவ்வளவு தூரம் உண்மையானதோ அவ்வளவுக்கு அவ்வளவு தூரம் முட்டாள்தனமானது. அரசியல் சமூக அறிவுபூர்வமற்றது.

 

இன்று சர்வதேச அளவில் விடுதலைப் புலிகள் பெரும் கண்டனங்களைப் பெற்றுவருகிறார்கள்.எதிர்வரும் 29ம் திகதி அய்ரோப்பிய யூனியனும் புலிகளைத் தடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதவுரிமைகளின் பெயராலும் பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயராலும்தான் மேற்கு நாடுகள் புலிகளைத் தடைசெய்கின்றன என்பது உண்மையாயின், 1983 இனப் படுகொலையின் போதோ, 1989ல் பிரேமதாஸ அரசு பல்லாயிரக்கணக்கான JVP உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கொன்றொழிக்கும் போதோ இம் மேற்கு நாடுகள் சிறிலங்காவுடன் தமது இராஜரீக உறவுகளைத் துண்டித்திருக்க வேண்டும். தமது நாடுகளிலிருந்த சிறிலங்காத் தூதுவரகங்களை மூடியிருக்க வேண்டும். இலங்கை அரசு புலிகளைவிடப் பன்மடங்கு பயங்கரமானது. மேற்கு நாடுகள் கியூபா மீதும், ஈராக் மீதும் விதித்த தடைகள் மேற்கு நாடுகளின் மனித உரிமைகள் மீதான கரிசனையிலிருந்து பிறந்தவை எனச் சொன்னால் எந்த முட்டாளாவது நம்புவானா? புலிகளை இப்போதைக்கு மேற்கு நாடுகள் தடைசெய்வதிற்கு வேறு காரணங்கள் உள்ளன.

 

இந்தக் காரணங்களைப் புரிந்து கொள்வதற்கு முதலில் மேற்கு நாடுகள்- இந்தியாவும் கூட- தமிழ் மக்களின் பிரச்சனைப்பாடுகளை மனித உரிமைகள், இறைமை, சமாதானம் போன்ற தார்மீகங்களால் அணுகாமல் ஏகாதிபத்தியங்களின் மறுகாலனியப் போட்டிகள், உலகமயமாக்குதல், உலக முதலாளியத்தின் வரலாற்று நெருக்கடி போன்றவற்றின் ஒரு பாகமாகத்தான் அணுகுகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசுக்கும் புலிகளுக்கும் விதவிதமான அழுத்தங்களைக் கொடுத்து ஒவ்வொரு பலம் வாய்ந்த நாடும் முழு இலங்கையையும் தனது வல்லாண்மையின் கீழ் கொண்டுவரக் காய்களை நகர்த்துகின்றது. இதில் அய்ரோப்பிய யூனியன் கூட்டுக் கொள்ளையில் வேறு இறங்கியிருகிறது. கடந்த பெப்ரவரி மாதம் ஜெனிவாவிற்கு சமாதானப் பேச்சுவார்த்தைளுக்காகச் சென்றிருந்த அரசுத் தரப்பில் இடம் பெற்றிருந்த அமைச்ர் ரோஹித போகல்லாகம "வொய்ஸ் ஓப் அமெரிக்காவின்" முன்னாள் அதிகாரி என்பதுவும், கடந்த 15.05.2006 அன்று சிறிலங்கா நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக சிறிலங்காவுக்கு வந்திருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சின் தெற்காசிய விவகாரங்களுக்கான முதன்மைப் பிரதிச் செயலர் டொனால்ட் காம்ப் "அய்ரோப்பிய யூனியன் புலிகளைத் தடைசெய்வதை அமெரிக்கா வரவேற்கும்." எனக் கூறிவிட்டுச் சொன்ன கையுடனேயே, தொழிலதிபர்களைச் சந்தித்து அமெரிக்க இலங்கை வர்த்தக உறவுகளைக் குறித்து விவாதித்துவிட்டுப் போயிருப்பதையும் இங்கே குறிப்பிடுவது பொருத்தமானதே.

 

விடுதலைப்புலிகள் ஓர் அதிபயங்கரமான அரசியல் முட்டுச்சந்துக்குள் சிக்கியிருக்கிறார்கள் என்பது அவர்களே உணர்ந்திருக்கும் ஓர் உண்மை. புலிகளின் இந்த வீழ்ச்சிக்குக் காரணங்களாகத் தேனி இணையத்தளமும், TBC வானொலியும் தமது மேட்டுக்குடி மதிப்பீடுகளால் சுட்டும் காரணங்களான, புலிகளின் தலைவர் படித்த எட்டாம் வகுப்போ, அன்ரன் பாலசிங்கம் அருந்தும் மதுவோ, சுப.தமிழ்ச்செல்வனுக்கு ஆங்கிலம் தெரியாததோ இருக்க முடியாது. புலிகளின் தனிமனிதப் பலவீனங்களிலிருந்து அல்லாமல் புலிகளின் வலதுசாரிக் குறுந்தேசியவாதப் பிற்போக்கு வேலைத்திட்டத்திலிருந்தே இந்த வீழ்ச்சி நேரிட்டது. அவர்கள் மக்களை வரி செலுத்தும், பவுண் வழங்கும், கப்பங் கட்டும் மந்தைகளாக மதிப்பிட்டார்களே தவிர, மக்களை அரசியற் சக்திகளாக மதிக்கவில்லை. அவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுச் சாகச நாயகர்களாகத் தம்மை நிறுத்திக்கொண்டார்கள். பிரபாகரன் குறித்த பிரமைகளையும் தனிமனிதத் துதியையும் கட்டியெழுப்புவதற்கு செலவு செய்த சக்தியில் இலட்சத்தில் ஒரு மடங்கைத் தன்னும் புலிகள் மக்களுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வையும், சமூக நீதியையும் சொல்லிக் கொடுப்பதற்கு செலவு செய்தார்களில்லை. தமது இயக்க உறுப்பினர்களுக்குப் புரட்சிகரக் கோட்பாடுகளைக் கடைப் பிடிப்பதற்குக் கற்றுக் கொடுப்பதற்குப் பதிலாகப் புலிகள் யாழ் இந்து மரபில் பேணக் கூடிய பிற்போக்குக் கோட்பாடுகளைக் கற்றுக்கொடுத்து அமைப்புக்குள் அதைக் கறாராகக் கடைப்பிடித்தார்கள் (பார்க்க: அன்ரன் பாலசிங்கம், நேர்காணல்:ஆனந்த விகடன் - 23.04.2006). வெறும் உணர்ச்சிக் கவிஞர்களையும் உலைக்களக் கவிஞர்களையும் பரப்புரையில் இறக்கிவிட்டு எமது இளைஞர்களினதும் மாணவர்களினதும் சிந்தனையை அரசியல் நீக்கம் செய்தார்கள். புலிகள் தமது முப்பது வருட வரலாற்றில் எப்போதாவது எங்காவது ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூட்டத்தைப் போட்டது பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா?

 

இன்னொரு புறத்தில் புலிகளை எதிர்பவர்களில் ஒரு சாராரும் புலிகளைத் தாண்டிய, ஏகாதிபத்திய அதிவிசுவாசிகளாக இருக்கிறார்கள்.அவர்கள் மேற்கு நாடுகளின் சனநாயக முகமூடிகளைக் காட்டி மக்களை அதை நம்பவும் சொல்கிறார்கள். TBC வானொலியில் இப்படி நிறைய முதிர் முட்டாள்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஒருபோதும் TBC க்கும் ENDLFக்கும் சிறிலங்காப் பேரினவாத அரசுக்கும் உள்ள கள்ள உறவுகள் குறித்துக் கேள்விகளை எழுப்புவதில்லை. இவர்களின் திடீர்த் தலைவரான "சிவநெறிச் செல்வன்" ஜெயதேவன் அங்கம் வகிக்கும் பிரிட்டன் தொழிற்கட்சியின் ஈராக் நிலைப்பாடு பற்றித் திடீர்த் தலைவர் மறந்தும் வாய் திறப்பதில்லை. இந்தப் பன்னாடைகள் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கப் போகிறார்களாம். "அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?" என்ற பாரதிதாசனின் நக்கல் பாட்டொன்றுதான் ஞாபகத்தில் வருகிறது.

 

இந்த நானாவித கொலைகாரர்களிடையே கொள்ளைக்காரர்களிடையே ஏமாற்றுக்காரர்களிடையே மக்கள் அல்லைப்பிட்டியைப் போல அநாதையாகக் கைவிடப்பட்டவர்களாக நிற்கிறார்கள். மக்களுக்கு நீதியையும் சமாதானத்தையும் ஒரு தேவதூதனோ அல்லது ஒரு பிசாசோ வானத்திலிருந்து கொண்டுவரப் போவதில்லை. இப்போது நடந்து கொண்டிருக்கும் யுத்தம் மக்களின் யுத்தமல்ல! இப்போது நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையும் மக்களின் பேச்சுவார்த்தையல்ல! தங்கள் அரசியல் வழிகளையும், தேவைகளையும் ஒடுக்கப்பட்ட மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். பேசும் உரிமையும், எழுதும் உரிமையும், கூட்டங் கூடும் உரிமையும், இயக்கம் நடத்தும் உரிமையும், கட்சி கட்டும் உரிமையும் அனைத்து ஈழத்தமிழ் மக்களுக்கும் வேண்டும். இந்த அடிப்படை மனித உரிமைகள் கூட மக்களிடமிருந்து அரசாலும் புலிகளாலும் பறிக்கப்பட்டிருக்கின்றன. இந்த உரிமைகளைப் பறிகொடுத்த உணர்வேயின்றி ஒடுக்கப்பட்ட மக்கள் இரத்தத்துள்ளும் அச்சத்துள்ளும் அறியாமையுள்ளும் புதைந்திருக்கிறார்கள்...அல்லைப்பிட்டியைப் போல. ஒடுக்குமுறையாளர்களே! வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனையையிட்டு அச்சமாயிருங்கள்!

ஷோபாசக்தி

22.05.2006