Language Selection

நீண்டகாலமாக எழுத ஆசைப்பட்ட விடயம். என்னுடைய அறிவு மட்டுப்பாடு தொடர்பான குழப்பங்களோடு தள்ளிப்போட்டு வந்தேன், இப்போது எழுதவே வைத்துவிட்ட சுவனப்பிரியனுக்கு நன்றிகள்.

நிகழ்ந்தவண்ணமிருக்கும் தற்போதைய உலகப்போரில் இஸ்லாமியர்கள் தவிர்க்கமுடியாத தரப்பாக உருவெடுத்திருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக(!) அவர்களிடத்தில் மசகு எண்ணையும் மக்களை இலகுவாக கூடச்செய்கிற, மக்களை ஒழ்ங்குபடுத்தும் அதிகாரத்தை தருகிற மத அடிப்படையும் அமைந்துவிட்டது. அமரிக்க பேரரசு இவர்கள் மீது செய்யும் சுரண்டல்களுக்கும் தாக்குதல்களுக்கும் இதுவே காரணமாகிவிட்டது.


ஈழப்போரிலும் முஸ்லிம்கள் மிக முக்கியமான வகிபாகத்தினை கொண்டிருக்கிறார்கள். சிங்கள பேரினவாதத்திற்கு தமிழர்களைக்காட்டிலும் முஸ்லிம்களே அருவருப்பூட்டும் எதிரி. தமிழர்களை ஆயுதமேந்தும்படி வரலாறு தள்ளியது. அவர்கள் தப்பித்துக்கொண்டார்கள். முஸ்லிம் தேசம் எல்லாத்தரப்பாலும் சுரண்டப்படும் தரப்பாகிப்போய்விட்டது. தமிழர் பேரினவாதத்திற்கும், சிங்களப்பேரினவதத்திற்கும் ஒருங்கே முகம் கொடுக்க வேண்டிய நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

இப்படியாக உலக அளவிலும், ஒவ்வொரு நாட்டிலும் முஸ்லிம் மனிதர்களுக்கெதிராக எழுந்துவரும் மனநிலையும், சுரண்டலும், வல்லாதிக்கமும் அந்த மனிதர்கள் தமது அடையாளங்களை மேலும் மேலும் அழுத்திப்பிடிக்கவும், தம்மை தனித்துவமான மனிதக்கூட்டமாக அடையாளப்படுத்தவும் காரணமாகிவிடுகிறது.

என்னுடைய 20 வருட ஞாபகங்களினூடேயே அவர்களுள் நிகழும் இந்த வரலாற்று மாற்றத்தினை தெளிவாக அவதானிக்க முடிகிறது.

திருக்கோணமலையில் முன்பெல்லாம் முஸ்லிம் ஆண்களை, தமிழர் ஆண்களிடமிருந்து மொழியாலோ, உருவமைப்பாலோ பிரித்தறிவது ரொம்ப கஷ்டம். நண்பர்களோடு, அவர்கள் முஸ்லிம்கள் என்ற பிரக்ஞை இல்லாமலேயேதான் பழகிவந்தோம்.

இப்பொழுது அப்படி அல்ல. ரோட்டில் போகும் மனிதர்களுள் முஸ்லிம்களை மிக இலகுவாக தனிபிரித்து அறியலாம். பெண்களின் ஆடைகள், ஆண்களின் மீசை மழுக்கி, தாடிவைத்த முகம், தொப்பி, கால்களில் சற்றே தூக்கலாக மடித்துவிடப்பட்ட/தைக்கப்பட்ட நீளக்காற்சட்டை, நெற்றியில் தொழுகைவடு.

எல்லா முஸ்லிம்களும் பேச்சின் ஒரு கட்டத்துக்குப்பிறகு குர் ஆன் இறைவனால்தான் வழங்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் பணியில் இறங்கிவிடுகிறார்கள். எந்த விவாதத்திலும், தேடலிலும் அவர்கள் குர் ஆனுக்கு அப்பால் செல்ல மறுக்கிறார்கள். தமது மத அடையாளத்தை மிகத்தீவிரமாக அழுத்திப்பிடிக்கிறார்கள். குர் ஆன் என்கிற புத்தகத்தை தாண்டி இந்த உலகத்தில் வேறு உண்மைகள் இருக்க முடியாது என்கிற கண்மூடித்தனமான அவர்களது நம்பிக்கையும் தீவிரமும் அவர்களுடனான உரையாடல்களை முறித்துவிடுகிறது. அவர்கள் தனித்தீவுகளாக, தனித்துவிடப்படுகிறார்கள். முஸ்லிம்கள் ஏதோ ஒருகட்டத்தில் முஸ்லிம்களோடேயே கூடியிருக்க வேண்டியதாகிறது.

முஸ்லிம் மனிதர்களிடம் மட்டுமே நான் சிறுவயது முதல் அவதானித்த ஏராளமான நல்ல இயல்புகள் இப்போதும் மனதை விட்டு அகலாமல் இருக்கின்றன. அப்பாவின் நண்பர்களில் ஏராளமானவர்கள் முஸ்லிம்கள். அவர்கள் மிகவும் அன்பானவர்கள்.

தமக்கெதிரான அடக்குமுறைகளுக்கெதிராக அவர்கள் தமது மத அடையாளத்தினை முன்னிறுத்துகிறார்கள்.

உலகமே அடிப்பணிந்துபோய்க்கொண்டிருக்கும் அமரிக்க பேரரசின் ஏகாதிபத்திய போக்குக்கு எதிராக தமது சுய மரியாதைச்சின்னமாக இஸ்லாத்தை முன்னிறுத்தி உலகம் தழுவிய எதிர்ப்பினை அவர்கள் வீரத்துடன் முன்வைக்கிறார்கள். அங்கே மிக முற்போக்கான இடத்திலிருக்கும் அவர்களது மதம், ஒரே நேரத்தில் மிக பிற்போக்கான வழித்தடத்திலும் அவர்களை இட்டுச்செல்கிறது.

ஏகாதிபத்தியம், அந்த மதத்தின் பிற்போக்கான அம்சங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. ஆணாதிக்கம் அந்த மதத்தின் பிற்போக்கான அம்சங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது. அதிகாரவர்க்கமும் அவ்வாறே.

முஸ்லிம்கள் தொடர்பான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதில் அநேகமான அறிவுஜீவிகளை குழப்பத்தில் ஆழ்த்திவிடுவதும் அவர்களது மதம் தொடர்பான கண்ணோட்டம்தான்.

என்னுடைய நண்பர் ஒருவர் கடைசியாக நான் திருக்கோணமலை போயிருந்தபோது சொன்னார், "உலக அரசியலில் இடதுசாரிகள் முஸ்லிம்கள் விடயத்தில் தவறிழைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஏகாதிபதியத்துக்கு எதிராக இஸ்லாம் அடிப்படைவாதத்தின் போராட்டத்தை ஆதரிக்க தலைப்படுவதோடு, இஸ்லாம் அடிப்படை வாதத்தினை விமர்சிக்காமலும் விட்டுவிடுகிறார்கள். வரலாற்றின் இயங்கியலில் ஒப்பீட்டளவில் ஏகாதிபத்தியத்தை காட்டிலும் நிலவுடைமை இஸ்லாம் அடிப்படைவாதம் பிற்போக்கானது. ஏகாதிபத்தியத்துக்கு எதிரன மார்க்சீயர்கள் எப்படி இஸ்லாத்திற்கு எதிராக இல்லாமலிருக்க முடியும்?"


குர் ஆன் நம்பிக்கையாளர்களுக்கு பிற மதத்தினரைக்காட்டிலும், ஏகாதிபத்தியத்தை காட்டிலும், ஒடுக்குமுறையாளர்களைக்காட்டிலும் மார்க்சியவாதிகளே சகிக்க முடியாத எதிரிகளாக இருக்கின்றனர்.. சோவியத் யூனியனில் அமரிக்கா இதனை மிக நன்றாக பயன்படுத்திக்கொண்டது.

ஒசாமா பின் லாடன் என்கிற காரணி, கம்யூனிசத்துக்கெதிரான அமரிக்காவின் ஆயுதமாகவே உருவாக்கப்பட்டு வளர்த்தெடுக்கப்பட்டது.
முதலாளியம், தன்னை தக்கவைத்துக்கொள்வதற்காக தன்னை விட பிற்போக்கான மத அடிப்படைவாதத்துடன் சமரசம் செய்துகொள்ளும் வரலாற்று உண்மைக்கு இது நல்ல எடுத்துக்காட்டு.

உலகமெங்கும் நிகழும் இஸ்லாமியர்களது ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களுக்கு மார்க்சிஸ்டுகள் வழங்கும் நிபந்தனையுடனான ஆதரவு என்பது பெரும்பாலும் ஒருவழிப்பாதையே.


ஆனாலும் இந்த போராட்டங்களினூடாக மிக முற்போக்காக சிந்திக்கத்தலைப்படும் இஸ்லாமிய அறிஞர்களையும் வரலாறு பிரசவித்தவண்ணமிருக்கிறது.


இந்த பின்னணியில் இங்கே வலைப்பதிவு சமுதாயத்தில் இஸ்லாத்தை விளக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் வலைப்பதிவாளர்களோடு அடுத்ததடுத்த பதிவுகளில் பேச முயல்கிறேன்.

 

மு.மயூரன்
21.05.06