06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

புண் இருந்தால் சீழ் இருக்கும்

அனுபவ ரீதியான வாழ்வில், அனைவரும் அறிந்த சாதாரண உண்மை. ஆனால் சிங்களப் பேரினவாதிகளும் சரி, புலிகளும் சரி இந்த உண்மையை மறுக்கின்றனர். தமிழ்மக்களின் அடிப்படை உரிமையை இருவரும் மறுக்கின்றனர். ஒருவர் இதை பயங்கரவாதம் என்கின்றார் என்றால்,

 மற்றவர்கள் துரோகி என்கின்றனர். இப்படி புண்ணை வைத்துக்கொண்டு, சீழை நக்குவதே இவர்களின் விபச்சார அரசியலாகும்.

 

இன்றைய அரசியல் எதார்த்தம் இதுவே. சிங்கள பேரினவாதம் இருந்தால் அதற்கு விளைவு இருக்கும். அதைப் பயங்கரவாதம் என்று கூறவது அடிமுட்டாள் தனமாகும். மக்கள் நலனை முன்னிறுத்தாத இக்கூற்றுகள், தீவிரமான பயங்கரவாதியின் கூச்சலாகும். இந்தவகையில் பேரினவாதிகள், மனித உரிமையை மறுக்கும் பேரினவாதிகள் தான். தமிழருக்கு எதிரான திட்டமிட்ட சிங்கள பேரினவாத அரசியல் சூழ்ச்சிகள், இன்று சிறு குழுவின் இராணுவ சர்வாதிகார பாசிச நிலையை அடைந்துள்ளது. ஆக மொத்தத்தில் மொத்த தமிழ் மக்களையும் சிங்கள மக்களுக்கு எதிரானதாக நிறுத்த முனைகின்றது.

 

புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மை ஒருபுறம். மறுபக்கத்தில் இதையே கூறிக்கொண்டு, இதை வெறும் வார்த்தையாக்கிக் கொண்டு, மக்கள் தான் புலிகள் என்ற சிங்கள பேரினவாதத்தின் பாசிச நடைமுறைகள். சிங்கள பேரினவாத பாசிச இராணுவ சர்வாதிகார வழிகளில், மொத்த தமிழ் மக்களும் குதறப்படுகின்றனர். ஓட்டுமொத்தத்தில் தமிழ்மக்கள் சொல்லொணாத் துயரத்தையும், மனித அவலத்தையும் சந்திக்கின்றனர்.

 

புலிகள் வேறு, தமிழ் மக்கள் வேறு என்ற உண்மையை மறுக்கும் புலிகள். மறுபக்கத்தில் பேரினவாதமோ இல்லையில்லை, புலிகளும் தமிழ் மக்களும் ஒன்று என்கின்றனர். புலிக்கோ இது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகிவிடுகின்றது. பேரினவாதம் இதை உறுதிசெய்யக் கூடிய வகையில் தான், புலி நடவடிக்கைகள் இதற்குள்ளாகவே அமைகின்றது. புலியின் அரசியல் இருப்பு இதற்குள்ளாகவே அமைகின்றது. பாவம் தமிழ் மக்கள். சட்டிக்குள் மடிவதா அல்லது கீழே வீழ்ந்து நெருப்பில் மடிவதா என்று புரியாத பரிதாப நிலை.

 

எப்படி மடிவது என்பதில் கூட, தமிழ் மக்களுக்கு இன்று சுதந்திரம் கிடையாது. ஒருபுறம் புலிகள் பாசிசமும் கட்டாய பயிற்சியும். மறுபக்கம் சர்வாதிகார பாசிச இராணுவம், தமிழ் மக்களை கூட்டம் கூட்டமாக கொல்வதற்காக ஏற்ற இடத்துக்கு கட்டாயமாக அழைத்துச் செல்லுகின்றது. தமிழ் மக்களின் திரிசங்கடமான நிலை இது. தமிழ் மக்களுக்கு இலங்கையின் எப்பாகத்திலும், எந்த அரசியல் சுதந்திரம் முதல் வாழ்வதற்கான சுதந்திரமும் கூட கிடையாது. சரி இதில் இருந்து மீள்வதற்கான, மீட்சிக்குரிய வழி கிடையாது.

 

தமிழ் மக்களை கட்டிவைத்துள்ள புலிப் பாசிசம் என்பது, சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக கட்டமைக்கப்பட்டதல்ல. மாறாக தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்டதே. தமிழ் மக்களின் உரிமைகள், புலிகளை அரசியல் அனாதையாக்கும் என்று புலிகள் கூறுமளவுக்கு, அப்பாசிசம் காணப்படுகின்றது. மக்களின் உரிமைகளை புலிகளுக்கு எதிரானதாக கருதுகின்ற அளவுக்கு, புலிப் பாசிசம் முத்தி முதிர்ந்து காணப்படுகின்றது. இந்த நிலையில் தான், தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை பேரினவாதிகள் வழங்கமால் இருப்பதையே புலிகள் விரும்புகின்றனர். புலிகள் நடத்திய எந்த பேச்சு வார்த்தையிலும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை புலிகள் முன்னிறுத்துவதில்லை. பேரினவாதம் அதை தமிழ் மக்களுக்கு வழங்கினால் புலிகளும் வழங்கவேண்டும் என்பதால், மக்களின் அடிப்படை உரிமையை மறுப்பதும், அதை வழங்க மறுப்பதும் இவர்களது சொந்த அரசியல் பாசிச நிலையாகும்.

 

அதாவது புலிகள் தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமையை வழங்கினால், பேரினவாதிகள் அதை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டிய நிலை உருவாகும். அதேபோல் பேரினவாதம் தமிழ் மக்களுக்கு அடிப்படை மனித உரிமையை வழங்கினால், புலிகள் அதை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். எனவே இருவரும் அதை மறுப்பதும் மட்டுமின்றி, பரஸ்பரம் கோருவதைக் கூட திட்டமிட்டு தவிர்க்கின்றனர்.

 

இந்த நிலையில் புலிகள் தமிழ்மக்களின் உரிமைகளையும், அவர்களின் அடிப்படை மனித சுதந்திரத்தைக் கூட அனுமதிப்பதில்லை. இந்த உண்மை, சிங்கள பேரினவாதத்தை மிதமாக்கிவிடுவதில்லை. புலியல்லாத தரப்பு பேரினவாதத்தை மிதமானதாக வித்தைகாட்டுவது என்பது, விபச்சாரத் தரகுகளுக்கே உரிய பொறுக்கித்தனமாகும். சிங்கள பேரினவாதம் ஒன்றும் புலியை விட மிதமானதல்ல.

 

புலியல்லாத தளத்தில் அப்படியொரு பிரமை, நம்பிக்கை விதைக்கப்படுகின்றது. புலிகள் தான் மிக மோசமான பாசிட்டுக்கள் என்றும், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வழங்க மறுக்கும் கொலைகாரர்கள் என்றும் காட்டியபடி, பேரினவாத பாசிசத்தை தொடர்ச்சியாக பாதுகாக்கின்றனர். இதுவே புலியெதிர்ப்பு அரசியல் சாரமாகும். புலியை அழித்தல், இதற்கு ஏற்ப அனைத்து மக்கள் விரோதிகளையும் சார்ந்து நிற்றல் என்பதே இவர்களின் கொள்கையாகும்.

 

தமிழ் மக்களினது மட்டுமல்ல, சிங்கள மக்களினதும் முதலாவது எதிரி சிங்கள பேரினவாதம் தான். அதை நண்பனாக காட்டி, மயக்கத்தை உருவாக்கி அதன் பின் அணிவகுப்பதே, புலியெதிர்ப்பின் அரசியல்சாரம். இதற்கு வெளியில் யாரும் மாற்று அரசியல் ஒன்றை முன்வைப்பதில்லை. புலியை அழித்தால் ஜனநாயகம் வரும் என்று சதா ஒப்பாரி வைக்கின்றனர்.

 

புலிப் பாசிட்டுகளை அரசியல் ரீதியாக இன்று வைத்திருப்பது யார்?

 

1. பேரினவாதமும், அதை பாதுகாக்கும் பாசிச சிங்கள அரசும்


2. புலியெதிர்ப்பு கொண்டுள்ள புலி அரசியல்

 

இவ் இரண்டும் தான் புலியை வைத்திருக்கின்றது. அது அரசியல் ரீதியாக, இராணுவ ரீதியாக புலியை பாதுகாக்கின்றது. இந்த இரண்டு பிரிவினரதும் நிலைப்பாடும் புலியை பாதுகாக்குமே ஒழிய அதை அழிக்காது. இந்த உண்மை பலருக்கு வேப்பாங்காயாக இருக்கலாம். ஆனால் இதுவே எதார்த்தமும், உண்மையுமாகும்.

 

இந்த நிலையில் பேரினவாதம் பற்றி புலியல்லாத தரப்பு கொண்டுள்ள நிலைப்பாடு தான், புலியை பாதுகாக்கின்றது. நாய் வாலை நிமிர்த்தினாலும் நிமிர்த்தலாம், ஆனால் பேரினவாதத்தை நிமிர்த்த முடியாது. பேரினவாதம் பாசிசத்தின் மற்றொரு வடிவம். பேரினவாதத்தின் துணையில் தான், புலிகள் தமிழ்மக்களை அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். இதேபோல் புலிப் பாசிசத்தின் வடிவில், அதனுள் புகுந்து நிற்கும் பேரினவாதம், தனது பாசிசத் தலைவிரித்து தமிழ் மக்களை தொடர்ச்சியாக வேட்டையாடுகின்றது.

 

தமிழ் மக்களின் உரிமை பற்றி காலாகாலமாக பேசுகின்ற சிங்களத் தலைமைகள், அதை வழங்க மறுப்பதில் காட்டுகின்ற மனப்பாங்கோ வக்கிரமானது. உண்மையில் தமிழ் மக்களின் அடிப்படை உரிமையை வழங்க மறுக்கின்றது. அரை நூற்றாண்டாக காலத்துக்கு காலம், அதை மறுப்பது என்பதும், ஏமாற்றுவதும் தொடருகின்றது.

 

இன்று அதை புலியைச் சொல்லி செய்கின்றனர். இதை பாதுகாக்கும் புலியெதிர்ப்பு நாய்கள் அதை பாதுகாத்து நின்று குலைகின்றது. சொந்தமாக மக்களை வழிநடத்த எந்த நாய்க்கும் வக்கு கிடையாது. இவர்கள் ஜனநாயகத்தை, அதுவும் புலியல்லாத பாசிட்டுகளின் தயவில் மீட்கப்போகின்றார்கள். நம்புங்கள். இது தான் இவர்கள் வைக்கும் மாற்று வழி.

 

புலிகளின் பாசிசக் கூறுகளை தனக்கு சாதகமாக கொண்டு, தமிழ் மக்களின் அடிப்படை மனித உரிமையை மறுப்பது தான், இன்றைய பேரினவாத சதியாகும். சமகாலத்தில் பேச்சுவார்த்தை, ஒரு தலைப்பட்சமான அரசின் தீர்வு பற்றிய முன்மொழிவுகள், நிபுணர் குழுக்கள், தீர்வு பற்றிய திட்ட அறிக்கைகள், விவாதங்கள் என அனைத்தும், தமிழ்மக்களை மட்டுமல்ல ஊர் உலகத்தையும் ஏமாற்றுகின்ற சூழ்ச்சிகள் தான்.

 

தமிழ் மக்களை அரசியல் ரீதியாக காட்டிக்கொடுக்கும் புலித் தலைமையின் பாசிச இராணுவ வக்கிரங்களை பயன்படுத்திக் கொண்டு, புலியை தனிமைப்படுத்தி தமிழ் மக்களின் முதுகில் குத்தும் பேரினவாதம், எதையும் தமிழ் மக்களுக்கு கொடுக்கப்போவதில்லை.

 

உண்மையில் இன்று ஆட்சியில் அமர்ந்து இருக்கும் இராணுவ சர்வாதிகார சிறு குழு, பேரினவாதத்தின் ஏக பிரதிநிதிகள். புலிகள் என்றால் தமிழ்மக்கள் என்று கூறிக்கொண்டு, அவர்களை தமது பாசிச இராணுவம் மூலம் வேட்டையாடுகின்றனர்.

 

தமிழ் மக்களின் எதிரியை, அதன் பலத்தை எதிர் கொள்ளுவதற்கு தேவையான ஜக்கியம் மற்றும் ஒற்றுமையின் எதிரிகள் யார் என்றால்

 

1. புலிகள்


2. புலியெதிர்ப்புக் கும்பல்

 

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளில் இருந்து, அவர்களின் அடிப்படை அரசியல் உரிமைகளில் தான், ஜக்கியம் ஒற்றுமை உருவாகமுடியும். இதை எதிர்த்து, அதை குழிதோண்டி புதைப்பதில் புலிகள் மட்டுமல்ல புலியெதிர்ப்பு அணியும் தான் காரணமாக உள்ளது. இப்படி தமிழ் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். இந்த உண்மையை வரலாறு உறைக்கும் படி எம்முகத்தில் அறைந்து கூறுகின்றது. ஆனால் நாம் சுயமிழந்து, சுயமரியாதை இழந்து, அறிவிழந்து, ஏன் எதற்கு என்று கேள்விகளின்றி மறு கன்னத்தையும் காட்டுகிறோம். நாம் இந்த உண்மையை உணர்வோமா? சிந்திப்போமா? அல்லது தமிழ் மக்களின் அழிவுக்கு துணை நிற்போமா?

பி.இரயாகரன்
10.06.2007


பி.இரயாகரன் - சமர்