Language Selection

னடாத்தடைக்கு எங்களவர்கள் அங்கே கருத்தாதரவு தேடாததுதான் காரணம் என்கிறார் சிவத்தம்பி.

குழந்தைகளை கொன்றதை சர்வதேச சமூகத்தின் மத்தியில் கொண்டுசென்று பரப்புரைக்குமாறு வேண்டுகின்றன புதினம், நிதர்சனம் உள்ளிட்ட வலைத்தளங்கள்.

சர்வதேச சமூகம் அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும் என்கிறார் தமிழ் செல்வன்.

 

 

அதையே தம்பக்கமிருந்து சொல்கிறார் மகிந்த.

எங்குபார்த்தாலும், யாரைக்கேட்டாலும், ஒருவார்த்தை மிகவும் பிரபலமாகி இருக்கிறது. அதுதான் "சர்வதேச சமூகம்".

சர்வதேச சமூகம் என்றால், உலக நாடுகளில் வாழ்கின்ற மக்களா? அவர்கள் எப்படி எமது பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு தேடித்தருவார்கள்?

பெரும்பாலும், நாட்டை ஆள்வது மக்கள் இல்லை என்பதாலும், இயல்பிலேயே தேர்தலைத்தவிர மக்களுக்கும் அரசாங்கங்களுக்கும், ஆளும் சபைகளுக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது என்பதாலும், இவ்வாறான நெருக்குவாரங்களை பிரயோகிக்கும் வல்லமையுள்ள சர்வதேச சமூகம் அவர்கள் இல்லை என்று ஆகிறது.

அப்படியானால் சர்வதேச சமூகம் என்பது, உலக நாடுகளை ஆளும் அரசாங்கங்களாகத்தான் இருக்கவேண்டும்.

உலக நாட்டு அரசாங்கங்கள் எல்லாமே சர்வதேச சமூகம் தானா?

கியூபாவும், கென்யாவும் சோமாலியாவும் மாலைதீவும் இலங்கை பிரச்சனையில் கருத்துக்கூறினால் அதற்கு ஏதாவது அர்த்தம் இருப்பதாக யாரேனும் கருதுவார்களா?

ஆக சர்வதேச சமூகம் என்பது படைபலம், உலக, பிராந்திய அரசியல் வல்லாதிக்கம் கொண்ட நாடுகளின் அரசாங்கங்கள். அதிலும் குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளின் அரசாங்கங்கள்.

 

இந்த நாடுகளின் அரசாங்கங்கள் எல்லாம் என்ன? தம்மளவில் சுயாதீனமான, ஜனநாயகவழியில் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளா? ஒருபோதுமில்லை. அந்தந்த நாடுகளின், உலகின் அதிகார வர்க்கத்தின் பிரதிநிதிகள்.

ஆகமொத்தத்தில் சர்வதேச சமூகம் என்பதற்கான சரியான விளக்கம், உலகத்தின் அதிகாரவர்க்கங்கள் என்பதாகத்தான் அமையமுடியும்.

 

இலங்கையை பொறுத்தவரையில்; இந்திய பிராந்திய அதிகார வர்க்கத்தையும் சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த 'அதிகாரவர்க்கம் ஸ்ரீஸ்ரீ சர்வதேச சமூகத்தின்' உள்ளத்தை கொள்ளை கொள்ளும் பணிகளை முன்னெடுத்துச்செல்லும்படித்தான் இந்த ஊடகங்களும் ஆய்வாளர்களும் பெரும் கூக்குரலும் கூச்சலும் எழுப்பி வருகிறார்கள்.

இந்த 'அதிகார வர்க்கம் ஸ்ரீஸ்ரீ சர்வதேச சமூகம்' தான் இந்த சமாதான பேச்சுவார்த்தைகளை கண்காணித்து நடத்தி வருகிறதாம்.

இவர்கள் எல்லாம் பரப்புரை செய்து, கூக்குரலிட்டு காலில் விழுந்து போட்டோ காட்டினால்தான் இந்த 'அதிகார வர்க்கம் ஸ்ரீஸ்ரீ சர்வதேச சமூகம்' எமது பிரச்சனைகளை புரிந்துகொண்டு சிங்கள பேரினவாதிகளின் குரல்வளையை நெரித்து தீர்வினை பறித்தெடுத்து வெற்றிலை பாக்கோடு கொண்டுவந்து வைக்குமாம்.

அவர்கள் என்ன அன்றாடம் பேப்பர்கூட படிக்காமல் தூங்கிக்கொண்டிருக்கும் ஆட்களா?

இந்த அதிகார வர்க்கத்தின் கையில் தான் சீ ஐ ஏ, கே ஜீ பீ, ரோ உள்ளிட்ட அதியுயர் மூளையும், அதி நவீன தொழிநுட்ப வளங்களும் கொண்ட உளவு நிறுவனங்கள் இருக்கின்றன.

அவை எல்லாம் அவர்களது அதிகாரங்களை தக்க வைத்துக்கொள்வதற்காகவே பணியாற்றுகின்றன.

அவர்களிடமே உலகை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கக்கூடிய இராணுவ, ஆயுத பலம் இருக்கிறது.

பொருளாதார பலம் இருக்கிறது.

அவர்கள் தான் தமது இருப்புக்காகவும், இலகுவான சுரண்டலுக்காகவும் உலகம் முழுக்க போராட்டங்களை எரியச்செய்தவண்ணமிருக்கின்றனர்.

அவர்களிடத்தில் போட்டோ காட்டி கண்ணீர் சொரிந்து சுலோகம் ஏந்தி "கருத்தாதரவும்" "கருணையும்" வேண்டி எமது தீர்வை வாங்கித்தருமாறு மன்றாடச் சொல்கிறார்கள்.

இந்த வலைத்தளங்களுக்கெல்லாம் வருவதற்கு முதல் செய்திகளும் போட்டோக்களும் அவர்களைத்தான் சென்றடைகின்றன. சிலவேளை சம்பவம் நடக்க முன்னரும் கூட சென்றடைந்துவிடுகின்றன.

எமது பத்திரிகைகளின் அரசியல் ஆய்வாளர்களுக்கும், வியூகம் வகுப்பாளர்களுக்கும், பீஷ்மர்களுக்கும், விதுரர்களுக்கும் தகவல் கிடைக்குமுன்னமே, தலைகளை கொய்தவர்கள் யார் என்பதும், விக்கியை சுட்டது எதற்காக என்பதும் அவர்களுக்கு தெரிந்து விடுகின்றது. சுட்ட துப்பாக்கியே அவர்கள் அனுப்பி வைத்ததாகவும் இருக்கக்கூடும்.

இந்த அதிகார வர்க்கம் தனக்கு தேவையான நேரங்களில் தேவையான போராட்டங்களை கைதூக்கி விடும், தேவையான நேரங்களில் தேவையில்லாத போராட்டங்களை காலடியில் போட்டு நசுக்கும்.

அத்தனையும் தமது இருப்புக்காகவும், சுய நலத்திற்காகவும், அதிகாரத்தக்கவைப்புக்காகவும் செய்யப்படுவது.

இந்த வர்க்கத்திடம் விலைபோன தலைவர்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

சுயநலமும் வஞ்சகமும் கோரமும் வெடித்து ஒழுகும் அதிகாரவர்க்க முகத்தை மறைத்து அழகாக அது அணிந்துகொள்ளும் முகமூடியே, மாய முகமே "சர்வதேச சமூகம்" என்கிற பெயர்.

இது வெற்று மாயை. தொலைகாட்சிகளாலும், அறிக்கைக்காகிதங்களாலும் மேடைப்பேச்சாளர்களாலும் உருவாக்கப்பட்டு பேணிப்பாதுகாக்க்கப்படும் மாய்த்தோற்றம்.

பீ பீ சீ , ரொய்த்தர்ஸ், சீ என் என் போன்ற உலகப்பெரும் உடகங்களை பயன்படுத்தி இந்த மாயத்தோற்றத்தை வெகு நுட்பமாக வளர்த்து வைத்திருக்கிறார்கள். அறிக்கை காகிதங்களால் கட்டப்பட்ட தோரணங்களைக்கொண்டு தமது அதிகார முகத்தை திரை போட்டு வைத்திருக்கிறார்கள். இந்த திரையும், மாய முகமும் கூட சுரண்டலுக்கும், அதிகார தக்கவைப்புக்குமே.

இந்த மாய முகத்திற்கு வளைந்துகொடுக்கும் எமது ஒவ்வொரு செயற்பாடும், அதிகாரத்துக்கு வளைந்து கொடுப்பதாகவே அமையும்.

அழகான, நேர்த்தியான கறுப்பு கோர்ட் போட்டு வந்து உயர் ரக ஒலிவாங்கியில், பட்டும் படாமலும் கருத்துக்களை கூறி ஜாலம் காட்டும் சிறந்த பேச்சாளர்களின் திருவாயால் சிங்களதேசம் கண்டிக்கப்பட்டால் நாம் யாரும் புளகாகிதமடைவோமானால், அந்த அதிகாரக்கோரமுகம் வெற்றி பெற்று விட்டது என்பதுதான் அர்த்தம்.

பீ பீ சீ யே எமது பிரச்சனைகளை இனங்கண்டு சரியாக அறிவிக்கிறது என்று நாம் மார்தட்டி பெருமைப்பட்டுக்கொண்டோமானால், அந்த அதிகார வர்க்கத்திடம், அதன் மாயமுகத்திடம் தோற்றுப்போனோம் என்பதுதான் அர்த்தம்.

இந்த சர்வதேச சமூகம் தான் எங்களை எப்போதும் ஆட்டிவைக்கும் சக்தி.

அவர்களுக்கு எல்லாம் தெரியும். நீங்கள் ஒன்றும் கருத்தாதரவு தேட வேண்டாம்.

புலிகளை அமெரிக்கா கண்டித்தால் எனது நண்பர் ஒருவருக்கு சரியான சந்தோசம். "நல்ல கப்பல் ஒண்டு புலிக்கு வந்து இறங்கியிருக்கும்" என்று மகிழ்வார்.

யதார்த்தம் இதுதான். இவர்கள் தமது சுயநலன்களுக்கு தேவைப்படும்போது யாரையும் தலையில் வைத்து ஆடவும், காலடியில் போட்டு நசுக்கவும் செய்வார்கள். இரகசிய ஒப்பந்தங்களை செய்துவைத்துக்கொண்டு அறிக்கை வாய்வீச்சு காட்டுவார்கள்.

இவர்களிடம் ஆதரவு தேடுவதையே நோக்காககொண்டு எவரும் உங்கள் காலத்தையும் உழைப்பினையும் செலவளிக்க வேண்டாம். அதனை ஆக்கபூர்வமான வழியில் செலவிடலாம்.

பயங்கரவாதப்பட்டியல், கண்டன அறிக்கை, மன்மோகன் சிங்கின் தொலைபேசி அழைப்பு, யசூசி அகாஷி யின் வருகை இதெல்லாம் ஒன்றுமில்லை. வெறும் பம்மாத்து. இதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொண்டு இருக்கும் மூளையற்ற ஊடகங்களை தள்ளிவிடலாம்.

இந்த ஊடகங்களும் அதிகாரவர்க்கம் தக்கவைக்கவிரும்பும் மாய முகத்தின் பகுதிகளே. இவர்கள் மக்கள் விடுதலைக்கான நேச சக்திகள் அல்லர்.

எந்த ஊடகங்கள் சினிமாச்செய்திகளைப்போல, கிரிக்கட் செய்திகளைப்போல போராட்டத்தையும், மக்கள் சாவுகளையும் படங்காட்டி கிளர்ச்சியூட்டி உங்களுக்கு அறிவிக்கின்றனவோ, அந்த ஊடகங்களை, வலைத்தளங்களை, தொலைக்காட்சிகளை, பத்திரிகைகளை சந்தேகப்படுங்கள்.

இவற்றுக்கும் மூன்றாந்தர சினிமாப்பத்திரிகைகளுக்கும் எந்த வேறுபாடுமில்லை.

இந்த ஊடகங்களின் மூலவர்கள் பாதுகாப்பான நாடுகளில் பாதுகாப்பாக அமர்ந்துகொண்டு செய்திபெறுபவர்கள். அன்றாடம் சூடான செய்திகள் தேவைப்படும் இவர்களைப்போன்ற மற்றையவர்களுக்காக இவர்கள் விருந்துபடைப்பவர்கள்.

ஊடகங்கள் தமது நோக்கத்தில் நிமிர்வுடனும் தெளிவுடனும் இருக்க வேண்டும். மக்களை நெறிப்படுத்தும் பணியை செய்யவேண்டும். வெறும் செய்தி ஊடகங்கள் கூட இதனை அழகாக செய்யலாம்.

பிரசாரங்களின், மாயைகளின் முகமூடிகளை கிழித்து மக்களுக்கு உண்மையை கூறலாம்.

நமது மக்களைப்பற்றியும் அவர்களது எதிர்காலத்தைப்ப்ற்றியும் உரையாடலாம். செயற்படலாம்.

"பிரசாரங்களுக்கூடாகவன்றி அவரவர் சார்ந்த நலன்களுக்கூடாகவே வரலாற்றை எடைபோடுவது அவசியம்."

- மு. திருநாவுக்கரசு - சமஷ்டியா தனிநாடா - அறிவு அமுது

இரயாகரனின் இந்த பதிவினை வாசிப்பிற்கு பரிந்துரைக்கிறேன். (இறுதித்தீர்வை அழுத்துவதன் மூலம் எதிரியை தனிமைப்படுத்தும் உத்தி தொடர்பான கருத்துக்களுக்காக)

http://mauran.blogspot.com/

மு.மயூரன்

 

மு.மயூரன்
17.05.06