10042023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

எமக்குத்தேவை, அவதாரங்களல்ல அதிகாரம்! பரந்துபட்ட உழைக்கும் மக்களின் அதிகாரம்!!

தேவர்கள் தமது பக்தகோடிகளை வழிநடத்தி வருவார்கள். இந்தத் தேவர்களும் அவர்களின் பக்தகோடிகளும் அசுரர்களால் துன்புறுத்தப்படும்போது, தேவர்கள் சிவபிரானிடம் ஓடிச்சென்று முறையிடுவார்கள். சிவபெருமானும் அவர்களைக் காப்பாற்றுவதாக உறுதி கூறி, ஆசியோடு அருள்பாலித்து அனுப்பிவைப்பார். பின் சிவபிரான் பல அவதாரங்களை உருவாக்குவார். பல திருவிளையாடல்களையும் நடத்துவார். சிலவேளை அவரே அவதரிப்பார். பிறகென்ன, அசுரர்கள் அழிந்து தேவர்கள் சுகமாக வாழ்வார்களாம்.

இவை எல்லாம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் வரும் கதை!

இந்த இதிகாசங்களும் புராணங்களும் ஆளும் அதிகார உடமையாளர்களால் உருவாக்கப்பட்டவைதான். இந்த அதிகார வர்க்கம் தம் கைகளில் இவ்வதிகாரத்தை கெட்டியாக வைத்திருப்பதற்கும், அதைப் பாதுகாப்பதற்கும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டு வரும். ஏன் பாசிசமாகக் கூட மாறும். இவ் ஆளும் வர்க்கமானது, இவ் ஒடுக்குமுறையை தமது சொந்த கலாச்சார, பண்பாட்டு சமூக விழுமியங்களால் நியாயப்படுத்த அதை மூடிமறைக்க பக்தர்களாய் மந்தமாக்கி, தம் நம்பிக்கைக்குள் அமிழ்த்தி வைக்க இவ் இதிகாசங்களையும் புராணங்களையும் உருவாக்கி தம்மை மீட்பர்களாக எப்பொழுதும் ஊணோடும் உடலோடும் ஊட்டி வளர்த்து, அதிகாரங்களை எப்பொழுமே தம் கைகளில் இலகுவாக தக்க வைத்திருக்கும்.

 

தேவர்களான தமிழ்த் தலைமைகளை நம்பி மக்கள் தம் துன்பங்கள் எல்லாம் தீர 'புள்ளடி' போட்டு, ஐந்து வருடத்துக்கு ஒருமுறை தரிசனம் செய்து காத்திருந்தனர். புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வந்தபோது, தேவர்கள், "இனிக் கடவுள் தான் தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும்'' என கையை விரித்துவிட்டனர். தங்களை அவதாரமாகக் காட்டிய இத்தலைமைகளின் கைவிரிப்பை, இயலாமையைக் கண்ட படித்த யாழ்ப்பாண இளைஞர்கள் பதிய அவதாரம் எடுத்தனர். தேவர்கள் வழிநடத்த, ~தேவர் மகன்' களின் இவ் அவதாரத்தைக் கண்டு ஆரவாரித்து அகமகிழ்ந்து தம் துன்பங்களை எல்லாம் யாழ் மதில்களில் எழுதிவிட்டுக் காத்திருந்தனர் பக்தர்கள் (மக்கள்). ~தேவர் மகன்'கள் ஆயுதம் தூக்கி குந்துகளையும், கம்பங்களையும் மனித உடல்களால் அலங்கரித்து தம்மை மீட்பர்களாகக் காட்டி தமிழர் அதிகாரத்தை கையிலே எடுத்தனர். பிறகு, பிறகென்ன அதிகாரத்தைத் தக்கவைக்க இத்தேவர்களே அசுரர்களாக மாறும் விந்தையை மக்கள் ஞானக் கண்களாலே அல்ல, இந்த ஊனக் கண்களாலேயே கண்டனர்.

 

இவ் அசுரர்களின் ஊழித் தாண்டவத்தால் மக்கள் மௌனிகள் ஆனார்கள். பிறகு, பிறகென்ன பழையபடி தேவர்கள் அவதாரங்களைக் கோருகின்றனர், இன்னும் கோரி வருகின்றனர்...

 

1972ம் ஆண்டு புதிய அரசியல் அமைப்புச் சட்டம் வந்தபோது, பிரிட்டீஸ் சிவபிரானுக்கும் அவர்தம் தமிழ், சிங்களத் தேவர்களுக்கும் இடையிலான நேரடிப் பந்தம் அறுந்து போனதால் தமிழ்த் தேவர்கள் தம் கைகளை விரித்தனர். இவர்களின் குருகுலத்து நண்பர்களான யூ.என்.பித் தேவர்களுக்கும் அதே நிலைதான். தமிழ் கோட்டுச் சூட்டுப் போட்ட இங்கிலீசுக் காந்திகள் இந்தியாவுக்கு யாத்திரைகள் மேற்கொண்டு இந்திய பிரானின் நேரடித் தேவர்களாக மாறினர். யூ.என.;பி தேவர்களுக்குள்ளே குருகுலச் சண்டையும் முற்றியது. டட்லி குருகுலத்தோர் பிரிட்டீஸ் பிரானையும், ஜேஆர் - பிரேமதாச குருகுலத்தோர் அமெரிக்க பிரானை வழிபட்டதால் வந்ததே இக் குடும்பிச் சண்டை. டட்லி இறந்ததும் ஜேஆர் அமெரிக்க பிரானின் தேவர்களாக 77ல் அதிகார சிம்மாசனத்தில் ஏறினார். தமிழ்த் தேவர்கள் அவர்தம் வருகையை போற்றிப் பாடினர். அன்றைய கூட்டரசின் விரோதிகளான ஜே.வி.பி.யை விடுதலை செய்து தம் கக்கத்துக்குள் வைத்திருந்தது ஜே.ஆர் அரசு. புதிய அவதாரமான 'தேவர் மகன்'களை அணிவகுத்து எதிரணியில் குந்தியிருந்தது அமீர் அதிகாரம். பலே! சரியான போட்டி. இனவாத ஈட்டிகள் பாய்ந்தன. கோட்டாக்களும், பேரங்களும் இழுபறிகளும், கலவரங்களும் தேவர்களை நோகடிக்கவே யுத்தம் முழங்கின. எங்கும் போர்! எதிலும் போர்!! மக்கள் மாண்டுகொண்டிருந்தனர்….. இந்தப் பிணங்களின் மேல் பேரங்கள் பேசத் தொடங்கினர். மறுபுறத்தில் பிரான்கள் திருவிளையாடல்களை விடாமல் நடத்திக் கொண்டே இருந்தனர். இந்தியா எல்லா 'தேவர் மகன்'களையும் ஆதரித்து தனது அவதாரமாக்கி விளையாட்டில் இறங்கியது. அமெரிக்கா நேரடியாக அரசை ஆதரித்து மறைமுகமாக 'தேவர் மகன்'களில் ஒன்றான புலியை அவதாரமாக்கியது. இரட்டை அவதாரத்தில் வளர்ந்த புலிகள் மாபெரும் அதிகார சக்தியாக மாறியது. 'தேவர் மகன்'கள் தேவர்களின் வழிநடத்தலை ஓரம்கட்ட, தேவர்களும் இந்தியப்பிரான்கள் உதவியுடன் மீண்டும் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் திருவிளையாடலை பிரான்கள்; நடத்தத் தொடங்கினர்.

 

இந்திய பிரான் தேவதூத இறக்கைகளைப் பூட்டி தூதர்களாக நேரடியாகவே களத்தில் குதித்தது. கூடவே ஈ.என.;டி.எல.;எவ் போன்ற புதிய அவதாரங்களையும் உருவாக்கியது. அமெரிக்க பிரான் தமது அவதாரங்களான புலிகளையும், பிரேமதா அரசையும் இணைத்து பதிலுக்குத் திருவிளையாடலை நடத்தியது. பக்தர்கள் மலைத்துப் போனார்கள். மண்ணுக்கு நான். மக்களுக்கு நான். கூலிக்கு நீ. நாட்டுக்கு நான். நண்பனுக்கு நான். தீட்டுக்கு நீ. பல குத்துக் கரணங்களுக்குள் திருவிளையாடல் கூத்து நடந்தது. பிறகு, பிறகென்ன. இந்திய பிரான் செட்டைகளை விரித்தும் விரிக்காமல் பாசாங்காகத் திரும்பியது. அமெரிக்க பிரான் தன் ஏப்பக்காற்றால் நாட்டையே கழுவி வைத்தது. 17 வருடகாலம் தொடர்ச்சியாக நடந்த யூ.என்.பி அ+ட்சியில் அமெரிக்க பிரான் அகம் மகிழ எல்லாம் நன்றாகவே நடந்து முடிந்தது. யு.+என.;பி, ஜே.வி.பி.யைப் பயன்படுத்தி சிங்களப் பிரதேசங்களில் எல்லாரையும் அழித்தொழிக்கும் ஊழிக்குத்தாடி, பின் ஜே.வி.பியையும் ஒழித்து தன் அசுரத் தலையை தனித்து விரித்தாடியது. தமிழ்ப் பகுதிகளில் புலிகள் எல்லோரையும் அழித்தொழித்து தன் அசுரத் தலையை தனித்து விரித்தாடி நின்றது. அமெரிக்க அசுரகானம் எங்கும் எதிலும் ரீங்காரமாக ஒலித்தது.

 

~வரத்தைக் கொடுத்த சிவனே தவித்த' கதைமாறி, இந்திய பிரானே இத்திருவிளையாடலில் மாண்டுபோனார். பிரேமதாசாவின் அசுரத் தலையும் பந்தாடப்பட்டது. தேவர்களின் பட்டயத்துத் தலைவன் அமீரின் தலையும் பரிதாபமாகப் பந்தாடப்பட்டது. திருவிளையாடல்கள் தொடர்ந்தன. சந்திரிகா என்னும் ஒளிவட்டத்தை புதிய தேவர்களெல்லாம் ஒன்றுகூடி இழுத்து வந்தனர். 'கீதா உபதேசத்தை' நாடு பூராகவும் ஓதவும் தொடங்கினர். பிறகு, பிறகென்ன பக்தர்கள் ஆரவாரித்து கைதட்டினர். திரையும் இழுத்து மூடப்பட்டது. எல்லோரும் கூத்து முடிந்ததென்று முணுமுணுக்கத் தொடங்கினர். அனைவரும் அரங்கைவிட்டு வெளியேறி கடலை கொறிக்கவும் தொடங்கினர்.

 

இடைவேளை!

மீண்டும் திரை இழுக்கப்பட்டது.

 

சண்டைக் காட்சிகளோடு மீண்டும் கூத்து அரங்கேற்றப்பட்டது. பட்டத்து யானையான யாழ்ப்பாணம் சரிந்து வீழ்ந்தது. கட்டப் பொம்மனதும் எட்டப்பனதும் கதைகள் பொருத்தமின்றி வலுக்கட்டாயமாக இக் கூத்துக்குள் செருகப்பட்டது. மக்கள் சுவார்சயமற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர். மக்கள் மௌனமாகவே இன்னும் இருந்தனர். சண்டைக் காட்சிகள் தேவைக்கு அதிகமாகவே காட்டப்பட்டு அண்ணாவியார் களைத்துப் போனார். பிறகு, பிறகென்ன யு.+என.;பி அரசுக்கு வந்தது. பிரான்கள் மறைமுகமாக கைகுலுக்க, அசுரர்கள் வெளிப்படையாக கைகுலுக்கிக் கொண்டனர். 'சமாதான' அரிதாரம் பூசிக்கொண்டு மீண்டும் கூத்துக்குத் தயாராகினர். பிறகு, பிறகென்ன, வைகுண்டத்திலிருந்து பறந்து வருவதாக நோர்வே புதிய இறகுகளோடு வந்து இறங்கியது. அரங்கில் இருந்தோருக்கு நம்பிக்கை ஊட்ட அண்ணாவியார் குத்தி முறிவதாக ஓடித்திரிந்தார். கூத்தில் திருப்பமாக அசுரர் கூட்டத்தில் இருந்து இம்முறை அவதாரம் உருவாக்கப்பட்டது.- கிழக்கு ஓர் அவதாரம் - மும்முனை ஹீரோக்களை வைத்து இக்கூத்தை பெருமெடுப்பில் இயக்க அண்ணாவியார் அரங்கைத் தயார்ப்படுத்துகிறார். பிறகு, பிறகென்ன, யூ.என.;பி போய் புதிய கூட்டணி ஆட்சிக்கு வந்தது. மக்கள் மௌனமாக இருக்க கூத்து மெதுவாக நகர்த்தப்படுகிறது.

 

தேவர்கள் தமது பக்தகோடிகளின் மௌனத்தின் பேரில் 'ஜனநாயக'க் கோரிக்கையாக புதிய அவதாரங்களை குரலெடுத்துக் கூவ, அண்ணாவியாரின் பிற்பாட்டுடன் கூத்து நடக்கிறது. நல்லாகவே நடக்கிறது. அசுரர்களும் தம் காலில் 'மக்கள் படை' என்று சலங்கைகட்ட, 'ஜனநாயக'த் தேவர்களும் 'பொங்கி எழும் மக்கள் படை' என்று சலங்கைகட்ட, சபாஸ்! எடுப்பாகக் கூத்து நடந்து கொண்டிருக்கிறது.. மக்கள் இன்னும் மௌனமாகவே இருக்கின்றனர்.

 

பாசிசத்தை வீழ்த்தும் போக்கில் இவ் ஜனநாயகச் சலங்கை ஒலி வெகுவாக ரசிக்கப்படுகிறது.


பக்தர்களின் மௌனத்தைக் கலைக்கும் தேவ கானமாக இது காட்டப்படுகிறது. இந்த 'சுகமளிக்கும்' சுரத்தின் மீதான எந்த எதிர்க்கருத்தும் அபசுரமென்று கோபமாகத் துள்ளிக் குதிக்கிறது. அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் அசுரர்களுக்கும் சரி தேவர்களுக்கும் சரி உழைக்கும் மக்களின் ஜீவ கானம் அபசுரம் தான். புரட்சிகரமான உழைக்கும் மக்களின் குரல் இவர்களுக்கு சூத்திரர்களின் அருவருப்பான குரல்தான்.

 

இந்த தேவர்களின் ஜனநாயகம் லாபகரமான உண்டியல் ஜனநாயகம் தான்! இதற்குத்தான் அளவுக்கு அதிகமான அரிதாரம் பூசப்பட்டுள்ளது. சுதந்திரத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய முதலாளிகளின் பிரதிநிதிகளான முதலாளிய புத்திஜீவிகளும், மாணவர்களும் தொழிலாள வர்க்கத்தின் தீவிர பாத்திரத்தைக் கண்டு அஞ்சுவதால் இயல்பில், இலாப நோக்கைக் கொண்ட இவர்கள் ஏகாதிபத்தியத்துடன் சமரசத்தை உயர்த்திப்பிடிக்கும் புரட்சியின் பிறவிக் குருடர்களே!

 

தேவர்கள் எப்போதும் ஓர் இலட்சிய பூர்வமான தேச சுதந்திர இயக்கத்தை மலரச்செய்ய அயராது பாடுபடுவதாகவும் இதற்குள் இருந்து தோன்றும் ஓர் அசுரப்பிரிவு ஏகாதிபத்திய சார்பையும் பாசிசப்பாதையையும் உருவாக்கி விடுவதாக இத் தேவர்கள் பசப்புகின்றனர். உண்மையில் மக்கள் எதிலும் பங்கு பெறாமல் மௌனமாக இருத்தி வைக்கப்பட்டு தேவர்களே தமக்குள் ஆடும் ஆடுபுலி ஆட்டத்தில் 'சிவபிரானின்' கடைக்கண் ஆர்மேல் படுகிறதோ அவர்களே அசுரர்களாக மாறும் போக்கில் பாசிசம் பிறக்கிறது. ஆயினும் சிவனின் இன்னெரு கண் தேவர்களை ஜனநாயக வாதிகளாக்கி தேவலோகத்தில் (ஏகாதிபத்தியங்கள்) தனதிருப்பை பத்திரப்படுத்துகிறது.

 

ஆளும் வாக்கமானது உற்பத்தியையும் உற்பத்தி சாதனங்களையும் எப்பொழுதும் தமது கைகளில் வைத்திருப்பதற்காக அவற்றை பாதுகாத்து வருவதற்காக ஒடுக்குமுறையில் ஈடுபடுகிறது. பிற்போக்கு உற்பத்திமுறை நிலவுகின்ற சமூதாயமான எம்மத்தியில் ஆளும் வர்க்கம் மிகச் சிறிதாக இருப்பதால் இத்தேவர்களின் ஒடுக்குமுறை மிகப் பெரிய பரந்தபட்ட மக்களான பக்தர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான பாசிசமாக மாறுகிறது. இப்பாசிசத்துக்கு எதிராக உடனடியாக உணாச்சிவசப்படக்கூடிய இளைஞர்களின் தன்னெழுச்சியான முன்வரவுகளை, தறிகெட்டு இயங்கக்கூடிய இவ் இயல்புகளை, அதிகாரத்தை மீண்டும் கையிலெடுக்கத் துடிக்கின்ற தேவர்களால் "கூட்டி ஒன்றுசேர்க்கும் முயற்சியென்று'' பத்தியம் போடப்படுகிறது.

 

மக்கள் இப்பொழுது வாய்திறக்க முடியாத நிலையில் வாழ்வதாகக் கூறி, மக்கள் இப்பொழுது போராட முடியாது எனக் கூறி இவற்றையே தமது கூட்டிச்சேர்க்கும் முயற்சிக்குத் துடப்பாங் கட்டை ஆக்குகின்றனர். உண்மையில் மக்கள் போராடவில்லை என்பதே ஓர் இயங்கியல் மறுப்பாகும். மக்கள் தமது வாழ்வுக்காக தினமும் போராடிக்கொண்டே இருக்கிறார்கள். இம்மக்களின் இயல்பான தம் வாழ்வுக்கான சமூக இருப்பே இன்றைய அதிகார வர்க்கமான புலிகளுக்கு முட்டுக்கட்டையாக இடிப்பதால் அது மேலும் மேலும் தனது சுரண்டலுக்கான ஒடுக்குமுறையை பாசிசமாக முன்னெடுக்கிறது. மக்களின் மௌனம் கொடிய பாசிசத்தின் வெளிப்பாடு என்பது ஒரு பகுதி உண்மையாகவும் அதேவேளை பழைய, புதிய அரசியல் தலைமைகளின் மீது நம்பிக்கையற்ற, தேவர்களிடம் தமது துன்பங்களைக் கூறுகின்ற பழைய பாணியிலான அரசியல் போக்கு எதிலும் நம்பிக்கையற்ற மறு பாதி மௌனமாக உறைந்து கிடக்கிறது.

 

மக்கள் படை என்பது மக்களின் முன் வந்து குதிக்கும் படையல்ல! மாறாக அது பரந்து பட்ட மக்கள் தமது இடைவிடாத போராட்ட அனுபவங்களிலிருந்து அம் மக்களுக்குள்ளே இருந்து எழுந்துவரும் சக்தியாகும். இன்று உண்மையான மக்கள் படை என்பது மௌனமான இம்மக்களுக்கு உள்ளிருந்து, இப்பெரும் மௌனத்தை உடைத்துக் கொண்டு வெளிவரும் பாரிய சக்தியாகவே அது இருக்கமுடியும். இன்றைய இம்மௌனத்தை உடைத்து அம் மாபெரும் சக்தியை வெளிக் கொணர வேண்டுமானால், அதைத் துரிதப்படுத்த வேண்டுமானால். மக்கள் நலனை உயர்த்திப் பிடிப்பதோடு, அதற்கு முரணான அனைத்து அரசியல் முன்னெடுப்புக்களும் ஈவிரக்கமின்றி விமர்சிக்கப்படவேண்டும்.

 

இது தவிக்க முடியாததும், சமரசம் செய்து கொள்ள முடியாததுமான இன்றைய வரலாற்றுக் கடமையாகும்.

 

இன்று 'ஜனநாயக'த்தை உயர்த்திப்பிடிக்கும் இந்த ஏகாதிபத்திய சமரச அவசரக்குடுக்கர்கள், தம்மீதான மக்கள் நலன்சாhந்த விமர்சனங்களை பாசிசத்தின் துணைபோகும் பகுதியாகப் பார்க்கின்றர். இது இவர்களால் புரிந்து கொள்ள முடியாத கொடிய நோயாகும். பளிங்கு போன்றதும், இலட்சியபூர்வமான, நேர்மையான, தூய்மையான தமது 'ஜனநாயக'க் கோரிக்கையை அலட்சியப்படுத்துவதாக அதன் வெப்பியாரத்தின் மீது இவர்கள் தம்மை மறந்து போகிறார்கள். இவர்களாலேயே புரிந்து கொள்ள முடியாத, வெறும் தூய நேர்மையான இலட்சியவாதங்களால் 'உன்னதமான இதயபூர்வமான ஜனநாயகப் பண்புடைய இஸ்தாபன'த்தால் பாசிசத்தை வீழ்த்திவிட முடியுமென்ற அகநிலைப்பட்ட கற்பனையிலிருந்து இவர்கள் ஒருபோதும் வெளிவரப் போவதில்லை. மிகமிக சொற்பமான திடமான தேசிய சக்திகள் கூட இந்த அகநிலை விஞ்ஞான அரசியல் குருட்டுத்தனத்தால் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்ட, வரலாற்று விதிகளை அற்பமாக மறந்துபோகும் மிகமிக அவசரகுடுக்கர்களே இவர்கள்.

 

இவர்கள் கூறும் 'ஜனநாயம்' தேவர்கள் தமது அக்கிரகாரத்துக்கான இலாப நோக்கமான உண்டியல் ஜனநாயத்துக்கு ஒப்புவமையானதே. அசுரர்களை வீழ்த்தும் தேவர்களின் ஜனநாயகக் கோரிக்கையானது உண்டியலுக்குள் சில்லறைகளை விட்டெறியும், தனிமனித சுதந்திரத்தின் - இச்சில்லறை துள்ளல் ஒலிக்கு மேல் எதுவுமில்லை! இலாபகரமான முதலாளித்துவத்தின் இவ் ஜனநாயகம், எக் கேள்வியுமின்றி தம் சுரண்டலை அங்கீகரிக்கும் தனிமனித சுதந்திரக் கோரிக்கையே. இந்த உண்டியலுக்குள் எந்தக் கேள்வி தீர்வையுமின்றி, இச்சுரண்டலுக்காக விட்டெறியும் சில்லறையைக் கூட எறியமுடியாத தமது வாழ்நாளில் நயா பைசாவைக் கூட காப்பாற்ற முடியாத ஏழை எளிய வறிய உழைக்கும் மக்களுக்கு இவ் ஜனநாயகம் எதைப் பெற்றுக் கொடுக்கிறது? உழைப்பைச் சுரண்டி ஒண்டியாக்கி விட்டு மிகுதியாக இருக்கும் அவர்கள் வயிற்றையும் எந்தக் கேள்வி தீர்வையுமின்றி பட்டினிபோடும் இந்தக் கொடுமையையும் அல்;லவா இவர்கள் ஜனநாயகமாக் கோருகின்றனர். இதைத்தான் இவர்கள் உன்னதமான 'ஜனநாயகம்' என்கின்றனர். இதன் பெயரால்தான் இவர்கள் மக்கள்போராட்டம், மக்கள் படை என்று சரசகதை பேசுகின்றனர்.

 

ஆம், நாம் முரண்படுவதும் இங்கேதான்! உழைக்கும் வயிற்றைப் பட்டினிபோட்டு, அதை 'மக்கள் ஜனநாயகம்' என்னும் இந்த இலாபகரமான கோரிக்கையை விமர்சிக்கக் கூடாது என்றால் அது எம்மால் ஒருபோதும் ஒரு கணமும் முடியாததல்லவா? பாசிசமென்னும் முதலாளித்துவத்தின் மூர்க்கத்தனமான கொடிய சுரண்டலுக்கு முதலில் மோசமாகப் பலியாகிப் போபவர்கள் இந்த வறிய உழைக்கும் மக்களாக இருக்கும் போது ஏன் தலையை விட்டு வாலைப்பிடிக்கக் கோருகின்றீர்கள்? இந்த மக்களின் அதிகாரம் இல்லாத எதுவும், சுரண்டுவதற்கு மட்டுமே ஜனநாயகத்தைக் கோரும் எதுவும் பாசிசத்தை வீழ்த்தும் படைக்கலனாக இருக்க முடியாது. ஏனெனில் பாசிசமே சுரண்டலின் காட்டுமிராண்டித்தனமான அதிகார வெளிப்பாடுதான். சுரண்டலை இலாபமாகக் கொண்ட உங்கள் ஜனநாயகக் கோரிக்கையால் கிடைக்கும் புதிய அவதாரமும், அதன் அதிகாரச் சுரண்டல் நகர்வும் மீண்டும் மூர்க்கமாக பாசிசத்தை பிரசவிக்காது என்பதற்கு உங்கள் ஞானக்கண்களால் எந்தவிளக்கமும் கூறமுடியாது. உங்கள் 'ஜனநாயக'க் கோரிக்கைகளுக்கு உட்படாத இந்த உழைக்கும் மக்களின் பிரச்சனை, எவ்வாறு ஏகாதிபத்திய மேசைகளில் பேச்சு பொருளாக அடங்கும்? அவ்வாறானால் இப்பேச்சுவார்த்தைகள் ஒருபகுதி மக்களுக்கு மட்டுமே என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? உங்களது பேச்சுக்கு எடுக்கமுடியாததும், ஜனநாயகத்துக்கு உட்படாததுமான இம்மக்கள் தமது பிரச்சனையை எங்கே தீர்த்துக் கொள்வது? சொல்லுங்கள். உங்களால் எதுவும் சொல்ல முடியாது. ஆதனால்தான் இந்தமக்கள் எந்த 'சமரச'ப் பாதைகளிலும் தனது நலனைப் பெறமுடியாது. ஒரே ஒரு பாதையான புரட்சியால் மட்டுமே தமது கணக்கைத் தீர்த்துக் கொள்ள முடியுமல்லவா. அந்த பரந்துபட்ட உழைக்கும் மக்களின் அதிகாரம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்தி இதை பெற்றுக் கொடுக்கும்.

சுதேகு
13.03.06


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்